ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டமும் கட்டுரை – அ.பாக்கியம்
ஆன்லைன் சூதாட்டம் பல இளைஞர்களின் வாழ்வை பலி கொல்கிறது என்பதினால் அவற்றை தடை செய்வதற்கு தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
அக்டோபர் 1ஆம் தேதி அவசர சட்டதில் கையெழுத்திட்ட ஆளுநர் அந்த சட்டத்தை அமல்படுத்த விடாமல் சூழ்ச்சியில் இறங்கிவிட்டார்.
இத்தனை நாட்கள் கடந்த பிறகு சட்டம் காலாவதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆளுநர் சந்தேகங்களை கேட்டு திருப்பி அனுப்புகிறார். இவ்வளவு நாள் ஏன் அனுப்பவில்லை? என்ற கேள்வி எழுவது நியாயம் தானே.
சென்னை உயர்நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை செய்யும் முந்தைய சட்டத்தை ரத்து செய்தது.
உயர் நீதிமன்றத்தின் அவதானிப்புக்கு ஏற்ற வகையில் இந்த மசோதா இல்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா விளையாட்டு மற்றும் திறன் விளையாட்டு ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடுகளை சரியான முறையில் வரையறுக்க வில்லை எனவே இது விதி 19 (1)(ஜி)க்கு எதிரானது.
தடை என்பது விகிதாச்சாரமாக மட்டுமே இருக்க முடியுமே தவிர முழுமையாக இருக்க முடியாது என்று வினா எழுப்பி உள்ளார்.
அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் ஆகியவை வராது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை ஆளுநர் மேற்கோள் காட்டியுள்ளார்.
எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் ஆளுநர் கேட்கலாம். ஆனால் மசோதா காலாவதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்பியது ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவான நிலையோ என்று கருத தோன்றுகிறது.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து EGaming Federation (EGF) தொடர்ந்து இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த வியாழக்கிழமை கவர்னர் மசோதாவின் சந்தேகங்களை கிளப்பி அனுப்பியிருந்தாலும் 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை 11:00 மணிக்கு இதற்கான விளக்கம் எழுத்துப்பூர்வமாக மாநில அரசு கொடுத்துள்ளது.
இந்த மசோதா திறன் விளையாட்டு மற்றும் வாய்ப்பு விளையாட்டு ஆகியவற்றை வேறுபடுத்தி விகிதாச்சார கோட்பாட்டின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை மட்டுமே தடை செய்கிறது என்றும் மொத்தமாக தடை செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் கேம் டெவலப்பர் எழுதிய கணினி குறியீட்டிற்கு எதிராக நபர் விளையாடுவதால் பந்தயம் மற்றும் சூதாட்டம் என்ற அம்சத்தில் ஒரு நபர் ஏமாற்றப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற முறையில் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
பந்தயம், பொது சுகாதாரம், திரையரங்குகள், நாடக நிகழ்ச்சிகள் ஆகியவை அரசியல் சட்ட ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இந்திய அரசியல் அமைப்பிற்கு இணங்கிய முறையில் தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் மாநில அரசு தெளிவு படுத்தி உள்ளது.
எத்தனை விளக்கம் கொடுத்தாலும் பாஜகவின் பிரச்சாரகராக செயல்படக்கூடிய ஆளுநர் அண்ணாமலைக்கு எப்போதும் கதவை திறந்து வைத்துக் கொண்டிருக்கும் ஆளுநர் மாளிகை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சருக்கு சந்திக்க நேரம் ஒதுக்காத மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மொத்தத்தில் தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் தடைக்கு எதிராக செயல்பட்டு தமிழக மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்.
அ.பாக்கியம்