தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸின் நான்கு கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள் -தங்கேஸ்வரன்
கவிதை 1
இதயம் இல்லையோ வென்று
நினைக்கத் தோன்றும்
சபிக்காத நாளில்லை
அவனை
நம் கட்டடற்ற நேசிப்பை பெரும் பலவீனமாக கண்டவன்
இதயங்களை சிதைத்து சிதைத்து
சிற்றில் கட்டி
விளையாடி வன்
பிறன்மனை நோக்கி
பேராண்மை சரிந்தவன்
நம்பி வந்த இல்லாளை
சொற்களால் சுட்டவன்
முத்தமிட வந்த மகனுக்கு
முகத்தை காட்ட மறுத்தவன்
உறவுகளையும் நட்புகளையும்
வேர் அறுத்து சென்றவன்
கொரனாவில் இறந்து போய்
இன்றோடு ஒரு வருடம் ஆகிறது
கடைசியாக உகுத்த கண்ணீர்
யாருக்கென்று கேட்டால்
எள்ளி நகையாடுகிறது காலம்.
முல்லைப் பெரியாற்றங்கரையில்
காரியம் செய்து
பிண்டங் கரைத்து
அவனுக்கு பிடித்த வெள்ளை வேட்டி
வெள்ளை சட்டையை ஆற்றில்
மிதக்க விட்டபோது
அச்சு அசல் அவன் மிதந்து சென்றது போலவே இருந்தது
கண்ணுக்குள்ளேயே இருக்கிறது
பிண்டங்களை கரைத்து விட்டு வரும் மனதுகளால்
ஏனோ கடைசிவரையிலும் நினைவுகளை
கரைக்க முடிவதேயில்லை
எந்த நதியில் யார் மிதந்து செல்கிறார்களோ
எந்த நதி யாருக்குள் மிதக்கிறதோ
யார் கண்டது
கவிதை 2
வாசல் வேப்ப மரத்தில் வழக்கம் போலவே வந்தமர்ந்தது
மரகத நாணயம் போலவே ஒரு குட்டி குட்டி தேன் சிட்டு
அப்பா இதற்கு என்ன பெயர் வைக்கலாம் ?
என்று கேட்டான் என் குட்டிப் பையன்
உன் பெயரையே வைத்து விடலாம் **தம்பி ** என்றேன்
அப்ப அது தம்பி தேன் சிட்டு என்று துள்ளினான்
சற்று நேரத்தில் அது மேலேழும்பி பறக்க
அப்பா தம்பி தேன்சிட்டு எங்கே பறக்குது ?
உயிர்த்திசை நோக்கித்தான் என்றேன்
உயிர்த்திசை என்றால் என்ன அப்பா ?
உயிர்த்திசை என்றால் வானம் என்றேன்
வானத்திற்கு தான் திசைகளே இல்லையே …
இருகைகளையும் வண்ணத்துப்பூச்சியாய் விரித்திருந்தான்
எல்லாத்திசைகளும் வானத்தில்தான் முடிகின்றன தம்பி
அப்ப எங்க இருந்து ஆரம்பிக்குது எல்லாம் ?
அதுவும் வானத்தில் இருந்து தான் தம்பி என்றேன்
ம்ம்ம் பறப்பதற்கு எல்லாமே வானம் தானா என்று ஆச்சரியப்பட்டவன் அப்படியென்றால்
** வானத்திற்கு அம்மாவின் பெயரையே வைத்துவிடு ** என்றான் சட்டென்று
கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்
சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING)
முன்னொரு காலத்தில்
ஒரு அரசன் இருந்தான்
அவன் அறிவுக் கூர்மை
கொண்டவன்
ஒரு நாள் அவன் தன் குடிமக்களுக்காகப்
புதிதாகச் சட்டங்கள் இயற்ற வேண்டுமென்று நினைத்தான்
ஓராயிரம் இனக்குழுக்களிலிருந்து
ஓராயிரம் அறிவாளிகளைத் தேர்ந்தெடுத்துத்
தன் தலை நகரத்துக்கு அழைத்தான்
அவர்களிடம் “நீங்கள் புதிதாகச் சட்டங்களை எழுதுங்கள் ” என்றான்
அதன் படி
ஆயிரம் சட்டங்களும் செம்மறி ஆட்டுத் தோலின் மீது எழுதப்பட்டு
அவன் முன்னே வைக்கப்பட்ட போது
அதை வாசித்து விட்டு அவன்
ஆத்மார்த்தமாய் அழுதான்
கண்ணீர் நிற்கவில்லை
காரணம் கேட்ட போது
” தன் நாட்டில் இப்படி ஓராயிரம் குற்றவாளிகள்
உலவிக் கொண்டிருக்கிறார்களே
அதை தான் முன்பே அறிய முடியவில்லையே” என்றான்
பிறகு தன் எழுத்தரை அழைத்து
உதட்டில் ஒரு புன்னகையுடன்
எழுதிக் கொள்
இனி இந்த நாட்டின் சட்டங்களை
என்று ஒவ்வொன்றாக உரைக்க
ஆரம்பித்தான்
அவன் இயற்றிய சட்டங்கள் மொத்தமே ஏழுதான்
அழைக்கப்பட்டிருந்த அத்தனை அறிவாளிகளும்
ஆறாத கோபத்துடன்
தங்கள் வசிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்
தாங்கள் எழுதிய சட்டங்களை
தங்கள் இனக்குழுக்களின் மீது பிரயோகித்தனர்
அன்றிலிருந்து ஒவ்வொரு மனிதனும்
தனக்கு விதிக்கப்பட்ட சட்டத்தை
பின்பற்ற ஆரம்பித்தான்
அதனால் தான் இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றன
ஆயிரமாயிரம்
சட்டங்கள்
இது ஒரு பெரிய தேசம்
இங்கு ஓராயிரம் சிறைகள்
ஓராயிரம் சிறைகளிலும்
ஆண்கள் பெண்கள்
அத்தனை பேரும் சட்டத்தை மீறியவர்கள்
இது ஒரு பெரிய தேசம் தான்
மக்கள் அனைவரும்
ஓராயிரம் சட்டங்களை இயற்றியவர்களின்
வம்சா வழியில் தோன்றியவர்கள்
ஆனால் அரசன் மட்டும் ஒரே அரசன்
மூலம்: கலில் ஜிப்ரான்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்