வ.சு.வசந்தாவின் ஹைகூ கவிதைகள்

வ.சு.வசந்தாவின் ஹைகூ கவிதைகள்




மாலையின் பூக்கள்
சிதறிக் கிடக்கின்றன
கடைசி யாத்திரை.

இன்று வந்தவன்
நாளையும் வருவான்
சூரியன்.

முகம்மதுவும் மரிய சூசையும்
மனம் விட்டு பேசும் இடம்
சிவன் கோவில் தெப்பக்குளம்.

காதில் நுழைந்தது
இதயத்தில் அமர்ந்தது
சிம்மாசனக் கவிதை.

கிளிகள் பேசிக்கொண்டன
பார்த்துக்கொண்டிருந்தன
பழங்கள்.

மண்ணின் வாசம்
தெரியும்
மழை.

நடவு நட்ட பெண்ணின்
காலில் இருப்பது சேறு
அவள் போடுவாள் சோறு.

தன் பசி மறந்து
தெரு நாய்க்குச் சோறு போடுவான்
ஏழைச் சிறுவன்.

பூவும் பிஞ்சுமாக காயும் கனியுமாக
விருந்து படைக்கும்
மரங்கள்.

ஆடி அரவணைத்து
அனைத்தும் தரும்
இயற்கை.

வ.சு.வசந்தா
9840816840
சென்னை_92

பழனித்தாத்தா சொன்ன கதைகள் : ”நிலாச்சோறு” கட்டுரை – முனைவர் ம. அபிராமி

பழனித்தாத்தா சொன்ன கதைகள் : ”நிலாச்சோறு” கட்டுரை – முனைவர் ம. அபிராமி




வானம் அன்று பிரகாசமாகக் காட்சியளித்தது நேரம் ஆக ஆகப் பௌர்ணமி நிலா முழு வெள்ளித் தட்டு போல வெளிப்பட்டு புது மணப்பெண் போல் மேகத்தில் சிறிது மறைந்தும் வெளிப்படும் விளையாட்டு காட்டியது.

வீட்டின் வெளியில் குதிரை வண்டி வந்து நின்றது. சாரு கிளம்பிட்டியா அம்மாவின் குரல் சாரு புத்தாடை அணிந்து கொண்ட மகிழ்ச்சியோடு ஓடிவந்தாள் குதிரை வண்டியில் அப்பொழுது சமைத்த சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் பொரித்த வத்தல் அடங்கிய பாத்திரங்கள் ஏற்றப்பட்டன.

அப்பா, அம்மா, சாரு, பழனித்தாத்தா, எதிர்வீட்டு அத்தை, பாட்டி, மாலா, பக்கத்துவீட்டுக் கௌரி, சித்தி பரிமளா, அத்தை என அனைவரும் வண்டியில் ஏறினர்.

குதிரை இவ்வளவு சுமைகளையும் தாங்கிக்கொண்டு நடக்கமுடியாமல் நகர்ந்த

வந்தாயிற்று தேவநாத பெருமாள் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது, கூட்டத்தில் நின்று சாமி தரிசனம் முடித்தாயிற்றும் கோயில் பின்புறம் உள்ள கெடிலம் ஆற்றுக்கு அனைவரும் சென்றனர், ஆற்றின் கரையோரம் முழுவதும் கும்பல் கும்பலாக மக்கள் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்,

சாரு குடும்பம் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து. அமர்ந்தனர். கொண்டுவந்த சாப்பாட்டை நடுவில் வைத்துச் சாமி கும்பிட்டன.ர் சாருவுக்கு மனதில் பல சந்தேகங்கள். வெட்டவெளியில் வாளியில் கொண்டுவந்த சாப்பாட்டை மூடியைத் திறந்து வைக்கின்றனர். சிறுசிறு பூச்சிகள் விழாதா?

லூசு லூசுபடியாக யோசித்துக் கொண்டிருந்த அவளின் கவனத்தைச்

”சாரு உருண்டையைக் கையில் வாங்கு” என்ற அம்மாவின் குரல் கலைத்தது.

சாப்பாட்டைக் கையில் வாங்கிய சாரு சாப்பிடாமல் கையில் உள்ள சாப்பாட்டு உருண்டையைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக இருந்தாள். இதனைப் புரிந்துகொண்ட பழனித்தாத்தா

”சாரு இது நிலாச்சோறு. நிலவு ஒளியில் அமர்ந்து சாப்பிட்டால் அறிவு வளரும். அழகு கூடும். சாப்பிடு” என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சாரு மகிழ்ச்சியாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

பௌர்ணமி அறிவியல் பயன்கள் குறித்துத் தாத்தா பேச ஆரமித்தார். ”சிறுவயதில் பெரியவர்கள் கூறும் காரணங்கள் புரிவதில்லை. நாம் வளர்ந்த பிறகு அதற்குரிய காரணங்களை அறியும்போது வியப்பாக உள்ளது.

பௌர்ணமி என்பது பூமி சூரியனைச் சுற்றி வருவது போல, நிலவும் பூமியைச் சுற்றி வருகிறது. நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வலம் வருவதற்கு ஒன்பதரை நாட்கள் ஆகின்றன. பொதுவாகச் சூரியனிடமிருந்து தான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. பின் நிலவானது சூரியனிடமிருந்து வாங்கிய ஒலியைப் பூமியில் பிரதிபலிக்கிறது.

இந்தப் பவுர்ணமி நிலவொளியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன இதனால்தான் அக்காலத்தில் பெரியவர்கள் பௌர்ணமியில் நிலாச்சோறு சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுவந்தனர்.

நிலவொளியில் சாமி கும்பிட்டுச் சிறிது நேரம் உணவில் நிலவொளி படும்படி இருக்க வேண்டும். அப்பொழுது நிலவின் கிரணங்கள் அதில் படிந்து சத்து மிகுந்ததாக மாறும். அவ்வுணவை நாம் உண்ணும் பொழுது அந்தச் சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

தேனீக்கள் கூட நாள் முழுவதும் கொண்டுவரும் தேனியைச் சேமித்துப் பௌர்ணமி அன்று அவற்றை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை இங்கு யோசித்துப் பார்க்க வேண்டும்.”

முனைவர் ம. அபிராமி,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி

வெ.நரேஷ் – கவிதைகள்

வெ.நரேஷ் – கவிதைகள்




* பால் குடித்த ஞாபகத்தில்
விரல் சூப்புகின்றன
பெற்றோரை இழந்த குழந்தைகள்.

* ஆழ்துளைக் கிணற்றில்
மாட்டிக்கொண்ட குழந்தைக்கு
இது ஜன்னல்கள் இல்லா வீடு என்பது தெரியாது.

* தொப்புள் கொடி அறுத்தாலும்
தொலைதூரத்தில் சத்தம்
அம்மா என்ற சொல்
தொலைப்பேசியில்

* நீ பிறக்கும் போது நானழுதேன்
நான் இறக்கும் போது நீ அழுதாய்
இரண்டும் உமக்குத் தெரியாதே (தாய்)

* ஆலயத்திற்கு வெளியே
பாலுக்கு ஏங்கும் குழந்தை
ஆலையத்தினுல் அபிஷேகம்
அமைதியாய் கிடக்கும் ஆண்டவன்.

* இருப்பதை விட
இறப்பது மேல் என்று
கோபத்தில் கசிந்து விடும்
அன்பான அம்மா
கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை
இறந்து போவேன் என்று.

-வெ. நரேஷ்

வீடற்ற இயேசுநாதர் கவிதை – இந்திரன்

வீடற்ற இயேசுநாதர் கவிதை – இந்திரன்

வீடற்ற இயேசுநாதர் ************************** வீடற்ற இயேசுநாதர் தூங்குவதைப் பார்த்தேன் அதிகாலைப் பூங்காவின் பெஞ்சு ஒன்றில் வெளியே தெரிந்த  பாதங்களில் சிலுவையில் அறைந்த ஆணிகளின் ரத்தம் பார்த்துதான் அவர் இயேசுநாதர் என்று தெரிந்து கொண்டேன். இரவெல்லாம் பெய்த பனித்துளி பல்புகள் அவர் தலை…
Avusaari Shortstory By Manimathavi அவுசாரி சிறுகதை - மணிமாதவி

அவுசாரி சிறுகதை – மணிமாதவி




சாந்தி…சாந்தி…

ம்ம்ம்..

சாந்தி….கொஞ்சம் எந்திரி…

ம்ம்ம்…

சாந்தி….எழுந்துரு…

என்னய்யா‌ ….இந்நேரம் ஏன் எழுப்புற…

பேசனும்…

இப்பவா…என்னாச்சு மாமா….எதும் பிரச்சனையா….ஏதும் வேணுமா…

இல்ல…கொஞ்சம் பேசணும்..

இந்நேரம் என்னத்தய்யா பேச போற….காலைல பேசலாம் போய் படு…

இல்ல இப்ப பேசனும்…

என்னய்யா ரோதனையா போச்சு உன்னோட….எத பத்தி பேசனும் சாமகாட்டுல…

இல்ல இன்னைக்கு ஊருக்கு போனத பத்தி ….

ஆமாயா….ஒரு மாசமா பழனி பழனின்னு பசப்பிட்டே திரிஞ்சதுக்கு இன்னைக்கு போயாந்தாச்சு ….ஒத்த மொட்டை வழிச்சு வர்றததுக்குள்ள போதும் போதும்னு ஆயாச்சு…ஆனாலும் உம்ம வீட்டாளுகள இழுத்து போய் வாரதெல்லாம் மலையை மயித்தகட்டி இழுக்குற காரியம்யா.‌….யாத்தே யாத்தே…மனுசருக்கு அத்தாவுத்தியா வந்துடும் இதுகள இழுத்து போயி வரமுன்ன …..வெள்ளன கெளம்பி செத்தமுன்ன தான் வந்து சேர்ந்தோம்….செத்தம் குறுக்க சரிப்போம்னு பார்த்தா சாந்தி சாந்தினு வந்து நிக்க….அத்த பத்தி என்னத்த பேச சொல்ற…

இல்ல காருல….

நான்தேன் உம்மட்ட படிச்சு படிச்சு சொன்னேம்ல …உங்காத்தாகாரி வரல வரலம்பா கார் வந்ததும் மொதெ அவதேன் ஏறுவா….நம்ம வீட்டு சனத்துக்கு டாடா சுமோ போதாதுயா …..வேனுக்கு சொல்லும்னா கேட்டியாயா…..சிறுக்கி பேச்ச கேட்க நாதியில்லாம….ஒம்பது சனம் போறதுல பத்தொன்பத நெறச்சா …..பரிதவிச்சு வந்து போச்சுயா….

இல்ல கரிக்கோலு….

உம்ம அண்ணே மவன்தான…‌ஏம்யா உங்காத்தாகாரிக்கு மசுரோட மண்டைக்குள்ள ஏதுமிருக்கா….அவன என்ன சின்ன நொல்லன்னு நெனச்சுபுட்டாளா….இளவட்டமாட்டம் இருக்கான் அவன என் மடில தள்ளிட்டா …எம்பொசமும் போச்சு ….ஒத்தபக்க பிட்டமும் போச்சு…

இல்ல கார்ல வச்சு யாருக்கும் தெரியாம போன் பேசுனியாமே..

யார் சொன்னா….நீ என்னத்த கண்ட……

இல்ல கரிக்கோல் தான்..மதுரை நெருங்கையில …எல்லாம் அசந்த நேரம்… யாருட்ட …என்ன பேசுன…

பேசுனேன் சொன்னவன் ..என்ன பேசுனுன்னு சொல்லலியோ

நீ தான் திருட்டு தனமா குசு குசுன்னு பேசுனியாம்ல ….அவன் வந்து சொல்லயிலே எனக்கு அசிங்கமா போச்சு.‌‌

போன் பேசுனதுல உமக்கென்னயா அசிங்கம் …

ஆத்தா அப்பனெல்லாம் திருட்டு தனமா அவுசாரிதேன் பேசுவா …‌நான் பெத்தவன் நீ சரியா இருந்தா சிறுக்கி அவுசாரிதனம் பண்ணுவாலான்னு கேட்டுபுட்டாவ…அண்ணனும் கொஞ்சம் வெசனபட்டான்….

என்னத்துக்கு…

நான் கொடுக்குற இடத்துலதான நீ இம்புட்டு ஆடுற….யார் என்னன்னு விசாரின்னு….

நீ என்னத்த சொன்ன…

எம்பொண்டாட்டி நான் கேட்காமலே என்ட எல்லாம் சொல்லிடுவான்னு மெச்சி வந்தேன்….இம்புட்டு நேரம் நீயும் சொல்லுவ பாத்தேன்….நீ தூங்கிபுட்ட அதேன் எழுப்புனேன்…..யாரு புள்ள….

இப்ப நான் யாருன்னு சொன்னாதான் நம்புவியா

இல்ல அவுகட்ட நான் ஒன்ன சரியா வச்சுருக்கேனு சொல்லனும்ல…

ஓ….நான் போன காட்டி அத நீ அவுகட்ட சொல்லிதேன்….நான் அவுசாரி இல்லன்னு நிருபிப்பியோ….

அப்படியில்லடி….ஒன்ன தப்பா பேசிட கூடாதுல….

அவுக பேசுனதோட ‌நீ என்ட்ட இப்ப கேட்குறதுதாம்யா நோவுது…

ஏய் .. யார்ட்ட பேசுனனு காட்டுறதுல உனக்கு என்ன ஆகிட போவுது ….உம்மேல தப்பில்லனா ஏன்டி பயப்படுற…

நான் பயப்பட்டேன்னே வச்சுக்கோயா…..இந்த போன்காட்டுல பாத்துதேன் ‌நீ என்ன நம்புவனா…..அப்டி ஒரு நம்பிக்கை தேவையேயில்ல…நான் அவுசாரியாவே இருந்துட்டு போறேன்யா…

ஏய்….என்னடி திமிரா….

ஆமான்னே வச்சுக்கோ…

எக்கா ….எக்கா ….அம்சவேணிக்கா….

ஏய் என்னடி …இம்புட்டு வெள்ளன வந்துருக்கவ….என்னடி ஆச்சு …ரவ்வுக்கு தூங்குனியா இல்லையா…கண்ணுலாம் வீங்கி கெடக்கு….உம்புருசனோட எதும் தகராறா….அவன் வெள்ளனவே வெளிய போனான்….

இல்லக்கா…. வந்துசேரவே ராவாகிபோச்சு…. எல்லாம் முடிச்சு உடம்பு நோவு சரியா தூக்கமில்ல….

என்னத்தயோடி …‌சரி இப்ப என்னத்துக்கு வந்தவ ….

சீட்டு எடுக்க கேட்டேனே ….

ஆமா ….நேத்து போனுலயும் இத தானடி சொன்ன….இந்த முறை எடுத்துக்கோன்னு சொல்லிபுட்டேனே …இன்னும் பத்து நா கெடக்கு ..‌அதுக்குள்ள ஏண்டி விடியமுன்ன வந்து நிக்க….

இல்லக்கா அது வேணாம்னு…..சொல்ல வந்தேன்….நான் கடைசி சீட்டே தட்டிகுறேன்கா…

அடி பாதகசத்தி….அரை நாளுக்குள்ள அப்படி என்னடி உனக்கு வந்துச்சு….நேத்துதேன் ….இந்த சீட்டு எடுத்தே தீருவேன்னு நின்ன இன்னைக்கு வேணாம்ங்க‌…கோட்டி கீட்டி புடிச்சுருக்கா…

இல்லக்கா ….எனக்கு வேண்டியவுகளுக்கு வண்டி எடுக்க கைகடிச்சுதுன்னு நேத்து பேசிட்டுருந்தாவ….சரிி நான் வீட்ல சிறுபாட்டுல போட்ட சீட்டுதான இது ….அவுகளுக்கு உதவ கொடுக்க நெனச்சேன்….

சரி இப்ப என்னாச்சு ‌…..அவுக வண்டி எடுக்கலயா..

இல்ல….அவுக செத்துட்டாவ……

Viyarvai Theettu Poem By V Kamaraj வ. காமராஜின் வியர்வைத் தீட்டு கவிதை

வியர்வைத் தீட்டு கவிதை – வ. காமராஜ்




பழைமை வாய்ந்த
புகழ் பெற்றக் கோயில்!
அரசன் கட்டினான்
அப்போதே….
ஆரம்பித்தது தீட்டு!

குப்பன் கோவாலு முருவன்
குள்ளம்மா காளிமா எல்லம்மா….
கூழுக்கோ…..
கணக்கனின் கோபத்துக்கோ
எலும்பு ஒடிய
எச்சில் வறள….
மிச்சமிருந்த உயிரில்
உருவான கோயில்!
கும்பாபிஷேகம்;
குப்பன் என்னக் கேட்டான் சாமி?

கோபுரக்கலசத்தை
மேலே கொண்டுவந்து
தருகிறேன் என்று
உரிமை கேட்டானா?

திர்னூரு…
துளியூண்டு…. திர்னூரு…
கையேந்தி நின்றவனைக்
காரித்துப்பி….
எச்சிலால் அடித்து விரட்டிய கோயில்!

கல்வெட்டில்….
நன்றாக முகந்து பார்த்தால்
இரத்த வாடை வரும்….
ஆராய்ச்சியாளர்கள்
அறிதல் வேண்டும்;
அறிவார்களா?

தலைமுறைகள் மாறியும்
கம்பீரமாக நின்ற
தீட்டுப்படாதக் கோயில்;
அவ்வளவு சக்தி!

சிதிலமடைந்து
திருப்பணிக்கு
திட்டம் தீட்டிய தீட்டே படாத கூட்டம்!

கண்டிப்பாக
காலம் ஓரிரண்டு ஆண்டுகள்…..
ஜமாதான்!

கடைக்கால் எடுக்க வேண்டும்
கட்டுமானத்துக்கு
கல் வேண்டும்
மணல் வேண்டும்
சிமெண்ட் கம்பி
தண்ணீர்….
முட்டுக்கட்டைகள்….
மேஸ்திரி… .
சித்தாள்….. பேராள்….
இப்படியான….
ஆளும் அம்பும் இல்லாமல்
ஆண்டவனாலேயே
ஆலயத்தைக் கட்டிக்கொள்ள முடியாதே!

சரி….
மணலில்…. கல்லில்…. கம்பியில்…. சிமெண்ட்டில் தண்ணீரில்….
சித்தாளில்…. பேராளில்…..
வியர்வைத் தீட்டு இருக்குமே?!
ஏர்வையாகுமா சாமிக்கு?
திருப்பணிக் குழுதான் தீர்மானிக்க வேண்டும்….
இப்போதே!

நாளை
கோயில் கட்டி முடிந்து
கும்பாபிஷேகம் நடக்கும்போது…..
திருனூரு கேட்டு
கையேந்தி வரும்
ஒரு கூட்டம்…..
வியர்வை சிந்திய கூட்டம்,
தீட்டு என்று
கோயிலைச் சாத்திவிடவேண்டாம்!

இப்போது….
திறப்பதற்கும்…..
தீட்டுக்களுக்கு
சக்தியைக் கொடுத்து விட்டான் கடவுள்!

Aalayamani shortstory by Kavinraj krishnamurthy ஆலயமணி

ஆலயமணி சிறுகதை – கவின்ராஜ் கிருஷ்ணமூர்த்தி



“இன்னிக்காவது போறோமே… அய்யா சூப்பர்…செம ஜாலி” என்று மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் அவசர அவசரமாக அங்கும் இங்கும் ஓடி சீரி சிங்காரித்து முடித்து கிளம்பிக் கொண்டிருந்தான் அருள்.

“ஐய்யோ ஆண்டவா….. டேய், இருடா போலாம்.. சும்மா அரக்கப் பரக்கக் குதிக்காத. வெளக்கேத்த விடுறியா என்ன எங்கயாவது.. இரு வர்றேன்….” என்று அவனை அதட்டியவாறே விளக்கினை ஏற்றிக் கொண்டிருந்தாள் அருளின் தாய்.

ஆனால், அருளுக்கோ இருப்பு கொள்ளவில்லை. நீண்ட நாட்களாக அவனுடைய பட்டியலில் அடிகோடிடப்படாமல் இருக்கும் அவனுடைய ஆசை இன்று நிறைவேறப் போகிறது. ஒன்பதாவது வகுப்பு படிக்கும் அருளைப் போன்ற சிறுவர்கள், ஏன் அருளின் நண்பர்களிடம் கூட துளிர் விட வாய்ப்பே இல்லாத ஒரு ஆசை அருளிடம் வருவானேன். எல்லாம் அவருடைய தந்தையினால் வந்தது தான்.

அருள் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னில் இருந்தே அவர் நிறைய பிரம்மோபதேசங்களை புரிந்துள்ளார். அறிவியல், அரசியல், புராணங்கள், வரலாறு, நாட்டு நடப்பு என்று எல்லாம் அவனுக்கு போதிப்பார். இவைகளை கதையாக்கி இரவில் கூறுவார்.
சிறு வயது முதல் இவைகளை கேட்டே வளர்ந்த அருளுக்கு இது போன்ற சரித்திர சிறப்பு மிக்க ஸ்தலங்களுக்கு செல்வது அவனுக்கு அலாதி பிரியம். காலுக்கெட்டும் தூரத்தில் இருந்தும் இந்த ஆலயத்திற்குச் செல்லும் திட்டம் வெகு நாட்களாக தடைப்பட்டே வந்தது என்பதுதான் நிஜம். இன்று தான் வாய்ப்பு கிட்டியது.

அருள் அந்த பிரம்மாண்டமான கோயில் ராஜகோபுரத்தை எட்டிப் பார்த்தான். பளிச்சென்று அடிக்கும் சூரிய வெளிச்சம் மேல் கலசங்களில் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது.
அருளின் ஆசை கோயிலில் ராஜ கோபுரத்தைத் தாண்டி ஒரு மூடப்பட்ட ஒரு முகப்பு இருக்கும். இங்கே தான் காலணிகளை கழட்டுவது, சுவாமி படங்களை விற்பது, தாயத்து கட்டுவது நடைபெறும். அதனை தாண்டி சென்றால், ஒரு மண்டபம் இருக்கும். இங்கே தான் கொடி மரம் அமைந்திருக்கும். கோயில் நிர்வாகம், தேர் இருக்கும் அறை, அமர்வு கூடம், தியான மண்டபம் எல்லாம் அமைந்திருக்கும்.

இதனையெல்லாம் பார்த்து அருளுக்கு உடம்பு சிலிர்த்தது.
இதனை தாண்டி சென்றால் தான் உற்சவ மண்டபம். கலியாண உற்சவம் நடக்கும் இடம். இந்த முகப்பின் இரு புறமும் திறந்திருந்தது. இந்த வழியாக தான் மற்ற சிறிய சன்னிதிகளுக்கு சென்று ஆலயத்தினை வலம் வருதல் வேண்டும் என்று அருளுக்கு தோன்றியது. இந்த முகப்பினை தாண்டி, இரு முகப்பு உள்ளது. அதனைக் கடந்தால் தான் மூலவ சன்னிதானம்.

ஆனால் இந்த மண்டபத்தினை நேர் வழியே கடக்க இயலாதவாறு லிஃப்ட்களில் வரும் ஸ்லைடிங்க் கிரில் கதவுகளால் மூடப்பட்டிருந்ததைப் பார்த்த அருளுக்கு பயம் வந்துவிட்டது. ஒருவேளை நடை சாத்தப்பட்டதோ என்று. ஆனால், மூல கர்பகிருஹம் மூடப்படவில்லை. நிறைய பேர் அந்த கதவின் துவாரங்களில் இருந்து கடவுளை பிரார்த்தனை செய்வதையும் இடது புறம் மக்கள் கூட்டமாக செல்வதனையும் அருள் பார்த்தான். ஒரு வேளை க்யூ வரிசை உண்டோ என்று யூகித்த அருள் அவனுடைய அன்னையை அழைத்து க்யூ வரிசை தேடிச் சென்றான். ஒருவாறு க்யூவின் முகப்பினை அடைந்தனர்.

அங்கே உள்ள பலகை “ சிறப்பு தரிசனம் – 75/- “ என்று போட்டிருந்தது. ஆனால் இருந்ததோ ஒரே ஒரு க்யூ தான். அருள் அங்கிருந்த அதிகாரியிடம் “சார், ஃப்ரீ தரிசனம் க்யூ எங்க இருக்கு” என்று வினவினான். அவரோ, “ஃப்ரீ தரிசனம் எல்லாம் இல்ல. ஒரே தரிசனம். 75 ரூவா. வர்ரதா இருந்தா நில்லு. இல்லனா அங்க கேட் வழியா நின்னு பாரு” என்று ஒரே போடாக போட்டு விட்டார். இதனைக் கேட்ட இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

“75 ரூவா தான போயிடலாம், இவ்ளோ தூரம் வந்தாச்சு, சரி” என்று மனம் கூறினாலும், “ அய்யோ, 75 ரூவா வா, அத வச்சி பையனுக்கு எதாவது வாங்கித் தரலாம், காய் பழம் வாங்கிட்டு போலாம், பஸ்ல டிக்கட் எடுக்கலாம்” என்று அருளின் அம்மாவுடைய புத்தி அவளுக்கு அறிவுரை சொல்ல தொடங்கியது. மனத்துக்கும் புத்திக்கும் நடந்த சண்டையில் புத்தி வென்றது. அருளுக்கு இதை ஜீரணிக்க இயலவில்லை.

அருளின் அம்மாவை ஒரு சிறந்த தெய்வ பக்தை என்று சொல்வதைக் காட்டிலும் வெறிப் பிடித்த பக்தை என்று தான் சொல்ல வேண்டும். அவளுக்கு கணவன், மகன், கடவுள் இவ்வளவு தான் தெரியும். நிதானமாக, அந்த கிரில் கதவின் முன் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினாள்.

அருள் துவாரத்தின் வழியே பார்த்தா போது, காசு கொடுத்து சென்றவர்கள் கருவறையின் முன் வரிசையாக அமர்ந்து பூஜையை கண் முழுவதும் கண்டு களித்தனர். அருளுக்கு தன் அம்மா அமர்ந்திருக்கும் இடத்தையும் க்யூ வரிசையில் சென்றவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தையும் கண்டு கோவம் தாங்கவில்லை.

அவன் கோவம் அதிகாரிகளிடம் மட்டும் முடியாமல், கடவுளிடமே திரும்பியது. மனதுக்குள்ளே கடவுளை சரமாரியாக திட்டினான். “உங்க பக்கத்துல உக்காந்துட்டு இருக்குறவங்க பக்திய விட என் அம்மாவோட பக்தி எந்த அளவு கொறச்சல்.. எந்ரேமும் உன்ன பத்தி தான நெனச்சிகிட்டு இருப்பா, அவள இப்படி ஏமாத்திட்ட, அவ உங்கிட்ட என்ன அப்டி கேட்டுட்டா, உன்னோட அருள் தான கேட்டா?” என்று புலம்பித் தள்ளினான்.

அதே சமயம், மற்றொருவர், “என்னடா இப்டி பண்ணுரானுங்க… ஒரு ஃப்ரீ தரிசனம் கூட இல்லையாம்…. காசு இருந்தா பக்கத்துல பாக்கலாம்; இல்லனா இப்டி ஓட்ட வழியா பாக்கனுமாம்.” என்றார். அவருடன் வந்தவர்,

“ஆமாம், இங்க பக்திக்கெல்லாம் மதிப்பே இல்ல… காசுக்கு தான், பின்ன, அந்த கடவுளுக்கும் நறைய அலங்காரம் பண்ணிக்கனும், நக போட்டுக்கனும் ன்னு ஆசையெல்லாம் இருக்குமுல… அதனால தான் அவருடைய அருள காசுக்கு விக்கிறாரு” என்ற உடனே ஒரு பெரியவருக்கு கோவம் வந்துவிட்டது…

“தம்பி, அப்டியெல்லாம் கோவில்ல வந்து தெய்வத்த நிந்திக்க கூடாது; காரணமே இல்லாம் இப்டியெல்லாம் இந்த கோயில்ல இருக்குர பாவிகள் பண்றதுக்கெல்லாம் கடவுள் எப்டி பொறுப்பாக முடியும்… அவங்க ஊருக்கே படி அளப்பவங்க…. அவுங்க எதுக்கு உன்னோட காச வாங்கிட்டு அருள விக்கனும்’ என்று வியாக்யானமாக பேசினார்..

தியானத்தில் இருந்த அருளின் அம்மாவுடைய வாயோரத்தில் சிரிப்பு தெரிந்தது…. அதனை கவனித்த அருள் உடனே அந்த பெரியவரை நோக்கி, “ஐயா, சாமி படி அளக்குறாரு சொன்னீங்களே, அவங்க அளக்குறது பத்தாம தான், இன்னும் கேட்டு இங்க வர்ரோம்… ஆனா அதக்கேக்க வர்றதுக்காகவே இவங்க அளந்ததுலயே பங்கு கேட்டா நியாயமா? என்னோட அம்மா எவ்வளவு பாவம் தெரியுமா” என்று சொல்லி முடிப்பதற்குள் அருளின் அம்மா அவனை அதட்டியவாறே அந்த இடத்தினை விட்டு இருவரும் நகர்ந்தனர்.

அடுத்தடுத்த சன்னதிகளுக்கு செல்லத் தொடங்கினர். அருளுக்கு கோவம் இன்னும் போகவில்லை. ஏன் இப்டி ஃப்ரீ தரிசனம் இல்லை என்று அவனுக்கு இன்று வரை புரியாத புதிர் தான். அவன் அம்மாவிடம், “அம்மா, கடவுளுக்கு பணமா, இல்ல பணத்துக்கு கடவுளா, கடவுள் பாக்க காசு வேணுமா, இல்ல காச பாக்க கடவுள் வேணுமா?
என்றெல்லாம் கேட்டு தன் அம்மாவினை எரிச்சலூட்டினான்.

திடீரென்று , அசரீரி தோன்றி “இன்னும் ஒரு ஐந்தாறு வருடங்களில் ஒரு பெரும் நோய் தொற்று வரும்.. அதனால், ஜாக்கிரதையாக செயல்படும்” என்று கோயில் நிர்வாகியிடம் சொல்லிவிட்டு மறைந்தது போலும்…
அடுத்த சன்னதியில், இவர்களுக்கு முன், ஒரு பெரிய வட்டார பழக்கமுடையவர் போன்ற ஒரு நபர் நின்றிருந்தார். அவருக்கு விசேஷமாக ஒரு கடவுள் மீது சாத்தப்பட்டிருந்த ஒரு மலரினை பிரித்து வழங்கினார். அதற்கு பின், அருளின் அம்மா நின்றிருந்ததை கவனித்தும் அவர் கையில் இருந்த மீதி மலரினை வழங்க மனமில்லாமல், உள்ளே வைத்து விட்டார். அவளும் நீட்டிய கையினை பட்டென்று இழுத்துக் கொண்டாள். ஏற்கனவே, கோவத்தில் இருந்த அருளுக்கு இது இன்னமும் எரிச்சல் ஊட்டியது.

விறுவிறுவென்று பிரகாரத்தினை சுற்றிவந்து நமஸ்கரித்து வெளியே செருப்பினை மாட்டிக் கொண்டிருந்தான். இன்னமும் அவன் அம்மா கோயிலில் தியான மண்டபத்தில் அமர்ந்து தான் இருக்கிறாள்.
“ச்சே,, இந்த அம்மாவ திருத்த்வே முடியாது… போ… என்று திட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், இரண்டு ரூபாய் பிச்சை போட்ட ஒரு தாத்தாவினை ஏசிக் கொண்டிருந்த தன் அம்மா வயதினையொத்த ஒரு பெண்மணியைப் பார்த்து இவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் இவனை நோக்கினாள்.
இவனோ, தன்னையும் இவள் திட்டுவாள் என்று எண்ணி ஒரு இருபது ரூபாய் நோட்டினை தட்டில் போட்டான்… அவளும், “மகராசனா இருக்கணும் தம்பி நீ” என்று வாழ்த்தினாள்.
இதைக் கேட்ட அருள், திரும்பி கடைசி முறை எதேச்சையாக மேலே பார்த்தான்… சூரியனை மேகம் முழுவதுமாக மூடியிருந்தது…. கோபுர கலசம் பொலிவினை இழந்து காணப்பட்டது…
அருளின் முகத்தில் இருந்த கோவம் மெதுவாக குறைந்து சிரிப்பினை வெளிப்படுத்த தொடங்கியிருந்தது.