தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 4 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் வகுப்பறை-ΙΙ,
பாடம்-1
(பிரசவ வார்டின் சூழலைப் புரிந்து கொள்ளுதல்)

கருப்பைக் கூட்டுக்குள் அடைகாத்த பிள்ளையைப் பிரசவித்து ஈருடலாய் வார்டுக்குள் நுழைகிற தாயவளை வரவேற்க வாசற்படிகளில் குடும்பமே கால்கடுக்க காத்துக் கிடக்கும். இளஞ்சிவப்பு வர்ண ரோஜாச் செடியைப் பக்கமாகப் பதியமிட்டு வளர்த்தெடுத்த மற்றுமொரு பூச்செடியைப் போல தாயிடமிருந்து கிளைபிரிந்த சின்னஞ்சிறு மொட்டாகிய பிள்ளையைப் பார்க்கப் பார்க்க நமக்கு ஆவலாதியாக இருக்கும். வரவேற்பரையில் பூங்கொத்தை கைக்களித்து வழிநடத்திச் செல்கிற ஆரவார கூட்டத்தைப் போல செவிலியரும் தாயவள் கைகளில் பிள்ளையைக் கைத்தாங்களாகக் கொடுத்து வார்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.

பிரவசிக்கும் வரையிலும் உடனிருக்க அறிவுறுத்தப்படுகிற ஒரு உறவினப் பெண்ணைப் போலவே பிரசவித்த பின்னாலும் கண்ணுங் கருத்துமாய் கவனிக்க வேண்டி, வார்டிலும் கூட்டமாய் செவிலியர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. பிரசவத்தோடு உடனிருந்தவர்களோ அல்லது விரவம் அறிந்த முதிய பெண்களோ மட்டும் உடனிருந்து பெற்றவளை வழிநடத்திக் கொண்டால் இங்கே போதுமானதுதான். இது ஆண்களுக்கும், கூட்டமாய் படையெடுத்து வருவோருக்குமான தடைசெய்யப்பட்ட பகுதி.

இவ்வளவு அவசரகதியிலான மருத்துவமனைக் கூட்டங்களிலும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென அம்மாக்களும் கைப்பிள்ளைகளும் தனித்து உலாவுவதற்கென்று பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட மழலையர் பூங்காக்களைப் போலவே பிரசவத்திற்குப் பிந்தைய வார்டுகளும் குழந்தைகளின் உலகத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நீண்டதான பளிங்கு கற்கள் பாவிய மண்டபம் போலான பெருவெளியில் ஆள் கடக்கும் இடைவெளி விடப்பட்ட தூரத்தில் பிள்ளை பெற்ற தாய்மார்கள் யாவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் தாங்கள் பெற்றெடுத்த பத்தரை மாத்துத் தங்கப்பிள்ளைகளோடு அருகருகே படுத்திருப்பார்கள். குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும், பெற்றவளின் அதட்டலும் கெஞ்சலுமாக உருக்கொள்கிற பிரசவத்திற்குப் பிந்தைய வார்டின் அழகை என்னவென்று தான் வர்ணிப்பதோ?

கடல்கன்னிகளின் தேவலோக கனவுலகத்தைப் போல அருகருகே துள்ளலோடும் துடிப்போடும் கைகால்களை உதைத்தபடி ஒரு பெரிய வால்துடுப்பைப் போல படுத்திருக்கிற பிள்ளைகளைப் பார்க்கையில் அவர்களெல்லாம் அம்மாக்களின் விலாப்பகுதியிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் கடல்கன்னிகளின் துடுப்புகளாவே தெரிகிறார்கள். ஒவ்வொரு படுக்கையும் இரண்டு கள்ளங்கபடமற்ற ஜீவன்களால் நிரப்பப்பட்டிருக்கும் பிரத்தியேக அறையில் தான் புத்தம் புதியதாக பிரசவித்து நுழைகிற நமக்கென்றும் தனித்த படுக்கையொன்றை செவிலியர்கள் ஒதுக்கித் தருகிறார்கள்.

இப்பகுதியின் அத்தியாவசியமான நோக்கமே தாயும் பிள்ளையும் தொடர்ந்து அருகாமையில் தனித்திருந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டுமென்பது தான். இப்படி இருப்பதால் தானே எந்நேரமும் தாயும் சேயும் தோலோடு தோல் நெருக்கமாய் இருப்பதும், அருகாமையிலேயே துயில் கொள்வதும், இதனால் குழந்தையின் செய்லபாடுகளை பெற்றவள் கண்டுணர்ந்து கொள்வதும் விரைவிலேயே சாத்தியமாகிறது.

ஆனாலும் ஒருசில மருத்துவமனைகளில் குழந்தைக்கு ஒரு படுக்கையும், தாயிற்கென தனிப்படுக்கையுமென ஒதுக்கித் தருகிறார்கள். இதை ஏதோ கூடுதல் வசதியென்றே பிள்ளை பெற்ற குடும்பமும் நெகிழ்ச்சியில் மூழ்கிப் போகிறார்கள். வேறுசில இடங்களில் தனித்த மரத்தொட்டில்களில் பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு தாயைக் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கச் செய்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் அம்மாக்களின் கட்டில் அகலம் என்னவோ மிகவும் ஒடுக்கமாக ஒருவர் மட்டுமே துயில் கொள்ளுமளவு இருப்பதால், தாயும் சேயும் ஒரே கட்டிலில் அணைத்துப் படுத்திருந்தாலும்கூட, அவர்கள் எத்திசையிலும் இங்கும் அங்கும் அசையாதிருக்கும்படியான அசௌகரியமான சூழலிலே அவர்கள் துயரத்தோடு துயில் கொள்ள வேண்டியதிருக்கும்.

அப்படியே இருவரும் சகலமாக படுத்துறங்கும் படியான கட்டிலை மருத்துவமனையில் அளித்தாலும்கூட தாயிடமிருந்து பிள்ளையை அடிக்கடி அழுகிறார்கள் என்றோ, பெற்றவள் களைப்பில் தூங்க பிள்ளையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்றோ தாயிடமிருந்து பிள்ளையைப் பிரித்து தனித்து வைத்திருப்பதான அடாவடித்தனங்களை எல்லாம் பிரசவத்திற்குப் பிந்தைய வார்டுகிளில் உறவினர்கள் செய்த வண்ணமாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே, நேசத்தையே புன்முறுவலாக்கி வைத்திருக்கிற செவிலியர்கள் இந்த அற்பக் காரணங்களையும் தவிர்த்துவிட்டு நம்மையும் நம் பிள்ளையும் ஒருசேர கட்டிலில் விசாலத்துடன் கூடிய வகையில் படுத்துறங்க ஏதுவாக படுக்கை அமைத்துத் தருகிறார்கள்.

அத்தோடு ஏற்கனவே பிரசவித்து இதே படுக்கையிலிருந்து பிள்ளைக்குப் பாலூட்டி சீராட்டி வளர்த்தெடுத்த பின்பு இம்மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்ட ஏதோவொரு பெற்றவளின் படுக்கையில் தான் இப்போது நமக்குமென்று ஒரு படுக்கையை ஏற்பாடு செய்துத் தருவார்கள். ஆகையில் உடலின் மீதான இரத்த கவிச்சை வாடையும், பிரத்தியேக மருந்துகளின் வாசமும் படிந்த படுக்கைத் துணிகளைத் துவைத்தெடுத்து நன்கு வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னரே நம் படுக்கையில் விரித்து நம்முடலைக் கிடத்தி எவ்வித கவலையுமின்றியே கண்ணயர்ந்து தூங்கச் செய்கிறார்கள். இப்படியான படுக்கையின் வியர்க்கை நெடியும், அழுக்கும், இரத்தப் பிசுபிசுப்பும், பாலூட்டிக் கசிந்த முந்தைய கறையும் ஒருவேளை சரியாக தூய்மை செய்யப்படாவிட்டால், அடுத்ததாக வந்து தங்கப்போகிற பெற்றவளுக்கு இதனால் வரப் போகிற கிருமித்தொற்றையும், இந்தக் கவிச்சை வாசத்தினால் சரியாகப் பாலருந்தாமல் குழந்தைகள் தவிர்ப்பதையும் பற்றி செவிலியர்களுமே நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள்.

பொதுவாகவே பிரசவத்திற்குப் பின்பான வார்டில் நாம் நுழைகிற போது நம்மை அறியாமலே ஒரு அந்நியத்தன்மை வந்துவிடுகிறது. இந்த இடம் நமக்குப் புதிது, அங்கிருக்கிற செவிலியர்கள், மருத்துவர்கள் நமக்குப் புதிதானவர்கள், ஏற்கனவே பிரசவித்து தங்கள் பிள்ளையோடு படுக்கையில் அக்கம் பக்கத்தில் வீற்றிருக்கிற தாய்மார்களும் நமக்குப் புதிதானவர்களே! அப்படியிருக்க இத்தகைய விசாலமான அறைகளோடு, சுற்றியுள்ள மனிதர்களோடு நாம் வெகுவிரைவிலேயே ஒட்டிக் கொண்டால் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதற்கு நமக்கு இலகுவாக இருக்கும். இத்தகைய பழக்கமில்லா இடத்திலிருந்து கொண்டு துணிந்து நாம் தாய்ப்பாலைப் புகட்ட வேண்டுமென்றால் எத்தகைய மனத்தடையுமின்றி இரண்டு மார்பகத்தையும் வெளியே எடுத்துப் போட்டு பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டியதிருக்கும் அல்லவா!

ஆகையால் தான் பிரசவத்திற்குப் பின்பான வார்டிற்குள் நுழைகிற போதே அங்கிருக்கிற இடத்தோடு, நமது படுக்கையோடு, நம் படுக்கையின் அருகாமையில் ஏற்கனவே பிரசவித்துப் படுத்திருக்கிற தாய்மார்களோடு, நமக்குத் தாய்ப்பால் பாடமெடுக்கிற ஆசானாகிய செவிலியர் மருத்துவரோடு விரைவிலேயே மனத்தடைகளை நீக்கி நெருக்கமாகிவிட வேண்டியிருக்கிறது. நாம் இப்போது பிரசவித்துப் படுத்திருக்கிற படுக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பிரசவித்துப் பாலூட்டி ஆரோக்கியத்தோடு மீண்டு வீடு சென்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு நெகிழ்ச்சியான விசயம், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? நாம் படுத்திருக்கிற இதே இடத்தில் தான் சற்று முன்பு இன்னொரு தாயும் அவளது சேயும் துயில் கொண்டிருக்கிறார்கள் என்பது எப்பேர்ப்பட்ட மனதிற்கு இதமான ஞாபகம்! நாம் வீட்டிற்குச் சென்ற பின்னாலும்கூட நாமும் நம் பிள்ளையும் உறங்கியெழுந்த இதே இடத்தில் இன்னொரு தாயும் பிள்ளையும் வந்து துயில் கொள்ளத்தான் போகிறார்கள். ஆதலால் இவ்விடம் என்பது நமக்கு பெருமதிப்பிற்குரிய நினைவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள் தாய்மார்களே!

இன்னும்கூட நம்மைப் போலவே எத்தனையோ தாய்மார்களை, பிள்ளைகளை நம் கர்ப்பப்பையில் சுமப்பதைப் போல தாங்கிக் கொள்வதற்கு மருத்துவமனைப் படுக்கைகள் இன்னும்கூட சித்தமாயிருக்கின்றன. இவையெல்லாம் ஒருவேளை இயேசுபிரானைச் சுமந்த இரும்புச் சிலுவைகள் தானோ என்னவோ? சிறுகச் சிறுகச் சீவி சிறுத்துவிட்ட பென்சிலைக்கூட கைவிடாமல் தனக்கு நெருக்கமானதாக வைத்திருக்கும் ஞாபகங்களைப் போல நாம் ஏன் பிரசவித்த படுக்கையை வாழ்நாளின் முக்கியமான நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளக் கூடாது?

இப்படியாகப் பிரசவித்த தாய்மார்கள், தங்கள் அடிவயிற்றுப் பிள்ளைச் சுமையை இறக்கியவுடனே நெல்மணிகளை உதிர்த்த தட்டைகளைப் போல உடலும் இலகுவாகிப் போகும். ஆனாலும் தாய்ப்பால் புகட்டுவதில் சிறிது ஆசுவாசத்தோடு இருப்பதற்கு அத்தகைய அறையில் கொஞ்சம் அடித்து வீசுகிற தூய நல்காற்றும், மஞ்சள் பூசிப் படருகிற சூரிய வெளிச்சமும் இருக்கிற பட்சத்தில் அம்மாவும் பிள்ளையும் தங்கள் அந்நியத் தன்மையை உதிர்த்துவிட்டு வீட்டினது இணக்கமான சூழலை மருத்துவமனையிலேயே உணரத் துவங்கிவிடுவார்கள்.

அதோடு நம் அருகாமையில் ஏற்கனவே பிரசவித்துத் தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருக்கிற தாய்மார்களிடம் நாம் இணக்கமாகி நட்பு பாராட்டுகையில் தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான சந்தேகங்களை அனுபவ ரீதியில் அவர்களேகூட நமக்கு வந்து உதவக்கூடும். தங்கள் பிள்ளைகளை மார்பில் போட்டு நேரடியாகவும் அவர்கள் நமக்கு விளக்கிச் சொல்வற்கு முன்வருவார்கள். ஒருவேளை நமக்குத் தாய்ப்பால் வரவில்லையென்று உள்ளுக்குள் ஆதங்கப்பட்டாலோ, அடிக்கடி தாய்ப்பால் வேண்டுமென்று கேட்டுப் பிள்ளை பசித்து அழுதாலோ அவர்களது மடியிலே நம் பிள்ளையைக் கிடத்தி அவர்களது பிள்ளையாகப் பாவித்து மார்பிலே பாலருந்தச் செய்து நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். நாம் பிரசவித்த அறையில் எத்தனையோ தாய்மார்களிருக்க தாய்ப்பால் போதவில்லையென்று புட்டிப்பாலைக் கொடுப்பதைக் காட்டிலும், நம்மைப் போன்ற தாயிடம் இரவல் கேட்டு பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதென்பது பெரும் மகத்தான காரியமல்லவா!

நாம் பிரசவித்த அதே மருத்துமனையில், அதே நாளில், அதே நேரத்தில், நம்மோடே பிரசவித்து பிள்ளை பெற்ற தாய்மார்களிடம்கூட நாம் வாழ்நாள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம் தானே! அப்படி வருடாவருடம் ஒன்றாக பிரசவித்த தாய்மார்களெல்லாம் ஒன்றுகூடி ஒரேயிடத்தில் பிறந்த நாளை, தாங்கள் பிரசவித்த பெருநாளை கொண்டாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? ஒவ்வொரு வருடமும் தங்கள் பிள்ளையை அழைத்துக் கொண்டு போய் தான் பிரசவித்த மருத்துவமனையில், தங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரோடு பிறந்த நாள் கொண்டாட்டத்தை நிகழ்த்துகிற பெற்றோர்களும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியான சின்னச்சின்ன ஞாபகங்களை நாம் மருத்துவமனையிலிருந்தும் நம் வாழ்வில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் தானே!

பேரன்பிற்குரிய தாய்மார்களே! ஆகையால் தான் நாம் பிரசவித்து உள்ளே நுழைந்தவுடனே அத்தகைய சூழலை உள்வாங்கிக் கொண்டு எவ்வித கூச்சமும் பதட்டமும் இல்லாமல், செவிலியர்கள் சொல்வதைக் கேட்டு, அருகிலிருக்கிற தாய்மார்கள் வழிகாட்டுவதைப் புரிந்து கொண்டு இயல்பாக உங்கள் பிள்ளைக்குப் பாலூட்ட விரைவிலே தயாராகுங்கள் என்று துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறோம்.

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 3 – டாக்டர் இடங்கர் பாவலன்




அன்புத் தாய்மார்களே! இப்போது நாம் நம்முடைய முதல் வகுப்பறையிலே இருக்கிறோம். அதாவது பிரசவித்த பளிங்கு அறையின் பிரசவ அறையிலே நட்ட நடுவில் கிடத்தப்பட்ட அகலமானதொரு அலுமினிய மேசையில் படுத்துக் கொண்டுதான் இந்தப் பாடத்தையே நாம் தொடர வேண்டியதிருக்கும். இப்படிப் படுத்துக் கொண்டே பள்ளிக்கூடம் போக யாருக்குத் தான் பிடிக்காது? இப்பள்ளியைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போதே பால்வாடி குழந்தைகளைத் தூங்க வைத்து பாடம் நடத்துகிற மழலையின் ஞாபகங்கள் தான் நினைவிற்கு வருகிறது.

இங்கு நீங்கள் இருக்கப் போவதென்னவோ இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மட்டும் தான். குழந்தையைத் துடைத்து வெகுவெதுவாக்கி அவர்களை இயல்பாக மூச்சுவிட வைத்து நம்மிடம் கொடுப்பதற்கும், பிரவசவித்ததால் பாதிப்படைந்த பகுதிகளை தையலிட்டும் நமது சோர்வினை குளூக்கோஸ் போட்டு தேற்றுவதற்குமான இந்த இரண்டு மணி நேர இடைவெளியில் தான் இந்தப் பாடத்தையே நமக்குச் செவிலியர்களும், மருத்துவர்களும் எடுக்கப் போகிறார்கள்.

குழந்தைகள் வெளி வந்தவுடனே சட்டென்று பனிக்குடத்தில் குலைத்தெடுத்த இரத்தக்கறையோடு தூக்கி அப்படியே அம்மாவின் மார்பிலே போடுவார்கள். அப்போது குழந்தையுமே கர்ப்பப்பையோடு ஒட்டிக் கொண்டிருக்கிற நஞ்சுப்பையுடன் பிணைந்த தொப்புள்கொடியின் இணைப்போடுதான் தொடர்ந்து இருப்பார்கள். இந்த நிலையில் தான் பிள்ளையை மார்பில் போட்டு முதன் முதலாக நாமும் தாய்ப்பால் புகட்ட வேண்டியிருக்கும். அப்போது குழந்தையும் மூக்கை விடைத்துக் கொண்டு மார்பைத் தேடி அவர்களாகவே காம்பைக் கவ்வியபடி சவைக்கத் துவங்கிவிடுவார்கள். இப்படிச் செய்வதால் சீம்பாலும் ஊறி மார்பில் உடனே கசியத் துவங்கிவிடும். இதனால் பிரசவித்த எடுத்த எடுப்பிலேயே தாய்ப்பால் மார்பில் சுரக்குமா என்றெல்லாம் நாமும் யோசித்துத் தயங்கத் தேவையில்லை.

இப்படி அடுத்த கணமே மார்பில் போட்டு சவைக்க வைக்கிற போது சீம்பால் பெருகுவதுடன் அடுத்தடுத்து தாய்ப்பால் தொடர்ந்து மார்பிலே ஊற்றென பெருகிச் சுரந்து கொண்டே இருப்பதற்கும் இந்த ஆரம்பகட்ட தூண்டுதலே காரணமாயிருக்கிறது. இதற்காகத்தான் இரண்டு மார்பிலுமே பத்து பத்து நிமிடங்களாக குழந்தையை மாறி மாறிப் போட்டு பிரசவ அறையிலே தாய்ப்பால் சுரக்கத் தூண்டச் செய்கிறார்கள். இதனால் அவர்களும் காம்பில் வாய் வைத்துப் பொருத்தியபடி குடிப்பதற்கு மெதுமெதுவாக பழகிக் கொள்கிறார்கள். மேலும் பிறந்தவுடனேயே குழந்தையும் இரத்தத்தில் உலப்பியபடி வெளிவந்த வெற்று உடம்போடு அம்மாவின் வெற்று மார்பிலே படுத்துக் கொண்டு பால் குடிக்கையில் வெகுவிரைவிலேயே அம்மாவின் தோலோடு தோல் நெருக்கம் கிடைக்கிற அரவணைப்பும் அவர்களுக்குச் சாத்தியமாகிவிடுகிறது.

அம்மாவானவள், முதன் முதலாக குழந்தையைப் பார்க்கும் காட்சியே அவளது இரத்தக்கறை படிந்த பிள்ளையாகத் தான் இருக்கும். அப்போது அந்த இரத்தக்கறையோடு அவர்களை வாரியணைத்து மார்பிலே போட்டு உச்சிமுகர்ந்து உள்ளங்கையில் வைத்து இரசிக்கிற போது, அம்மாவிற்கும் தன் பிள்ளையின் மேலே பாசம் பொங்கி வரும். குழந்தையின் சிணுங்களுடன் கூடிய பூனையின் குரலொத்த அழுகைக் குரலைக் கேட்டவுடனே அதுவரை வலியில் துடித்த பெற்றவளின் அழுகைக்குரல் சட்டென்று மாறி சிரிப்பையும் அழுகையும் குலைத்துச் செய்த ஒரு புதுமுகக் கலவையான பாவணைகளை வெளிக்காட்டத் துவங்கிவிடுவாள்.

இவ்வகையான மகிழ்ச்சியின் ஊற்றிலிருந்து தானே பெற்றவளும் பிரசவ பாதிப்புகளிலிருந்து விரைவிலே மீண்டுவர முடியும். இதனால் அம்மாக்களுமே, தானும் தன்னுடைய பிள்ளையும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்கிற உணர்வு நிலைக்கு வெகுசீக்கிரத்திலேயே வர முடியும். குழந்தைகளும் முதன் முதலாக வெளியுலகத்திற்கு வந்து அம்மாவின் மார்பில் படுத்துக் கொண்டு தாயவளின் குரலைக் கேட்டு மார்பை முகர்ந்து அதில் முண்டியபடி, காம்பைச் சுவைத்து தாய்ப்பால் குடிக்க பயிற்சி எடுத்துக் கொள்வார்கள்.

அத்துடன் பிரசவிக்கிற பெண்ணோடு உடனிருந்து பார்த்துக் கொள்கிற, பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்கிற தோழியோ, அம்மாவோ குழந்தை பிறந்தவுடனே அவர்களுக்குப் பாலூட்டுவதற்காக துரிதகதியிலே ஒத்துழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். பிள்ளை பெற்றவளுக்கு இரத்தம் கசிந்து வெளியேற்றப்பட்டதாலும், பிரசவித்து களைத்துப் போன சோர்வினாலும் உண்டான பலவீனத்தைச் சரிசெய்வதற்கு ஏதேனும் நீர்சத்துடைய ஆகாரங்களாகக் கொடுத்து நல்லபடியாக தேற்றிவிட வேண்டியதிருக்கும். மேலும் அடிக்கடி குழந்தையை அவளிடம் காட்டி பாலூட்டி வளர்க்க அருகாமையிலிருந்தபடியே ஊக்கப்படுத்தவும் வேண்டியதிருக்கும். இதனால் தான் பிரசவத்திற்கு உடனிருக்கிறவர்களோ, முன்பு பிரசவித்த தாயாகவும் தாய்ப்பாலூட்டல் தொடர்பான தேவையான விழிப்புணர்வினைப் பெற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவமனையிலே அறிவுறுத்துகிறார்கள்.

பொதுவாக, இந்த முதல் வகுப்பறைப் பாடத்தைப் பொறுத்தவரையில் இங்கு நீங்கள் தாய்ப்பால் புகட்டும் போது தெளிவில்லாமலும், ஒருவித குழப்பத்தோடும், சின்னச்சின்ன புரிதல் இல்லாத தவறுகளோடும் செய்வது போலவே தான் இருக்கும். குழந்தையைக் கைகளில் வாங்கி தாங்கிக் கொள்வதற்கே உடலெல்லாம் காற்றில் அசைகிற புல்லைப் போல மெலிசான நடுக்கம் எடுக்கும். அப்போது குழந்தையை கைகளில் எப்படி பற்றிக் கொள்வது என்றுகூட அவ்வளவாக நமக்குத் தெரியாது. எப்படித் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளும் நன்குப் பசியாறுவார்கள் என்கிற புரிதலுமே நமக்கு அவ்வளவாக இருக்காது. ஆனாலும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே! நாம், தாய்ப்பால் இரண்டாம் வகுப்பறையான வார்டு பகுதிக்குச் செல்லும் போது இதையெல்லாம் சரிசெய்து கொண்டு சரியாகத் தாய்ப்பால் புகட்ட பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன்னால் முதலாம் வகுப்பறையில் நாம் கற்றுக் கொண்டவற்றை கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமாக உறுதி செய்து கொள்வோம்.

தாய்ப்பால் வகுப்பறை படிவம்-1
**************************************

1. பிரசவ அறையிலேயே முதல் தாய்ப்பாலான சீம்பாலை உங்கள் பிள்ளைக்குக் கொடுத்துவிட்டீர்களா?
• ஆம் • இல்லை

2. முதல் அரைமணி நேரத்திற்குள்ளாகவே தாய்ப்பால் கொடுக்கத் துவங்கிவிட்டீர்களா?
• ஆம் • இல்லை

3. சிசேரியின் செய்த தாய்மார்களாக இருக்கிற பட்சத்தில் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக தாய்ப்பால் புகட்டினீர்களா?
• ஆம் • இல்லை

4. பிரசவித்த உடனேயே மார்பிலே குழந்தை தவழவிடப்பட்டதா?
• ஆம் • இல்லை

5. குழந்தைகள் அவர்களாகவே காம்பைத் தேடி கவ்விச் சுவைக்கக் கற்றுக் கொண்டார்களா?
• ஆம் • இல்லை

6. இரண்டு மார்பிலுமே போட்டு தாய்ப்பால் சுரப்பதற்கான தூண்டுதலைச் செய்தீர்களா?
• ஆம் • இல்லை

7. பிரசவ அறையிலேயே உங்களுக்கும் குழந்தைக்குமான தோலும் தோலுமாக தொடர்பிலிருக்கிற வகையில் தூண்டப்பட்டதா?
• ஆம் • இல்லை

8. பிரசவ அறையிலேயே தாய்ப்பால் புகட்ட போதுமான அறிவுரைகளை பெற்றுக் கொண்டீர்களா?
• ஆம் • இல்லை