கார்கவியின் கவிதைகள்
உலகின் தலைசிறந்த சொல் ‘வறுமை’
**********************************************
“ஆயிரங்களைத் தாண்டிய பட்டாசுப் புகையில்
நமத்து போகிறது
சில அப்பாக்களின் தீபாவளி,
தூரத்து குடிசையில் வானத்தையும்
பலரின் வீட்டு வெடி ஜாலத்தையும்
காண்பித்துச் செல்கிறது பல அப்பாக்களின் தீபாவளி “
” நூறு சரத்தில் எஞ்சிய ஏழு வெடிகள்
ஏழைக்கு ஒரு சரமாகிப் போகிறதெ,
நெருப்பில் வலு இல்லாமல்
தரையின்கீழே தள்ளப்படுகிறது
பல புதுவானங்கள் “
நேற்று தீபாவளி நன்றாக இருந்தது
அம்மாவின் ஏழு வகையான பலகாரங்கள்,
இன்று மணி ஏழை கடந்தது
இதுவரை எழவில்லை
அம்மாவும்
அவர்களின் இடுப்பு வலியும் ”
ஒவ்வொரு உயிரும் கூறும்
உலகின் தலைச்சிறந்த சொல் ‘வறுமை’
நட்சத்திரக் கிழவி
*********************
அவளின்
யதார்த்த நடைப் பேச்சுவாக்கில்
கிள்ளியெறியக் காத்திருக்கின்றன
வெற்றிலைக் காம்புகள்…
ஓயாமல்
வெற்றிலைக்குப் பாக்கு இடிக்கும்
அவளிடம்
கேட்ட பிறகு
வளைந்து நிமிர்ந்து செல்கின்றன
ஊர்களின் சாலைகள்…
எத்தனை பேர் வந்தாலும்
‘ஏலே நீ அவன் மகன் தான’ என
கையடக்கி வைத்துள்ள டேடா சீட்டுகளின் சொந்தகாரியிடம்
சேகரிக்கப்படுகிறது….
மின்தடையில்லாத
டேடா தொகுப்புகளின் கணினியவள்…
அந்த மூன்று நாள்
********************
விடியல் பல இருப்பினும்
இந்தவிடியல் புதுமையே
ஆறு மணிக்கு எழுந்தவள்
ஐந்துக்கே எழுகை
ஆர அமர துவைத்தவள்
விடியுமுன்னே குளியல்
இரு நாள் யதார்த்த குளியல்
கடைசிநாள் எள் எண்ணெய் கொண்ட குளியல்…
மூன்று நாள் கழிந்து
மிச்சமிருக்கின்றன
வலியும்
ஒரு ரூபாய் சியக்காயும்….