தங்கேஸின் நான்கு கவிதைகள்
கவிதை 1
வார்த்தைகளற்றுப்போவேன்
திக்கற்ற வெளிதனில்
சுழலும் சருகாகி
ஒரு சுழற்காற்றில் முளைத்து விடும்
சுதந்திரச்சிறகுகள்
சருகாகிய எனக்கு
தட்டாமாலை சுற்றிச் சுற்றி என்னைச் சுமந்து போகும்
காற்றின் வெளிகளில் தீராப்பயணம்
எடையற்று மிதந்து கொண்டிருக்கும் சருகுகளில் ஒன்றாய்
நானானது எப்படி
நானறியாமலே ?
என்மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு பெரும் சொல்லை
நான் சிதையாமல் எடுத்துச்செல்ல வேண்டும்
உரியவரிடம் சேர்ப்பிக்க
உரியவரோ என்னைத் தானாக அடையாளம் கண்டுவிடுவார்
என்று நான் சொல்லப்பட்டிருக்கிறேன்
என்னை உடைத்து துகள்களாக்கும் விரல்களின்
நகக்கண்களில் நுழைந்து கொள்வேன் அதி இரகசியமாக
நான் தப்பிப் பிழைத்துக்கொள்ள
அண்டமெங்கும் நாட்டியமாடும் அணுக்களின் மீதமர்ந்து
ஒளி வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்
இந்தக் கவிதையை உரியவரிடம் சேர்த்து விடமட்டுமே
நடனமிடும் அணுக்களை கடந்து விட இயலவில்லை
யுகம் யுகமாய் ஆன பின்னும் என்றாலும்
இங்கு நடனமிடும் ஒவ்வொரு அணுவும்
ஒரு கவிதை கொண்டு வந்தவை தான்
உரியவரிடம் சேர்ப்பிக்க என கண்டு கொண்டேனே
ஆனாலும்
நடனத்திற்கு ஒப்புக்கொடுத்த வாழ்க்கையில்
அனுப்பியவர் யாரென்றும் உரியவர் யாரென்றும்
கடைசி வரையிலும் கண்டு கொள்ள இயலவில்லை
நடனமிடும் அணுக்களால்.,,
கவிதை 2
விரிந்துகொண்டேயிருக்கிறது இரவின் மடி
உதிரும் நட்சத்திரம்
தலைக்கு மேல் பறந்தோடின சிறகுகள்
அசைந்து கொண்டிருக்கிறது
இதயம்
புதைக்கும் போதே உயிர்த்தெழுந்து
கொண்டிருக்கின்றன
விதைகள்
சிலுவையிலறைந்து கொள்கின்றன
தங்களைத் தாங்களே
மீட்பாரற்ற ஞாபகங்கள்
கவிதை 3
வெட்கமேதும் அறியாதது தானோ இந்த வயது ?
உன் தாவணியில் விலைப்பட்டியாக ஒட்டிக்கொண்டு திரிகிறதே
லச்சையற்ற மனது
கொலைவேள் நெடுங்கண்
கொடுங் கூற்றில் வாழ்வு
சகலமும் துறந்த சமணத்துறவி அல்லவே நான்…
தூண்டில் முள்ளோடு எத்தனை காலம் நீந்துவது?
புலவு மீன் வெள்உணங்கலாக என்னை உலர்த்தி எடு
சுடும் மணற்கரையில்
பாதங்களை எப்போது முத்தமிடும் உருண்டோடும் துளிகள்?
கொட்டித்தீர்க்கும் இந்த மழையிரவு முழுவதும் உனக்கே உனக்கானது
தோற்றங்கள் உருக்கொள்ளும் மாயக் கருவறை நீதானோ?
திரும்பும் திசையெல்லாம் உன் முகம்தானே தெரிகிறது
நெத்திலி . துடிக்கிறது
உறங்காத இதயத்திற்குள்
சலனக் கடலே உன் அலைகளை உடனே அனுப்பி வை
காதுக்குள் வைத்து கேட்க
வலம்புரி சங்கு வேண்டும்
கழுத்துக்கு கீழே விரியும் பாற்கடலைக் கேட்டுச் சொல்
கவிதை 4
முப்பரிமாணங்களைத் தாண்டி
என் தலையணை உறையினுள் இருள் திணித்து நிரப்புகிறேன்
உறங்காத விழிகளோடு கதைத்துக்கொண்டிருக்கிறது அது
மறந்து விடுவாயோ நீ அருகில்லாதபோது
என்று நான் கேட்டது
நீ சிரிப்பதற்கோ?
முப்பரிமாணங்களையும் தாண்டி நானறிவேன் உன்னை
அறியேன் என்றா நினைத்தாய்?
எனக் கேட்டாய்
பரிமாணங்களை கலைத்துப்போடுவேன் நான்
குழந்தைப்பொம்மையாய் காற்றின் வீதிகளில் என்றேன்
அதிகாலை விளிம்பிலொரு உதிராத பனித்துளியாய்
உனக்காகக் காத்துக்கொண்டிருப்பேன் நான் என்றாய்
முன்கூட்டியே திறந்து விடும் ஒரு செம்பருத்தி மொட்டில்
உன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் வாசலில் நான் என்றேன்
என் சிறகுகளில் படிந்திருக்கும் காலத்தின் சாம்பலிலிருந்து
உனக்காக உயிர்த்தெழுவேன்
நீ வரும் கணம் வரை என்றாய்
ஏ பீனிக்ஸ் பறவையே உன் நினைவுகளைத்தானே
சாம்பலாக பூசிக்கொண்டிருக்கிறேன் எப்பொழுதும்
நான் என்றேன்