மண்டியிடாதே! கவிதை – பாங்கைத் தமிழன்
ஹிந்தி எனும் தொந்தரவு
எம்மைவிட்டு நீங்கும் வரை
ஊனுமில்லை உறக்க மில்லை
ஓய்வு கொள்ளப் போவதில்லை!
தந்தை தாயின் முன்னோர்கள்
தந்தத் தமிழ்ச் செல்வமதை
எவனழிப்பான் பார்த்திடுவோம்
எழுந்திடடா தமிழ்ப் புலியே!
மானங்கெட்டு மதியிழந்து
மண்டியிட்டு வாழ்வதென்ன
தமிழ்க்குடியின் பரம்பரையோ?
தரணியிலே முதல் இனமே!
மொழியழிந்தால் வாழ்வழியும்
வாழ்வழிந்தால் இனம் அழியும்
வஞ்சகரின் சூழ்ச்சிதனை
புரிந்து கொண்டால் நாம் உயர்வோம்!
சாதியெனும் சாக்கடைக்குள்
சந்தனந்தான் மணந்திடுமோ?
சாதி விட்டு எழுந்திடடா
சாதிக்கலாம் தமிழ்ப்புலியே!
ஆபத்தடா தமிழ் மொழிக்கு
அறிந்திடாயோ? வரிப்புலியே!
சாபம்விட்ட ஹிந்தியினால் நம்
சரித்திரத்தை அழிப்பாரோ?
கெடும் கெடும் நம்வாழ்வு
கேடுகள் சூழ்ந்தால் பெருந்தாழ்வு
வட குடிகள் வாழ்வதற்காம்
தமிழ்க்குடிகள் சாவதற்கா?
சாதி என்பது வியாதியடா
சமத்துவம் மானுட நீதியடா
தமிழன் என்றால் ஒருசாதி
தயக்கம் என்ன நீ சாதி.
– பாங்கைத் தமிழன்