நூல் அறிமுகம்: தமிழ்மதி நாகராசனின் ‘சொல்ல மறந்த காவியம்’ – ஜனநேசன்

நூல் அறிமுகம்: தமிழ்மதி நாகராசனின் ‘சொல்ல மறந்த காவியம்’ – ஜனநேசன்



வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் “மருதுகாவியம்”
ஜனநேசன்

வரலாறு என்பது கடந்த காலத்தோடு முடிந்து போவதல்ல ! அது இனி வருங்காலத்தையும் ஆற்றுப்படுத்துவது; அதனால் தமிழில் பொருத்தமாக வரலாறு என்று மொழிகிறோம். சிவகங்கைச் சீமையின் வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள் வரலாற்றை மறுவாசிப்புக்குட்படுத்தி தற்காலத்துக்குத் தேவையான கருத்தை உணர்த்தும் விதமாக “சொல்லமறந்த காவியம் “ என்ற பெயரில் கவிஞர் ‘ தமிழ்மதி’ நாகராசன் புதுக்கவிதை நடையில் காவியமாக படைத்துள்ளார்.

கவிஞர் தமிழ்மதி நாகராசன் புதுவயலில் அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி ஒன்றில் முப்பதாண்டு காலம் தமிழாசிரியராகப் பணியாற்றி ,தமிழ்ப்பற்றும், கற்கும் ஆரவத்தையும் மாணவரிடையே சிற்றிதழ் மூலமும், ஓரங்க நாடகங்கள் மூலமும் தூண்டியவர். இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக காரைக்குடி தமுஎகச கிளை பொறுப்புகளில் பணியாற்றி வருபவர் .கவிதை யாப்பு மரபும் அறிந்தவர் . கவிஞர்கள் கண்ணதாசன் வாலியின் கவிபாணிகளை உள்வாங்கி , அவர்கள் வழியில் புராண காவியங்களை கவிதை காவியமாக்காமல் சிவகங்கை மண்ணின் மைந்தர்களை , அவர்கள் நாட்டுக்கு விதைத்த தியாகத்தை நாட்டுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் விதமாக இக்கவிதையிடை வசன காவியத்தை படைத்துள்ளார்.

வணிகர்களாக நுழைந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஏகாதிபத்தியம், இங்குள்ள சிறு, குறுநில மன்னர்களை, தஞ்சை, புதுகை, இராமநாத புரம், பாஞ்சாலங் குறிச்சி, எட்டயபுரம் பாளையக்காரர்களை, சூழ்ச்சியால் ஒன்றுசேர விடாது பிளவுபடுத்தி, அவர்களை கப்பம்கட்ட வைத்தனர். இதே பானியில் இந்திய துணைக் கண்டத்தையே அடிமைபடுத்தி சுரண்டினர். இந்நிகழ்வுகளை இக்காவியத்தில் வாசிக்கும்போது, இன்றுமேற்கு இந்திய கம்பனிகளோடு கள்ளக்கூட்டு கொண்டு, இனம், சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தி, அனைத்து சுயாட்சி நிறுவனங்களை சீர்குலைத்து, கள்ளக்கூட்டு பெரும்வணிக நிறுவங்கள் மூலம் பெரும்பான்மை செய்தி ஊடகங்களையும் கைப்பற்றி இந்திய மக்களாட்சியை கேள்விக்குள்ளாக்கும் பாஜகவின் நடைமுறைகள் நம்முன் தோன்றி எச்சரிக்கிறது.

வெள்ளையர்களின் சூழ்சிகளை எதிர்கொண்டு வெல்ல, தலைமறைவான வேலுநாச்சியார், விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர் மூலம், மைசூரை ஆண்ட ஹைதரலி, திப்பு சுல்தான் உதவியோடு படை திரட்டி வெள்ளையரை வீழ்த்தி விரட்டுவது நமக்குள் எழுச்சியை உணர்த்துகிறது. இங்குதான் இப்படைப்பின் நோக்கமும் வெல்கிறது.

எளிய கவிநடையில், எதுகையும், மோனையும், இயைபும், முரணும் இணைந்து துள்ள, வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுகிறது தமிழ்க் . காவிய மரபை ஒட்டி, காதலும், வீரமும், விவேகமும், தீரமும் தக்க அளவில் கலக்கும் பொருட்டு,வேலுநாச்சியார், முத்துவடுகர், மருதிருவர், கட்டபொம்மன் போன்ற வரலாற்று மாந்தர்களோடு, குயிலி, கலையரசி, முத்துக்காளை, கதிரவன், இன்பரசி போன்ற கற்பனை பாத்திரங்களையும் கவித்துவத்தோடு உலவவிட்டுள்ளார் . சின்னமருது- முத்தம்மை, முத்துக்காளை- கலையரசி , கதிரவன்- இன்பரசி காதல் இணைகள் , வீரம்விளையும் பூமியின் காதலின் இருப்பையும் கவித்துவத்தோடு எடுத்துரைத்து காதலும் வீரமும் காவிய மரபென்று நிறுவுகிறார்.

‘ஆரணங்கு நாச்சியாரை/ வீரணங்காய் வளர்த்திருந்தார் சேதுபதி ‘/ என்று அறிமுகமாகும் வேலுநாச்சியார், வீரமும், ஈரமும், விவேகமும், அரசியல் தந்திரமும் அறிந்தவராய் இயங்குவதை இக்காவியம் முழுக்கக் காணலாம்.

இதேபோல மருதிருவரை , கவிஞர் அறிமுகம் செய்கையில் , ‘வாளோடு இவர்கள் / வளரியும் வீசுவர்/ எறிந்த வளரி / எதிரிகளை வீழ்த்திவிட்டு / இவர்களிடமே சேருமென்று/ எல்லோரும் பேசுவர் !/ ‘ இப்படி அறிமுகமாகும் மருதிருவரின் வீரமும்,சீர்மையும், நேர்மையும்,சீலமும், வல்லமையும் , வள்ளன்மையும் காவியத்தில் மிகையின்றி,வரலாற்றுப் பிழையின்றி சொல்லப்பட்டுள்ளது.

கோபால் நாயக்கரோடு வேலுநாச்சியார் ,திண்டுக்கல் கோட்டை யில் மைசூர் மன்னன் ஐதர்அலியை சந்திக்கும்போது உருது மொழியில் ,தன் நாட்டுக்கும், மக்களுக்கும் வெள்ளையரால் நேர்ந்த துரோகத்தை உருக்கமாக எடுத்துரைக்கிறார். உடனே ஐதரலி, ”உங்கள் மண்ணின் / உரிமைப்போருக்கு / என் உதவி/எப்போதும் உண்டு / இன்று முதல் நீ / என் சகோதரி/ இனி- இது உன் வீடு !/ “ என்று மொழியக் கேட்கையில் வாசிப்பவருக்கு மெய் சிலிர்க்கிறது.

இவை தவிர இன்னும் சில கவிக்கண்ணிகள் நம்மை இக்காவிய உணர்வோட்டத்தில் பிணைக்கிறது.

வேலு நாச்சியாரின் கூற்றாய் .’கும்பினிகளின் / குடல் உருவ.. /சாதி மதம் கடந்து /ஒன்றிணைவோம் /… இருட்டைக் குறைகூறி / இடிந்து போவதால்/ என்ன பயன் ?/ விளக்கை ஏற்றுவதன்றோ / விவேகம் ! /…. முடியும் என்பது/தன்னம்பிக்கை/ முடியுமா? என்பது / அவநம்பிக்கை / முடியாது என்பது / மூட நம்பிக்கை !/ ‘

இன்னோரிடத்தில் முத்துக்காளையின் மொழியில் ; சர்க்கரைக் காதல் என்ன/ சக்கர வியூகமோ ?/ நுழைவது எளிதாயும் / வெளியேறுவது/ வெகு அரிதாயும்/ இருக்கிறதே…! /’

வெள்ளை கலக்டரிடம் பெரியமருதுவின் குரலில் ; ‘மறவர் சீமை / வானம் பார்த்த பூமிதான் / ஆனால் / மானம் காத்த பூமி ! / எங்கள் கரங்கள் / வாள் பிடிக்குமே அன்றி/ வால் பிடிக்காது ! ‘

இதே போல் சின்ன மருதுவின் ‘ஜம்புத்தீவின் பிரகடனம் ‘ திருவரங்கக் கோயில் கதவிலும் , திருச்சி மலைக்கோட்டைக் கோயில் கதவிலும் எழுதி ஒட்டி வெள்ளையருக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவைக் கோரியது மிக முக்கியமானது.

வெட்டுடைகாளி கோயில், திருப்பத்தூரில் மருதிருவர் தூக்கிலிடப்பட்ட இடம், காளையார்கோயிலில் அவர்களது சமாதி, சங்கரபதி கோட்டை போன்ற படங்களுடன் இந்த வரலாற்று மறுவாசிப்பு கவிதையிடை வசன காவியம் எழுத உதவிய 17 சான்று நூல்களின் பட்டியலையும் இணைத்துள்ளார்.

பதிப்பாளர் கவிஞர் செயம்கொண்டான், நல்லாசிரியர் சேவு. முத்துக்குமார், தமுஎகச சிவகங்கை மாவட்ட செயலர் முனைவர் அன்பரசன் போன்றோர் வாழ்த்துரைகள் வழங்கியுள்ளனர்.

இப்படி தமிழ்மதி நாகராசன் எழுதிய ‘சொல்ல மறந்த [மருது] காவியம் ‘ இன்றைய காலகட்டத்திற்கு முக்கியமான நூலாகக் கருத முடிகிறது என்பதை வாசிப்பவர் உணரலாம். வரலாற்றை கட்டுரையாக வாசிப்பதினும்,
கவிதையாய், கதையாய் வாசிப்பதில் எழும் உணர்வெழுச்சியை தனித்து உணரமுடிகிறது.

‘சொல்லமறந்த காவியம் ‘
கவிஞர் தமிழ்மதி நாகராசன்
வள்ளுவர் புத்தக நிலையம் , காரைக்குடி.
பக்; 171 . விலை; ரூ.200/.தொடர்புஎண் ; 8344550111.
e-mail; [email protected]