ஜனவரி 21 லெனின் நினைவுதின கட்டுரை – அ. பாக்கியம்
உண்மை போன்றே எளிமையானவர்
(மாக்சிம் கார்க்கியின் நினைவுகளிலிருந்து லெனின்)
1924 ஜனவரி 21 ஆம் ஆண்டு லெனின் மரணம் அடைந்தார். லெனின் சிறப்புகளை எல்லாம் இந்த உலகம் எண்ணற்ற வகையில் அறிந்திருக்கிறது. அவர் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தது, உலக கம்யூனிச இயக்கத்தை ஸ்தாபன அமைப்பை உருவாக்கி சமூக மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தது என பல அம்சங்களை அறிந்து கொள்ள முடியும்.
லெனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளிலும், நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான புகழஞ்சலி, அவரின் சிந்தனைகளையும், செயல்களையும் கடைபிடிப்பதும் செயல்படுத்துவதும்தான். தலைமைப் பண்புகள் பற்றி பேசுவது எழுதுவதும் எளிது. கடைபிடிப்பது கடினமானது. லெனின் அதைக் கடைபிடித்தார் என்பதைவிட அது ஒரு பண்பாகவே அவரிடம் உறைந்துகிடந்தது அல்லது அவரது பண்பே தலைமை பண்பாக மாறியது என்றுகூட சொல்லலாம்.
இங்கே லெனினுடன் சமகாலத்தில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி லெனினைப் பற்றி மாறுபட்ட முறையில் எடுத்துரைக்கிறார் லெனினுடைய ஆளுமைகள் அணுகுமுறைகள் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முன்மாதிரியான அம்சங்களை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக மாக்சிம் கார்க்கி சொல்லவில்லை. லெனினை சந்தித்ததன் மூலம் அவருக்கு ஏற்பட்ட தாக்கத்தை இயல்பான முறையில் எடுத்துச் சொல்கிறார். லெனினுடன் சமகால நிகழ்வுகளைப் பற்றி தர்க்கம் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் கருத்து ஒற்றுமைகளும் இருந்தது. இருவருக்கும் இடையில் நடைபெற்ற விவாதங்கள் நெடியது மட்டுமல்ல கருத்துச் செறிவுள்ள விவாதங்களாக இருந்தது.
தாய் நாவல் புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
தாய் நாவல் உலகபுரட்சியாளர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அதைபற்றி லெனினுடன் நடந்த விவாதத்தின் இறுதியாக அந்த நாவலைப் பற்றி லெனினின் மதிப்பீடுகளை கார்க்கி இவ்வாறு கூறுகிறார்.
“–என்னை சந்தித்ததும் தாய் நாவல் பற்றிய குறைபாடுகளை பற்றி பேசத் துவங்கிவிட்டார். இந்தப் புத்தகத்தை அவசரமாக எழுதியதாக நான் பதில்கூறினேன். அவசரப்பட்டது நல்லது. ஏராளமான தொழிலாளர்கள் தாமாக உந்தப்பட்டு புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டனர். இப்போது இந்த தாய் நூலைப்படித்து பெரிதும் பயன் பெறுவார்கள் என்றார். மிகவும் காலத்திற்கு ஏற்ற புத்தகம் என்பதே அவர் கூறிய புகழுரை. இது எனக்கு நிதி கிடைத்தது போல் இருந்தது” என்று கார்க்கி நினைவு கூர்கின்றார்.”
லெனின் கருத்துக்களையும், அவரது சாதனைகளையும், வெற்றிகளையும் கூறிய அளவிற்கு அவரது உருவத்தையும் செய்கைகளையும் வார்த்தைகளால் காட்சிப்படுத்தியவர்கள் குறைவு. கார்க்கி, லெனினை இதோ இப்படிக் காட்சிப்படுத்துகின்றார்.
“லெனின் இப்படி இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் எதுவோ குறை எனக்கு தென்பட்டது. அவரது ரகர உச்சரிப்பு ஹகரம் போல் ஒலித்தது. அரைக்கோட்டுக்குள் கைத்துளைகளில் கட்டைவிரல்களை நுழைத்துக் கொண்டு நின்றார். மொத்தத்தில் எல்லாவிதத்திலும சர்வசாதாரணமாக இருந்தார். தலைவருக்கு உரிய எதுவும் அவரிடம் காணப்படவில்லை. நான் எழுத்தாளன். சில்லறை விஷயங்களை கவனிப்பது தொழில்முறையில் எனது கடமை. இந்தக்கடமை எனது வழக்கமாகிவிட்டது. வழுக்கைத்தலையரும் ரகரத்தை தொண்டையால் உச்சரிப்பவரும், கட்டுக்குட்டானவரும், பலமுள்ளவருமான இந்த மனிதரோ கிரேக்கஞானி சாக்ரடீசைப்போன்று நெற்றியை ஒரு கையால் தடவிக் கொண்டு மறுகையால் என்னை இழுத்தார்” .
ருஷ்ய சமுக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் 3வது மாநாடு 1903 ம் ஆண்டு ஜுலை 30 முதல் ஆகஸ்ட் 23 வரை 25 நாட்கள் 27 அமர்வுகள் நடைபெற்றது. 13 நாட்கள் பெல்ஜியம் நாட்டிலும் பிறகு காவல்துறை கெடுபிடியால் மீதிநாட்கள் லண்டனிலும் நடைபெற்றது. 57 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மக்சிம் கார்க்கி இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் லெனினின் உடல்மொழியின் எதிர்வினைகள் பற்றி கார்க்கி பதிவுசெய்கிறார்.
“லண்டனில் நடைபெற்ற கட்சி காங்கிரசில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முதல் அமர்வில் பிளக்கானவ் உரை நிகழ்த்தியபோது போல்ஷ்விக்குகளின் இருக்கைப் பகுதியில் லெனின் அமர்ந்திருந்தார். மற்றவர்களை காட்டிலும் அடிக்கடி அசைந்து கொண்டிருந்தார். ஒரு சமயம் குளிர்வதுபோல் உடம்பை குறுக்குவார். மறு சமயம் வெப்பமாய் இருப்பதுபோல் மேனியை பரப்புவார். விரல்களை கோட்டுக்குள் நுழைப்பார். ஒளிரும் தலையை வெட்டி அசைத்தவாறு மோவாயை தடவுவார். அருகிலிருந்த தோம்ஸ்கியிடம் கிசுகிசுப்பார். கட்சியில் திரிபுவாதிகள் இல்லை என்று பிளக்கானவ் பேசியபோது லெனின் குனிந்து கொண்டார். அவருடைய வழுக்கை சிவந்தது. ஒலியற்ற சிரிப்பில் தோள்கள் குலுங்கின”
சிக்கலான விஷயங்களை எளிமையாக விளக்குவது சிரமம் என்பதால் அதை கடந்துபோய்விடும் காலமிது. பொருளற்ற வார்த்தைகளால் காலத்தை இழுத்தும், வார்த்தை ஜாலங்களால் பக்கங்களை நிறைத்தும் ஒப்பேத்துகிற நிலை பலநேரங்களில் பலரிடமும் உள்ளது. ஆனால் லெனின் எப்படி பேசினார் என்பதை கார்க்கி இரத்தினச் சுருக்கமாக கூறுகின்றார்.
“—மாநாட்டினூடே லெனின் பரபரப்புடன் மேடை ஏறினார். தோழர்களே என்ற அர்த்தம் குறிக்கும் “தவாரிஷ்” என்ற ருஷ்ய சொல்லை குதலையாக உச்சரித்தார். அவர் நல்ல பேச்சாளர் அல்ல என்று எனக்குத் தோன்றியது. ஆனால் நிமிட நேரத்திலேயே மற்ற யாவரையும் போன்றே நானும் அவருடைய சொற்பொழிவால் வசீகரிக்கப்பட்டேன். மிகச்சிக்கலான அரசியல் பிரச்சனைகளை பற்றி இவ்வளவு எளிமையாக பேசமுடியும் என்பதை அப்போதுதான் நான் முதன்முதலாக கேட்டறிந்தேன். இந்த மனிதர் அழகிய சொற்றொடர்களை புனைந்துரைக்க முயலவில்லை. ஆனால் ஒவ்வொரு சொல்லையும் நெல்லிக்கனிபோல் துலக்கமாக முன்வைத்து அதன் சரியான பொருளை ஆச்சரியமான எளிமையுடன் வெளிக்காட்டினார். அவர் ஏற்படுத்திய அசாதாரண உளப்பதிவை விவரிப்பது கடினம். கையை முன்நீட்டி சற்றே உயர்த்தி உள்ளங்கையால் ஒவ்வொரு சொல்லையும் எடைபோடுவது போன்ற பாவனையுடன் பேசினார்.–”
எளிமை என்பது பிரச்சாரமாக மாற்றப்படுகிற காலம் இது. நவீனங்களை எதிர்ப்பதும், அழுக்காக இருப்பதும்தான் எளிமை என்று குதர்க்கமான புரிதலும் உள்ளது. நவீனமய காலத்தில் எளிமை பற்றி பேசுவது எல்லாம் பழைய சிந்தனைகள் என்று அடிப்படையை புறந்தள்ளும் போக்கும் உள்ளது. எளிதில் அணுகுதல், மற்றவர்களின் மீதான அக்கறையின் பரப்பு, அதிகாரம் பதவிகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் இணைதல், சமூக அக்கறையுடன் அடித்தட்டு மக்களிடம் பணிபுரிதல் என்று எளிமை விரிவடைகிறது. தத்துவம், அரசியல், அமைப்பு, வர்க்கப் போராட்டம், என்பனவற்றில் பெரும் பங்காற்றிய தமிழகத்தின் தலைவர்கள் ஏ.பாலசுப்பிரமணி, பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பி.சிந்தன், ஏ.நல்லசிவன், ஆர்.உமாநாத். பாப்பா உமாநாத் தடம்பதித்தவர்களே. அதே நேரத்தில் திண்டுக்கல்லில் தோல்பதனிடும் தொழிலாளர்களிடம் தோழர்.பாலசுப்பிரமணியின் பணியும், தஞ்சை சேரிகளில் சீனிவாசராவின் பணியும், சென்னை குடிசைப்பகுதிகளில் வி.பி.சிந்தனின் பணியும், குமரிமாவட்டத்தில் ஜே.ஹமச்சந்திரன் அவர்களின் பணியும் சமூக அக்கறைகளின் பரப்பை நமக்கு பறைசாற்றுகின்றது. இங்கே கார்க்கி, லெனினைப்பற்றி கூறுவது இன்னும் இந்த எளிமையின் எல்லையை சமுக அக்கறையின் பரப்பை விரிவடைய உதவுகிறது.
“—1918-ல் இலையுதிர் காலத்தில் ஒரு தொழிலாளியிடம் லெனினின் தனிச்சிறப்பு எது என்று கேட்டேன், “எளிமை, அவர் உண்மை போன்றே எளிமையானவர் என்று” தயங்காமல் பதிலளித்தான். இவர் நம்மவர் என்று லெனினைப்பற்றி ஒரு தொழிலாளி கூறினான். பிளக்கானவும் நம்மவர் என்று மற்றொருவன் மறுப்புக் கூறினான். பிளக்கானவ் நமது ஆசான். நமது எஜமான். லெனின் நமது தலைவர். நமது தோழர் என்று முதலாமவன் பதிலளித்தான். நானும் முதன் முதலாக அவரை பார்த்த நேரத்தில் சர்வசாதாரணமாக இருந்தார். தலைவருக்குரிய எதுவும் அவரிடம் காணப்படவில்லை என்பதை கண்டு வியந்தேன். ஒருவர் கீழ் வேலைபார்ப்பவர்கள் அவரைப் பற்றி மற்றவர்களைவிட கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பெருத்த அனுபவசாலியும், லெனினினுடைய காரோட்டியுமான கில் என்பவர் லெனின் அலாதியானவர், அப்படிப்பட்டவர்கள் வேறு இல்லை. நான் அவரை வைத்து படபடப்புடன் காரோட்டியபோது தயவு செய்து கலவரப்படாதீர்கள்; எல்லோரையும்போலவே ஓட்டிச் செல்லுங்கள் என்று ஆசுவாசப்படுத்தினார். “
லெனின் தொழிலாளர்களுடன் இணைந்தே வாழ்ந்துள்ளார். லெனின் துண்டுபிரசுரங்களை எழுதுகிறபோது ஒரு தொழிலாளியிடம் விவாதிக்காமல் எழுதமாட்டார் என்று நீலக்குறிப்பேடு என்ற புத்தகத்தில் படித்திருக்கிறேன். கார்க்கி அவரின் தொழிலாளர்களுடனான இணைவை விளக்குகிறார்…
“தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் கூட லெனின் தொழிலாளர்களுக்கு நடுவே கழித்தார். அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பற்றிய அற்பமான.. சில்லரை விபரங்களைகூட விசாரித்தார். பெண்கள் நிலைமை என்ன? அவர்களுக்கு வீட்டு வேலை கடுமையாக இருக்கிறதா? ஏதாவது கற்றுக் கொள்கிறார்களா? படிக்கிறார்களா? என்று வினவினார். உணவு விடுதிகளுக்கு செல்லும்போது தொழிலாளர்களுடன் உரையாடிக்கொண்டே நடந்து செல்வார்.”
அதிகாரத்தில் இருந்து கொண்டு அக்கறை காட்டுவதற்கும் அதிகார வேட்கைக்கு ஆட்படாமல் அடித்தட்டு மக்களிடம் அக்கைறைபடுதற்கும் வேறுபாடு உண்டு. லெனின் அதிகாரமற்ற தலைமறைவு வாழ்க்கையிலும் அதிகாரத்தில் இருந்த காலத்திலும் அவரின் பண்புகள் மாறவில்லை. தொழிலாளர்களிடமிருந்து வேறுபட்ட உணவை சாப்பிடுவதற்குகூட கூச்சப்பட்டார். இந்த அக்கறையின் பரப்பெல்லை விரிந்துகொண்டே போகிறது. கார்க்கியின் நீண்ட அவதானிப்பு இதோ..
“அவர் தம்மைப்பற்றி அசட்டை பாராட்டுவது தெளிவாக புலப்பட்டது. தொழிலாளர்கள் விசயத்தில் அவர் காட்டிய அக்கரையும், பரிவும் எனக்கு வியப்பூட்டியது. அவர்களது சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பாளரிடம், ‘‘என்ன நினைக்கிறீர்கள்… தோழர்கள் சரியாக பசியாறவில்லையா… இறைச்சி வைத்த ரொட்டித்துண்டுகளை இன்னும் கொஞ்சம் அவர்களுக்கு கொடுக்கிறீர்களா…’’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார். நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தவர் படுக்கை விரிப்பை கவலையுடன் தொட்டுப்பார்த்தார், என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன், துப்பட்டிகள் ஈரமாக இருக்கின்றனவோ என்று பார்த்தேன். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.”
“ஒருமுறை இத்தாலியின் காப்ரியில் இருந்தபோது காப்ரி மீனவர்களின் வாழ்க்கை பற்றியும், அவர்களுடைய வருவாய்ப் பற்றியும், பாதிரிமார்களின் செல்வாக்கு பற்றியும், பள்ளிக்கூடத்தை பற்றியும் லெனின் விவரமாக விசாரித்தார். அவருடைய அக்கறைகளின் பரப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு பாதிரி ஏழைக்குடியானவனின் மகன் என்று அறிந்ததும் பின்வரும் விபரங்களை சேகரிக்குமாறு அவர் அக்கணமே கூறினார். குடியானவர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி மதப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களா? குடியானவர்களின் பிள்ளைகள் பாதிரிகளாக பணியாற்றுவதற்கு தங்கள் கிராமங்களுக்கே திரும்புகிறார்களா இல்லையா? உங்களுக்கு புரிகிறதல்லவா… இது தற்செயல் நிகழ்ச்சி அல்ல, இது வாட்டிகனின் தந்திரமான கொள்கையாகும் என்றார். மற்றவர்களைவிட இவ்வளவு உயரத்தில் இருந்தபோதிலும் அதிகார வேட்கையின் மயக்கத்திற்கு ஆளாகாமல் சாதாரண மக்களின்பால், உயிர்துடிப்புள்ள அக்கறையை இழக்காமலிருக்கும் சக்திபடைத்த வேறு மனிதரை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.”
தன்னடக்கம் ஒரு தலைவனுக்கு எவ்வளவு தலைசிறந்தது என்பதையும் தன்னைத அனைத்திலும் துருத்திகாட்டுவது எவ்வளவு தரம்தாழ்ந்தது என்பதை கார்க்கி லெனின் வழியாக பறைசாற்றுகிறார்.
“லெனினது மனஉறுதி பிரமிக்க வைத்தது. சிறந்த புரட்சிகர அறிவு ஜீவிகளுக்குரிய இயல்பான உயர் பண்புகளை அவர் பெருமளவில் பெற்றிருந்தார். அவருடைய தன்னடக்கம் தன்னை வதைத்துக் கொள்ளும் அளவிற்கும் தன்னை விகாரப்படுத்திக் கொள்ளும் தரத்திற்கும் கூர் ஆணிகளின்மீது படுக்கும் துறவியின் மனப்பாங்கிற்கு உயர்ந்துவிட்டது. தொல்லைகளும், பஞ்சமும் நிறைந்த 1919-ம் ஆண்டில் வெளியூர்களில் இருந்து தோழர்களும், படைவீரர்களும், குடியானவர்களும் அனுப்பிய உணவு பண்டங்களை சாப்பிடுவதற்கு லெனின் கூச்சப்பட்டார். தமது வசதியற்ற இருப்பிடங்களுக்கு பார்சல்கள் கொண்டுவரப்பட்டதும் அவர் முகம் சுளிப்பார். கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணெய் முதலியவற்றை நோயாளிகளுக்கும், அரைப்பட்டினியால் வலுவிழந்த தோழர்களுக்கும் விரைவில் விநியோகித்து விடுவார்.”
“ஒருமுறை என்னை தன்வீட்டில் சாப்பிட அழைத்துவிட்டு புகையில் வாட்டிய மீனை ஆஸ்திரகான் தோழர்கள் அனுப்பியிருக்கிறார்கள் சாப்பிடலாம் என்றார். ஏதோ எஜமானனுக்கு அனுப்புவதுபோல் அனுப்புகிறார்கள். இதை தவிர்ப்பது எப்படி? வேண்டாம் என்று மறுப்பது முறையாகாது; அவர்கள் மனம் புண்படும். மக்களோ எங்கும் பட்டினியால் வாடுகிறார்கள் என்றார். அவர் எளிதில் திருப்தி அடைபவர். மது அருந்துவதோ, புகை பிடிப்பதோ அவருக்கு பழக்கமில்லை. காலை முதல் இரவு வரை சிக்கலான கடும் வேலைகளில் முனைந்திருப்பார். தன் சௌகரியங்களை கவனித்துக்கொள்ள அவரால் முடியவே முடியாது. ஆயினும் தோழர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து வந்தார். ஒரு நாள் அவர் தம் அலுவலக அறையில் உட்கார்ந்து மளமளவென்று ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். நான் போனதும் காகிதத்திலிருந்து பேனாவை எடுக்காமலே, வணக்கம், சௌக்கியமா, இதோ முடித்துவிடுகிறன். ஒரு தோழர் வெளியூரில் இருக்கிறார்; சலிப்படைந்து விட்டார்; களைத்துப்போய்விட்டார். அவரை உற்சாகப்படுத்துவது அவசியம். மனநிலை முக்கியமானதாயிற்றே என்றார். “
“1921-ம் ஆண்டு அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது எனக்கு ஒரு கடிதம் எழுதினார். நீங்கள் வெளிநாடு போக மறுக்கிறீர்களா? இது மகா மோசம். இதயமற்ற, யோசனையற்ற செயல். ஐரோப்பாவில் நல்ல உடல்நல விடுதியொன்றில் உங்கள் வியாதியும் குணமாகிவிடும். நீங்கள் மும்மடங்கு வேலை செய்யமுடியும். ஓராண்டுக்கு மேலாக நான் ருஷ்யாவிலிருந்து வெளியேறி எனது உடல்நலத்தை கவனிக்கவேண்டும் என்று அவர் ஆச்சரியமூட்டும் பிடிவாதத்துடன் வற்புறுத்தி வந்தார். கடும் வேலையில் ஒரேயடியாக மூழ்கியிருந்த அவர் எவனோ, எங்கோ நோய்வாய்ப்பட்டிருக்கிறான், அவனுக்கு ஓய்வு வேண்டுமென்பதை எப்படி நினைவில் வைத்துக் கொள்ளமுடிந்தது. இது என்னை வியப்பில் ஆழ்த்தியது. மேலே எடுத்துக்காட்டியதுபோன்று பல நூறு கடிதங்களை அவர் பல்வேறு மனிதர்களுக்கு எழுதியுள்ளார்.
தோழர்களின் பால் லெனின் கொண்டிருந்த தனிவகையான அக்கறை அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியமற்ற சில்லரை விபரங்களை உட்பு குந்து கண்டுகொள்ளும் அவருடைய ஆழ்ந்த கவனம் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன், அறிவுள்ள எஜமானன் நேர்மையும், திறமையும் கொண்ட தனது ஊழியர்களின் பால் வெளிப்படுத்தும் தன்னலம் வாய்ந்த அக்கறையை அவரது இந்த உணர்வில் ஒருபோதும் என்னால் காணமுடியவில்லை. இது உளமார்ந்த தோழனின் மனப்பூர்வமான கவனம். சமமானவர்கள் மீது சமமானவர் காட்டிய அன்பு. விளாதிமீர் லெனினுக்கு அவரது கட்சியில் இருந்த மிகப்பெரிய மனிதர்கள்கூட இணையாக முடியாது என்பதை நானறிவேன். ஆனால் இந்த விஷயத்தை அவர் தாமே அறிந்திருக்கவில்லை, அல்லது அறிய விரும்பவில்லை என்றுகூட கருதலாம்.
மற்றவர்களுடன் அவர் வாதாடுகையில் கடுமையாகவும் கூர்மையாக வும் தாக்குவார். இரக்கமின்றி எள்ளி நகையாடுவார். சில வேளைகளில் குத்தலாக நையாண்டி கூட செய்வார். ஆனால் அடுத்தநாள் யாரை தாக்கி படுகேலி செய்தாரோ அவர்களைப்பற்றி பேசுகையில் அவர்களுடைய திறமைகள் குறித்தும், அசையாத நெஞ்சுறுதி குறித்தும் உளமார்ந்த வியப்புடன் பேசியதை நான் எத்தனையோமுறை கேட்டிருக்கிறேன்–”
மிகப்பெரும் மக்கள் தலைவர்கள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் போன்றவர்கள் நகைச்சுவை தன்மையற்றவர்கள்; அவர்களுக்கு சிரிக்கவே தெரியாது என்ற வெகுஜன கருத்துப்பதிவு உள்ளது. அவர்களுக்கு அதற்கான நேரம் இருக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. லெனினின் இந்த ஈடுபாட்டை கார்க்கி சுவைபடவே விளக்கியுள்ளார்.
“—லெனின் சிரிப்பார்: மனம் விட்டுச்சிரிப்பார்; அவர்போல் மற்றவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும் விதத்தில் மனம்விட்டு சிரித்த எவரையும் நான் கண்டதில்லை. மிகச்சிறந்த யதார்த்தவாதி. மாபெரும் சமூக துன்ப நிகழ்ச்சிகளில் தவிர்க்க இயலாமையை தெளிவாக கண்டுணர்ந்து வெளிப்படுத்துவார். முதலாளித்துவ உலகின் மீது சமரசப்படுத்த முடியாத ஊசலாட்டமற்ற வெறுப்பு பாராட்டுவார். இத்தகைய மனிதனால் குழந்தைபோல கண்ணீர் வரும் அளவிற்கு புரையேறும்படி சிரிக்கமுடியும் என்பதை காணவே விந்தையாக இருந்தது. இவ்வாறு சிரிப்பதற்கு ஒரு வலுவான உள ஆரோக்கியம் கொண்டிருப்பது அவசியம். அவர் என்னைப் பார்த்து நீங்கள் சிரிக்க சிரிக்க பேசுகிறீர்கள் என்று நகைத்துக்கொண்டே கூறுவார். இதைநான் எதிர்பார்க்கவே யில்லை. மிகவும் வேடிக்கையாக இருந்தது. பிறகு சிரிப்புக் கண்ணீரை துடைத்துக்கொண்டு பரிவும், கனிவும் தோன்ற ஆழ்ந்த முறையில் பேசினார். தோல்வியை விளையாட்டாக எடுத்துக் கொள்ள உங்களால் முடிவது நல்லது. நகைச்சுவை என்பது நேர்த்தியான நல்ல தன்மைதான். நான் வேடிக்கைப் பேச்சை நன்றாக புரிந்துகொள்கிறேன்; ஆனால் அப்படி பேசும் திறன் எனக்கு இல்லை. வாழ்க்கையில் வேடிக்கை நிகழ்ச்சிகள் துயர நிகழ்ச்சிகளைவிட குறைவில்லை. நிச்சயமாக குறைவில்லை என்று கூறினார்.
அவருடைய சிரிப்பில் பெருத்த கவர்ச்சி இருந்தது, மனித அறிவினத்தின் பாங்கின்மையும் அறிவின் தந்திரமான கர்ணவித்தைகளை நன்கு காணக்கூடியவராக இருந்தும் சாதாரண மக்களின் குழந்தைத்தன்மை நிறைந்த வெகுளித்தனத்தில் இன்புறுவதில் வல்லவராயிருந்த மனிதனின் உளமார்ந்த சிரிப்புதான் அது. நேர்மையுள்ள மனிதன்தான் இப்படி சிரிக்கமுடியும் என்ற ஒரு முதிய மீனவன் அவரைப்பற்றி கூறினான். மனிதர்களின் துன்பங்கள் மீது லெனினுக்கு இருந்த சமரசப்படுத்தவோ, தணிக்கவோ முடியாத பகைமை உணர்வும், இழிவு நிலைகளை மனிதர்கள் தங்களிடமிருந்து அகற்ற வேண்டும், அவர்களால் அதை அகற்ற முடியும் என்பதிலும் அவர் கொண்டிருந்த ஒளிவீசும் நம்பிக்கையும்தான் அவரது பண்புகளில் மிகவும் மேன்மை வாய்ந்தவை என்பது எனது கருத்தாகும்.
உற்சாக பெருக்கம் லெனினுடைய சுபாவத்தில் இயல்பாக இருந்தது. அது சூதாடுபவனின் தன்னலமுள்ள கிளர்ச்சியல்ல. தனிவகையான உளமகிழ்ச்சி. தாம் மேற்கொண்ட பணியில் அசையாத நம்பிக்கை கொண்டவருக்கு மட்டுமே இத்தகைய உளமகிழ்ச்சி இயல்பாகும். இம்மாதிரி மனிதர் உலகத்துடன் தம் உறவை எல்லா புறங்களிலிருந்தும் ஆழ்ந்து உணர்வார். உலகின் குழப்பத்தில் தமது பாத்திரத்தை அதாவது குழப்பத்தின் பகைவன் என்ற பாத்திரத்தை முழுமையாக புரிந்துகொள்வார். ஒரே மாதிரி ஈடுபாட்டுடன் சதுரங்கம் விளையாடுவது, ஆடையின் வரலாற்றை ஆராய்வது; தோழர்களுடன் மணிக்கணக்கில் விவாதிப்பது; மீன் பிடிப்பது; வெயிலில் பழுக்க காய்ந்த பாறைகளில் நடப்பது போன்ற திறன்களை லெனின் ஒருசேரப் பெற்றிருந்தார். மாலை நேரங்களில் எனது நாட்டுப்புற கதைகளை கேட்டு பொறாமை பொங்க பெருமூச்சுவிட்டார்.
தனது இயல்பான ஹிம்..ஹிம்.. என்ற அவரது வியப்பொலியில் எத்தனையோ அர்த்தங்களை தொனிக்கும்படி செய்தார். நஞ்சு தோய்ந்த குத்தல் முதல் எச்சரிக்கை நிறைந்த சந்தேகம் வரை அந்த ஹிம்.. என்ற ஒலி வேறு வேறு அர்த்தங்களை வெளியிட்டது. கூரிய பார்வை உள்ளவரும், வாழ்க்கையின் பேய்த்தனமான அபத்தங்களை நன்றாக அறிந்த மனிதருக்கு மட்டுமே இந்த கிண்டல் ஒலி அடிக்கடி ஒலித்தது—-”
யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழி தமிழகத்தில் உள்ளது. இங்கே குட்டித்தலைவர்களின் வருகை கூட பரபரப்பாக் கப்பட்டுத்தான் நிகழ்வுகள் நிறைவேறும். வந்தவர் என்ன சொன்னார் என்பதை விட அவரின் அதிகாரமும் பதவியும் என்ன என்பதையொட்டித்தான் பொதுக் குழுக்கள் முதல் சிறுகுழுக்கள் வரை செயல்படும். ஆனால் இங்கே கார்க்கி எதிர்மறையான சம்பவத்தை நம்முன் காட்சிப்படுத்துகிறார்.
“—முன்பு பீரங்கிப்படை வீரராக இருந்த ஒரு போல்ஷ்விக்கின் புதிய கண்டுபிடிப்பை காண பீரங்கிப்படை தலைமை அலுவலகத்திற்கு அழைத்தேன். இதில் எனக்கு என்ன புரியும்? என்று கேட்டுவிட்டு என்னோடு வந்தார். அரை இருட்டாக இருந்த அந்த மேசையின் மீது அந்த இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. ஏழு ஜெனரல்கள் மேசையை சுற்றி இருந்தார்கள். எல்லோரும் நரைத்த மீசைக்கார கிழவர்கள். தேர்ந்த கல்விமான்கள். சிவில் உடையில் இருந்த லெனின் அவர்கள் நடுவே புதைந்து போனார். இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் விளக்கிய பிறகு லெனின் மள மள என்று கேள்விகள் கேட்டார். இயந்திரத்தின் இலக்கு, தானியங்கி முறை, வீச்சு எல்லை என்று அவரது கேள்விகள் விரிந்தது. கண்டுபிடிப்பாளரும்.
ஏழு ஜெனரல்களும் அவருக்கு உற்சாகமாக விளக்கினர். மறுநாள் அந்த இயந்திர கண்டுபிடிப்பாளர் என்னிடம் நீங்கள் ஒரு தோழருடன் வருவீர்கள் என்றுதான் நான் ஜெனரல்களிடம் அறிவித்தேன். ஆனால் அந்த தோழர் யார் என்று சொல்லவில்லை. ஆரவாரமும் பகட்டும் காவலும் இல்லாமல் அவர் வருவார் என்று அவர்களால் நம்பமுடியவில்லை. நீங்கள் சென்றவுடன் இவர் யார் தொழில் நுட்ப அறிஞரா? பேராசிரியரா? என்று கேட்டார்கள். லெனின் என்றேன். அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவிலலை. என்ன…? இருக்கவே முடியாது? நம்முடைய துறைபற்றி அவர் எங்கிருந்து இவ்வளவு கற்றுக்கொண்டார்? என்றார்கள். அவர்களுக்கு ஒரே மர்மம். தங்கள் இடத்துக்கு வந்தவர் லெனின்தான் என்பதை அவர்கள் நம்பவே இல்லை போலும்-”
முதலாளித்துவ உலகம் லெனினை மிகப்பெரும் எதிரியாக கருதி தாக் குதலை தொடுத்ததற்கான காரணங்களை கார்க்கி புரிந்துகொண்டார். ஆனால் கட்சிக்குள் இருந்த மென்ஷ்விக்குகள் சீர்திருத்தவாதிகள், சமரசவாதிகளின் பகைமை தாக்குதல்கள் ஏன் தீவிரமடைகின்றன என்று சிந்தித்த கார்க்கி கீழ்கண்டவாறு கூறுகிறார். “சித்தாந்தத்தின் உச்சியிலிருந்தே கட்சியால் தனக்குள் நிலவும் கருத்து வேற்றுமைகளின் காரணங்களை காண முடியும் என்ற இயல்பான எண்ணமே லெனின்பால் பகைமையை தூண்டிவிடுகிறது என்பதைக்கண்டு வியப்பும் வருத்தமும் உண்டாயின”
லெனினின் அசாதாரண திறமைபற்றி, அவரது அறிவு, சமூக அவலங்கள் மீது அவருக்கு இருந்த தீராத கோபங்கள் பற்றி கார்க்கி நிறைய பேசி உள்ளார். ருஷ்யபுரட்சியில் அறிவுஜீவிகள் பங்கு பற்றி இருவருக்கும் நடைபெற்ற விவாதங்கள், கருத்த மோதல்கள் மிகவும் ஆழமானது மட்டுமல்ல அவசியமாக படிக்கவேண்டியதும் கூட. படிக்க படிக்க லெனினின் பரிணாமம் பரந்தும் ஆழ்ந்தும் சென்றுகொண்டிருக்கிறது. நடைமுறைபடுத்த முடியாத சித்தாந்தம் காலாவதியானது. நடைமுறைப்படுத்தி மேம்படுத்தக்கூடிய சிந்தாந்தம் அறிவியல் பூர்வமானது. சித்தாந்தம் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகமானால் சித்தாந்தசொல் புனிதமாக்கப்பட்டு பூஜைஅறைக்குள் சென்றுவிடும். எனவே கீழ்கண்ட லெனின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டியாக அமையட்டும். சித்தாந்தம் நடைமுறையுடனான மோதலில் சிதைந்து விடுமோ என்று அஞ்சிய துரோகிகளைப் பார்த்து லெனின் “சித்தாந்தப் புனைவுகோள் எங்களுக்கு புனிதமான பொருள் அல்ல. எங்களுக்கு இது வேலை செய்வதற்கான கருவி” என்றார்.