தண்டனை குறுங்கதை – சுபாஸ்ரீ
சுமியின் அம்மா கலாவும் அபியின் அம்மா கவிதாவும் பூங்காவில் தங்கள் குழந்தைகள் இருவரையும் விளையாட விட்டு பின்பு இருவரும் அவர்களைப் பார்த்தவாறு ஒரு பென்ச்சில் உட்கார்ந்தார்கள்.
இதேபோல் வாரத்தில் ஓரிரு முறை பூங்காவிற்கு குழந்தைகளோடு வந்து விளையாட விட்டு பின்பு இருவரும் கலந்துரையாடுவது வழக்கம் கலாவும், கவிதாவும் பள்ளி கல்லூரி தோழிகள் அல்ல, அவர்களின் இரு குழந்தைகளும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் இவர்களும் குழந்தைகளைப் பள்ளிக்கு விடுவது, கூப்பிட வரும்பொழுது பார்த்து பேசி அப்படியே தோழிகள் ஆயினர்.
அன்றும் அப்படித்தான் குழந்தைகளை கவனித்தவாறே தனது பேச்சை ஆரம்பித்தாள் சுமியின் தாய் கலா,”இப்பொழுதெல்லாம் பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமை பற்றி அதிகமாகக் கேள்விப்படுற மாதிரி இருக்குல்ல கவிதா?”
“ஆமாம்பா சின்ன குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் இதுபோல செய்ய எப்படி தோன்றுகிறது என்றே தெரியவில்லை” என்று அதே வருத்தத்துடன் கவிதாவும் சொல்ல, உடனே கலா, “பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு குட் டச்- பேட் டச் பற்றி சொல்லி கொடுத்து, முக்கியமாக நல்ல நண்பர்களாக இருந்தால் குழந்தைகளும் இதுபோல் பிரச்சனைகளை பெற்றோர்களிடம் சொல்ல தயக்கமில்லாமல் சொல்லுவார்கள் என்றே தோன்றுகிறது” என்று சொல்லி முடிக்க,
கவிதா “அதுவும் சரி அதேசமயம் தவறு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டனை கொடுக்க பட வேண்டும்” என்றால்.
பிறகு இருவரும் ஒருசேர தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று கூற ஒருவரையொருவர் பார்த்து விட்டு, தம் பிள்ளைகளின் கள்ளம் கபடமற்ற முகங்களைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்தனர்.