துளிர்த்த அன்றே உதிரும் இலைகள் சிறுகதை – சுதா
டோலுவும் போலுவும் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். டோலு ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். போலு மூன்று வயதுக் குழந்தை.
எப்போதும் போல இருவரும் விளையாடினாலும் மணி 8 ஆகிறது. இன்னும் அம்மா சாப்பிட கூப்பிடல குளிக்கவும் வரச் சொல்லல. ஆனா இன்னைக்கு ஸ்கூல் லீவு இல்லை. என்று நினைக்கும் போதே நேற்று ஹாஸ்பிடல் சென்றதுதான் டோலுவுக்கு நினைவுக்கு வந்தது.
‘எப்போதும் போகும் ஹாஸ்பிடல் போல அது இல்லை. ஊசி இல்லை மருந்து நெடி இல்லை விளையாட நிறைய பொருள்கள் இருந்தது. அங்கு உடம்பு சரி இல்லை என்றால் படுக்க வைக்க பெட் எதுவும் இல்லை. ஹாஸ்பிடல் பயமில்லை. டாக்டர் ஃபிரண்டு போல பேசினார்.
ஆனா என்னோட அம்மா எதுக்கு அழுதாங்கன்னு தெரியல. நான் கூட முதல்ல அம்மாவுக்கு தான் ஏதோ பிரச்சனைனு நினைச்சேன். ஆனா அந்த டாக்டர் என்கிட்ட நிறைய பேசினார். என்னோட பெயர் போட்டுத் தான் டெஸ்ட் எழுதிக் கொடுத்தார். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே நான் நல்லா தானே இருக்கேன். எனக்கு எதுக்கு டெஸ்ட்? ஒருவேளை அம்மா என்ன டெஸ்டுக்கு கூட்டிட்டு போக போறாங்களோ அதனால தான் ஸ்கூல் போகலையா அப்படித்தான் இருக்கும்……’ என்று நினைக்கும் பொழுது, ‘டோலு போலு சாப்பிட வாங்க’ டைனிங் ரூமில் இருந்து குரல் கேட்டது.
அந்தக் குரலுக்கு டைலா தான்சொந்தக்காரி டோலு போலு வின் அம்மா. டோலுவும் போலுவும் டைனிங் டேபிளில் உட்கார்ந்தார்கள். டோலுக்கு இரண்டு இட்லி வைத்துவிட்டு போலுவுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார். ‘அம்மா ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு அனுப்பல?’ என்று டோலு கேட்க, ‘இன்னைக்கு நாம் ஹாஸ்பிடல் போறோம் பா!’ என்று டைலா சொன்னாள். ‘நான் நல்லாத்தானே இருக்கேன்.. அதோட இன்னைக்கு ஸ்கூல்ல பிஇடி இருக்கு. இன்னைக்கு கிளாடா மேம் கிளாஸ் ரெண்டு இருக்கு. கண்டிப்பா ஒரு கிளாஸ்ல கதை சொல்லுவாங்க நான் ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று சிணுங்கியபடி இன்னுமொரு இட்லியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். இனி அந்தப் பள்ளிக்கு அவன் போகப் போவதில்லை என்பது டைலாக்கு மட்டும்தான் தெரியும்.
‘சரி, சரி சீக்கிரம் சாப்பிடு டோலு, நாம கிளம்பலாம்’ என்று பரபரப்பாய் அவளும் இரண்டு இட்லியை வைத்து வாயில் போட்டுக்கொண்டு போலுவை தன் தாயிடம் விட்டுவிட்டு பேருந்து நிலையம் வந்தார்கள். ‘எப்படிமா பஸ்சுக்கு ஸ்டாண்ட் போடுவாங்க?’ என்று டோலு கேட்க, ‘பஸ்க்கு ஸ்டாண்ட் கிடையாது. நாலு பக்கமும் டயர் இருக்குல்ல அதுவே நின்று கொள்ளும்’ என்றாள் டைலா.
“‘பூக்கார பாட்டிக்கு பூக்கட்ட யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் அம்மா?”
“அவங்க அம்மா சொல்லிக் கொடுத்து இருப்பாங்க டோலு பேசாம வா..!” என்று சற்று கோபத்தோடு சொன்னாள் டைலா.
“நாம போக வேண்டிய பஸ் வந்துடுச்சு வா..”என்று கை பிடித்து கூட்டிச் சென்றாள் – இல்லை இழுத்துச் சென்றாள்..அமைதியாய் இருந்த டோலு மீண்டும் ஆரம்பித்தான்.
“அம்மா டிக்கெட் வாங்கலன்னா என்ன பண்ணுவாங்க?”
“ஃபைன் போடுவாங்க டோலு”
“ஓ..! அம்மா நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லவா?”
டைலா கொஞ்சம் கோபமாக தான் திரும்பிப் பார்த்தாள்.
“அம்மா ஸ்கூல்ல யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. எனக்கு பிரண்ட்ஸ் இல்ல. டீச்சர்ஸ் என்கூட பேசவே மாட்டேங்கிறாங்க. ரொம்ப கோவப்படுறாங்க நீங்களும் அப்பப்ப அவங்கள மாதிரி ஆயிட்டீங்க” என்றான்.
“இப்படி படபடவென பேசிக்கிட்டே இருந்தா யாருக்கும் உன்னை பிடிக்காது டோலு . கொஞ்சம் அமைதியாய் இரு” என்று கடிந்து கொண்டாள் டைலா.
“பேசவே கூடாதாம்மா…தெரியலன்னா கேட்கவே கூடாதா?” என்றதும் டைலா ஒரு முறை முறைத்தாள். டோலு வாய் மேல் கையை வைத்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்தான். டோலு படிப்பில் மிகச் சுட்டி அதுபோலவே சேட்டையிலும்.
டோலுவும் டைலாவும் இறங்கி ஹாஸ்பிடலுக்குச் சென்றனர். அவனுக்கு இது புது அனுபவம்.அங்கேயே புதுசு புதுசா மிஷின்கள் இருந்துச்சு. அதுல படுக்கிற மாதிரி ஒரு மிஷின் அதுக்குள்ள ஒரு பாட்டி படுத்தாங்க. அந்த மெஷின் உள்ளே இழுத்துக் கொண்டு போன பிறகு கொஞ்ச நேரத்தில் வெளியே கொண்டு வந்து விட்டுவிட்டது.
டோலுக்கு பயமில்லை ஆச்சரியம், ஆர்வம் அதிகமானது. தானும் அந்த மிஷினில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று. ஆனால் டோலுவிற்கு அந்த மெஷின் தேவைப்படவில்லை. வேறு இடத்தில் படுக்க வைத்து தலை மட்டும் உள்ளே போய் வெளியே வந்தது.
“டோலு பயமா இருந்தா கண்ண மூடிக்கோ” என்று தன் அம்மா சொல்லியும் பயம் எதுவும் இல்லை. டோலு தன் தலை மெஷினுக்குள் போகும்போது கண்கள் விழித்து மேலே என்ன இருக்கிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தான்.ஏதோ இயற்கை காட்சிகள் அங்குமிங்கும் போவது போல் தோன்றியது டோலுக்கு ஜாலியாக இருந்தது.
‘ரிசல்ட் எப்போ வரும்?’ என்று கேட்டுவிட்டு டைலா அங்கிருந்த வரவேற்பறையில் அமர்ந்தாள். டோலு வழக்கம்போல விளையாடப் போய்விட்டான். வெளுத்த முகத்தோடு டைலா உட்கார்ந்திருந்தாள்.
‘உங்க பையன் கிளாஸ் ஒழுங்காக கவனிக்க மாட்டான். எப்ப பாரு பேசிக்கிட்டே இருக்கான். யாரையும் படிக்க விடமாட்றான். ஒரே விளையாட்டு கொஞ்சம் கூட சீரியஸ் இல்ல. பாடம் நடத்தும்போது கவனிக்காம கேள்வி கேட்டுட்டே இருக்கான். இவனுக்குத்தான் எல்லாம் தெரியுமா. முடியல உங்க பையன வச்சு ஒன்னும் முடியல ரொம்ப சேட்டை’. இத்தனையும் கோழி தூக்கத்தில் கண்டு கேட்டவைகள் என்று மருத்துவமனை ஊழியர் அழைத்த போதுதான் தெரிய தெரிந்துகொண்டாள்.
பணம் கட்டி ரிசல்ட் வாங்கிக்கொண்டு டோலு வை அழைத்துக்கொண்டு மருத்துவரை பார்க்க போகிறார்கள்.போகும் வழியெல்லாம் அவள் கண்ட கனவு அவள் முன்பு அசை போட்டது. ஏன் என் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் இல்லையோ என்ற வருத்தம் டைலாவிற்கு.
மனநல ஆலோசகரை பார்க்கும்போது டோலுவும் கூட இருந்தான். பள்ளியிலும் நட்பு வட்டத்திலும் டோலுவிற்கு இருக்கும் பிரச்சனையையும் அழுதுகொண்டே சொல்லும்போதுதான் டோலுவிற்கு தன் அம்மாவின் அழுகைக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.தான் இனி அந்தப் பள்ளிக்கு போகப் போவதில்லை என்றும் அப்போதுதான் டோலுக்கு புரிந்தது.
‘நான் பேசுவதும் கேள்வி கேட்பதும் அத்தனை தவறா. நான் வகுப்பில் யாரையும் அடித்து காயப்படுத்தியதில்லை. திட்டக் கூட மாட்டேன்.நான் நண்பர்களை தான் தேடினேன். வேறு என்ன தவறு என்பதை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை’. டோலு வின் மனம் இப்படித்தான் அங்கலாய்த்தது.
டைலாவிடம் ஏதேதோ வழிமுறைகள் மருத்துவர் சொல்ல இருவரும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றார்கள். நிறுத்தத்தில் பிச்சை கேட்கும் பெரியவர் அவரை கண்டுகொள்ளாத ஐடி ஊழியர். வெயிலில் சுருண்டு படுத்திருக்கும் பாட்டி.இப்படி எதைப் பார்த்தும் டோலு கேள்வி எதுவும் கேட்கவில்லை. பஸ்ஸில் ஏறிய பிறகும் கேள்வி ஏதும் கேட்கவில்லை. டைலாவின் கேள்விக்கு ஆம் இல்லை என்ற பதில் மட்டுமே போதுமானதாய் இருந்தது.’கேள்வி கேட்பது தவறு. சொல்வதைக் கேட்டுக் கொள்வது மட்டுமே சரி’ என்று நினைத்துக்கொண்டான் டோலு. ஆனால் இந்த மௌனம் டைலாவை கலக்கம் அடையச் செய்தது. பேருந்தின் சன்னல் வழி இன்று துளிர்த்த இலைகள் உதிர்ந்தது. கண்டும் காணாது டோலுவும்.
– சுதா