கவிதை : நம்பிக்கை – ஐ.தர்மசிங்
தங்கேஸ் கவிதைகள்
கடவுள் மனதில் சாத்தான் நுழைவது
*******************************************
ஒவ்வொரு மதத்திற்கும் தன் விலாசங்களை மாற்றிக்கொண்டிருக்கும் கடவுள்
ஒரு நாள் தொலைந்து போகிறார்
இடிக்கப்பட்ட கோவில்களிலும் மசூதிகளிலும்
தேவாலயங்களிலும் தேடியபிறகும்
அவரின் இல்லாமை
குருதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது
குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள்
ஆற்றாமையில் அரற்ற
சுயம்பு ஆண்பாலாக தோன்றுகிறார்
தவளையுடையணிந்த கடவுள்
இனி தன்னை நிருபிக்க அற்புதங்கள்
புரிந்தாக வேண்டும்
இரவெல்லாம் நிலத்திலும் நீரிலும் ஆகாயத்திலும்
நீந்திச்செல்லும் மனிதர்கள் மேல் மோதிவிடாமல்
தன் சக்திக்கும் மீறிய எத்தனை அபாயகரமானது
கடவுள் தன்மை பெரும்பாறையாய் தோளில்
அழுத்த
விற்பன்னர்களின் நீதியை சுமந்து செல்லும் இதயத்தில்
நெருஞ்சி முட்கள் முளைக்க
இதயத்தைக் கழற்றி வைக்கிறார்
மீதியிருக்கும் மனதின் குற்ற உணர்ச்சிகளின் வழி
சாத்தான் நுழைகிறான்
நிழல்களை அழைத்தல்
**********************************
பார்க்கும் போதே இருளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு உருவத்தை
என்னவென்று சொல்வாய்
இருள் விழுங்கிய உருவா?
அல்லது கலைந்து போகும்
தோற்றக் கனவா ?
இந்தத் தெருவெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்
துள்ளும் நிழல்களோடு குலாவ
விடைபெற்று விட்டதா?
நட்சத்திரங்களை சொல்லாக்க முடியும் கவிஞர்களுக்கு
சவால் விட்டுச் செல்கிறதா?
எப்படியோ கடைசியில்
காலத்தில் குதித்துவிட்டதென்று
முடித்துக்கொள்கிறேன்
ஒற்றைச் சொல்
***********************
ஓர் ஒற்றைச் சொல்
நம் உயிரைப் பிழிந்தெடுக்கிறது
மூன்று எழுத்து
ஈரசையில்
ஓர் ஒற்றைச் சொல் அது
அது சில நேரங்களில் மழை மேகமாகவும்
சில நேரங்களில் கணப்பு அடுப்பாகவும் இருந்தது
நம்மை அறியாமலேயே
வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை
துடைத்தபடியேவும்
அது இருந்தது
ஒரு நாள் வானத்து விண்மீன் அகாலத்தில் உதிர்ந்த போது
குளத்திலிருந்த தவளை
குதித்து வெளியேறிப் போனது
அது எழுப்பிப்போன பேரலைகள்
இன்னும் குளத்தை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன
பச்சை பாசிக்கடியில் நீரின் மூலக்கூறுகளும் இன்னும்
மாறிய வண்ணமே இருக்கின்றன
ஆனால் தவளை குதித்து குதித்துப் போன
மாயம் தான் இன்னும் தெரியவில்லை
எல்லாம் அந்த ஒற்றைச் சொல் தான் …
– தங்கேஸ்
ச்ஜேஸூ ஞானராஜின் கவிதைகள்
வீடான மரம்!
*****************
உடன் விளையாடியோர் வீடு செல்ல
மரத்தடியில் ஒதுங்குகிறான்
பிளாட்பாரச் சிறுவன்!
காற்று போன மனுஷி
***************************
பலூன் உடைத்தல் போட்டிக்கு
பெயர் கொடுத்தது ரோட்டோரக் குழந்தை!
போட்டி ஆரம்பித்தது!
வேகமாய் ஓடி
பலூனைக் கையில் எடுத்து
தன் பிஞ்சு விரல்களால்
தடவிப் பார்த்தது!
சந்தோஷம் ஊற்றெடுக்க
முக மலர்ச்சியுடன்
ஊத ஆரம்பித்தது!
பலூன் வெடிக்கக் கூடாதென
வேண்டிக் கொண்டிருந்தாள் பிளாட்பாரத்தில் நின்றிருந்த தாய்!
பரிசீலனை
**************
கோயிலில் பெருங்கூட்டம்!
கடவுளை அடியாளாக்கி
பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்!
இந்த காரியம் முடித்துத் தந்தால்
இன்னும் ஐந்து லட்சம் தருவேன்
என்றான் ஒருவன்!
வைர நெக்லஸ் தருவதாகச் சொன்னாள் ஒருத்தி!
விண்ணப்பங்கள் முடிந்து கூட்டம் வெளியேற
நான் உள்ளே நுழைந்தேன்!
நாளை வரச் சொன்னவன்
ஒருவேளை கடவுளின் பினாமியாக இருக்கலாம்!
சூட்கேசில் ஒரு கோடியைக் காட்டினேன்!
கதவை திறந்து விட்டான்!
உள்ளே கடவுளைத் தேடினேன்!
அவர் பொறுமையாக விண்ணப்பங்களைப் படித்துக் கொண்டிருந்தார்!
முரண்
*********
இலட்சங்களின் மினுமினுப்பில்
கோவிலில் திருவிழா!
வாசலில் கையேந்துகிறாள்
பிச்சைக்கார சிறுமி!
அனுபவம்
**************
தசம பின்னத்தில்
காதலையும் காமத்தையும்
எவ்விடத்தில் வைப்ப தென்பதை
அவனுக்கு புரியவைத்தது முதலிரவு!
பின்விளைவு
****************
குழந்தையின் மழலைச் சொற்கள்
கரைத்த பெரும் மனபாரம்
கன்னத்து முத்தத்தின் எண்ணிக்கையை
இரு மடங்காக்கிக் கொண்டிருக்கிறது!
கடைசியில் எல்லாம்….
***************************
தேன் கலந்த பால் குடிக்க
ஆசைப்படும் பிச்சைக்காரனுக்கும்
தங்க பஸ்பம் சாப்பிடும்
சர்க்கரை நோய் முதலாளிக்கும்
இரவும் நிலவும் ஒன்றுதான்!
யதார்த்தம்
***************
சிட்டுக்குருவி லேகியம் விற்பவன்
இரவில் தூங்குவ தென்னவோ
வீட்டுத் திண்ணையில் தான்!
காலத்தின் பின்கட்டு
****************************
விரக்தியில் போதிமரம் தேடி
காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தேன்!
தூரத்தில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது!
கொஞ்சம் தைரியத்தை எடுத்து
சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டேன்!
வழியெங்கும் குட்டிகளுடன் மான்கள் உற்சாகமாய் துள்ளித் திரிந்தன!
கை நிறைய சந்தோஷத்தையும் பைக்குள் போட்டுக் கொண்டேன்!
காதலால் இணை பிரியாது கட்டிக் கொண்ட தட்டான்களைப் பார்த்து மோகமும் ஒட்டிக்கொண்டது!
வேகமாய் நடந்தேன்!
மலை அருவி அருகில் புத்தர் அழுது கொண்டிருந்தார்!
கொஞ்சம் தைரியத்தை கிள்ளிக் கொடுத்தேன்!
ராகுலனை பார்க்க வேண்டும் என்றார்!
மனதில் வேரூன்றிய போதிமரம்
மெதுவாய்க் கரைய ஆரம்பித்தது!
உள்ளே வெளியே
************************
கதவைத் தட்டிய சந்தோஷம்
கடவுள் கொடுத்த கடவுச்சீட்டைக் காட்டி உள்ளே நுழைந்தது!
உள் அறையை தனக்காகக் கேட்டது!
அங்கிருக்கும் ஆசையோ
வைர நெக்லஸ் கேட்டு அடம்பிடிக்கும்
மனைவி போல நகர மறுத்தது!
சோகமாய் வெளியேறிய சந்தோஷம் வாசலில் காத்திருக்கிறேன் என்றது!
ஒரு கிலோ சந்தோஷம்
நூறு கிலோவாய்ப் பல்கி
வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறது!
செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!
கொஞ்சம் கமர்ஷியல்
*******************************
சீதக்காதியிடம் பசிக்குணவு கேட்டாள்!
பேகனிடம் புத்தாடை கேட்டாள்!
கவிதையை மட்டும் என்னிடம் கேட்டாள்!
நான் என்ன அம்பிகாபதியா என்றேன்!
என் பெயர் அமராவதி என்றாள்!
தேவை
***********
காலைக்குளிர் உண்ணும்
கோழி வளர்க்கணும்!
சொக்காய் இல்லா
சிறுவனின் பேராசை!!
காத்திருக்கும் காதல்
***************************
ஆற்றுமணலில்
தலை குளிக்கும் நத்தை
தெளிவாகத் தெரியும்
இரண்டடி உயர
நீரோட்டத்தில்
இரு கரையும் புல்வெளியாய்
அழகிய ஓடை!
தளை நார் மாலையுடன்
தலைமகனின் கால்கள்
இணைந்திருக்க
நெஞ்சப்பட்டை
பனையோடு உரச
பதநீர் சேகரித்தவன்
பாளை அரிவாளை
இடை செருகி
இதமாக கீழிறங்க
பாவாடை தூக்கிக் கட்டி
காதலுக்குக் கூடுதல்
சந்தோஷம்!
கன்னங்கள் உரசின!
காதலுக்கோ
உச்ச கட்ட சந்தோஷம்!
உதடுகள் ரசங்களைப்
பரிமாறின!
காதலுக்கோ-
கொரோனா காலத்தில்
வீடுவந்த
வெளிநாட்டு கணவன்
பதினான்கு நாட்களும்
கள்ளத்தனமாய் மனைவியை
புணரும் சந்தோஷம்!
திருமணம் நடந்தது!
அவளுக்கு ஓரிடத்தில்!
அவனுக்கும் வேறிடத்தில்!!
காதல் அழுதது!
கரைந்தது!!
புலம்பியது!!!
பொடிநடையாய் தான்
பிறந்த நீரோடை வந்தது!
சோகத்தில் கரையில் அமர்ந்தது!
மீண்டும்-
உண்மைக் காதலர்கள்
வருகைக்காக காத்திருக்கிறது
இந்த மெய் காதல்!
காலம் காத்திருக்கு
**************************
மணம் காத்திருக்கு
மல்லிகை மலர்ந்ததும்
மர்மமாய் ஒட்டிக்கொள்ள!
புழுக்கம் காத்திருக்கு
முழுவெயில் வந்ததும்
முழுமையாய் கலந்துகொள்ள!
வீரனே!
சோம்பல் முறித்து
எழுந்து வா!!
சாதனைக்குப் பிடித்தவனாய்
அதனை உன் சாதகமாக்கு!
காலம் காத்திருக்கு
உன் கழுத்தில் மாலை சூட!
அறுமின்! அறுமின்!!
***************************
புத்தர் புகைப்படம்
சுவரில் மாட்டினேன்!
புத்தர் சிலை வாங்கியிருக்க
ஆசைப் பட்டது மனம்!!
– ச்ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனி
நூல் அறிமுகம்: தொ.பரமசிவனின் சாதிகள் உண்மையுமல்ல… பொய்மையுமல்ல… (நேர்காணல்கள்) – சு.பொ.அகத்தியலிங்கம்
தொ.ப வை வாசிக்க ஓர் திறவுகோல்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் எழுபதாவது அகவையில் நம்மை விட்டுப் பிரிந்தார் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் . அவரின் சிந்தனைப் போக்கையும் எழுத்துகளையும் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் எளிய நூல் “சாதிகள் : உண்மையுமல்ல …பொய்மையுமல்ல…,” [ நேர்காணல்கள் ].
13 நேர்காணல்களின் தொகுப்பு . தொ. பரமசிவன் என்கிற பேராளுமையை நேர்காணல் செய்த ஒவ்வொருவருமே முத்திரை பதித்த ஆளுமைகளே . ஆகவே இந்நூல் பல கோணங்களில் தொ. பரமசிவத்தின் பண்பாட்டு நோக்கு , திராவிட இயக்கம் , தமிழ் தேசியம் ,
பெரியார் , கோவில் , சாதி , தமிழ் பண்பாட்டு வரலாறு இவற்றை மக்கள் வாய்மொழித் தரவுகளோடு ஆழமாகவும் அகலமாகவும் விவாதிக்கும் நூலாகிவிட்டது .
இந்நூலை திறக்கும் போது சிந்தனைக்கான பல புதிய வாசல்கள் திறக்கும் ; நூலாசிரியரோடு உடன்பட்டும் முரண்பட்டும் நிறைய கேள்விகள் எழும் . அதுவே இந்நூலின் வெற்றி .
தொ. பரமசிவன் வழக்காமான எழுத்துமொழி சார்ந்த ஆய்வினின்று விலகி வாய்மொழி வழக்காறுகள் என மக்கள் வாழ்வோடு ஊடாடி புதுதடத்தில் பயணித்தவர் . ”எழுத்து என்பதே அதிகாரத்தின் பிறப்பிடமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.” என திரும்பத் திரும்பச் சொன்னவர். அழகர்கோயில் சார்ந்து இவர் செய்த முனைவர் பட்ட ஆய்வு பெரிதும் பேசப்பட்டது .
இவர் பெரியாரை பெரிதும் முன்னிறுத்துகிறார் . அதே சமயம் கோயில் சமயம் நாட்டார் வழிபாடு குறித்து பெரிதும் ஆர்வம் காட்டுகிறார் . அதேபோல் , “ நான் தமிழ் தேசியர்தான்” என்று சொல்லும் போதே, “ நான் இந்து அல்ல” என பகீரங்கமாக அறிவிக்கிறார் . திராவிட சித்தாந்தம் குறித்து ஓர் வித்தியாசமான பார்வையை முன் வைக்கிறார் . அதே நேரம் கம்யூனிஸ்டுகளின் மீது சில நியாயமான விமர்சனங்களையும் சில மேலோட்டமான நியாயமற்ற விமர்சனங்களையும் வைக்கிறார் . அவை பெரும்பாலும் பேட்டி கண்டவர்கள் இவர் வாயிலிருந்து பிடுங்கியதாகவும் உள்ளன.
பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்களாக இருப்பதால் பலவற்றில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கேள்விகளும் பதிலும் இடம் பெறுவதால் ஆரம்பத்தில் இந்நூல் சிறிது சோர்வு தட்டுகிறது . ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கேள்விகளும் இருப்பது புரிதலை மேம்படுத்துகிறது . “ மொழிக்கல்வியும் மதிப்பீடுகளும்” என வ. கீதா , கோ. பழநி செய்த நேர்காணலும் , “ கோட்பாட்டுரீதியான பிரச்சனைகள்” எனும் தலைப்பில் சுந்தர் காளி மேற்கொண்ட நேர்காணலும் புதிய கோணத்தில் பார்வையை ஆழமாக விரிக்கிறது . கால்டுவெல் குறித்த நேர்காணலும் ,
ச. தமிழ்ச்ச்செல்வன், அ. முத்துலிங்கம் ஆகியோரின் நேர்காணல்களும் இன்னொரு கோணத்தை வெளிக்கொணர்கிறது . விரிவஞ்சி ஒவ்வொரு நேர்காணலையும் இங்கு நான் சுட்டவில்லை.
பெரியாரைப் பற்றி பல மதிப்பீடுகளைச் சொல்லிச் செல்கிறார் ,” பார்பனியம் கோலோச்சி நின்றபோது , ‘பார்ப்பான்’ என்ற சொல்லையே இழிசொல்லாக மாற்றிக் காட்டியதுதான் பெரியாரின் சாதனை . அவருடைய வெற்றி, அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கொண்டிருந்தது.” என்பது அதில் ஒன்று .
நீங்கள் பெரியாரை போற்றுகிறீர்கள் ஆனால் கோயில்களை ஆராய்ச்சி செய்கிறீர்கள் ஏன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் போது ,” எனக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவற்றை வணங்குகிற மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது ; நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன். கோவிலுக்கு போகும் அனைவரும் தினசரி சிவபூஜையோ விஷ்னுபூஜையோ செய்கிற மக்கள் அல்ல. கோவில் என்பதும் திருவிழா என்பதும் நிறுவனங்கள். திருவிழாக்களின்றி ஓர் சமூகம் இயங்க முடியாது .” என்கிறார்.
நாட்டார் சடங்குகள் விழாக்களில் காணப்படும் ஒரு வித ஜனநாயத்தன்மை ; நிறுவன மதங்களில் விழாக்களில் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார் . பல்வேறு அவைதீக மதங்களின் செல்வாக்கு ஓங்கியதையும் தேய்ந்ததையும் வெறுமே மூடநம்பிக்கை , ஆதிக்கம் என கடந்து போகாமல் , மக்களின் வாழ்வியல் தேவையோடு இணைந்து பார்த்துள்ளார் .
மதம் , கோவில் , சடங்கு , நாட்டார் வழிபாடு என பலவற்றை பண்பாட்டு அசைவாகக் காணும் இவரின் பார்வையில் உடன்படவும் முரண்படவும் இடம் உண்டு .
திராவிடப் பண்பாடென்பதை , நான்கு மாநில பொது பண்பாடென சொல்லிச் செல்லும் போது ; 1] தாய் மாமனின் முக்கியத்துவம் ,
2] இறந்தவரை தொட்டு சடங்கு செய்தல் 3] பெண்களை பொதுவெளியில் அடிப்பதை சகிக்காமை என சுருக்கிவிடுகிறாரோ ? சில இடங்களில் தாய் தெய்வ வழிப்பாட்டை இம்முன்றில் ஒன்றாக வைக்கிறார் .
சாதியை பொதுவாக எதிர்த்த போதிலும் அகமண முறையே சாதி நீடிப்பின் மையம் என்பதை போகிற போக்கில் ஒப்புக் கொண்டாலும் தாய்மாமன் உறவு சார்ந்த பெருமிதம் சாதிக்கூட்டுக்குள் திருமண பந்தத்தை திணிப்பதல்லவா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது .
சாதியைப் பற்றி நிறைய பேசுகிறார் . உண்மையுமில்லை… பொய்மையும் இல்லை என ஒரு நிலை எடுக்கிறார் .” சாதி ஒழிப்புப் பற்றிய நம் பார்வை எல்லாம் அடிப்படையில்லாத ஆர்வக்கோளாறுகளே” என்கிறார். மேலும்,” சாதி ஒழிப்பு என்பதை , ஏதோ கொசு ஒழிப்பு போல சுலபமாகப் பேசமுடியாது . சாதி என்கிற அமைப்பு அவ்வளவு எளிமையானது கிடையாது . சாதியை ஒழிக்க முடியாது ஆனால் சாதியைக் கரைக்க முடியும்.” என்கிறார் . கொசுவையும் ஒழிக்க முடியவில்லையே , எல்லாவிதமான கொசு அழிப்பு மருந்துக்கும் தன்னை தகவமைத்து மீண்டும் மீண்டும் புதிதுபுதிதாக உற்பத்தியாகிறதே. கிட்டத்தட்ட சாதியும் அப்படித்தானோ ? இவை ஆழமான விவாதத்துக்கு உரியவையே !
“ஒன்றே குலம், ஒருவனே தேவன் “ என்பதும் பன்மைக்கு எதிரான பாசிசக் குரலே என போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் தொ.ப . “ ஒரு நாடு , ஒரு மொழி , ஒரு கலாச்சாரம்” என்கிற குரல் பலமொழி பல பண்பாட்டை எதிர்ப்பதால் அதை பாசிச முழக்கம் என்பது மிகச்சரி ; ஆயின் சாதி வேற்றுமை , மத மோதல் இவற்றைத் தவிர்க்க “ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்பது எப்படி பாசிசமாகும் என்கிற கேள்வி என்னுள் எழுகிறது .
“மொழித் தூய்மைவாதம் ஓர் எல்லைக்கு மேல் பாசிசமாகத்தான் போய்முடியும்,”எனவும் , “ மொழி மாறும் தன்மையுடையது; மாறுவதனால்தான் அது உயிரோடு இருக்கிறது,”எனவும் சரியாகவே மதிப்பிடுகிறார் . திராவிட இயக்கம் தமிழுக்கு கொடுத்த சொற்கொடை குறித்து பெருமிதம் கொள்ளும் தொ.ப, பொதுவுடைமை இயக்கம் தமிழுக்கு அளித்த சொற்கொடை குறித்து பேசவில்லை . தமிழில் அறிவியல் நூல்களை கொண்டுவந்து தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய என்சிபிஹெச் பற்றி தொ.ப நன்கு அறிவாரே ! ஏனோ தெரியவில்லை அது குறித்தெல்லாம் பேசவில்லை. “ பொதுவுடைமை வளர்த்த தமிழ்” எனும் என் [சு.பொ.அ] நூல் இது பற்றி நிறைய பேசுகிறது . தோழர்கள் தேடி வாசிக்கவும்.
பெரியாரை “எதிர் பண்பாட்டாளராக” தொ.ப காண்கிறார் . ”எதிர் பண்பாட்டின்” தேவையை வற்புறுத்துகிறார் . அனைத்து விதமான ”ஆதிக்க பண்பாடுகளுக்கும்” எதிராக ஓர் ”மாற்றுப் பண்பாட்டை” கட்டி எழுப்ப வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது . அதற்கான சிந்தனை வாசலை அகலத்திறக்கவும் ; எதிரும் புதிருமான கேள்விகளை எழுப்பி விடைதேடவுமான காலகட்டத்தில் இந்நூல் வந்திருப்பது பாராட்டுக்குரியது .
இன்னும் பேசப் பேச நீளும் . இந்த நேர்காணல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொ.ப குறித்து எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது . வந்துவிடக்கூடாது . நேர்காணல் என்பதால் கேள்வி கேட்பவரின் பார்வைக் கோணம் ; கேள்விகளிலும் பதில்களிலும் நிச்சயம் இருக்கும் . எனவே தொ.ப வின் எழுத்துகளையும் ஆக்கங்களையும் தேடிப் படிப்பதே சரியான விவாத களம் அமைக்க உந்தும். இந்நூல் அவற்றை தேடி வாசிக்க ஓர் திறவுகோல் .
நூல் : சாதிகள் : உண்மையுமல்ல… பொய்மையுமல்ல…, [ நேர்காணல்கள் ]
ஆசிரியர் : தொ.பரமசிவன்
விலை : ரூ. 270 /-
பக்கங்கள் : 232
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி]லிட்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
சு.பொ.அகத்தியலிங்கம்.
4/9/2022.
முகநூல் பதிவிலிருந்து
சாதி மயிர் அகவி கவிதை – விநாயக மூர்த்தி
மனிதர்களுக்குள் கோயில் எல்லை
வேறுவேறாய்
கட்டப்பட்டது
அப்பட்டமாய் புலப்படும்
கிராமத் திருவிழாக்களில்
அரசாங்கக் கவனிப்பில்
அசலூர்களில்
பெருங்கோயில்களில்
குடும்ப சகிதமாய்ப் போய்
மொட்டை போட்டு
கவுரவமாய் செலுத்துவர்
காணிக்கை
அங்கெல்லாம் மொட்டை போடும் மயிர்
எந்த சாதியென
எவனுக்கும் தெரியாது
திருவிழா வரும்போதெல்லாம்
பூஜை போக்குவரத்து
வெற்றுச் செயல்தான்
அர்த்த ராத்திரி
ஆடல் பாடலே
பிரதானம்
நன்கொடை
கொடுக்க விரும்பினாலும்
வாங்குவதில்லை நம்மிடத்தில் அவர்கள்
மாடி வீடு படிப்பு பதவி
நிலபுலம்
வளர்ந்து நிற்பவனையும்
பொருட்படுத்துவதில்லை
நாளுக்கொரு நாட்டியம் வகையறாக்களின் பங்களிப்பு
கச்சேரி
கரகாட்டம் கதா காலட்சேபம்
சனங்களும்
ஊரில் திருவிழா என்று
கறிகாய் ஆக்கி
அருகாமை உறவுகளை அழைக்கின்றனர்
போன மாதந்தான் முயல்வேட்டை திருவிழா கொண்டாடினாலும்
பெரிய தெரு திருவிழா என்றால்
சனங்களுக்கும் இருப்பு கொள்ளாது
நீலா அண்ணி
நெற்றி நிறைய நீருடன்
சும்மாடு கோலி
சடச்சுட பொங்கல் பானையை
தூக்கி வருவதைப்பார்த்து
நான் தான் கேட்டேன்
கோயிலுக்குள் போகலாமா நாம் என
நமக்குஅங்க வேலை இல்ல
‘நமக்கு இடம் இருக்கு தம்பி’
கோயிலத் தள்ளி
சனங்க அங்க தான் பொங்க வைக்கும்’
கோயிலுக்குள் மட்டுந்தான்
உடமாட்டாங்க
தெருவுக்கு சாமி வராதே ஒழிய
அங்கனையே ஒதுங்கி நின்னு
படைக்கலாம்’
மாரியாத்தா அருள் ஒளிர
அண்ணி சொன்னார்கள்
‘முயல் வேட்டை மாரியம்மனை
கும்புட்டதோட நிக்க வேண்டியதுதானே
திரும்ப என்ன
பெரிய தெரு மாரியம்மன் மயிறு தெரு மாரியம்மன்’
என்று சொல்ல
வாய் வரைக்கும்
வார்த்தை வந்தது சொல்லவில்லை
இந்த ஊரில்
மாவட்டம்
ஒன்றியம்
சட்டமன்றம்
பாராளுமன்றமென
அரசியல் மயிருக்குக்
குறையொன்றுமில்லை.
– விநாயக மூர்த்தி
தங்கேஸ் கவிதைகள்
புன்மையின் நாவுகள்
************************
மனித அரவம் தென்படாத
இந்தத் தெருவில்
தன்னந்தனியே
ஒருவண்ணத்துப்பூச்சி
பறந்து செல்வது
தனிமையின் துயரை
கூட்டவோ?
மனிதம் பட்டுப்போன நாட்களில்
துளிசிச் செடிகள் முற்றத்தில் தழைப்பதில்லை
வாயிற்கதவு திறந்து கிடக்கும் கோவில்களிலும்
மூலவர்கள் பிரார்த்தனைகளுக்கு
செவிமடுப்பதில்லை
இரத்த வெறி கொண்ட
புன்மையின் நாவுகள்
தெய்வங்கள் மதங்கள்
சாதிகள் கட்சிகள் என
வாழ்க்கையை
அழகாக சந்தைப்படுத்தும்போது
கடவுள்கள் கண்ணாடிப் பெட்டிக்குள்
விற்பனைக்கு காத்திருக்கும்
கொலுப்பொம்மைகளாகிறார்கள்
நீங்களும் நானும் ராட்சத காலடிகளின்
அழுக்குகளைத் தின்று கொண்டிருக்கும்
மீன்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்
கருணை சிறிதுமற்ற மனசாட்சி
முற்றிலும் பித்தேறி
பைத்திய தாண்டவம்
ஆடிக் கொண்டிருக்கிறது
தேடல
********
வேதனை பீறிடும் ஒரு முகத்தை கடந்திடும் போது
உங்களுக்கு என்னதோன்றும்?
துயரச் சாயல் படிந்த
உறவினரின் முகம்
உடைந்த நாற்காலியைப் போர்த்தி வைத்திருக்கும்
ஒரு பழந்துணி
ம் ஹூம் எதுவுமில்லை
கையறு நிலையில் யாசித்துக்கொண்டிருக்கும்
ஒரு முது கடவுள்
அவ்வளவு தான்
தங்கேஸ்
தமுஎகச
தேனி
கார்கவியின் கவிதைகள்
எங்கள் ஊர்த் திருவிழா
**************************
சாலையெல்லாம் விளையாட்டுப் பொம்மைகள் இருந்தபோதும்
வயிறோடு பசி விளையாடிக் கொண்டுதான இருக்கிறது
அந்த யாரும் அற்ற குழந்தைக்கு….!
கண்ணாடிக் கடைகளில்
வளையலோடு மின்னுகிறது
காதலனின் கைப்பட்ட வளையல் அணிந்து
குலுங்கச்செய்யும் காட்சி….!
மாரியம்மனும் காளியம்மனும்
ஒன்றோடு ஒன்றோடு பார்த்துக் கொண்டாலும்
உரசாமல் உசாராக செல்கின்றன வடம் பிடித்த வெவ்வேறு சாதிகள்….!
ஏதோ ஒருநாள் செய்த தவறுக்கு
வாண வேடிக்கையை மட்டும் பார்த்துத் தலை நிமிர்த்துகிறது,
அப்பனின் அறியாத தவறு அறியாக் குழந்தை….!
வருடா வருடம் வந்து செல்கிறது…
வாசலோடு சென்று விடுகிறது தெய்வம்
விபூதி பட்டைவரை நிலைத்திருக்கிறது பக்தி…!
அவளதிகாரம்
*****************
காதுகளை அழுத்தி
நீ
தோப்புக்கரணமிடும் பொழுதெல்லாம்
ஒரு சுற்று நான் இளைப்பதும்
உலகம் பல சுற்று மறப்பதுமான நிலையாகிப் போய்விடுகிறது….!
அங்க பிரதட்சணைகளில்
கோயில் பிரகாரமே உன் இடைபிடித்து உருட்டி
கோரிக்கையைக் கடவுளின் முன் வைக்கிறது…..!
மெட்டிகளோடு நீ போராடும்
விரல் விட்டு வருடும் நொடிகளுக்காக
அந்தச் சிறு முத்துக்கள் அவ்வப்போது ஏங்கதான் செய்கின்றன…..!
சோப்புக் கட்டிகளின் தேய்மானத்தில் பிறக்கிறது
உன்னைப் பார்த்தபடியே
மெல்ல மெல்ல நகர்ந்து
உயிர்போகும் குமிழிகளின் வாழ்க்கை நீளம்……!
இருக்கையோ
இல்லை நின்றபடி நீ செல்லும்
பயணமோ
நிறுத்தம் முற்றுப் பெற்றாலும் உன்னிடமே பயணிக்கின்றது
பயணச்சீட்டின்றி
பயணப்படும் ஆசையில்…..!
– கவிஞர் சே கார்கவி
மனதின் குரல்……!!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி
நேற்று இரவு
ஒரே மழை
நனையாமல் இருக்க
மரத்தடியில் ஒதுங்கி நிற்கிறார் அப்பா நனையாமல்
தூங்கிக் கொண்டிருக்கிறது மரக்கன்றுகளை வைத்த
அப்பாவின் நிழல்.
*
ஒரு வேளையாவது
உணவு கிடைக்குமென்று
உணவகத்தில்
வேலைக்குச் சேருகிறான்
ஏழைச் சிறுவன்
மூன்று வேளையும்
உணவு
பரிமாறிக்கொண்டிருக்கிறான் பசியோடு.
*
நிலத்தை
உழுது கொடுத்துவிட்டு
திரும்பிப் பார்க்கும்
உழவனின் தன் நிழல்
ஒரு கட்டடத்தின் வாசலில்
வரிசையில் நிற்கிறது உணவுக்காக.
*
நேற்றைய
கனவில் அப்பா
இறந்து போனார்
இன்றைய கனவில்
நான் இறந்து போனேன்
நாளைய கனவில்
யார் இறந்து போவார்களென்று
கண்களைத் திறந்து பார்க்கிறேன் கனவுகள்
இறந்து போய் கிடக்கின்றன கண்களுக்குள்ளே.
*
நீங்கள்
எதை வேண்டுமானாலும்
உங்கள் உள்ளங்களில்
வரைந்து கொள்ளுங்கள்
அதற்கு முன்பாக
உங்கள் உள்ளங்களை
அழகாக வரைய முற்படுங்கள்.
*
கோவிலின் வாசலில்
பாலுக்காக ஏங்கி நிற்கும் குழந்தையினைக்
கண்டும் காணாமல்
கடந்து செல்லும் யாரோ ஒருவரின் நிழலில் மறைந்தவாறு
கருவறையின்
உள்ளே சென்று
மறைந்து
கொள்கிறார் கடவுள்.
*
பலர்
முன்னேறுவதற்கு
தன் விரல்கள் வீங்கப்
பாதைகளைத்
தைத்துக்கொடுத்தவர்கள் பாதையில்லாமலே பாதையோரங்களிலே
வாழ்கிறார்கள் பாதங்கள் இல்லாமலே.
*
கூரை வீட்டின்
மேலே அமர்ந்தவாறு
விடியும் வரை
விழித்திருக்கிறது நிலா
உள்ளே பென்சிலால்
நிலாவை வரைந்து
கொண்டிருக்கிறது குழந்தை
இருட்டில் நிலவின் வெளிச்சத்திலே.
கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,