ஈசல்களும் வரலாறும்
ஒரு சிறுகதையில் கதை இருக்கும், அதாவது முடிச்சோடு கூடிய நிகழ்ச்சி இருக்கும். ஒரு முக்கிய பாத்திரம் இருக்கும், வாசகனிடம் ஒரு உணர்ச்சி எழுப்பப்படும், கதை நிகழ ஒரு காலமும் இடமும் அல்லது சமுதாயப் பின்புலமும் இருக்கும். ஒரு கருப்பொருள் இருக்கும். ஒரு கதையில் இந்தக் கூறுகளில் ஒன்றோ இரண்டு முதன்மை இடத்தைப் பெறும்; மற்ற கூறுகள் இடம் பெறாமல் கூட இருக்கலாம். எனினும் பாத்திரங்கள் முழுமையான வளர்ச்சியடைய முடியாவிட்டாலும். கதை முடிச்சில் அதிகம் சிக்கல் இல்லாமல் இருந்தாலும் கதை ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
தமிழவனின் கருஞ்சிவப்பு ஈசல்கள் என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளும் பெரும்பாலும் வாசகரிடம் ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனச் சொல்லலாம். அதனை ஏற்படுத்த என்ன யுத்திகளைக் கையாள்கிறார்? தமிழவனே கதைகளை இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். அவற்றில் முதல் பகுதியை முதலில் பார்க்கலாம்.
முதல் மூன்று கதைகளிலும் கதை மாந்தரே முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள். ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் ”கருஞ்சிவப்பு ஈசல்கள்”. பழைய கதையின் தொடர்ச்சி என்று சொல்வதை விட அதன் நீட்சி என்று சொல்லலாம். போராட்டக்கார கௌதமன் ஞானோதையம் பெற்றுவிட்டான் போலும். பழைய நினவுகளின் நிழல்களில் மனிதர்கள் அவசரப்பட்டு அல்லாடுகிறார்கள், தான் எதற்காக வாழ்கிறோம் என்று கேள்விகேட்பனவாக இருக்கிறான், பழைய யசோதராவிடம் திரும்பிவந்த புத்தன். இரண்டாவது கதையான “புத்திஜீவி கே. யின் வாழ்வும் பணியும்” கே. யைப்பற்றிய கதை. அவனுடைய போட்டியாளனான ஆனந்ததீர்த்தனும் கதை சொல்லியும் இருந்தாலும் கே. தான் அந்த உயர்நிலை ஆய்வு வளாகத்தின் மூலை முடுக்குகளை வெளியில் கொண்டுவரக் காரணியாக இருப்பவன்.
இன்றைய உயர்நிலை ஆய்வுமையங்கள், பல்கலைக்கழகங்களின் அவலங்கள் அறிவுஜீவிகளின் வக்கிரங்கள் கதையின் பின்புலமாக இருந்தாலும் செத்தும் ஆக்கிரமிப்பவன் கே. தான். தனக்குப் பழக்கமான புத்தகக் கடையைத் தேடிப்போகின்றவரின் கதை “புத்தகக் கடை.” இரண்டாண்டுகள் தன்னைவிட்டுப் பிரிந்துபோன மனைவியின் நினவில் வாழ்கிறாரா அல்லது தான் யாரென்று தேடிக்கொண்டு அலைகிறாரா என்பது தான் வாசகன் கேட்கும் கேள்வி. புத்தகத்தை தேடுகிறார், அறிவைத் தேடுகிறார். அவை எல்லாம் கிடைக்கக் கூடியவை. தவறான வழிகாட்டல்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சரியான புரிதல்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றை அடைந்து விட முடியும். ஆனால் தன்னைத் தேடுவதில் தனது அடையாளத்தைத் தேடுவதில் வெற்றிகொள்வது எளிதில்லை. அவனோடு இரண்டாண்டு வாழ்ந்தவளுக்கு அவனைத் தெரியும். ஆனால் அவனுக்குத் தெளிவில்லை. தனக்குள்ளேயே வாழும்போது புகைமூட்டம்; கார் கதவைத் திறக்கும்போது தெளிவு; எனினும் இப்போது மற்றவர்களுக்குமே இவன் யார் என்று தெரியவில்லை. அடையாளத்தைத் தேடும் ஒரு மனிதனின் கதை.
அடுத்த பகுதியில் ஏழு கதைகள். பெரும்பாலும் ‘வரலாற்று’க் கதைகள் என்று சொல்லலாம். இவற்றில் வரலாறும் அது சொல்லும் சமுதாயமும், மக்கள் இனங்களுக்கிடையே இருக்கும் வெறுக்கத்தக்க முரண்பாடுகளும் பின் புலமாக இருக்க காலனிய காலத்து வரலாற்றில் நிகழ்ந்தனவாகக் கருதப்படக்கூடியவற்றின் இன்றைய தாக்கம் என்றும் சொல்லலாம். ஆசிரியர் தன்னுடைய முன்னுரையில் சொல்வது போல காலனிய கால முரட்டுத்தனமான அழகியலை வெளிப்படுத்துபவையாக இருக்கலாம். அல்லது பின்காலனிய அழகியலைக் காட்டுபவையாகவும் இருக்கலாம். அவற்றையும் தாண்டி புதிய வரலாற்றியக் கோட்பாட்டைப்பயன்படுத்திப் பார்த்தால்தான் ஓரிரு கதைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கலாம்.
அழகியல் என்று சொல்லும்போது அங்கே அழகு இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கலைப்படைபின் நுணுக்கங்களை ஆராயும்போது கிடைக்கும் இன்பத்தை அழகியல் குறிப்பதாகக் கொள்ளலாம். இது இலக்கியம் உட்பட்ட கலைப் படைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிப்பார்க்கும் ஒரு வழிமுறை. கலை, இயற்கை, பண்பாடு ஆகியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்துவது அழகியல். பெரும்பாலும் பின்காலனிய இலக்கியவாதிகள் அழகியலை வழக்கமான அழகைக் காணும் கருத்தியலை ஏற்றுக் கொள்வதில்லை. எனினும் ஆஷ்க்ராஃப்ட் போன்ற பின்காலனியக் கோட்பாட்டாளர்கள் கலைப்படைப்புகளை அதற்கு அடுத்த நிலையில் காண்கிறார்கள். இரு பண்பாடுகளுக்கு இடையே ஏற்படும் ஒட்டுதலால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள் .அதை transformational exchange என்கிறார்கள்.
அடையாளம், உரிமை, அதிகாரம் ஆகியவற்றில் உரையாடல்கள் நிகழ்கின்றன. மரபுகளின் பன்முகத்தன்மைக்கு அவை காரணிகளாக ஆகின்றன. ஒருவகைக் கலப்புக் கலாச்சாரம் ஏற்படுகிறது.. குடியேற்ற ஆதிக்கவாதிகளைக் காட்டிலும் ஒடுக்கப்பட்டோரின் மேல் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வரலாற்று ரீதியான வன்முறையின் கோரம் ஒரு அழகியலாக உருவாகிறது. இன்றைய தலைமுறையினர் காலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களின் வாரிசுகளாக எப்படிச் செயல்படுகிறார்கள், ஆதிக்கவாதிகளின் வாரிசுகள் அவற்றை எப்படிப் பார்க்கிறார்கள் என்று காட்டுவது இன்றைய படைப்பாளியின் பணி. இன்ஸ்டாக்ராம் கவிஞரான இந்திய வம்சாவளி கனடா நாட்டு ரூபா கவுர் கொண்டாட்டமாக, மீட்டெடுத்தலாக, எதிர்ப்பாக இவற்றை வெளிப்படுத்துகிறார். தமிழவன் இதன் சில பக்கங்களை மறைமுகமாக வரலாற்றுக் கதைகள் சொல்வது போலச் சொல்லித் தொட்டுக் காட்டுகிறார்.
”மணிக்கூடுகளுக்கு இடையே நடந்த ஒரு வழக்கு” கதை புதியதில்லை. மேட்டுக் குடியனரான கொண்டைகட்டி சமூகத்தினருக்கும் எழைகளான கட்டையன் சமுகத்தாருக்கும் இடையில் நடந்த மோதல் மேட்டுக்குடியினரின் சதியால் கட்டையர்களுக்கு எதிராகச் சோடிக்கப்பட்டு நீதிபதி ஆர்பத்நாட் நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது. கட்டையர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும் அவர்களுடைய குற்றமின்மைபற்றியும் கொண்டைகட்டிகளின் சதிச்செயல் பற்றியும் ஆங்கில ஆதிக்கவாதிகள் வெளியில் சொல்லவில்லை. இரு நூற்றாண்ட்டுகளுக்குப் பிறகு வந்த ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடிக்கிறார். விடுதலைக்குப் பிறகும்கூட இதேபோன்ற யுத்தி மேல்மட்டத்தினரால் நான்கு முறை பயன்படுத்தப்பட்டது. யூகங்களும் கொடூரங்களும் நிறைந்த கதைகள் மறக்கபட்டது அல்லது மறைக்கப்பட்டது மக்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது என்பது ஆய்வாளரின் முடிவு. பின்காலனிய அழகியல் தொடர்கிறது!
“எழுதப்பட்டிருந்த ஜான் ஸ்டுயர்ட்டின் கதை” பதினாறாம் நூற்றாண்டில் நடந்த கதை பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் குடும்பத்தில் வாழ்ந்த பெண்ணின் பார்வையில் அதுவும் ஒரு நாவலின் அடிப்படையில் மீட்டெழுதப்படுகிறது. இங்கே வரலாற்றின் பல பகுதிகள் மிகைப்படுத்தப்படுகின்றன. திருத்தப்படுகின்றன. அதிலும் கூட அடிமைப் படுத்தலின் கொடுமைகளை எதிர்த்த ஸ்டுயர்ட்டின் தாய் போன்றவர்களும், குருவானவர் போன்றவர்களும் இருந்தார்கள் என்பதுதான் வரலாற்றின் மறுபக்கம். கதையில் ஷேக்ஸ்பியர் வருகிறார், ஜெ. எஸ். மில் ஜான் ஸ்டுவர்ட்டாகவும் மில்லாகவும் ஆகிறார். செர்வாண்டிஸ் வருகிறார். எட்மண்ட் ஸ்பென்சர் வருகிறார். ஆதிக்கவாதிகளின் பொய்கள் அம்பலமாகின்றன.
”கைகள் வெட்டப்பட்ட அனார்கிஸ்ட்” ஆதிக்கவாதிகளின் வாரிசுகள் தங்களது முன்னோரைப்பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினால், “தூத்த்குக்குடியில் ஒரு கொலை” காலனியாதிக்கத்தின் போது கிறிஸ்தவத்தின் மனச்சான்றில் ஏற்படும் போராட்டத்தைக் காட்டுகிறது. அது சரி, போர்த்க்துக்கீசியரோடு கறுப்பரும் இங்கு வந்திருந்தார்களா? ஆனால் இந்தக் கதைகளில் வரலாற்றுத் துல்லியங்களை நாம் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாமல் ஆசிரியர் செய்துவிடுகிறார்.
”காந்தி லிபி”யையும்,, “தலைவனையும்” பின்காலனிய அழகியல் கொண்டு பார்த்தாலும், அவை புதிய வரலாற்றியக் கோட்பாட்டின் கூறுகளையே அதிகம் காட்டுவதாகத் தோன்றுகிறது. நமது தலைவர்களைச் சாகவிடமாட்டோம். சுபாஷ் சந்திர போசை எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ வைத்திர்ந்தோம்! ஈழத்துப் பிரபாகரன் இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். தலைவன் கதையே அதுதான். சுடப்பட்டவர் காந்தி இல்லை என்று நம்பியவர்கள் “காந்தி லிபியில்” சுட்டப்படுகிறார்கள். இந்த நம்பிக்கைகள் வரலாற்றில் ஏற்றிக் கதைகளாக உருப்பெறுகின்றன.
தமிழில் புதிதாகச் செய்யவேண்டும் என்பது தமிழவனின் ஆசை. ஆனால் அதற்கு மாதிரிகள் மேலை நாட்டு இலக்கியங்களில் தான் கிடைக்கின்றன என்பதுதான் நகைமுரண். பத்துக் கதைகளையும் படிப்பது நல்ல அனுபவம்.
நூல்: கருஞ்சிவப்பு ஈசல்கள்
ஆசிரியர்: தமிழவன்
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ரூ 200.