அன்றொரு நாள் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினேன். வீட்டிற்கு கிளம்பும் முன்பே பழம், காய் என்று மூட்டையை நிரப்பிக் கொடுத்து விட்டனர். மூட்டை பைகளைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையம் வருவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது. பேருந்து நிலையம் மக்கள் கூட்ட மிகுதியோடு காணப்பட்டது.
என் ஊருக்கான பேருந்து வரும் வரை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரமாகியது, பேருந்து வரவே இல்லை. என்னைப் போலவே பலர் பேருந்தின் வரவை எதிர்பார்த்து, கன்னத்தின் மேல் கை வைத்து உட்கார்ந்திருந்தனர்.
பேருந்து வராததைக் கண்டு பலரும் உலக அரசியலையும், உள்ளூர் அரசியலையும் பேச ஆரம்பித்துவிட்டனர், பாட்டிகள் வெற்றிலை போட்டு மென்று கொண்டிருந்தனர்” பேருந்து எப்ப வரும்? எப்ப வரும்? என்று மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்த வேளையில் பேருந்து ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்குள்ளே வந்தது.
பேருந்து நின்றதும், சக பயணிகள் கையில் வைத்திருந்த மஞ்சள்பை, துண்டு, வாட்டர் கேன் என்று இருக்கைக்கு இடம் பிடிக்க ஜன்னல் வழியாக வீசினர். இறங்குபவர்களுக்கு வழி விடாமல் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். “இறங்கியபின் ஏறுங்களேன்! என்ன அவசரம்? என்று பலரும் முணுமுணுத்தபடியே இறங்கினார்.
நடத்துனர் செல்லமுத்து, ‘எல்லோரும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் இறங்குபவர்கள் இறங்கட்டும். பெறவு ஏறுவீங்க!’ என்று அவர் செல்லமாக சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. சற்றே கடிந்து கொண்டு “பஸ் என்ன பறந்தா போகுது. இப்பிடி ஏறுறீங்க” என கூற, ‘அப்படியே பறந்துட்டாலும், நேரத்துக்கு பஸ் வருமா?’ என கூட்டத்தில் இருந்தவர் பேருந்து நிலையமே சிரிக்க ஆரம்பித்துவிட்டது.
இறங்குபவர்கள், ஒருபுறம் சிரமப்பட, ஏறுபவர்கள் ஒரு வழியாக ஏறி அமர்ந்து விட்டனர். பெண்களுக்கு இலவசம் என்பதால் பெண் பயணிகளின் கூட்டம் ஆரவாரமாக காணப்பட்டது. பெண்களுக்கு மட்டும் பேருந்து பயணம் இலவசம். ஆண்களுக்கு பயணம் இலவசம் இல்லையே என்று எனக்கு ஒரு ஆதங்கம். ஆனாலும், என் அம்மாவும் அக்காவும் தங்கையும் இலவசமாக செல்வார்களே என்று மகிழ்ந்து கொள்வேன்.
எப்படியோ ஒரு வழியாக பேருந்தில் கூட்டத்தில் ஒருவனாக ஏறி விட்டேன். ஒருவர் எனக்கு பெருந்தன்மையுடன் உட்கார இருக்கையை தந்தார். அவருக்கு நன்றியை கூற வாயைத் திறந்தேன், அதற்குள் ஒரு பாட்டி என் முன் வந்து, “கண்ணா எனக்கு முட்டி வலி என்னால் நிக்க முடியாது, கொஞ்சம் உட்கார இடம் கொடுப்பா” என்றது.
அப்போதுதான் என் கல்லூரி பேராசிரியர் ஐயா ஒருவர் நினைவுக்கு வந்தார். அவர் ஒருநாள் பாடம் நடத்தும் போது ஏ பாசிட்டிவ் இரத்த வகை கொண்ட நபர்களுக்கு உதவும் பண்பு குறைவாக இருக்கும் என்றார். எனக்கோ ஏ பாசிட்டிவ் பிரிவு. அவர் கூறியது உண்மையோ, பொய்யோ ஏ பாசிட்டிவ் இரத்த வகை பிரிவு உடையவர்களும் உதவும் பண்பு கொண்டவர்கள் என்பதை நிரூபிக்க, அந்தப் பாட்டிக்கு இருக்கையை விட்டு விட்டேன்.
கூட்ட நெரிசலில் வியர்வை ஒருபுறமும், தலைவலி ஒருபுறமாகவும் தவித்துக் கொண்டிருந்தேன். தோளில் மாட்டி இருந்த பேக்கை கழற்றிக் கீழே வைத்தேன். சற்றே நிம்மதியாக இருந்தது. கூட்டத்தில் கண்டக்டர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்தார். அப்போதுதான் எந்த வேலையும் எளிமையல்ல என்பது புரிந்தது. பேருந்து மெதுவாக கிளம்பியது. சிறைப்பட்ட காற்று நீங்கி, புது காற்று உள்ளே நுழைந்தது. அந்நிமிடம் ஆழ்கடலில் மூழ்கியவன், கரை சேர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று இருந்தது
சற்றே நின்றபடி கண்ணை மூடினார். “ஏப்பா தம்பி! எங்க போற?” என்று கண்டக்டர் எழுப்பி விட்டார். பின் சில்லறையைக் கொடுத்து பயணச்சீட்டை வாங்கினேன். ஒவ்வொரு நிறுத்தத்திலும் கூட்டம் சற்று குறைந்து கொண்டு வந்தது. எப்படியோ உட்கார ஒரு இருக்கை கிடைத்துவிட்டது. அவ்விரவின் குளிர்ச்சி நிறைந்த காற்றுடன் 90களின் இசை ஒலித்தது. எப்போது வீட்டைச் சென்றடைவோம் என்று மனம் ஏங்கியது
ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. பேருந்தில் இருந்தவர்களின் இரைச்சலால் இளையராஜாவின் இசை மங்கியது. என்ன சத்தம்? ஏன் வெகு நேரமாகியும் பேருந்து நிற்கிறது? என்று எண்ணிக் கண் விழித்தேன்.
“சீக்கிரம் ஏற்று நேரமாகுது” என்று ஒருவரும், “நாங்கல்லாம் ஊடு போய் சேர வேணாமா” என்று மற்றொருவரும் கூறினார்.
ஏன் அப்படி பேசுகிறார்கள் என்று படிக்கட்டிற்கு சென்று பார்த்தேன். அங்கு ஒரு குடிகாரனை, அவனுடைய மனைவியும் மகனும் பேருந்தில் ஏற்ற சிரமப்பட்டு கொண்டிருந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் அவசரப்பட்டு கொண்டிருந்தார்களே தவிர யாரும் உதவி செய்வதாக இல்லை.
“யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா நேரமாகுது” என்று டிரைவர் கூற, நால்வரின் கைகளோடு என்னோடு கையும் உதவிக்கரம் நீட்டியது. அன்று நான் செய்த இரண்டாவது உதவி என்று பெருமிதம் கொண்டேன்.
படிக்கட்டிற்கு அருகிலேயே இருக்கை காலியாக இருந்தது. அதில் அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். சிறுவன் கம்பியைப் பிடித்துக் கொண்டு மௌனமாக நின்று கொண்டிருந்தான்.
எனக்கு அவர்களை முன்பே தெரியும். அந்த நபர் தினக்கூலியாக வேலைக்குச் செல்லும் கட்டிடத் தொழிலாளி, அவனுடைய மனைவி வீட்டைக் காக்கும் சாமானியப் பெண். அதனாலோ என்னவோ கணவனைக் காக்க வந்துவிட்டாள். பள்ளிச் சீருடை கூட மாற்றாமல், அவனது மகன் தன் தந்தையை அழைத்துச் செல்ல அம்மாவுடன் வந்து விட்டான். தந்தையின் தோளில் ஏறி சுற்றும் குழந்தைகளில், தந்தையையே தோளில் சுமக்கும் சிறுவன் அவன்.
“குடிகாரனை, கவுர்மெண்ட் பஸ்ஸில தா கூட்டி வரணுமா? வேற பஸ்ஸே இல்லையா?’ என்று பலரும் பல படியாக பேசியது, அவளுடைய காதில் விழுந்தது. எதையும் பேசாமல் கண்ணை கசக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பின் கண்டக்டர் அவளுக்கு மகளிர் சீட்டையும், கணவனுக்கும் மகனுக்கும் டிக்கெட்டையும் கொடுத்தார். அவள் தன் முந்தானையில் முடித்து வைத்திருந்த 50 ரூபாயை கொடுத்து மீதி சில்லறையை வாங்கி மீண்டும் முந்தானையிலேயே முடித்துக் கொண்டாள்.
பேருந்து வேகமாகச் சென்றது. ஸ்பீடு பிரேக்கில் தூக்கி போட்டது. குடிகார கணவன் ‘குவாக்’என்று வாந்தி எடுத்துவிட்டான். பிறகு என்ன செய்வாள் அவள், தன் முந்தானையிலேயே இருக்கையை சுத்தம் செய்தாள். பல அவமானங்களையும் தாங்கிக்கொண்டு கணவனை தோளில் சாற்றி நிறுத்தத்தில் இறங்கினாள்.
‘ஒரு வழியா குடிகாரன் போய் தொலைந்து விட்டான்’ என்று பலருடைய சிந்தையும் பேச்சும் கேட்டது. சற்றே தூரத்தில் என் வீட்டிற்கான பேருந்து நிறுத்தம் இறங்கிய பின் வீட்டிற்கு சென்று விட்டேன். ஆனாலும், அந்த குடிகாரனும் அவனுடைய குடும்பமும் என் சிந்தையில் வந்து கொண்டே இருந்தது.
நாட்கள் கடந்தன. அன்றொரு நாள் அதைப்போலவே, பேருந்து தாமதமாக வந்தது. கூட்ட மிகுதியும் குறையவில்லை இரைச்சல் சத்தத்திற்கு இடையே இளையராஜாவின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
திடீரென்று இசை மங்கியது. அந்த நிறுத்தத்தில் (ஒயின் ஷாப்) குடிகாரன் ஏறினான். அவனுடன் யாரும் இல்லை. சற்றே தெளிவாக இருந்தான். அழுது புலம்பிக்கொண்டே பேருந்தில் ஏறினான்.
அவன் பேசிய வார்த்தைகள் சற்றும் விளங்கவில்லை. என்னவோ என்று இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். குடிகாரனின் நிறுத்தம் வந்தது. திபுதிபுவென்று இறங்கி ஓடி, ஒரு சுவரின் முன் மண்டியிட்டுக் கொண்டு, “ஐயோ! என்ன விட்டுப் போயிட்டியே ” என்று தலையை அடித்துக் கொண்டு அழுதான்.
“ஏன் சுவரை நோக்கி அழுகிறான்” என்ற சுவரை உற்று நோக்கினேன். சுவரில் அவனது மனைவியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. பேருந்து மெதுவாக கிளம்பியது. கண்களில் கண்ணீர் வடிந்தது.
– நந்தகுமார்