திரை விமர்சனம் D BLOCK – சிரஞ்சீவி இராஜமோகன்

திரை விமர்சனம் D BLOCK – சிரஞ்சீவி இராஜமோகன்


சமீபத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்திருக்கும் டி பிளாக் திரைப்படத்தைப் பற்றி தான் இந்த விமர்சனத்தில் பார்க்க போகிறோம். கதை ஆரம்பம் முதலே கல்லூரிகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பது சற்றே போர். பல திரைப்படங்களில் அலசிவிட்ட நண்பர்கள் கேலி கிண்டல் சீனியர்கள் ராகிங் போன்று சற்று சலுப்பாக முதல் அரை மணி நேரம் செல்லும். வெள்ளியங்கிரி மலை காட்டில் அமைந்திருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டு கதை உண்மையாக வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். கல்லூரி வார்டன் மற்றும் முதல்வர் கல்லூரி
ஆரம்பித்த நாள் அன்றே ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியில் செல்லக்கூடாது நம் கல்லூரி அமைந்திருப்பது நடுக்காட்டில் விலங்குகள்
நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதை எச்சரிக்கின்றனர்.

பெண்கள் ஹாஸ்டல் அமைந்திருக்கும்  டி பிளாக் எனும் இடத்தில் இரவு நேரங்களில் பெண்கள் திடீரென ஒரு மர்ம மனிதனின் உருவத்தை
பார்த்து பயந்து கொண்டிருக்கின்றனர். கதாநாயகியின் தோழியும் அதே உருவத்தை பார்த்து பயந்து அனைவரிடமும் சொல்கிறாள் உதவி
கேட்கிறாள் யாரும் நம்பவில்லை. திடீரென ஒரு நாள் அவள் ஹாஸ்டலின் பின்புறம் சிறுத்தை நகங்களால் கீறப்பட்டு இறந்திருப்பது போன்று
சடலமாய் கிடக்கிறாள். கதாநாயகி கதாநாயகனிடம் அவள் சிறுத்தை அடித்து இறக்கவில்லை ஏற்கனவே ஒரு உருவத்தை பார்த்து பயந்து
போய் என்னிடம் கூறினாள் நான்தான் சரியாக அதை காதில் வாங்கிக் கொள்ள வில்லை என்று கவலை கொள்கிறாள்.  கதாநாயகன் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாதே எல்லாம் காலம் போன போக்கில் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி சினிமா அடுத்த காட்சிக்கு நகர்கிறது.

கல்லூரியின் சீனியர் ஒருவர் கதாநாயகனை பார்த்து இறந்து போன பெண் பார்த்து வரைந்த மர்ம மனிதன் ஓவியமும் இதற்கு முன்பு காலேஜில் படித்த காணாமல் போன ஒரு பெண் வரைந்த ஓவியமும் ஒன்றாக இருக்கிறது என்று கூறுகிறாள். ஆகவே அவள் இறப்பில் ஏதோ மர்மம் இருக்கிறது நாம் அதை கண்டுபிடித்தாக வேண்டும் என்று கதாநாயகனிடம் உதவி கேட்கிறாள் அந்த சீனியர் பெண். கதாநாயகனின் நண்பர்கள் நமக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை வா சென்று விடலாம் என்று இழுத்து கொண்டு செல்கின்றனர். இப்படியிருக்க ஒரு நாள் கதாநாயகியின் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் வாழ்த்தளிக்க பரிசினை எடுத்துக்கொண்டு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் செல்லும் கதாநாயகனும்  நண்பர்களும் மாடியில் அந்த மர்ம மனிதனை நேருக்கு நேர் சந்திக்கையில் கதை விறுவிறுப்பு அடைகிறது.

கல்லூரி முதல்வர் பெண்கள் ஹாஸ்டல் வார்டன் எல்லோரிடமும் அதைப்பற்றி கூறி யாரும் அதை நம்பவில்லை. முறையான அனுமதி
இல்லாமல் பெண்கள் விடுதிக்கு செல்ல முயன்றதற்கு தண்டனை மட்டுமே கிடைத்தது.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கரு பழனியப்பன் கல்லூரி ஓனர் ஆக ஒரே ஒரு காட்சியில் வந்து செல்கிறார் அவர் பிரின்ஸ்பல் இடம் பேசிக் கொண்டிருக்கும் போது , அதற்கு முன்னதாகவே அவருக்கு தெரியாமல் காலேஜ் லட்ச்சரை திருடச் சென்ற கதாநாயகன் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டு கேட்கிறார் இதிலிருந்து ஏதோ ஒன்றை அவர்கள் மறைப்பதை உறுதி கொள்கிறார். பின்பு பல பெண்கள் அது போன்று மர்மமான முறையில் இறந்து போய் இருப்பதும் காணாமல் போய் இருப்பதும் அறிந்து கொண்டு அவற்றினை களைய முயற்சிக்கிறார் கதாநாயகர்.

இறந்து போன பெண்கள் எப்படி காணாமல் போனார்கள்? அவர்களுக்கு என்ன ஆயிற்று? இதற்கு பின் யார் இருக்கிறார்? அந்த மர்ம மனிதன் யார்? கதாநாயகன் அந்த மர்ம மனிதனை எப்படி வெற்றி கொள்கிறான்? என்பது படத்தின் மிச்ச பரிசு. ஓரளவு கதையை கணிக்க கூடிய திருப்புமுனைகள் இருந்தாலும் திரில்லர் திரைப்படங்களுக்கு உண்டான விறுவிறுப்பு சற்றும் குறையாது இருக்கிறது திரைக்கதையில். இதை ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் , சைக்கோ கில்லர் கதை என்றும் வரையறுக்கலாம்.

படத்தின் பலம்: நல்ல பின்னணி இசை நல்ல திரைக்கதை சில காமெடி காட்சிகள்

படத்தின் பலவீனம்:  கதாநாயகி (அவரை நீக்கிவிட்டு படம் எடுத்திருக்கலாம்)

மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.

நன்றி
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
[email protected]
9789604577
7708002140

நூல் அறிமுகம்: G.K.V.மகாராஜா முரளீதரனின் சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி – தொகுப்பு: அருண்மொழி வர்மன்

நூல் அறிமுகம்: G.K.V.மகாராஜா முரளீதரனின் சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி – தொகுப்பு: அருண்மொழி வர்மன்




சினிமாவில் பிறந்த சிவப்புக் கொடி எஸ்.பி. ஜனநாதன்
சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி என்ற பெயரில் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கான நினைவு மலர் ஒன்றை GKV மகாராஜா முரளீதரனின் தொகுப்பில்
பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருக்கின்றனர்.  ஜனநாதனின் முதற்திரைப்படமான இயற்கையின் பாடல்களும் காதல் கொண்டேன் படத்தின் பாடல்களும் ஒரே இசைத்தட்டாக வெளிவந்திருந்தன.  எனக்கு மிகவும் பிடித்த இசைத்தட்டுகளில் ஒன்றாக அதைச் சொல்வேன்.  இயற்கையில் எல்லாரும் பெரிதும் சொல்லுகின்ற, மிகப்பிரபலமான பாடல் “காதல் வந்தால் சொல்லி அனுப்பு…”; எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாக இன்றும் இருக்கின்றது.  அதேநேரம் அதேயளவு பிடித்த பாடலாக “பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ” பாடலையும் சொல்வேன்.  அந்தத் திரைப்படத்தின் கதை மாந்தர்களும் கதை நடக்கும் பின்னணியும் மிகவும் பிடித்திருந்தன.  அதுபோலவே பிரதான பாத்திரங்களின் உருவாக்கத்திலும் ஒரு இயல்புத்தன்மை இருந்தது.இவற்றுக்கு மேலாக, காதலிக்காகக் காத்திருக்கின்ற ஆண் என்கிற தமிழ் சினிமாவின் வழமையாகிக் கொண்டிருந்த ஒருபோக்கில் இருந்து மாறுபட்டு, காதலனுக்காக க் காத்திருக்கின்ற பெண்ணையும், இரண்டு ஆண்களால் காதலிக்கப்படும், அவர்கள் இருவருமே நல்லவர்களாகவும் அவளுக்குப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றபோது தேர்வு செய்பவளாகவும் இருக்கின்ற பெண்ணையும் சித்திகரித்திருந்தது இயற்கை.  இது குறித்து நுட்பமாகவும், பெண்ணிய வாசிப்புடனும் புரிந்துகொள்பவனாக நான்
இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது இருக்கவில்லை.  ஆயினும், அன்றைய சமகால தமிழ்த்திரைப்படங்களில் இருந்து தெரிந்த இந்தவேறுபட்ட தன்மை என்னை ஈர்த்தது.

இயற்கை போன்றதோரு பட த்தை எதிர்பார்த்துக்கொண்டுதான் ஜனநாதனின் இரண்டாவது திரைப்படமான ஈ திரைப்படத்தையும் பார்க்கச்சென்றேன்.  ஈ, இயற்கை போன்ற படமில்லை. ஆனால் ஈ எனக்கு இன்றளவும் மிக மிகப் பிடித்தமான படமாக இருக்கின்றது.  அன்றைய சூழலில் கனடாவில் இளைஞர்களின் குழு வன்முறைகள் மிக அதிகமாக இருந்தன.  இப்படியான குழு வன்முறைகளின் நேரடியான அனுபவங்கள் பல எனக்கும் இருந்தன.கூட்டத்தில் ஒருவனாக பங்கேற்றும் இருக்கின்றேன்.  அதேநேரம் இந்த இளைஞர்களின் துணிச்சல் தன்மையும், நேர்மையும் அவர்கள் தருகின்ற சகோதரத்துவமான பாதுகாப்புணர்வும் எனக்கு அவர்கள் மீது பெருமதிப்பை ஏற்படுத்தியிருந்தன.  கோபம் என்பது கவனமாகக் கையாளப்பட்டால் மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாக அமையும் என்பது என் நம்பிக்கை.  அவர்களது கோபத்தையும் துணிச்சலையும் சரியான முறையில் தடமாற்றினால் அது சமூகக் கோபம் என்கிற ஆக்கபூர்வமான செயலாக அமையும் என்று நான் நம்பினேன்.  ஈ பட த்தின் இறுதியில் பசுபதிக்கும் ஜீவாவிற்கும் இடையிலான உரையாடல் அப்படியான ஒன்றாகவே அமைந்தது அல்லது அப்படி நிகழ்ந்ததாக கருதிக்கொள்ளக்கூடியதாக அமைந்தது.  ஈ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த தாக அமைய அதுவும் ஒரு காரணமானது.  இயற்கை பட த்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றும் கூட அந்தவிதமான பாடல்களில் இருந்துவேறுபட்ட தும் அன்றைய காலத்திற்குப் புதியதுமான பாணியில் ஆனால் ஈ திரைப்பட த்துக்கு பொருத்தமான பாடல்களைச் சேர்த்திருந்தார். அதிலும் காதல் என்பது போதிமரம், வாராது போல் ஆகிய பாடல்கள் அருமையாக வந்திருந்தன.  அதற்குப் பின்னர் எனக்கு மிகப் பிடித்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக ஜனநாதன் மாறிப்போனார்.  அவரது திரைப்படங்களையும் பேட்டிகளையும் பின்னர் காணொலிகளையும் தொடர்ந்தும் ஆர்வத்துடனும் பார்ப்பவனாக இன்றளவும் இருக்கின்றேன்.  கலைகள் சமூக மாற்றத்துக்கான கருவிகளென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திய ஜனநாதனின் பேராண்மை, புறம்போக்கு, லாபம் ஆகிய திரைப்படங்களில் நேரடியாக அரசியல் பேசுகின்ற காட்சிகள் அமைந்திருந்தன.  அவற்றை அவர் விரும்பியே செய்திருந்தார்.  அவரது தெரிவு அதுவே என்பதை அவர் திரும்பத் திரும்ப நேர்காணல்களில் சொல்லிவந்தார்.

சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி தொகுப்பினை வாசிக்கின்றபோது ஜனநாதன் மீதான் ஈர்ப்பும் மரியாதையும் இன்னமும் அதிகரித்தே செல்கின்றது.  அரசியல் தலைவர்கள், திரைப்படத்துறையினர், மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், களச் செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் ஜனநாதனுடனான தம் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.  300க்கு மேற்பட்ட பக்கங்களில் நிறைவானதோர் தொகுப்பாக இது அமைந்துள்ளது.  உள்ளடக்கம் அத்தனை நேர்த்தியாக இருந்தபோதும் வடிவமைப்பிலும் தொகுப்பிலும் சில கவலையீனங்கள் இடம்பெற்றுவிட்டன என்பதைக் குறிப்பிடவேண்டி இருக்கின்றது.   நடிகர் ஷாமிடம் ஜனநாதன் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகள் மட்டுமே தொகுப்பில் இடம்பெற்றுள்ளன, அவற்றுக்கான பதில்களைக் காணோம், அதுபோல ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் குறிப்பில் பல சொற்கள் தங்கிலிஷான (ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுதிய தமிழ்ச் சொற்களாக) அமைந்துள்ளன.  இந்த விடயங்களில் பதிப்பாளர்கள் கவனமாக இருந்திருக்கவேண்டும்.  பாலாஜி சக்திவேலின் பெயரில் வெளிவந்த குறிப்பில் அவர்
அந்தக் குறிப்பினை எழுதியவர் தன் நண்பரான கே. செல்வராஜ் என்றும் செல்வராஜின் பெயரிலேயே குறிப்பினை வெளியிடுமாறும் கேட்டுள்ளார்.   மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான கருவியாக திரைப்படங்களையும், தன் காணொலிகளையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்திவந்தவர் ஜனநாதன்.  ஈழ விடுதலை, தூக்குத் தண்டணை ஒழிப்பு, அணு உலைக்கு எதிரான போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பூர்வகுடிகளின் வளங்கள் கையாடலுக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட சமகாலப்பிரச்சனைகள் குறித்து பிரக்ஞைபூர்வமாக தன் திரைப்படங்களிலும் காணொலிகளிலும் குறிப்பிட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவை குறித்த மக்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதையும் ஜனநாதன் வழக்கமாக வைத்திருந்தார் என்பதையும் அறியமுடிகின்றது.  இந்தத் தொகுப்பு அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக அமைவதுடன் கலைஞர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வினை வலியுறுத்துவதாகவும் அமைகின்றது.

அருண்மொழி வர்மன்
கனடா

Writer Movie Review By K Kanagaraj. திரைவிமர்சனம்: ஆரத் தழுவிக் கொண்டாடத் தோன்றும் ரைட்டர் திரைப்படம் - கே கனகராஜ்

திரைவிமர்சனம்: ஆரத் தழுவிக் கொண்டாடத் தோன்றும் ரைட்டர் திரைப்படம் – கே கனகராஜ்




படத்தைப் பார்த்தேன். முதலில் உங்கள் கைக்கும் மூளைக்கும் ஒரு முத்தம் கொடுக்கணும். இவ்வளவு துணிச்சலா ஒரு படத்தை அதுவும் முதல் படத்தை எடுப்பதற்கு ஒரு தார்மீகத் திமிரும், தைரியமும் இருந்திருக்க வேண்டும். சில பேர் இது மாதிரியான கருவை கூட தேர்ந்தெடுத்திருப்பார்கள். ஆனால் அந்தக் கதை அழகியல் ரீதியாக நேர்த்தியாக வந்திருக்கிறதா என்று பார்த்தால் மிகக் குறைவான படங்கள்தான் அப்படி அமைந்திருக்கின்றன என்று சொல்ல முடியும்.

எடுத்துக் கொண்ட கதைக்கருவைப் பொறுத்தளவில் இன்றைக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் UAPA சட்டத்தில் கைதாகி இருப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களுடைய ஒட்டுமொத்த குமுறலையும் இப்படத்தில் வரும் கதாநாயகன் மூலமாக காட்டியிருக்கிறீர்கள். பிரதானமாக ஏற்கனவே புகழ்பெற்ற நடிகர் சமுத்திரக்கனி நடித்திருப்பதனால், அவர் கதாநாயகன் என்கிற தோற்றம் ஏற்பட்டு, போலீஸ்காரர்களுக்கு யூனியன் வேண்டும் என்ற முறையில் படம் எடுக்கப்பட்டிருப்பதாக சிலர் சித்தரித்திருக்கிறார்கள்.

உண்மையில் குரலற்ற வெளிச்சம் படாத ஏராளமான மனிதர்களின் வலியை இது பேசுகிறது. அந்த வலியைப் பேசுவது மட்டுமல்லாது, அந்த வலியை தன்னுடைய வலியாக உணர வைப்பதில் ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறீர்கள். உண்மையில் இந்தப் படத்தின் வசனகர்த்தா யார்? ஒளிப்பதிவு யார்? இயக்குனர் நீங்கள் என்பதற்கு மேலே மற்ற விஷயங்களை நான் பார்க்கவில்லை. ஆனால் ஒவ்வொன்றும் இவ்வளவு நேர்த்தியாக கச்சிதமாக எப்படி வந்திருக்கும் என்று உண்மையிலே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

அடுத்ததாக நடிகர்கள் தேர்வு… வாய்ப்பே கிடையாது… ஒவ்வொரு நடிகர்களும் இந்தக் கதாபாத்திரத்திற்காகவே பிறந்தது போல நடித்துள்ளனர். எஸ்.ஐ, டிஜிபி, சமுத்திரக்கனி, புதிதாக சென்ற காவல்நிலைய ரைட்டர், மாணிக்கம், சமுத்திரக்கனியின் மனைவிகளாக நடித்திருப்பவர்கள், வழக்கறிஞர், மேஜிஸ்திரேட், அந்த மேஜிஸ்ட்ரேட் ஒரு சில நொடிகள்தான் வருவார். நீதிமன்றத்தை விமர்சித்ததாக சொல்ல முடியாது என்றும் சொல்லலாம். ஆனால் நீதிமன்றம் எப்படி ஒடுக்குமுறைக் கருவியின் ஒரு அங்கமாக மாறிப் போயிருக்கிறது என்பதும் கூட அதில் அடங்கியிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீதிபதி, “சொல்லிக்கூட கூட்டி வர மாட்டீங்களா” எனச் சொல்வதில் அடங்கியிருக்கிறது நீதிமன்றம் ஒடுக்குமுறை கருவியாக இயைந்து போயிருக்கிறது என்பது.

ஸ்டேன் சாமி ‘இறந்து’ போனார் என்றபோது நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததாக தெரிவித்தார்கள். ஆனால் அவர் ஸ்ட்ராவிற்காக கெஞ்சும்போதும், மருத்துவத்திற்காக கெஞ்சும்போதும், பெயிலுக்காக கெஞ்சும்போதும் நீதித்துறை ஒரு 84 வயசுக்காரன் சதி பண்ண முடியுமா என்றெல்லாம் யோசிக்கவில்லையே. உரிமைகளை யாரும் கொடுத்தது கிடையாது. உரிமைகள் எடுக்கப்பட்டேதான் வந்திருக்கிறது.

“நீ மேல தெருவுக்குப் போக முடியுமான்னு எனக்கு தெரியல, ஆனா மேல வந்திட முடியும், படிடா”ன்னு சொல்ற அந்த ஒற்றை வார்த்தை அழுத்தமான அர்த்தம் பொதிந்தது. சரண்யா கேரக்டரில் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்ததாகத் தெரிந்தது. அந்தப் பெண் அடிப்பது, அதேபோல அதற்கு முன் அந்த குதிரை கால் உயர்த்தி நிற்கிறபோது கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தது.

என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், சாதி, வர்க்கம், அரசின் அடக்குமுறை கருவிகளின் அட்டூழியம் என அனைத்தையும் கலைநயத்தோடு சொல்வதில் இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இப்படத்திற்கு ஏன் உரிய அளவில் விளம்பரம் கிடைக்கவில்லை என்பதற்கான விஷயமும் அதற்குள் இருக்கிறது. உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய சில விரல் விட்டு எண்ணத்தக்க சமீபத்திய படங்களில் இதற்கு நான் முதல் இடத்தை கொடுப்பேன். அதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.

தமிழகம் ஒரு முக்கியமான இயக்குனரை கண்டடைந்து இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இந்த நடிகர்கள் எல்லாம் ஏற்கெனவே பல படங்களில் நடித்தவர்கள்தான். இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே பிறந்தவர்கள் போல நடித்துள்ளதுதான் ஆச்சர்யம். உண்மையில் இதில் நடித்த ஒவொருவரின் நடிப்பு மற்றும் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது.

மேலும், ஒரு சந்தர்ப்ப சூழலால் குற்றவாளியாய்ப் போன, குழந்தையை சாகக் கொடுத்துட்டு இருக்கும் ஒருவன் ஒவ்வொருவரையும் அணுகும் முறை, ஒவ்வொருவரிடமும் பேசும் பேச்சு சாதாரணமானதல்ல. உண்மையில் நம் சமூகத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது எல்லாம் மிகவும் குறைவாகவே இப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். டி.எஸ்.பி.யை, எஸ்.பி மிகவும் மோசமாக பேசுவது, அப்பா வயதுடைய ஒருவரை தன்னுடைய பூட்ஸை துடைக்கச் சொல்வதெல்லாம் நான் நேராகவே பார்த்துள்ளேன். தூத்தூக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு எஸ்ஐ இருந்தார். அவருடைய பூட்ஸை ஒருத்தர் துடைக்கும் போது நான் அவரிடம் கேட்டேன். அவர் மிகவும் மனம் உருகிக் கூறினார், என்னுடய சிறுவயதில் என்னுடைய அப்பாவும் இப்படித்தான் இருந்தார். ஆனால் நான் காவல்துறையின் அங்கமான பிறகு அது எனக்கு பெரிதாக தெரியவில்லை என்றார்.

இப்படத்தை பர்த்துவிட்டு வெளியே வந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலளார் தோழர் ஆர்.முத்தரசன், தோழர் சி.மகேந்திரன், தோழர் ஜீவசகாப்தன் இவர்கள் எல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் படத்தைப் பற்றி பேசுவதற்குக் கூட என்னால் முடியவில்லை.UAPAவில் சிறையில் கிடக்கிற ஏராளமானோரின் வலி என் மனதிற்குள் இருந்தது. இயக்குநரைப் பார்த்துக் கூட பேச மிகவும் சிரமப்படுவேன் என்று நினைத்து யாரிடமும் பேசாமல் இறங்கி வந்துவிட்டேன்.

ஒன்றே ஒன்றுதான், DGPயை சமுத்திரக்கனி சுட்டுக் கொன்றது போல், அவ்வளவு எளிமையாக அது நடந்துவிடுவதில்லை. சமுத்திரக்கனி அதில் தோற்றுப் போயிருந்தால் அதுதான் எதார்த்தமாக இருந்திருக்கும். ஆனால், படத்தினுடைய போக்கில் அந்த நிவாரணி கூட இல்லாமல் இருந்திருந்தால் பார்ப்பவர்களுக்கு அது பெரிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கும். சமுத்திரக்கனி சுட்டுவிட மாட்டாரா என்று தோன்றுகிற அளவுக்கு எல்லோருடைய மனநிலையும் அங்கே வந்து நின்றது. ஏனென்றால் அந்த சீன் பக்கத்துல இருக்கிறவனையும் கொல்லு என்றுதான் தியேட்டரில் கேட்டது. இப்படி இந்தப் படம் எவ்வளவு விசயங்களைப் பேசியிருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் வந்திருக்கிறது. ஒரு நல்ல இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. Neelam Productions நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தோடு சம்மந்தப்பட்டவர்கள், ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.பழக்கமான ஒருவரை டேய் பிண்ணிட்ட போ என்று ஆரத் தழுவிக் கொண்டாடுவது போல் கொண்டாடத் தோன்றுகிறது. அந்தக் கொண்டாட்டத்திற்குத் தகுதியானவர் இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப்.