Ki. Rajanarayanan Memorial Short Story Competition (கி.ரா நினைவு சிறுகதைப் போட்டி) Special Prize Won Story "Manithathuli" by Tamil Muthumani (*மனிதத்துளி* – தமிழ் முத்துமணி)

தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை *மனிதத்துளி* – தமிழ் முத்துமணி



பதினோரு மணி இருக்கும். நல்ல வெயில் கொளுத்தியது. ” எக்கா, எப்டி இருக்கிதிய? சோமா இருக்கியளா என்ன?. சோமா இருக்கியளான்னு யாரயும் கேக்க முடியமாட்டிக்கு .செத்த வூட்டுக்குள்ளார வரட்டாக்கா?. நாந்தேன்க்கா சரசோதி. யாராச்சும் வூட்டுக்குள்ள உடுதாவளா, அதெப்படி வுடுவாவ.? ஆரும் வுடமாட்டாவ. பெறவு நீங்க எப்டி உடுவிய? எங்கிட்டும் போமுடியாம.. வெளில போவதுக்கும், பயந்து எல்லா சனமும் வூட்டுக்குள்ள அடஞ்சிக் கிடக்கு. அந்தமானிக்கு ஆறு மாசமா..ரெண்டு வருஷமில்லா ஆவுது “.

கசங்கிய பச்சக் கலர் பழைய சேலையை உடம்பில் சுற்றிக் கொண்டிருந்தாள்.. வறுமையில் மெலிந்த தேகம் சப்பிய கன்னங்கள். ஆளைப் பார்க்கும் முன்னே, ரெண்டு தெருவுக்கும் முந்தியே, இப்படிப் புலம்பிக் கொண்டே வந்தவள் ரிக்சாக்காரன் மாரிசாமியின் மனைவி சரஸ்வதி.

வில்லிசைத் திலகம், கலைமாமணி, இன்னும் என்ன கழுதைகளோ எல்லா விருதுகளையயும் பெற்ற ராஜலட்சுமியின் வீட்டு வாசலில் வந்து நின்றாள் சரஸ்வதி. வாசல் சுவரில் வில்லிசைத் திலகம் ராஜலட்சுமி என்று எப்போதோ வைக்கப்பட்ட போர்டு பெயிண்ட் உரிந்து அழுது கொண்டிருந்தது. வாசலில் வறண்டு போய் நிற்கும் சிறிய கொய்யா மரத்தில் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு கொறித்துக் கொண்டாள். காம்பௌண்ட் சுவருக்கு உள்ளே இருந்த வீட்டு வாசலைத் திறந்து கொண்டு வெளியில் வந்த ராஜலட்சுமி அங்கேயே நின்றுகொண்டு “யாரு சரஸ்வதியா?வா வா. நீ புலம்பிக்கொண்டே வந்ததை ஜன்னல் வழியாப் பார்த்தேன். என்ன சரசு என்ன விசேஷம்? எல்லாரும் நல்லா இருக்காங்களா? என்று கேட்டாள்?”கலைமாமணி ராஜலட்சுமி.

“ஆமாக்கா. நாந்தாக்கா. ஆக்கங்கெட்ட சரசு,” மூக்கைப் பலமாகச் சிந்தி, கையைச் சுவரில் பாதியும் சேலையில் மீதியுமாகத் துடைத்தபடி “இம்மாங்காலமும், இப்பிடி ஒரு மோசமான சீக்க, இந்த ஊரு பாத்துருக்குமாக்கா? இல்ல, இந்த உலகம்தான் பாத்துருக்குமாக்கா?என்ன சொல்லுதிய? என்ன எழவோ? முன்னையெல்லாம் சீக்குன்னா வாயால வவுத்தால போவும். என்னத்தையாவது கரச்சிக் கிரைச்சிக் குடிச்சாச் சரியாப் போவும். கேக்கலன்னா, நம்ம ஊரு ஒண்ட்ற கண்ணு டாக்டரு ஒத்த ஊசியப் போட்டாருன்னா, அந்தமானிக்கு அஞ்சி நாளக்கி அடச்சிக்கிடுமே. அம்பது ரூவா ஆவும். மண்டையடி காச்சலு.

அம்புடுத்தான்.என்ன, வெயிலு காலத்துல கொஞ்சம் அம்ம வெளையாடும்.ஆத்தாவ வேண்டிகிட்டு கொஞ்ச நாளைக்கு செத்த, சுத்த பத்தமா கிடந்தா, தானா இறங்கிரும்.ஆனா இது ரெம்ப புதுசாவில்லருக்கு! சனம் எல்லாம் செத்துல்ல போவுதாம் பாவம். இது என்ன கொடுமக்கா? செத்த வூட்டுக்குள்ளார வரட்டாக்கா…”இழுத்த சரஸ்வதி எச்சியைத் துப்பினாள்.

“வேண்டாம் வேண்டாம். அங்கேயே நின்னுகிட்டுப் பேசு சரஸ்வதி. எதுக்கு வம்பு?. நாம் எல்லாருமே கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும். இந்த நோய் யாருக்கு இருக்கு? யாருக்கு இல்லன்னு யாருக்கும் தெரியாது. ரொம்ப மோசமானது. ஆமா..உன் வீட்டுக்காரர், பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்காங்கல்ல?”. என்று கேட்டாள் தன் இனிமையான குரலில் வில்லிசைத்திலகம்,கலைமாமணி ராஜலட்சுமி.

“ம்..ஆமாக்கா..ஆறு மாசம் ஆவுதுக்கா. சனங்க வேல சோலிக்குப் போவல. குடிக்க பாதி வீட்டில கஞ்சி தண்ணில்ல .அம்புட்டுப் பேரும் ஒழக்கு மாதி,.. ஒண்ணா மண்ணா, கெழக்கு மேக்கு பாக்க முடியாம குச்சி வூட்டுக்குள்ளதான்… அந்தாக்கில, சனியன் இப்பிடி மொத்தமா முடக்கிருச்சே, எழவுக்குப் பொறந்த இந்த கொனனா, அது என்னமோ?.யாம் வாய்க்குள்ள முளையலக்கா. இந்த மாசுக்கு எழவ வேற மூஞ்சிலக் கட்டி அழுதுகிட்டு? மூச்சிப் போமாட்டக்குதுக்கா. என்னைக்கு இந்த எளவுக்கு முடிவு கட்டுவாவளோ?”தலையில் லேசாக அடித்துக் கொண்டாள்.

“வூட்டுக்கு யாராச்சும் வந்தாவன்னா வாய் நிறஞ்சி வான்னு , கூப்புட்டு வூட்டுக்குள்ளார உட்காத்திவச்சி, ஒருவா காப்பித் தண்ணி கொடுப்பாவளே, நம்ம ஊரு சாதி சனம். அம்புட்டையும் நம்ம ஊரு மருவாதியக் கூடக் கண்ணுல காணாம ஆக்கிப்புடுச்ச இந்த பேதில போற கிரானா. அது என்ன எழவோ யாம் வாயில் முழையல?. “யாருமே வாதுறந்து கூட பேசக்கூட மாட்டுக்காவன்னா பாத்துக்கங்களேன். எங்கினயாவது பாத்துப்புட்டாலும் பாக்காத மாதியே போறாவக்கா தெரிஞ்ச மனுஷியளும்”

“யாருனாச்சும் தும்முன்னா இருமுனா, நாம அங்கின நிக்கப்பிடாதாம்க்கா. கொலனா.. அது என்ன எழவோ? என் வாயில முளையல. அப்பிடியே வந்து சப்புன்னு நம்ம மேல ஒட்டிக்கிடுமாம்க்கா. ஊரு சனமெல்லாம் பயந்து சாவுதுக்கா”. வவுத்துப் பாட்டுக்கே வழியக் காணும்.இந்த கருமத்தில, ஒண்ணு கிடக்க ஒண்ணு வந்து தொலைச்சா ஆசுபத்திரிக்கும் டாக்குடருக்கும் அழ யாருகிட்ட இருக்கு ,துட்டு?. என்று சொன்னபடி கண்களைத் துடைத்தாள் சரஸ்வதி.

அந்த நேரம்”பணியாரம், வடை பணியாரம், வடை என்று சத்தம் போட்டு வித்துக்கிட்டே வந்தான் முனியாண்டி. இந்த மனுசனுக்கு மட்டும்… .. எதையோ சொல்ல வந்த சரஸ்வதியை”சும்மா இரு என்று அடக்கிவிட்டு “தம்பி எனக்கு ரெண்டு பணியாரம் கொடு. சரஸ்வதிக்கு நாலு பார்சல் கட்டிக் கொடு”. சரஸ்வதி பிள்ளைகளுக்குக் கொண்டு கொடு” என்று ராஜலட்சுமி சொன்னாள். பார்சலைக் கட்டிக்கொண்டே ,”நம்ம ஊரு ஒண்டறக் கண்ணு டாக்டர் செத்துப் போயிட்டார். உங்களுக்கு தெரியுமா?”. என்று கேட்டான்.

“அடியாத்தி அவருமா போயிட்டாரு? டாக்டருமா செத்துட்டாரு?எங்கயோ ஊருக்குப் போய்ட்டாருன்னுலா நெனச்சேன்.ஆசுபத்திரி நாலு நாளா தொறக்கல. இனும யாரு ஊசி போடுவா?”கண் கலங்கினாள் சரஸ்வதி.”சரசு,சும்மா வந்துட்டுப் போற காய்ச்சல் இல்லடி இது. இந்த நோய் வந்தா ஆளை சோலிய முடிஞ்சிடும். மோசமான வைரஸ். பேரு கொரோனா. நம்ம டாக்டரை மட்டுமல்ல.பெரிய பெரிய ஆள்களை எல்லாம் இந்த நோய் பெரிய பாதிப்புக்கு ஆளாக்கிருக்கு. நிறைய பேர் செத்தும் போயிருக்காங்க. “ஆமாக்கா சினிமாவுல வந்த விவேக்குமுல்ல பூட்டான். அன்னைக்கு பூரா பக்கத்து வூட்டுல டிவி பார்த்து அழுதுபுட்டேன்க்கா.நல்ல மனுசன்”.

“நம்ம நாட்டை விடு சரசு. அமெரிக்கா மாதிரி, பெரிய பெரிய நாட்டுலகூட, இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியல்ல.நாளுக்கு நாள் நோயாளி எண்ணிக்கை கூடிகிட்டே போகுது. குறஞ்சபாடில்ல.இன்னும் இதுக்கு மருந்தும் கண்டுபிடிக்கல. இவ்வளவு காலம் கழிச்சி இப்பதான் தடுப்பூசி வந்திருக்கு. நாட்டு மக்களுக்கெல்லாம் அதைப் போடுறதுக்கே ஆயிரம் பிரச்சனை… நான் ஒரு ஊசி போட்டுட்டேன். அடுத்த ஊசி போடப் போனா இன்னும் ஸ்டாக் வரலன்னு சொல்றாங்க..”

“அப்பிடியாக்கா, எம் மண்டையில எங்க ஏறுது. உங்கள மாதி நாலு கிளாஸ் படிச்சிருக்கணும், இல்லன்னா நாலு எடத்துக்கு போவ, வர இருக்கணும்.நீங்க கச்சேரிக்குப் போவாத ஊரா? நாடா?. நான் கெட்ட கேட்டுக்குச் செத்த நேரம் டி.வீ பாக்ககூட வக்கில்ல.டிவி ஒயர உருவிட்டுப் பூட்டான் கொள்ளி முடிவான் கேபிளுக்காரன்.பின்ன என்ன,ஓசிக்கா படம் காட்டுவான்.ம்..ம் எல்லாருக்கும் எட்டு எழுத்து எனக்குப் பத்து எழுத்து”. மீண்டும் மூக்கைச் சிந்தினாள்.

“ம்ம்ம், எங்க ஊருல , சேராம்பட்டில ஒருத்தன் ஒரவுக்கார மனுஷன்க்கா, படுபாவிப்பய, நாப்பது வயசுல, ரெண்டு பொஞ்சாதியளயும் நாலு புள்ளைகளையும் வுட்டுட்டுச் செத்துட்டான். துட்டிக்குப் போ முடியல. செத்தவரு,எம் முற மாமன். முவத்தக்கூட கட்டக் கடீசியா பாக்கலன்னா, சவத்து பக்கத்துல உக்காந்து ஒரு பாட்டம் அழுவாட்டி அது என்ன எழவு வூடு?..ஒரு மாரியா இருக்குக்கா.துட்டிக்கும் செத்தியமமாத்தாம் ஆளுவள வுடுவாவளாம். எல்லாத்தையும் வுட மாட்டாவளாம்”

“ஆமாமா, அதுக்குக்கூட ஈ பாஸ் இன்னு ஒண்ணு வாங்கணும். அதெல்லாம் கஷ்டம்.லேசுக்குள்ள கிடைக்காது சரஸ்வதி. இங்கருந்து வெளிநாட்டுக்குப் போனவங்க சிலபேரு, அங்கேயே செத்துட்டாங்க. உடம்பகூட இங்க கொண்டு வர முடியாம அங்கேயே அடக்கம் பண்ணிட்டாங்க. பெரிய கொடுமை தெரிஞ்சுக்கோ. இதெல்லாம் பெரிய கொடுமை.”

“ம்…எல்லாம் மகமாயி ஆத்தாவோட வயிதெரிச்சலுக்கா.ஞாபம் இருக்கா?நம்ம ஊரு நடுக்காட்டுத் தாயிக்குப் பொங்க வச்சது, நான் வாக்கப்பட்டு வந்த வருஷம். அதுக்ககுப் பெறவு பொங்க உண்டா கொட உண்டா?அவ சாவத்த அள்ளி கொடுத்துப்புட்டாளோ என்னமோ? மனுசன் செய்யித தப்பு தண்டாவால உலவமே அழியப் போவுதோ?”. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது சரஸ்வதிக்கு.

“ரேஷன் கடைல ரெண்டு வாட்டி ரூவா தந்தாவ. அத குடிச்சித் தீத்துப்புட்டான் இந்தக் கடங்கார மனுசன். என் புருஷன்தேன். அரிசி, பருப்புன்னு ஓசியா, ரேஷன் கடையில கொடுத்தாவ. அந்தாக்குல கவருமெண்டும் என்னத்த இதுக்குமேல செய்ய எங்க்கிட்டுப் போவும்?.கோடி சனமில்லாக்கா கொஞ்சமா?.

அது, ..அதான் எம் புருஷன்க்கா முந்தி ரிச்சா ஓட்டிச்சி. நல்ல சாப்பாடு ஏதுக்கா?. தண்ணி வேற..இருமி இருமி நோயி இப்ப கொஞ்ச காலமா கூப்பிட்ட கூலி வேலைக்கி அதும், நெனச்சாதான் போவும். இப்போ வேலையுமில்ல கழுதையும் இல்ல. இருமிக்கிட்டு வூட்ட்டலகிடந்து..பீடியக் குடிச்சிக்கிட்டு உசிர வாங்குவது..எப்பதான் இந்தச் சீக்குக்கு ஒரு அழிவு காலம் பொறக்குமோ?வடக்காம இருக்காளே ஆத்தா அவதான் நம்மள காப்பாத்தனும்.”கையை எடுத்து கோவில் இருந்த திசை நோக்கி கும்பிட்டாள் சரசுவதி.

“இந்த நோய் இப்ப குறையாதாம்.இனிமேல்தான் இன்னும் அதிகமாகும் சரசு.ரெண்டாவது அலை.. இன்னும் மூன்றாவது அறை வரப்போகுது சின்னப் பிள்ளைகள தாக்கிவிடுமாண்டி.உலகமே பழைய வாழக்கைக்குப் போக இன்னும் ரொம்ப நாளாகும் அதுவரைக்கும் நாம பிழச்சிக் கிடக்கணுமே”என்றாள் ராஜலட்சுமி

“என்னக்கா சொல்லுதிய? பச்சை புள்ளையளயா?நம்ம ஊருக்குள்ள நிறைய சனம் சுகமில்லாம கிடக்காங்களாம். அவுகள்ளாம் புழைப்பாகளா? மாட்டாவளா? தவப்பன் இல்லாத புள்ளைகளா தாயில்லாத புள்ளைகளா நிக்காவளே மக்கா

அம்மன் கோயிலு தெரு, பொட்டிக்கடை பரமசிவம், அவர் பொஞ்சாதி, ரெண்டு பிள்ளிய,குடும்பத்தோ டவுனு ஆஸ்பத்திரில கிடக்காவ. அந்த பஞ்சாயத்துப் போடு ஆபீசு, தெருவ கம்ப கிம்ப வச்சி அடைச்சு வச்சி போலீசு காவலுக்கு நிக்கி.சமாச்சாரம் என்னான்னு தெரியமாட்டக்கு . தென்காசி ஆசுபத்திரிகளில் எடமே இல்லியாம். மேப் சங்கு ஊதுற வண்டி வந்து பால்கார மாடசாமியத் தூக்கிட்டுப் போயிருச்ச்சாம். அங்கே என்னமோ காத்து இல்லன்னு பொணமாதான் தூக்கியாந்தாவளாம்.”

“ம்..சேத்து வச்ச துட்டு செலவாயிப் போச்சு.சீட்டு போட்டத ரெம்ப தள்ளி எடுத்தாச்சு. இப்ப வயித்து பாட்டுக்குல்ல., நாம் போற நாலு வூட்டிலயும் , கொஞ்சனாளைக்கி வீட்டு வேலைக்கி வராத சரசுன்னு சொல்லிப்புட்டாக., மவராசி, அந்த டீச்சரு அக்காஎம்மேல எரக்கப்பட்டு, ரெண்டாயிரத்த தந்துச்சி. மேல் கொண்டு கேட்டா தர மாட்டாவ.அக்கா நாந்தான் கேக்குகிறேன்.பசி வந்துடுச்சனன்னா வெக்கம், மானம் ஏதுக்கா? பத்தும் பறந்து போவுமுன்னு சொல்லுவாவள.”

“நிஜந்தான்.ரொம்ப கஷ்டம் பார்வதி. யாருக்கும் வேலை கிடையாது. வருமானம் கிடையாது. வெளியே போனால் நோய் தொற்றிக்கிடும் என்று பயம். ஆஸ்பத்திரில கூட இடமில்லை. வைத்தியம் பாக்குற டாக்டருக்குக்கூட இந்த நோய் இருக்குன்னு சொல்றாங்க. அதனால நிறைய ஆஸ்பத்திரியை மூடிட்டாங்க.”

“இந்தப் பாவி மனுஷன், இன்னும் குடிய நிப்பாட்டல.. கடை இருக்கு. காசுதான் இல்ல.இப்ப புள்ளயளுக்குப் பள்ளிக்கூடம் இல்ல. படம் பாக்குற செல்லு வேணுமாம். அதுலதான் டீச்சரு பாடம் நடத்துறாவளாம்.திங்கிறதுக்கு எனனத்தயாவது கேக்குதுக.. எது இல்லன்னாலும் வயிறு மட்டும் இருக்குல்லா? ஆனா வூட்டு அடுப்பு அணஞ்சி ரொம்ப நாளாச்சு. வெக்கமில்லாம ஒரவு க்காரங்கட்ட கை ஏந்தியாச்சி”. சரஸ்வதிக்கு சொல்லும்போது அழுகை வந்தது. அரளி விதையை அரச்சிக் குடிச்சிட்டு பிள்ளியளுக்கும் கொடுத்துட்டு போயிரலாமின்னும்னு ரோசன வருதுக்கா. பெரவும் மனசு கேக்க மாட்டக்கு”. கண்ணீர் வடித்தாள் மூக்கைச் சிந்தினாள் சரஸ்வதி.

Ki. Rajanarayanan Memorial Short Story Competition (கி.ரா நினைவு சிறுகதைப் போட்டி) Special Prize Won Story "Manithathuli" by Tamil Muthumani (*மனிதத்துளி* – தமிழ் முத்துமணி)

“பசி, நமக்குப் பழகிப் போனதா இருந்தாலும் அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு சரசு. ஆறு மாசமா சோறு சாப்பிடாம இருக்க முடியுமா?” “எங்களுக்கெல்லாம், வருஷத்துல நாலு மாசம் தான் சீசன். வருமானம் வரும். வருஷம் பூராவும் வில்லுப்பாட்டு நடக்கும் இல்லை..தை, மாசி, பங்குனி, சித்திரை இந்த நாலு மாசத்துல நடக்கிற கோயில் திருவிழாக்காள்தான். அந்த நாலு மாசம்கச்சேரியில் சம்பாத்தியம் பண்ணுறதுதான் மீதி வருஷம் முழுசும் காப்பாற்றும்.

இந்த வருஷம் அதுல்லாம் கேன்சல் ஆயிடுச்சு. கோவிலில் சாமிக்குக் கூட கொடை நடத்த முடியாம போயிருச்சு.வில்லுப்பாட்டுக்குக் கைநீட்டி வாங்கின, அட்வான்ஸ் எல்லாம் திரும்பக் கொடுக்க வேண்டிய நிலமை வந்துருச்சு.

ஏற்கனவே வில்லுப்பாட்டுக்க்கு முந்தி இருந்த மவுசு இப்ப இல்ல.ஆறு ஏழு பேர் போனாலும் ஆளுக்கு 500 ரூபாய் கூட கிடைக்கிறதில்ல. நாங்களும் பழைய பாட்டை எல்லாம் மாத்தி புதுப்புது சினிமாப்பாட்டுகளையும் சேர்த்துப் பார்த்தோம் ஆனாலும் யாருக்கும் பிடிக்கல.ஆடலும் பாடலும், சினிமாப் பாட்டுக் கச்சேரி, காணக் குறைக்குப் பட்டிமன்றம் எல்லாம் வந்து எங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்டுடுச்சி.

இருந்தாலும் பாரம்பரிய கலைகள் அழிஞ்சி போக் கூடாது, அதை நம்பியே பிழைக்கும் எங்களைப் போன்ற கலைஞர்கள் சோறு திங்கணும்ன்னு அக்கறை உள்ள சில நல்லவங்க ஆசீர்வாதத்தால், கிராமங்களில் மட்டும் திருவிழாவுக்குக் கூப்பிடறாங்க.

இந்த லாக் டவுன் காலத்துல,நம்ம ஊரச் சுத்தி மட்டும் நானூறு ஐநூறு பேர், கிராமியக் கலைஞர்கள் குடும்பத்தோடு பட்டினியாக் கிடக்கராங்க. செத்தும் போயிருக்காங்க.

திண்டுக்கல், மதுரை மாதிரி ஊர்களில் அப்படி இப்படின்னு ஆயிரக்கணக்கில நாடக நடிகர்கள், தெம்மாங்குப்பாட்டு படிக்கிறவங்க, யார் யாரெல்லாம் கோயில் திருவிழாவை நம்பிப் பிழைப்பு நடத்துனாங்களோ, அவங்க வயித்துல எல்லாம் மண்ணு விழுந்துட்டுது.”

“உங்கபாடு தேவலக்கா. போனவருசம் டிவில கூட உங்களப் படம் பிடிக்க வந்தாவாளே. அவிய துட்டு தரலியா?. பேங்க்ல கீங்கிலப் போட்டு வைச்சிருப்பிய! எம்போல அன்னாடம் காச்சிய நாண்டுகிட்டுதான் நிக்கணும்”. கண் கலங்கியது.

“சரசு, இங்க பாரு .உண்மையச் சொன்னா, நீ சொன்னது மாதிரி,உனக்குப் பத்தும் பறந்து போச்சி. எனக்கு அதில ஒண்ணு ரெண்டு பாக்கி இருக்கு அவ்வளவுதான். இதப் புரிஞ்சிக்க

நீ சொன்னது மாதிரி, டிவியில் பாடி இருக்கிறேன்…அழிந்து கொண்டு வரும் கலை, அப்படின்னு, டிவியில எங்களக் காமிச்சி அவன் சம்பாத்தியம் பண்ணிக்கிட்டான். டிவி மட்டுமா ஏன்?ஒரு சினிமாவுல கூட நடிச்சிருக்கேன். வில்லுப்பாட்டுக்காரியா நடித்த ஒரு நடிகைக்கு டூப்பு நான்தான்.ஆனா என்ன பிரயோஜனம்.10 ரூபா காசு பணம்கூட தரல.

அரசாங்கம் கொடுத்த கலை மாமணி பட்டம் இருக்கு. எதுக்கு?. நாக்கு.. வழிக்கவா. எந்த ஊர்லயாவது பட்டம் பசியப் போக்குமா? ம்ம்ம் ..என்னோட…, இந்தக் கலையும் அழிஞ்சிப் போகும். அதுக்குப் பிறகு யாரும் இதைக் கையில் எடுக்க மாட்டாங்க.”

“அடியாத்தி,அப்பிடியாக்கா?நான்கூட பெருசாத்தான் நினச்சிபுட்டேன் ஒன்ன. இது என்னமோ சொன்னான் கதையாவில்ல்ல இருக்கு ஒங்க கத. இதக் கேட்டா எனக்குக் கெழவி சொன்ன சொலவடதான் ஞாவத்துக்கு வருது. அது எதுக்கு?”பெருமூச்சு விட்டாள் சரஸ்வதி..

“சரி சரி. அதை விடு சரசு. இப்ப என்ன விஷயமா வந்தே? சும்மாதான் வந்தியா?. இல்லை ஏதேனும் காரியமாக வந்தியா?. கண்களைக் கசக்கிக் கொண்டு. லேசா கம்மிய குரலில் கலைமாமணி ராஜலட்சுமி கேட்டா.

“எக்கா வூட்ல கெடந்த தட்டுமுட்டு சாமான் எல்லாத்தையும் வித்தாச்சி.அடவு வய்க்க யாங்கிட்ட வேற ஒண்ணுமில்ல. கழுத்துல கிடக்க மஞ்ச கவுத்த யாராவது அடவு வாங்குவாவளா? அந்த துன்பத்திலும் ஜோக் அடித்தாள் சரஸ்வதி. “நீங்க… என்ன நெனைச்சாலும் சரிக்கா எப்புடி எடுத்துக்கிட்டாலும் சரிக்கா. தப்பா நெனக்காதிய. ஒங்க காலப் புடிச்சு கேக்குறன்.நீங்கதான் கச்சேரிக்குப் போம்போது கழுத்து நிறைய செயினு நெக்லசு மால போட்டுட்டுப் போறீக. மாரியாத்தா நக போட்ட மாதி சும்மா தளதளன்னு. எங்கண்ணே பட்டுரும்.

யக்கா..அதுல… ஒரு சங்கிலியைத் தந்தியன்னா… அடவு வச்சு, பெறவு மாடு கணக்கா பாடுபட்டு,சங்கிலியத் திருப்பியாந்து தந்துருவேங்க்கா…. நாம் பெத்து வச்சிருக்க ரெண்டு புள்ளைக மேல சத்தியமா…சாச்சிக்கு. யாரு இரேக்காவ?? …உம்.. அந்த வட கார மனுசனக் கூப்புடுறமக்கா..அந்தாப் போறான்”

ராஜலட்சுமி ஒண்ணுமே பேசாம அவனை அழைக்க வேண்டாம் என்று சொல்வதுபோல் கை ஜாடை காட்டி விட்டு வீட்டுக்குள்ளே போனாள். பத்து நிமிஷத்தில் திரும்ப வந்து நகைப்பெட்டி ஒன்றைச் சரஸ்வதியிடம் கொடுத்தாள். திறந்து பார்த்த சரஸ்வதிக்கு ஆச்சரியம். ஒரு சின்ன செயின்தான் கேட்டாள். ஆனால் எப்படியும் அஞ்சு பவுனு இருக்கும். அப்படி ஒரு கல் வச்ச நெக்லசு கொடுப்பாங்கன்னு நினைக்கல.

“கதவத் திறந்தன்னா ஒன் கால்ல.. ஆமா, மாரியாத்தா காலுல விழுற மாறி வுழனும்”. கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “பக்கத்து ஊர்ல, காது கம்மல் மூக்குத்தியை அடவு வச்ச கடக்கி, கருக்கலுலதாம் போவணும், போய் இதையும் வச்சிட்டு, அரிசி வாங்கிக் கஞ்சி காச்சனும்.. என் தோல செருப்பா தச்சி போட்டாலும்” ..

அழுதுகிட்டே போனா. அவள் போனதும் கலங்கிய கண்களோடு வீட்டிற்கு உள்ளே சென்ற ராஜலட்சுமி, சாமி படத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அப்போது லேசாக மழை தூறத் தொடங்கி, படிப்படியாக பெரிய மழையாகிவிட்டது.

இரவு ஆகப்போகிறது. மழை வேறு பிடித்துக்கொண்டது. அதனால் நாளை காலையில் கடைக்குச் செல்லலாம் என்று நினைத்த சரஸ்வதி அதுவரைக்கும் புருஷனுக்குத் தெரியாம எப்படியோ பொத்திப் பொத்தி வைத்தாலும் நகை இருப்பதைக் கண்டுபிடித்து, அவளிடமிருந்து அதைப்பிடுங்க முயன்று இரண்டு பேரும், அடிதடி சண்டை போட்டு கடைசியில், ஓங்கி ஒரு அடி சரஸ்வதியின் கன்னத்தில் அடித்து அவளைச் சாய்த்துவிட்டு நகையோடு வெளியே ஓடிவிட்டான் அவள் புருஷன் மாரிச்சாமி..

மறுநாள் .. .சாயங்காலம் “எக்க்கா.”. சத்தம் கேட்டு..”உள்ள வா” என்றாள் ராஜலட்சுமி. “ஊட்டுக்குள்ள வரவாக்கா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தால் சரஸ்வதி.கட்டிலில் படுத்திருந்தார் ராஜலட்சுமியின் கணவர் கனகசுப்பு. அவர்தான் வில்லிசைக் குழுவில் குடம் அடித்து நகைச்சுவையாகப் பேசி எல்லோரையும் மகிழ்ச்சிப் படுத்துபவர்.”இந்தாக்கா.வூட்டுல சுட்ட அதிரசம்” சும்மா சாப்பபுடுக்கா ஒண்ணும் செய்யாது”.. ராஜலட்சுமிக்குப் பதட்டமாக இருந்தது.

“இதப்பாருக்கா”.. பார்த்தாள். பணம்!!. வாங்கி எண்ணிப்பார்த்தாள் ராஜலட்சுமி, 5000 ரூபா சுளையா. என்னடி சரசு இது? ஏது இவ்வளவு பணம்?.”உம் அட்டியல அடவு வச்சாச்சிக்கா.அது ரெண்டு பவுனாம்.நான்தாம் ரொம்ப துட்டு வாங்கிட்டா பிறவு நாந்தான அடைக்கணும்.பத்தாயிரத்துக்குத்தான் வெச்சேன். அம்புட்டு ருவாய வச்சு நான் என்ன கோட்டையா கட்டப்போவுதேன்? அக்காவும்,கஷ்டத்துலதான இருக்கிய .

பாதி ரூவாய நீங்க வச்சிக்கிடுக. அண்ணாச்சி கூட அரவாயித்துக் கஞ்சி குடிச்சமானிக்குத் தெரிது.ருவாயா பூராம் நான் திருப்பி மொத்தமாஅடச்சிட்டு, உம் அட்டியல கொண்டாந்து குடுத்துருவேன்.

ஒரே மூச்சாக சொல்லி முடித்த சரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு வில்லிசைத்த் திலகம் கலைமாமணி ராஜலட்சுமி மெதுவாக விசும்பினாள். “செட்டியார் முறுக்கா? சரக்கு முறுக்கா?ன்னு சொல்லுவாங்க சரசு. நானும் 15 வயசுல வில்லுக்கச்சேரி பாட ஆரம்பிச்சேன். இப்ப எனக்கு வயசு 65. இத விட்டா வேற தொழில் தெரியாது. என் வீட்டுக்காரர், எங்க செட்டுல வாசிக்கிற இன்னும் அஞ்சு பேரு குடும்பம் எல்லாத்துக்குமே இந்தத் தொழில் மட்டும்தான். என்னமோ கல்யாணம் ஆயி பத்து வருஷம் எங்களுக்குப் பிள்ளை பாக்கியம் இல்லை. அதுக்குப்பிறகு பிறந்தவள் தான் பிறக்கும்போதே நோயோடு பிறந்து அவளுக்கு வைத்தியம் பார்க்கவே சம்பாத்தியம் முழுசும் போய் சேர்ந்து, கடைசியில் அந்தப் பிள்ளையும் போய் சேர்ந்துவிட்டது…

சின்ன வயசுல நான் சிவப்பா அழகா இருந்தேன்.அப்போ வில்லுப்பாட்டுக்கு, நல்ல மவுசும் இருந்தது கூட்டம் கூட்டமா வில்லுப்பாட்டு கேட்க வருவார்கள். வயசாக வயசாக ,நல்ல மேக்கப் போட்டுக்கிட்டு எடுப்பா போனா மட்டும்தான் கொஞ்சமாவது ரசிப்பாங்க. அதை எப்படி சொல்ல…ஒரு வருஷம் போன இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள, யார் யாரிடமோ வணக்கம் போட்டு, கும்பிட்டு, ஒண்ணுக்குமத்தவனை” ஐயா” என்று சொல்லி கூழைக் கும்பிடு போட்டாதான், காக்கா புடிச்சாதான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை யாரும் இன்னிக்கு மதிப்பதில்லை சரசு.

அதோட அந்தக் காலத்துல சொன்னது மாதிரி, விரல்கள் ஐந்தினில் மோதிரம் வேண்டும் விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும் ..என்பதுபோல ,நல்ல பட்டுச்சேலை கட்டி, கழுத்து நிறைய கைநிறைய நகையைப் போட்டுருந்தால்தான், ஓகோ..பெரிய பார்ட்டி, நல்லா பாடுவாங்கன்னு மதிக்கிறங்க. அதற்காகத்தாண்டி இந்த நகை எல்லாம்.

அடியே சரசு.., என்ன நடந்ததுன்னு உண்மையைச் சொல்லு. என் நெக்லஸை க்கொடுத்தேன். அது போக இன்னும் இருக்கக்கூடிய எல்லா நகைகளையும் கொடுத்தாலும்’ அத வச்சுக்கிட்டு யாரும் உனக்குப் பணம் கொடுக்க மாட்டாங்க. ஏன்னா, அது எதுவுமே ஒரிஜினல் தங்கம் கிடையாது. எல்லாமே ரோல்டு கோல்டு. மேடைக்குப் போட்டுகிட்டு.. மினுக்கும் அது கருத்த உடன் அதே மாதிரி வேற வாங்குவேன்.அத வச்சிக்கிட்டா இம்புட்டுப் பணம் கொடுத்தான்?!. ஏமாற்று வேலை சொல்லு. சொல்லிட்டு, மேடையில் பாட்டு பாடி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தும் கலைமாமணி அடக்கமுடியாமல் ஓவென்று அழுதாள்.

“அக்கா அழாதிய”. கலைமாமணியைப் பிடித்துக்கொண்டு,” கண்ணத் தொடைங்கக்கா. களவாணிப்பய யாம் புருஷன்அட்டியலத் தூக்கிட்டு ஓடிட்டான். போயி ராவோட ராவா அதை எங்கேயோ விக்கிற இடத்தில தெரிஞ்சிடுச்சி அது டூப்புன்னு. கொண்டாந்து கெட்டவாய் அஞ்சாறு வசவு வஞ்சி , அட்டியல யாம் மூஞ்சிலத் தூக்கி வீசிட்டு பூட்டான் அந்தப பேதில போவான். அப்பதான்க்கா, உம் நிலம பூறாம் எம் மண்டைல ஏறிச்சி. யாம் கஷ்டத்தச் சொல்லி நான் பிச்ச எடுக்கேன் பாதவத்தி. நீ ஊரு பூராம் தெரிஞ்ச,என்னமோ ஒரு மணி… என்ன மணி ?. உனக்கு கஷ்டமுன்னா யாரு நம்புவாவ? நீ யாருகிட்டக்கா கை நீட்டவ?அதான் உமஙகஸ்டத்த உன்னால சொல்ல முடியல.தம்மானம் தடுக்க்கி நிக்கி. எல்லா நகயும் டூப்ளிகட்டு, கவரிங்குன்னு தெரிஞ்சி போச்சு.

போன மாசம் சிவகாசிலருந்து வந்து, அது என்ன குடிநீரு! ஆமாக்கா, கப்புசுர குடிநீரு ஊரு பூராம் கொடுத்துச்சே ஒரு தம்பி, அந்தத்த்தம்பி,அவங்க அப்பா பேர்ல..என்ன? என்னமோ டெஸ்ட்டா? ஆமா ,சொல்லிச்சு. அந்த டெரஸ்ட் புதுசா ஆரம்பிச்சிருக்காம். சோத்துக்கு இல்லாத பஞ்சைகளுக்கு 5000 ரூவா கொடுக்க இன்னைக்குக் காத்தால நாலஞ்சி வேரோடுவந்தாவ. நம்ம ஊருல நாலு வேருக்கு மட்டும் ரூவா கொடுத்தாவ. அதுல நா ஒருத்தி.

அந்தப்பையங்கிட்ட உங்களப் பத்தி நாலு வார்த்த சொல்லி, “அக்கா வூட்ட வுட்டு வெளிய வராது. நல்லாருந்து கெட்டுப்போனது. அது பேரையும் சேத்துக்க தம்பின்னு நல்லாத்த்த சொல்லி, அக்கா யாரையும் பாக்காதுன்னு சொல்லி, கால்ல கைல வுழுந்து ஒம் பேரையும் சேத்து ஒம் பங்குக்கு இந்த ரூவாய வாங்கிபுட்டேன்க்கா.தப்பா நெனைக்காதியக்கா.”என்று சரஸ்வதி சொல்லி முடித்ததும்..

முகமூடி போடல. கையுறை அணியல. ஆனால் கலைமாமணி, வில்லிசைத் திலகம் ராஜலட்சுமி ஒரு படிக்காத, பாமர , ஒரு கூலிக்காரன் பொண்டாட்டி சரஸ்வதியை ப்பாசத்தோடு இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். இருவர் கண்களிலும் வந்த கண்ணீர் மற்றவர் தோள்களில் விழுந்தது… சாமானிய சரஸ்வதிக்கு.. நன்றி சொல்ல கலைமாமணி ராஜலட்சுமியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் நிற்காமல் வடிந்து கொண்டேயிருந்தன.

மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.