நூல் அறிமுகம்: அருணன் ச. தமிழ்ச்செல்வன் ’காலத்தின் குரல் த.மு.எ.க.ச. வின் 40ஆண்டு வரலாறு.’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: அருணன் ச. தமிழ்ச்செல்வன் ’காலத்தின் குரல் த.மு.எ.க.ச. வின் 40ஆண்டு வரலாறு.’ – து.பா.பரமேஸ்வரி




நூல் : காலத்தின் குரல்  த.மு.எ.க.ச. வின் 40ஆண்டு வரலாறு.
ஆசிரியர் : அருணன் ச. தமிழ்ச்செல்வன்
விலை : ரூ. ₹200
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

தமிழிலக்கிய உலகமாகட்டும் கலை இலக்கிய தளமாகட்டும் தமிழ் பண்பாடு தழத்தோடும் சமூகமாகட்டும் இப்பெருவெளியில் கலைஞனோ கவிஞனோ படைப்பாளியோ எழுத்தாளனோ யாரேனும் தமது தளத்தை நிறுவிய இடமாகவோ அல்லது வளர்த்தெடுக்க உந்துதல் அளித்தக் களமாகவோ எழுத்து சுதந்திரத்திற்கான முழு அங்கீகாரம் பெற்ற மேடையாகவோ வித்திட்ட நிலமாகவோ உரக்க ஒலித்திட்ட குரலாக நிச்சயம் ஒரு இயக்கம் முன்னோடியாக நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை. எழுத்து, படைப்பு, கலை, இலக்கியம், பண்பாடு என ஒரு இயக்கத்தின் இயக்கம் அத்துடன் சுருங்கி விடுவதில்லை. சமூகத்தின் அவலங்களைக் கண் முன் தலை விரித்தாடும் அநீதிகளைச் சாத்தியமற்ற நியாயங்களைத் தனக்கென்ன என்பது போல அப்படியே கடந்து விடாமல் எதிர்த்து கேள்வியெழுப்பி பதிலற்ற நிலையில் பெரும் போராட்டம் நிறுவி அதற்கும் கேட்பாரற்ற போக்கில் காலவரையற்ற புரட்சி செய்து மெனக்கிட்டு கொண்ட கொள்கையில் வெற்றிக் காண்பதும், அதுவும் சாதி வர்ண பேதமற்ற ஓர்மையில் சமூகத்திற்காக மட்டுமே இராது தனியொரு மனிதனுக்காகவும் களமிறங்கும் களப்போராளிகளாக சிறந்த நேர்மையான இயக்கதாரிகள் நிற்பர் என்பதற்கு வரலாறுகள் அநேகம். அப்படியான அழிக்கவியலா ஒரு காலகட்டமாக காலத்தின் குரலாக சுமார் 40 ஆண்டுகால வரலாற்றைத் தனக்குள் உள்ளொடுக்கியுள்ள மாபெரும் இயக்கமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இன்றும் தமது அழுத்தமான தளத்தைத் தமிழகத்தில் மட்டுமல்லாது பாரத அளவில் மனு தருமத்திற்கு எதிராகவும் ஆண்டார் அடிமை சாசனத்திற்கு எதிராகவும் மதத்தைக் கொண்டு மனிதத்தை விற்கும் மதவாதி அரசியலுக்கு முட்டுக்கட்டையாகவும் சாதிய சகதியைக் கைக்கொண்டு சமூகத்தை மக்கள் மனதை சிதிலமடையச் செய்யும் சமூக தீவிரவாதத்திற்கு எதிராகவும், ‘மாதர் தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்கிற புரட்சிக்கவியின் அறைகூவலை வழிமொழிந்தும் தமிழ் எங்கள் பேச்சு அதுவே எங்கள் மூச்சு என முழக்கமிட்டும், ஒன்றே செய் அதை இன்றே செய் என தமது ஒவ்வொரு அசைவையும் தன்னலமற்ற நோக்கோடு சமூகத்தைப் புரட்டிப் போடும், எங்கும் முற்போக்கு.. எதிலும் இல்லை பிற்போக்கு என்கிற நாமகரணத்தை சொல்லாகக் கொள்ளாமல் செயலாகப் பாராட்டி வரும், “தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” என்று நிலமெங்கும் அதிர முழக்கமிடும் 15 ஆம் மாநாட்டில் இலக்கியம் கலை என எங்கும் பன்மைத்துவத்தை போற்றியும் தனித்துவத்தைப் பாராட்டியும் ஒரு மகா சக்தியாகவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இன்றளவும் கொடிகட்டிப் பறக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இங்குள்ள போராளிகள் தமக்காக ஒருபோதும் போராடுவதில்லை. மக்கள் நலனே மகேசன் செயல் என அடி முதல் ஆழம் வரை பெருக்கு முதல் துணுக்கு வரை எங்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கு அழியா விருந்தாளியாக எம்பிக் குதித்து எதிர்த்துப் போராடி நீதிக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் தனிமனித உரிமைக்காகவும் போராடி வெற்றி கண்டு வருகிறது இது காறும்.

அச்சுறுத்தல்களும் இடர்பாடுகளும் ஏன் பல சமயங்களில் கொலை முயற்சிகளையும் கூட கண்டுள்ளது நமது இந்த பேரியக்கம். எதற்கும் அஞ்சுவதோ பின்வாங்குவதோ வளைந்து கொடுப்பதோ என்பதெல்லாம் தமது சரித்திரத்தை நெருங்கியதில்லை. இந்த நமது மக்களுக்கான இயக்கத்தின் வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தால் எத்தனை எத்தனை சரித்திரங்கள் சம்பவங்கள் ஆவணங்கள் சாசனங்கள் சாதனைகள் புரட்சிகள் போராட்டங்கள் என தொடரும் காலங்களின் பதிவேடு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வாருங்கள் வாசித்திடுவோம் தமுஎகசவின் வரலாற்றுச் சிறப்பை.. உடன் வசித்தும் விடலாம் அதன் இறுமாப்பில்..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் துவங்கி இன்றைய பொழுதில் 40ஆண்டுகளைக் கடந்த வெற்றி விழாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மகத்தான சாதனையை காலத்திற்கும் அழியாத பொக்கிஷமான நூலாக பதிவேடாகக் “காலத்தின் குரல்” அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரத்தக் குரலை உரக்கச் செய்து நூலாக்கம் செய்த மாண்பைப் பெற்றவர்கள் தோழர்கள் எழுத்தாளர் தமிழ் அருணன் மற்றும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள்.

நூல் இரண்டு பாகங்களாப்  பிரிந்து பகுந்துள்ளது.

1975 ஆம் ஆண்டு முதல் துவங்கும் மலரும் நினைவுகள் 40 ஆண்டு நிகழ்காலப் பாதச்சுவடுகளை புறக்கணிக்கவே முடியாத பக்கங்களை நமக்கு வழங்கியுள்ளது.

25 ஆண்டு கால வரலாற்றை முதல் பாகமாக எழுத்தாளர் அருணன் கைங்கரியத்திலும் மீதமுள்ள 15 ஆண்டுகால ஆவணப்பதிவுகளை நிகழ்கால சாம்ராஜ்யத்தை 13வது மாநில மாநாடு வரையிலான வரலாற்றை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களும் கலப்பை ஊன்றி உழுத நிலம் போல ஆழ புடைந்துள்ளனர்.  இவர்களின் உழைப்பும் உயர்வும் சோடை போகாது. இன்று 15 ஆவது மாநாட்டை எதிர்கொண்டு விளைச்சலைப் பாய்ச்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நூலின் அத்தியாயங்கள் மொத்தம் 41 அதில் 34  அத்தியாயங்கள் பாகம் ஒன்றையும் மீதமுள்ள ஏழு அத்தியாயங்கள் இரண்டாம் பாகமாகவும் கால பகுப்பாய் ஒப்பீட்டில் பிரிந்து பகுத்துள்ளது வாசிப்பதற்கும் தொடர்ச்சியாகப் புலனாய்வதற்கும் புரிதலுக்கும் உறுதுணையாக உள்ளது.

1974 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஆகச்சிறந்த இலக்கிய விமர்சகரும் தொழிலாளி வர்கத் தலைவருமான திரு என். சங்கரய்யா தலைமையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவ வேண்டி ஆலோசனையை முன்வைத்தும் அதற்கான மேற்கோலும் நடைபெற்றது.

1975 ஜூலை தமுஎகசவின் முதல் மாநில மாநாடு மதுரையில் தமது அரங்கேற்றத்தை நிறுவியுள்ளது. அந்த முதல் மாநாட்டிலேயே பல முக்கிய செயல்பாடுகள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பொதுச் செயலாளராக கே.முத்தையா மற்றும் இதர நிர்வாகிகள் கொண்ட மாநில செயற்குழு களத்தில் இறங்கியது.

தொடர்ந்து 1976 அக்டோபர் திங்களில் சேலம் மாவட்டம் நாமக்கல்லில் இலக்கிய முகாம் ஒன்று த மு எ க ச நடத்தி வெற்றி கண்டது.
நமது இந்த இயக்கத்தின் பிறப்பு மதுரை என்றால் குருகுல வாசம் துவங்கிய  இடமாக நாமக்கல் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். 1978 ஜூன் திங்களில் கோவையில் 216 பிரதிநிதிகள் தமிழகம் முற்போக்கு இலக்கியத்திற்கே சொந்தம் என்று பறைசாற்றிய படி வெகு விமர்சையாக இரண்டாம் மாநாடு வெற்றி நடை போட்டது.
இந்த மாநாட்டில் பாரதி பாரதிதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய முக்கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விழா நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1979இல் தஞ்சையில் மாபெரும் நாடக விழாவையும் 1980ல் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு பொன்விழாவையும் சீரும் சிறப்பாக கொண்டாடியது. இந்த விழாக்கள் எடுப்பதற்கான முக்கிய குறிக்கோளாக ஒவ்வொரு படைப்பாளிகள் அவர்தம் நாடக கலைஞர்களாகவேணும் இருந்த போதிலும் தமது கலைத்துறையை நம்பியே வாழ்வாதாரத்தை நடத்தி வரும் இவர்களின் வறுமையை போக்கி அவர்களுக்கான கலைக்கான அங்கீகாரத்தை மக்கள் முன் வழங்கி கௌரவிக்கப்படுவதே ஆகும்.
மதுரையில் பிறந்து நாமக்கலில் குருகுல வாசத்தைக் கண்ட தமுஎகச தமிழகத்தின் தலைநகரில் தமது படைப்பாளுமைகளின் கலை ஆர்வலர்களின் திறமையை மேடையேற்ற மூன்றாம் மாநாடு 1981 ஜூலை முதலி திகதியில்  ஆகஸ்ட் இறுதித் திகதிகளில் சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து திரு கே. முத்தையா அவர்களே மூன்றாவது முறையாக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.1981 டிசம்பரில் சென்னையில் வலுவான கண்டன கூட்டமும் 1982 பாரதிக்கு சிறப்பு விழாவும் 200 பேர் கொண்ட இலக்கிய முகாம் ஒன்றும் 1984 சென்னையில் நாடக விழாவும் நடத்தி மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றது தமுஎகச. பின்னர் 1987 திருச்சியில் நான்காவது மாநாடு பல இலக்கியக் குறிக்கோள்களை முன்னிறுத்தி நிகழ்ந்தது. தோழர் கே முத்தையா இம்முறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநாடுகள் முகாம்கள் கலை நிகழ்ச்சிகள் என கொண்டாட்ட களமாக மட்டுமே தேங்கி விடவில்லை  இந்த அகன்ற இயக்கம். நிறுவப்பட்ட குறிக்கோளை அவ்வப்போது அநீதிக்கும் அக்ரமங்களுக்கும் எதிராக குரலெடுத்தும், மக்களுக்கும்  ஜனநாயகத்திற்கும் தீவிரவாதத்தால் அநீதி இழைக்கப்படும் தருணம், அநியாயங்கள் தலை தூக்கும் போது அதற்கு எதிராகத் தமது கண்டன குரலை ஓங்கி ஒலித்தும் புரட்சி கொடி ஏற்றியும் நீதி கிட்டும் வரை அயராது போராடியும் தமக்கான பங்கை தேவையான களங்களில் நிலைநாட்டி வருகிறது என்பதை ஆவணப்படுத்துகிறது இந்நூல்.
ஆனந்த விகடன் ஆசிரியர் கருத்துப்படம் ஒன்றை அட்டைப் படமாக வெளியிட அவரை சிறையில் அடைத்த அன்றைய அரசின் போக்கைக் கண்டித்து கரம் உயர்த்தியது த மு எ க ச. பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் எழுத்துரிமையும் பறிக்காதே என்றும் முழங்கியது கோஷமிட்டது. மாலை முரசு மட்டுமின்றி மத்திய அரசின் அவதூறு மசோதா பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கத்தை எதிர்த்தும் போராடி வெற்றிக் கண்ட சரித்திரங்கள் பக்கங்களில் ஆள்கின்றன. 1988 இல் கோவை தமுஎகச சார்பில் நடைபெற்றது. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கு என்கிற முழக்கத்தை கொண்டிருந்த நம் அமைப்பு கலை வடிவத்தை அங்கீகரிக்கவும் தவறவில்லை. ‘வேதம் புதிது’ திரைப்படத்தில் தொடங்கிய தமுஎகசவின் பாராட்டு விழா தொடர்ச்சியாக வீடு, சின்னத்தாயி, மறுபடியும், என சிறந்த முற்போக்கு மற்றும் சமூக நல்லிணக்கம் கொண்ட திரைப்படங்களைத் தேர்வு செய்தும் அங்கீகரித்தும் ஆண்டுதோறும் தமுஎகச விருது வழங்கியும் கௌரவித்தது. தொடர்ந்து 1988 ஜூலை மாதம் நவீனம் பற்றிய இலக்கிய ஆய்வைக் கொண்ட முகாம் ஒன்றை  நடத்தியது. ஒரு நாவலை எப்படி மதிப்பீடு செய்வது என்பதைப் பற்றிய பயிற்சிக் களமாய் திகழ்ந்தது அந்த முகாம். தொடர்ந்து பல இலக்கிய போட்டிகளையும் நடத்தி வெற்றியும் கண்டது. சிறுகதைப் போட்டி, கவிதை போட்டி, கட்டுரைப்போட்டி, நாவல் போட்டி, குறுநூல் போட்டி என போட்டிகளின் தளங்கள் விஸ்தாரமாகக் களமாடியது.
1989 ஆம் ஆண்டு வீதி நாடகக் கலைஞர் “சப்தா ஆஸ்மியை” காங்கிரஸ் ஆட்சியாளர்கள் படுகொலை செய்ததைதைக் கண்டித்து கண்டன ஊர்வலம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் என தமது பெரும் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் முன்னிறுத்தத் தவறவில்லை.
ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்தநாளை கொண்டாடியும் “மக்கள் கலைஞர் சப்தா ஹஸ்மி” என்னும் நூலை வெளியிட்டு அவருக்கான அஞ்சலியை நடத்தி வருகிறது. அடுத்தடுத்த ஆண்டுகள் 1990களில் மக்கள் கலைஞருக்கு மணி விழா, பாவேந்தருக்கு நூற்றாண்டு விழா என தொடர்ந்தன. மாநில மாநாடு நெல்லையில் வெகு விமர்சையாக நடந்தேறியது. அதன் தாக்கம் நெல்லையில் “எங்கு நோக்கினும் ஜோல்னா பைக்காரர்கள்” என்று தினமலர் ஏட்டில் சொல்லப்பட்டது. அதன் நீட்சியாகவே தற்போது நடந்து முடிந்த தமுஎகச வின் கிளை மாநாட்டில் கிளை உறுப்பினர்களுக்குப் புத்தகத்துடன் ஜோலனா பைகளை வழங்கி நினைவு பாராட்டியது அறம் கிளை.

மதவெறிக்கு எதிரான போர்க் குரலை 1991 நவம்பர் திங்களில் மதுரை திருப்பரங்குன்றத்தில் எழுப்பியது தமுஎகச.

சகோதரனே நீ !
இந்துவாக இரு
முஸ்லிமாக இரு
கிறிஸ்தவனாக இரு
மனிதனாகவும் இரு
என நிலமதிரக் கத்தியது தமுஎகச.
1941 இல் சென்னையில் நடைபெற்ற ஆறாவது மாநில மாநாடு பலவிதமான வகைமைகளில் நாடகம், தெருக்கூத்து,பட்டிமன்றம், பாட்டு, இலக்கிய உரை, கவிச்சரம் என கலை இரவுகளைக் கொண்டாடியது.

வருஷா வருஷம் கலை இரவு நடத்துறாங்களே அவங்கதானே… என்று ஊர் தோறும் போற்றுமளவு தமுஎகச கலை இரவுகளின் வழியே பிரம்மாண்டத்தைத் தோற்றுவித்தது.

1991ல் மீண்டும் இலக்கிய முகாம் ஒன்றும் 1992 இல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூலகம் மற்றும் தமுஎகச அலுவலகக் கட்டிட திறப்பு விழா நடந்தது. திறப்பு விழா முடிந்துக் கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில் முன்னறிவிப்பின்றி இந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து ‘சூப்பர் சினிமா’ தணிக்கை மசோதா கொண்டு வந்த அதிமுக ஆட்சியை எதிர்த்து சென்னையில் கண்டன போராட்டம் ஒன்றை நடத்தியது. தொடர்ந்து அநீதிக்கு எதிரான தமது அழுத்தமான எதிர்ப்பு முத்திரையை பதித்தவண்ணம் இருந்தது தமுஎகச.

சென்னையில் ஆறாவது மாநில மாநாடு 1993 ஜூலை பெரும் திரளுடனான ஊர்வலத்துடனும் துவங்கியது. இந்த மாநாட்டில் சில பல முக்கிய தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. திரைக்கலைஞர்கள் சாருஹாசன் மற்றும் கமலஹாசன் போன்றோரின் வாழ்த்துரைகளுடன் இந்த மாநாடு பெரும் விசேஷத்தைக் கண்டது. இப்படியான மாநாடுகளின் தொடர் வழிநடத்தலே பற்பல திட்டங்களும் பல நல்ல செயல்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் தமது கைமாறை நிலைநாட்டுவதே அதன் நோக்கம். அந்த வகையில் ஆறாவது மாநாட்டிற்குப் பின்பு பல உயரிய விருதுகள், கௌரவப்படுத்தும் வகையில் பரிசுத்தொகைகள் வழங்கி படைப்பாளர்களையும் கலைஞர்களையும் அங்கீகரித்தது. அந்த விஷயத்தில் தமது வாக்குறுதியில் அடாது நின்று அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள் போல் அல்லாமல் சாசன வார்த்தைகளாகச் சத்திய ஏற்புரைகளாக களமாடி அதற்கான பெரும் முன்னெடுப்புகளையும் மெனக்கிடல்களையும் மேற்கொண்டது.

தமிழுக்குரிய இடம் கேட்டு போராட வேண்டும் என்கிற ஆறாவது மாநாட்டின் தீர்மானத்தைச் செயல்படுத்த 1994 ஏப்ரல் சென்னையில் “தமிழ் வளர்ச்சி பண்பாட்டுப் பாதுகாப்பு” மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுத் தீர்மானங்களையும் உரைகளின் கருத்துக்களையும் “அன்னை தமிழ் வளர்க்க அனைவரும் வாரீர்” என்ற ஒரு சிறுகதை நூலாகக் கொண்டு வந்தது தமுஎகச.

மிகச்சிறந்த பாடத்திட்டத்துடனும் கட்டுப்பாட்டுடனும் படைப்பாக்க முனைப்போடும் செயல்முறை பயிற்சிகள் அடங்கிய நடைமுறையில் திறமையை நிரூபிக்கிற பல சிறுகதை பயிலரங்குகள் 1994 ஏப்ரல் திங்களில் குற்றாலத்தில் நடத்தப்பட்டு அநேகர் கலந்துக் கொண்டு பயனுற்றனர்.

பாரதி ஜோதி பேரணியாய் ஒரு கலைத்தன்மை மிக்க உணர்வுப் பூர்வமான ஊர்வலத்தை 1996 மார்ச் மாதம் ஏழாவது மாநில மாநாடு மதுரையில் கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு விமர்சையாக நடந்தேறியது. தோழர் ச.செந்தில்நாதன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். சமூக அவலங்களுக்கு எதிராக கொடி பிடிக்கும் நமது இயக்கம் சமூகத்தையும் மக்களையும் ஆட்டிப்படைக்கும் கொடிய தீநுண்மி நோயாக சாதிவெறி தலை விரித்தாட வேரூன்றிக் கிடக்கும் அந்த வெறிக்கு எதிராக 1996 மார்ச் 20 அன்று ஆறு நகரங்களில் சாதிவெறிக்கு எதிராகப் பட்டினி போராட்டம் ஒன்று நடத்தியது. இரா.கதிரேசன், மேலாண்மை, தமிழ்ச்செல்வன் போன்ற மாநில தலைவர்கள் உரையாற்றினர்.சாதி வேதனைகளைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டியும் சாதி எதிர்ப்புப் பாடல்கள் வீதி நாடகங்கள் தயாரித்து கலை இரவு மேடைகளில் ஏற்றி தீண்டாமைக்கு எதிராக வெகுஜன புரட்சி செய்தது தமுஎகச.
1996 ஆம் ஆண்டு இரண்டு முக்கிய நிகழ்வுகளைத் தாங்கியுள்ளது. ஒன்று குணசீலத்தில் இலக்கிய முகாம் நடத்தி பல ஆளுமைகளின் கருத்துக்களை மேடையேற்றியது. மற்றொன்று இயக்குனர் பாரதிராஜாவின் படைப்புகளைக் குறித்த ஒரு ஆய்வரங்கம் ஜனவரி திங்களில் திண்டுக்கல்லில் நடத்தியது. அது மட்டுமில்லாமல் “ஒரு நடிகையின் கதை” என்ற பெயரில் குமுதம் ஏட்டில் தொடர்ந்து வெளிவந்த ஆபாசத் தொடருக்கு எதிராக அறிக்கை விடுத்து தமது எதிர்ப்பை நிலைநாட்டி குமுதம் பத்திரிக்கை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து தொடரை குமுதம் கைவிடச் செய்தது. ஆபாச எழுத்துக்களை எதிர்த்து வலுவாக போராடினால் மிகப்பெரிய பத்திரிகைகளையும் கூட பணிய வைக்க முடியும் என்பதற்கு தமுஎகசவின் இந்த நிகழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு.

தமது 24 ஆண்டு கால சீரான இயக்கம் என்பது சாதாரணமான செயலூக்கம் அல்ல. அநேக  சிரத்தைகளுக்குள் அவதூறுகளுக்குள் மிரட்டல்கள் மத்தியில் பல நூறு சிறந்த எழுத்தாளுமைகளையும் கலைஞர்களையும் உருவாக்கி அழகிய நந்தவனத்தில் பளிச்சென முகம் காட்டும் கை அகல ரோஜாக்கள் போல இலக்கிய உலகில் வலம் வரச் செய்த பெருமைக்குரிய இயக்கமாகவே நம் இயக்கம் திகழ்கிறது.

“எழுதுவது எல்லாம் எழுத்தல்ல எழுவதே எழுத்து” என்கிற எழுத்தின் அடிநாதமாக நமது ஆளுமைகள் திகழ்கின்றனர். தலித் உணர்வோடு எழுதப்படும் தலித் அல்லாதவர்களின் படைப்புகளும் தலித் இலக்கியமே என்று பலரையும் சொல்ல வைப்பதே தமுஎகசவின் சரியான நோக்கு.
முதல் பாகம் தோழர் அருணன் அவர்கள் தமுஎகச நடத்திய 25 ஆண்டுகால சாதனைகளைத் தமது ஆகப்பெறும் கைவண்ணத்தால் நிறைவு செய்துள்ளார்.தொடரும் தமுஎககசவின் வெற்றிப் பயணங்கள் வாகை சூடியே பயணித்தன. தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் கைப்பக்குவத்தில் இரண்டாம் பாகமாக நூலில் மீதமுள்ள பதினைந்து ஆண்டு நினைவுத்தடங்கள் இடம் பிடித்துள்ளன.
எட்டாவது மாநில மாநாடு அமைப்பின் வெள்ளி விழா மாநாடாக 1999 திகதியில் கோவையில் சிறப்பாக நடந்தேறியது. “இலக்கைத் தேடும் இலக்கியம்” என்கிற சிறு நூல் ஒன்று வெளியிடப்பட்டது.
“உத்தியோகம் போகிற பெண்களில் பெரும் பாலானோர் ஒழுக்கம்  கெட்டவர்கள்” என்கிற காஞ்சி சங்கராச்சாரியாரின் வாய் சவடாளை எதிர்த்துக் குரல் எழுப்பியது அமைப்பு.
ஒன்பதாம் மாநில மாநாடு கடலூரில் 2002 ஆகஸ்ட் திங்களில் “பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் கலாச்சார ரீதியிலும் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிற அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான போர்க்குரல் முன்னெப்போதையும் விட ஓங்கி ஒலிக்க வேண்டிய காலம் இது..” என ஆரவார அறைகூவலாக அறிக்கையை வெளியிட்டது.
2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் சமூக பண்பாடு நிலையையும் தமிழ் கலை இலக்கிய உலகின் போக்குகளையும் பங்களிப்பு மற்றும் பணிகளையும் பரிசீலிக்கும் பத்தாவது மாநில மாநாடு 2005 செப்டம்பரில் திருவண்ணாமலையில் பண்பாட்டுத் திருவிழாவாக மேடை சிறக்கச் செய்தது. இந்த மாநாட்டின் தீர்மானமாக முக்கிய தமுஎகச உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தாரும் கோக் பெப்சி போன்ற பன்னாட்டுக் குளிர்பானங்கள் அருந்துவதில்லை என்று சபதம் எடுத்தனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு
 மதவெறி எதிர்ப்பு
தலித் விடுதலை
பெண் விடுதலை
தமிழ் வளர்ச்சி!
என்கிற ஐந்து முழக்கங்களோடு 11 ஆவது தமுஎகச மாநில மாநாடு தென் சென்னை கோடம்பாக்கத்தில் 2008 டிசம்பர் அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க மற்றும் வரலாற்றுச் சிறப்பாக “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” என்கிற பெயரை மாற்றி “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்” என்கிற பெயரில் இயங்க மாநாடு முடிவு செய்தது. கலைத்துறைச் சேர்ந்த கலைஞர்களை ஆதரிக்கவும் தம்முடன் இணைத்துக் கொள்ளவும் அமைப்பால் ஒருமுகமாக முடிவெடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் மக்களிடையேயும் கலைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பன்னிரண்டாம் மாநாடு 2011 செப்டம்பர் திங்களில் விருதுநகரில் கலைப் பேரணியும் கலை இரவும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
“ஒரு மாபெரும் பண்பாட்டு யுத்தம் தமிழ் மக்களின் மீது கட்டவிழுத்து விடப்பட்டுள்ளது, இவற்றுக்கெல்லாம் மாற்றாக முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் அறிவு ஜீவிகள் என்னும் படை உழைக்கும், மக்கள் மத்தியிலிருந்தே புறப்பட்டுத் தமக்கான பண்பாட்டு இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டியுள்ளது..” என அறிக்கையில் இம் மாநாடு படோடாபகமாக நிகழ்ந்தேறியது.
முற்போக்குத் தமிழ் மரபை முன்னெடுப்போம்!
 மனுதர்மத் தந்திரத்தை முறியடிப்போம்!
 என்கிற முழக்கத்தை முன்வைத்து 2015 மார்ச் மாதம் 13ஆம் மாநில மாநாடு திருப்பூரில் களைகட்டியது.
தாய்மொழி வழிக் கல்வியை மீட்டெடுப்போம்
மதவெறி அரசியலும் சேது சமுத்திரத் திட்டமும்
பாலின பாகுபாடும்
பெண்கள் மீதான வன்முறையும் சாதிய பாகுபாடும் வன்கொடுமைகளும்
 ஊடக அரசியல்
 படைப்பிலக்கிய அரசியல்
மாற்று பண்பாட்டை முன்வைத்து..
ஆகிய ஏழு தலைப்புகளில் அறிக்கைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டன. இந்த மாநாடு மிக முக்கியமான வரலாற்று ஆவணம். நேரிலும் எழுத்துக்களிலும் எதிர்க்கத் திராணியற்ற சமூக விரோத சக்திகள் தொலைபேசி வழியாக கொலை மிரட்டல்களில் வன்முறையை கையெடுத்தன. இத்தகைய மிரட்டல்களுக்கு நடுவே மக்கள் சக்தியைக் கொண்டு வெற்றிகரமாகத் தாம்பீகமாக கலை இரவுகளுடன் மாநாடு வெற்றிக் கண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்களின் பொற்காலமாகக் கருதப்படும் இந்த அமைப்பின் 40 ஆண்டுகள், கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது அதனொரு அங்கமாக இருப்பதில் ஒருவித பெருமிதம் நெஞ்சை அப்புகிறது. பண்பாடு கலை இலக்கியம் என ஆதரித்தும் கருத்துரிமை மறுப்பு, சமூக விரோதம், மக்கள் பாதிப்பு என அநீதிக்குப் புறம்பான யாதொன்றையும் உடனுக்குடன் களமிறங்கி நின்று போராடி வெற்றிக்கான கொடியை இதுவரை நிலைநாட்டியுள்ளதை இந்நூல் எடுத்தியம்புகிறது. இந்நூல் வெறும் பெருமைக்காகவோ பெயருக்காகவோ படைக்கப்படவில்லை ஒரு மாபெரும் இயக்கத்தின் இன்றியமையாமையை அதன் ஆகப் பெரும் வரலாற்றை, சமூகத்தை ஆட்டிப்படைத்தத் தீய சக்திகளுடன் போராடிய சரித்திரத்தை
இலக்கியத்திற்காக நான்;
இலக்கியமாக நான்;
இலக்கியவாதியாக நான்;
இலக்கியத்தோடு நான்..
என்று இலக்கியக் களமாக தமது கடமையை காலம் முழுவதிலும் நினைவூட்டவும் தத்துவமும் நடைமுறையும் தன் பயணத்தின் இரு தண்டவாளங்கள் என்கிற ஒர்மையுடனும் இயங்கி வரும் ஒரு அமைப்பின் வரலாற்று வாசிப்பு என்றே சிலாகிக்கலாம்.
இந்த அமைப்பு 40 ஆண்டுகளைக் கடந்து இன்றும் மக்களின் மனதிலும் சமூகத்தின் பார்வையிலும் வெற்றிகரமாக வாழ்வாங்கு வாழ்ந்து வருவதன் மகா ரகசியம் இதுதான்  அமைப்பிற்கும் தனிமனித படைப்பாளிக்கும் இடையிலான ஜீவனாக உறவைத் துல்லியமாக வரையறுத்துக் கொண்டிருப்பதே காரணம். இப்படியொரு வரலாற்று நூல் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதே தமுஎகசவின் தனிப்பெரும் பெருமை என்றே பெருமிதம் கொள்ளலாம். அப்படியொரு தொடர்ச்சியும் செறிவும் இந்த அமைப்பிற்கு உண்டு என்பதற்குச் சாட்சியாக இந்நூல் பல நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கப் போகிறது.
இந்நூல் இயக்கம் சார்ந்தவர்களுக்கான ஒன்று என்பதல்லாமல் வாசிப்பை கைகொள்ளும் அனைவருக்குமானதாகக் கருதலாம்.
ஒரு இயக்கம் என்ன செய்யும்… எதையெல்லாம் செய்து முடிக்கும்.. அதன் தனித்துவம் அதன் செயலூக்கம் எதுவரையில்..
 என்பதை அறிய உதவும் கால கண்ணாடியாகவே இந்த வரலாற்று ஆவணம் திகழ்கிறது.
தமுஎகசவின் வரலாற்றைக் கையிலேந்தி இலக்கியத்திற்கான படைப்பாளிகளுக்கான கலைகளுக்கான மக்களுக்கான வெளிச்சத்தை நோக்கிய பயணத்தை தொடர்வோம்.
        நன்றி.
– து.பா.பரமேஸ்வரி