நூல் அறிமுகம்: அப்பணசாமியின் வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும் – ஆர். பாலகிருஷ்ணன்
வரலாற்றிலிருந்து நாம் தப்பிச்செல்ல முடியாது. கடந்த காலம் தான் நம்மை கடந்து செல்கிறது. எனவே வரலாறு என்ன வாழ்வாதாரமா என்று கேட்டுவிட்டுக் கடந்து செல்லமுடியாது. வரலாறு பற்றிய புரிதல் சரியான எதிர்காலத்தை நோக்கி நிகழ்காலத்தில் வழிநடத்தும்.
இந்திய வரலாற்றியலாளர்களில் மிக முக்கியமான ஓர் ஆளுமை டி.டி. கோசாம்பி.
ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும்; அரசர்கள் நிகழ்த்திய போர்ப் பயணங்களையும்; மேட்டுக் குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும்; அரண்மனைகள், கோவில்கள் குறித்த வருணனைகளையும்; அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையும் வரலாறு என்ற பெயரில் படித்து வந்தோம். ஆனால் அடித்தட்டு மக்கள் வரலாறு இவற்றில் இடம் பெறுவதில்லை. இதில் மடைமாற்றம் செய்து இந்தியாவின் அடித்தட்டு மக்கள் வரலாறு எழுதுவதைத் தொடங்கி வைத்தவர் டி. டி. கோசம்பி என்று அறியப்படும் தாமோதரன் தர்மானந்தர் கோசம்பி ஆவார்.
ஆனால் அவரது எழுத்துகளும் சிந்தனைகளும் இன்றளவும்கூட தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தப்படவில்லை. அத்தகைய சிக்கலான பணியினை மூ. அப்பணசாமி எழுதியுள்ள வரலாறு – பண்பாடு – அறிவியல் : டி. டி. கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும் எனும் இந்த புத்தகம் மேற்கொள்கிறது.
வரலாறு என்பது கல்வெட்டுகள், சாசனங்களில் மட்டுமல்லாமல் தொலைதூரக் கிராமங்களில் காணப்படும் சிதைந்து போன வழிப்பாட்டு உருக்கள், மரக்குகைகள் மலைக்குகைள் ஆகியனவற்றில் மட்டுமல்லாமல் அருகில் வாழும் மக்கள் உணவுமுறை அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள். சொல்லாடல்களில் மறைந்துள்ளதைக் கட்டவிழ்த்துள்ளதன் மூலம் கோசம்பி வெளிக்கொணர்ந்தார். மட்டுமல்லாமல் சமஸ்கிருத வேதங்கள், பிரமாணங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றையும் கட்டுடைத்து இந்திய தொல் குடிமக்கள் மீது நான்காயிரம் ஆண்டுகளாகத் தொடுக்கப்பட்டு வரும் பண்பாட்டுத் தாக்குதல்களை வெளிக்கொணர்ந்தார்.
இதன் மூலமாக இந்தியாவில் வர்க்கச் சுரண்டல் என்பது சாதிப் படிநிலை அமைப்பின் மூலமாக நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் இந்த சாதி அமைப்பு மதத்தால் கட்டுப்படுத்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார்…
இந்தக் கதையினை டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக தமது புத்தகத்தில் கூறுகிறார்
மூ. அப்பணசாமி….
இந்த நூல் வருகிற 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இது ஒரு நல்ல முயற்சி.
வாழ்த்துகள் தோழர் அப்பணசாமி.
– ஆர். பாலகிருஷ்ணன்
முகநூல் பக்கத்திலிருந்து
நூல் : வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
ஆசிரியர் : மூ. அப்பணசாமி
விலை : ரூ.₹400
வெளியீடு : ஆறாம் திணை பதிப்பகம்