நூல் அறிமுகம்: படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி – து.பா.பரமேஸ்வரி
புத்தக வாசிப்பே முற்போக்கை மேம்படுத்தும்..
படைப்புகளே பகுத்தறிவைச் சீர்தூக்கும்..
வாசிப்பின் நீட்சியே எழுத்துக்கான முதிர்ச்சி..
என்கிற இலக்கிய அறம் மற்றும் சமூக அக்கறையின் நீட்சியாக உருவான அமைப்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 44வது பிறந்த தினத்தின் வாசிப்பு ஆர்வமும் எழுத்தின் மேல் தீவிரமும் கொண்ட 500 அக்குபங்சர் ஹீலர்களைக் கொண்டு 2019ஆம் ஆண்டு எழுத்தாளர் திரு ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் திரு.ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் திரு.லட்சுமிகாந்தன் ஆகிய எழுத்தாளுமைகள் இயக்கத் தூண்களாகக் நின்று வழிநடத்த தமுஎகச மாநில உறுப்பினர் திரு அ.உமர் பாரூக் அவர்களால் உருவான அறம் கிளை பல இலக்கியச் சந்திப்புகள், பயிலரங்குகள், தொல் எழுத்துப் பயிற்சி முகாம்கள், படைப்புகளைக் கொண்டாடும் நிகழ்வுகள், வரலாற்றுப் பயணங்கள் என அறம் கிளையின் இலக்கிய முன்னெடுப்புகள் என்பவை அளப்பரியது.
இதன் தொடர்ச்சியாக அறம் கிளையின் அடுத்தகட்டப் பயணமாக சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்கள் ஒவ்வொருவராகச் சந்தித்து நேர்காணல் செய்து அவர்களின் எழுத்து அனுபவங்கள், வாழ்க்கைப் படலங்கள், இலக்கியப் பயணங்கள், படைப்பு ஈர்ப்புகள், போன்றவற்றைத் தொகுத்து நூலாகப் பதிவு செய்ய முடிவெடுத்து அதற்கான ஆக்கபூர்வ முன்னெடுப்பை மேற்கொண்டது.
பாரதி புத்தகாலயத்தின் ஊக்குவிப்பிலும் மாநில நிர்வாகிகளின் வழிநடத்தலிலும் அறம் கிளை உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயற்கரிய முயற்சி குறுநூலாக செயல்வடிவம் பெற்றது. அதன் நீட்சியாகவே சிறு பகுதியாக சில எழுத்தாளர்களின் நேர்காணல்களைக் கொண்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளிவந்துள்ள நூல்களில் “படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி” என்கிற தலைப்பின் கீழ் படைப்பிலக்கித் தழுவலுடன் அறம் கிளை உறுப்பினர் திருமதி சாந்தி சரவணன் அவர்களால் எழுத்தாளர் திரு கா.சி தமிழ்க்குமரன் அவர்களின் நேர்காணல் தொகுப்பு சிறப்பான வடிவமைப்புடன் வெளியிடப்பட்டது.
ஒரு ஆகச் சிறந்த எழுத்தாளன், மக்கள் மத்தியில் பேசப்படும் கதைக்காரனாக அவரது படைப்புகள் பேசும் பொருளாகச் சிறக்கத் தம்மைப் பற்றியும் தமது கற்பனையில் தோன்றும் நிகழ்வுகளைப் புனைவுகளாக வடித்துக் கதைகளாக உருமாற்றுவது என்பது ஒரு உயிரற்ற உடலாகவே ஒவ்வொரு படைப்பும் திகழும் எப்போதும். நம்மைச் சுற்றிய மாந்தர்களை, அவர் வாழ்க்கையை உடனிருந்து கண்டுணர்ந்த அவலங்களை தூக்கிச் சுமந்த அனுபவங்களைப் பதிவு செய்வதே இலக்கியம்,அதுவே படைப்பு.அப்போதே படைப்புகள் வாழ்வாங்கு வாழும். மக்களிடமிருந்தே கதைகள் உருவாகிறது என்கிற முனைப்பை முன்னிறுத்தியே தமது படைப்புகள் உருவாகுவதாகத் தமது நேர்காணலில் குறிப்பிடும் திரு கா.சி தமிழ்க்குமரன் அவர்கள் பிறந்தது முதல் தம் கண்முன் விரிந்த கரிசல்காட்டு மாந்தர், தம்முடைய இளம் பருவத்து பால்யகால நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பச்சை பசுமையாகத் தம் நினைவுகளை ஆக்கிரமித்து நீக்கமற நின்றுவிட அந்தப் பசுமையே கதைகளாகக் கதைக் களங்கலாகத் தமது தொகுப்பை நிரப்பியுள்ளதாகக் கூறுகிறார்.
தாம் கடந்து வந்த வாழ்க்கைப்பாதைகள் அதில் நிறைந்துள்ள பிரச்சனைகள் சிக்கல்கள் பற்றி எழுதும் போதுதான் படைப்புகள் உயிரோட்டமாக இருக்கும். அஃதில்லையானால் அது செயற்கைத் தன்மையுடையதாய் இருக்கும் என்று தமது படைப்பின் கருக்கான விளக்கமளிக்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.
நகர வாழ்க்கை செயற்கைத் தன்மைக் கொண்டுள்ளது என்றும் தமது கிராமப்புறத்து கரிசல் நில மக்களின் இயல்புத் தன்மையே தமது கதைகளுக்கான உயிரோட்டம் என்றும் மேலும் அப்படியான விவசாயக் குடிகளே பெரும்பாலான கதைகளின் கதை மாந்தர்கள் என்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் சென்னம்பட்டி புதூர் அருகில் பிறந்து வளர்ந்த
திரு கா.சி தமிழ்குமரன் அவர்கள் சிறு பிராயம் முதல் கரிசல் மக்களின் மைந்தனாக வாழ்ந்து விவசாயத்தையும் விவசாய மாந்தர்களையும் தமது வாழ்வின் பெரும் பகுதியாகக் கடந்து வந்துள்ளார். அவரின் தந்தையார் கா. சின்னத்தம்பி அவர்கள்.. இலக்கிய ஆர்வம் மிக்கவர். கவிதை எழுதும் பழக்கம் கொண்டவர்.
விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற தமிழ்க்குமரன் அவர்கள் தொடர்ந்து அதே துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று ஆசிரியர் பயிற்சியும் முடித்துள்ளார். தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். இணையர் திருமதி சந்திரா நாகலாபுரம் ரெட்டிய பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
சிபி யூகி மற்றும் எழில் ரிதன் இரு மகன்கள்.1995 இல் அறிவொளி இயக்கத்தில் இணைந்து, 1997இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்ட கிளைகளுக்குத் தலைவராகவும் சிலவற்றிக்குச் செயலாளராகவும் பொருளாளராகவும் பயணித்து இயக்கத்துடன் சமூக அறத்தைப் பேணி வருகிறார்.
தமது பள்ளிக்கால அனுபவத்தைப் பகிரும் தமிழ்க்குமரன் அவர்கள் தமது பள்ளிக்கால ஆளுமையாகத் தமது வாழ்வின் பல இடங்களில் உத்வேகத்தைக் கூட்டி அனைவருக்கமான எடுத்துக்காட்டாக உச்சமாக முன்மாதிரியாகத் திகழ்ந்தத் தமது பள்ளியின் மேல்நிலைக் கல்வியின் விலங்கியல் பிரிவு ஆசிரியராக திரு செல்வநாதன் அவர்களைக் குறிப்பிடுகிறார். .
வகுப்பில் ஒரே ஒரு மாணவனுக்காகத் தம் நேரத்தை ஒதுக்கி பாடம் நடத்திய மாண்பையும் வகுப்பில் பல மாணவர்களின் கடவுள் சார்ந்தும் சாதி மதம் பற்றியுமான மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து பகுத்தறிவு வளரச் செய்த பகுத்தறிவுப் பாசுரமாக ஆசிரியர் திரு செல்வநாதன் திகழ்ந்ததாகவும் இன்றும் பள்ளிக்கால வகுப்பறை நினைவுகளாக ஒரு செல் இரு செல் பரிமாணம் மாற்றம் என்பது ஒரு நிகழ்வு என்கிற முற்போக்கையும், சுய சிந்தனைத்திறனையும் வளர்த்தவர் என தமது விலங்கியல் ஆசிரியரைப் பெரிதும் சிலாகித்துக் கொள்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.
தமது சிறு பிராய வாசிப்பனுபவத்தைப் பற்றி பேசும் அவர் தமது வாசிப்பின் முதல் பயணத்தைத் துவக்கி வைத்தவர் தமது தந்தையார் என்று குறிப்பிடுகிறார். தமது தந்தையார் சிறந்த கவிஞர் என்றும் கவிதைகள் படைப்பதில் நாட்டம் கொண்டவர் என்றும் அதேசமயம் புத்தக வாசிப்பு தந்தையிடமிருந்து வந்திருந்தாலும் சிறுகதைகளே தம்மை வெகுவாக ஈர்த்தன என்றும் கூறுகிறார். அதன்பொருட்டு தமது வாசிப்பு முற்றிலும் சிறுகதை எழுத்தாளர்கள் சார்ந்தே அவர்கள் படைத்த சிறுகதைகளை நோக்கியே நகர்ந்துள்ளதாகவும் கூறுகிறார்.
கல்கண்டு, குமுதம், ஆனந்தவிகடன் என துவங்கிய பால்யகால வாசிப்புப் பயணம் “மகாபாரதம் – வியாசர் விருந்து” புத்தகமே தமக்குப் பிடித்தமான முதல் புத்தகம் என்றும் கூறுகிறார்.
தொடர்ந்து தினமணி கதிர், ஆனந்த விகடன் இதழ்கள் கல்லூரிப் பருவத்தில் வாசிப்பைத் தக்க வைத்தன என்கிறார். ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த “அம்மா” சிறுகதை உணர்வுநெகிழ்ச்சி மிக்க எழுத்து என்றும் அவரை பெரிதும் பாதித்ததாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஓரிரண்டு நாட்கள் மனதை நெருடிய வண்ணம் இருந்ததாகவும் உணர்ச்சிப் பொங்கக் கூறுகிறார்.
எழுத்தாளர் கந்தர்வன் அவர்களின் “மங்களநாதர்” கதை வெகுவாக ஈர்த்ததாகவும் இந்த சிறுகதையை வாசித்தப் பின்பும் விருதுநகர் பெண்கள் மாநாட்டில் கந்தர்வன் அவர்கள் மேடையில் வாசித்தக் கவிதையொன்றின் மையத்தில்
“நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை”
என்கிற வரிகள் தமிழ்குமரன் அவர்களை வெகுவாகக் கவர்ந்ததாகவும் அதன்பின்பே கந்தர்வன் அவர்களின் மீது பெரும் மதிப்பும் ஈடுபாடும் பிடித்தமும் ஏற்பட்டதாக சிலாகித்துக் கூறுகிறார்.
எழுத்தாளுமைகள் கந்தர்வன், தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி ஆகியோரின் சிறுகதைப் படைப்புகளே சிறுகதை எழுதத் தூண்டியதாகத் தமது நேர்காணலில் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை அவர் கதை எழுதிய பின்பு அதை அப்போது தமுஎகசவின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பிலிருந்த அப்பாக்குட்டியிடம் காண்பித்து இரவு வெகுநேரம் வரை அந்தக் கதையைப் பற்றிய விவாதம் தொடர்ந்ததாகவும் அப்பாக்குட்டி அவர்கள் தமிழ்க்குமரன் அவர்களைத் தொடர்ந்து எழுதும்படி ஊக்கப்படுத்தியதாகவும் கூறி புளங்காகிதம் கொள்கிறார். தாம் எழுதிய சிறுகதைகளை எழுத்தாளுமைகளின் மத்தியில் விரியப்படுத்தத் தயக்கமும் பயமும் இருந்ததால் தாமே வெகுகாலம் வரை அவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகவும் கூறுகிறார்.
அடுத்தடுத்த சிறுகதைகளின் பிரசுரத்தில் பத்திரப்படுத்திய கதைகளை வெளியிட்டதாகக் கூறுகிறார்.
அப்பா குட்டி அவர்களின் உந்துதலிலும் அறிவுரையிலும் தமது முதல் சிறுகதையை ஆர்வக் கோளாறால் பெயரிட மறந்த நிலையில் ‘இந்திய ஜனநாயக மாதர் சங்கம்’ இதழுக்கு அனுப்பியதாகவும் அதற்கு எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் அந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து “முரண்” என பெயர்சூட்டி இதழில் வெளியிட்டதாகவும் அதுவே அவரின் முதல் சிறுகதை வெளியீடு என்றும் கூறி பரவசமடைகிறார். நமது பிள்ளைக்கு சான்றோர் பெயர் வைப்பது போல என் சிறுகதைக்கு எழுத்தாளுமை ஒருவரின் பெயர் சூட்டல் பெரு மகிழ்ச்சி அளித்ததாகக் கூறி புளங்காகிதம் கொள்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.
அடுத்த சிறுகதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரான திரு எம். கே.ராஜா அவர்களின் உந்துதலில் மீனவ சமூகத்தைப் பற்றியக் கதையாக “பாடு” சிறுகதை ‘மகளிர் சிந்தனை’ பத்திரிக்கையில் வெளிவந்துள்ளதாகவும், தொடர்ந்து செம்மலர் இதழில் “பாடுபட்டு” சிறுகதை வெளிவந்ததையும் தமது நேர்காணலில் பகிர்கிறார். இவ்வாறே தமிழ்க்குமரன் அவர்களின் சிறுகதை பயணம் தமிழ் இலக்கிய உலகில் மெல்ல மெல்ல பவனி வரத் துவங்கியது.
கல்லூரிப் பருவத்தில் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற தமிழ்க்குமரன் அவர்களுக்கு தமது அண்ணன்களான தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி அவர்களின் சிறுகதைகள் வெளிவருவதைக் கண்டு தாமும் சிறுகதை எழுத வேண்டும் என்கிற உத்வேகமும் ஆர்வமும் எழ சிறுகதைகள் எழுதத் துவங்கியதை நினைவுக் கூர்கிறார். இதுவே அவரின் சிறுகதைப் படைப்பிற்கான முதல் வித்து என்றும் கூறி பெருமிதமும் கொள்கிறார்.
புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், தமிழ்ச்செல்வன், உதயசங்கர், மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன், சாத்தூர் லக்ஷ்மணப் பெருமாள், கி ராஜநாராயணன் என பல எழுத்தாளர்களின் படைப்புகள் சிறுகதைகள் தமக்குள் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இவர்கள் அனைவரும் தாம் வாழ்ந்த மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் மனதிற்கு மிக நெருக்கமாக எழுதுபவர்கள் என்றும் இப்படியான எழுத்தாளுமைகளின் வழிக்கொண்டே சிறுகதை எழுதும் நாட்டமும் வேகமும் கூடியதாகச் சிலாகித்துக் கொள்கிறார்.
எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் பற்றிக் கூறுகையில் தமிழ்ச்செல்வன் அவர்கள் இணையருக்கு மிகவும் மரியாதை அளிப்பவர் என்றும் தமது இணையரைச் சமமாக பாவிக்கும் குணம் கொண்டவர் என்றும் ஒரு முறை தமுஎகச மாநாட்டு விழாவிற்கு வந்திருந்த பொழுது தமிழ்க்குமரன் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த போது,
“சமைக்கத் தெரியுமா?” என்று தமிழ்க்குமரன் அவர்களை தமிழ்ச்செல்வன் அவர்கள் கேட்க “அண்ணா சோறு மட்டுமே சமைப்பேன் குழம்பு வைக்கத் தெரியாது.” என்றார் தமிழ்க்குமரன் அவர்கள். “எல்லாம் ரொம்ப ஈசி, உப்பு புளி காரம் இது மட்டும் சரியா இருக்கனும் அவ்வளவுதான்.” என்று தமிழ்ச்செல்வன் கூறியதாக அண்ணணுடனான தமது நினைவுகளைப் பகிர்கிறார். அண்ணனிடமிருந்து சமையல் கலைக் கற்ற அனுபவத்தையும் கூறி மகிழ்கிறார்.
தமது அண்ணன் அவர்கள் கற்பித்த குடும்பத்தின் பாலியல் சமத்துவத்தைப் பகிர்ந்தததுடன் தாமும் தமது இணையர் இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலையை இருவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டுச் செய்வதாக பெருமிதத்துடன் கூறி மகிழ்கிறார்.
ஆண் பெண் என்கிற பாலியல் வேற்றுமைப் பாராட்டுவது அர்த்தமற்றது என்றும் ஆண்களும் பெண்களும் சமமாக இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்கிறார்கள், அதனால் உடல் ரீதியாக Weaker sex என்று சொல்லப்படும் பெண்களைக் காட்டிலும் ஆண் தான் அதிகமாக வேலை செய்ய வேண்டும் எனவும் பாலியல் சமத்துவத்தைக் குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய கேள்வி ஒன்றில் வலியுறுத்துகிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.
தற்கால சமூகத்தின் பெண்களின் நிலைப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், இன்றைய பெண்களைப் பற்றியான அவரது கருத்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. சில பெண்கள் கணவனுக்கும் குடும்பத்திற்கும் அடக்கமாகத் தனக்குள்ளே ஒரு வலையை உண்டாக்கிக் கொண்டு எப்போதும் குடும்பத்தைச் சார்ந்தச் சார்பு நிலையிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர், மற்றொரு புறம் பார்க்கையில் சில பெண்கள் ஆண்களுக்கு இணையான சுதந்திரம் என்கிற பெயரில் எல்லையை மீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிற பெண்களின் மீதான இரு வேறுபட்ட கருத்துக்களை முன் மொழிகிறார் தமிழ்க்குமரன் அவர்கள். கடவுள் பற்றிய ஒரு கேள்வியில் அவர் கருத்து யாதெனில், கடவுள் என்பவர் பெரும்பாலானோரின் எண்ணத்தில் வாழ்கின்ற பிம்பம் என்றும் மக்களை நல்வழிப் படுத்தவே கடவுள் என்கிற பிம்பத்தை மக்களிடையே உருவாக்கினர் என்றும் சிவன் ஆதிக்கம் மிக்க கடவுள் மரியாதைக்குரியவர், முருகன் ஐயப்பன் பெருமாள் வயதில் சிறியவர்கள் அதனால் மக்களுக்கு அந்தக் கடவுள்கள் மீது ஈர்ப்பும் ஈடுபாடும் அதிகம் என்றும் உரிமையுடன் அவர்களைப் பெயர்ச் சொல்லி அழைத்து வணங்க ஏதுவாக இருக்கிறது என்கிற கடவுள்கள் பற்றிய அவரின் பார்வை வேடிக்கையாகவும் அதேசமயம் முற்றிலும் யதார்த்தமாகவும் மக்கள் பார்வையில் ஏற்றுக் கொள்ளும் படியாகவும் இருந்தது.
கிராமப்புறங்களில் விவசாயத்தின் விளைச்சல் பொருத்தே மக்கள் சாமிக்கு வழிபாடு நடத்துகின்றனர் என்றும் அமோக விளைச்சலின் சமயம் கிடாவெட்டி வழிபடுவதும் விளைச்சலில் சுணக்கம் ஏற்படும் வருடங்களில் “சாட்டுப்பொங்கல்” வைத்து எளிமையாக வழிபடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.
கிராமப்புறங்களில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கடவுளாகத் தங்கள் மூதாதையர்களை காவல் தெய்வங்களாக வழிபடும் வழக்கம் கொண்டுள்ளதைத் தமது இந்த கேள்வியில் குறிப்பிட்டு விளக்கிக் கூறுயுள்ளார்.
பிராமணர்களின் சாஸ்திர வழிபாடே பிந்தைய காலங்களில் முருகன் பெருமாள் போன்ற தெய்வங்களின் வழிபாடுத் துவங்கியது என்றும் ‘மனிதனுடைய மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான் வழிபாடு,’ என்றும் ‘கும்பிட்டு மட்டும் இருந்தால் போதுமா நமது அன்றாட வாழ்வாதாரப் பணிகளைச் செய்வதே இறைவழிபாடு,’ என்றும் வழிபாட்டைப் பற்றிய அநேக கருத்துக்களை முன்வைக்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள். அனைத்தும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் படியான முற்போக்குக் கருத்துகள். மேலும் கடவுள் இல்லை என்று சொல்பவனை நம்பலாம் நான் தான் கடவுள் என்று சொல்பவரை நம்பவே கூடாது அவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்கிற இன்றைய கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றும் போலி சாமியார்களைப் பற்றி சமூகம் முன்பு தெளியப்படுத்துகிறார். இவர்கள் மக்களை மதம் பெயர் சொல்லி ஏமாற்றும் இடைத்தரகர்கள் என்று சாடுகிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் கோவிலுக்கு உள்ளேயே வைத்து குழந்தையைப் பலாத்காரம் செய்த போது கடவுள் அங்கு இருந்தாரா? என்கிற அவரின் கேள்வி பெரும் சர்ச்சசைக்குரியது. கோவிலுக்குள் கடவுள் உண்டு என்கிற மூடநம்பிக்கையை முற்றிலும் தகர்த்தெறிகிறது சிந்திக்கவும் வைக்கிறது.
கலையும் இலக்கியமும் நதிக்கரை ஓரமாகத் தான் பிறந்தன என்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள். இதற்கான விளக்கத்தை விவரிக்கையில் நதிக்கரை ஓரங்களில் வாழ்க்கைத் தேவைகள் நிறைவு பெறுகின்றன. வாழ்க்கைத் தேவைக்களும் வாழ்வாதாரத்தின் அடிப்படைகளும் பூர்த்தி அடைந்த நிலையில் கலையும் இலக்கியமும் வெகு இயல்பாக மனிதர் மத்தியில் தோன்றும். வாழ்க்கைப்பாட்டிற்கே வழியற்ற பாலைவனப் பகுதிகளிலும் கரிசல் காடுகளிலும் கலையும் இலக்கியமும் எண்ணங்களை அசைக்காது. வாழ்க்கை தேடல் முடிந்த பின்பே இலக்கியத் தேடல் தொடங்கும் என்கிற தமிழ்க்குமரன் அவர்களின் கருத்து இலக்கியவாதிகளும் கலைஞர்களும் உருவாகும் நிலம் சார்ந்த யதார்த்தத்தை வெகு இயல்பாக எடுத்துரைத்துள்ளது சிந்திக்க வேண்டிய ஒன்றே. அரசியலைப் பற்றியதொரு கேள்வியில் தமது கருத்துக்களை முன்வைக்கும் தமிழ்க்குமரன் அவர்கள் அரசியலற்ற இலக்கியம் என்பது மக்களுக்கான இலக்கியமாக இருக்காது, ஏதாவது ஒரு அரசியல் இல்லாமல் ஒரு சிறு கதையோ நாவலோ கவிதையோ படைக்க முடியாது. கண்ணுக்குத் தெரியாமல் ஒரு நுண் அரசியல் அவற்றுள் ஒளிந்துக் கிடக்கும் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
படைப்பிற்குள் அரசியலின் சாயலும் உள் புகுதலும் தவிர்க்க முடியாத ஒன்று . அதேபோல் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நிற்கும் அமைப்பும் இயக்கமும் இன்றியமையாதது என்று வலியுறுத்துகிறார். கலை இலக்கியவாதியாக ஒரு பிரதமருக்குக் கடிதம் எழுதினால் கூட ‘Anti Indian’ என்று வழக்கு பதிவுச் செய்யப்படுகிறது. திரைப்படத்துறையில் இருக்கும் இயக்குனர் மணிரத்னம் நடிகை ரேவதி போன்றோர் மீதான வழக்கைச் சுட்டிக்காட்டி இயக்கத்தின் ஆதரவையும் அமைப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.மேலும் ஒரு குறிப்பிடத்தக்கச் சம்பவத்தை எடுத்துரைக்கும் தமிழ்க்குமரன் அவர்கள் தமுஎகச இயக்கத்தின் செயல்பாட்டும் அமைப்பின் தேவையும் என்பது எழுத்தாளர்களுக்கு இன்றியமையாதது என்றும் எழுத்தாளனுக்கு இயக்கம் எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தமது இந்த நேர்காணலில் பதிவிடுகிறார்.
நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நினைவுகூறுகையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் “மாதொருபாகன்” என்ற நாவல் எழுதிய போது நான்கு வருடங்கள் கழித்து திருச்செங்கோடு கோயிலை இழிவுபடுத்திப்படுத்தியதாகவும் சாமியைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் புகார் செய்து கலெக்டர் முன்பு எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைத்தனர். பெருமாள் முருகன் அவர்கள் மனம் தளர்ந்த நிலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டார். அப்போது பொறுப்பில் இருந்த தமுஎகச தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தலையிட்டு வழக்குப்பதிவுச் செய்து வாதாடி பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தீர்ப்புக் கிடைக்கச் செய்தார். அதன் பின்பே பெருமாள்முருகன் மீண்டும் எழுதத் தொடங்கினார். அமைப்பே சோர்ந்து போன எழுத்தாளனை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் எழுத்துலகில் பிரவேசிக்கச் செய்தது. அதனால் அமைப்போ இயக்கமோ இலக்கியவாதிக்கு அவசியம் என்கிற இயக்கம் சார்ந்த இந்த சம்பவத்தைப் பதிவிட்டு இயக்கத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ளது சிறப்புக்குரியது. தமுஎகச அமைப்பின் சிறப்பைச் சுட்டிக்காட்டும் இந்த நிகழ்வு ஆகச்சிறந்த எழுத்தாளனின் எழுத்தும் மதிப்பும் சமூகதீவிரவாதிகளின் முன்பு தாழந்திடாது உயர்த்தும் கை எங்கருந்தும் ஓங்கும் என்பதற்கான ஒரு காலக்கண்ணாடி.
சாதி அரசியல் பொருளாதாரம் கலந்தக் கலவை தான் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை நிர்ணயம் செய்கிறது என்றும்,
சாதி பெயரிலிருந்து நீக்கி ரத்தத்தில் கலந்துள்ளது என்ற கருத்து இன்றைய சமூக சாதியக் கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு சாதியற்ற பதிவு எந்த விதத்திலும் உதவாது அவனுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போகும், வாழ்வாதாரம் உயர்ந்தவனுக்கு சாதி என்கிற அடையாளம் தேவையில்லை. அதே சமயம் அதே இனத்தில் கீழ்மட்ட மக்களுக்கு சாதி என்கிற அச்சாணி அரசின் சலுகைகளை அடைவதற்குத் தேவையாக உள்ளது .சமூக ஏற்றத்தாழ்வுகள் சாதியின் பங்கையும் கீழ்த்தட்டு மக்களுக்கு சாதி பிரிவின் பதிவால் வாழ்வாதாரத்திற்கான அவசியத்தை நிலைநிறுத்தும் என்ற அரசாங்கத்தின் சமூகக் கட்டமைப்பை எடுத்தியம்புகிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.
அறிவொளி இயக்கத்தில் தம்மை இணைத்திருந்த தமிழ்க்குமரன் அவர்கள் அறிவொளி இயக்கத்தில் கல்வி கற்க மக்கள் கொண்ட ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வெகுநேரம் கிராமங்களில் கல்விப் பயில அவர்கள் காத்திருந்தத் தருணங்களையும் அறிவொளி இயக்கப் பாடல்களைப் பாடிய கணங்கள் அங்குள்ள பெண்கள் கண்கலங்கிய உணர்ச்சிப் பெருக்குகளையும் இரண்டு வருட காலங்களாக அறிவொளி இயக்கத்தில் பங்குக் கொண்டுப் பயணித்த நாட்களையும் பெருமிதத்தோடு நினைவுக் கூர்கிறார்.
மேலும் “கணையாழி” இலக்கிய பத்திரிக்கையில் தமிழ்க்குமரன் அவர்களது சிறுகதை ஒன்று தேர்வுப் பெற்று ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றத் தருணம் மகிழ்ச்சியின் உச்சம் என்று உச்சிமுகர்கிறார்.
தமிழ்க்குமரன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு “மாயத்திரை” , இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாக “ஊமைத்துயரம்” மூன்றாவது தொகுப்பாக “பொலையாட்டு” பிரசுரமாகியுள்ளதாகவும் நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இதில் “ஊமைத்துயரம்” சிறுகதைத் தொகுப்பிற்கு 2016ஆம் ஆண்டின் சிறந்த புத்தகமாக “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்” மற்றும் “கலை இலக்கியப் பெருமன்றம்” இணைந்து சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக “தனுஷ்கோடி ராமசாமி” விருது வழங்கியும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் மாணவர்களுக்குக் கடந்த நான்கு வருடங்களாகப் பாட நூலாகவும் சிறப்புப் பெற்றுள்ளது என்றும் “நெருஞ்சி” என்கிற இலக்கிய அமைப்பு “பொலையாட்டு” புத்தகத்தைச் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத் தேர்வு செய்ததையும் உளம் மகிழ பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து இப்பொழுது “கடூழியம்” என்கிற நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.இத்துடன் இவரது இலக்கியப் பயணம் நின்றுவிடவில்லை ..
சாத்தூர் லக்ஷ்மண பெருமாள் அவர்களின் கதையால் ஈர்க்கப்பட்டு 11 நிமிடங்களை மட்டுமே கொண்ட “மருவாதி” என்கிற குறும்படம் ஒன்று “குடி குடியை கெடுக்கும்” சில சமயங்களில் ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும்” என்ற தலைப்பை மையமாகக்கொண்டு உருவாக்கியுள்ளதையும் நம்முடன் பகிர்ந்துள்ளார்.இதுவே அவரது முதல் குறும்படம் என்றும் கூறுகிறார்.
தமது படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததோடு கடமை நிறைவடைந்ததாகக் தேங்கி விடாமல் தம்முடன் பயணிக்கும் சக தோழர்களுக்காக விருதுநகர் மாவட்ட தமுஎகச 14வது மாநாட்டில் விருதுநகர் மாவட்ட படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமது சகதோழர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் சிறுகதைத் தொகுப்பான “மருளாடி” நூல் வெளியிடப்பட்டதையும் அந்தத் தொகுப்பில் தமது ஒரு சிறுகதையும் இடம்பிடித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
பல புதிய எழுத்தாளர்களின் முதல் கதை அரங்கேறிய மேடை என்ற பெருமை இந்த தொகுப்பிற்கு உண்டு என்று பெருமிதம் கொள்கிறார்.இதுவே அவருக்கு பெரும் மனநிறைவைத் தந்ததாகவும் கூறுகிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.
சாதாரண மனிதர்களுக்கு இலக்கியம் என்ன செய்து விட முடியும் என்கிற கேள்விக்கு சிலப்பதிகாரத்தில் இருந்து தான் அரசர்களைத் தவிர்த்து சாதாரண மனிதர்களின் வாழ்வியல், சமூகத்தின் சூழல் பற்றியச் செய்திகள் நமக்குத் தெரியவந்தது என்றும் மனிதன் மக்கள் தலைவனாக இருந்தாலும் அவனின் வழி காட்டலாக இருந்தாலும் இலக்கியத்தின் வாயிலாக அதனைப் பார்க்கிறான். இலக்கியம் புரிதல், படைப்புகள் எல்லாம் சாதாரண மக்களைப் பார்த்து கேள்விப்பட்டு அனுபவத்தில் உணர்ந்ததைத் தானே இலக்கியமாகப் படைக்கிறான் என்று கேள்விக்கு பதில் அளிக்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள். புனைவிலக்கியத்தைப் பற்றிய கேள்வியில் அவர் பதிவு, புனைவு என்பதே கற்பனை தான். கற்பனை வளம் தான் எழுத்தாளரின் ஆயுதம் என்றும், அந்த கற்பனை தான் “பொன்னியின் செல்வன்,” “வேள்பாரி” போன்ற படைப்புகள் படைக்கக் காரணமாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.
அண்டனூர் சுரா அவர்கள், திருச்சி கலைச்செல்வி அவர்கள், விருதுநகர் பாண்டிய கண்ணன்அவர்கள்,
“வால் யுவ புரஸ்கார்” விருது பெற்ற கோவில்பட்டி சபரிநாதன் அவர்கள் ஆகியோர் தமிழ்க்குமரன் அவர்களைக் கவர்ந்த இளம் படைப்பாளிகள் என்பதையும் இளம் படைப்பாளர்களைப் பற்றிய கேள்வியொன்றில் பதிவிட்டுள்ளார்.
ஒரு உயிர் வாழவேண்டும். பிறந்து வாழ்ந்ததற்கான ஒரு தடத்தை விட்டுச் செல்லவேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கும் தமிழ்க்குமரன் அவர்கள், பெற்றோர்களின் வாழ்க்கை பிள்ளைகளின் வாழ்க்கையைச் சார்ந்தே இருக்கும். நம் பிள்ளைகள் நம் கண்களுக்கு முன் அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றம் தான் நம் வாழ்க்கையின் நிறைவு என்றும், வளமான எண்ணங்களைக் கொண்டு நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் சிறப்பு என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி முடிக்கிறார் தமிழ்குமரன் அவர்கள். கரிசல் நில மக்களின் வாழ்வையும் அவர்களின் பாடுகளையும் மக்கள் பரப்பில் தமது படைப்பின் வழியாக விரிவுபடுத்திய தமிழ்குமரன் அவர்களின் இந்த நேர்காணல் பதிவு அக்கு ஹீலர் திருமதி சாந்தி சரவணன் அவர்களால் இயல்பான சமூகத்திற்குத் தேவையான கேள்விக்கணைகளின் தொடு முனையில் நேர்காணல் படைக்கப்பட்டுப் படைப்பாக வெளிவந்தது பாராட்டிற்குரியது.
சமூகம் சார்ந்தும் குடும்பம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் எண்ணற்ற கேள்விகளைத் தொடுத்து அந்த கேள்விகளுக்கான கருத்துகளையும் மிக எளிமையாக இலகுவான மொழியில் எள்ளலற்ற பதில்களைக் கொண்டு விளக்கியுள்ளார் தமிழ்க்குமரன் அவர்கள். கடவுள் பற்றியத் தமது வேறுபட்ட பார்வையையும் கருத்துக்களையும் முன் வைக்கும் தமிழ்ககுமரன் அவர்கள் அதே சமயம் ஜாதி மதம் பற்றியும் தமது முற்போக்குச் சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார். சாதியத்தைச் சமூகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை ஒருபுறம் ஏற்றுக்கொண்ட போதிலும் தாழ்த்தப்பட்ட இனத்தின் கீழ் மட்ட மக்களுக்கு சாதி என்பது அரசின் சலுகைகளை அடைவதற்குத் தேவை என்கிற சமூக பொதுவான யதார்த்தத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பெண்ணியத்தைப் போற்றியும் குடும்பத்தின் சமத்துவப் பாலினத்தைப் பறைசாற்றவும் தயங்கவில்லை. கணவன் மனைவி இருவரும் சமமாகப் பாவிக்க வேண்டிய சமபாலினத்தவர் என்றும் வீட்டு வேலையை சமமாகப் பகிர்ந்து கொள்வதே சிறப்பு என்கிற சமத்துவத்தையும் தனது நேர்காணலின் மூலம் சமூகத்தின் முன் பதிவிடுகிறார்.
கற்பனையாகப் பல புனைவுகள் படைக்கப்பட்டாலும் தாம் கடந்து வந்த மனிதர்களையும் தம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கிராமத்து விவசாய குடிகளைப் பற்றியப் படைப்புகளைப் படைப்பதே தமது படைப்பிற்கான உயிரோட்டம் என்றும் கூறுகிறார். அவர் கடந்து வந்த கவர்ந்து நின்ற பல எழுத்தாளர்கள் இருப்பினும் அவர்களையும் அவர்களின் படைப்புகளையும் தமது தடத்திற்கான உந்துதலாகக் கொண்டிருந்தாலும் அவரது படைப்பிற்கென ஒரு தனி பாணி என்பது தம் சிறு பிராயம் முதல் ஒன்றி உறவாடிய கரிசல் நில மக்களின் வாழ்க்கைப் பாடுகளே..
ஒவ்வொரு கேள்விக்குமான தமது தீர்க்கமான பதிலை ஆழமான தெளிவான விளக்கத்துடன் விளக்கியுள்ளது பாராட்டிற்குரியது. சாந்தி சரவணன் அவர்களின் கேள்விகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே நேர்த்தியுடன் கூடிய ஒருங்கிணைப்பில் தொடர்கதையாக தொகுத்திருப்பது சிறப்பு.
எழுத்தாளர் கா.சி. தமிழ்குமரன் அவர்களின் சிறுகதைப் பயணம் இத்துடன் நின்று விடாமல் வெவ்வேறு தளங்களைத் தொட்டு நாவல்களாக, கட்டுரைத் தொகுப்புகளாக, பல படைப்புகளாகத் தமிழ் இலக்கிய உலகை வலம் வர எனது உளமார்ந்த வாழ்த்துகள்.
நூல் : படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி
நேர்காணல் : கா.சி.தமிழ்க்குமரன்
சந்திப்பு : சாந்தி சரவணன்.
விலை : ரூ.₹ 60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
– து.பா.பரமேஸ்வரி