அடையாளங்கள் நிர்மூலமாகும் கவிதை – வசந்ததீபன்
காற்றுக்கு இல்லை
நீருக்கு இல்லை
வானுக்கும் பூமிக்கும் இல்லை
இயற்கை யாவும்
பேதம் பார்ப்பதில்லை
நீ மட்டுமேன்?
எம் வியர்வையில் விளைந்தவைகள்
உன் உடலை.. உயிரை..
காக்க.. பராமரிக்கத் தேவை
ஆனால்
எம் அருகாமை அருவருப்போ…!
எம் தொடுதல் தீட்டோ…!
எம் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தி
நீ வெறியாடுவாய்
வல்லுறவில் எம் பெண்களை சிதைத்து
நீ சின்னபின்னாமாக்குவாய்
இழிந்த..ஈனம்.. என்று அடையாளமிடுவாய்..
சேரி என பெயரிட்டு தனி உலகிற்குள்
எம்மைத் தள்ளி பூட்டுவாய்
உன் யாகத்திற்கு எம் இரத்தம்
உன் தாகத்திற்கு எம் கண்ணீர்
உன் தினவுக்கு எம் சந்ததி
உன் மனப் பிறழ்வுக்கு எம் வாழ்வு
உன் அதிகாரம்.. திமிர்..
கொலை மிரட்டல்.. பயமுறுத்தல்.. அராஜகம்… என்பவை
இனியும் கோலோச்சாது
எமக்கு கரங்கள் உண்டு
அவைகளும் ஆயுதங்கள் ஏந்தும்
உன் இதயம் மாமிசத்தாலானது
எம் இதயம் விசப்புகை வீசும் ரணம்
காலம் காலமாய் அடக்கப்பட்டு கொதித்துக் கொண்டிருக்கிறது
எரிமலையாய் வெடிக்கும்
உன் சவமேடுகளில் பூக்களைத் சொரியும்.
– வசந்ததீபன்