தொட்டில் சீலை சிறுகதை – தெ.சக்தி ராணி
நல்வரவு கோலம் நல்லா பெருசா போடுங்க… வரவேற்பு கற்கண்டு …சந்தனம்…குங்குமம் எடுத்து வச்சாச்சா…என்ற பரபரப்பில் அனைவரையும் வரவேற்க தயாரானாள் அகல்யா…
என்ன அகல்யா…எல்லாம் சரியா பண்ணியாச்சா என்று கேட்டுக்கொண்டே உள் வந்தான் குமார்…
எல்லாம் டபுள் ஓகே குமார்…உள்ள வந்து பாரு டெக்கரேசன் எப்படி இருக்குனு…
சூப்பர் எல்லாம் அசத்தல் தான் என்றான் குமார்…
என்னோட ஐடியா எல்லாம்…சும்மாவா…பல வருடக்கனவு இது…
இதெல்லாம் சரி உன் பையன் எங்கே…
இதோ…அம்மாகிட்ட இருக்கான்.வா பார்க்கலாம்….
அடேய்…ராம்…தம்பியை தொட்டில்ல போடனும்.தொட்டில் அலங்கரிச்சாச்சா பாரு…. என சொல்லிக்கொண்டே குழந்தை அருகே சென்றாள்.
செல்லக்குட்டி…உன்னை பார்க்க யாரு வந்துருக்கா பாரு… ஓய்…வா வா மாமா கிட்ட…உனக்கு என்னலாம் வாங்கி வந்துருக்கேன் பாரு
ஆமா…அகல்யா என்ன பெயர் வைக்க முடிவு பண்ணிருக்க…
அதா…அந்தோ திருச்சீலை அழகா வடிவமைச்சிருக்குல…அதுக்குள்ள தான் என் பையன் பேரு இருக்கு… பொறுமையா இரு…நல்ல நேரம் வந்ததும் நானே சொல்றேன்.
என்ன குமார் எப்போ வந்த” என பின் முதுகில் தட்டி அழைத்தான் வினித்.
இப்போ தான் வந்தேன் டா…உன் மனைவி பரபரப்பு பார்த்தா விழா செம்ம கலை கட்டும் போல…
ஆமாடா..எல்லாம் அவ விருப்பம் தான்…
நல்ல நேரம் வந்துருச்சு…வாங்க பையன் பெயரை எல்லாருக்கும் அறிமுகப்படுத்துவோம் என்றே திரைச்சீலை விலக்க… குழந்தை பெயர் அனைவரும் முணுமுணுக்க கலர் கலரா வெடி வெடிச்சு பிரமாண்டமானது பெயர் சூட்டு விழா…
தம்பியை தொட்டில்ல போட்டு மூன்று முறை காதில் பெயர் சொல்லுங்க என்றாள் பாட்டி லட்சுமி. ம்ம்…என்றே குழந்தையை ரசித்தவாறு பெயர் சொல்ல காதருகே சென்ற போதே..
அகல்யா…அகல்யா…மணி ஆறாச்சு.இன்னுமா எழுந்திருக்கல…என்று அத்தை குரல் காதைப்பிளக்க ஐய்யோ இதெல்லாம் கனவா…போச்சு…இன்னிக்கு காலையிலேயே ஆரம்பிச்சிடுவாங்களே… இம்சை…என நினைத்துக்கொண்டே அறையிலிருந்து வெளி வந்தாள்.
குடும்பப்பொண்ணு சூரியன் வரதுக்கு முன்னாடி எழுந்திருக்க வேண்டாமா…இப்படி லேட்டா எழுந்திரிக்குற… சரி..சரி…சமையலறையில வேலையைப் பாரு. முதல்ல டீ போடு…
ம்ம்…சரி அத்தை போடுறேன் என்றே உள்ளே சென்றாள்… டீ போட்டு கொடுத்து விட்டு..
குளித்து முடித்து…காலையில் டிபன் எல்லாம் தயார் செய்து புதுச்சேலை கட்டிக்கொண்டு அத்தையிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றாள்…
என்னம்மா…என்ன விஷேசம்.
இன்னிக்கு எங்க கல்யாண நாள் அத்தை.உங்க புள்ளைட்ட சொன்னா வேண்டா…வெறுப்பா பண்ணுவார்.அதாம் எதும் கட்டாயப்படுத்தல… வருஷம் மாறிக்கிட்டே இருக்கு…ஆனா வாழ்க்கையில எந்த மாற்றமும் இல்லை..
ஒரு புள்ளி உன் வயித்துல தங்கிட்டா அதுவே எனக்கு போதும் தான்… ஆனா நம்ம குலசாமி என்ன நினைச்சிருக்கோ…நம்ம குடும்பத்தை இப்படி கஷ்டபடுத்துது…
சரி போயி சாப்பிடு.அப்புறம் ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வாங்க…
சரி அத்தை..போகணும்.
சீனித்தாயி…சீனித்தாயி…என்ன விஷேசம் காலையிலே…பலகாரம் பலமா இருக்கு போல…
மொப்பம் பிடிச்சு வந்துட்டியா…அது ஒன்னுமில்ல என் மகனுக்கும்…மருமகளுக்கும் கல்யாணநாளாம்.அதான் …
அப்படியா சேதி…கல்யாணம் முடிஞ்ச தேதிக்கு இப்போ ரெண்டு புள்ளையோட இருந்திருக்கனும்…
இவுக என்னனா இன்னும் புதுத் தம்பதியா கொண்டாடுறாக…
சும்மா இருக்க மாட்டியா நீ…அவ காதுல கேட்கப்போகுது…
நீ நல்லா உன் மருமகளுக்கு ஏத்த மாதிரிதான் பேசுற… சரி நான்…வாரேன்…
இந்தா வந்ததுக்கு…ரெண்டு பனியாரம் எடுத்துட்டு போ…
எல்லாம் கேட்டும்…கேட்காதது போல் அத்தை நாங்க கோவிலுக்கு போயிட்டு வாறோம் என்றே கிளம்பினாள்.
சரிமா பார்த்து போயிட்டு வாங்க…
கடவுளின் தரிசனமாய் உள்ளம் உருக வேண்டுகிறாள்…என் கனவு நிறைவேறும் வரம் கொடு என்றே… ஆலமும்…வேம்பும் உள்ள மரத்தில் தான் கட்டியிருந்த புதுச்சேலையைக்கிழித்து தொட்டில் கட்ட செல்லும் போது அவளது கணவனும்…என் எல்லாமும் நீ தான் என்றே அவளை அன்பால் அணைத்து இருவரும் சேர்ந்தே தொட்டில் கட்டி..இறைவனை வழிபட்டே வீடு திரும்பினர்…