நூல் விமர்சனம்: தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – விஜி ரவி
கொட்டுமேளம் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் இருக்கின்றன. வர்ணனைகள் அதிகமின்றி கதாபாத்திரங்களின் சுவையான உரையாடல் வழியே ஒரு தனி உலகையே நம் கண்முன் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
இத்தொகுப்பின் முதல் சிறுகதை ‘கொட்டுமேளம்’. பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கூட படித்த பள்ளித்தோழன் என்ற ஒரே காரணத்திற்காக பலதடவை டாக்டரிடம் வைத்தியம் பார்த்தும் டாக்டர் பீஸ் முந்நூறு ரூபாயை டாக்டருக்கு கொடுக்காமல் ஏமாற்றும் மாரியப்பன் பஞ்சாயத்துத் தேர்தலில் ஜெயித்து சேர்மன் ஆனதைக் கொண்டாடும் விதமாக கொட்டுமேளம், தவில், நாயனம் என பணத்தைக் கண்டபடி வாரியிறைத்து, அமர்க்களமாக ஊருக்குள் தொண்டர்கள் புடை சூழ ஊர்வலம் வருகிறான். அவன் கண்களில் படும்படி தனியார் ஆஸ்பத்திரி முன்பு தர்ம வைத்தியசாலை என்ற பலகையை தொங்க விடுகிறார் அந்த மருத்துவர். பிழைக்கத் தெரியாதவர் போல என்ற எண்ணம் மேலெழுந்தவாரியாக மனதில் எழுந்தாலும் மாரியப்பனின் சின்ன புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இந்த கதையில்.
‘’பசி ஆறிற்று’’ என்ற கதையின் தலைப்பே சுவாரசியமும், ஆழமான அர்த்தமும் கொண்டது. ‘’ இந்த டாமரச் செவிட்டுக்கு வாழ்க்கைப்பட்டாகி விட்டது. குருக்கள் பெண் குருக்களுக்கு தான் வாழ்க்கைப் பட வேண்டும் என்றாலும் அப்பாவுக்கு இந்தப் பூ மண்டலத்தில் வேறு ஒரு வரன் கூடவா அகப்படவில்லை…? செவிடாய் போவதை விட மட்டம் ஒன்றுமே இல்லை..’’ என்ற அகிலாண்டத்தின் ஆதங்கமும், மிலிட்டரி உத்தியோகத்தில் இருக்கும் அடுத்த வீட்டு ராஜத்தின் அழகில் மனம் லயித்து அலை பாய்வதும், அவன் ஊருக்கு கிளம்பியதும் வேதனை தாளாமல் அழுவதுமாக மனதை குழப்பிக் கொள்கிறாள் அவள். ‘’ரொம்ப நாழி பண்ணிட்டேனா…? பசி துடிக்கிறதாக்கும் அம்பாளுக்கு?’’ வெயிலில் நடந்து வந்து, தேகம் வேர்த்து விறுவிறுத்தாலும், கனிவுடன் பரிவுடன் ஜென்மத்திலேயே கோபத்தை அறியாத கண்ணும், உதடும் வழக்கம்போல புன்சிரிப்பில் மலர கணவன் கேட்டதும் மயங்குகிறாள். அவள் மனதும் மாறிப்போகிறது. ‘’இதைவிட என்ன வேணும்?’’ என கற்பனையை உதறி நிதர்சனத்தை ஆராதிக்கத் தொடங்குகிறாள். ‘எல்லாப் பசியும் தீர்ந்து விட்டது’ என்ற கடைசி வரியே அவள் மனமாற்றத்திற்கு சான்று.
‘’தவம்’’ சிறுகதையில் அழகி சொர்ணாம்பாளின் சௌந்தர்யத்தில் மயங்கி பல பெரும் செல்வந்தர்கள் அவள் காலடியில் பணத்தைக் கொட்ட…. அதைப் பார்க்கும் வேலைக்காரன் கோவிந்தவன்னிக்கும் பெரும் செல்வம் சம்பாதித்து அவளிடம் தந்து அவள் அன்பைப் பெற எண்ணுகிறான். சிங்கப்பூருக்கு சென்று பத்து வருடங்கள் படாதபாடுபட்டு, குண்டு, பீரங்கி, குத்து வெட்டுக்கு நடுவில், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, கட்டின மனைவியைக் கூட நினையாமல் ஒருகணமும் சொர்ணாம்பாளை மறக்காது காலம் தள்ளும் கோவிந்த வன்னி…. ஊர் திரும்பி ஆசையாசையாய் அவளைப் பார்க்க வருகிறான் கட்டுப் பணத்துடன்.
‘’ கொன்றைப்பூ நிறம் அப்படியே அற்றுப்போய் உடல் பச்சை பாய்ந்து கருத்திருந்தது. கூனல் வெகுநாள் கூனல் போல…. தோள்பட்டையிலும் கன்னத்திலும் எலும்பு முட்டிற்று.
தலை முக்கால் நரைத்து விட்டது. வகிட்டுக் கோட்டில் வழுக்கைத் தொடங்கி அகன்று இருந்தது. அவள்தான் சொர்ணாம்பாள் என தெரிந்துகொள்ள இரண்டு நிமிஷம் ஆயிற்று அவனுக்கு. அழகில்லாதது கோரமாகலாம். அழகு கோரமானால்…..? பயங்கரமாக இருந்தது அவள் தோற்றம்.’’
“தவங்கிடக்கிறதுக்கு முறை உண்டு. கண்டதுக்கெல்லாம் தவங்கிடந்தா மனசுதான் ஒடியும். தண்டனைதான் கிடைக்கும்’’ என்ற அவளின் பதில்தான் அவனின் பத்து வருட தவத்திற்கான வரமாய் இல்லாமல் சாபமாய், இடியாய் அவன்மேல் இறங்குகிறது.
ஒன்றாம் வகுப்பு வாத்தியாரின் மகளாக பிறந்து உடன்பிறந்தோர் எட்டுப் பேரின் கூட்டத்தில் ஒரு வேளை சாப்பாடு கூட வயிறு நிறைய உண்ண முடியாமல், ஜட்ஜ் வீட்டில் பெரிய மனுஷி போல் பத்துப் பாத்திரம் தேய்த்து, காபி, டீ போட்டு, இட்லி தோசைக்கு அரைத்து, குழம்பு, ரசம் வைத்து, கோலம் போட்டு, அடுப்பு மொளுகி, வேஷ்டி புடவை துவைத்து, கைக்குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொண்டு…… என நீளும் வேலைகளை அனாயசமாக செய்யும் ஏழு வயதுக் காமாட்சி…. இரண்டு வேளை சாப்பாட்டுக்கு சம்பளம் இல்லாமல் உழைக்கும் காமாட்சி கண்கலங்க வைக்கிறாள். ஒன்பது வயதில் பெற்றோரை விட்டு ஊரை விட்டு கண்காணாத தொலைவுக்கு கல்கத்தாவுக்கு வேலைக்குப் போகும் காமாட்சி…..
ஒரு ஆரஞ்சுப் பழத்துக்கு பெங்களூரிலிருந்து கேட்டு நச்சரித்து திருச்சிராப்பள்ளியில் அது கிடைக்கப் பெற்றதும் அதைத் தின்னாமல், ‘ஊருக்கு போய் அம்மா கிட்ட கொடுத்து அவள் உரித்து தந்து சாப்பிடுறேன்’ என்று அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் ஆறு வயது பையன். ரயிலில் சந்தித்த திடீர் சினேகிதி காமாட்சிக்கு அவனின் பிரியமான ஆரஞ்சுப்பழத்தைப் பரிசாக தந்து விட்டு அவனுடைய ஸ்டேஷனில் தந்தையுடன் இறங்கும்போது அந்த சின்ன குழந்தையின் அன்பில் மனம் கரைந்து சிலிர்த்து தான் போகிறது ‘’சிலிர்ப்பு’’ சிறுகதையில்.
நூல் : கொட்டுமேளம்
ஆசிரியர் ; தி. ஜானகிராமன்
பதிப்பகம்; காலச்சுவடு
விலை; 214