கவிதா பிருத்வியின் கவிதைகள்

கவிதா பிருத்வியின் கவிதைகள்




உயிர்த் துடிப்பு
******************
புன்னகை மறைத்தாய்..

சுவாசம் மறைத்தாய்..

கரியமிலவாயு உள்நிறுத்தி

நுரையீரலுக்குச் சவால் விடுக்கிறாய்..

முகத்தில் கவசத்துடன்

காற்றிற்கு உயிர் தவிக்க

மூச்சு முட்டும் நேரத்தில்

ஆக்ஸிஜன் தேவையாம்..

செயற்கை குழாய் சுவாசத்தில்
உயிர் துடித்தது..

எங்காவது ஓர் வனத்திற்குள்
எனை நாடு கடத்துங்கள்

இயல்பாய் சுவாசித்துக் கொள்கிறேன் என்றது _ உயிர் துடிப்பு..

ஏனென்று கேட்க அரவமில்லை..

காத்திருந்து காத்திருந்து

உயிர் காற்று கடந்து போனது..

அப்பாடா..

இனி அடைத்து வைக்க ஆளில்லை..

சுதந்திரமாய் பெருமூச்சு விட்டது உயிர்!!

காத்திருப்பு
***************
நித்தம் நித்தம்
கொலுசின் ஓசை
காதுகளில் ஒலிக்கிறது…

சுவர்களின் கிறுக்கல்கள்
கதைபேச அழைக்கின்றன..

ஆட்டம் இல்லா ஊஞ்சல்
மகிழ்ந்த நிஜங்களைச் சொல்கிறது..

அடுப்படி பொருள்கள்
வைத்தது வைத்தபடி..
கூட்டாஞ்சோறு
விளையாட ஆளில்லாமல்
ஓய்ந்து கிடக்கிறது..

கரடியும் பூனையும்
கொஞ்சிக் கொஞ்சி
சோறூட்டக் காத்திருந்து
சாய்ந்து பார்க்கிறது..

மெத்தையும் தலையணையும்
ரயில் வண்டி விளையாட்டிற்கு
யாரைச் சுமக்க நானென்று

கேட்காமல் கேட்கிறது..

இவைகளோடு
ஓர் ஓரமாய் நானும்..
காத்திருக்கிறேன்
அடுத்த விடுமுறைக்காக..

**************

குழந்தை கைக்கு
அகப்படாமல்
விளையாடுகின்றன ஈக்கள்!

*********
பௌர்ணமி நாளில்
கடற்கரை மணலில்
தவமிருக்கும் படகு

*********

நிழலாக படகுகள்
கடலலை மேலே
நிலவின் ஒளியில்!

*********

கதை சொல்கிறது
பழைய வீட்டு திண்ணை
அம்மா இல்லை!

********

கிணற்றடியில்
கதை பேசும்
சிட்டுக்குருவிகள்!

********

தூளியில் ஆடும்
பிள்ளைச் சத்தம்
அம்மாவின் சீலை!

********

சக்கரமில்லா நடைவண்டி
பரணில் இருக்கிறது
பழைய வீட்டில்!

********

சிட்டுக்குருவி கிரீச்சிட்டது
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு!

– கவிதா பிருத்வி
தஞ்சை.

சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்




ஒரு கிராமத்தின்  கதை…..!!!!
********************************
காத்திருப்பேன் தூண்டிலுடன் குளக்கரையில் மீனுக்காய்
கெண்டை விழும் கெழுத்தி விழும்
சில சமயம் நண்டும் விழும்

காஞ்ச மணல் மேலே
சாஞ்சிருக்கும் கிளிஞ்சலெல்லாம்
என்னவளின் பாதம் பட
நொறுநொறுத்துக் குரல் எழுப்பும்

தரை அமர்ந்த தவளையெல்லாம்
அவள் பார்க்க ‘டைவ்’வடிக்கும்
அவளழகில் மயங்கிக் கெண்டை
மீன்களெல்லாம் வாய் பிளக்கும்

வகை வகையாய் இடையசைத்து
வரவேற்கும் நாணலெல்லாம்
ஒற்றைக் கால் கொக்குகளோ
மதிப்பளித்து காலிறக்கும்

கரையேற நீந்தி வந்த
நீர்ப் பாம்பு தடுமாறும்

வெண்மேகம் குடை பிடித்து
நீர் தெளித்து வரவேற்கும்

சர்க்கரையாய்ப் பேச்சிருக்கும்
அக்கறையும் கலந்திருக்கும்
உள்ளங்கை ரேகையெல்லாம்
உழைச்சுழைச்சு தேய்ஞ்சிருக்கும்

மாமா என அழைத்து
அருகமர்வாள் மனசோ
நூலறுத்த பட்டமெனச்
சிறகடிக்கும்

குளக்கரையில் கதை தொடங்கும்
கும்மிருட்டு சூழும் வரை
ஊராரின் வெறும் வாய்க்கு
சர்க்கரையாய் எம் கதைகள் காதுகளில்
தேனாய் இனிக்கும் ……….. !!!!!!

சுடுகாடு…..!!!!
****************
தீண்டப்படாத
எம்மக்களின்
ஒவ்வொரு பிணமும்
பொது வழிப்பாதையை
தீண்ட முடியாமலேயே கடந்து
போகிறது
இந்த சுதந்திர இந்தியாவில்,

காதல் சூனியம்….!!!! 
*************************
உனக்குப்
பிடிக்கவில்லை
என்றால் நீ
தூரமாகவே
இருந்துவிடு,

உந்தன்
நினைவுகளை
மட்டும்
என்னருகிலேயே
வைத்துக் கொள்கிறேன்,

நீ இல்லை
என்றதும்
மாட்டுக்
கொட்டகையிலிருந்து
அவிழ்த்துக் கொண்ட
பசுவின் கன்றைப்
போல அலைகிறேன்,

உந்தன்
காலடி பட்ட
மண்னை
எடுத்து பத்திரமாக
வைத்துக்
கொண்டேன்,

உன்
ஞாபகத்திற்காக அல்ல,
பில்லி சூனியம் செய்து
ஏவி விடுவதற்காக….!!!!!!!!!
******************************

பனிக்கட்டியாகக் கரைந்து
உருகிப் பனியாறாய்
ஓடிக் கொண்டிருக்கிறது
அவனின் நினைவு,

நினைவிலே வருபவன்
கனவில் கூட நெருங்கி
வர மறுக்கிறான் வயதெனும்
பாத்திரமாக நீ இருப்பதால்,

மந்திரம் தந்திரமாக
தனக்குள்ளே அவனை
வரவழைக்க முயற்சிக்கிறாள்
மூக்கணாங்கயிறைக் கையுறையிலே
வைத்து அலைபவள்

இச்சையெனும் பச்சைக் கொடியை
உடல் முழுவதும் பூசிக்கொண்டு
அலைந்து திரிபவள்
அலமாரியில் கிடக்கும்
வாசிக்காத புதுப் புத்தகமாய் மினுக்குகிறாள்,

தனிமையில் வாடிய போது
எனது உடலை யாரோ
தீண்டியது போல சில உணர்வுகள்
ஊஞ்சல் கட்டி ஆடின.

மேலாடையாகப் போர்த்திய
மேகத்துணி காற்றின் வேகத்தால்
கலைந்து போய்விடுகிறது
அவன் வருவானா……?
ஊாரடங்கு
எடுத்துக்கொள்வானா …..?

உலக உருண்டை சுழலட்டும்,
அவனின் நினைவுகளை
நான் அசை
போட்டுக்கொண்டே இருப்பேன்
வாசலில் கட்டிய
கன்றுக்குட்டியைப் போல…….!!!!

கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,