இன்றைய ஆட்சியில் பிணைக் கைதியாக்கப்படுகின்ற வரலாறு: 1921 மாப்ளா தியாகிகள் குறித்த துயரங்களை நினைவுகூருதல் – முகம்மது நியாஸ் அஷ்ரஃப்
முகம்மது நியாஸ் அஷ்ரஃப் இந்திய வரலாற்றாய்வுக் கழகம் மேற்கொண்ட இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் குறித்த ஆய்வுத் திட்டத்தில் ஆய்வு உதவியாளராக (2014-15) இருந்தவர். அந்த திட்டத்தின் மூலம் தொகுக்கப்பட்ட தியாகிகள் அகராதியின் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றிருந்த மாப்ளா தியாகிகளின் பட்டியலைச் சேகரித்துத் தொகுத்தவர். தற்போது ஜெர்மனியில் உள்ள ஃப்ரீ யுனிவர்சிட்டியில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்து வருகிறார்.
‘1857-1947 இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அகராதி’யில் இடம் பெற்றுள்ள மதிப்பிற்குரியவர்கள் பட்டியலில் இருந்து முந்நூற்றி எண்பத்தியேழு மாப்ளா தியாகிகளின் பெயர்களை நீக்குவது என்று 2021 ஆகஸ்ட் மாதக் கடைசி வாரத்தில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ICHR) எடுத்த முடிவு தேசிய நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்திய, மிகவும் பிரபலமாக துருவமுனைப்பு கொண்ட நிகழ்வாக மலபார் புரட்சி என்றறியப்படுகின்ற 1921ஆம் ஆண்டு மாப்ளா கிளர்ச்சி தேசிய நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பது அதுவொன்றும் முதன்முறை நிகழ்ந்ததாக இருக்கவில்லை.
காலனித்துவ எதிர்ப்பு குறித்த கிளர்ச்சி என்று சொல்லப்படுவதற்கு மாறாக மாப்ளா கிளர்ச்சி இஸ்லாமிய அரசை இந்தியாவில் நிறுவுவதையே இலக்காகக் கொண்டிருந்தது என்று வலதுசாரி ஆர்வலர்கள் எழுப்பி வந்த பல்லாண்டு கால சர்ச்சையின் உச்சக்கட்டமாகவே இந்திய வரலாற்று ஆய்வுக் கழக வெளியிட்ட அறிவிப்பு அமைந்திருந்தது.
1921ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியில் மதமும் ஒரு பங்கு கொண்டதாக இருந்தது உண்மைதான் என்றாலும் மாப்ளா கிளர்ச்சிக்கான காரணங்கள் (1849 மற்றும் 1921க்கு இடையில் முப்பத்தைந்து தீவிரமான கிளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன) முக்கியமாக விவசாயம் சார்ந்து ஆழத் தடம் பதித்தவையாகவே இருந்திருக்கின்றன. உண்மையில் அந்த இயக்கம் நிலப்பிரபுத்துவ பிரபுக்கள், பிரிட்டிஷ் காலனித்துவ அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும் சுரண்டல் நடவடிக்கைகளுக்கு எதிராக கிராமப்புற ஏழைகள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலேயே நடந்துள்ளது. அதனாலேயே தொகுக்கப்பட்ட தியாகிகள் அகராதியில் மாப்ளா கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த முந்நூற்றி எண்பத்தியேழு தியாகிகள் முதலில் சேர்க்கப்பட்டனர். இப்போது அந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கி விடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள முடிவு அந்த எழுச்சியை ‘பெருமளவில் நடந்த வகுப்புவாதக் கலவரம்’ என்பதாகக் குறைத்து மதிப்பிடுவதாகவும், அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்த பிளவுபடுத்தி ஆட்சி செய்யும் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலானதாகவுமே இருக்கின்றது.
தியாகிகளின் அகராதி
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், மத்திய கலாச்சார அமைச்சகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்முறை வரலாற்றாசிரியர்களால் 1857 மற்றும் 1947க்கு இடையிலான காலகட்டத்திலிருந்த பதினான்காயிரம் காலனித்துவ எதிர்ப்பு போராளிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்பட்டு ‘1857-1947 இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் அகராதி’ தயாரிக்கப்பட்டது. இந்திய சுதந்திரம் என்ற மாபெரும் காரணத்திற்காக துயரத்தையும், மரணத்தையும் ஏற்றுக் கொள்ள முடிவெடுத்த அந்தப் போராளிகளை இந்திய மக்களின் கவனத்திற்கு மிகப் பரந்த அளவில் கொண்டு வருவதே அந்த அகராதிக்கான முக்கியமான குறிக்கோளாக இருந்தது.
‘அந்த திட்டத்தின் மூலம் முடிந்தவரையிலும் முயன்று சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த தியாகிகளை முழுமையாக மக்களின் பார்வைக்கு வெளிக் கொணர்வது, நன்கு தெரிந்தவர்களை மட்டுமல்லாமல் இதுவரையிலும் அறியப்படாத, தெளிவற்று, மறக்கப்பட்டவர்களையும் (குறிப்பாக சமூகத்தின் கீழ்மட்டங்களில் இருந்த) மக்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் சுதந்திர இந்தியாவின் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில் இணைப்பதே எங்களுடைய குறிக்கோளாக இருந்தது’ என்று அகராதியின் நான்காம் தொகுதிக்கான ஆசிரியர் குறிப்பில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தற்போதைய தலைவரான அரவிந்த் பி. ஜம்கெட்கர் குறிப்பிட்டுள்ளார்.
அகராதியின் ஐந்து தொகுதிகளுமே தங்களுடைய நம்பகத்தன்மையை நிலைநிறுத்திக் கொள்கின்ற வரலாற்றுத் தரவுகளின் துல்லியமான ஆதாரங்களுடன் இருக்கின்றன. அதிகாரப்பூர்வமான ஆவணக்காப்பகங்கள் மற்றும் சமகாலத்து பிற ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தியாகிகளின் சுருக்கமான சுயசரிதை வரலாற்றை அகராதியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு பதிவும் நமக்குத் தருகின்றன. தியாகிகள் எடுத்த முடிவு உணர்ச்சிவயப்பட்டதாக இல்லாமல் மிகவும் தெளிவுடன் எடுக்கப்பட்டது என்பதையும், அந்த தியாகிகள் தங்களுடைய செயல்களின் விளைவுகளின் தீவிரத்தை முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தனர் என்பதையும் காட்டுவதாகவே ஒவ்வொரு பதிவும் அந்த அகராதியில் அமைந்துள்ளன. ஆக்ரோஷமாகச் செயல்படவோ அல்லது தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராக எதிர்வினையாற்றவோ முடியாது துயருற்ற தியாகிகள் தங்களுடைய கருத்தியல், அரசியல் நம்பிக்கைகளுக்காக இறந்து போகக்கூட தயாராகவே இருந்தனர். தியாகிகளின் துயரங்கள், இறப்புகளை இதுபோன்று பதிவு செய்து வைத்துக் கொள்வது பின்னர் நாட்டின் கூட்டு நினைவகத்தின் ஒரு பகுதியாக மாறி, கடந்த காலத்திற்கு அர்த்தத்தைத் தருவதாக அமைகிறது. இந்தப் பணியை நிர்வகிக்கும் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மையையே ஒவ்வொரு பதிவும் முதன்மை ஆதாரங்களாகக் கொண்டிருந்தன. அகராதியைத் தயாரிக்கும் திட்டத்தில் பணியாற்றிய ஆய்வு உதவியாளர்கள் பின்பற்றிய முறை என்பது மக்களின் கூட்டு நினைவகம் மற்றும் வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட அறிவு ஆகியவற்றிற்கு இடையிலே உறவை உருவாக்கும் வகையில் இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள், சம்பவங்களில் பங்கேற்றவர்கள் பலரையும் தியாகிகள் அகராதி முடிந்தவரை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டின் போது 1857ஆம் ஆண்டு புரட்சியின் நூற்றைம்பதாவது ஆண்டு நிறைவு, இந்திய சுதந்திரத்தின் அறுபதாண்டு கொண்டாட்டங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்த தேசிய செயல்படுத்துதல் குழு ‘தேசிய தியாகிகளின் பதிவேடு’ என்ற தொகுப்பை உருவாக்க விரும்பிய போது தியாகிகள் அகராதியைத் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தையும் அதற்குத் தேவையான நிதியையும் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் ஏற்றுக் கொண்டது. அந்தத் திட்டத்தின் மூலமாக இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் அகராதி – 1857-1947 என்ற தொடரை வரலாற்றாய்வாளர்கள், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் பிரதிநிதிகள், இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு உருவாக்கும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.
விருதுகள், ஓய்வூதியங்களை வழங்குவதற்கு வசதியாக 1980ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘தியாகி’ என்ற வார்த்தைக்கான வரையறையையே அந்தக் குழு தங்களுடைய திட்டத்தின் நோக்கத்திற்காகவும் ஏற்றுக் கொண்டது. இந்திய தேசிய ராணுவம் உள்ளிட்டு இந்திய விடுதலைக்கான தேசிய இயக்கத்தில் பங்கேற்று அல்லது காவலில் வைக்கப்பட்டிருந்து மரண தண்டனை வழங்கப்பட்டு மரணமடைந்தவர்கள் அல்லது பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்டு இறந்து போன முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்கள் தியாகிகள் எனக் கருதப்படுவர் என்று அந்த வரையறை சுட்டிக்காட்டுகிறது. .
ஆதாரங்களுக்கான தேடல்
புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1976 முதல் 2003 வரை முக்கிய வரலாற்றாசிரியராக இருந்தவரும், குறிப்பிடத்தக்க வகையிலான வரலாற்றுத் தனிநூல்களின் ஆசிரியருமான சப்யசாச்சி பட்டாச்சார்யா இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் அப்போதைய தலைவராக இருந்தார். அவர் மத்திய கல்வி அமைச்சகத்தால் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று அகராதிகளில் இருந்த குறைகளைச் சுட்டிக் காட்டியிருந்தார். டாக்டர்.பி.என்.சோப்ராவை ஆசிரியராகக் கொண்டு 1969, 1972, 1973ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ‘இந்திய தியாகிகள் குறித்த விவரங்கள்’ என்ற தொகுப்பில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தூக்கிலிடப்பட்ட அல்லது கொல்லப்பட்ட தேசபக்தரைக் குறிப்பதாக ‘தியாகி’ என்ற வார்த்தை வரையறுக்கப்பட்டிருந்தது.
சப்யசாச்சி பட்டாச்சார்யா
சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் மாநில அரசுகள் வெளியிட்ட தியாகிகளின் சுயசரிதை அகராதிகள், பட்டியல்களிலும் குறைபாடுகள் காணப்பட்டன. எடுத்துக்காட்டாக 1975ஆம் ஆண்டு கருணாகரன் நாயர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ‘கேரள சுதந்திரப் போராளிகள் குறித்த விவரங்கள்’ என்ற தலைப்பில் 625 பக்க தனிநூல் வெளியானது. சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கான தியாகிகளின் பங்களிப்பு அல்லது தியாகங்கள் குறித்து முதன்மையான ஆதாரங்கள் எதுவும் இடம் பெறாது அதுபோன்று வெளியிடப்பட்ட பெரும்பாலான வெளியீடுகளில் நம்பகத்தன்மை எதுவும் இருக்கவில்லை.
ஆனால் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் உருவாக்கிய ‘இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் – 1857-1947’ என்ற அகராதியில் குறிப்பிடப்பட்டிருந்த தியாகிகள் ஒவ்வொருவரின் சுயசரிதைக் குறிப்பின் முடிவிலும் ஆவணக் காப்பகம் மற்றும் பிற சமகால ஆவணங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முதன்மை ஆதாரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.
மிகப் பெரிய அளவிலான அந்தத் திட்டத்தின் மூலம் முதலாம் தொகுதி, பகுதி 1 வெளியான பிறகு பேராசிரியர் அமித் குமார் குப்தா (2021 ஜூலையில் காலமானார்) என்ற முன்னணி வரலாற்றாசிரியரை அந்த திட்டத்திற்கான ஆய்வு ஆலோசகராகப் பணியமர்த்திக் கொள்வதென்று பட்டாச்சார்யாவும், மத்திய ஆலோசனைக் குழுவும் முடிவு செய்தனர். அமித் குமார் குப்தா விவசாயிகளின் போராட்டங்கள், சுதந்திர இயக்கங்கள் குறித்த பல்வேறு தகவல்களை தனது புத்தகங்களின் மூலம் ஆவணப்படுத்தியவர். அவர் 2015ஆம் ஆண்டு வெளியான ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு காலனித்துவமும் மாபெரும் இந்தியப் புரட்சியும்’, 1996இல் வெளியான ‘வேளாண் நாடகம்: இந்திய இடதுசாரிகளும் கிராமப்புற ஏழைகளும் – 1934-1951’ என்ற நூல்களை எழுதியிருந்தார். அவர் கொண்டிருந்த ஆய்வுகளுக்கு வழிகாட்டுகின்ற திறன் விலைமதிப்பற்றதாக இருந்தது. வரலாற்று இயக்கங்கள் குறித்து போதுமான விவரங்களைப் பெறுவதற்கு ஆய்வுக் குழு முதன்மை ஆதாரங்களைக் கவனமாக ஆழ்ந்து படிக்கின்ற முறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
தியாகிகளைப் பற்றி எழுதுவதற்காகவும், முதன்மை ஆதாரங்களின் அடிப்படையில் (காப்பக ஆவணங்கள், அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற ஆவணங்கள் உட்பட) அவர்களுடைய தியாகங்களை அங்கீகரித்திடவும் இந்திய தேசிய ஆவணக் காப்பகங்கள், புது தில்லியில் உள்ள நேரு நினைவு நூலகம் மற்றும் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்குச் செல்வதை நான் உள்ளிட்ட அந்த ஆய்வுக் குழு வழக்கமாகக் கொண்டிருந்தோம். அதே வேளையில் பல்வேறு மாநில ஆவணக் காப்பகங்களுக்கான பயணங்களையும் நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.
கேரளா தொடர்பான தகவல்களுக்காக சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில ஆவணக் காப்பகம், கோழிக்கோடு மாநில ஆவணக் காப்பகம், திருவனந்தபுரம் மாநில ஆவணக் காப்பகங்களுக்குச் சென்ற எங்கள் ஆய்வுக் குழு தியாகிகளின் பெயர், பிறந்த நாள், தியாகியான போது அவரது வயது, பிறந்த/வசித்த இடம் போன்று தியாகிகளின் அடையாளங்களை நிறுவிடத் தேவையான தகவல்களைச் சேகரித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளிலும் சாதி அடையாளங்கள் இடம் பெற்றிருப்பதால், தியாகிகள் குறித்த பதிவுகளிலும் அது சேர்க்கப்பட்டது. அந்தத் தரவுகள் அனைத்தும் சுதந்திரப் போராட்டத்தில் தனிநபரின் பங்கேற்பு, அவர்களுடைய மரணத்திற்கு அல்லது தியாகத்திற்கு வழிவகுத்துக் கொடுத்த நிகழ்வுகளின் போக்கு குறித்து கிடைக்கக்கூடிய தகவல்களின் சுருக்கமாகவே இருந்தன. இவ்வாறு கிடைத்த ஆவணக் காப்பகத் தரவு குறித்த மேற்கோள்கள் ஆய்வறிஞர்கள் பின்பற்றிச் செல்லும் வகையிலேயே இருந்தன.
கேரளாவைச் சேர்ந்த தியாகிகள் குறித்து ஆவணக் காப்பகம் சார்ந்த பணிகளை மேற்கொண்ட ஆய்வுக் குழு குறிப்பாக 1849 மற்றும் 1921க்கு இடைப்பட்ட மாப்ளா கிளர்ச்சி, 1946 புன்னப்ரா-வயலார் இயக்கம் சார்ந்த தியாகிகளை அடையாளம் காண்பதற்கான பல்வேறு முதன்மை ஆதாரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. தமிழ்நாடு மாநில ஆவணக்காப்பகத்திலிருந்து கிடைத்த முதன்மை ஆதாரங்கள் காலனித்துவ அதிகாரிகள், மலபார் ஆட்சியர் ஆகியோர் உள்ளூர் மோதல்கள் பற்றி பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரலுக்கு அல்லது அப்போது மெட்ராஸில் இருந்த பேரரசின் முகவர்களுக்கு பொதுவாக அனுப்பி வைத்த அறிக்கைகள்; உள்துறை அரசியல் மற்றும் பிறதுறை சார்ந்த கோப்புகள்; நீதிமன்றத்தின் முன்னால் இருந்த குற்றவியல் வழக்குகள், குறிப்பிட்ட விஷயங்களில் நீதித்துறையின் முடிவுகள், தண்டனை பெற்ற கைதிகளின் விவரங்கள், அவர்களின் மரணம் தொடர்பான பதிவுகள் அடங்கிய நீதித்துறை நடவடிக்கைகள்; பலவிதமான இந்திய செய்தித்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட உள்ளூர் அறிக்கைகள் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட சுருக்கமான தகவல்கள் வாரம் ஒருமுறை அயல்நாட்டு அரசியல், உள்துறை நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றங்கள், சிறைகள் செயல்பட்ட விதம் என்று பல தலைப்புகளில் பிரிக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் போன்றவற்றில் இருந்தன.
கேரளாவில் மலபார் கடற்கரையில் உள்ள கோழிக்கோட்டில் 1925 செப்டம்பர் 26 அன்று மாலிக்கா கைதிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது
இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள உள்துறை அரசியல் கோப்புகள், செயல்முறைகள், மலபார் ஆட்சியர் அலுவலகப் பதிவுகள் மற்றும் காவல்துறை கோப்புகள், கோழிக்கோட்டில் உள்ள கேரள மாநில ஆவணக் காப்பகத்தில் இருந்த அரசியல் (உள்துறை) கோப்புகள், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில ஆவணக் காப்பகத்தில் இருந்த சுதந்திரப் போராட்ட இயக்கம் குறித்த கோப்புகள் போன்றவற்றையும் ஆய்வுக் குழு கருத்தில் கொண்டது. அவற்றிலிருந்து கிடைத்த முதன்மை ஆதாரங்களையே தியாகிகள் அகராதியில் இருந்த கேரளா குறித்த பெரும்பாலான தகவல்கள் அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட தொகுதிகளில் இருக்கின்ற சுருக்கமான சுயசரிதைக் குறிப்புகள் குறித்து திருப்தியடையாதவர்கள் மேலும் அதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள அந்த முதன்மை ஆதாரங்கள் வழிவகை செய்து தருகின்றன.
தியாகிகளின் அகராதியின் ஒவ்வொரு தொகுதியையும் வெளியிடுவதற்கு முன்பாக அந்த ஆதாரங்களைக் கவனமாகப் படித்து, அவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளுடன் மேலும் கூடுதலாக சில பெயர்களைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் கடினமான பணியை இரண்டு வல்லுநர்கள் மேற்கொண்டிருந்தனர். வாய்ப்பிருக்கும் போது முதன்மை ஆதாரங்கள் தொடர்பான தரவுகளைச் சரிபார்த்து அங்கீகரிக்கின்ற வகையில் இரண்டாம் நிலை ஆதாரங்கள் குறித்த ஆலோசனைகளையும் அந்த ஆய்வுக் குழு மேற்கொண்டது. தியாகிகள் அகராதியின் ஐந்தாம் தொகுதியில் உள்ளதொரு பதிவு இங்கே எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றது:
‘அப்பன்கொல்லன் மொய்தீன்: கேரளாவின் மலபார் பகுதியில் எரநாடு தாலுகாவில் உள்ள பாண்டிகடம்சாம் என்ற இடத்தில் வசித்தவர். கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைந்து நடந்த 1921-22 மலபார் கிளர்ச்சியின் போது ஆங்கிலேயர்களுடன் தனது கிராமத்தில் நடந்த ஆயுத மோதலில் ஈடுபட்டவர். தலைமைக் கர்னல் அளித்த அறிக்கையின் மூலம் பாண்டிக்காட்டில் 1921 நவம்பர் 14 அன்று முழுமையாக ஆயுதம் ஏந்தியிருந்த 2/8ஆவது கூர்க்கா ரைபிள்ஸ் மற்றும் மிகக் குறைவான ஆயுதம் தாங்கிய இரண்டாயிரம் மாப்ளா கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் நடந்த மோதலில் சுமார் 234 மாப்ளாக்கள் இறந்து போனதாக நம்பப்படுகிறது. 1921 நவம்பர் 14 அன்று பிரிட்டிஷ் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் மொய்தீனும் ஒருவர். [H/ Poll, 1921, F. No. 241, Part 1-A, NAI; PPRM (கேஎன்.பணிக்கர் (ஆர்), விவசாயிகள் போராட்டமும், மலபார் கிளர்ச்சிகளும், பக்கம். 372-74].
தியாகிகள் குறித்து தயாரிக்கப்பட்ட அந்த அகராதியின் ஆரம்பகட்டத் தயாரிப்பில் கேரளாவில் இருந்து பிராந்திய ஒருங்கிணைப்பாளராக கேரளப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் ஷோபனன் நான் பங்கு பெற்றிருந்த ஆய்வுக் குழுவுடன் இணைந்திருந்தார். அவர் தயாரித்த அகராதியில் கேரளாவில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட தியாகிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்படாத, மறக்கப்பட்டவர்கள் (குறிப்பாக சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள்) மீது நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம். விளைவாக அந்த அகராதி தியாகிகள் குறித்த தேசத்தின் நினைவை மேம்படுத்தியது. அதன் மூலம் ஒவ்வொரு தியாகியின் துயரங்களும் நினைவுச்சின்னங்களாக மாறின.
சர்ச்சைகளுக்கான சாத்தியங்கள்
தியாகிகளின் அகராதி குறித்த அறிமுகத் தொகுதியில் வாசகர்களுக்கென்று எழுதப்பட்ட ஆசிரியர் குறிப்பில் ‘பல்வேறு ஆராய்ச்சி விவரங்கள் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும்’ என்று பட்டாச்சார்யா தெரிவித்திருந்தார். மேலும் அவர் ‘அகராதியில் சிலரைச் சேர்த்துக் கொள்வது அல்லது விலக்கி வைப்பது என்பது சர்ச்சையை ஏற்படுத்தலாம். முடிந்தவரை இந்த தொகுப்பை உள்ளடக்கியதாக மாற்றுவதே எங்களுடைய குறிக்கோளாக இருந்தது. நாங்கள் சார்ந்திருந்த அந்த முதன்மை ஆதாரங்களில் உண்மைகள் குறித்த அல்லது விளக்கம் சார்ந்த பிழைகள் இருக்கலாம்; பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் பதிவுகளில் உள்ளார்ந்து அமைந்துள்ள சார்பு மிக விரிவாக விளக்கப்பட வேண்டியதாகும். தரவு சேகரிப்பின் போது, அத்தகைய தரவு வரம்புகளைச் சமாளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்று எழக்கூடிய ஆபத்துகளை ஆய்வுக் குழு மனதில் கொண்டது. எனவே இந்தியா முழுவதிலும் உள்ள பல பிராந்திய ஆவணக் காப்பகங்களில் உள்ள பல்வேறு ஆதாரங்களை, பங்கேற்பாளர்கள் மற்றும் பல்வேறு காலனித்துவ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான கோப்புகளை அந்தக் குழு கருத்தில் எடுத்துக் கொண்டது. நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக 1857 மற்றும் 1947க்கு இடையில் பரவலாக நடைபெற்ற அதற்கு முன்பு முழுமையான ஆய்விற்குட்படாத மக்கள் போராட்டங்களில் தங்கள் உயிரைப் பலி கொடுத்தவர்களை முடிந்தவரையிலும் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணும் வகையிலே தனது ஆய்வுகளை மேற்கொண்டது. உள்ளூர் சார்ந்ததாக அல்லது பிரிவுகளுக்குட்பட்டதாக பழங்குடி, சாதி அல்லது மத பிரிவின் கூட்டு சுயவிழிப்புணர்வின் குறுகிய பரப்பிற்குள் நடந்திருந்த அந்த காலனித்துவ எதிர்ப்பு இயக்கம், சமூகப் போராட்டங்களில் அந்த அகராதியில் இடம் பெற்றிருந்த தியாகிகள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்றிருந்தனர். தேசிய உருவாக்கத்திற்கான இயக்கம் குறித்து, குறிப்பாக தேசிய சுதந்திர இயக்கத்தின் வளர்ச்சி, உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பு, ஒற்றுமை மற்றும் அரசியல் நலன்களுக்காக சுதந்திரப் போராட்டத்தை அணிதிரட்ட அனுமதித்த பிராந்திய வேறுபாடுகள் குறித்து விரிவான பார்வையை அந்த மிகப்பெரும் ஆய்வு நமக்கு வழங்கியுள்ளது.
இந்திய பன்மைச் சமூகம் அனைத்திந்திய அளவில் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராக தேசிய நனவைச் சுமந்து கொண்டு எவ்வாறு முன்னேறியது என்பதை அகராதியில் இடம் பெற்றிருந்த பதிவுகள் காட்டின. அகராதியைத் தயாரிக்கும் முயற்சியில் தொலைநோக்குடன் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பங்களிப்பையும் உள்ளடக்குவதை ஆய்வுக்குழு தனது நோக்கமாகக் கொண்டிருந்தது.
நோய்களையும், காவல்துறையின் கொடூரங்களையும் கடுமையாக எதிர்கொண்டிருந்த இதுவரையிலும் அறியப்படாதவர்களாக இருந்த தியாகிகள் சிறைகளில் அனுபவித்த துயரங்களின் மீது போதுமான கவனத்தை அகராதி செலுத்தியது. எடுத்துக்காட்டாக, அகராதியின் ஐந்தாம் தொகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
‘அம்மன்கள்ளன் வீரன் குட்டி: கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இருவீத்தியம்சம் பகுதியில் வசித்தவர். அவர் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள், தங்களைச் சுரண்டிய ஜென்மிகளுக்கு எதிராக 1921ஆம் ஆண்டு நடைபெற்ற கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைந்து நடந்த 1921-22 மலபார் கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டார். விசாரணைக்குட்பட்ட கைதியாக 1922 மே 5 அன்று கைது செய்யப்பட்டு மாஞ்சேரி துணைச் சிறையில் அடைக்கப்பட்டார். கொடூரமான காவல்துறை சித்திரவதைகள், சிறையில் இருந்த போது ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலின் கடுமையான தாக்குதல் (மிக மோசமான சுகாதார நிலைமை, அதிகப்படியான கூட்டம், அசுத்தமான நீர், உணவுப் பற்றாக்குறை) காரணமாக தனது இருபத்தந்தாவது வயதில் 1922 மே 30 அன்று காவலில் இருந்த போது வீரன் குட்டி இறந்தார் [Pub Deptt, GO (MS) எண் 960, 20.11.1922, TNSAC].
குறுகிய கண்ணோட்டங்கள்
ஆய்வுக்குழுவினரின் கடின உழைப்பையும் மீறி 1921-22 மாப்ளா கிளர்ச்சியில் இருந்த பொதுமுன்னோக்கை மதம் குறித்த குறுகிய கண்ணோட்டமாகக் குறைத்து மதிப்பிடுவதற்கு வலதுசாரி ஆர்வலர்கள் திட்டமிட்டனர்.
2020 செப்டம்பரில் மாப்ளா கிளர்ச்சியை வழிநடத்திய முக்கியமான தலைவரான வரியங்குன்னத்து குஞ்சகம்மது ஹாஜி குறித்த மலையாளத் திரைப்படம் எடுப்பது பற்றி அறிவிக்கப்பட்ட வேளையில், ஹாஜியையும், மாப்ளா கிளர்ச்சியையும் போற்றிப் புகழ்வதற்கான முயற்சிகளை எதிர்க்கின்ற வகையிலும், மாப்ளா கிளர்ச்சியின் ‘ஹிந்து விரோத’ அம்சங்களை அம்பலப்படுத்துகின்ற வகையிலும் ஓராண்டு காலத்திற்கு தாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக வலதுசாரிக் குழுக்கள் அறிவித்தன.
அதே போன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 1921 மாப்ளா கிளர்ச்சி குறித்து கேரளாவில் உள்ள திரூர் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.
ஹிந்து ஐக்கிய வேதி (கேரளாவைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற அமைப்பு) உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் 2021 ஆகஸ்ட் மாதத்தில் மலபார் கிளர்ச்சியின் நோக்கம் ‘இஸ்லாமிய அரசை’ நிறுவுவதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டி அந்தக் கிளர்ச்சியின் தலைவர்களாக இருந்த வரியங்குன்னத்து குஞ்சகம்மது ஹாஜி, அலி முஸ்லியார் ஆகியோர் தியாகிகள் அகராதியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தின. அதற்குப் பிறகு தியாகிகளின் அகராதி ஐந்தாம் தொகுதியை மத்திய கலாச்சார அமைச்சகம் திரும்பப் பெற்றுக் கொண்டது. வரியங்குன்னத்து ஹாஜியை ‘கேரளத் தலிபான்களின் முதல் தலைவர்’ என்றும், 1921ஆம் ஆண்டு காலனித்துவத்திற்கு எதிராக நடைபெற்ற மாப்ளா கிளர்ச்சியை ‘மாப்ளா படுகொலைகள்’ என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவரான A.P.அப்துல்லாக்குட்டி குறிப்பிட்டுப் பேசினார். அவரைப் போலவே ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க சிந்தனையாளரான ராம் மாதவ் கேரளாவில் இருந்த காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை ‘தலிபான் மனநிலையின் முதல் வெளிப்பாடு’ என்று சித்தரித்தார். மாப்ளா கிளர்ச்சி ஆயிரக்கணக்கான ஹிந்துக்களைப் படுகொலை செய்த ஜிஹாத்திற்கான பிரச்சாரமாகவே இருந்தது என்றும். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் ஹிந்துப் பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் ஹிந்துக் கோவில்களையும் இழிவுபடுத்தினர் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான கும்மனம் ராஜசேகரன் குறிப்பிட்டார்.
அதேவேளையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாப்ளா கிளர்ச்சிகள் முஸ்லீம்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவித்தன என்று விமர்சித்திருந்த முஸ்லீம் சீர்திருத்தவாதியான மக்தி தங்கல் (1847-1912) என்பவர் முன்வைத்த வாதத்தின் அடிப்படையில் இதுவரையில் வெளியிடப்படாத முகம்மது நியாஸ் அஷ்ரஃப் எழுதிய தில்லி பல்கலைக்கழகத்தின் ‘இஸ்லாமிய நவீனத்துவம் மற்றும் காலனித்துவ கேரளாவில் சீர்திருத்தம்: மக்தி தனாவை வாசித்தல்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கிளர்ச்சிகள் முஸ்லீம்களை நூறாண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளின என்று 1921 மாப்ளா கிளர்ச்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது கேரளாவில் உள்ள சன்னி முஸ்லீம் அறிஞர்களின் அமைப்பான சமஸ்தா கேரளா ஜம்-அய்யத்துல் உலேமா கண்டித்திருந்தது.
வரலாறு – இன்றைய அரசியலின் பணயக் கைதியாக…
சுதந்திரப் போராட்டத்தில் மாப்ளாக்களின் வீரதீர முயற்சிகளுக்கு இருந்த பங்கைக் கருத்தில் கொள்வதில் இருந்து வருகின்ற இத்தகைய தயக்கங்களும், குறிப்பிட்ட முஸ்லீம் சமூகத்தை மிக மோசமானவர்களாகக் காட்டும் விமர்சன அறிக்கைகளும், எழுத்துகளும் இந்தியர்களைப் பெரும்பாலும் மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரிப்பதில் ஈடுபட்டு வந்த காலனித்துவவாதிகளின் நோக்கத்திற்குச் சேவை செய்வதாகவே இருக்கின்றன. தியாகிகள், அவர்களின் தியாகத்தின் தன்மை, அவர்களுடைய மத அடையாளத்தின் மீதான அவநம்பிக்கை குறித்ததாக நாம் இப்போது காணுகின்ற இதுபோன்ற விவாதங்கள் வரலாற்றை அரசியலாக்கும் முயற்சியாக இல்லாமல் தங்களுடைய திட்டம் சார்ந்த அரசியலின் பணயக்கைதியாக வரலாற்றை மாற்றுவதற்கான முயற்சியாக மட்டுமே உள்ளன.
இருந்த போதிலும் 2021இல் 1921 மாப்ளா கிளர்ச்சியின் நூற்றாண்டு விழாவையடுத்து இப்போது எழுந்துள்ள சர்ச்சைகள் வரலாற்றாசிரியர்கள், சமூக அறிவியலாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் மாப்ளா சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், அந்த இயக்கத்தின் பன்முகத் தன்மை குறித்த ஆய்வை மேற்கொண்டு அதுகுறித்த தகவல்களை பொதுக்களத்திற்கு அவர்கள் மூலம் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. ஒருசில நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக 1921 எழுச்சி நிகழ்ந்தது என்று ஆய்வு மேற்கொள்வதற்குப் பதிலாக, 1921இல் நடந்த அந்த கிளர்ச்சியின் முக்கிய நோக்கம் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கிலாபத் இயக்கங்கள் சார்ந்த சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாது பல்வகையான வெளிப்பாடுகளுடன் இருந்த ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றின் பல அடுக்கு கதைகளுடன் இருந்ததை வளர்ந்து வருகின்ற கல்வியாளர்களும், அறிவுஜீவிகளும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த இயலும். இதுபோன்ற பல அடுக்கு கதைகள் மற்றும் இழைகள் வரலாற்றுச் சிந்தனை குறித்த பல்வேறு பள்ளிகளின் காலனித்துவத்திற்குப் பிந்தைய ஆய்வுகளில் இருப்பதை நம்மால் காண முடிகிறது. கான்ராட் உட், ராபர்ட் ஹார்ட்கிரேவ், டி.என்.தனகரே, ரணாஜித் குஹா, கே.என்.பணிக்கர், கங்காதர மேனன், எம்.டி.அன்சாரி போன்றவர்களின் ஆய்வுகள் மாப்ளா எழுச்சியை காலனித்துவ எதிர்ப்பு குறித்த எழுச்சியாகவே கருதுகின்றன. பரவலான வகுப்புவாத கலவரமாக 1921 கிளர்ச்சியைச் சித்தரிக்கின்ற மிகவும் எளிமையான கதைகளுக்கு சவால் விடும் வகையிலேயே அவர்களுடைய ஆய்வுகள் இருக்கின்றன.
1921 மாப்ளா எழுச்சி
1849 மற்றும் 1921க்கு இடையில் நடந்தேறிய முப்பத்தைந்து மாப்ளா கிளர்ச்சிகளுக்கு தெற்கு மலபாரில் வறுமையில் வாடிய விவசாயிகளின் பரிதாப நிலைமையே நேரடியான காரணமாக அமைந்திருந்தது. 1884இல் மலபார் ஆட்சியராக இருந்த வில்லியம் லோகன், 1913இல் மலபாரில் குடியேற்ற அதிகாரியாக இருந்த சி.ஏ.இன்னெஸ் ஆகியோர் விவசாயிகளுடைய பிரச்சனைகள் அதிகரித்து வருவதை நன்குணர்ந்திருந்தனர். எனவே அவர்கள் நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர். இருந்தபோதிலும் விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்தும் வகையில் எதுவும் செய்யப்படவில்லை. ஆகையால் 1919ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மலபாரில் தோன்றிய குழப்பங்கள் விவசாயம் தொடர்பான தகராறுகளால் தூண்டப்பட்டவை என்று கூறுவது எந்தவிதத்திலும் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கப் போவதில்லை என்று 1919 பிப்ரவரி 13 அன்று தி ஹிந்து பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1921-22இல் நடைபெற்ற கிளர்ச்சியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. சட்டமன்ற விவாதங்கள், இந்திய அலுவலகப் பதிவுகள், தனியார் ஆவணங்கள் போன்ற அக்காலத்திய காலனித்துவப் பதிவுகளில் ஜன்மிகள் அல்லது நில உரிமையாளர்களுக்கு எதிராக குத்தகை விவசாயிகளிடம் ஏற்பட்ட விவசாயம் சார்ந்த பிரச்சனைகளால்தான் குழப்பம் உருவானது என்பது தயக்கத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. கிலாபத் பிரச்சாரமே அந்தக் ‘கலகத்திற்கு’ முக்கியமான காரணமாக இருந்தது என்று அன்றைய காலகட்டத்தில் நம்பிய இந்தியாவின் வைஸ்ராய் ரீடிங் பிரபுகூட விவசாயிகளிடம் இருந்த அதிருப்தியே அதற்கான ‘முற்சார்புக் காரணி’ என்று கருதினார். அவர் மெட்ராஸ் ஆளுநர் வில்லிங்டன் பிரபுவிற்கு எழுதிய கடிதத்தில் ‘மலபாரின் எதிர்கால அமைதியைக் கருத்தில் கொண்டு குத்தகை சட்ட சீர்திருத்தம் குறித்து ஆராய்வது விரும்பத்தக்கதாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்திய அலுவலகப் பதிவுகளில் பராமரிக்கப்பட்டு வருகின்ற வில்லிங்டனுக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் ‘மலபாரைப் பொறுத்தவரை நாம் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், மாப்ளாக்களை அமைதியான, விசுவாசமுள்ள குடிமக்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மேற்கொள்ளப்படும் விவசாய சீர்திருத்தம் அந்த வழியில் மிகுந்த செல்வாக்கு கொண்டிருக்கும்’ என்று ரீடிங் குறிப்பிட்டிருந்தார்.
அந்த எழுச்சி விவசாயம் சார்ந்ததாக இல்லாதிருந்தால், மலபாரின் வளமான பகுதிகளைச் சேர்ந்த மாப்ளாக்கள் ஒதுங்கியிருந்திருக்கவோ அல்லது அரசாங்கத்தின் பக்கம் இருந்திருக்கவோ மாட்டார்கள் என்ற வாதம் நியாயமானதாகவே இருந்திருக்கும். கே.என்.பணிக்கர் ‘இறைவன் மற்றும் அரசுக்கு எதிராக’ (Against Lord and State) என்ற தன்னுடைய புத்தகத்தில் ‘அரசு, நில உரிமையாளர்கள் என்று இரட்டைச் சுமைகளால் மலபாரில் இருந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு கடுமையான வறுமையில் வேலை செய்து வாழ்ந்து வந்தனர்’ என்று எழுதியுள்ளார்.
அந்த எழுச்சிக்கான அடிப்படைக் காரணியாக விவசாயம் சார்ந்த பிரச்சனைகளே இருந்த போதிலும், அதை வேறு பிற காரணங்களும் சேர்ந்தே உருவாக்கியிருந்தன. இஸ்லாத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதான உணர்வு, மக்களின் உணர்வை உடனடியாகக் கிளறி விடக்கூடிய செய்தித்தாள் அறிக்கைகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஏற்படுத்திய ஆத்திரமூட்டும் செயல்பாடுகள் அனைத்தும் அந்த எழுச்சிக்கான காரணிகளாக இருந்த போதிலும், அதற்கான வினையூக்கியாக கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கங்கள் இருந்தன என்று ‘1921-22 மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்’ என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர் கான்ராட் வுட் எழுதிய பிஎச்டி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளர்ச்சியின் முந்தைய நிகழ்வுகளைப் போலவே 1921-22 மாப்ளா கிளர்ச்சியும் வெறுமனே மதவெறி சார்ந்த வன்முறையின் வெளிப்பாடாகவே நிகழ்ந்தது என்று காட்டுவதற்கு காலனித்துவ உரையாடல்கள், காலனித்துவத்திற்கு பிந்தைய மேற்கத்திய ஆய்வுகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டிஷ் அரசை நிலைகுலைவிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட கிலாபத்-காங்கிரஸ் கிளர்ச்சி முக்கியமாக ஹிந்து விரோத எழுச்சியாக இருந்ததாக 1921 ஆகஸ்ட் 22 மற்றும் 30 நாளிட்ட மெட்ராஸ் மெயில் பத்திரிகைச் செய்திகளிலும், மெட்ராஸ் ஆளுநர் வில்லிங்டன், இந்தியா மற்றும் பர்மா அரசு செயலாளர் எட்வின் மான்டாகு ஆகியோருக்கு இடையில் நடந்த கடிதப் பரிமாற்றங்களிலும் காணப்படுகின்றது. ‘தி முஸ்லெம் வேர்ல்ட்’ பத்திரிகையின் 1923 அக்டோபர் பதிப்பில் வெளியிடப்பட்ட ‘1921 மாப்ளா கிளர்ச்சி’ என்ற கட்டுரையில் விவசாயிகளிடம் ஏற்பட்ட அதிருப்தியால் கிளர்ச்சி ஏற்பட்டது என்பது ‘கட்டுக்கதை’ என்று நிராகரிக்கப்பட்டதாக ஜான் ஜே.பன்னிங்கா கூறியுள்ளார். ஆனால் அந்த மக்கள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு பாதையாக மட்டுமே மதம் இருந்தது என்பதை ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
அந்த எழுச்சி கிலாபத்-ஒத்துழையாமை இயக்கத்தின் பிரச்சார எல்லைக்குள் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது. அது இயல்பாகவே போராட்டத்திற்குள் ஈர்க்கப்பட்டிருந்த மாப்ளாக்களின் மத உணர்வுகளைத் தூண்டி விட்டது. ராபர்ட் எல். ஹார்ட்கிரேவ் ஜூனியர் ‘1921 மாப்ளா கிளர்ச்சி: மலபாரில் விவசாயிகள் கிளர்ச்சி’ என்ற தனது புத்தகத்தில் ‘மாஞ்சேரியில் 1920 ஏப்ரலில் நடந்த மாநாட்டிற்குப் பிறகு கிலாபத் இயக்கம் நோக்கி மாப்ளாக்கள் ஈர்க்கப்பட்டனர்; மலபார் பகுதியில் கிலாஃபத் கமிட்டி ஜூன் மாதத்திற்குள்ளாக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது’ என்று குறிப்பிடுகிறார். அடுத்த ஆண்டுக்குள்ளாக முஸ்லீம், ஹிந்து தலைவர்களின் கீழ் கிட்டத்தட்ட இருநூறு கமிட்டிகள் செயல்படத் துவங்கின. செப்டம்பரில் மகாத்மா காந்தியுடன் மலபாரில் பிரச்சார சுற்றுப்பயணத்தில் சௌகத் அலி இறங்கியதாக பன்னிங்கா குறிப்பிடுகிறார்.
கிலாபத் இயக்கத்தை ‘ஹிந்து, முஸ்லீம்களை ஒன்றிணைக்க நூறு ஆண்டுகளில் கிடைத்திராத வாய்ப்பு’ என்றே காந்தி கருதினார். கிலாபத் குறித்து 1920 செப்டம்பர் 24 அன்று நடந்த ஹிந்து, முஸ்லீம்களின் கூட்டு மாநாட்டில் கலந்து கொண்டு அந்தக் கூட்டத்திற்கு காந்தி தலைமை தாங்கினார். மலபாரில் இருந்த கிலாபத் பிரச்சனைகள், விவசாயிகள் அதிருப்தி, பொருளாதாரப் பிரச்சனைகள் ஆகியவற்றைத் தீர்க்க ஒத்துழையாமையை மேற்கொள்ள வேண்டும் என்று காந்தி தனது வாதங்களை முன்வைத்தார். அந்தச் சந்திப்பின் போது மதரீதியான பிரச்சனைகளுடன் ஹிந்து ‘உயர் சாதி’ நிலப்பிரபுக்கள் தன்னிச்சையாக ஏற்படுத்திய சுமைகள், அடக்குமுறை அரசாங்கம் அதிகரித்த நில வரி போன்றவையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
காங்கிரஸ்-கிலாபத் தலைமை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவது தங்களுடைய ஆன்மீக, தேசிய கடமை என்று இரண்டு பொதுக் கூட்டங்களில் அறிவித்தனர். அது இயக்கத்தில் பங்கேற்குமாறு மாப்ளாக்களை ஊக்குவித்தது என்று ஆர்.ஹெச்.ஹிட்ச்காக் எழுதி 1925ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘1921 மலபார் கிளர்ச்சி வரலாறு’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எழுச்சியில் அவருக்கிருந்த பங்கிற்காக கிலாபத் இயக்கத்தின் முக்கிய தலைவரான எம்.பி.நாராயண மேனன் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். ‘பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவடையும் தறுவாயில் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் படைகள் எதுவுமில்லை. மாப்ளாக்கள் ஒற்றுமையாக இருந்தால், தற்போதைய அரசாங்கத்தை எளிதாகக் கவிழ்த்துவிட்டு கிலாபத் ஆட்சியை நிறுவ முடியும். கிலாபத் இயக்கத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்ய அனைவரும் தயாராக இருக்க வேண்டும்’ என்று ஒரு கூட்டத்தில் அவர் பேசியதாக 1922 ஜூலை 28 அன்று மெட்ராஸ் மெயிலில் செய்தி வெளியாகி இருந்தது.
கிலாபத் அமைப்பும் ஒத்துழையாமை இயக்கமும் 1920ஆம் ஆண்டின் இறுதியில் மலபாரில் பரவலாகப் பரவி முஸ்லீம்களை அதிக அளவில் ஈர்த்தன. இந்தியக் குடியரசை நிறுவுவது என்ற தீர்மானத்தை கோடைகாலத்தின் மத்தியில் கராச்சியில் நடந்த அகில இந்திய கிலாபத் மாநாடு முன்மொழிந்தது. அந்த தீர்மானம் பிரிட்டிஷ் அரசின் முடிவு நெருங்கி விட்டது என்ற நம்பிக்கையை மாப்ளாக்களிடம் உருவாக்கியதாக 1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சி.கோபாலன் நாயர் எழுதிய ‘1921 மாப்ளா கிளர்ச்சி’ என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கடுமையான கோபத்திற்கு ஆளாகியிருந்த அலி முஸ்லியார் (1861-1922) உள்ளிட்ட கிலாபத் தலைவர்கள் சிலரை 1921 ஆகஸ்ட் 20 அன்று திரூரங்காடியில் கைது செய்ய காலனித்துவ அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியே மாப்ளா கிலாபத்துகள் பலரிடம் மாப்ளா எழுச்சி என்ற நெருப்பைத் தூண்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது என்று ஹிட்ச்காக் தெரிவித்துள்ளார். மாப்ளா குடும்பங்களுக்கு நேர்ந்த சித்திரவதை, அவமானங்கள், திரூரங்காடியில் காந்தி தொப்பி அணிந்து வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் கடுமையான தாக்குதல், கிலாபத் கொடிகளுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு, கிலாபத் தொண்டர்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் போன்றவையே எழுச்சிக்கு காரணமாக அமைந்தது என்று G.R.F.டோட்டன்ஹாம் 1922இல் வெளியிடப்பட்ட ‘1921-22 மாப்ளா கிளர்ச்சி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலம் தொடர்ந்த மோசமான காவல்துறையின் ஆத்திரமூட்டல்களுக்குப் பிறகு நடந்த திரூரங்காடி கைதுகள் கிலாபத் இயக்கத்திற்கு முழுமையாக ஆதரவளித்து வந்த எரநாடு, வள்ளுவநாடு, பொன்னானி ஆகிய தாலுகாக்களில் மாப்ளாக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டன. அதன் விளைவாக ஆங்காங்கே வன்முறைகள் நடைபெறத் தொடங்கின. கிலாபத், குத்தகை இயக்கங்களின் பரஸ்பரச் சார்பு பற்றி குறிப்பிடுகையில் ‘எரநாடு மற்றும் வள்ளுவநாடு தாலுகாவில் இருந்த பெரும்பாலான குத்தகைதாரர்கள் மாப்ளாக்களாகவே இருந்தனர். கிலாபத் இயக்கம் குத்தகைதாரர்களின் போராட்டத்திற்கு உணர்வூட்டியது’ என்று கங்காதர மேனன் 1989ஆம் ஆண்டு வெளியான ‘மலபார் புரட்சி (1921-22)’ என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய, இந்திய அதிகாரிகள், ஹிந்து ஜன்மிகள், பணம் கடன் கொடுத்தவர்கள் என்று தங்களுக்கு எதிராக தங்களை அடக்குபவர்களாக அடையாளம் கண்டு கொண்டவர்கள் மீதே மாப்ளாக்களின் கோபம் திரும்பியது. தங்களைக் காட்டிக் கொடுத்ததாக, ‘கிளர்ச்சியை’ ஒடுக்க அதிகாரிகளுக்கு உதவியதாக அவர்கள் கருதிய பொதுவாக ‘உயர் சாதி’ ஹிந்துக்கள் மீது பின்னர் அவர்களின் கோபம் திரும்பியது. இதுதவிர காவல்துறையில் இருந்த பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்களாகவே இருந்ததால், அது இயல்பாகவே ஒடுக்குமுறையால் அடக்கப்பட்ட மாப்ளாக்களை காவல்துறையில் இருந்த ஹிந்து மதத்தினருக்கு எதிராகத் திருப்பியது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த மாப்ளா விசுவாசிகளும் அவர்களுடைய இலக்காக மாறினர். 1921ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆவணங்களில் ‘ராணுவம், காவல்துறையை கலவரக்காரர்கள் தாக்கினர்; அரசு மற்றும் தனியார் சொத்துக்களை எரித்து சூறையாடினர்; மனஸ் மற்றும் கோவிலகங்களைக் (‘உயர் சாதி’ வீடுகள்) கொள்ளையடித்தனர்; வருவாய் பதிவுகளை அழித்து தகவல் தொடர்புகளைத் தடுத்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிவில் நிர்வாகத்தை அவர்கள் முழுமையாகத் தடுத்து நிறுத்தி வைத்தனர்.
1921 ஆகஸ்ட் 20இல் தொடங்கிய அந்த எழுச்சி ஆறு மாத காலத்திற்கு நீடித்தது. கிளர்ச்சி நடந்த பகுதிகளில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு மேலும் ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. தாங்களாகவே தங்களுக்கென்று தனி அரசாங்கத்தை நடத்தி, யாரும் நினைத்ததைக் காட்டிலும் கூடுதலாக அந்தக் கிளர்ச்சியின் உணர்வை மிக நீண்ட காலத்திற்கு முஸ்லீம் விவசாயிகள் மத்தியில் மாப்ளாக்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். ஆறு மாதங்களுக்கு நீடித்த ‘கலகத்தை’ கூர்க்கா படையினரின் உதவியுடனும், ராணுவ ஆட்சியை நிலைநிறுத்தியும் அரசாங்கம் ஒடுக்கியது என்று 1923ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று மெட்ராஸ் மெயில் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
வரியங்குன்னத்து குஞ்சகம்மது ஹாஜி 1922 ஜனவரி 6 அன்று பிடிபட்டு சாகடிக்கப்பட்ட போது அந்தக் கிளர்ச்சி சீர்குலைந்தது என்றும் 1922 ஆகஸ்ட் இறுதி வரை தலைவர்கள் பிடிபடாதிருந்தனர் என்றும் ஹிட்ச்காக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கான 1857ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான கிளர்ச்சியாக மாப்ளா கிளர்ச்சி அமைந்தது.
அரசு செயலாளர், வைஸ்ராய் ஆகியோருக்கு இடையிலான கடிதங்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, 1921ஆம் ஆண்டு எழுச்சியின் இறுதியில் 2,337 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்; 1,652 பேர் காயமடைந்தனர்; 45,404 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். 252 மரணதண்டனைகள் மூலம் 10000 பேர் கொல்லப்பட்டதாகவும். 50,000 பேருக்கு சிறைவாசம் தரப்பட்டதாகவும், 20,000 பேர் நாடு கடத்தப்பட்டு 10,000 பேர் காணாமல் போயினர் என்றும் அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ரோலண்ட் இ.மில்லர் 1976ஆம் ஆண்டு எழுதிய ‘கேரள மாப்ளா முஸ்லீம்கள் : இஸ்லாமிய போக்குகள் குறித்த ஆய்வு’ என்ற புத்தகத்தில் நூற்றுக்கணக்கானோர் காவல்துறை கண்காணிப்பிலும், ஆயுத மோதல்களிலும் இறந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்பட்ட மாப்ளா கைதிகளின் நிலைமை மிகக் கொடூரமானதாக இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் 18x9x7.5அடி அளவுள்ள வேகன் வண்டியில் அனுப்பப்பட்ட நூறு கைதிகளில் அறுபத்தி நான்கு கைதிகள் மூச்சுத்திணறல், கடுமையான வெப்பம், சோர்வு காரணமாக இறந்து போயினர் என்று அரசு செயலாளருக்கும் வைஸ்ராய்க்கும் இடையிலான கடிதக் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது. அதற்குப் பின்னர் 2,339 மாப்ளாக்கள் இறந்து போனதாகவும், பிரிட்டிஷ் அரசு தகவல்களிலிருந்து 1,652 பேர் காயமடைந்தவர்கள், 5,955 பேர் பிடிபட்டவர்கள் என்றும் 39,348 பேர் ராணுவம் அல்லது காவல்துறையிடம் சரணடைந்தவர்கள் என்றும் 1923ஆம் ஆண்டு சட்டமன்ற விவாதங்களின் மூலம் தெரிய வருகிறது. 1923 ஏப்ரலில் 45,404 பேர் சிறைகளில் கைதிகளாக இருந்தனர். 7,900 கிளர்ச்சியாளர்கள் அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர். அந்த 7,900 கிளர்ச்சியாளர்களும் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து மக்களிடம் உறைந்துள்ள நினைவுகளில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டே உள்ளனர்.
அந்தப் போராட்டத்தில் தங்கள் உயிரையிழந்த மாப்ளாக்களில் பெரும்பாலானோர் நன்கு அறியப்படாதவர்களாகவே இருந்தனர். ஆகவே தியாகிகளின் அகராதியின் ஐந்தாம் தொகுதியில் இருந்த மாப்ளா தியாகிகள் குறித்த சுயசரிதை உள்ளீடுகளின் முக்கியமான நோக்கம் குறைவாக அறியப்பட்ட அந்த மாப்ளா தியாகிகளை பரந்த அளவிலே இந்தியப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவே இருந்தது.
வரலாற்றுத் துறைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்
தியாகிகள் அகராதியில் 1921ஆம் ஆண்டு மாப்ளா தியாகிகளைச் சேர்ப்பது அறியப்படாத தியாகிகளின் குரலை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் முயற்சியாகவே இருந்தது. தியாகிகளின் மதம் அல்லது பிற அடையாளங்கள் மீது ஒருபோதும் கவனம் செலுத்தப்படவில்லை. தியாகிகளின் பங்களிப்புகளைக் குறிப்பிடுகின்ற சுயசரிதைக் குறிப்புகள் எந்தவொரு சித்தாந்தம் அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் அவர்களைத் தொடர்புபடுத்தாமல் அவர்களின் போராட்டத்தை மட்டுமே பதிவு செய்தன. உள்ளூர், ஒடுக்கப்பட்ட மற்றும் அறியப்படாதிருந்த தியாகிகள் ஒவ்வொருவரின் தியாகத்தையும் நிரூபித்து இந்திய பொதுமக்களுக்குச் சுட்டிக்காட்டுவதே அகராதியின் முதன்மை நோக்கமாக இருந்தது.
ஆற்றல் மிக்க உணர்வு, அரசியல், சமூக அர்த்தங்களை ‘தியாகம்’ என்ற அந்த வார்த்தை கொண்டுள்ளதாக வரலாற்றாசிரியர்களும், சமூக அறிவியலாளர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தியாகம் செய்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற உண்மையைப் புறக்கணிக்க இயலாது என்றாலும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மாப்ளாக்களை ஹீரோக்களாக அல்லது தியாகிகளாக அல்லது அவை இரண்டுமாக விவரிக்க வேண்டியது அவசியமல்லவா?
தியாகம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது தியாகி என்பவர் யார் என்ற கேள்வி எழுகிறது. சிலரைப் பொறுத்தவரை தியாகிகள் மற்றும் தியாகம் என்பது புறநிலை அனுபவ யதார்த்தங்களாக தனித்து ஆய்வு செய்யப்படக் கூடியவையாக இருக்கின்றன. மற்றவர்களுக்கோ தியாகிகள் முதன்மையாக பிற்காலச் சமூகங்களால் உருவாக்கப்பட்டவர்களாகவும், தங்கள் உயிரைத் தியாகம் செய்த சூழ்நிலைகள் மற்றும் சமூகத்தின் நினைவுகளாக அவர்கள் எவ்வாறு மாறினர் என்பதைக் கணக்கில் கொண்டு முற்றிலும் அவர்களுடைய இறப்பு குறித்த சமூக-அரசியல் சூழலைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர்.
தியாகிகள், வரலாற்றுத் துறை என்ற இரண்டும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தைக் காட்டிலும் காலனித்துவ அரசாங்கத்துடன் நெருக்கமாக நிற்கின்ற அரசியலிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருப்பதையே மாப்ளா தியாகிகள் தொடர்பான தற்போதைய சர்ச்சைகள் நமக்குக் காட்டுகின்றன. தியாகிகள், அவர்களுடைய துயரங்கள், காலனித்துவ/நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கம், விவசாயிகளின் அதிருப்தி, காவல்துறையின் மிருகத்தனம் போன்ற நிகழ்வுகள் குறித்த பதிவுகளை அழித்தொழிப்பது முழுமையாக பக்கச்சார்புடன் அந்த நிகழ்வைச் சித்தரித்துக் காட்டுவதற்கே வழிவகுத்துக் கொடுக்கும். ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டதாக இப்போது கூறப்படுகின்ற ஒற்றைக் கதை எவ்விதத்திலும் பயனற்றதாகவே இருக்கும் என்பதால் மாப்ளா எழுச்சி குறித்த பல முக்கியமான வரலாறுகள் கட்டாயமாக, அறிவார்ந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றப்படுபவையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: வயர் இணைய இதழ் 2021 செப்டம்பர் 03
தமிழில்: தா.சந்திரகுரு