கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




அளவறிந்து_வாழ்..!
***************************
இரவு பகல் பாராமல் சுக துக்கங்களை மறந்து
பணத்திற்காக ஓடுகிறான் குடும்ப தலைவன்…….

எவ்வளவு பெற்றால் இல்லை என்ற வாரத்தையை மட்டும்
நுனி நாக்கில் வைத்திருக்கிறாள்
குடும்பத் தலைவி…….

அப்பன் சேர்த்த சொத்துக்களை இளமையிலிருந்தே
விரயத்தில் முனைப்பாகிறான் மூத்த மகன்……..

தனக்கு மூத்தவன் பார்த்துக் கொள்வான் என
அண்ணனை மிஞ்சி வலம் வருகிறான் இளைய மகன்…….

இவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும்
வாசலில் யாரோ அழைத்தது போல் எட்டிப் பார்க்கிறது
வாசலில் இப்பொழுது எழுதப்பட்டு நகரும்
“ஆசையில் வாழாதே அளவறிந்து வாழ்”
என வண்ணம் குழைப்பவனின்
தூரிகையில் சொட்டும் கடைசி சொட்டு………

வெண்புகை
******************
இருசக்கர வாகனங்களும் அவ்வப்போது வந்து செல்லும்
நான்கு சக்கர வாகனங்களும்……..
நின்று செல்லும் முச்சந்தியில்
நான்கு கால் ஊன்றப்பட்டு….
ஆலாக்கு நீரில் இரண்டு அடுக்குகளாய் வெந்து
திணறுகிறது இட்டலிகள்

மூன்று ஈடு முடிந்ததும் நீரை அளந்து ஊற்றும் வேளையில்
சாலையை அளந்து வருகிறான் கணவன்…..
வட்ட நாற்காலிகளில் தட்டேந்தி நிற்பவர்க்கு
சுடச்சுட பசியாற்றும் இவளுக்கு முட்டி மோதி தட்டி தூக்கி
சத்தமில்லாமல் மறுகி தவிக்கும் காற்றோடும் காலத்தோடும்
கலந்த தலையெழுத்தாய் கரைந்து வெளியேறுகிறது
கவலை நீரில் கொதித்தெழுந்த வெண்புகை……..

உண்மையான மழை
***************************
நான்கு கால் சௌக்கை மரங்களின் தாங்களில்
தகரங்களை தாங்கியபடி நிற்கிறது பந்தல்
குளு குளு ஏசிபாக்சின் மேல குதுகலமாய்
நிரந்தர துயில் கொள்கிறார் துக்கசாமி

முகம் மறைக்க மாலை நிரம்பியது
யாரோ ஒரு சொந்தகாரன் எடுத்து ஓரம் அடுக்கி வைக்கிறான்…
மனைவி ஒருபக்கம் கண்ணீரில்
மகன்கள் ஒருபக்கம் அடுத்தகட்ட பணிகளில்…
மருமகள் தலையிலும் காலிலும் பிடித்த வண்ணம் அழுகை…
மகள்கள் பெட்டியை பிடித்த வண்ணம் கண்ணீரில் புலம்பிடும் பழைய கதைகள்

தெரிந்தும் தெரியாமல் பெரியோர் அழுகைக்கு ஈடுகொடுத்து
தேம்பலில் அமர்ந்தழும் பேரபிள்ளைகளை என பந்தல் நிரம்பிய நிலையில்
யாரும் அறியாத ஆன்மாவாய் பந்தல் நடுவே நாற்காலி போட்டு
அனைத்தையும் பார்த்து வான் நிமிர்கிறார் துக்கசாமி

நிரந்த பிரவை ஆறுதல் செய்திட
அளவில்லாமல் கொட்டித் தீர்க்கிறது…
இந்த துக்கங்கள் தொண்டையை நனைத்தபடி உண்மையான மழை……..