திமிரு கவிதை – இரா.கலையரசி. 

திமிரு கவிதை – இரா.கலையரசி. 




அறுத்துக் கொண்டு ஓடும்
காளையின் சீற்றம்
பெண்ணுக்கு இருப்பின்
திமிரு.

“பட்பட்” பட்டாசாய்
கேள்விகளுக்கு பதில்!
பெண்ணுக்கு
“பேச்சுல திமிரு”.

சீண்டியவன் சட்டையை
இழுத்து பிடித்து
அறைந்தால்
பெண்ணுக்கு
“நடத்தையில திமிரு”.

இன்னைக்கு சமையல்
வேண்டாமென்றால்
“வெளங்கிடும்”
என்ற சொல்லின்
புது மொழி
பெண்ணுக்கு
“படிச்ச திமிரு”.

விரும்பிய பொத்தானை
ரிமோட்டில் அழுத்தினால்
பெண்ணுக்கு
“சம்பாதிக்கிற திமிரு”.

குழந்தையை
பள்ளிக்கூடத்துல
விட்டுட்டு  வரீங்களா?
பெண்ணுக்கு
“தான்” ங்கற திமிரு.

திரைப்படம் போவோமா?
என்ற கேள்விக்கு
எப்பவும்
ஊர் சுத்த வேண்டியது.
பெண்ணுக்கு
“எல்லாம் தெரியுங்”கற திமிரு..

நாடே ஆண்டாலும்
வீட்டுல
சமையல்காரி தான்
“திமிரு காட்டாதே”.

திமிரும் அறிவை
அடக்கி கொண்டு
திமிறி வர
வழி இன்றி
ஒரே அடைமொழிசொல்
” பெண்ணுக்கு “திமிரு”.

இரா.கலையரசி.