Kaviyoviyathodar-Yuththa geethangal 18 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 18

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 18 – நா.வே.அருள்



தனியார் மன்னன்
**************************
இது ரொம்ப மோசமான செய்திதான்
ஆனால் நாடே பரபரப்பாகப் பேசிக்கொள்கிறது
மன்னன்
தனது சிம்மாசனம் என்று நினைவில்லாமலேயே
அவனிடம் வந்த இரண்டு வைர வியாபாரிகளிடம்
விற்றுவிட்டு நொறுக்குத் தீனி வாங்கியிருக்கிறான்!

இதற்கெல்லாம்
மன்னனின் நோய்தான் காரணமென்று
ஒரு வதந்தி உலவுகிறது.

மறதி
ஒரு மோசமான நோய்
அதிலும் கோமாளி மன்னர்களைத்தான் அது
அதிகம் பாதிக்கிறது என்றொரு பேச்சு.

மறதி
மூளையின் சவ்வுத்தோலை
ஒரு பாலாடையைப்போல புசித்துவிடுகிறது.

ஐஸ் உருகி
கடைசியில் குச்சி மட்டுமே எஞ்சி நிற்பதுபோல்
மன்னனைப் பரிதாபமாக்கிவிடுகிறது
மறதி

மறதியால் பீடிக்கப்பட்ட மன்னன்
முதலில் மறந்துவிடுவது
தனது நாட்டைத்தான்.
அதற்கப்புறம் ஒவ்வொரு பிரஜையாக மறக்க ஆரம்பிக்கிறான்.
அந்தப்புரத்து மகாராணிகளே இப்போது
ஆதார் அட்டைகளுடன் அலைந்துகொண்டிருப்பதாக வதந்தி.
அவ்வளவு ஏன்?
நிலைக் கண்ணாடியைப் பார்த்தபோதும்
சுய பிம்பமே நினைவுக்கு வராத
சித்த சுவாதீனம்

அப்புறமும் எதற்கிந்த
பட்டினியில் உருக்குலைந்துபோன உணவு உற்பத்தியாளர்கள்
நள்ளிரவில்
ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்?

மோசமான செய்தியாக இருந்தாலும்
நம்பவேண்டியதாகத்தான் இருக்கிறது….
மன்னன்
தனது சிம்மாசனம் என்று நினைவில்லாமலேயே
அவனிடம் வந்த இரண்டு வைர வியாபாரிகளிடம்
விற்றுவிட்டு நொறுக்குத் தீனி வாங்கியிருக்கிறான்!

கவிதை – நா வே அருள்
ஓவியம் – கார்த்திகேயன்