அப்பாவின் முகங்கள் கவிதை – கண்ணன்
வீட்டினுள் ஒன்று
வெளியே வேறொன்று
வெளியே சிரித்த முகம்
வீட்டினுள் கடுத்த முகம்
கையிலே பணமிருப்பின்
அவரைப் போல் யாருமில்லை
மாதக் கடைசியில்
காலடிச் சத்தத்திற்கே
வீடே மௌனமாகும்
திண்ணையில் பேசுகையில்
கேட்டே விட்டேன் அப்பாவிடம்
‘பாசமே இல்லையாப்பா?’
அப்பா சொன்னது
அப்போது புரியவில்லை
பணமில்லாப் பொழுதுகளில்
இணையர் என்னைக் கேட்கும் வரை
‘ஒங்கள விட்டுட்டா நான்
யாருக்கிட்டப்பா
கோவப்படமுடியும்?’
இற்றுப்போதல் கவிதை – இரா. தமிழரசி
வழுக்கு நிலத்தில்
பற்றிய கரத்தைப்
பட்டென உதறிப்பிரிதல்..
உணர்வுப் பெருக்கில்
இதயம் பகிர்கையில்
அலைபேசி இணைப்பைச்
சட்டெனத் துண்டித்தல்…
‘சாப்டியா’ எனும் கேள்விக்கு
நாகரீகம் கருதியேனும்
எதிர்வினா வினவாதிருத்தல்… பொருட்களை நேசித்து
மனித மனங்களை
கசக்கித் தலைசுற்றி
தண்டவாளத்தில் எறிதல்…. வாழ்க்கைக்கான அர்த்தமென
இறுமாந்து இருப்போர்க்கு
சில மணித்துளிகளைக்கூட
கொடையளிக்காது மௌனித்தல்…
சுவர்களை இணைக்கும்
அறைக்கதவுகளை
அறைந்தறைந்து சாத்தி
இதயக்கதவை
இற்றுப்போக விடுதல்..
அன்றாடம் புகைவதைவிட
அக்கினியில் மூழ்கி
அடர்வனத்தின்
அமைதி தழுவ நிற்கலாம்
நிராதரவாக….!
யாழ் ராகவனின் கவிதை
பாவாடை நாடாவை இழுத்துவிட்டு
கருப்பி என விளித்துப்போகும்
சேக்காளி மேல்
வசைமாரிப்பொழிந்த காலம் உண்டு
கொஞ்சலினூடே மூக்கு வழித்தபடி
பெத்தவளே முணுமுணுத்த கருவாச்சிக்கு
உதடு பிதுங்க
முட்டிநின்றிருக்கிறது அழுகை
கல்லூரிக் கேலியில்
தார்ரோடு ஆகுகையில்
மேலும் இருண்டதுண்டு
அகமும் முகமும்
சகக்காரிகளோடான சண்டையில்
எவளோ உரசிய கரிச்சட்டி
இப்போதும் இதயத்தில் உருள்கிறது
நரைகளின் வாய்க்கு அவலான
பெண் பார்த்த படலத்தில்
அத்தனை வெறுப்பு கருப்பின் மீது
கூடல் பொழுதுகளில் உவமித்த கருமை
இரவைவிட கனத்த
ஞாபகத்தின் காட்டில் சுமை
காலத்தில் வாய்த்த
படையல் பொழுதொன்றில்
அத்தனைக் கருப்பையும்
மொத்தமாய்த் திரட்டி
என் உளக்குமுறலை ஒத்திருந்தது
ஐயானாரின்
ஓங்கிய கைஅரிவாள்