புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: விதைகளை ஊன்றிவைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுக்கும் நேர்காணல்: ஆதவன் தீட்சண்யா சந்திப்பு: ஆயிஷா இரா.நடராசன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: விதைகளை ஊன்றிவைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுக்கும் நேர்காணல்: ஆதவன் தீட்சண்யா சந்திப்பு: ஆயிஷா இரா.நடராசன்




தற்போதைய இலக்கியச்சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவத்தைச் சொல்லுங்கள்?

1975 ஜூலை 12,13 தேதிகளில் தமுஎகச முதல் மாநில மாநாடு மதுரையில் நடந்தபோது அவசரநிலை அமலிலிருந்தது. 15ஆவது மாநாடு நடைபெறவிருக்கும் இவ்வேளையில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலிலிருக்கிறது. அறிவிக்கப்படாததாய் இருப்பதாலேயே இப்போதைய அவசரநிலையை விலக்கிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஆட்சியாளர்களுக்கு இல்லை.

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தனிமனித வாழ்வில் அரசின் நேரடித் தலையீடும் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. அரசியல் சாசனத்தின் வழியே குடிமக்கள் தமக்கு உறுதி செய்துகொண்ட உரிமைகள் பலவற்றையும் அரசிடம் இழக்கும் காலமாகவும் இது இருக்கிறது. தன் உடல்மீதுகூட அவர்கள் முழு உரிமை கோரமுடியாது. அரசு குடிமக்களை குற்றவாளிகளாகப் பார்ப்பதும், அவர்களது இயல்புரிமைகளை மறுப்பதும், எதிர்த்தால் வன்முறைகளை ஏவுவதுமாக மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. உணவு, உடை, வசிப்பிடம், கல்வி, கலைஇலக்கிய நாட்டம், வழிபாடு, கொண்டாட்டங்கள் என அனைத்திலும் ஆட்சியாளர்களின் விருப்பம் எதுவோ அதுவே குடிமக்களின் தேர்வாகவும் இருக்கவேண்டுமென்கிற நிர்ப்பந்தம் வலுக்கிறது. எவரிடமிருந்து ஆளும் அதிகாரத்தை இவ்வரசு பெற்றிருக்கிறதோ அவர்கள் மீதே தன் குரூரபலம் முழுவதையும் பிரயோகிக்கும் இக்கொடுங்காலத்தில் சுயசிந்தனையும், சுதந்திரமான வெளிப்பாட்டுணர்வும், அச்சமற்ற வாழ்வுக்கான பேரவாவும் கூருணர்வுமுள்ள எழுத்தாளர்களும் கலைஞர்களும் செய்யவேண்டியது என்ன என்பதுமே மாநாட்டின் முதன்மை விவாதம். கடந்த மாநாட்டிற்குப் பிறகான இக்காலகட்டத்தில் கலைஇலக்கிய பண்பாட்டுத்தளத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், அவற்றில் தமுஎகசவின் பங்களிப்பு மற்றும் நிலைப்பாடு ஆகியவை பற்றிய மதிப்பீட்டையும் மாநாடு மேற்கொள்ளும்.

“புதுவிசை” காலாண்டிதழ் ஒரு கலாச்சார இலக்கிய இயக்கமாகவே உணரப்பட்டது. அதை தொடங்கி நடத்திய அனுபவங்களைச் சொல்லுங்கள். உங்களது நோக்கம் எந்தளவிற்கு நிறைவேறியது?

நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதிக்கக் கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குவது, சமகால கருத்துலகில் தலையிடுவது, கலைஇலக்கிய ஆக்கங்களின் புதிய போக்குகளுக்கு இடமளிப்பது, பண்பாட்டுத்தளத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் உரையாடல்களை நமது சூழலிலும் நிகழ்த்துவது என்கிற நோக்கில் நூறுநூறு பத்திரிகைகள் தேவை. அதிலொரு பகுதியை புதுவிசை நிறைவேற்றியுள்ளது.

பெரும்பாலும் ஓசூர் நண்பர்களின் நிதிநல்கையில் மட்டுமே 48 இதழ்களை கொண்டுவர முடிந்ததை இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எங்களது குழுவினரின் உழைப்பு அதற்குரிய விளைவுகளை உருவாக்கியுள்ளது. ஆனால் திருப்தியடைய ஒன்றுமில்லை. ஏற்கெனவே இரண்டுலட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பிருந்தாலும், இன்னொரு சுற்று வந்து பார்க்கலாம் என்கிற துடிப்பு மங்கவில்லை, பார்ப்போம்.

புறப்பாடு, பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி, மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் உட்பட உங்கள் கவிதைத்தொகுதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. தற்கால கவிதை உலகம் எப்படி இருக்கிறது?

அதிகாரத்தின் கண்காணிப்பு தீவிரமாகியிருக்கும் நிலையில் அதிகாரத்தைப் பற்றிய உண்மைகளைப் பேசும் கவிதை முன்னிலும் பூடகமாகவும் யூகிக்க முடியாத வலிமையுடனும் தமது இலக்கைத் தாக்கி வாசகர்களை செயலுக்குத் தூண்டுகிறது. அதேநேரத்தில் அதிகாரத்தை விமர்சிப்பதால் ஏற்படவிருக்கும் விளவுகளுக்கு அஞ்சும் கவிதை, அச்சமற்று இருப்பதுபோல காட்டிக்கொள்வதற்காக பெருங்குரலெடுத்து தொந்தரவில்லாத பாடுபொருள்களை முன்வைத்து இதுதான் இக்காலத்தின் கவிதை என்பதுபோல பாவனை செய்வதுடன், வாசகர்களையும் தனது மட்டத்திற்கு கீழிழுத்துப் போடுகிறது. முகத்தை உக்கிரமாக வைத்துக்கொண்டு கைகளை அங்கீகாரப்பிச்சைக்கு விரிக்கும் இத்தகைய கவிஞர்கள் மலிந்து கிடந்தாலும் பிரசுரம், பரிசு, விருது, இலக்கியப் பயணங்கள் என எதையும் எதிர்பாராமல் வாழ்வின் பாடுகளைச் சொல்லும் கவிதைகளின் தொடர் வருகை தமிழ்க்கவிதைக்கு மேலும் காத்திரமேற்றுகிறது.

“இருப்பிடம் வரைதல் போட்டியில்

முதலில் முடித்தது நான்தான்

வரைவதற்கு என்னிடம் இருந்தது

ஒற்றைச் செங்கற்சுவர் மட்டுமே” என்று ஓர் ஈழ ஏதிலி தன் வாழ்வை எழுதுவதற்கெல்லாம் இப்போது இங்கே வாய்க்கிறது.

லிபரல்பாளையத்துக் கதைகள், கடுங்காலத்தின் கதைகள், நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள், கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் என்று தொடர்ந்து, கதையுலகில் புதியபுதிய கலகவெளிகளை உருவாக்கிய கதைக்காரன் ஆதவன் தீட்சண்யாவின் புதிய முயற்சிகள்?

சமூக அமைப்பின் மீதும் அதை வழிநடத்தும் அதிகாரத்துவத்தின் மீதும் யாதொரு புகாருமற்று, எல்லா ஒழுங்கீனங்களுக்கும் குற்றங்களுக்கும் பாகுபாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கி நெக்குருக எழுதுவதும் அதை கண்ணீர் மல்க கதைப்பதும் இங்கொரு வணிகமாகப் போய்விட்டது. முப்பதாண்டுகால உலகமயமாக்கமும் எட்டாண்டுகால இந்துத்துவாக்கமும் சமூக அமைப்பிலும் வாழ்முறையிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள், ஆளுமைச் சிதைவுகள், அறவீழ்ச்சிகள், நுகர்வியம், வாழ்க்கைத்தரத்தில் அரிமானம், சூழலழிப்பு என்று நம்முடைய சமகாலத்தை துள்ளத்துடிக்க எழுதுவதே எனது நேர்வாக இருக்கிறது. அப்படியல்லாத ஊளைக்கதைகளை எழுதிக்குவிப்போர் பட்டியலில் எனது பெயர் இல்லாதது சற்றே கர்வத்தைத் தருகிறது.

மீசை என்பது வெறும் மயிர் நாவல், நந்தஜோதி பீம்தாஸ் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை சென்று சாதிவெறி சமூக அவலங்களை அனுபவித்து, கப்பல் ஏறி, உலக நாடுகளைச் சுற்றி, மீசை என்பது எங்கெங்கெல்லாம் எப்படியான அதிகார அடையாளமாக இருக்கிறது எனக் காட்டுகிறது. இடுப்புக்கு கீழே மீசை வளர்க்கும் விஷயத்தை இன்று நினைத்தாலும் வலியிலிருந்து மீள முடிவதில்லை. நாவல் தளத்தில் உங்களது அடுத்தடுத்த முயற்சி என்ன?

உலகத்துக்கே மனிதமாண்பை போதிக்கும் யோக்கியதை இருப்பதாக பீற்றிக் கொள்ளும் பிரிட்டன், இந்தியாவை ஆண்டபோது தனது படையினரின் பாலுறவுத் தேவைகளுக்காக ஒவ்வொரு ஆயிரம்பேருக்கும் 10-12 பாலியல் தொழிலாளிகள் வீதம் பணியமர்த்தியுள்ளது. தொழில் செய்வதற்கு பணம்கட்டி உரிமம் பெறும் பெண்களை பகிர்ந்தனுப்புவதற்கான மேற்பார்வையாளர், இதிலேதும் சண்டை வந்தால் தீர்ப்பதற்கு ரகசிய நீதிமன்றங்கள், மருத்துவப் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் ரகசிய மருத்துவமனைகள் (லாக் ஹாஸ்பிடல்) என கண்டோன்மென்ட்டுகளில் நடந்த அட்டூழியங்களை மையப்படுத்தி ஒரு நாவலை காலவரம்பின்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

உங்களது எழுத்தளவுக்கு உரைகளும் கவனம் பெற்றவை. உங்கள் உரையின் அடிப்படை எவை? தமுஎகச குரலாக அவற்றை முன்வைப்பதில் எத்தகைய சவால்கள் உள்ளன?

காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகளில் நடந்துவந்த விடுதலைப்போர்களுக்கு உதவும் வகையில் இரண்டாவது போர்முனையை – அதாவது பண்பாட்டுப் போராட்டத்தை முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடங்கியுள்ளனர். பேனாவை, தூரிகையை வாளாக, துப்பாக்கியாக உருவகித்துச் செயல்பட்டார்களாம். பார்ப்பனியமும் கார்ப்பரேட்டியமும் இணைந்து இந்தியச்சமூகத்தை அடிமைப்படுத்திவரும் இன்றைய பார்ப்பரேட்டியச் சூழலில் இங்குள்ள முற்போக்காளர்கள் அந்த இரண்டாவது போர்முனையை நமது தனித்தன்மைகளுக்கேற்ப தொடங்கியாக வேண்டும் என்பதை கலைஇலக்கிய நிகழ்வுகளில் வலியுறுத்துகிறேன். நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவாக காட்டிக்கொண்டு ஆளும் வர்க்கம் எப்படி தன்னை மிகவும் நவீனமாக பலப்படுத்திக்கொண்டு நாட்டை ஒரு பெருஞ்சந்தையாக ஒருங்கிணைத்துச் சுரண்டுகிறது என்பதையும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான காலத்து முதலாளியத்திலிருந்து இன்றைய முதலாளியம் வரைக்குமாக ஆய்ந்தறிந்து தோழர் எஸ்.வி.ஆர். போன்றவர்கள் முன்வைக்கும் புதிய விவாதங்களிலிருந்து பெறும் புரிதலையும் அரசியலரங்குகளில் பகிர்கிறேன். இந்தப் பேச்சுகளில் சாதியொழிப்பையும், சமூகநீதியையும் உள்ளிணைத்தே முன்வைக்கிறேன். இவை தமுஎகசவின் மைய நோக்கங்களுடன் இசைவிணக்கம் கொண்டவையே.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும் பொறுப்பு வகிக்கிறீர்கள். அதுசார்ந்த அனுபவங்களைச் சொல்லுங்கள். ஆணவக்கொலைகள் இன்றும் தொடர்கின்றனவே. தமிழக அரசுக்கு உங்களது கோரிக்கை என்ன?

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் நேரடிப் போராட்டங்களுக்கு கருத்தியல் தளத்தில் வலுசேர்க்கும் சிலவேலைகளைச் செய்வதுண்டு. அவ்வகையில் சாதியொடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் எழுதுவதும் பேசுவதும் வன்கொடுமைக்களங்களுக்குச் செல்வதுமே எனது செயல்பாடுகள். புதுக்கூரைப்பேட்டைக்கும் உத்தபுரத்துக்கும் பரமக்குடிக்கும் நத்தத்திற்கும் பாப்பாப்பட்டி கீரிப்பட்டிக்கும் சென்று சாதியத்தின் மூர்க்கத்தை அதன் நேரடி வடிவத்தில் கண்டுவந்து பதைபதைப்பு அடங்காமல் பலநாட்கள் தவித்திருக்கிறேன். குஜராத்தில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி மேற்கொண்ட நடைப்பயணத்தில் இங்கிருந்து சில தோழர்களுடன் அங்கு சென்று பங்கெடுத்து திரும்பியபோதும்கூட இதேவகையான கொந்தளிப்புக்குள் சிக்கி தத்தளித்தேன். சாதிய வன்கொடுமைகள் அடுத்தடுத்து ஏவப்படும்போது திணறிப்போய் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு என் முன்னால் எந்தக் கொடுமையும் நடக்கவில்லை என்பதுபோல என்னை நானே ஏமாற்றிக்கொண்டு மரத்துப்போன மனதோடு கிடந்துவிட்டு பின் ஆற்றமாட்டாமல் அழுதோய்ந்த நாட்களுமுண்டு. ஆனால் அதிலிருந்து மீள்வதற்கான உள்வலுவை அம்பேத்கர், பெரியாரின் எழுத்துகளும் கம்யூனிஸ்ட்களின் களச்செயல்பாடுகளுமே வழங்கின.

வயதுவந்த பெண்ணும் ஆணும் தனது வாழ்க்கைத்துணையைச் சுதந்திரமாக தெரிவுசெய்யும் உரிமையை மறுப்பதிலிருந்தே ஆணவக்கொலைகள் நடக்கின்றன. பல நாடுகளில் மத, இன வெறியில் ரத்தத்தூய்மையை வலியுறுத்தி இக்கொலைகள் நடக்கிறதென்றால் இந்தியாவில் சாதியின் பெயரால் நடக்கின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 120-150 பேர் கொல்லப்படுகிறார்கள். நடப்பிலுள்ள குற்றவியல் சட்டங்களின் மூலம் இக்கொலைகளைத் தடுப்பதிலும் தண்டிப்பதிலுமுள்ள இடர்பாடுகளை கவனத்தில் கொண்டு, மாநில அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடைப்பயணம் மேற்கொண்டது. உச்ச நீதிமன்றமும் தனிச்சட்டத்தின் தேவையை பலவாறாக வலியுறுத்தியும்கூட ராஜஸ்தானில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாமதமின்றி தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

ஓசூர் புத்தகத்திருவிழா உங்களது தலைசிறந்த பங்களிப்புகளில் ஒன்று. பலரை ஒன்றிணைத்து முதல் புத்தகத் திருவிழாவை வழிநடத்தியவர் நீங்கள். ஓசூர் புத்தகக்காட்சி இன்று தொடரும் விதத்தில் உங்கள் நோக்கம் நிறைவேறியதாக கருதுகிறீர்களா?

இப்போது நிலநிர்வாக ஆணையராக உள்ள திரு.எஸ்.நாகராஜன் அப்போது ஓசூரின் சாராட்சியர். நிர்வாக வரம்பின் எல்லைவரை சென்று முன்னுதாரணமான பணிகளை அவர் செய்ததை கவனித்துதான் ‘புத்தகக் கண்காட்சி’ யோசனையை தெரிவித்தேன். உடனே ஏற்றுக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக மாறுமளவுக்கு நிர்வாகம் முழுவதையும் ஈடுபடுத்தினார். கலைஇலக்கிய விழாக்களுக்கு ஆயிரக்கணக்கானவர்களை அணிதிரட்டிய தமுஎகச அனுபவம் உள்ளூர் சமூகத்தைத் திரட்டுவதற்கு உதவியது. எனது முன்னெடுப்புகள் யாவற்றுக்கும் துணையிருக்கும் நண்பர் பி.எம்.சி.குமார் இந்த முயற்சிக்கும் பேராதரவளித்தார். அதன் தொடர்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பலரையும் இணைத்துக்கொண்டு தொடர்ந்து நடத்திவருவது பாராட்டத்தக்கது. விதைகளை ஊன்றிவைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுத்துக் கொள்ளும் தானே!

“தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” முழக்கத்தின் பின்னணி?

செம்மலர் இதழில் வரவிருக்கும் எனது கட்டுரையின் பின்வரும் பகுதி இக்கேள்விக்கு உரிய பதிலாக அமையும். இந்தியப் பெருநிலப்பரப்பில் வாழும் 130கோடிக்கும் மேலான மக்களாகிய நாம் இயற்கைநேர்வு மற்றும் வாழ்முறைகளால் பல்வேறு மொழிவழி இனங்களாக வாழ்ந்து வருகிறோம். பிறப்பு முதல் இறப்பு வரையிலும் (சில விடயங்களில் இறப்புக்குப் பின்னும்கூட) தனிமனிதர்களின் வாழ்வை நெறிப்படுத்தி நடத்துகின்ற இவ்வாழ்முறைகளின் தொகுப்புதான் பண்பாடு எனப்படுகிறது. பண்பாடு நாடு முழுதும் ஒருபடித்தானதாக இல்லை. ஒவ்வொரு இனமும் தனக்கான தனித்த உணவு, உடை, இருப்பிட அமைவு, வாழ்க்கைவட்டச் சடங்குகள், தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், கலை இலக்கியம், கல்வி ஆகிய பண்பாட்டுக்கூறுகளை வரலாற்றுரீதியாக பெற்றுள்ளன. சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவை பண்பாட்டை இடைவெட்டிச் சென்றபோதும் அவற்றுக்கப்பாலும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்ள பொதுவான பண்பாட்டம்சங்கள் இருக்கவே செய்கின்றன. இதேரீதியில் ஒவ்வொரு இனமும் தனக்குள்ள தனித்துவமான பண்பாட்டை பேணிக்கொண்டே இதர இனங்களுடன் தமக்குள்ள பொதுமைப்பண்புகளைக் கண்டடைந்து அவற்றுடன் ஒப்புரவாக வாழ்ந்துவருகின்றன.

ஓர் இனத்தின் வேறுபட்ட பண்பாட்டை அதன் தனித்துவமாக கருதி சமமாக ஏற்றுக்கொள்வதற்கு மாறாக அதனை இதர பண்பாடுகளுக்கு எதிரானதாகவோ கீழானதாகவோ உயர்வானதாகவோ சித்தரிக்க ஒன்றிய அரசும் அதனை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் முயற்சித்து வருகின்றன. இதன் மேலதிக தீவிரத்தில், தேசிய இனங்கள் என்பதையே மறுத்து இந்திய இனம் என்கிற செயற்கையான அடையாளத்தைச் சுமத்தி அந்த இந்திய இனத்தின் பண்பாடானது ஆரியப்பண்பாடே என்று நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனாலேயே “தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” என்கிற முழக்கத்துடன் தமுஎகச 15ஆவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

தமுஎகச பொதுச்செயலாளராக இக்காலத்தின் பணிகள்?

கூட்டுமுடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு என்பதற்கும் அப்பால் விவாதங்களுக்கும் செயல்பாட்டுக்குமான நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதற்கும் கருத்தொற்றுமையை உருவாக்கிச் செயல்பட வைப்பதிலும் என் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாலும், நானிருந்து செய்தாக வேண்டிய சொந்தவேலைகள் எதுவும் இப்போதைக்கு எனக்கு இல்லாதிருந்ததாலும் இது சாத்தியமாயிற்று. கருத்துரிமைக்கு கடும் அச்சுறுத்தல் உருவாவதை முன்னறிவித்து “கருத்துரிமை போற்றுதும்” கூடுகை, தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான கருத்துருவாக்கத்தில் முன்னோடியாக “கல்வி உரிமை மாநாடு”, “பெண் எழுத்தும் வாழ்வும்” முகாம், பொதுமுடக்கக் காலத்திலும் இணையவழியில் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், இணையவழியில் திரைப்பள்ளி (இப்போது நேரடியாக நடக்கிறது), அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி நாடகப்பள்ளி, நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாடுகள், நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான உதவிகள் என்று இக்காலத்தில் இடையறாத வேலைகள் நடந்துள்ளன. மேலெழுந்த பிரச்னைகள் அனைத்திலும் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

அமைப்பினரின் கலைஇலக்கியச் செயல்பாட்டு மட்டத்தை உயர்த்துவது, கலைஇலக்கிய நாட்டமுள்ள எவரொருவரையும் தவறவிடக் கூடாது என்பதற்காக “வீடுதோறும் உறுப்பினர், வீதிதோறும் கிளை” என்று அமைப்பினை விரிவுபடுத்துவது, எமது அமைப்புடன் நெருங்கிவரத் தயங்கும் கலை இலக்கியவாதிகளுடனும் பண்பாட்டு ஊழியர்களுடனும் தோழமை பேணுவது, தமிழகத்தின் வினைத்திறன்மிக்க கலைஇலக்கிய அமைப்பு என்னும் நற்பெயரை திடப்படுத்துவது என இனிவரும் காலத்துப் பணிகள் எம்மை அழைக்கின்றன.

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: நாங்கள் காண்பது கூட்டுக் கனவு… நேர்காணல்: மதுக்கூர்  ராமலிங்கம்  சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: நாங்கள் காண்பது கூட்டுக் கனவு… நேர்காணல்: மதுக்கூர் ராமலிங்கம் சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன்




நீங்கள் தமுஎகச-வில் இணைந்த கதையைச் சொல்லுங்கள்

மதுக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1970-களில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்றதுண்டு. அந்தச் சிற்றூரில் அமைந்திருந்த அரசு நூலகம் வாசிப்பு வாசலைத் திறந்துவிட்டது. அந்த ஊரில் நடைபெறும் கோவில் விழாக்கள் மற்றும் மீலாது விழாக்கள் இலக்கிய விழாக்களாகவே நடைபெறும். என்னுடைய தந்தை மு.சந்திரன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வராதவர். இயல்பாகவே எங்கள் குடும்பம் காங்கிரஸ் குடும்பமாக இருந்தது. காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசில் மாணவர் பருவத்தில் எனக்கும் ஈடுபாடு இருந்தது. இந்தப் பின்னணியில் தான் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை பொருளாதார வகுப்பில் சேர்ந்தேன். அப்போது ஜனதா கட்சி உருவாகியிருந்த பின்னணியில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாணவர் ஜனதா மாவட்டச் செயலாளராக இருந்தேன். அப்போது காங்கிரசில் பிரபல பேச்சாளர்களாக இருந்த நெல்லைஜெபமணி, கோ.கலிவரதன், தமிழருவி மணியன், தஞ்சை இளஞ்சிங்கம் ஆகியோரடு சேர்ந்து மேடையைச் சுற்றி வந்திருக்கிறேன்.

மறுபுறத்தில் புதுக்கவிதை பேரலையாக எழுந்திருந்த காலம். அநேகமாக கல்லூரி மாணவர்கள் அனைவருமே கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படித்தான் நானும்.

பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் கவியரசர் கண்ணதாசன் மறைவையொட்டி நடைபெற்ற இரங்கல் கவியரங்கில் என்னையும் போட்டுவிட்டார் எனது பேராசிரியர் சோ.சிங்காரவேலன். நான் பதறிப்போய் அவரிடம் சென்று எனக்குக் கவிதை எழுத வராதே என்றேன். அவர் தான் “எழுதிப் பார் வரும்” என்றார். அப்படி எழுதப்பட்ட கவிதையை இரங்கல் கூட்டத்தில் வாசித்தேன். அதன்பிறகு தொடர்ந்து கல்லூரி விடுதி அறிவிப்புப் பலகையில் தினமும் ஒரு கவிதைதைய எழுதிப்போடுவேன். கைகழுவும் இடத்தில் இருந்த அந்த அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்ட கவிதைகளை மாணவர்கள் படித்துவிட்டு கைகழுவிவிட்டுப் போவார்கள்.இவற்றைப் படித்த சில நண்பர்கள் “நீ ஏன் புத்தகம் போடக்கூடாது” என ஏற்றி விட்டனர். அதை நானும் சீரியசாக எடுத்துக்கொண்டு புள்ளியில்லா கோலங்கள் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுத்தேன். மயிலாடுதுறைக்கு வேறு வேலையாக வந்த கவிஞர் வைரமுத்துவை மடக்கி முன்னுரையும் வாங்கிவிட்டோம். கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் அந்த நூலை வெளியிட்டார். கல்லூரி நிர்வாகமே செலவை ஏற்றுக்கொண்டது. மெஸ் பில்லுடன் கவிதை நூலுக்கான ரூ.500-ஐயும் சேர்த்துவிட்டது தனிக்கதை.

அடுத்து அதே கல்லூரியில் முதுகலை படிக்கும்போது காய்க்கத் தெரியாத காகிதப்பூக்கள் என்ற நூலை வெளியிட்டேன். விடுதியில் இருந்ததால் சந்தைப்படுத்துதல் கடினமாக இல்லை. இதன்பிறகு பொருளாதாரத்தில் எம்.பில்,. ஆய்வுப்படிப்பிற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்கு மார்க்சிய பொருளாதார அறிவியர் வெ.ப.ஆத்ரேயா பணியாற்றினார். அப்போது நான் கையில் ஏர்-உழவன் சின்னம் பொறித்த மோதிரம் அணிந்துகொண்டிருப்பேன்.

அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மார்க்சிய இயக்கத்திற்குள் கொண்டுவருவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் தான் என்னை முதன்முதலில் கட்சிக் கிளையில் சேர்த்தார். துவக்கத்தில் அவரது வீட்டில் தான் கட்சிக் கிளைக் கூட்டங்கள் நடைபெறும். அவர் வீட்டில் கிடைக்கும் தேநீரின் ருசி இன்னமும் நாவில் மிச்சமிருக்கிறது. என்னிடம் இருக்கும் அரசியல் ஆர்வத்தை அறிந்து வகுப்பு முடிந்தவுடன் அழைத்து தொடர்ந்து பேசுவார். அவர் என்னிடம் முதன் முதலில் படிக்கக் கொடுத்த நூல் தோழர் கு.சி.பா எழுதிய “சங்கம்” நாவல். அதைத் தொடர்ந்து பல புத்தகங்களைக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

ஒரு நாள் தமுஎச திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த முகிலிடம் அழைத்துச் சென்று என்னை அறிமுகப்படுத்தினார். தோழர் நந்தலாலாவும் அப்போது திருச்சியில் தான் இருந்தார். முகில், நந்தலாலா, புதிய கம்பன், அக்னிக்குஞ்சு உள்ளிட்டவர்கள் இணைந்து சோலைக்குயில்கள் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் திருச்சி மலைக்கோட்டை அருகிலுள்ள இப்ராஹிம் பூங்காவில் கவிதை வாசிப்பு நடத்துவார்கள். மனுஷ்யபுத்திரன். பிச்சினிகாரி இளங்கோ, பொன்னிதாசன், இரா.எட்வின் ஆகியோர் வந்து கவிதை படிப்பார்கள். அவற்றைத் தொகுத்து சிறுநூலாக வெளியிடுவார்க்ள். இவ்வாறாக தேசியநீரோட்டத்திலிருந்து விலகி தமுஎச-வால் ஈர்க்கப்பட்டேன். அப்போது தமுஎக திருச்சி மாவட்ட மாநாடு நடைபெற்றது. தோழர்கள் மேலாண்மை பொன்னுச்சாமியும், ச.தமிழ்ச்செல்வனும் பேச வந்திருந்தார்கள். அதுவரை கேட்ட பேச்சுக்களிலிருந்து அது வித்தியாசமாக இருந்தது. தோழர் தமிழ்ச்செல்வன் ” வெயிலொடு போயி சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார். அந்த அட்டை இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறது. அதே ஆண்டு திருச்சியில் தமுஎச மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு தான் நான் மட்டுமல்ல, தோழர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் பங்கேற்ற முதல் மாநில மாநாடு. கே.முத்தையா, அருணன், கந்தர்வன், ச.செந்தில்நாதன் உள்ளிட்ட பல தலைவர்களை அப்போதுதான் பார்த்தேன். திருச்சி தேவர் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாடு அது.

பலரும் திருச்சியில் திருப்புமுனை மாநாடு என்பார்கள். என்னைப் பொருத்தவரை தமுஎச மாநாடு தான் உண்மையில் திருப்புமுனையாக அமைந்தது. திருச்சியில் படிப்பை முடித்த பிறகு தஞ்சையில் தமுஎச-வுடன் பயணம் தொடர்ந்தது. தோழர்கள் கோ.பாரதிமோகன், ச.ஜீவபாரதி, வல்லம் தாஜ்பால், ஆர்.தாமோதரன், நாகை.மாலி, ரகுபதி, புலவர் சௌ.ராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றுபட்ட பல ஆளுமைகள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டக்குழுவில் இருந்தார்கள். தஞ்சை மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் பிரிந்த பிறகு தஞ்சை மாவட்ட தமுஎச தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன்.ஆண்டுதோறும் பட்டுக்கோட்டையில் நடைபெறும் மக்கள் கவிஞர் விழா என்னை வளர்த்துக்கொள்ளவும் அமைப்பிற்குள் பணியாற்றவும் பெரும் உதவியாக இருந்தது.தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அறிவியல் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட கிழக்குக் கடற்கரைச் சாலை கலைப் பயணத்தில் ஒரு கலைஞனாகப் பங்கேற்றேன். பிரளயன் தான் கலைக்குழுவின் தலைவர். போப்பு, ஷாஜகான், ந.முத்துநிலவன் உள்ளிட்ட தோழர்களும் அந்தக்குழுவில் இருந்தனர். அது ஒரு நல்ல அனுபவம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்த பிறகு மதுரை மாவட்ட தமுஎச-வோடு தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாக திருப்பரங்குன்றம் கிளையின் சார்பில் இயங்கிய வேடந்தாங்கல் என்னையும் இணைத்துக்கொண்டது. தோழர்கள் சு.வெங்கடேசன், வெண்புறா, சோழ.நாகராஜன் ஆகியோர் ஒரு கூட்டுப் பறவைகள்

தோழர் கே.முத்தையாவுடனான உறவும்-தோழமையும் பற்றி…

மதுரை பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்த போது தோழர் கோ.வீரய்யன், கே.எம்.அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். தீக்கதிர் அலுவலகத்திற்கு அந்தக் கடிதத்துடன் வந்து அவரைச் சந்தித்தபோது “வாங்க.. வாங்க…” என்று வரவேற்றார். பல்கலைக்கழகப் பணி முடிந்தவுடன் தினமும் மாலையில் தீக்கதிர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள் என்றார். தோழர் குமரேசன் முதலில் ஒரு செய்தியைக் கொடுத்து எழுதச் சொன்னார். அடுத்த நாள் தீக்கதிரில் அது வெளியாக, பித்துப் பிடித்துவிட்டது. அடுத்து தோழர் அருணனிடம் கே.எம்.ஆற்றுப்படுத்தினார். எழுத்தின் நுட்பங்களை அவர்தான் முழுமையாக சொல்லிக்கொடுத்தார். ஒரு நிலையில் “பல்கலைக்கழகப் பணியை விட்டுவிட்டு முழுநேரப் பணியாக தீக்கதிருக்கு வந்துவிடு.” என்றார் தோழர் கே.எம். நிறைய தயக்கம் இருந்தது. இடையில் இரண்டு கல்லூரிகளில் கிடைத்த பேராசிரியர் பணிக்கும் செல்லவில்லை. தோழர் நல்லசிவன் அழைத்துப் பேசி “நீ தீக்கதிரில் தான் பணியாற்ற வேண்டும்” என்று கூறியதை மறுக்கமுடியவில்லை.

தோழர் கே.முத்தையா தீக்கதிர் அலுவலகத்திலேயே தங்கியிருப்பார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது. அவர் மேற்கொண்டிருந்தது ஒரு துறவு வாழ்க்கை. காலையில் இருவரும் சேர்ந்து டீ போட்டுக் குடிப்போம். நானும் அலுவலகத்தில்தான் தங்கியிருந்தேன். எப்போதும் அவருடனே இருக்கும் அரிய வாய்ப்பு அது. “இவன் என் மகன்” என்றுகூட சிலரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரிடம் கற்றுக்கொண்டது, பெற்றுக்கொண்டது ஏராளம். அவர் தான் பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தார். என் திருமணத்தை முடிப்பதற்காக இரண்டொரு முறை மதுக்கூரில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமும் பேசிவிட்டார். இவர் தான் ஏதோ மந்திரப்பொடி போட்டு என் மகனை வழி மாற்றி அழைத்துக்கொண்டு போய்விட்டார் என்று என் அம்மா உறவினர்களிடம் சொல்லியது முன்னுக்கு வருகிறது. தஞ்சையில் நடைபெற்ற திருமணத்தை என்.சீனிவாசன், ஆர்.சி.பழனிவேலு போன்ற தலைவர்கள் தான் நடத்தி வைத்தனர். கோ.வீரய்யன் உட்பட மாவட்டத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டுவந்து நடத்தி வைத்த திருமணம் அது. கே.எம். கூறியபடி ஒவ்வொரு கமிட்டியும் ஆளுக்கொரு பொருளாக வாங்கிக் கொண்டுவந்து கொடுத்ததை மறக்க முடியாது. திருமணத்தின் போது குடும்பம் தொடங்குவதற்கான பண்ட பாத்திரங்களை வாங்கிக் கொடுத்தார். அவர் சென்னைக்குச் செல்லும் வரை நிழல் போல அவரையே பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். அவர் செல்லும் கூட்டங்களுக்கு என்னையும் அழைத்துச் சென்று அவர் பேசுவதற்கு முன் என்னைப் பேசவைத்து ரசிப்பார். எழுதுவதைச் செப்பம் செய்து கொடுப்பார். பல கட்டுரைகளை அவர் சொல்லச் சொல்ல எழுதிக்கொடுத்திருக்கிறேன்.

தோழர் பி.ராமமூர்த்தி இறந்தபோது நான் எழுதிய ஒரு கவிதையை செல்லுமிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். என்னிடம் ஏதாவது மேன்மை இருந்தால் அதற்கு அவரே பொறுப்பு. அவர் ஒரு ஞானத்தந்தை.

அன்றைய தமுஎச-விற்கும் இன்றைய தமுஎச-விற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்… வளர்ச்சி குறித்து குறிப்பாக சிலவற்றை சொல்ல முடியுமா?

செம்மலர் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட தமுஎச அடிப்படையில் ஒரு எழுத்தாளர் அமைப்பாகவே தொடக்கத்தில் இருந்தது. இலக்கியம் படைப்பதே பிரதான பணியாக இருந்தது. பிற்போக்கு இலக்கியங்களுக்கு எதிராக கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவசரநிலைக் காலத்தில் உருவான இந்த அமைப்பு கருத்துரிமைக்கான போரில் எப்போதும் முன்நின்றுவந்துள்ளது. தோழர் எஸ்.ஏ.பி. போன்றவர்களின் முயற்சியால் நிறைய கலைஞர்கள் இந்த அமைப்பால் ஈர்க்கப்பட்டார்கள். தமிழ் இலக்கிய உலகில் தமுஎச தலைவர்கள் நடத்தி வந்துள்ள விவாதங்களை தொகுத்தால் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக அது அமையும்.பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும் திருவண்ணாமலையில் தொடங்கி திருப்பரங்குன்றத்தில் பறந்து தமிழகம் முழுவதும் ஒளிர்ந்த கலை இரவுகள் தமுஎச-வை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றது.

கலை இரவு மேடையால் அடையாளம் காடடப்பட்ட பேச்சாளர்கள், கலைஞர்கள் ஆயிரம் ஆயிரம். கலை இரவு பார்த்துதான் திரைத்துறைக்குச் சென்றேன் என்று கூறும் கலைஞர்கள் ஏராளம். மறுபுறத்தில் நாவல், சிறுகதை, நாடகம், இசைப்பாடல்கள் எனஆண்டுதோறும் ஏராளமான பயிற்சி முகாம்கள்.தொடக்கத்திலிருந்தே கலைஞர்கள் இந்த அமைப்பில் இருந்தாலும் பெயரிலும் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக தமுஎச தமுஎகச-ஆக மாறியது. பண்பாட்டுப் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து முகம் கொடுத்து வந்தாலும் திருவண்ணாமலை மாநாடு ஒரு பெரும் பாய்ச்சலாக மாறி இது தற்போது கலை-இலக்கிய-பண்பாட்டு பேரமைப்பாக வளர்ந்துள்ளது. அவ்வப்போது பயற்சிமுகாம்கள் நடத்திவந்த நிலையில், நிரந்தர திரைப்படப் பள்ளி, நாடகப் பள்ளி என கலை-இலக்கிய-பண்பாட்டு நிறுவனமாக தற்போத நிமிர்ந்து நிற்கிறது தமுஎகச.

முப்பெரும் ஆளுமைகளான பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையாரை இத்தனை காலம் முன்னோடிகளாகக் கொண்டிருந்த தமுஎகச ஐம்பெரும் ஆளுமைகளாக கவிஞர் தமிழ் ஒளியையும் பால சரஸ்வதியையும் இணைத்தது ஏன்?

பாரதியின் தேசியம், விடுதலை உணர்வு, பாவேந்தரின் பகுத்தறிவு, பட்டுக்கோட்டையாரின் பொதுவுடைமை என மூன்று தத்துவப் போக்குகளையும் ஒன்றிணைத்தே முப்பெரும் ஆளுமைகளைத் தேர்வு செய்தனர் எம் முன்னோடிகள். அவர்களது நிர்ணயிப்பு மிகச்சரியானது.எனினும் வளர்ச்சிப்போக்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது. கவிஞர் தமிழ்ஒளியை எப்போதும் போற்றிக் கொண்டாடியே வந்துள்ளது. முற்போக்கு தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய பங்களிப்பு மகத்தானது. பாரதியின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் அவர். சிங்காரவேலர் மே தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினார் என்றால் மேதினத்தை முதன்முதலில் பாடியவர் தமிழ்ஒளி. நிலைபெற்றசிலை, ஈராயி, மே தின ரோஜா போன்ற அவரது காவியங்கள் நிகரற்றவை. பொதுவுடைமைக் கொள்கையைப் பாடியதோடு இந்தியாவிற்கே உரிய சாதிச் சிக்கல்களை சரியாகப் புரிந்து கொண்டு அதையும் தமது படைப்புகளில் கொண்டு வந்தவர். எனவே அவரையும் தமுஎகச ஆளுமைகளில் இணைக்க வேண்டுமென்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது.

தஞ்சாவூர் பாலசரஸ்வதி தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இழிவு செய்யப்பட்ட பரதக்கலைக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தவர். உலகளவிலான பல்கலைக் கழகங்களில் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்தவர். சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர். கலையைப் போற்றும் தமுஎச அவரையும் தன்னுடைய ஆளுமைகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஐம்பெரும் ஆளுமைகள் பல்வேறு தத்துவ போக்குகளை, கலை-இலக்கிய வடிவங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளனர். காலப்போக்கில் கள மாற்றத்தில் நிகழ்ந்துள்ள இயல்பானதொரு மாற்றம் இது.

கலை-இலக்கிய அமைப்பாகத் தொடங்கப்பட்ட தமுஎச இன்று பண்பாட்டு அமைப்பு போல செயல்படத் தொடங்கியிருப்பது தற்செயலானதா? திட்டமிட்டதா?

தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று அது ஒரு பண்பாட்டு அமைப்பாக செயல்பட்டதாகும். தீபாவளிக்கு மாற்றாக பொங்கல் விழாவை முன்னிறுத்தியது பெரும் பாய்ச்சலாகும். பழமையில் வேரூன்றி இருந்த பண்பாட்டை அவ்வியக்கம் பல வகையில் அசைத்தது. இன்றைக்கு சனாதனவாதிகள் பண்பாடு என்ற பெயரிலேயே பழமையை, அழுக்கைத் தக்க வைக்க முயல்கிறார்கள். இதற்கெதிரான உழைக்கும் மக்கள் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை தமுஎகச உணரந்தது. நாட்டில் மட்டுமல்ல வீட்டிலும் கூட நிறைய பண்பாட்டு மாற்றங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. ஆண்களும் சமைக்க வேண்டும். குடும்ப வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பேசத் தொடங்கிய தமுஎகச வாழ்வியல் நிகழ்வுகளில் மட்டுமல்ல, இறப்பு நிகழ்ச்சியிலும் கூட முற்போக்கு விழுமியங்கள் உயிர்த்திருக்க வேண்டுமென தற்போது பேசத் தொடங்கியுள்ளது. சடங்குகளை மறுத்து உடல் தானம் செய்வதற்கான படிவங்கள் பரபரப்பாக விநியோகிக்கப் படுகின்றன. காலத்தின் இன்றைய தேவைக்கு முகம் கொடுக்க வேண்டுமானால் பண்பாட்டு வேர்களை விசாரிக்க வேண்டியது அவசியம். காலத்தின் தேவையை உணர்ந்து கொண்டதால் நிகழ்ந்துள்ள இயல்பான மாற்றம் இது.

பிற கலை-இலக்கிய அமைப்புகளிடமிருந்து தமுஎகசவை வேறுபடுத்திக்காட்டும் சிறப்பம்சம் எவை எனக்கூறுவீர்களா?

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான கலை-இலக்கிய அமைப்புகள் இயங்குகின்றன. ஒத்த கருத்துள்ள அமைப்புகளுடன் ஒத்திசைவாக இயங்க ஒரு போதும் தவறியதில்லை. பல்வேறு அமைப்புகளோடு இணைந்து இயங்கி வருகிறது.இங்கு தனிநபர்கள் முன்னிறுத்தப்படுவதில்லை. தத்துவம் தான் இந்த அமைப்பை வழி நடத்துகிறது. கால மாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வது இந்த அமைப்பின் பெரும் சிறப்பு.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமின்றி ஆர்வலர்கள், ரசிகர்களையும் தமுஎகச உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வது ஏன்?

ரசிகன் இல்லாத கலையும், அழகும் பெருமை கொள்ளாது என்பார் கண்ணதாசன். மரத்தில் பழம் பழுத்து தொங்குவதும் கலை என்பார் பட்டுக்கோட்டையார். படைப்பாளிகள் எந்தளவிற்கு முக்கியமானவர்களோ. அந்தளவிற்கு முக்கியமானவர்கள் வாசகர்கள். அவர்களை ஒரு படி மேலானவர்கள். அதே போல கலை-இலக்கிய ஆர்வலர்களும் இந்த அமைப்பின் வேர்களாக விளங்குகின்றனர். தமுஎகச திரைப்பட உருவாக்க முகாம்களை மட்டுமல்ல, திரைப்பட ரசனை முகாம்களையும் நடத்தியுள்ளது. தேரில் இருக்கிற சிலைகள் மட்டுமல்ல. தேரை இழுத்துச் செல்கிற கரங்களும் முக்கியமானவை. ஆர்வலர்கள், ரசிகர்கள், வாசகர்கள் என எல்லோரையும் இணைத்துச் செல்வதால் தான் இந்த அமைப்பு சில நூறு பேரைக் கொண்டதாக மட்டுமின்றி பல ஆயிரம் பேரைக் கொண்ட பேரமைப்பாகவும் பயணிக்கிறது. இது தொடரும்.

தமுஎகச-வின் எதிர்காலம் குறித்து தங்களுக்குள்ள கனவு பற்றி…

தமிழகத்தில் தற்போதுள்ள கலை-இலக்கிய அமைப்புகளிலேயே அளவில் மட்டுமல்ல. போர்க் குணத்திலும் தமுஎகச-வே பேரமைப்பாக விளங்குகிறது என தன்னடக்கமாக கூறமுடியும். இன்னமும் கூட இந்த அமைப்பு மண்ணில் வேர் பற்றி விண்ணைத் தொட வேண்டும் என்பதே இந்த அமைப்பிலுள்ள ஒவ்வொருவரது கனவும் ஆகும். இங்கு கனவு என்பதே தனி நபர் சார்ந்ததாகவே உள்ளது. எங்களது கூட்டுக் கனவு. எல்லாப் பறவைகளும் வந்து தங்குகிற பெரு மரமாக, எல்லாப் பயணிகளும் இளைப்பாறுகிற பெரும் நிழலாகவும் இந்த அமைப்பு வளர வேண்டும் என்பதே எம் கனவு.

தமிழகப் பண்பாட்டு வெளியில் கடந்த 50-ஆண்டுகளில் தமுஎகச ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?

படைப்புரிமை, கலையுரிமை, கருத்துரிமைக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கொதித்தெழுந்து போராடும் அமைப்பு இது. அதற்கு ஒரு உதாரணம் தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் அச்சுறுத்தப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வீதிமன்றத்தில் மட்டுமல்ல நீதிமன்றத்திற்கும் சென்று வழக்காடி கருத்துரிமைக்கு ஆதரவான தீர்ப்பை தமுஎகச பெற்றுத் தந்ததை சொல்லலாம்.எதிரிகளால் அதிகமாக அவதூறு செய்யப்படும் படைப்பாளிகள், கலைஞர்களில் பலர் நாங்களாகவே இருக்கிறோம். இது எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம். கலை இரவுகள்

தமிழ்ச் சமூகத்திற்கு தமுஎகச தந்த கொடை. அதை நகலெடுக்க முயன்ற பலர் தத்துவ வறுமையால் தோற்றுப் போனார்கள். பேசாப் பொருளை பேசியிருக்கிறோம். அதனாலேயே தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்ச் சமூகத்தின் தடத்தையே மாற்றிவிட்டோம் என்று கூறவில்லை. ஆனால், பண்பாட்டுப் பெருவெளியில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறோம் என்று கூறமுடியும். மதவெறி, சாதிவெறி முன்வைப்பதே பண்பாடு என்பதை மாற்ற முயன்று கொண்டிருக்கிறோம். உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயரத்தில் நிறுத்தும் வரை ஓய மாட்டோம்.

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: மக்கள் கலைஞன் ராமு! – கருப்பு அன்பரசன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: மக்கள் கலைஞன் ராமு! – கருப்பு அன்பரசன்




சைதை ராமு.. ஆட்டோ ராமு… பூ ராமு இப்படி எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் அவர் எனக்கு சித்தப்பா ராமு மட்டுமே என்றும். கருப்பு கருணாவின் அறிவுறுத்தலோடு தலைநகர் சென்னைக்கு 1987ஆம் ஆண்டின் இறுதியில் வந்து சேர்கிறேன். 1989ல் சென்னை கலைக்குழுவில் இணைகிறேன்.

1990 ஆம் ஆண்டில் சென்னை கலைக்குழு சத்யாகிரகம் மேடை நாடகத்தின் தயாரிப்பு பணியில் கலைஞர்களின் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியது.. அந்த சந்திப்பின் போது தான் ராமுவின் அறிமுகம் எனக்கு. அன்று தொடங்கிய சந்திப்பு, கலைக்குழு.. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மார்க்சிஸ்ட் கட்சி.. குடும்பம்.. திரைப்படம் இப்படி பல தளங்களிலும்.. அவரின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இயக்குனர் கௌதம் ராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடிப்பது வரையிலும் எங்களின் சந்திப்பு தொடர்ந்து வந்தது.

சென்னை நகரில் இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் தோழர்களை சரியானதொரு அரசியல் புரிதலோடு வளர்த்தெடுப்பதிலும் களமாட செய்வதிலும் திறன் மிகுந்த தோழர்.

அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்னை ஸ்பென்சர் அருகில் பல ஆயிரக்கணக்கான தோழர்கள் அணி திரண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவின் நயவஞ்சகத்தை தோலுரிக்கும் வகையில் வேடமணிந்து ஊர்வலத்தின் முதலாவது
ஆளாக ராமு நிற்கிறார். அன்றைக்கு இருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு அதன் காவல்துறை ஊர்வலத்தை நடத்த அனுமதி மறுக்கிறது. அனுமதியை மீறி ஊர்வலம் செல்ல முற்படும் பொழுது காவல்துறை கடுமையான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கச் செய்தது. கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ராமு அங்கே பெண் தோழர்களும் தாக்கப்படுவதை கண்முன்னே கண்டு வெகுண்டு சினம் கொள்கிறார்.. அவரின் கோபம் காவல்துறையினர் மீது பதில் தாக்குதலாக நடைபெறுகிறது. அதைக்கண்ட தோழர்கள் அவர்களும் பதில் தாக்குதலை நடத்துகிறார்கள் காவல்துறைக்கு எதிராக.. அந்த நேரத்தில் காவல்துறை பின்வாங்கியது. அதன் காரணமாகவே பல பெண்
ஊழியர்களை.. இளைஞர்களை நம்மால் காவல்துறையின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடிந்தது. அதன் பிறகு பெரும்படையோடு காவல்துறை வந்து சேர்ந்தது என்பது வேறு விஷயம்.. அந்த நேரத்தில் நடைபெற்ற எதிர் தாக்குதல்தான் நம்முடைய ஊழியர்கள் பலரை காவல்துறையின் கடுமையான திட்டமிட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க வைத்தது. எதிர் தாக்குதல் என்பதுதான் நம்முடைய ஊழியர்களை காவல்துறையிடம் இருந்து அந்த நேரத்தில் காப்பாற்ற முடியும் என்று யூகித்து அதைச் சரியாக செய்து முடித்தார். எந்த திமுக அரசு காவல்துறை கொண்டு நம்மை தாக்கியதோ.. அதே திமுக அரசை அன்றைக்கு மத்திய அரசு கலைத்த பொழுது அதை கண்டித்து முதல்
போராட்ட முழக்கமிட்டவர் தோழன் ராமு.. கைகளால் சுவரொட்டி எழுதி சைதாப்பேட்டை முழுவதும் தன்னுடைய ஆட்டோவில் எடுத்துக்கொண்டு ஒட்டி முடித்தவர் தோழன் ராமு. அந்த அளவிற்கு மிகச்சரியான அரசியல் புரிதலோடு களத்திலும் அறிவுத் தளத்திலும்
இயங்கக் கூடியவர்.

கலை இலக்கிய இரவு என்கிற வடிவம் திருவண்ணாமலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் அதனை தமிழகம் முழுவதிலும் கொண்டு சென்றதில்.இப்படியான கலை இலக்கிய இரவுகளை நடத்திட நம்முடைய ஊழியர்கள் கவனம் செலுத்தி நடத்துவது அவசியம் என்கிற ஒரு
கருத்தினை மாநிலத் தலைமை உணர்ந்து பேச வைத்ததில், யோசிக்க வைத்ததில் சைதை கலை இரவு முக்கிய பங்காற்றியது. 1993 ஆம்
ஆண்டு டிசம்பர் 31ல் சென்னையில் நடைபெற்ற அந்த முதல் கலை இரவை மிகச் சிறப்பான முறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பார்வையாளர்களை; சென்னை நகரம் முழுவதும் இருந்து பொதுமக்களை ஊழியர்களை அணிதிரட்டியதில் கலை இரவு மேடையை வடிவமைத்ததில்; நகரம் முழுவதிலும் தன்னுடைய வித்தியாசமான மாற்றி யோசிக்கும் பிரச்சார உத்திகளை கொண்டு சென்றதில்.. சென்னை மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய கலை இலக்கியம் சார்ந்து இயங்கக் கூடிய பலதரப்பட்ட ஊழியர்களை அரவணைத்து கலை இரவை
நடத்திக் காட்டியதில் ராமுவின் பங்கு மகத்தான ஒன்றாகும்.

அறியாமையிலும் சரியானதொரு அரசியல் புரிதல் இல்லாமலும் இருக்கும் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டுவதில் தமிழகத்தில் ஆகப் பெரிய பங்களிப்பு என்பது கலை இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு என்பதில் உறுதியாக நம்பினார் தோழன் ராமு. கலை இலக்கியங்கள் எல்லாமும் எளிய மனிதர்களின் மொழியிலேயே இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டத்தில் பெண்களைக் கொண்ட “சக்தி கலைக்குழு’ உருவாக்கப்பட்ட பொழுது அந்த கலைக்குழுவின் கலைஞர்களுக்கு போதிய நாடகப் பயிற்சி அளித்து அவர்களை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு கொண்டு
செனன்றதில் இவரின் பங்கு மிகவும் பாராட்டுக்குரியது.

சென்னை ரிசர்வ் வங்கியில் 2006 ஆண்டு என நினைக்கிறேன் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையயொட்டி அங்கே இருக்கக்கூடிய பெண் ஊழியர்களை இணைத்து “மனிதி” என்கிற நாடகத்தை வங்கி நிர்வாகம் பாராட்டக்கூடிய அளவில் சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்தார். ரிசர்வ் வங்கி நிர்வாகம் 2007 ஆம் ஆண்டில் நடத்திய இலக்கிய விழா ஒன்றில் அங்கே இருக்கக்கூடிய அருந்தக ஊழியர்களை வைத்து “மனிதம்”
என்கிற நாடகத்தை இயக்கிக் கொடுத்தார்.

தி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு என்கிற குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பு குழந்தைகளை வைத்து அவர்களாகவே தானும் மாறி; அவர்கள் நடிக்கும் நாடகம் ஒன்றினை இயக்கி தயாரித்து அளித்தார்.

மனிதர்கள் இறப்பு நிகழ்வில் மட்டும் பாடக்கூடிய “மரண கானா விஜய்” என்கிற கானா பாடகரை அறிந்து, அவரை அணுகி அவர் குறித்தான வாழ்வியலை ஆவணப்படமாக எடுத்தளித்து மரண கானா விஜி என்கிற கானா பாடல் கலைஞனை தமிழகம் அறிந்த கலைஞனாக மாற்றியதில் ராமுவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

இப்படி எல்லா நிலையில் இருக்கக்கூடிய மனிதர்களோடு தன்னை எப்பொழுதுமே இணைத்துக் கொண்டு அவர்களோடு ஒருவராகவே வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் குழந்தைகளை கொண்டாடுவதும் அவர்களை தூக்கி சுமப்பது என்பது அவருக்கு நிகர் அவரே தன்னுடைய மரணம் மட்டும் . அவரோடு நெருங்கிய அனைத்து தோழர்களின் குடும்பங்களிலும் அவர் ஒருவராக மாறி போவார்.. அந்த குடும்பத்து குழந்தைகளுக்கு மாமாவாக இருப்பார், பெரியப்பாவாக இருப்பார், தாத்தாவாக இருப்பார் குழந்தைகளின் தோழனாக இருப்பார் . .
குழந்தைகளோடு குழந்தையாக இருப்பார் ராமு. தான் வாழ்ந்து மறைந்த மண்ணில் சாக்கி (சாக்லேட்) தாத்தாவாக இருந்திருக்கிறார்.

இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்படுகிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணமும் கலைஞன் ராமு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஒருவராக இருந்த பொழுது தமுஎகச மாநிலக் குழுவின் வழிகாட்டுதலோடு அருகில் இருக்கக்கூடிய மற்ற மாவட்டங்களில் இருந்து மிகப் பெரிய அளவிற்கு நாட்டுப்புறக் கலைஞர்களை அணிதிரட்டி சென்னை அண்ணா சாலையில் மிகப்பெரிய ஊர்வலத்தை நிகழ்த்தி அவர்களின் வாழ்வாதாரம் குறித்து; அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பல்வேறு தரவுகளை திரட்டி மறைந்த தோழர் நன்மாறன் அவர்களின் உதவியோடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக அன்றைக்கிருந்த கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு என்று தனி நலவாரியம் ஒன்றினை அமைத்தது.. நாட்டுப்புறக் கலைஞர்களின் உழைப்பினை சுரண்டி வாழும் பலர் அமைதியாக இருந்த பொழுது அக் கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசிய மக்கள் கலைஞன் தோழன் ராமு.

இயக்குனர் சசி அவர்களின் “பூ” என்ற திரைப்படத்தில் “பேனாகாரர்” என்கிற கதாபாத்திரத்தின் வழியாக தமிழக திரைத்துறைக்கு குணச்சித்திர நடிகராக அறிமுகமாகிறார். சைதை ராமு, ஆட்டோ ராமு, என்பது மறைந்து தமிழகம் முழுவதிலும் “பூ” ராமு என்ற மாபெரும் மக்கள் கலைஞன் தமிழ்த் திரைத்துறைக்குள் ராஜபாட்டையை தொடங்குகிறார் பூ திரைப்படத்தின் வழியாக. திரைத்துறைக்குள் பல்வேறு திரை ஆளுமைகள் தனது தொடர்பில் இருந்தாலும் . . திரைத்துறையில் தவிர்க்கமுடியாத திரைக் கலைஞனாக முன்னேறி இருந்தாலும்
எப்பொழுதும் எளியவாழ்க்கையை மேற்கொண்டார்.. எளிய மக்களோடு தன்னுடைய அன்றாட பயணத்தை வைத்துக் கொண்டார்.. தான் பேசிடும் வார்த்தைகளுக்கு அரிதாரம் பூச தெரியாதவர். தான் ஏற்றுக் கொண்ட கருத்துக்களுக்கு எப்பொழுதுமே நியாயம் சேர்ப்பிக்க தன்னால் முடிந்த அனைத்து தளத்திலும் அறிவு மற்றும் உடல் உழைப்பினையும் தொடர்ந்து செலுத்தி வந்த மகா கலைஞன் ராமு.

செயல் என்ற சொல்லுக்கு உதாரணமாக தன்னுடைய வாழ்வினை கம்யூனிஸ்டாக வாழ்ந்து முடித்திருக்கிறார்.

– கருப்பு அன்பரசன்