இசை வாழ்க்கை 75: பாடலின் பொன் வீதியில் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 75: பாடலின் பொன் வீதியில் – எஸ் வி வேணுகோபாலன்




தபேலா பிரசாத் அவர்களுடைய மகன் ரமணா அவர்களுக்கு என் மட்டற்ற அன்பு உரித்தாகிறது. கேட்ட அலைபேசி எண்ணை விரைந்து பெற்றுத் தந்தார். அதனால் தான், ஷெனாய் சத்யம் அவர்களைக் குறித்த கட்டுரையை மறுநாளே அவருடைய மகன் ஷெனாய் இராமச்சந்திரன் வாசித்துவிட்டார். வாசித்தது மட்டுமல்ல அத்தனை நெகிழ்ந்து போனார். அவரோடு அன்றிரவு நிகழ்ந்த உரையாடலில் அவருக்கு சொல்ல நிறைய செய்திகள் இருந்தன. அறிமுகம் அற்ற ஓர் எளிய மனிதரது அன்பை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி இசையார்வம்தான் முக்கியம், பெரியவர் சிறியவர் அறிந்தவர் அறியாதவர் என்பதெல்லாம் கடந்தது இந்த நேயம் என்றார்.

பம்பாய் திரையுலகில் புகழ்பெற்ற நவுஷத் போன்றவர்கள் இசையிலும் வாசித்தவர் தனது தந்தை சத்யம், 47 வயதிலேயே காலமாகி விட்டார் என்றார். தனது பாட்டனார் நாராயணசாமி (சத்யம் அவர்களுடைய அன்புத் தந்தை) விஜயநகர அரசவை ஆஸ்தான ஷெனாய் வித்வான் ஆக இருந்தவர் என்ற இராமச்சந்திரன், தனது மகன் கிஷோர் குமார் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர் என்றாலும், தனது இசையை, பாரம்பரிய செய்திகளை தொழில்நுட்ப உதவியுடன் ஆவணப்படுத்த அவர் தான் தன்னை உந்தித் தள்ளி உதவிக் கொண்டிருப்பது என்றார். நான்கு தலைமுறைக் கதை இது!

ஆவணி பிறந்தது, திருமண நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள் வந்த வண்ணம்….என் தங்கை ஆண்டாள் மகள் திருமண நிகழ்வில் சாக்ஸஃபோன் இசையோடு வந்திறங்கி இருந்தவர், சுதாகர் தான்! அறிமுகமாகி சரியாக ஓராண்டு கழித்து மீண்டும் பார்க்கையில் அத்தனை பூரிப்பு.

வேறொரு திருமண வரவேற்பில், வயலின் புல்லாங்குழல் தபேலா கீ போர்டு கூட்டணியில் இசை வாழ்க்கை.

வாதாபி கணபதிம்
மருத மலை மாமணியே
பொன் மாலைப் பொழுது
வளையோசை கலகல…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
கண்ணாளனே…

என்று போய்க் கொண்டிருந்த இனிய மாலை நேரமது. ஓ ரசிக்கும் சீமானே பாடலின் சரணங்களில் அத்தனை வளைவுப் பாதையிலும் அசாத்திய நேர்த்தியோடு அந்த இளம் பெண் வயலினில் கொண்டு வந்தார், முழு பாடலையும்! ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ புல்லாங்குழலில் இளைஞர், வயலினில் இந்த இளம் பெண், ராஜாவின் அபாரமான பாடலை உருகியுருகி வாசித்தனர் இருவரும். எழுந்துவர விருப்பமின்றி நாங்கள் விடைபெறும் போது அந்தக் கலைஞர்கள் கண்களால் நன்றி தெரிவித்து வாசிப்பு தொடர்ந்தது மறக்க முடியாதது.

பட்டுக்கோட்டை தனபால், ரசனை மிக்க எளிய தோழர். அவருடைய மகன் விவேகானந்தன் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு முதல் நாள் டிக்கெட் போட்டு, இணையர் ராஜியோடு அங்கே சென்றபிறகு திரும்பி வர வழிகளைத் தேடி மீண்டும் ரயில் பயணமே வாய்த்த அனுபவங்கள் சுவாரசியமானவை.

ஒரு நாள் முன்னதாகத் தஞ்சை போய் இறங்கி இருந்தோம். பெரிய கோயில், அரண்மனை, சிற்பங்கள் எல்லாம் நேரமெடுத்து மிகவும் நெருக்கமாகப் பார்த்துப் பரவசத்தோடு அறைக்குத் திரும்பி இருந்தோம். மறுநாள் என்ன நிகழ்ச்சி, எப்போது வர வேண்டும் என்று தெரிந்து கொள்ள முயலும்போது, “நாளை காலை 11 மணிக்கு வந்துருங்க தோழர், பார்த்திபன் நாதஸ்வரம்…முக்கியமா நீங்க அமர்ந்து ரசிக்கணும்” என்று அலைபேசியில் சொன்னார் தனபால். எந்தெந்தப் பாடல்கள் என்று மகள் பாரதியும், புதுகை பூபாளம் பிரகதீஸ்வரனும் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூடுதல் ஈர்ப்பு விசையும் அழுத்தினார்.

எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் தன்னுடைய இணையரோடு தஞ்சைக்கு வந்தவர், மறுநாள் காலையில் எங்களையும் உடன் அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை நோக்கிப் பயணம் செய்ய, ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா….’ என்று விளித்து வரவேற்றார் பார்த்திபன். அடுத்த ஒன்றரை மணி நேரம் அந்தக் குழுவின் வாசிப்பில் எங்களை ஒப்புக்கொடுத்து உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தோம்.

புல்லாங்குழலில் பைரவன் அசத்திக் கொண்டிருந்தார். கீ போர்டில் சசி அபாரம். தவில் கலைஞர் பெயரென்ன என்று கேட்டபோது, ‘வில்லுக்கு விஜயன் மாதிரி தவிலுக்கு விஜயன் இவர்’ என்று அவரை அறிமுகம் செய்வித்தார் பார்த்திபன். தபேலாவில் சுதந்திர குமார்!

மனத்திற்கு மிகவும் நெருக்கமான மெல்லிசையாக அடுத்தடுத்து நாதஸ்வரத்தில் வார்த்துக் கொண்டே வந்தார் பார்த்திபன். பயண நாளில் அலைபேசியில் சேமித்துக் கொள்ள வாய்ப்பில்லையே என்று மனமின்றி மறுத்துக்கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தவன், தன்னையும் மீறி ஒரே ஒரு பாடலின் ஒரு சரணத்தை மட்டும் அலைபேசியில் சிறைப்பிடித்தேன்.

திரை இசையில் புகழ் பெற்ற பின்னணி பாடகர் தாமே இசையமைத்துப் பாடித் தானே நடித்திருந்த மிகவும் கொண்டாடப்படும் பாடல் அது! வாட்ஸ் அப்பில் அதை அன்றே பகிர்ந்து கொள்ளவும், பெரிய கொண்டாட்டமான மறுமொழி வந்து கொண்டே இருக்கிறது.

‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலைப் பற்றிப் பேசுகையில், தமக்கு ஆதர்சமாக இருக்கும் இந்துஸ்தானி இசையொன்றில் லயித்தே அந்தப் பாடலுக்கான மெட்டு அமைத்ததாகத் தன்னடக்கத்தோடும் நேர்மையாகவும் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார் பாலு. சிதார், புல்லாங்குழல், தபேலா (டிரம்பெட் கூட என்று நினைக்கிறேன்) என்று காதலுக்கான ஒரு ஜுகல்பந்தி இந்தப் பாடல்.

ஒரு நாயகன் இப்படி முன்மொழியும் காதலைக் கேட்டு உருகாத பெண் இருக்க முடியுமா என்பது மாதிரியான உருக்க மொழியில் பிசைந்து ஊட்டுவார் எஸ் பி பி. ஆணவப் படுகொலைக்குத் துடிக்கும் பெற்றோர் முன்பாக இந்தப் பாடலை ஒலிக்கவிட்டால், சாதீய இறுக்கத்தைக் கூடக் கரைத்துவிடும் சாத்தியங்கள் இருக்கும்படியான கீதம் இது.

பாடலின் தொடக்கத்தில் சிதார் பேசுகிறது. சொல்லப்போனால், ‘ஏன் சொல்லாமல் இருக்கிறாய் உன் காதலை’ என்று நாயகனைச் சீண்டிச் சிணுங்கும் குரல் தான் அது. அங்கே புல்லாங்குழல் பற்றிக் கொள்கிறது. அதற்கான மேடையைத் தாளக்கட்டு இதயத் துடிப்பாக ஏந்தி வருகிறது. காதலின் பரிதவிப்புக்கு மேலும் இசைக்கருவிகளும் துடிக்க, பாலு தொடங்குகிறார், ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே…’ என்று பல்லவியை. முதல் சொல்லான வண்ணத்தில் அந்த வ எனும் எழுத்திலேயே இதய தாபத்தைச் சொல்லிவிட முடிகிறது அவருக்கு! ‘வானம் விட்டு வாராயோ’ என்ற அடித்த அடியில், வா ராயோ என்ற விளியில் எத்தனை காதல் ஏக்கம் சொட்டுகிறது அவரது குரலில்! ‘விண்ணிலே பாதை இல்லை’ என்பதில் உனக்குத் தெரியாதா என்ன என்ற எடுப்பு. ‘உன்னைத் தொட ஏணி இல்லை’ என்பதில் எட்ட முடியாத இடத்தையும் எட்டிவிடுகிறது அவரது காதல் குரல்.

சரணத்திற்குப் போகுமுன் பல்லவியைத் திரும்ப இசைக்கையில் இரண்டு அடிகளைப் பாடி மீண்டும் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ என்று முதலடியில் வந்து நிறுத்துகையில், கேட்கும் இதயங்களை எத்தனை நெருக்கமாக்கிக் கொண்டு விடுகிறார், பாலு!

மென்மையான பல்லவியில் இருந்து சரணத்தை நோக்கிய நடையில், ஒரு துள்ளாட்ட தாள கதிக்கு மனத்தைக் கொண்டுபோய்ப் பின்னர் தெள்ளிய நீரோடையில் கலக்கவிட்டு, ‘பக்கத்தில் நீயும் இல்லை’ என்று சரணத்தை எடுக்கிறார் பாலு. ‘பார்வையில் ஈரமில்லை’ என்கிற வறண்ட தருணத்தைக் கண்ணீரில் நனைக்கிறார். ‘சொந்தத்தில் பாஷை இல்லை’ என்பதில் அந்த பாஷையை என்னமாக இதயத்தில் இருந்து பேசுகிறார். ‘சுவாசிக்க ஆசை இல்லை’ என்கிற இடம்….அந்த ஆசையில் குவிக்கிறார் மொத்த ஆசையையும்…. ‘தள்ளித் தள்ளி நீ இருந்தால்’ என்பதைத் துள்ளித் துள்ளி இசைக்கும் பாலு, ‘சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை’ என்று சரணம் முழுக்க காதல் சங்கதிகளை இசையின் சங்கதிகளாக அடுக்குகிறார்.

சரணத்தில் வரிகளை இரண்டாம் முறை இசைக்கையில் பின்னணியில் மென்மையாக ஒலிப்பது சாக்ஸஃபோன் ஆக இருக்கக் கூடும். இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் சாக்ஸஃபோன் இசையில் காதலை மேலும் ததும்ப வைக்கிறார் இசையமைப்பாளர் எஸ் பி பி.

இரண்டாம் சரணம் காதலை இன்னும் நெருக்கமாக இழையவிடுகிறது. ‘நங்கை உந்தன் கூந்தலுக்கு’ என்பதில் அந்தக் கூந்தலுக்கு மட்டுமே போடும் சங்கதிகளில், நாயகன் உரிமையோடு நாயகியின் கூந்தல் வாசத்தில் பெருமூச்செடுக்கும் தருணத்தை வழங்குகிறது பாலுவின் குரல். ‘நட்சத்திர பூ பறித்தேன்’ என்பது அவளுக்காக எடுத்த பாடு. ‘நங்கை வந்து சேரவில்லை’ என்பது ஆதங்கம். ‘நட்சத்திரம் வாடுதடி’ என்பது நட்சத்திரத்திற்கான கவலையா என்ன…நாயகனது தாபம்….அதனால் தான், இந்த நான்கு வரிகளையும் இரண்டாம் முறை பாடுகையில் அந்த ‘வாடுதடி’ அப்படி வாட்டி எடுக்கும்படி இசைக்கிறார் பாலு.

‘கன்னி உன்னைப் பார்த்திருப்பேன், கால் கடுக்கக் காத்திருப்பேன்; என்பன பொதுவான ஏக்கம் தான் என்றாலும், ‘கால் கடுக்க’ என்ற இடத்தில் பாலு கொடுக்கும் அழுத்தம் காதல் தோல்வியில் வாடுபவரை மட்டுமல்ல, காதல் இணையராக வாழ்வோரையும் உருக்கிப் போடும்.

பாடலின் தாளக்கட்டு எப்போது சமன நிலையில் ஒலிக்கிறது, எப்போது வேகமெடுக்கிறது, எப்போது பட்டென்று நிறுத்திச் சிறு இடைவெளியில் மீண்டும் எடுக்கிறது என்பதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் இன்பத்தை மேலும் கூட்டுகிறது.

வாட்ஸ் அப்பில் பார்த்திபன் நாதஸ்வர வாசிப்பு பகிர்வுக்கு வந்த பதில்களில் ஒன்று மிக முக்கியமானது, உறவினர் மாதவ வெங்கடேஷ் அனுப்பி இருந்தது. பார்த்திபன், தொலைகாட்சி நேயர்களுக்கு மிகவும் பரிச்சயமான இசைக்கலைஞர் என்பதை அது வரை அறியாதிருந்திருக்கிறேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாகப் பாடவும் செய்தவர் என்கிற வரியை மாதவன் குறிப்பிட்டிருந்தார். பார்த்திபன் யார் முன்பு பாடினார் என்பதைப் பின்னர் தேடிக் கண்டடைந்த போது அவரது திறமையின் மீதும், அதையெல்லாம் காட்டிக் கொள்ளாத மிகுந்த தன்னடக்கத்தின் மீதும் பெரிதும் காதலுற்றேன்.

‘இதோ இதோ என் பல்லவி’ என்ற அருமையான பாடலை பார்த்திபன் நாதஸ்வர இசையில் குழைத்துக் குழைத்து இசைக்க எதிரே நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டிருக்கும் எஸ் பி பாலசுப்பிரமணியன் நெகிழ்ந்து நெகிழ்ந்து ரசித்துக் கேட்கிறார்.

https://youtu.be/ALsvtWfakYI

அதோடு நிற்கவில்லை….. ஒரு சரணத்தைத் தனது குரலில் பாடியும் காட்டி இருக்கிறார் பார்த்திபன், அப்போது எஸ் பி பி முகத்தில் வெளிப்படும் பூரிப்பும் அடுத்தவர் திறமையைப் பாராட்டிக் கொண்டாடும் உள்ளன்பும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. பாலு தனது இசையில் கொணரும் நுட்பமான அம்சங்களை அப்படியே உள்வாங்கி அதை அவருக்கான மரியாதையாக அவருக்கே வழங்கி இருந்த பார்த்திபன், எஸ் பி பி மறைந்த போது கரைந்து போய் தனது இழப்பை வாய்மொழியாகவும் நாதஸ்வர இசையாகவும் வெளிப்படுத்திய பதிவும் யூ டியூபில் இருக்கிறது.

எஸ் பி பி அவர்களது இரண்டாவது நினைவு நாள் சூழும் இவ்வேளையில் பார்த்திபன் அவர்களது இசையை நேரே கேட்டு ரசிக்க முடிந்தது முற்றிலும் நூதன அனுபவம்.

அன்றைய திருமண வரவேற்பில் புல்லாங்குழல் இசைக்கலைஞர் பைரவன் கிளாரினெட் எடுத்து வாசித்தது, எழுபதுகளில் வானொலியில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்த மிக இனிமையான காதல் பாடல்களில் ஒன்று. டி எம் சவுந்திரராஜன், எஸ் ஜானகி குரல்களில், எம் எஸ் வி இசையில் உருவான பஞ்சு அருணாசலத்தின் பாடல் அது.

பாடலின் மிகச் சிறப்பான இடங்கள் ஒன்றுவிடாமல் தனது வாசிப்பில் அம்சமாகக் கொண்டுவந்தார் பைரவன். அதை ஏன் அலைபேசியில் சிறைப்பிடிக்கவில்லை என்று அன்பர்கள் வாட்ஸ் அப்பில் கேட்டிருந்தனர். மணமக்களை வாழ்த்த மேடைக்குச் சென்றிருந்த நேரமது.

வயலின்களின் சிறகடிப்பில் தொடங்குகிறார் மெல்லிசை மன்னர். துள்ளல் தாளக்கட்டில் ஜானகி உள்ளத்தைத் தொடும் ஹம்மிங் எடுக்கிறார். அதில் டி எம் எஸ் மென்மையாக வந்து கலக்கிறார். ‘காதலின் பொன் வீதியில்’ என்று எத்தனை காதல் சொட்டும் குரலில் பல்லவியை இசைக்கிறார் எஸ் ஜானகி. ‘காதலன் பண் பாடினான்’ என்பதில் ‘பாடினான்’ என்பதிலேயே இழைக்கிறார் இன்னும் நெருக்கமான காதலை.

‘பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன்’ என்று விரியும் பல்லவியை, அதே தாள லயத்தில் வேறு மெட்டில் எடுக்கிறார் டி எம் எஸ். பொன் வீதியில் என்பதை இரண்டாம் முறை பாடுகையில் அந்த வீதி மேலும் ஒளிர்கிறது. ‘நான் ஒரு பண் பாடினேன்; என்ற இடத்திலும், ‘பண்ணோடு ஒருத்தி வந்தாள்.. என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்’ என்பதில் அந்த ‘வந்தாளிலும்’ அவரது குரல் இன்னும் நெருக்கமான உணர்வுகளைப் பரவ விடுகிறது. பிறகு பல்லவியை ஜானகி பாடிய மெட்டிலேயே இசைக்கிறார் டி எம் எஸ்.

பல்லவியின் அழகை அந்தத் தாளக்கட்டு மேலும் மெருகேற்றிக் கொடுக்கிறது. பல்லவியிலும் சரணங்களிலும் மிருதங்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று தோன்றுகிறது.

முதல் சரணத்தில் விரிவான சங்கதிகளுக்கு இடம் கொடுக்க பாடல் வரிகளை இரண்டிரண்டு முறை பாடகர்கள் இருவரும் பாடுவதற்கான நேரத்தை வழங்க, சரணங்களை நோக்கிய நகர்வை விரைந்து அமைத்துக் கொள்கிறார் மெல்லிசை மன்னர். முதல் சரணத்திற்கு வயலின்களின் வேகத் துடிப்பு. இரண்டாம் சரணத்திற்குப் புல்லாங்குழலின் உயிர்த்துடிப்பும் வயலின் இணைப்பும்.

‘திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக’ என்கிற முதல் சரணத்தில் குயிலாகவே ஒயிலாக ஒலிக்கிறது ஜானகியின் குரல். ‘இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக’ என்கிற வரிகளில் பொங்கும் காதலின்பம் இப்போதும் கேட்க வைத்துக் கொண்டிருக்கிறது பாடலை.

‘இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்’ என்று வந்து இணையும் டி எம் எஸ், அடுத்த வரிகளைக் கிறக்கம் ஊட்டும் வண்ணம் இசைக்கிறார். ‘தேன் கொள்ள வந்தேன் மனம் போல’ என்ற அடியில் கொள்ள முடியாத அளவு காதலைக் கொள்ளை கொள்ளையாக வழங்கும் குரல் அது. ‘என் மனதிலே உன் நினைவுகளே…அதை அள்ளி வந்தேன் உனக்காக’ என்பதில் காதலை எத்தனை ‘அள்ளி’ வழங்கும் குரல் அது!

சரணத்திலிருந்து பல்லவிக்குப் போகும் டி எம் எஸ், ‘பண் பாடினேன்’ என்பதில் எழுப்பும் சங்கதிகள் இன்னும் அபாரமானவை. இரண்டாம் சரணம், ‘விழி ஓரங்களில் சில நேரங்களில்’ என்று டி எம் எஸ் தொடங்க, எஸ் ஜானகி வளர்த்தெடுத்து, டி எம் எஸ் மேலும் தொடுக்க ஜானகி முடிக்க இசையின்பமாக விளைகிறது.

கவியாகும், கவிதைகளில், கலையாகும், அந்தக் கலைகளிலும், பேரின்பம், இன்ப வாசலிலே….என்று சரணத்தின் ஒவ்வோர் அடியின் கடைசி சொற்களை அந்தாதி பாணியில் பஞ்சு அருணாசலம் தொடுத்திருப்பதில் பாடலின் ஒலிக்குறிப்பும், இசைக்குறிப்பும் மேலும் இனிமையாகி விடுகிறது. பாடல் முழுக்க தாளத்தின் சுவை அலாதியானது. மென்மையான ஹம்மிங் உடன் பாடல் நிறைவடையும்போது காற்றில் கலந்துவிடுகிறது காதல்.

‘ஊர் வந்து சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரக் காணேன்’ என்று போகும் சீட்டுக்கவியைப் பள்ளிக்கூட நாட்களில் வித்துவான் சம்பந்த முதலியார் நடத்தியது பட்டுக்கோட்டையிலிருந்து திரும்பியதும் கூட எதிரொலிக்கிறது. பார்த்திபன் நாதஸ்வரத்தில் லயித்திருந்த உள்ளத்தோடு தேடித் தேடிக் கேட்டபடி போய்க்கொண்டிருந்தது பொழுது.

கடந்த வாரத்தில் எதிர்பாராமல் மூத்த பெண்மணி ஒருவரை அவரது இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்திப்பு அது. கணவரை அண்மையில் பறிகொடுத்திருத்த அவரது ஓய்வூதியம் தொடர்பாக அங்கே செல்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவரைத் தொல்லைப் படுத்தாமல் விடைபெறவே விரும்பியும், தற்செயலாக ஒரு தருணத்தில் இழக்க மாட்டாத உரையாடல் வாய்த்தது.

“நீங்கள் சிறந்த பாடகி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், மேடையில் பாடி இருக்கிறீர்களா?” என்று கேட்கவும், நூறு கச்சேரிகளாவது செய்திருப்பேன் என்றார் அவர். யாரிடம் கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் மிகப் பெரிய திறப்பு, தனது இளமைக் காலத்திற்குள் அவர் பயணம் செய்து திரும்பும் கால எந்திரத்தின் விசையை அழுத்திக் கொடுத்தது அந்தக் கேள்வி.

சேலத்தில் இருக்கையில், தஞ்சையைச் சார்ந்த நாயனக்காரர் தனுஷ்கோடி, தற்செயலாக வீட்டுக்கு வந்தவர் ஒரு சிறுமியின் குரலினிமை கேட்டு வியந்து அடுத்த மூன்றாண்டுகள் ஒற்றை நயா பைசா வாங்கிக் கொள்ளாமல் வாய்ப்பாட்டு கற்பித்துச் சென்றிருக்கிறார்.

இலேசாகத் துளிர்த்த கண்ணீர்த் துளியில் புன்னகையும், பெருமையும் ஒளி வீசியது. இளைய மகனை மடியில் வைத்து சங்கீதம் கற்பித்த இசை வாழ்க்கை, மூன்று பெரிய அறுவை சிகிச்சைகளால் நாபிக் கமலத்தில் இருந்து குரலெடுத்து சிரமப்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற மருத்துவ ஆலோசனையின் நிமித்தம் தடைபட்டுப் போனது என்றார்.

இப்போது பாட முடியுமா என்றவுடன் 86 வயதிலும் உடல் உபாதைகளை மீறி இரண்டொரு வரிகளை இசைக்கவும் செய்தார் திருமதி வனஜா. அஞ்சல் ஊழியர்களது போராட்ட நாயகர், எழுத்தாளர் வி என் ராகவன் அவர்களது காரியம் யாவினும் கைகொடுத்த வாழ்க்கை இணையர் அவர்! நம்பிக்கையும், தனக்கு உதவியாக இருப்போர் பற்றிய உள்ளன்பும் பெருகிய குரல் அது.

நேயத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் இசை உன்னதமானது. உள்ளத்தைத் தொடும் இசை அதனால் தான் கண்ணீர் பெருக வைக்கிறது. இசையால் பெருகும் கண்ணீர் உள்ளத்தைப் பளிங்கு போல் துடைத்துக் கொடுக்கிறது. இருளகற்றி வெளிச்சம் பரவ வைக்கிறது !

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]