நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் – பெ.விஜயகுமார்
டி.எஸ்.எலியட் ஆங்கில இலக்கிய உலகில் கவிதை, நாடகம், திறனாய்வு, இதழியல் என்று பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வந்தவர். அமெரிக்காவில் பிறந்து (1888) இங்கிலாந்தில் வாழ்ந்து மறைந்த (1965) எலியட் 1948ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். எலியட்டின் ‘தி வேஸ்ட் லாண்டு’ கவிதை இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிதையாகப் போற்றப்படுகிறது. கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட எலியட்டின் படைப்புகளில் கிறித்துவமதக் கோட்பாடுகள் வெளிப்படையாகவும், மறைந்தும் விரவிக் கிடக்கின்றன. ’கான்ஃபிடன்சியல் கிளர்க்’, ’காக்டெய்ல் பார்ட்டி’, ’ஃபேமிலி ரீயூனியன்’, ’தி எல்டர் ஸ்டேட்ஸ்மென்’ ஆகியன சமூக நாடகங்கள் போல் தெரிந்தாலும் ‘மறைமுக கிறித்துவ’ நாடகங்களே.
’மர்டர் இன் தி கத்டிரல்’ (Murder in the Cathedral) நாடகம் 1935இல் காண்டர்புரி பேராலயத் திருவிழா கொண்டாட்டத்திற்காக எலியட்டால் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்ட கிறித்துவ நாடகம். கவிதை நடையில் எழுதப்பட்ட அந்த நாடகம் பல முறை தொடர்ந்து மேடையேறி வெற்றி கண்டது. இங்கிலாந்தில் 1936இல் தொலைக்காட்சி அறிமுகமான ஆண்டிலேயே நாடகம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. எலியட்டின் Murder in the Cathedral நாடகத்தை பேராசிரியர் ச.வின்சென்ட் ‘பேராலயத்தில் படுகொலை’ என்ற பெயரில் அழகு தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
’பேராலயத்தில் படுகொலை’ 1170ஆம் ஆண்டு இங்கிலாந்தின் காண்டர்புரி பேராலயத்தில் நடந்த உண்மை சம்பவத்தினைச் சித்தரிக்கும் வரலாற்று நாடகம் ஆகும். இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஹென்றி – காண்டர்புரி பேராலயத்தின் பேராயர் தாமஸ் பெக்கெட் இருவருக்கும் இடையில் நடந்த நீண்ட பனிப்போர் கொடூரக் கொலையில் முடிந்தது. இப்படுகொலையை நேரில் கண்ட எட்வர்டு கிரிம் என்பவர் எழுதிய ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டே எலியட் அந்த நாடகத்தை எழுதினார்.
இரண்டாம் ஹென்றியும், தாமஸ் பெக்கெட்டும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஹென்றி மன்னரானதும் நண்பர் பெக்கெட்டை இங்கிலாந்தின் வேந்தர் (Chancellor) என்ற உயர்ந்த பதவியில் அமர்த்தினார். வேந்தராக சிறப்புடன் பணியாற்றிய பெக்கெட் காண்டர்புரி பேராலயத்தின் பேராயராக நியமிக்கப்பட்டதும் முற்றிலும் மனம் மாறினார். வேந்தர் பதவியிலிருந்து விலகினார். மறைப்பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஆட்சி அதிகாரம் ஹென்றி கையில், மதத் தலைமை பெக்கெட் கையில் என்றானதும் இருவருக்குமிடையில் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. மத விஷயங்களில் மன்னர் தலையிடுவதை பெக்கெட் விரும்பவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பெக்கெட் தலையிடுவதை ஹென்றி இடையூறாக நினைத்தார். இச்சமயத்தில் யார்க் பேராயர், சாலிஸ்புரி ஆயர், லண்டன் ஆயர் ஆகியோர் ஹென்றியின் மகனுக்கு அரசனின் வாரிசாக யார்க் பேராலயத்தில் முடிசூடினார்கள். அரச பரம்பரையினருக்கு முடிசூடுவது காண்டர்புரி பேராயரின் உரிமையாகும். இந்த மீறலைப் பொறுத்துக் கொள்ளாத பெக்கெட் கோபத்தில் ஆயர்கள் மூவரையும் மத நீக்கம் செய்தார். ஹென்றி – பெக்கெட் இருவருக்கும் இடையிலான பகைமை முற்றி நிலைமை மோசமானதும் பெக்கெட் பிரான்சிற்குத் தப்பிச் சென்றார்.
பெக்கெட்டுக்கு பிரான்சு மன்னர் ஏழாம் லூயி அடைக்கலமும், ஆதரவும் கொடுத்தார். ரோமிலிருந்து திருத்தந்தை தலையிட்டு இருவருக்கும் இடையில் சமரசம் செய்து வைத்தார். இதனால் பெக்கெட் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து திரும்பினார். இருப்பினும் பகைமை தீரவில்லை. ஒரு நாள் ஹென்றி ஆத்திரத்தில் “யாரேனும் இந்தப் பேராயரின் தொந்திரவுக்கு முடிவுகட்ட மாட்டீர்களா?” என்று பொதுவாகச் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு மன்னருக்கு விசுவாசமான நான்கு வீரர்கள் காண்டர்புரி பேராலயத்திற்குச் சென்று பெக்கெட்டை கொடூரமாகக் கொலை செய்து விடுகின்றனர். இந்த வரலாற்று நிகழ்வினையே எலியட் நாடகமாக வடித்துள்ளார்.
நாடகம் இரண்டு பாகங்களில் கவிதை மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஏழாண்டு காலம் பிரான்சில் அடைக்கலம் பெற்றிருந்த தாமஸ் பெக்கெட் 1170 டிசம்பர் இரண்டாம் நாள் காண்டர்புரி பேராலயத்திற்குத் திரும்புகிறார். முதல் பாகம் அந்நாளைய நிகழ்வுகளைச் சித்தரிக்கிறது. டிசம்பர் 29 அன்று பேராலயத்தில் நடக்கும் கொடூரக் கொலையை இரண்டாம் பாகம் காட்சிப்படுத்துகிறது. இரு பாகங்களுக்கும் இடையில் தாமஸ் பெக்கெட் டிசம்பர் 25இல் ஆற்றும் கிறிஸ்துமஸ் மறையுரை உரைநடை மொழியில் உள்ளது. சேர்ந்திசைப் பாடகர்களின் நீண்ட பாடலுடன் நாடகம் தொடங்குகிறது. கிரேக்க செவ்வியல் நாடக வழியில் சேர்ந்திசைப் பாடகர்களை எலியட் பயன்படுத்துகிறார். கிரேக்க நாடகங்களில் ‘Chorus’ என்றழைக்கப்படும் சேர்ந்திசைப் பாடகர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். சேர்ந்திசைப் பாடகர்கள் நாடகத்தில் பார்வையாளர்களுக்கும் நாடகாசிரியருக்கும் இடையில் பாலமாக விளங்குகிறார்கள். நாடகத்தில் நேரடியாகப் பங்கேற்பதோடு மேடையில் ஒதுங்கி நின்று வர்ணனையும் செய்கிறார்கள்.
காண்டர்புரி தேவாலயத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் சேர்ந்திசைப் பாடகர்களாகப் பேராயரின் மண்டபத்தில் கூடுகிறார்கள். “பேராலயத்தில் பாதுகாப்பு இல்லை. நாங்கள் சாட்சிகளாக இருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம். புத்தாண்டு இருளில் காத்திருக்கிறது. அமைதியான பருவநிலைகளில் கலக்கம் வருமென்று அஞ்சுகிறோம்” என்று வரவிருக்கும் சோகத்தையும், கொலையையும் முன்னறிந்து பாடுகிறார்கள். ”விதி இறைவனின் கையில் காத்திருக்கிறது. அரசியல் தலைவர்களின் கைகளில் அல்ல. எங்களுக்கு, ஏழைகளுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. காத்திருந்து சாட்சியாக இருப்பது மட்டுமே எங்கள் விதி” என்று முறையிடுகிறார்கள். புலம்புகிறார்கள். இவர்களின் அழுகுரல் கேட்ட மூன்று பேராலயக் குருக்கள் பெண்களை அமைதிப்படுத்துகிறார்கள். பிரான்சில் இருக்கும் பேராயர் பெக்கெட் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பார், அமைதிக்கான வழியை அறிந்து வருவார் என்ற நம்பிக்கையை அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்நேரத்தில் தூதுவன் வருகிறான். பேராயரின் வருகையை அறிவிக்கிறான். குருமார்கள் ஆச்சரியத்தில் மூழ்குகிறார்கள். “என்ன! பழைய பகைகள் முடிந்தனவா, அவர்களைப் பிரித்த அகந்தைச் சுவர் வீழ்ந்து விட்டதா? அமைதியா, போரா?” என்ற கேள்விக்கு தூதுவன், “அமைதி; ஆனால் அமைதியின் முத்தம் இல்லை” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்.
பேராயரின் வருகையைக் கேட்டதும் “நான் பேராயருக்காக அஞ்சுகிறேன், நான் திருச்சபைக்காக அஞ்சுகிறேன்” என்று குரு ஒருவர் தன்னுடைய பயத்தை வெளிப்படுத்துகிறார். மற்றொரு குரு “எனினும் நமது ஆண்டவர் வந்து விட்டார். அவருடைய இடத்திற்கு மீண்டு விட்டார். நமது ஐயங்கள் மறைகின்றன. கடவுளின் பாறை நமது காலடியில் இருக்கிறது. நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்”. என்று நம்பிக்கை கொள்கிறார். மூன்றாவது குரு, “நல்லதற்கோ தீயதற்கோ சக்கரம் சுழலட்டும். சக்கரம் இந்த ஏழு ஆண்டுகளாகச் சுழலவில்லை. நல்லதோ கெட்டதோ அதன் முடிவு யாருக்குத் தெரியும்? என்று சொல்லி எதற்கும் தயாராகிறார். சேர்ந்திசைப் பாடகர்கள் மீண்டும் அழுகிறார்கள். “ஓ, தாமஸ், திரும்பிப் போங்கள். பேராயரே! திரும்பிப் போங்கள், ஃப்ரான்சுக்குப் போங்கள். புரிந்துகொள்ள முடியாத ஓரச்சத்தில் நாங்கள் பயப்படுகிறோம். எங்களை விட்டுப் போங்கள். ஃப்ரான்சுக்குப் போங்கள்” என்று பதறுகிறார்கள். இரண்டாம் குரு அவர்களை அமைதிப்படுத்தும் போது பெக்கெட் உள்ளே நுழைகிறார். “அவர்கள் பேசட்டும்; அவர்கள் நன்றாகவே பேசுகிறார்கள். செயல்படுவது என்னவென்றும் அல்லது துன்புறுவது என்னவென்றும் அவர்களுக்குத் தெரியும். செயல்படுவது துன்புறுதல் என்றும் துன்புறுவது செயல்படுதல் என்றும் அவர்களுக்குத் தெரியும்”. என்று சொல்லி பெக்கெட் அனைவரையும் அமைதிப்படுத்துகிறார். “முடிவு எளிமையாய், திடீரென்று நிகழ்வதாய், கடவுள் தருவதாக இருக்கும்”, என்று வரவிருக்கும் ஆபத்தை அறிந்தவராக கூறுகிறார்.
தாமஸ் பெக்கெட்டின் பலவீனத்தைத் சோதித்துப் பார்க்க நான்கு சோதனையாளர்கள் (Tempters) வருகிறார்கள். முதல் சோதனையாளர் பெக்கெட்டின் இளமைக் கால சல்லாபங்களை நினைவுப்படுத்தி மீண்டும் பழைய இன்பலோகத்திற்கு அழைக்கிறார். “வசந்தகால ஆசையை விட்டு விடுவது நல்லது” என்று பெக்கெட் உடனே விரட்டி விடுகிறார். இரண்டாவது சோதனையாளர் “நீங்கள் நாட்டின் வேந்தராக இருந்த நாட்களை நினைத்துப் பாருங்கள். மீண்டும் வேந்தராகி பலருக்கும் பேருதவிகள் செய்து மகிழலாமே” என்கிறார். பெக்கெட் “வானகத்துத் திறவுகோலையும், நரகத்தின் திறவுகோலையும் பொறுப்பாய் வைத்திருக்கும் நான் குறுகிய அதிகாரி ஆகும் ஆசைக்காகக் கீழிறங்குவேனா?” என்று சொல்லி மறுத்து விடுகிறார். மூன்றாம் சோதனையாளர் “மன்னர் பலமிழந்து இருக்கும் இவ்வேளையில் மற்ற பிரபுக்களை ஒருங்கிணைத்து அரசு அதிகாரத்தைக் கைப்பற்றலாமே” என்கிறார். பெக்கெட் “புறாக்கள் மத்தியில் கழுகாய் ஆட்சிபுரிந்த நான், இப்போது ஓநாய்களின் மத்தியில் ஓநாயின் உருவெடுப்பதா? நான் ஒரு அரசரை ஏமாற்றினேன் என்று யாரும் என்னைச் சொல்லக் கூடாது” என்று அந்தக் கூற்றையும் மறுத்து விடுகிறார்.
நான்காவது சோதனையாளரைக் கண்டதும் பெக்கெட் திடுக்கிடுகிறார். “நீ யார், என்னுடைய ஆசைகளாலேயே என்னைச் சோதிக்கும் நீ யார்?” என்று கேட்கிறார். “நீங்கள் நினைப்பதை, விரும்புவதையே நான் முன்மொழிகிறேன். ஆம்; தாமஸ் இதைப்பற்றி நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். என்றென்றும் கடவுளின் முன்னிலையில் வகிக்கும் ’புனிதர்களின்’ மகிமைக்கு எது ஈடாகும்? மன்னருடையது மண்ணுலக மகிமை. நீங்கள் மறைசாட்சியத்தைத் (martyrdom) தேடுங்கள் தாமஸ்! ’புனிதர்’ (Saint) என்று போற்றப்படுவீர்கள்! மேலுலகை அடைந்து உங்களைத் துன்புறுத்தியவர்கள் காலமில்லாத சித்திரவதையில் கிடப்பதைப் பார்ப்பீர்கள், உங்கள் கனவில், மனதில் இருப்பதையே நான் உரைக்கிறேன்” என்று ’புனிதர்’ ஆவதால் கிடைக்கும் பெருமைகளைச் சொல்லி நான்காவது சோதனையாளர் பெக்கெட்டின் மனதை அசைக்கிறார்.
“மற்ற மூன்று சோதனையாளர்களும் பயனற்றவற்றை முன்மொழிந்தனர். ஆனால் நீ தருவது மீளா நரகத்தின் கனவுகள். பாவம் நிறைந்த அகந்தையை இன்னும் அதிகமாகக் குற்றமிழைத்துத்தான் விரட்ட முடியுமா? ’புனிதர்’ என்றுரைத்து என்னைச் சபலத்துக்குள்ளாக்குகிறாய்” என்று சொல்லி பெக்கெட் மனங்கலங்குகிறார். நான்கு சோதனையாளர்களும் ஒரே குரலில் “மனித வாழ்க்கை ஓர் ஏமாற்று. உண்மையற்றது. குழந்தைகளின் விருந்தில் அளிக்கப்படும் பரிசு, மாணவரின் பட்டம், அரசியல்வாதியின் பதக்கம் எல்லாமே உண்மையற்றது. இந்த மனிதர் பிடிவாதக்காரர் கண்ணை மூடி தன் அழிவில் குறியாய் இருக்கிறார். தன்னுடைய பெருமையின் உன்னதத்தில் தொலைந்து போகிறார்”. என்று ஒரே குரலில் பேசுகிறார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று குருக்களும், சேர்ந்திசைப்போரும், வரவிருக்கும் ஆபத்தைத் தடுக்க முனைகிறார்கள். ”சன்னல் மூடியிருக்கிறதா? கதவு பூட்டியிருக்கிறதா? காவல் நாய் வெளிக்கதவு அருகில் நிற்கிறதா? சாவுக்கு நூறு கைகள் உள்ளன. சாவு ஆயிரம் வழிகளில் நடக்கிறது. சாவு எல்லோர் பார்வையில் வரலாம். யாரும் பார்க்காமல், யாரும் கேளாமல் வரலாம்”. என்று பதற்றப்படுகிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தி விட்டு, ”சோதனை இது போல் இனி வராது. கடைசிச் சோதனை. தவறான காரணத்திற்காக நல்ல செயலைச் செய்வது”. என்று பெக்கெட் தன் நிலைபாட்டைத் தெளிவாக்குகிறார். முதல் பாகம் முடிகிறது.
அடுத்து கிறிஸ்துமஸ் நாள் மறைவுரையை பெக்கெட் வழங்குகிறார். ”கடவுளின் அன்பான குழந்தைகளே! கிறிஸ்துமஸ் நாள் அன்று நாம் ஒரே நேரத்தில் ஆண்டவரின் பிறப்பையும், இறப்பையும் மட்டும் கொண்டாடுவது இல்லை. அதற்கடுத்த நாள் கிறிஸ்துவின் மறைசாட்சியான மகிமைக்குரிய ஸ்டீபனது சாட்சியத்தையும் கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அடுத்த நாளே முதல் மறைசாட்சியின் நாள் (புனிதர் ஸ்டீபன் நாள்) வருவது தற்செயலானது என்று நினைக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை. ஒரே நேரத்தில் ஆண்டவனின் பிறப்பிலும், பாடுகளிலும் மகிழ்ச்சியும், துக்கமும் கொள்வது போல் மறைசாட்சிகளின் மரணத்திலும் மகிழ்ச்சியும் துக்கமும் கொள்கிறோம். நான் மீண்டும் உங்களுக்கு மறையுரை ஆற்றுவேன் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், உங்களுக்கு இன்னொரு ’மறைசாட்சி’ கிடைக்கப் போகிறார். அவரும் கடைசியானவராக இல்லாமல் இருக்கலாம். நான் சொல்வதை இதயத்தில் இருத்தி வேறொரு சமயத்தில் எண்ணிப் பாருங்கள். தந்தை! மகன்! தூய ஆவியின் பெயரால் ஆமன்!” என்று கிறிஸ்துமஸ் மறையுரை பெக்கெட் முடிக்கிறார். அத்துடன் தான் மற்றுமொரு ’மறைசாட்சி’யாக மாற விரும்புவதையும் உணர்த்தி விடுகிறார்.
நாடகத்தின் இரண்டாம் பாகம் சேர்ந்திசைப் பாடகர்களின் நீண்ட புலம்பலுடன் தொடங்குகிறது. பேராலயத்துக்குள் திடீரென்று நான்கு வீரர்கள் (Knights) அதிரடியாக நுழைகிறார்கள். அரசரின் ஆணைப்படி அவசர வேலையாக வருவதாகக் கூறுகிறார்கள். குருக்கள் இரவு உணவுக்கு வீரர்களை அழைக்கிறார்கள். ”உங்களுடைய விருந்தோம்பல் எங்களுக்குத் தேவையில்லை” என்று வீரர்கள் மறுத்து விடுகிறார்கள். பேராயரை வரச் சொல்லி அவசரப்படுத்துகிறார்கள். வீரர்களின் சத்தத்தைக் கேட்டு தாமஸ் பெக்கெட் அரங்கத்துக்குள் வந்து வீரர்களை மனமுவந்து வரவேற்கிறார். ஆனால் வீரர்கள் பெக்கெட்டை மரியாதையின்றிப் பேசுகிறார்கள். “மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்கிறீர்கள்; அவருடைய பணியாள் நீங்கள்; அரசரின் கருணையால் பதவிகளைப் பெற்றீர்கள்; பொய் சொல்லியுள்ளீர்கள்; அரசரை ஏமாற்றி பணத்தைச் சுருட்டியுள்ளீர்கள்” என்று சரமாரியாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
“வீரர்களே! நீங்கள் சொல்வதை மக்கள் முன்னால் சொல்லுங்கள் நான் மக்கள் மத்தியில் பதிலளிக்கிறேன்” என்கிறார் பெக்கெட். வீரர்கள் பெக்கெட்டைத் தாக்க முற்பட்டதும் குருக்களும், பணியாளர்களும் அவரின் பாதுகாப்புக்கு ஓடோடி வருகிறார்கள். “சட்டவிதிகளுக்கு உட்பட்டு இளவரசருக்கு முடிசூடல் நடந்தது. நீங்கள் முடிசூடிய ஆயர்களைப் பதவி நீக்கம் செய்தீர்கள்” என்று வீரர்கள் சொன்னதும் ”ஆயர்கள் மீது நடவடிக்கை எடுத்தது நான் அல்ல. நடவடிக்கை எடுத்தது திருத்தந்தை. கிறிஸ்துவின் திருச்சபைச் சட்டம். உரோமையின் நீதித் தீர்ப்பு. இதுகுறித்து நீங்கள் பேசவேண்டியது என்னிடமல்ல திருத்தந்தையிடம். உரோம் மட்டுமே ஆயர்களைக் குற்றங்களிலிருந்து விடுவிக்க முடியும்” என்று பெக்கெட் விளக்கமளிக்கிறார். ”பேராயரே! உமது உயிருக்கு ஆபத்து ஏற்படப் பேசுகிறீர்கள். கத்தி முனையின் ஆபத்தில் பேசுகிறீர்கள். அரச துரோகம் பேசுகிறீர்கள்; நாங்கள் திரும்ப வருவோம்; பேராயரை தப்பித்துச் செல்ல விடாதீர்கள்” என்று கூடியிருந்தவர்களை எச்சரித்துவிட்டு நான்கு வீரர்களும் வெளியேறுகிறார்கள். தாமஸ் பெக்கெட் பயமேதுமின்றி “சிறைப் பிடிக்க வாருங்கள்! வாளுடன் வாருங்கள்! ஆண்டவனின் பேரில் நான் காத்திருக்கிறேன்’ என்று எந்தவிதப் பதற்றமுமின்றி பெக்கெட் கூறுகிறார்.
சேர்ந்திசைப் பாடகர்களும் குருக்களும் பெக்கெட்டை தப்பித்து ஓடச் சொல்கிறார்கள். பேராலயத்தின் கதவுகளை மூடுகிறார்கள். சிறிது நேரத்தில் நான்கு வீரர்களும் திரும்ப வருகின்றனர். பெக்கெட் கதவுகளைத் திறக்கச் சொல்லி ஆணையிடுகிறார். “கதவின் தாழைத் திறவுங்கள்! போரிட்டோ, வியூகத்தாலோ, எதிர்ப்புக் காட்டியோ நாம் வெற்றி பெற வேண்டியதில்லை. விலங்கை எதிர்த்துப் போரிட்டு நாம் வெற்றி பெற்று விட்டோம். இப்போது துன்புற்று மட்டுமே வெற்றி காண வேண்டும். இப்போது இது சிலுவையின் வெற்றி. கதவைத் திறங்கள்!” என்று ஆணையிடுகிறார். கதவு திறக்கப்படுகிறது. வீரர்கள் உள்ளே வருகின்றனர். “நீங்கள் மதம் நீக்கம் செய்த அனைவரையும் விடுவியுங்கள். நீங்கள் எடுத்துக் கொண்ட அதிகாரங்களை விட்டு விடுங்கள். நீங்கள் மீறிய கீழ்ப்படிதலைப் புதுப்பியுங்கள்” என்று எச்சரிக்கிறார்கள். துரோகி! துரோகி” என்று ஆவேசத்துடன் கத்துகிறார்கள். “நான் எல்லாம் வல்ல இறைவனிடமும், என்றும் கன்னியான மரியா, புனிதர் திருமுழுக்கு யோவான், திருச்சீடர் பேதுரு பவுல், புனித சாட்சி டெனிஸ், மற்றும் எல்லாப் புனிதர்களிடமும் எனது பணியை ஒப்புக் கொடுக்கிறேன்” என்று சொல்லி பெக்கெட் அவர்களின் தாக்குதலுக்கும் ஒப்புக் கொடுத்து அமைதியுடன் நிற்கிறார். நான்கு வீரர்களும் பெக்கெட்டை வெட்டிச் சாய்க்கிறார்கள்.
சேர்ந்திசைப் பாடகர்கள் கதறி அழுகிறார்கள். ”நாம் மட்டும் அல்ல, வீடு மட்டுமல்ல, நகரம் மட்டுமல்ல தீட்டுப்பட்டது. உலகம் முழுவதுமே மாசடைந்து விட்டது. காற்றைத் தூய்மைப்படுத்துங்கள். வானத்தைச் சுத்தமாக்குங்கள். கல்லைக் கழுவுங்கள், எலும்பைக் கழுவுங்கள், ஆன்மாவைக் கழுவுங்கள்” என்று தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்கள். நான்கு வீரர்களும் ஒவ்வொருவராக வந்து தங்கள் செயலை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள். பின்னர் ரெஜினால்டு ஃபிட்ஜ், வில்லியம் தி டிரேசி, ஹியு தெ மார்வில், ரிச்சர்டு பிரிட்டோ ஆகிய நான்கு வீரர்களும் ஒருமித்த குரலில் பேசுகிறார்கள். ”எங்களைவிட வன்முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்திற்காக வருத்தப்படுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் சமூக நீதியை நிலைநாட்ட வன்முறை ஒன்றுதான் வழியாக இருந்தது எங்களின் துரதிர்ஷ்டம். இந்த விஷயத்தில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதனை நீங்களும் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். பகையைத் தூண்ட எல்லா வழிகளையும் பேராயர் பயன்படுத்தினார். அவருடைய நடத்தையிலிருந்து பெக்கெட் ’மறைசாட்சி’யராக மரிக்க நினைக்கிறார் என்பது உறுதியாகிறது. இந்த உண்மைகள் உங்கள் முன்னால் இருக்கும் போது மனப்பேதலிப்பில் பெக்கெட் தற்கொலை செய்து கொண்டார் என்று நீங்கள் தயக்கமின்றி தீர்ப்புச் சொல்வீர்கள் என்று நம்புகிறோம். உங்களுடைய வீடுகளுக்கு அமைதியாகக் கலைந்து போங்கள் கலவரம் எதையும் தூண்ட வேண்டாம்.” என்று சொல்லி எச்சரித்து விட்டு வீரர்கள் வெளியேறுகிறார்கள்.
சேர்ந்திசைப் பாடகர்கள்’ “ஆண்டவரே! கிறிஸ்துவே! எங்களது குற்றத்தை, எங்களது பிழையைப் பொறுத்தருளும்! உலகின் பாவம் எங்கள் தலைமேல் இருக்கிறது. மறைசாட்சிகளின் இரத்தமும், புனிதர்களின் துன்பமும் எங்கள் தலைமேல் இருக்கின்றன. நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்! புனித தாமசே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்! என்ற அவர்களின் வேண்டுதலுடன் நாடகம் முடிகிறது.
’பேராலயத்தில் படுகொலை’ நாடகம் கவிதை மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் Free Verse எனப்படும் எளியநடை என்பதால் சாதாரண மக்களும் புரிந்துகொள்ள முடிகிறது. கிறித்துவ இறையியல் குறித்த ஆழ்ந்த சிந்தனைகள் நிரம்பியுள்ளது. நாடகம் விவாதிக்கும் ஆழ்ந்த பொருளை உள்வாங்கி மொழியாக்கம் செய்வது என்பது மிகவும் சிரமமான செயல். பேராசிரியர் ச.வின்சென்ட் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். எலியட்டின் மற்ற நாடகங்களையும் இதுபோல் மொழிபெயர்த்துக் கொடுத்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு பேராசிரியர் வின்சென்ட் நல்கிடுவார் என்று நம்புவோம்.