Poiyin Ucham Poem By Dharmasingh. பொய்யின் உச்சம் கவிதை - ஐ.தர்மசிங்

பொய்யின் உச்சம் கவிதை – ஐ.தர்மசிங்




சிகையலங்காரம் செய்து
மாதமொரு முறை கரடித்தலையை
மயிற்பீலி போல
முகிழ்க்க வைக்கும்
ஓவியக் கரங்களும்

கறைபடிந்த ஆடைகளின்
அழுக்குகளை அச்சுறுத்தி
ஆற்றில் மிதக்கவிட்டு
முழு மனிதனாக நம்மை
ஊருக்குள் புழங்க வைக்கும்
மந்திரக் கரங்களும்

நாம் நாளும் தெருக்களில்
சேமித்து வைக்கும் துர்நாற்றங்களை
சக்கர வண்டிகளில்
கடத்திச் செல்லும்
ஊழியக் கரங்களும்

மழைக்கால சாக்கடையில்
தடுப்புகளில் நுழைந்து
சிறைப்பட்ட நீரை
விடுதலைச் செய்யும்
விநோதக் கரங்களும்

வீதியில் தவிக்கவிடும்
உறுப்பறுந்த காலணியை
அணி செய்து
காலுக்கு அழகு பார்க்கும்
அமைதியான கரங்களும்

மரணம் பூக்கும் வேளை
பிணநாற்றத்தை ஒளித்து வைக்க
மண்ணின் மார்பை
ஆயுதங்களால் அகழும்
ஆச்சரியக் கரங்களும்

நிரம்பி வழியும் கழிவறையை
வெறுமையாக்கி விட்டு
சுவாசப்பை நிறைய
நோய்களோடு வீடு திரும்பும்
புதிரான கரங்களும்

சவக்கிடங்கில்
வாசமிழந்துக் கிடக்கிற
உடல்களைப் பரிசுத்தப் படுத்தி

பத்திரமாக ஒப்படைக்கிற
பரிதாபக் கரங்களும்

நிகழ்த்திவரும்
சாதனையின் மறுபக்கத்தில்

வாய்வழி வெளியே தப்பிச்சென்ற
பகல் நேர உணவுகளும்

வியர்வையை விதைக்க
போதையில் மூழ்குவதால்
தள்ளாடும் குடும்பங்களும்

வாழ்வின் இறுதி வரை
நிழலாய் தொடரும்
புதிரான நோய்களும்

அற்ப ஆயுளில் முடிந்து போகிற
இளைய வாழ்வின்
உச்ச ரணங்களும்

மறைக்க முடியாத
வரலாறாய்…

பாலிலிருந்து நீரைப் பிரிக்கும்
அன்னப் பறவையாய்
சமூகத்தின் தூய்மைக்காக
அழுக்கில் புரளும்
இந்த அதிசயமானவர்கள்
இழிகுலத்தோர் எனில்

கழிவுகளை உற்பத்தி செய்து
இந்த மனிதர்களை அழுக்காக்கி களங்கப்படுத்துவோர்
மேலோர் என்பது
அவனியிலே வானளாவிய
பொய்யின் உச்சம்…