நூல் மதிப்புரை: செந்தில் ஜெகநாதன் எழுதிய ’மழைக்கண்’ – அன்பு மணிவேல்.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். விகடன் மற்றும் மின்னிதழ்களில் வெளியான கதைகளின் தொகுப்பாக “மழைக்கண்” ணைத் தந்திருக்கிறார்.சக மனிதர்களோடு இணக்கமாகும் கலையைக் கற்றுத்தந்த தன் தாய்க்கு இந்தப் படைப்பினைச் சமர்ப்பித்திருக்கிறார். நமக்கான மண்ணையும் மனிதர்களையும் எந்தவித அன்னியத்தனமும் இல்லாது மண்ணின் மொழியிலேயே அறிமுகம் செய்திருக்கிறார்.
மழைக்கண்:
இரத்தமும் சதையுமான உறவுகளும் உணர்வுகளுமாக எளிய மனிதர்களும்.. அவர்கள் சந்தித்துக் கடக்கும் அனுபவங்களும்… கடக்கவே முடியாத வலிகளும் தான் மழைக்கண் ஒன்பது கதைகள். ஓராயிரம் வலிகளோடு. ஒன்பதே ஒன்பது தான். ஆனால்… ஒரு கதை தந்துவைக்கும் அந்தக் கனத்துடனோ வலியுடனோ நெகிழ்வுடனோ பாரமாகிப் போகின்ற மனநிலையோடு..
அடுத்த கதைக்குத் தொடர்ந்து பயணிப்பதென்பது.. அத்தனை எளிதாக இல்லை. மழைக்கண், எவ்வம், காளகம் என்று தலைப்புகளே.. ஒரு வியப்பாக மலர்த்துகின்றன.
நாம் எல்லோரும் வெளியே தெரியாது உள்ளுக்குள் புதைத்தபடி மருகிக்கொண்டிருக்கும் ஏதோவொரு துயரத்தின் சாயல்.. துன்பியலின் சாயல்.. இந்தக் கதைகளினூடான பயணத்தின் போது எங்கோ ஓரிடத்தில் எட்டிப் பார்த்து நம்மோடான பழக்க தோசத்தில் நம்மைப் பார்த்து இழித்து வைத்துவிட்டுப் போவது தான்.. மழைக்கண்ணோடு நாம் இணக்கமாகிப் போவதின்
புள்ளியாகிறது.
அப்பாவை முன்னிறுத்தி இரண்டு கதைகள். அப்பா உள்ளிருக்கும் வீடென்பது எப்போதுமே சிங்கத்தின் குகைதான் எதார்த்தத்தின் நிழலில். இருவருக்கும் அன்பென்றதொன்று உள் நின்று கொன்றாலும்.. எதிரெதிரே காணுகையில் முகம் கொடுத்துப் பேசமுடியாததொரு இடைவெளிதான்.. அநேக அப்பாக்களின் திருமுகமும் மகன்களின் வெறுமை சொரிந்த முகங்களும்.
அப்பா மகனுக்கான அப்படியானதொரு முகங்கள்.. காலத்தின் போக்கில் என்றேனும் ஒரு நாள்.. ஒரு புள்ளியின் கீழ் உடைப்பெடுத்துக் கொள்வதோ… உடைத்தெறிந்து விட்டுப் போவதுமோ… அவரவரின் விமோசனங்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் எந்த வகை விமோசனத்தைத் தரிசிக்கிறோம் என்பது அவரவர் வாங்கி வந்த வரம். இப்படியானதொரு போக்கு தான் #அன்பின்_நிழல் எவ்வம்
வழக்கத்தில் இல்லாமல்… இதுவரைக்கும் பார்க்காத ஒரு முகமாகத் தரிசிக்கக் கிடைத்த அந்த ஒரு கணத்தில் தான் .. வெறுக்கவே முடியாதபடிக்கு அணுக்கமாகிப் போகிற அப்பாவை.. இனி ஒருபோதும் விட்டகல முடியாதென இறுக்கிக் கொள்ளும்படியாக உடைப்பெடுத்துக் கொள்கிறது.. அன்பின்_நிழல் வழக்கத்தை விடவும்.. இதுவரைக்கும் பார்த்துப் பார்த்துச் சலித்த முகமே விஸ்வரூபமெடுத்து மிரட்டுகிற அந்த ஒரு கணத்தில் தான்..
அணுகவே முடியாதபடிக்கு அறுந்தகன்றுபோன அப்பாவை.. இனி ஒருபோதும் ஒட்டிக்கொண்டிருக்க முடியாதென வெட்டிக் கொள்ளும்படியாகச் செய்கிறது.. எவ்வம்
திரைத்துறையை முன்னிறுத்தி இரண்டு கதைகள். எதார்த்த வாழ்வுக்கும் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்கும் இடையே ஏதொன்றிலும் காலூன்ற முடியாது தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு துணை நடிகனின் போராட்டம்.. நித்தியமானவன் அதே வாழ்வா இலட்சியமா கேள்வியின் முன்னே.. இலட்சியத்தையே திடமாகப் பற்றிக்கொண்ட ஒரு உதவி இயக்குனரின் கதை.. ஆடிசன்
முன்னே மினுக்கிப் பின்னே பல்லிளிக்கும் திரைத்துறையின் அவலப் புண்களைச் சீழ்ப்பிதுக்கிக் காட்டி.. நிதர்சனத்தைத் பேசுகின்றன இரண்டு கதைகளுமே.
குதிரைக்குக் கடிவாளமாக ஒரு கலைஞனுக்கு அவன் கொண்ட இலட்சியம் தான் கடைசிவரைக்கும் அவனை முன்னிழுத்திச் செல்கிறது. விடாது கருப்பென.. வாழ்வு அவனைத் துரத்திக்
கொண்டே இருக்கிறது. செத்தவனாக நடித்த பின்பு ஒருமுறை கேமரா முன்னே சிரித்தவாறும் நடித்து வைப்பது நடிப்பிலும் ஒரு நடிப்பாக.. நம்மைக் கடித்து வைக்கின்றன அந்த நொடிகள்.
பருவத்தே பயிர் செய்யத் தவறிப்போன இளமைக்கே யுண்டான உணர்வுகளையும் கிளர்வுகளையும்.. பருவம் தப்பி பயிர் செய்ய விளையுமொரு நாற்பதின் பாடு.. முத்தத்துக்கு பார்த்தவை கேட்டவையென்று பதுக்கி வைத்த கற்பனைகள் யாவும் ஒரு முத்தத்திற்காய்ப் பித்தனாக்கி வேடிக்கை செய்வதாக…
முத்தத்திற்கு முன்னும்.. காலங்கடந்து வாய்த்த முதல் முத்தத்தைப் போலவே.. காலங்கடந்து தான் வாய்க்குமோ அந்த முதல் முத்தத்தை யாரிடமேனும் பகிர்ந்து கொள்ளும் அனுபவமும் கூடஎன்பதாக… முத்தத்திற்குப் பின்னும்.. என… விருப்பங்கள் அத்தனையும் தொலையக் கொடுத்து வெறுமையை அள்ளிப் பூசிக் கொண்டிருக்கும் அந்த நாற்பதின் அழுத்தங்களை எல்லாம் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது..
முத்தத்துக்கு இந்த நாற்பதின் சாயலில் எத்தனையோ தெரிந்த முகங்கள் வந்து போகின்றன நம் கண்களுக்குள். பருத்திக் காடும் அதையே நம்பியிருக்கும் வீடும் மட்டும் தான் தன் மூச்சுக்காற்றென வாழும் ஒரு தாயோடு கருணையே இல்லாது வேரூன்றிக் கொண்ட தொழுநோயெனும் பெருவலி.. மழைக்கண் ணின் உக்கிரம்.
பூவும் மணமும் போல.. தாய்மையும் வலியும் எப்போதும் பிரிக்க முடியாத ஒன்றுதானே. புண்ணைக் கொத்திக் கொத்தியுண்ணும் காக்கையின் முன்னே கண்ணீரைக் கரைத்தூற்றுவது தவிர.. கையறு நிலையிலான ஒரு பசுவிற்கு வேறென்ன செய்ய இயலும்..?
செத்து செத்துப் பிழைப்பதற்கு செத்தே தொலைக்கலாம் போலான ஒரு வலியின் பற்களுக்குள் சிக்கித் தவிக்கிற கிலிப்பிடித்த ஆத்மாக்களும்.. அவர்களின் கூடவேயிருந்து அந்த வலி சமைக்கும் வினைகளையெல்லாம் மெல்லவும் முடியாது துப்பவும் முடியது அடக்கிக் கொண்டு அடைகாக்கும் அந்த வீட்டினருமாக… வலி.. வலி.. வலியென்று.. அந்த வலிக்கே வலிக்கும்படியான வலியாக … வரிக்கு வரி வலியின் ஏர்ப்பிடித்து எழுத்தோட்டியிருக்கிறார் ஆசிரியர். வாசிக்க வாசிக்க.. வலிக்கிறது நமக்கு. அந்தப் பருத்திப் புடவைக்குள் முகம்புதைத்து அழுகிற அந்தத் தாயின் வலிமுகம்… இனி நான் பருத்தி உடுத்துகையிலெல்லாம் துரத்திவரும்.
தன்னோடு இருந்து.. தன் இல்லாமைத் தீயில் வெந்து சாவதை விடவும்… எங்கோ ஓரிடத்தில் அது உயிரோடு இருப்பதே மேல் என்று தத்துக் கொடுத்த பிள்ளையின்பாலான வலியை.. தன் வைராக்கியத்தோடு புதைத்துக் கொள்ளுகிற ஒரு தாயின் இயலாமை… ஆற்றாமை.. போதாமை.. நெருநல்_உளனொருத்தி அந்தந்த கணத்துச் சூழலில் அவரவர் நிற்கின்ற அந்த நொடியின் மீதுதான்.. அவரவரின் நியாயங்களும் தர்மங்களும் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை இரண்டு தாய்களுக்கு இடையிலான உணர்வெழுச்சிகளையும் உள்ளப் போராட்டங்களையும் வைத்துக் களமாடியிருக்கிறார் ஆசிரியர்.
தன் அருகே இருத்தலை விடவும் பிள்ளையின் சுகமே பேரின்பம் என்பதுதானே எல்லாத் தாய்களின் தன்னியல்பும். குற்றவுணர்ச்சி. நெஞ்சை அறுக்கும் குற்றவுணர்ச்சி. மிகப்பெரிய ஒரு துரோகத்தைச் செய்துவிட்டு… தான் செய்தது துரோகம்தான் என்ற தன்னுணர்தலின் மீது எழுந்து நின்று ஆட்டுவித்துப் பார்க்குமொரு வலியைச் சுமந்தலையும் குற்றவுணர்ச்சி.. காகளம்
ஒரு குற்றத்துக்கான ஆகப்பெரிய தண்டனை.. அதற்கான குற்றவுணர்ச்சியைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும். அன்றோடு முடிந்து போகிற தண்டனையை விடவும்.. வரித்துக் கட்டிக் கொண்ட குற்றவுணர்ச்சி ஆயுளுக்கும் மென்று தின்று.. நின்று கொல்லுமே.
இந்தக் கதையை வாசித்து.. அனுபவிக்க வேண்டும். அனுபவித்து வாசிக்க வேண்டும். உள்நோக்கி நம்மை இழுத்துச் செல்லும் இதன் இழுவையிலிருந்து மீளுவது சுலபமில்லை.
எல்லாவற்றிலும் இருந்தும் மீளவேண்டியதும் இல்லை.
சக உயிர்களின் மீதான அன்பு மட்டுமே வாழ்வின் இருளைக் கிழித்து வெளிச்சம் நீட்டக் கூடியது. வாழ்தலின் ஒவ்வொரு நொடியையும் உயிர்த்திருக்கச் செய்வதும் அதுதான். வளர்ப்புப்
பிராணிகளிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கும் எவருக்கும் அப்படியானதொரு அன்பில் கட்டுண்டு கிடப்பவர்களெல்லாம் பைத்தியமாகத் தான் தெரிவார்கள். அன்பென்பதே.. ஒன்றின் மீது பைத்தியமாக இருப்பது தானே. அப்படியானதொரு அன்பினால் ஆட்கொள்ளப்படுவது ஆகப்பெரிய வரமல்லவா. ஒரு வாயில்லா ஜீவனின் அன்பைக் கூட ருசிக்கக் கிடைக்காத வாழ்க்கை.. என்ன வாழ்க்கை யென்று நங்கென்று கொட்டிச் சொல்கிறது..
நேசன் தன் வாழ்க்கைப் பாதையெங்குமாய் தான் முட்டிக்கொள்ள நேர்ந்த உண்மைகளையும்.. அதுசார்ந்த வலிகளையும் யாதொரு வார்த்தை வித்தகத்தையும் புகுத்தி அதை அவமதிக்கச் செய்யாது.. உள்ளது உள்ளபடியே உரைத்திருக்கும் அந்த உண்மைத் தன்மையில் தான்.. கதையெங்குமாய் நின்றாடுகிறார் ஆசிரியர். அதில் தான் அவர் வென்றும் வைக்கிறார். அந்த உண்மைதான்.. வலி என்ற சொல்லை ஒரு சொல்லாகக் கடக்கச் செய்யாது உண்மையாலுமே வலித்து வைக்கச் செய்கிறது.
வாசித்தலின் போது இரண்டொரு முறைக்கும் மேலான வாசித்தலை அடம்பிடித்துக் கேட்டுவாங்கிக் கொள்வதான வரிகளை ஆங்காங்கே நிறுத்தியிருப்பதில்.. அங்கேயொரு அடிக்கோடும் கூடவே ஒரு கைகுலுக்கலையும் ஒரு அணைப்பையும் நாமாகவே அந்த இடத்தில் நட்டுவைத்து விட்டுப் போவதாக.. இந்த மழைக்கண்.. ஆசிரியரின் மொழிக்கண். அடுத்தடுத்து உங்கள் கண்களுக்குள் விழுத்து வைக்கக் காத்திருக்கின்றன இந்த வாசிப்பு மனங்கள். நிறைய வாழ்த்துகள்..ஆசிரியருக்கு.
நூல்: மழைக்கண்
ஆசிரியர்: செந்தில் ஜெகன்நாதன்
வெளியீடு: வம்சி பதிப்பகம்
பக்கம்: 144
விலை: 150