Umamohan's poem உமா மோகனின் கவிதை

உமா மோகனின் கவிதை




சின்னதாக நிலவைப் பிய்த்துக் கொள்ள ஒரு கை நீண்டது
அதைத் தட்டிவிட்ட இன்னொரு கை
தொடாதே என் உடைமை என்றது

நிலவுக்கு நடந்த அசம்பாவிதம் கண்டு
தலைதெறிக்க ஓடி ஒளியத் தொடங்கின விண்மீன்கள்
மேகத் திரளுக்குள் வசதியாக நகர்ந்து
அமர்ந்து கொண்ட கதிரவன்
என் வெம்மையை வைத்துக்கொண்டே
இவன்களிடம் சமாளிக்க முடியலையே
இந்த பூமி பாவம் என்றிட
இடி இடியெனச் சிரித்தது இடி
கண்ணீர் சிந்தி பூமிக்கு ஆறுதல் சொன்னது மழை

அண்டசராசரத்தையும் எனது எனது
எனக்கு மட்டுமானது
நானே உயரம்
என்று அகப்பட்டதை கைக்கொண்டு
அடுத்தவரைப் பள்ளத்தில் தள்ளியபடி
சாதி சாத்தான்
சமயப்பிசாசு
கூட்டணி வருகிறது
ஓடுங்க
அது நம்மை நோக்கிதான் வருது

நிற்க
திரும்பி
எதிர்த்து நிற்க
கைவந்தது
சமமே யாவரும் சரிசமமே
மந்திரம்
உரத்துச் சொன்னால்
ஒதுங்கும் உருவங்களைக் கண்டுகொள்