வெதநெல்லு கவிதை – சிவபஞ்சவன்

வெதநெல்லு கவிதை – சிவபஞ்சவன்




வெதநெல்லு போட்டாச்சு
வெதச்ச நெல்லு நாத்தாச்சு
நாளுகெழம பாத்தாச்சு
நடவு நட தோதாச்சு

நாலு பேரு வந்தாக
நாத்துநட்டுப் போனாக
துட்டுப்பான காசாச்சு
களபறிக்க நாளாச்சு

பூச்சிக்கொல்லி தெளிச்சாச்சு
புளிச்ச தண்ணி சோறாச்சு
பூத்த நாத்து கருதாச்சு
ஊத்து தண்ணி கொறஞ்சாச்சு

ஆடுகன்ன வித்த காசில்
வண்டித் தண்ணி வாங்கியாச்சு
சூரியனின் தாகம் தீக்க
கெணத்துத் தண்ணி வானம்போச்சு

வட்டிக்குமேல் வட்டியாச்சு
வயலவச்சும் வாங்கியாச்சு
வண்டிகளா வந்தாச்சு
வயலறுத்துப் போயாச்சு

ஏரு ரெண்டு துண்டாச்சு
இருந்த பணம் கரைஞ்சாச்சு
எங்க ஊரு சாதிசனம்
எல்லதாண்டி போயாச்சு

அரசாங்கம் வெலவச்சு
அறுத்த நெல்ல கேட்டிருச்சு
கொலகார வயித்துப்பசி
கொடுக்குறத வாங்குனுச்சு

வயலுல போட்ட பணம்
வட்டியசல் கழிச்சிருச்சு
வெதச்ச நெல்லு
வெதநெல்லா
வீடு வந்து சேந்திருச்சு

ஒழச்சதுக்குக் கூலியில்ல

ஒலவைக்க ஒன்னுமில்ல
ஒதட்டுல சோகமில்ல
ஒட்டிய வயித்துல
கட்டிய ஈரத்துணி
கண்ணீரு விட்டழுதே
என்னனு எடுத்துச்சொல்ல

சிவபஞ்சவன்
முகவரி:
202/6 வடக்குத் தெரு,
சிவகாமியபுரம்,
எஸ்.ரமலிங்காபுரம், (த)
இராஜபாளையம், (வட்டம்),
விருதுநகர் மாவட்டம்.
பின்கோடு 626102.
செல்:80569 32253

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




குற்றம் கூறாதீர் அவளை..
*******************************
எப்போதும் எவரிடத்தும் கையேந்தும்..
அவளைக் குற்றவாளியாகக் கூற வேணாம்..
அர்த்தநாரி அவள்..
ஆடவர் கூட்டத்திலும் ஆணாக முடியாது..
தங்கையர் நடுவிலும் நிலைத்திருக்க இயலாது..

அவள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய வேணாம்
சமூகத்தின் உதாசீனத்தில் கண்ணீர் விடாது கலந்து வாழ்பவள் அவள்..
ஆணாதிக்க அசூயத்தில் தகவமைத்துக் கொள்பவள் அவள்..

அவள் பொருட்டும் பழி கூற வேணாம்.
பிழைப்புக்கு வழியில்லை
உழைப்பு வழங்கவும் மனிதர் இல்லை..
பணியுண்டு அது அவளுக்கில்லை..
பிறப்பின் பிணியுண்டு
அதில் அவளுக்குப் பங்குமில்லை..

கையேந்திக் கரம் நீட்டும் அவளை
ஒருபோதும் புறக்கணிக்க வேணாம்.
பசியுண்டு அவளுக்கும்..
மானமுண்டு அவள் வாழ்விற்கும்..
உரிமையுண்டு இந்தக்‌ காணிநிலமெங்கும்

இனி..
கையேந்தி சிரம் மீது கரம் வைக்கும்
அவளை வசைபாடிக் குற்றம் கூறாதீர்!!

கதையல்ல நிஜம்
************************
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்
அவளது குலுங்கும் சிரிப்பின் மௌன மொழி..
குமுறும் அடிவயிற்றின் ஆற்றவியலா வெறுப்பின் வலி..

அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்
பெற்ற பிள்ளையதன் பசியமர்த்த
மனதின் பாரத்தை மறைத்து
வலிய ஏற்கும் உடல் மீதான வன்மபாரமது.
சுகமல்ல..
அது ஒரு சுமை..

வயோதிக பெற்றோர்க்கு மருந்தாக வேண்டி
அரக்கர் கூட்டத்திற்கு விருந்தாகும் ..
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

முடமான குடும்பத்திற்கு
நான்கு கரமாக உருமாறும் அவளை
கரையான் கூட்டம் களித்து அரித்திட
தன்னை விரும்பியே வழங்கி நிற்கும்
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

இறப்பென்பது ஒருமுறையே நமக்கு..
அவளுக்கோ..
ஒவ்வோர் இரவும் மரணித்து
மீண்டு..
மீண்டும் ஒவ்வோர் விடியலிலும் மறுபிறவியெடுக்கும்..
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

அவளுடன் சமரசம் செய்யாவிடிலும்
பரவாயில்லை
சக மனுஷியாகக் கருதாமல்

நொறுக்காதீர்கள் அவளை.
ஆம்..
அவளை ஒருபோதும் ஒன்றுமே சொல்லாதீர்கள்..

து.பா.பரமேஸ்வரி
சென்னை.

வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்




காற்றின் சிறகில் அமர்ந்தவன்
***********************************
கனவுகள் இடையறாது தின்கின்றன
அவன் மெளனமாய் இருக்கிறான்
தீராத மெளனம் அமைதியில்லை
பாவமன்னிப்புக் கேட்கப் போகாதீர்கள்
சாத்தான்கள்
உங்கள் உடலைத் தின்னும்
கையாலாகாத கர்த்தர்
வேடிக்கை பார்ப்பார்
கடும் விஷமாய் வலி ஏறுகிறது
கண்ணீர் திரளுகிறது
வெடிபடும் வழி தான் புலப்படவில்லை.
மெளனத்துள் கரைய விரும்பினான்
கொந்தளிப்பு சூழலுள் பீறிட்டது
ஏகாந்தம் உடைபட
எதிர் வீட்டு நாயின் குரைப்பொலி
தூர ஒலிபெருக்கியின்
மந்திர உச்சரிப்பொலி
மழை வராமல்
ஒரே காற்றின் இரைச்சல்
மன வேதனை
உடல் நீயின்றி வேக
உயிரின் கொதியாட்டம்
விழிகளில் நீராய் வழிகிறது
நாடோடியாய்த் திரிவது
பறவையாய்ப் பாவனை கொள்வது
விடுபடுவது கனவுகளிலிருந்து எக்காலம்?

எரி நட்சத்திரத்தின் கதை
******************************
இறந்த பிறகு வாழ்க்கை தேவையில்லை
இறப்பிற்கு முன் தான் வாழ வேண்டும்
மரணத்திற்குப் பின் நடப்பதை அறிந்தவரில்லை
எல்லா நட்சத்திரங்களையும் பார்க்கிறேன்
எதுவும் என்னைப் பார்க்கவில்லை
இப்படித் தான் போகுது என் வாழ்க்கை
சொற்களெல்லாம்
இசையை நோக்கிப் போகின்றன
இசை கனவுகளாக குமிழியிடுகின்றன
கனவுக் குமிழிகளில்
நான் படகோட்டுகிறேன்
தலைவர்களைக் கண்டோம்
தொண்டர்களாய்ச் சீரழிந்தோம்
நிம்மதியான வாழ்வைப் பெறவில்லை
நிம்மதியில்லாமல் பிறந்தேன்
நிம்மதியில்லாமல் வாழ்கிறேன்
நிம்மதியில்லாமல் இறப்பேன்
கடந்தவை கனக்கின்றன
நடப்பவை உறுத்துகின்றன
வருபவை புகைகின்றன
காக்கா சத்தம் கேட்கலை
குருவி சத்தம் கேட்கலை
எந்திரங்களின் சத்தம் தான் கேட்கிறது.

– வசந்ததீபன்

காலத்தின் தீர்ப்பு  கடவுளின் தீர்ப்பு கவிதை – கலா புவன்

காலத்தின் தீர்ப்பு கடவுளின் தீர்ப்பு கவிதை – கலா புவன்




வெங்கொடுமைச் சாக்காடில்
விழவைத்தார் அன்றொருநாள்
பெண்களும் குழந்தைகளும்
வீழ்ந்தது போல்
துடித்தார்
துவண்டார்
மடிந்தார்
மரணமுற்றதே மனிதநேயம்
ஆண்டோரின் கொடுங்கோலாட்சி
அனைவரையும் ஓடவைத்தது
வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிமாண்டார்
மாளவைத்த மன்னராட்சி
அரக்கர்களின் அநியாய பிரதிபலிப்பு
வாய்க்கால் கரையோரம்
வசந்த தலைவனையே வீழ வைத்து
நோகடித்துச் சாக வைத்தார்
திக்கெட்டா நெடுந்தொலைவில்
தெறித்தோடி சென்றவர்கள்
உகுத்த கண்ணீர் பெருவெள்ளம்
வரலாறு திரும்பிற்று இன்று
பெருவலி தந்தவர்கள்
பெருத்த அவமானத்துடன் ஓடுகிறார்
திக்கேதும் அறியாமல்
தீவு தேடி ஒழிகின்றார்
இரத்தக் கண்ணீரே திரும்பிய பக்கமெல்லாம்
நிகர்தெளுந்து ஓடுகிறது
மனிதநேயம் அறியாதோர்
மன்னிப்புத் தேடியே
மன்பதையில் அடைக்கலம் நாடியே
மனுக்கள் பல விடுக்கின்றார்
அந்தோ பரிதாபம்
அனைத்துலகும் மெளனித்து
அலட்சியமே செய்யும்கால்
ஆண்டவனின் நீதியின்று
ஆழமாய்க் கோலோச்சுது

காலத்தின் தீர்ப்பு இதுவே
கடவுளின் தீர்ப்பும் இதுவே

ஆமென்

கலா புவன் – லண்டன்

நூல் அறிமுகம்: உமாதேவி அரசகுமாரின் POETIC FEATHERS கவிதை – வே.சங்கர்

நூல் அறிமுகம்: உமாதேவி அரசகுமாரின் POETIC FEATHERS கவிதை – வே.சங்கர்




எது பாதை, எது திருப்பம், எது மேடு, எது பள்ளம் என்று எந்தத் திக்கும், திசையும் தெரியாமல்தான் தொடக்கத்தில் இந்தக் கவிதை நூலை நான் அணுகினேன்.

குண்டூசி விழுந்தாலும் துள்ளியமாய்க் கேட்கும் ஓர் அறைக்குள் அமர்ந்துகொண்டு ஒருவர் கேட்க மற்றொருவர் தன் அனுபவத்தை மென்குரலில் கூறுவதைப் போன்றதொரு அனுபவம் இக்கவிதை நூலை வாசிக்கும்போது உணரமுடிந்தது.

ஒரு அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியையான உமாதேவி அரசகுமார் தனது முதல் கவிதை நூலான ”கவிதைச் சிறகுகள்” ஆங்கிலத்தில் ”POETIC FEATHERS” என்ற கவிதைத் தொகுப்பை மே மாதம் 2021ல் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த  தன் மகளுக்கு அற்பணிக்கிறேன் என்ற அதிர்ச்சித் தகவலோடுதான் நமக்கு வாசிக்கத் தந்திருக்கிறார்.

முழுமையாக வாசித்து முடித்தபிறகு, இக்கவிதைத் தொகுப்பின் அறிமுகத்தை எந்தக் கவிதையிலிருந்து தொடங்குவது என்ற குழப்பம் கவ்விக்கொண்டது. இதுதான் முட்டுக்கட்டை போடுகிறது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாததற்குக் காரணம், கரடுமுரடான பாதையில் கடந்து செல்லும் போது எதிர்கொள்ளும் சறுக்கல்கள், வலிகள், சிக்கல்கள் எல்லாமே மௌனத்தை மட்டுமே பதிலாகக் கொண்டிருப்பதைப்போல ஒவ்வொரு கவிதையை வாசிக்கும்போது வாசிப்பாளரின்  உள்ளுணர்வுகளை வெளியே தெரியாமல் கீறிக்கொண்டே இருக்கின்றன.

வாழ்வில் கவனிக்கப்படாமல் தவறவிட்ட தருணங்கள் பின்னாளில் ஞாபக வெளி முழுக்க ஆக்கிரமித்துவிடுவதை எப்படித் தவிர்க்கமுடியாதோ அதுபோல,. தெரிந்தோ தெரியாமலோ நினைவடுக்குகளுக்கு அடியிலிருந்து  அவ்வப்போது மேலெழுந்து மேலெழுந்து வெளிப்படும் பெருந்துயரங்கள் பெருமூச்சோடும்  கண்ணீர்த்துளியோடும் கரைந்துபோவதற்குப் பதிலாகக்  கெட்டிப்பட்டுவிடுகிறது என்பதற்கு உதாரணம் இந்தக் கவிதை நூல்..

உதிர்ந்த இலைகள் மற்றவர்களுக்கு வெற்றுச் சருகுகள் ஆனால் மரத்திற்கோ, தன்னைவிட்டுப் பிரிந்த  தனது குழந்தைகள். அதுபோல தன் குழந்தையை இழந்த ஒரு தாய்க்கு, ”இறப்பு இல்லாத பிறப்பெதுவும் இல்லை. மறதியைப் போலொரு மாமருந்தில்லை” என்ற வெற்று வார்த்தைகளைத் தவிர வேறெதை நம்மால் ஆறுதலாகத் தந்துவிடமுடியும்!,

”உலகம் பொத்தான்களுக்கு உள்ளிருந்துதான் சுழல்கிறது. டண் கணக்கில் (கேட்ஜெட்) கருவிகள் குவிந்துகிடக்கின்றன.  சமூக வலைதளங்களுக்குச் சிறகுகள் முளைத்துவிட்டன. இப்பூமிப்பந்தைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனித உயிரும் ஆப், ஆப் என்று சொல்லிக்கொண்டே சுற்றித்திரிகிறது.  காலத்திற்கேற்ற வளர்ச்சி என்ற எண்ணம் சரியா? தவறா? என்று கணிக்க முடியவில்லை. உயர் மின்அழுத்தம் (வோல்டேஜ்) தாக்கிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள் குழந்தைகளே” என்று அக்கறை வழியும் சொற்களோடு எழுதப்பட்ட கவிதை . ”சமூகப் பட்டாம்பூச்சி”. இன்றைய தலைமுறை அவசியம் வாசிக்கவேண்டிய ஒன்று.

உயிரில்லாத ஒன்று இந்த உலகத்தையே ஆள்கிறது.  ஏழையாகட்டும் பணக்காரன் ஆகட்டும் பசியைப் போக்குகிறது. அதுதான் பணம். என்ற கவிதை எதார்த்தத்தைச் சொல்கிறது.  சில கவிதைகள் இன்றைய இளம் தலைமுறையின் மனதில் தன்னம்பிக்கையை விதைக்க முயன்றிருக்கிறது.

”ரோஸி எனது வளர்ப்பு நாய்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை கவிஞருக்கும் வளர்ப்பு நாய்க்கும் இடையிலான பிரியத்தை முன்னிறுத்துகிறது.

சில கவிதைகள் இயற்கையை, சில வாழ்க்கைத் தத்துவத்தை, சில சிறகு முளைக்கும் குழந்தைகளை, தனக்குப் பின்னால் இருந்து செயல்படும் ஆத்மாக்களை, பணிக்குச் செல்லும் பெண்களை, அவ்வப்போது தன்னுள் எழும் அபூர்வக் கேள்விகளை, தன்னைச் சுமக்கும் செருப்பை, மறக்கவியலா பள்ளி நாட்களை, தன் கனவை, தன்னையும் தன் உணர்வையும் தட்டியெழுப்பும் நினைவுகளை கவிதை வடிவில் அழகு சொல்லாடலால் தன்பங்கிற்கு வசீகரித்துச் செல்கின்றன.

கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஏற்ப கவிதைகளை நகர்த்த  முனைந்திருப்பதாலோ அல்லது இலக்கணக் கட்டுக்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாலோ, உரைநடை கவிதையாகவும் கவிதை உரைநடையாகவும் உயிர்ப்பைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுவதைக் காணமுடிகிறது. 

அவசரகதியில் அடுத்தடுத்துப் பின்னப்பட்ட கவிதையின் தொடக்கமும் மையக்கருத்தும் அழுத்தம் தராமல் ஏனோதானோ என்று மின்னிக் கணநேரத்தில் மறைந்துவிடுகின்றன. 

பிரியத்தின் வலிகளை, தன் அனுபவத்தின் ஆழத்தை மிக நுட்பமாக மற்றவர்கள் உணரும்விதமாகத் தருவது என்பது ஒருசிலருக்கு மட்டுமே கைவந்த கலை.  அந்தவிதத்தில் இக்கவிதைத் தொகுப்பு வாசிப்பாளர்களைக் கரைந்து செல்லவைக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 

ஆனாலும், இன்னும் கவிதை வசப்படக் கொஞ்சம் சிரத்தையெடுக்கவேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.  இனிவரும் கவிதைகள், எல்லாவிதக் கவிதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்று நம்பிக்கைகொண்டு வாழ்த்துகிறேன். நன்றி.

மீதம் இருக்கும் வாழ்வு கவிதை – வசந்ததீபன்

மீதம் இருக்கும் வாழ்வு கவிதை – வசந்ததீபன்




வலி தாங்கு
விசை கொண்டு எழு
உன் கனவுகளை மெய்ப்பி
காதல் வலி
இதயங்களில் உலாவும்
கண்ணீர் ஊற்றெடுக்கும்
கசிந்து கசிந்து மெதுவாக விசும்பும்
கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்
காதலில் கரைந்தோடும் இதயம்
காற்றாய் அலையும் அன்பின் ஆவி
மகத்தான சல்லிப்பயல்
வேளா வேளைக்கி சாப்பிடுகிறான்
தூக்கம் வராமலே
தூங்குவதாய்ச் சொல்கிறான்
என் சொல் உன் சொல்
வன் சொல் தீர்ந்திட மென் சொல்
முளைக்கிறது இன் சொல்
வெட்கத்தைத் தின்றுவிடு
வெட்கம் தின்றுவிடும்
வெட்கமே காதலின் சத்ரு
கடந்து போவது விடுதலையின் களிப்பு
கண்ணீரா? மகிழ்ச்சியா?
எல்லாம் ஒன்றுதான்
தயங்கித் தேங்குவதால்
பாரங்கள் லேசாவதில்லை
இம்மை எரிகடல்
மறுமை இருட்கடல்
இன்மையில் போகிறது என் படகு
வாலாட்டுபவை வாய் மூடியிருக்கும்
குனிந்தபடி திரிபவை
அரவம் காட்டா
ரோசமானவை

குரலெழுப்பி நடுங்க வைக்கும்.

– வசந்ததீபன்

வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




மின்மினிகளின் பகல்
*************************
மேய்த்த மிருகங்கள் திரும்பின
அவள்  பிணமாய்ப் புதரில் கிடக்கிறாள்
ரத்தம் தோய்ந்து பறக்கிறது தேசியக்கொடி
தெய்வத்தைப் புசித்தேன்
சாத்தானைத் தின்றேன்
மனிதர் அனைவரையும் நேசிக்கிறேன்
குழந்தையைக் கடித்துத் தின்றிருக்கின்றன
வெறி நாய்கள் இன்றும்
விட்டு வைக்கலாமா இனியும் நாம்   ?
ஆயுதங்கள் சார்பற்றவை
ஏந்துபவர்களுக்குத் தக்கபடி செயலாற்றும்
வன்முறை வன்முறையைக் கட்டவிழ்த்து  விடும்
வென்ற குதிரைக்குப் புல் கிடைக்கும்
தோற்ற குதிரை பசித்துக் கிடக்கும்
வேண்டுதல் வேண்டாமை
சுயநலம் சார்ந்தது
பசிப்பவனுக்குப் பூவை கொடுக்கிறீர்கள்
புளிச்சேப்பக்காரனுக்குப்
பழம் தருகிறீர்கள்
பெரு நெருப்பு உங்களுக்காக
கனிந்து கொண்டிருக்கிறது
காக்கைச் சிறகினிலே துவேஷம்
கொக்கின் வண்ணத்தில் வெறித்தனம்
நிறம் பற்றிய உரையாடல்களில் உதிரம் பீறிடுகிறது
பூனை அழகானது
பவ்வியமாய் சுற்றித் திரியும்
அடைபட்ட அறைக்குள் பிசாசாகும்
பற்றி எரியத் தொடங்குகின்றன
சிறிய சந்தோஷமும்
சாம்பலாய்ப் பறக்கிறது
உறுமீனுக்காகக் கொக்கு ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது
ஆறு பெருமூச்சாய் நுரைகள் பூக்க
வழி போன போக்கில் போகிறது.

இவளும் மனுசி
******************
துளியாய் விழுந்தது
கடலாய்ப் பெருகுகியது
அவள் மூழ்கிக் கொண்டிருக்கிறாள்
மழுங்கச் சிரைக்கப்பட்ட தலை
சீழ்வடியும் புண்களும் ரணங்களுமான உடல்
எம் நாடு எம் இனம் எம் வாழ்வு ஈடேற வழியேது?
கானகத்தின் நடுவில் அழுகுரல்
துக்க நீரூற்றாய்ப் பீறிடுகிறது
எக்குரலையும் விழுங்கிச் செரிக்கிறது அக்குரல்
சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்
அழுவதற்குப் பயிற்சி தேவையில்லை
சிரிப்பும் அழுகையும்
மனிதரைப் பாடாய்ப்படுத்தும்
உடலை விற்கக் காரணமாய் இருந்தாய்
உடலை நாயாய் தின்றாய்
வேசி எனக் கூப்பிடுகிறாயே
வேசி நாயே
சபிக்கப்பட்ட தேசத்தில் வாழ்கிறேன்
என் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன
நாவு இழந்து கண்ணீர் வடிய
கற்சிலையாய் நிற்கிறேன்.

– வசந்ததீபன்

காதல் பித்து கவிதை – சரவிபி ரோசிசந்திரா

காதல் பித்து கவிதை – சரவிபி ரோசிசந்திரா




உன்னிடம் பேசி
பல மாதங்கள் ஆயின
ஆனால்
நான் இன்னும்
பேசிக்கொண்டு தான்
இருக்கிறேன்,
வெட்டவெளியில்….
உன்னைக் காணாமலும்
பார்வையை
இழக்காமல் தான்
இருக்கிறேன்,
புதிய பார்வையில்….
நீ நடந்து வந்த பாதையில்
கடந்தும் கூட
தடு(ட)மாறாமல் தான் நடக்கிறேன்,
கொடுத்த வாக்கால்….
உன் அலைபேசி எண்ணை
நாள்தோறும் சுழற்றும் கைகள்
இன்னும் இழக்காமல் தான் இருக்கிறது,
தன் சுயத்தை….
நீயின்றி நான் இல்லை
என்று நாம் சொன்னது
பொய்யானது எனப் பலர் ஏசுவது
என் காதிலும் விழுகிறது…
கடந்த சில மாதங்களில் அரங்கேறிய பிரிவில்
நீயும் இருக்கிறாய்
நானும் இருக்கிறேன்
ஆனால்,
நமக்குள்
காணாமல் போனது நம் ‌ காதலென
நீயுமா நினைக்கிறாய்?…
காணாமல் தான் போனேன்
உன்னைக் காணாமல்
மனப்பூர்வமாக நான் விலகிச் சென்றது
மற்றவர்களுக்குப் புரியாமல் போகலாம்
உனக்குமா! புரியவில்லை?
மனவறைக்குள் குமுறி அழும் கண்ணீரைத் துடைத்து
என்னை உயிரோடு வாழ வைப்பது
உன் ஆத்மார்த்த நேசமடா!
இதை நீ இன்னுமா? அறியவில்லை…
யார் வேண்டுமானாலும்,
என்னை எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும்,
நீ மட்டும் என்னைப் புரிந்து கொள்வாய் என்று நினைத்தே
காத்திருக்கிறேன் நெடுங்காலம்…
என் காதலை உன் மனம்

புரிந்து கொள்ளுமா?
இல்லை பிரிந்து செல்லுமா!

-சரவிபி ரோசிசந்திரா

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
பிறிதொரு வார்த்தை

ஒரு வார்த்தைக்கு மட்டும் பிறிதொரு வார்த்தை என்றும் இல்லை
அதுவும் நேசத்தை வார்த்தையில் சொல்வதென்றால்
ஒரு கடலைக் குடித்து விட்டு வர வேண்டும்

நானோ உதிர்த்த விண்மீன்களை
கைகளில் ஏந்திக்கொள்ளத் துடிப்பேன்
அபலைச் சருகுகளை எடுத்து முகத்தோடு உரச விடுவேன்
கண்திறக்காத குட்டிப் பூனைக்கு
வெண் சங்கில் பாலைப் புகட்டுவேன்

எண்ணங்களில் ஒரு பாலம் கட்ட முடிந்தால் போதும்
நட்டநடு நிசியில் உன் முன் ஒரு முழு அல்லி இலை போல  வந்து நிற்பேன்
மார்பில் தலைசாய்த்து லப்டப் இசையை  ஸ்வரம் பிரிப்பேன்
உதிரும் மூச்சுகள் கோர்த்து
உனக்காக ஒரு மாலை கட்டுவேன்
பின்பு உனக்காக எழுதப்பட்ட இந்தக் கவிதையை கிழித்துப் போட்டு விட்டு
உன் உள்ளங் கால் பாதத்தில்
ஒரு துளி கண்ணீரை எடுத்து
திருஷ்டிப்பொட்டிட்டு வருவேன்

கவிதை 2
மனமற்ற செம்பருத்தி

அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப் பூனையின் பரவசமாய்
கால்களைச் சுற்றிச் சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து

அள்ளிப்பருக நினைக்கையில்
மேகத்தைச் சபித்தபடி ஊர்ந்து போகும்
கிழவனின் உதடுகளில்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
வனாந்தரத்தின் வாசம்

எலிக்குஞ்சுகளாகத் தொலைக்காட்சியை
மொய்த்துக் கிடக்கும் கண்களில்
ஆதி வேட்டை வெறி அடங்கவேயில்லை

பூனையின் கண்களாய் மினு மினுத்துக்கிடக்கும்
சிறுவர்கள்
விளம்பர இடைவேளைகளில்
ரிமோட்டைக் கைப்பற்றி
பீம் டாம் சகிதம் வலம் வருகிறார்கள்

ஈரத்தை சுமந்தபடி புறப்பட்டு வரும்
சாயங்காலக் காற்றுக்கு
திறந்த படி காத்திருக்கின்றன
மனித உடலங்கள்

மொட்டைமாடியெங்கும்
காயப்போட்ட கொடிகளில் பட படத்து
அடித்துக்கொள்ளும்  மெய் இரகசியங்கள்

திருகப்பட்ட கழுத்துகளோடு
காற்றிலலையும் காகங்கள்
இரவின் கீற்றாய்  தரையிறங்கி வருகின்றன
ஒரு துளியையும்  குடித்து விட இயலாத
விரக்தியில்

சூட்டப்படும் மாங்கல்யமாய் பறந்து வந்த
வெண்புறாக்கள்
சட்டென்று கலைகின்றன
இரவு உருவாகும்  புள்ளியில்

மனமற்று ஆடும்
வாசல் செம்பருத்தியில் என்
வாசம் ஒரு கணம் தான் என்றாலும்
போதும் இது
எத்தனையோ தூக்கமற்ற
இரவுகளைக்  கரைத்து விடுவதற்கு

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்