துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலரின் மணம் வீசும் சிறுகதைகள் – சரிதா ஜோ
துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் சிறுகதை நூல்
உதயசங்கர்
வெளியீடு – நூல்வனம்
விலை – ரூ. 200/
கடவுளின் கதைகள் கடவுளின் காதுகள். கதையில் சுப்பு என்ற கதாபாத்திரம் மிக துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுப்பு சிறுவயதிலிருந்தே துருதுருவென்று இருக்கும் பெண். தன் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களுக்கும் தன் வீட்டில் இருப்பவர்களுக்கும் கதை கூறுபவள். ஊரே மெச்சும் பெண்ணாகவும் ஒரு துள்ளல் மிகுந்த பெண்ணாகவும் இருக்கும் சுப்புவிற்கு சொந்தத்தில் திருமணம் செய்து வைக்கிறார்கள். சுப்புவின் கணவருக்கோ சத்தம் போட்டு பேசினாலே பிடிக்காது சுப்பு எந்நேரமும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சளசளன்னு ஓலைப் பாயில் நாய் மோண்டமாதிரி பேசறது பிடிக்கலை என்று சொல்லுவார்.
சுப்பு சிறுவயதிலிருந்தே தான் வளர்த்து வந்த கிளியை திருமணத்திற்குப் பிறகு தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். கிளியோடு தான் அவளுடைய உரையாடல்.. கணவனின் வேலையோ மில்லில் ஷிப்ட் வேலை. இரவு வேலை என்றால் காலையிலிருந்து தூங்கிக் கொண்டிருப்பார். அப்படி ஒருநாள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது. பூனையை பார்த்த கிளி கத்த ஆரம்பித்த நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த சுப்புவின் கணவர் எழுந்து அந்தக் கிளியை தன் கைகளால் ஓங்கி அடிக்கிறார். அந்த கிளி சுவற்றில் மோதி கத்தி உயிரிழந்து விடுகிறது.
சண்டை போட்டு பிறந்தகத்துக்குப் போய் எப்படியோ சமாதானமாகி கணவனோடு வாழ்கிறாள் சுப்பு. குழந்தைகள் பிறக்கிறார்கள் ஆரம்பத்தில் குழந்தைகள் சுப்புவின் பேச்சைக் காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். பள்ளி சென்று சற்று வளர்ந்த பின்பு அவர்களும் சுப்புவின் பேச்சைக் காதில் வாங்குவதில்லை.
பெரியவர்களாகி விட்ட குழந்தைகள் திருமணம் முடிக்கிறார்கள். அப்பாவின் மரணத்துக்குப் பின் தங்கை வீட்டில் இருக்கும் அம்மாவிடம் ஏதோ வித்தியாசம் தெரிவதாக தங்கை அழைக்கிறாள்..
சுப்புவின் மகன் அம்மாவைத் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறான். முதலில் சாதாரணமாகத் தெரிந்த அம்மா நாட்கள் செல்ல செல்ல எந்நேரமும் பூஜை அறையில் இருந்து கொண்டிருக்கிறாள். ஒருநாள் இரவில் சுப்பு சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள். அந்த நேரம் அங்கு வந்த சுப்புவின் மகன் என்னம்மா யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் இந்த நேரத்தில் என்று கேட்க. சாமிகிட்டத் தாண்டா பேசிட்டு இருக்கேன் என்கிறாள்.
ஏம்மா இந்நேரத்தில சாமியத் தெந்தரவு செய்யறே என்று கேட்கும் பொழுது நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை அவங்க தான் என்கிட்ட கூப்பிட்டு கூப்பிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க என்கிறாள் சுப்பு.
இந்த கதையை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை இதைவிட துல்லியமாக எப்படி எழுதிவிட முடியும் என்று. இவருடைய முந்தைய கதையான மீனாளின் நீலநிறப்பூவிலும் தனிமையில் ஒரு பெண் சமையலறை பொருட்களுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.. தனக்கு அங்கீகாரம் மறுக்கப்படும்போது வாழ்க்கை முழுவதும் தனக்கான காதுகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள் பெண்கள். இன்றும் இந்த தேடல் தொடர்கிறது. என்று முற்றுப்பெறும்?
மற்றொரு கதையான கிருஷ்ணனின் அம்மாவில் கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை எவ்வளவு ஒரு பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமாக படைத்திருக்கிறார். சிறு வயதில் தந்தையை இழந்து குடும்பச் சுமையை ஏற்று தன்னுடைய அம்மாவுக்காகவும் தங்கைக்காகவும் தம்பிக்காகவும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து மளிகை கடையிலேயே தன்னுடைய அத்தனை சுகங்களையும் வைத்து பொட்டலம் கட்டிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன் ஏன் வஞ்சிக்கப்பட்டான்? யாரால் வஞ்சிக்கப்பட்டான்?
குடும்பத்தை தன் தோளில் சுமந்து கொண்டிருக்கும் கிருஷ்ணனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க அவளுடைய அம்மா எண்ணவில்லை. கிருஷ்ணனின் தம்பிக்குத் திருமணம் நடக்கிறது. கிருஷ்ணன் தங்கைக்குத் திருமணம் நடக்கிறது. ஒவ்வொருமுறையும் கிருஷ்ணனின் அம்மாவின் குரலுக்கு ஓடோடி நிற்கும் கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்க அந்த தாய்க்கு ஏன் மனது வரவில்லை? கிருஷ்ணனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பேதியாக ஆரம்பிக்கிறது. கிருஷ்ணனின் தலைமுடி நரைத்து கன்னங்களில் குழி விழுந்து வயதான தோற்றத்தை விரைவிலேயே அடைகிறான்.
கடைசியாக ஒரு கேள்வி கிருஷ்ணனின் அம்மா ஏன் அப்படி செய்தாள்? யோசிக்க வைக்கும் கடைசி வரி. இதுதான் எழுத்தாளரின் முத்திரை. முடிவு நம் கையில் விடப்படுகிறது.
அப்பா என்றாலே பெண்குழந்தைகளுக்கு அலாதி பிரியம். பெண் குழந்தைகள் என்றால் அப்பாவுக்கு அலாதி பிரியம். அம்மாவின் பொதுப்பிம்பத்தை உடைத்தெறிந்தது கிருஷ்ணனின் அம்மா கதையென்றால். அப்பாவை உடைத்தெறிகிறது அப்பாவின் கைத்தடி என்ற கதை.
. வாழ்ந்து கெட்ட குடும்பம் ரேவதியின் குடும்பம். ரேவதியின் அப்பா தன்னுடைய இளம் வயதில் நல்ல வாழ்வு வாழ்ந்தவர். அதன் பிறகு அவர்களுடைய குடும்ப வறுமையில் வாடுகிறது. அம்மா இறந்து விடுகிறார். வீட்டில் திருமண வயதை கடந்து ரேவதியும் அவளுடைய அக்கா ஈஸ்வரியும்.இருக்கிறார்கள்.
இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஏனோ ரேவதியின் தந்தைக்கு நினைவிலேயே இருப்பதில்லை. இதற்கிடையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் ரேவதி டீக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் கட்டையனைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்.கட்டையன் அப்படி ஒன்றும் அழகில்லை. அப்படி ஒன்றும் சம்பாதிப்பவன் இல்லை. ஆனாலும் காரணமின்றி கட்டையனைத் தேர்வு செய்கிறாள் ரேவதி. இரண்டு முறை வீட்டிலிருந்து உடன்போக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பும் பொழுது ஒருமுறை தன்னுடைய தந்தையின் கைத்தடி ரேவதியின் காலில் பட்டு கீழே விழுந்த சத்தத்தில் தந்தை எழுந்து விடுகிறார். ரேவதியை அடிக்கிறார் இந்த நேரத்தில் எங்கே செல்கிறாய்? என்று கேட்டு. இரண்டாவது முறையும் இப்படியே அவளுடைய உடன்போக்கு தள்ளிப்போகிறது.
அப்பாவின் இறப்புக்குப்பின் மூன்றாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறுகிறாள் ரேவதி. ஈஸ்வரி இதை கவனித்துக் கொண்டே படுத்துக் கொண்டிருக்கிறாள்.கண்களில் நீரோடு. அப்பாவின் கைத்தடி இந்த சமூகத்தின் இழிவான சாதிக்கட்டுப்பாட்டை குறியீடாகக் காட்டப்படுகிறது. வாசிக்கும் போது மனதில் பல்வேறு சிந்தனைகளை கிளறுகிற கதை.
விசித்திர திருடர்கள் என்ற கதை விசித்திரமான கதைதான். எழுத்தாளர் ஒருவர் சர்வதேச எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள காங்கோ செல்கிறார். அங்கு மற்றொரு எழுத்தாளர் வழியாக கேட்கும் கதைதான் விசித்திரத் திருடர்கள். இந்த கதையில் ஒரு திருட்டு நடக்கிறது. திருட்டு நடப்பதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள்.
1. கவர்ச்சியான உடை மற்றும் அலங்காரம்
2. கண்ட நேரங்களில் வெளியே சுற்றுவது
3.மது சிகரெட் பிடிப்பது
4.ஆண் நண்பர்களுடன் பழகுவது
5.பெண்ணின் உடல் வளைவுகள்
6.வேலைக்குச் செல்வது கல்வி கற்பது
7.பெண்ணாய் பிறந்தது
இப்படிப் பல காரணங்களைச் சொன்னதோடு அதற்கான பரிகாரங்களையும் சொன்னார்கள்.
1. வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவேண்டும்.
2.கல்வி கற்காமல் இருக்கவேண்டும்
. 3.தலை முதல் கால் வரை புர்கா அணிந்து கொள்ள வேண்டும்.
3.வேலைக்கு செல்லாமல் இருக்கவேண்டும்.
4.பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து விட வேண்டும்
சரி அப்படி என்னதான் திருட்டு நடந்திருக்கும்? பார்ப்போம்..
அதற்கு முன் திருடர்களைப் பற்றிய சித்திரங்கள் காவல்துறையினரால் செய்யப்பட்டவை
1.வேற்றுமொழி பேசுபவர்கள். 2.ஷார்ட்ஸ் அணிந்து இருப்பார்கள்.
3.உடலில் எண்ணெய் தடவி இருப்பார்கள்.
4.கூர்மையான பிளேடுகள் வைத்திருப்பார்கள்.
5.பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகள், பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் பகலில் மறைந்து இருப்பார்கள்.
6.இரவில் குடியிருப்புகளில் இரண்டு மணிக்கு மேல் நான்கு மணிக்குள் புகுந்து மயக்க மருந்து தூவி திருடிக் கொண்டு போவார்கள்.
7.சிம்பன்சி போல மாறுவேடம் இருப்பார்கள்.
இப்படி நூற்றுக்கணக்கான செய்திகள் ஊற்றெடுத்து வந்து கொண்டே இருந்தன.
சும்பா இனக்குழுவின் குல தெய்வத்திற்கு மூன்று மார்புகள் இருப்பதை காட்டினார்கள். லோம்பி தேவதைக்கு ஒற்றை மார்பகமே இருப்பதாய் சொன்னார்கள். அமேசான் காட்டு தேவதை ஒற்றை மார்பகத்துடன் காவல் புரியும். ஆசிய நாட்டு இதிகாச ராமாயணத்தில் வனவாசம் செல்லும் ராமன் மெலிந்த மார்புகள் உடைய சீதாவை விட்டுவிட்டு பூர்வகுடி பெண்ணான சூர்ப்பனகையின் அழகைக் கண்டு மயங்கி விடக்கூடாது என ராமனின் தம்பி லட்சுமணன் பொங்கி நின்று சூர்ப்பனகையின் சூர்ப்பனகையின் மார்பை அறுத்தான் என்ற செய்தியும், சிலப்பதிகாரத்தில் தன் கணவனைக் கொன்று அதன் மூலம் நீதி வழுவிய மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனின் குற்றம் கடிந்து மரணம் அடையச் செய்த கண்ணகி தன் மார்பில் ஒன்றைத் திருகி மதுரை நகரையே எரித்தாள் என்ற செய்தியும், பெண்களின் மீதான கொடிய வன்முறைகளில் மார்பை அறுத்தலும் ஒன்று என்பதை ஈழப் போரில் சிங்கள ராணுவம் செய்து காட்டியது. என்றும் ஆய்வுகள் வந்தன. என்று செய்திகளின் வழியாக கூறப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
இப்பொழுது தெரிந்திருக்குமே அந்த விசித்திர திருடர்கள் எதைத் திருடி இருந்தார்கள் என்று. பெண்களின் மார்பகங்களை அறுத்துக் கொண்டு செல்கிறார்கள் என்று பரபரப்பு. பெண்களின் மார்பை திருடாமலிருக்க பல உபாயங்களைத் தேடுகிறார்கள். விதவிதமான பாதுகாப்பு கவசங்களை மாட்டிவிடுகிறார்கள் கடைசியில் இரும்பினாலான மார்புக் கவசத்தை கண்டுபிடித்தார்கள். ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவைகள் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில்தான் இந்தத் திருட்டுக்கு சம்பந்தமில்லாத இன்னொரு செய்தியும் வந்தது காங்கோவின் தாது வளங்களை எல்லாம் ஐரோப்பிய நாடுகள் 99 ஆண்டுகளுக்கு தடையின்றி சுரண்டிக் கொள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்ட செய்தி.
பெரிய பெரிய மார்பகங்களின் ஒளிப்படங்களுக்கு முன்னால் மங்கிவிட்டது.
உணவுக்கே வழி இல்லாமல் போன மக்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் தெருக்களில் மக்கள் கூட்டம் குவிந்தது எதற்காக? என்னதான் முடிவாக இருந்தது.
உண்மையாலுமே மார்பகங்கள் தான் திருடப்பட்டனவா? அல்லது அது பொய்யாக சொல்லப்பட்ட செய்தியா? சமூகத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை மிக சர்வசாதாரணமாக கதை வழியாகக் அடக்கிவிட முடியும் என்பதை இந்தக் கதை வழியாக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர்.
நாட்டில் நடக்கும் ஒரு முக்கியமான அரசியல் பிரச்சனையை சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை பரபரப்புக்கு உள்ளாக்கும் பொழுது நாட்டில் நடக்கும் அந்த மிக முக்கியமான பிரச்சனை மூடி மறைக்கப்படுகிறது.
இந்தக் கதை படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரபலங்களை ஒரே வீட்டுக்குள் வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நேரத்தில் நாட்டின் மிக முக்கியமான பிரச்சனை போய்க்கொண்டு இருந்த பொழுது அதை மூடி மறைக்கத்தான் இதை முன்னிறுத்தி இருக்கிறார்கள் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது.
அது போல நாட்டின் பிரச்சினைகளை எவ்வளவு அழகாக திசைதிருப்ப முடியும் என்பதை கதை வழியாக நான் உணர்ந்து கொண்டதாக நினைக்கிறேன்.
அன்னக்கொடி இந்த புத்தகத்தில் மிக முக்கியமான கதையாக அன்னக்கொடி வருகிறாள். பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணின் மனநிலையை அன்புக்காக ஏங்கும் அவளது மனதை முடிவில் வஞ்சிக்கப்படுகிறது. வாசித்துப் பாருங்கள். வாசித்தால் மட்டுமே உணரக்கூடிய கதை.
அடுத்ததாக இந்தப் புத்தகத்தின் தலைப்பை சூடிக் கொண்டிருக்கும் துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்.
உலக ஆசைகளை எல்லாம் அன்பை எல்லாம் பாசத்தை எல்லாம் வாரி இறைத்து ஒரு பெண்குழந்தையை வளர்க்கிறார்கள்.
ஆசையாக வளர்த்த குழந்தையை தன்னுடைய ஜாதி மதம் என்று வரும்பொழுது அந்த பெண்ணை ஒரு பூவை கொய்வதற்குக் கூட மனம் ஒப்பாத நிலையில் இருக்கும் தந்தை அண்ணன் தம்பி உடந்தையோடு அவளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்கிறார்.
அப்படி என்ன தன்னுடைய ரத்தமும் சதையும் இருக்கும் குழந்தையை விட பெரிதாகிறது? என்று யோசிக்க வைக்கிறது. ஆணவக்கொலையை முன்னிறுத்தி எழுதியிருக்கும் இந்தக் கதையை தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மிக முக்கியமான கதையாகக் கருதுகிறேன்.
அதுவும் அவள் இறந்த பிறகு ஒரு ரயில் தண்டவாளத்தில் அவளுடைய உடல் கிடத்தப்படுகிறது தலை தனியாக உடல் தனியாக. அவளுடைய தலையில் இருக்கும் அந்த ரோஜா மலரின் இதழ்கள் ஒவ்வொன்றும் பறந்து சென்று இவளுடைய கதையைக் கூறுகிறது. எப்படி ஒரு கற்பனை அந்த ரோஜா மலர் வாடாமல் இருக்கிறது.
அடுத்த கதை சரக்கொன்றை இருந்த இடம் சித்தியை பார்க்க வரும் மகன் தன் சித்தி என் நினைவுகளில் மூழ்கும் இந்தக் கதை உலகம்மை சித்தியை அந்த பாசக்காரியை கண்முன் நிறுத்துகிறது. கிருஷ்ணனின் அம்மாவும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். உலகம்மை சித்தியும் இதே உலகத்தில் தான் இருக்கிறார்கள்.
மேற்கண்ட 7 கதைகளும் பெண்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட கதைகள் இந்த ஏழு கதைகளுமே எனக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்று கூறலாம். ஏனென்று தெரியாமல் கிருஷ்ணனை வஞ்சிக்கும் கிருஷ்ணனின் தாயும் உலகத்தில் உள்ள பாசத்தை எல்லாம் வாரி வழங்கும் உலகம்மை சித்தியும் நொடிந்து போன தன் வாழ்க்கையில் தன் குழந்தைகளின் நிலையை அறியாத ரேவதியின் அப்பாவும் பாலியல் தொழில் புரிந்து கொண்டிருக்கும் அன்னக்கொடியும் ரோஜா மலர் சூடிய துண்டிக்கப்பட்ட தலை கொண்ட பெண்ணும் இப்படி ஆச்சரியத்திற்கு உட்படுத்தும் கதாபாத்திரங்களை கதைகளை உலவ விட்டிருக்கிறார் எழுத்தாளர்.
இந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். அதில் மரப்பாச்சிகளின் நிலவறையில் மரப்பாச்சிகளோடு வாழும் ஒரு மனிதன் சிறுவயதிலிருந்து மரப்பாச்சி தேடித்தேடி விதவிதமாக சேர்த்து வைத்திருக்கும் அந்த மனிதன் மரப்பாச்சிகளோடே பேசிக்கொண்டிருக்கிறான். வாழ்ந்து கொண்டிருக்கிறான். முடிவில் மரப்பாச்சிகளுக்காக தன்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான ஒருவரை இழந்துவிடுகிறான். ஒரு சில இடங்களில் வாசிக்கும்போது அந்த மரப்பாச்சி நம்முடைய படுக்கையறைக்கு கீழும் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த அளவிற்கு எழுத்தின் வலிமை.இருக்கிறது.
அறை எண் 24 மாயா மேன்ஷன் கதை நம்மை கால இயந்திரத்தை இயந்திரத்தில் வைத்து அழைத்துச் செல்லும் கதை. கால இயந்திரம் போல் அந்த அறைக்கு முன் செல்லும் மனிதன் தன்னுடைய பால்ய காலத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்து வருகிறான். ஒவ்வொரு அறையின் வழியாக முடிவில் திரும்பவும் வருகிறான். நம்முடைய வாழ்க்கையில் எத்தனை விஷயங்களை நாம் கடந்து சென்று இருக்கிறோம் சென்று வந்து கொண்டிருக்கிறோம்.திரும்பி பார்த்தோமானால் நமக்கு மிக முக்கியமான நிகழ்வுகள் மட்டும் நினைவில் இருக்கும் இன்பமோ துன்பமோ அப்படியே நமக்கும் ஒரு காலச்சக்கரம் கிடைத்தால் எந்தெந்த நிகழ்வுகள் மனதில் வரும் என்ற எண்ணம் எழும் கண்டிப்பாக திருவல்லிக்கேணி சென்றால் மாயமேன்ஷன் 24க்கு சென்று வாருங்கள். காலை இயந்திரத்திற்குள் நீங்களும் செல்லலாம் ஒருவேளை திருவல்லிக்கேணி நான் சென்றால் மாயா மேன்ஷனை என் கண்கள் தேடும். அவ்வளவு அழுத்தமாக என் மனதில் பதிந்த கதை.
அடுத்து அந்தர அறை என்றொரு கதை. அப்பப்பா கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடியுமா? இப்படி எல்லாம் கதை எழுத முடியுமா? இது ஒரு வேளை உண்மையாக இருந்தால் என்ன நடக்கும்? நினைத்து பார்க்க முடியவில்லை. ஒருவர் தற்கொலை செய்து கொள்ள எண்ணும்பொழுது அவருடைய வாழ்க்கையில் இருமுறை தற்கொலை செய்ய முயற்சி செய்து அதிலிருந்து மீண்டு வந்துவிடுகிறார்.
மூன்றாவது முறை தற்கொலை செய்ய முயற்சி செய்யும்பொழுது ஒரு ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு ஒரு அறை எடுத்து தங்குவதற்காக அங்கிருந்த ரிசப்ஷனில் இருந்த மேனேஜரிடம் சென்று கேட்கிறார். இவரை பார்த்தவுடன் வரவேற்ற அந்த மேனேஜர் நீங்கள் தற்கொலை செய்யத் தானே வந்தீர்கள்? என்ற கேள்வியிலிருந்து சூடு பிடிக்கிறது கதை. அதன்பிறகு கதையை வாசிக்க வாசிக்க திகில் ஏற்படும்.
உலகமயமாக்கலின் விளைவுகளைப் பற்றிய மிக அற்புதமான கதை. கதையின் முடிவு யாரும் எதிர்பார்க்க முடியாதது.
கருணாகரனின் கதையில் பாட்டிலுக்குள் ஒருவன் குடியிருக்க முடியுமா என்று தொடங்கும் இந்த கதை ஒரு குடிகாரன் குடிகாரன் இன் வாழ்க்கையை மிகத் தெளிவாக எடுத்துக்கூறி அதனால் என்ன நிகழ்கிறது என்பதையும் கதை வழியாக கூறியிருக்கிறார்.
நொண்டி நகரம் மிக முக்கியமான கதை. கதை சொல்லும் முறையில் மிக உச்சமான கதையிது என்று சொல்லலாம். இந்தக் கதையில் ஒரு நகரத்தில் இருப்பவர்கள் நிறைய பேர் நொண்டிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கான காரணத்தை நீங்கள் வரலாற்றில் தேட வேண்டும். நொண்டி நகரம். கதையின் முடிவில் அந்த கதையை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
புற்று கதை வாசித்து முடித்து திரும்பி பார்த்தால் நம்மைச் சுற்றி ஆயிரம் பாம்புகள் ஓடுவது போதும் மனதிற்குள் ஒரு பிரமை தோன்றும்.மிகப் பிரபலமாக சொல்லப்பட்ட புதுமைப்பித்தனின் காஞ்சனை கதை எப்படி ஒரு பயத்தை ஏற்படுத்துமோஅதை விட பன்மடங்கு பயத்தை ஏற்படுத்தும் கதையாகவே புற்று கதையைப்பார்க்கிறேன்.
கானல் கதை, பாஞ்சானின் கதை. படிக்காத பஞ்சான் தன்னுடைய படித்த நண்பனைப் பற்றி செல்லும் இடங்களில் எல்லாம் பெருமைப்படக் கூறிக் கொண்டிருப்பார். படித்த இந்த நண்பன் பாஞ்சானை ஒருபோதும் மதித்ததில்லை. ஆனால் இந்த படித்த நண்பனை படிக்காத பாஞ்சான் இவ்வளவு பெரிய தொழிலதிபராக கல்வித்தந்தை ஆக மாறிய பின்னும் எங்கு சென்றாலும் தூக்கி வைத்து கூறிக் கொண்டே இருக்கிறானே என்று தோன்றும். இந்த கதையை படித்து முடிக்கும் பொழுது படிக்காத ஒருவர் தன்னுடைய திறமையால் முன்னேறவும் முடியும் என்பதையும் படித்தவர்களுக்கு அஞ்சான் கொடுக்கும் மதிப்பையும் நான் எவ்வளவு தான் சம்பாதித்து இருந்தாலும் என்னுடைய நண்பன் அளவுக்கு படிக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வது படித்த அவனுடைய நண்பன் படிக்காத பாஞ்சானைப் பார்த்து பொறாமை கொள்வதுமாக விரிகிற இந்தக் கதை வழியாக என்னுடைய பார்வை என்னவாக இருந்தது என்பது படித்தவர்கள் அத்துணை பேரும் சாதனையாளர்கள் அல்ல.
படிக்காதவர்கள் முட்டாள்களும் அல்ல திறமை மதிக்கப்படுகிறது. அவர்களை உயர்த்துகிறது. ஆனாலும் படிப்பு என்பது ஒரு மனிதனுக்கு மிக முக்கியம் எவ்வளவு உயர் பதவியை உயர் இடத்திற்கு சென்றாலும் படித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணும் மனநிலையில்தான் படிக்காதவர்கள் இருக்கிறார்கள்.
குரல்கள் கதையில் செந்திலின் கதாபாத்திரம் ஒரு மன நோயாளியான நோயாளியாக கட்டப்பட்டிருக்கிறது உளவியல்ரீதியான கதை. செந்தில் ஹோமியோபதி மருத்துவரிடம் அழைத்து செல்லப்படுகிறார். செந்திலின் நடவடிக்கைகளில் வித்தியாசம் கண்டதால் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவர் முன்பு அமர்ந்திருக்கும் பொழுது அவன் காதுகளில் ஒரு குரல் கேட்கிறது . இவரை நம்பாதே…. அவரு… அவரு… உன்னை பிடிச்சு அவங்ககிட்ட கொடுத்துடுவாரு.. ஓடிரு.. உடனே இங்கிருந்து ஓடிவிடு ..என்று கேட்கிறது. திடீரென கேட்கத்தொடங்கிய இந்தகுரல்களின் பின்னால் சென்றால் கல்லூரி காலங்களில் செந்தில் ஒருதலையாக விஜயலட்சுமியை காதலிக்கிறான். அதன்பிறகு விஜயலட்சுமிக்கு வேறு இடத்தில் திருமணம் நடக்கிறது அதன்பிறகு விஜயலட்சுமிக்கும் செந்தில்குமாருக்கும் தொடர்பு என்பது இல்லாமல் போகிறது. சில வருடங்களுக்குப் பிறகு செந்திலின் எதிர் வீட்டிற்கு விஜயலட்சுமி குடும்பத்தோடு குடி வருகிறாள். விஜயலட்சுமியின் கணவன் கணவன் குடிகாரனாக இருந்ததால் அவனிடமிருந்து விவாகரத்து பெற்று தன்னுடைய அண்ணன் களோடு வசித்து வருகிறாள்..
இருவரும் எதிர் எதிர் வீடு என்பதால் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை விஜயலட்சுமி புத்தகமொன்று வாசிக்கும் பொழுது அதில் காதல் கடிதம் வைத்துக் கொடுக்க விஜயலட்சுமி அதைப் படித்தாளா இல்லையா என்பது தெரியாமல் இருக்கும் நேரத்தில் புத்தகம் திரும்பி வருகிறது. இந்த நேரத்தில்தான் விஜயலட்சுமியின் அண்ணன் ஒருமுறை வீட்டில் இருந்து வெளியே வரும்போது கோபமாக முறைத்தபடி வெளியே வருகிறான். அன்றிலிருந்து இவன் அவர் தன் மீதுதான் கோபம் கொண்டு வருகிறார் என்று எண்ணிக்கொண்டு பிதற்ற ஆரம்பிக்கிறான். அந்தக் குரல்களின் வழியே சாதி பூதாகரமாக அவனைக் கொல்ல நினைப்பதாக மனப்பிறழ்வு அடைகிறான். அந்தக் குரல்களிலிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கும் செந்திலின் கதை வாசிக்க வாசிக்கப்புதிதாக இருக்கிறது.
இன்னும் வாசிக்க வாசிக்க தனைமயக்கி மூலிகையாக இந்தப் புத்தகம் என்னை சூழ்ந்து வாரி சுருட்டி எடுத்துக் கொண்டு விட்டது. ஒரு புத்தகம் என்ன செய்ய வேண்டும் வாசிப்பவர்களை? ஏதோ ஒருவகையில் ஈர்க்க வேண்டும். திரும்ப வாசிக்க வைக்க வேண்டும். யோசிக்க வைக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும்.சிரிக்க வைக்க வேண்டும். அழ வைக்க வேண்டும். பயப்பட வைக்க வேண்டும்.
இப்படி எத்தனை வேண்டும் இருக்கிறதோ இதையும் தாண்டி இன்னும் எத்தனை வேண்டும் இருக்கிறதோ அத்தனை வேண்டும் களையும் அள்ளி அள்ளியள்ளி கொடுக்கும் அட்சய பாத்திரமாக எழுதப்பட்டிருக்கிற இருபது கதைகளும் தமிழ்ச்சிறுகதை இலக்கியத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பு. .
புத்தகத்தின் அட்டைப்படம் வடிவமைப்பு புத்தகத்தை வாங்கத் தூண்டும் வகையில் இருக்கிறது. பின்பக்க அட்டையில் இருக்கும் வாசகங்களும் புத்தகத்தை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.
வாசிப்பை நேசிப்பவர்களும் எழுத்தாளர்களும் எழுத நினைப்பவர்களும் கதைக்குள் கரைய நினைப்பவர்களும் மாறுபட்ட கதைகளை வாசிக்க நினைப்பவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்.