மதுரை தமுஎகச (TNPWAA Madurai)-வின் வாசிப்போம் நேசிப்போம்-3 | 'கடலும் போராளிகளும்' (Kadalum Poraligalaum) - நூல் வாசிப்பு பகிர்வு

மதுரை தமுஎகச-வின் வாசிப்போம் நேசிப்போம்-3

மதுரை தமுஎகச டாக்டர்.க.செல்வராஜ் கிளையில் 17.9.24 அன்று காலை 10.30 மணிக்கு 'வாசிப்போம் - நேசிப்போம்-3' நிகழ்வில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வும் வலியும் சிறுகதைகளாக இளம் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு எழுத்தாளர் ரா.பி.சகேஷ் சந்தியாவால் தொகுக்கப்பட்ட 'கடலும் போராளிகளும்' (Kadalum Poraligalaum) என்ற…
வாசிப்பு என்னும் ரசவாதம் | தமுஎகச (TNPWAA) கோவை இலக்கியச் சந்திப்பு 250 - ச. தமிழ்ச்செல்வன் S. Tamilselvan படைப்புகள் திறனாய்ரங்க நிகழ்வு | https://bookday.in/

வாசிப்பு என்னும் ரசவாதம்

வாசிப்பு என்னும் ரசவாதம் முக்கால் லட்ச ரூபாய் புத்தகங்கள் பரிமாற்றம் தமுஎகச கோவை இலக்கியச் சந்திப்பு 250 - ச. தமிழ்ச்செல்வன் படைப்புகள் திறனாய்ரங்க நிகழ்வு குறித்து.... தமுஎகச பொன் விழா இலச்சினை வெளியீடு மற்றும் கோவை இலக்கியச் சந்திப்பு 250…
Comrade Karuna's Memorial Day Article By Jeyachandran தோழர் கருணாவின் நினைவு நாள் - ஜெயசந்திரன்

தோழர் கருணாவின் நினைவு நாள் – ஜெயசந்திரன்




தோழர் கருணா மறைந்து ஓராண்டாகிறது. இப்போது போலிருந்த அக்கொடும் நிகழ்வு நடந்து உண்மையிலேயே ஓராண்டாகி விட்டது. சென்னை, சைதாப்பேட்டையில் டிசம்பர் 31 ல் மீண்டும் கலை இரவு நடத்தத் திட்டமிட்டு செயலில் இறங்கி இருக்கிறோம். அச் செயல்பாட்டினூடே கருணாவின் நினைவுகள் தனிமையை இடைமறித்துக் கொண்டே இருக்கிறது.

கலை இலக்கிய இரவு என்ற மகத்தான கலாச்சார நிகழ்வை த. மு. எ. ச. வின் மூலம் தமிழ்நாட்டிற்கு கொடையளித்த திருவண்ணாமலை த. மு. எ. ச. சிற்பிகளில் அவனும் ஒருவன். கலை இலக்கிய இரவு சென்னை சைதாப்பேட்டையில் கலை இரவாக மாற்றமடைந்து தமிழ்நாடு முழுவதும் கலை இரவாகவும் கலை இலக்கிய இரவாகவும் பயணித்தது. திருவண்ணாமலை மலை அடிவாரத்திலிருந்துப் புறப்பட்டு தமிழ்நாட்டின் எட்டுத் திக்கும் எதிரொலிக்கும் பாப்பம்பாடி ஜமாவின் அதிர்வு, அதன் ஊடறுத்துப் பயணிக்கும் ‘ஓ… ஹோய்’ எனும் கருணாவின் கரகரத்த முழக்கம்…. அதை வடிவமைத்தவர்களில் அவன் முக்கியமானவன்.

எழுதுவதற்கும் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்ட அவசரநிலை காலத்தில் எழுதுவதற்காகவும் பேசுவதற்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். தடைகளை உடைப்பதும் புதியனவற்றைப் படைப்பதும் உள்ளார்ந்த இயல்பாய்க் கொண்டது எமது அமைப்பு. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகத்தளபதிகள் கே. முத்தையா, என். சங்கரையா போன்ற தோழர்களின் வழித்தடத்தில் பயணித்து ஆற்றல் பெற்று வளர்ந்து வரும் அமைப்பு. அதன் மூன்றாம் தலைமுறை ஊழியர்களில் ஒருவன் கருணா. திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி வாழ்க்கைத் துவங்கி இறுதி மூச்சு வரை அநீதிகளுக்கு எதிரான போர்ப் படையில் முன் வரிசையில் இயங்கி வந்தவன். ஸ்டென்சில் தாளில் படி எடுப்பது முதல் கணினித் திரையில் வடிவமைப்பது வரை கற்றுத் தேர்ந்தவன். இருபது மற்றும் இருபத்தி ஒன்று ஆகிய இரு நூற்றாண்டுகளிலும் இளைஞனாகவே வாழ்ந்து முடித்தவன்.

அமைப்பின் ஒழுங்கு முறைக்குள் கூட்டம் நடந்து முடிந்த பிறகு அரங்கிற்கு வெளியே மறு கூட்டம் ஒன்று நடக்கும். ஒழுங்கற்ற மறு கூட்டத்தின் மொழியாக எக்காளச் சிரிப்பும் எகத்தாளப் பேச்சும் இருக்கும். அதன் நடுவில் நாயகனாகக் கருணா அமர்ந்திருப்பான். விரலிடுக்கில் சிகரெட் புகைந்திருக்கும். தலைவர்கள் வந்து செல்வார்கள். அல்லது அவன் தலைமைக்குக் கட்டுண்டு அமர்ந்திருப்பார்கள். மறு கூட்டத்தில் மிகப் பெரிய இயக்கமொன்றின் விதையைக் கண்டெடுப்பான்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சென்னையில் நடைபெற்ற பதினொன்றாவது மாநில மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமாக பரிணாமம் பெற்றது. எழுத்திலக்கியங்களும் கலை நிகழ்வுகளும் இணைந்து த. மு. எ. க. ச வின் முகமாக வடிவெடுத்தது. அதன் பன்முகத் தன்மை கொண்ட ஊழியன் அவன்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நிரம்பி வழிகிறது அமைப்பு என்கிற விமர்சனம் மேலெழும் காலத்தில் – நிகழ்ச்சி ஏற்பாட்டாளனாக, குறும்பட இயக்குனராக, உலகத் திரைப்பட அறிமுகக் கட்டுரையாளனாக, திரை இயக்க – நாடக இயக்க செயற்பாட்டாளனாக, மிகச் சிறந்த வடிவமைப்பாளனாக சீரிய வாசிப்பாளனாக பன்முகத் தளத்தில் செயல்பட முயற்சித்தவன். இணையத்தில் அவனதுப் பதிவுகள் கூர்தீட்டிய ஆயுதமாய் பயணித்தது. அவன் சொற்களில் பொதிந்திருந்த வெக்கையும் விசையும் காந்தப்புலமாய் பலரையும் ஈர்த்தது.

வலதுசாரி தத்துவமும் இயக்கங்களும் தங்களைப் புனரமைத்துக் கொண்டு – வைதீகத்தின் இன்றைய வடிவமாய் உருப்பெற்று – அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள் தொட்டு இந்துத்துவத்திற்கு எதிராக ஆயுதபாணியாய் களத்தில் நின்றான்.

புதிய அறிவியல்த் தரவுகளுடன் உலகளாவிய அனுபவச் செறிவுடன் இளமைத் துடிப்போடு இந்துத்துவ எதிர்ப்பில் முன்னணியில் நிற்பது மார்க்சியம். அரசியல், சமூகம், பொருளாதாரம் எனும் முத்தளத்தில் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கதான தத்துவச் செறிவும் நடைமுறைத் திட்டமும் கொண்டது மார்க்சியம்.

தோழர் கருணா வைதீக எதிர்ப்பு மரபின் கண்ணியில் தன்னைப் பொருத்திக் கொண்டவன். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டான். தனது மரணத்தின் போது ‘நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்’ என்று அறிவித்துக் கொண்டான். கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் முழு நேர ஊழியராகத் தன்னை ஒப்புக் கொடுத்தான்.

நவீன இந்துத்துவத்தின் வளர்ச்சி சமூகத்தின் அறச் சிந்தனையைக் காவு வாங்கிவிட்டது. அதிகாரத் திமிரோடுதான் எப்போதும் மக்களை அணுகுகிறது. தாங்களே எப்போதும் வெற்றியாளர்கள் என்று அறிவித்துக் கொள்கிறது. எனவேதான் கருணா அதிகாரத்திற்கு எதிராகவும் அற உணர்வோடும் தோல்வியால் அணுக முடியாத கொண்டாட்ட மன நிலையோடும் மக்களோடு இணைந்து நிற்கிறான்.

இந்துத்துவத்திற்கு எதிரான அரசியல் வண்ணங்களைச் சேர்த்து குழைத்துக் குழைத்து ஆனந்தம் அடைகிறான். மிகுந்த அழகியலோடும் எக்காளச் சீற்றத்தோடும் இணையத்தில் எதிர் வினை ஆற்றுகிறான். மார்க்சியக் கருத்தியலோடு தன் நாடி நரம்பெங்கும் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராகச் சுருதி கூட்டுகிறான். இந்தியாவில் ஓர் அறிவுப் புரட்சிக்காக ஆள் திரட்டுகிறான்.

கருணாவின் தனிமனித ஆளுமையையும் தனித்திறமையையும் உருவாக்கியது அவன் ஏற்றுக் கொண்டத் தத்துவமும் அவன் ஒப்புக் கொடுத்த இயக்கமும். கூடுதல் கவனம் செலுத்தி அதை வளர்த்தெடுத்து வளப்படுத்திக் கொண்டவன் அவன். ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைக் குரல்களின் உந்து விசையாக வரலாறு நெடுகிலும் கருணா புதைந்து கிடக்கிறான். விதைகளாக……… வேர்களாக…. விழுதுகளாக.! கருணாவின் நினைவுகளுக்குச் செவ்வணக்கம்!

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam

அண்ணாமலை புராணம் (திருவண்ணாமலை தமுஎகச வரலாறு) 2 – பிரளயன்



அது 1978ன் இடைப்பகுதி என நினைக்கிறேன். தமுஎச திருவண்ணாமலை கிளையின் முதல் நிகழ்ச்சி, தேரடி வீதியிலுள்ள அன்னசத்திரத்தினது முதல் மாடியில் நடந்தது. அப்போது தமுஎச நடத்துகிற பொது நிகழ்ச்சிகளில் கவியரங்கத்திற்குத்தான் ‘மவுஸ்’ அதிகம். எனவே அந்த முதல் நிகழ்வு என்பது ஒரு கவியரங்கமாகத் தான் நடந்தேறியது.

வெண்மணி கவியரங்கத் தலைமையேற்க கவிஞர்கள், அருணை செயவேங்கடன், வெ.மன்னார், ஏ.டி.எம். பன்னீர் செல்வம், முகில்வண்ணன், கலை தாசன், மற்றும் ஒருசிலர் அவர்களின் பெயர்கள் எனக்கு நினைவிலில்லை இவர்களோடு நானும் ஒரு கவிதை வாசித்தேன். இறுதியில் கவிஞர்.தணிகைச்செல்வன் சிறப்புக்கவிதை வாசித்தார். தணிகைச்செல்வனது கவியரங்கக் கவிதைகள் கேட்போரை வசீகரிப்பவை; பிரபலமானவை.

அவர் ஒவ்வொரு கவியரங்கத்தின் போதும் அப்போதுள்ள சூழலையொட்டிய சில கவிதைகளை வாசிப்பார். இறுதியில் முத்தாய்ப்பாக தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தனது ‘செஞ்சேனை மறவனே வா! “ எனும் கவிதையினை வாசிப்பார்.

சங்கரர் பிறந்த பூமி
சைதன்யர் வளர்ந்த பூமி
வங்கத்துப் பரமஹம்சர்
வடலூர் விவேகானந்தரோடு
எத்தனை மகான்களின்
ஜென்ம பூமி-இன்னும்
தரித்திரம் ஏனோ சாமி
பூசையில் குறை வைத்தோமா-சபரிமலை
செல்லும் ஆசையில்
குறை வைத்தோமா
திருப்பதி
உண்டியலில் போடும்
காசினில் குறை வைத்தோமா- இல்லை
வாரியாருக்குத் தரும் ஃபீஸினில்
குறை வைத்தோமா
இருந்தும் ஏன் பற்றாக்குறை?
போன்ற பல கூர்மையான சமகால சமூக விமர்சனக் கேள்விகளால் தொடங்கும் தணிகைச்செல்வனது கவிதை , ஒரு காத்திரமான அரசியலை முன்வைத்து மக்களை இவ்வாறு அறைகூவி அழைக்கும்.

நிலமன்னர், தொழில் மன்னர், டாலர் நாட்டின்
நிதிமன்னர் என்கின்ற மூன்று மன்னர்
விழும் முன்னர்,நம் நாட்டுக்குடிமன்னர்கள்
வெறும் மன்னர் தாம்! நாமும் விதியை நோக்கி
அழும் முன்னர் சிந்திக்கவேண்டும்; …………….
கணவனை இழந்ததாலே
கண்ணகி சீற்றம் நியாயம்
துணியினை இழந்ததாலே
துரோபதை சபதம் நியாயம்
மனைவியை இழந்ததாலே
ராமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த
நமது ஆவேசம் நியாயம் நியாயம்
உழுநிலம் பறிக்கப்பட்டால்
உழுபவன் கிளர்ச்சி நியாயம்
உழைப்பவன் மறுக்கப்பட்டால்
உரிமைப்போர் முழுதும் நியாயம்!
அறுபது கோடி மக்கள்
அனைத்துமே பறிக்கப்பட்டு
அழுகையில் சிரிக்கிறாயே
ஆத்தா ! இது என்ன நியாயம்?
அமைதியின் பேரால்
இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம்
இமை மூடிக்கிடக்கவேண்டும்?
எண்ணினேன்; எண்ணும்போதே
குமுறினேன்; கொந்தளித்தேன்;
கொடுங்கோலை முறிக்காவிட்டால்
தமிழுமேன்? இலக்கியமேன்?
சரித்திரப்பெருமைகள் ஏன்?
நொடிக்கொரு சட்டமிட்டு
நொறுக்கிடும் ஆதிக்கத்தின்
குடிக்கு இங்கே நாட்டையாளும்
கொற்றம் ஏன்? கோட்டங்கள் ஏன்?

அடித்திடச்சீறுகின்ற
ஆற்றலின் வர்க்கமே ,நீ
வெடித்திடும் முழக்கம் எங்கே?

வெறி எங்கே? தூங்கும் போதும்
துடித்திடும் தோள்கள் எங்கே?
துரோகத்தை தூள்படுத்தி
பொடித்திடும் தடக்கை எங்கே?
போர் எங்கே? எங்கே என்று
நடந்திடும் தாள்களெங்கே?
நரம்பெங்கே ? நாளங்களெங்கே?
அறுத்தெறி தளையை; இந்த
அடிமைச்சங்கிலியைத் தூளாய்
உடைத்திட வா,வா! என்று
உதிரமே கொப்பளிக்க
அழைக்கிறேன் தோழா! உன்னை
அணைக்கிறேன் வாராய்! வாராய்!!
என்று அவர் கவியரங்கை முடித்தார். கவியரங்கு முழுக்க அவர் வாசிக்கும் போது கைதட்டி ஆரவாரித்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் இப்படி அவர் கவியரங்கை முடித்ததும் அதிர்ந்து போய் அமைதியாகிவிட்டனர். அவர்களுக்கு என்ன செய்வதெனத்தெரியவில்லை. சில நொடிகள் ஆழ்ந்த மௌனம். பிறகு ஏக காலத்தில் கைதட்டி எழுந்து நின்று பாராட்டினர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
முற்றம் நிகழ்வில் பவா

தணிகைச்செல்வனது கவிதைகள் ‘ விமர்சன யதார்த்தவாதத்தினடிப்படையில்’ சமூகத்தை நோக்குபவை. அவரது கவியரங்க பாணி குறித்தும் கவிதை குறித்த அவரது அணுகுமுறை குறித்தும் விமர்சனங்கள், மாற்றுக்கருத்துகளெல்லாம் தமுஎச-விற்குள் அப்போதே நிலவிவந்ததுண்டு. அவை தனித்து பேசவேண்டிய விஷயம். அவர் அன்று ஒரு மணி நேரம் வாசித்த கவிதையில் ஒரு சில வரிகளையே இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் தமுஎச-வினது நிகழ்வுகளில் , நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்கள் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தும் விதமாக பார்வையாளர்கள் விமர்சனம் என்கிற ஏற்பாடுகள் உண்டு. அன்று அது போலவே பார்வையாளர் விமர்சனமும் இறுதியில் வைத்திருந்தோம்.

நிகழ்வின் நிறைவில், அப்படி தனது கருத்தைச் சொல்லவந்த நகரப்பிரமுகரும் டாக்டருமான ஒருவர், கவிதை வாசித்த தணிகைச்செல்வனை கடுமையான தரக்குறைவான வார்த்தைகளால் வசைமாரி பொழிய ஆரம்பித்துவிட்டார். கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை கள் குறித்து விமர்சனங்கள் சொல்லவும் மாற்றுக் கருத்துகளை ப்பகிரவும் நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் வந்தவர் இப்படி எதுவும் சொல்லாமல் தரக்குறைவான தனிநபர் வசையில் இறங்கிவிட்டார்.

பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பலர் எழுந்து பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறுமாறும் அவரை, மன்னிப்பு கோருமாறும் கூச்சலிட்டனர். இருப்பினும் அவர் தாறுமாறாய் ப் பேசிக்கொண்டே போனார். எங்கள் சீனியர் மாணவர்களான மோகனசுந்தரமும் பாரியும் மைக்முன்னால் நின்றிருந்த அவரது சட்டையைப்பிடித்திழுத்து அவரைப் பேச விடாமல் தடுத்தனர். ஆத்திரமுற்ற பார்வையாளர்களிலொருவர் தனது கால் செருப்பை கழட்டிக்கொண்டு அந்த டாக்டரை அடிக்க ஓடிவந்தார். அதற்குள் மேடையிலிருந்தவர்கள் தடுத்து அவரை க் காப்பாற்றினார்கள்.

மாற்றுக்கருத்துககளுக்கு இடமளிக்கிற அவற்றை காதுகொடுத்து கேட்கிற ஏற்பாடான ‘பார்வையாளர்கள் விமர்சனம்’ என்கிற இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தாது வசைபாடுதலிலும் அவதூறிலும் இறங்கியதால் கடைசியில் அந்த டாக்டரை பாதுகாப்பாக அனுப்பிவைப்பதே பெரும்பாடாய் ப்போயிற்று.
இந்த அசம்பாவிதத்தால் என்னவாயிற்றென்றால் தமுஎ ச வின் அம்முதல் நிகழ்வு ஊர் முழுதும் பரபரப்பாகப்பேசப்பட்டது. ‘ஓவர்நைட்டில் ஃபேமஸ் ஆகிவிடுவது’ என்பார்களே அது போல அந்நிகழ்வால் த மு எ ச நகர் முழுதும் பிரபலம் ஆனது.

அதற்குப் பிறகு த மு எ ச எந்தவொரு அரங்கக்கூட்டம் நடத்தினாலும் இருநூறு முதல் முன்னூறு பேர் வரை சர்வ சாதாரணமாய்த் திரண்டு விடுவார்கள்.
அப்போதுதான் விழுப்புரத்தில் , பட்டியல் சமூகத்தினரின் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அவர்களது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு சாதிவெறியர்கள் மிகப்பெரிய கோரதாண்டவத்தினை அரங்கேற்றியிருந்தனர். சமூக முன்னேற்றத்தை ,நல்லிணக்கத்தை நாடுவோரின் கடும் கண்டனத்திற்கு உள்ளான கொடூரம் இது.

அந்த முதல் நிகழ்வில் நடைபெற்ற கவியரங்கில் மேடையேறிய நான், பிரளயன் எனும் புனை பெயரையெல்லாம் அப்போது கொண்டிருக்கவில்லை; எனது இயற்பெயரான சந்திரசேகரன் எனும் பெயரிலேயே அறிமுகமானேன்.

அங்கே அன்று படித்த எனது நீண்ட கவிதையின் ஓரிடத்தில் இவ்வுணர்வை இவ்வாறுவெளிப்படுத்தியிருந்தேன்!

“வெண்மணிச்சாம்பலை
சுகமாய்ப் புசித்தாய்
விழுப்புரச்சாம்பலை
மறுபடியும் கேட்கிறாய்
இந்தியத்தாயே
உனக்கென்ன மசக்கையா?”
எனது கவிதையும் பார்வையாளர்களின் பெருத்த வரவேற்புக்குள்ளானது. நான் அதற்கு ப்பிறகு மாவட்டம் முழுதும் நடைபெறுகிற கவியரங்குகளுக்கு அடிக்கடி அழைக்கப்படலானேன். இந்நிகழ்வினைத்தொடர்ந்து த மு எ ச வலுவான அமைப்பாக திருவண்ணாமலையில் செயல்பட ஆரம்பித்தது. கிளையின் சார்பில் ‘வார்ப்பு’ எனும் கையெழுத்துப் பிரதியைக் கொண்டுவந்தோம்.

கவிஞர்.வெண்மணி, வீ.பா.கணேசன் இருவரது கையெழுத்தும் சித்திரம் போல் மிக வடிவாக இருக்கும். இவர்கள் கைவண்ணத்தால் பலரது படைப்புகளையும் அதில் கொண்டுவருவோம். அரசு ஊழியர் சங்கச் செயற்பாட்டாளரான சந்துரு, ‘பெடரல்’ எனும் பெயரில் சிறுகதைகளையெல்லாம் எழுத ஆரம்பித்தார்.பல புதிய எழுத்தாளர்கள் உருவாயினர். நானும் பல பெயர்களில் அதில் எழுத ஆரம்பித்தேன். எங்கள் கல்லூரி நண்பர்களாக இருந்த சேஷாத்திரி,சீனுவாசன் போன்றோரும் வார்ப்பில் எழுதுவதன் மூலம் எழுத்தாளராயினர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு பேனரோடு பல்லவன்

வார்ப்பு இதழ் தயாரானதும் டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரில் இருந்த திருவண்ணாமலை கிளை நூலகத்தில் கொண்டு போய் வைப்போம். வைத்த ஒருவாரத்தில் 40,50 பின்னூட்டங்கள் வந்துவிடும். அந்த அளவிற்கு நூலக வாசகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது எங்கள் கையெழுத்து இதழ். இதனைத்தொடர்ந்து சற்று அகலக்கால் வைத்து ஒரு பெரிய எட்டு எடுத்துவைப்பது போல் திருவண்ணாமலை நகரில் ஒரு ஃபிலிம் சொஸைட்டியைத் தொடங்கினோம்.

மாற்று சினிமாவை, இணை சினிமாவை மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிற ஃபிலிம் சொஸைட்டிகள் இந்தியாவில் பரவலாகிக்கொண்டிருந்த தருணம் அது.
ஃபிலிம் சொஸைட்டி என்பது , திரைப்பட ஆர்வம் உள்ளவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து அவர்களிடம் சந்தா வசூலித்து, சர்வதேசத்தரம் வாய்ந்த படங்களை அவ்வுறுப்பினர்களுக்கு திரையிட்டு அது குறித்து விவாதித்து அவர்களிடத்தே திரைப்பட ரசனையை மேம்படுத்துகிற ஓர் அமைப்பாகும்.

சென்னையில் மெட்ராஸ் ஃபிலிம் சொஸைட்டி, ஐ சி ஏ ஃபாரம், வேலூரில் வேலூர் ஃபிலிம் சொஸைட்டி, மதுரையில் எதார்த்தா ஃபிலிம் சொஸைட்டி என தமிழ் நாட்டில் நான்கு ஃபிலிம் சொஸைட்டிகள் மட்டுமே அப்போது செயல்பட்டுவந்தன.

இன்று திரைப்படங்களைத்திரையிடுவது என்பது மிகவும் சுலபம் . டிவிடிக்கள், போன்ற மின்னணுச் சாதனங்கள் வாயிலாகவே நமக்கு திரைப்படங்கள் [மென்பொருட்கள்] கிடைத்து விடுகின்றன. அம்மென்பொருட்களை எந்தவொரு [USB] யுஎஸ்பி சாதனங்கள் வாயிலாகவும் சிறிய புரொஜெக்டர்கள் மூலம் எங்கு வேண்டுமானாலும் எந்த ஒரு ஹாலிலும் திரையிட்டு விடமுடியும். ஆனால் அன்று நிலைமை அவ்வாறில்லை. திரைப்படங்கள் 35 எம்.எம். ஃபிலிம் சுருள்களில் தான் கிடைக்கும். அவற்றைத் திரையிட 35 எம்.எம் புரொஜெக்டர்கள் தேவை. அதற்கு திரையரங்குகளைத்தான் நாம் நாடிச்செல்லவேண்டும்.

இத்தகைய ஒரு சூழலில்தான் திருவண்ணாமலையில் ‘வானவில் ஃபிலிம் சொஸைட்டி’ என்கிற ஒரு திரைப்படக்கழகம் தொடங்கப்பட்டது. திரைப்படங்களை 35 எம்.எம் சுருள்களில் பெற்று திரையரங்குகளில் திரையிட்டால் அவற்றிற்கு கேளிக்கை வரி செலுத்தவேண்டி வரும். எனவே வணிக நோக்கற்ற திரையிடல் என்று சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து வரி விலக்கு பெறவேண்டும்.

மத்திய தகவல் துறை அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற ஃபிலிம் சொஸைட்டிகளின் கூட்டமைப்பு [Federation of Film societies of India] ஒன்று இருக்கிறது. இவ்வமைப்பில் இணைப்பு [affliation] பெற்றால் நீங்கள் கேளிக்கை வரி செலுத்தத்தேவையில்லை. ஆனால் ஓராண்டுகளோ ஈராண்டுகளோ தொய்வின்றி ஒரு ஃபிலிம் சொஸைட்டியை நீங்கள் நடத்தினால் மட்டுமே உங்களுக்கு இக்கூட்டமைப்போடு இணைப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சவால்கள் இருப்பதை அறிந்தேதான் ஃபிலிம் சொஸைட்டி தொடங்கப்பட்டது.

எங்களில் வீ.பா.கணேசன் சென்னை ஐசி ஏ ஃபாரத்திலும் , எல் ஐ சியில் பணியாற்றுகிற சத்யநாராயணன் வேலூர் ஃபிலிம் சொசைட்டியிலும் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள். இவர்களுக்கே ஃபிலிம் சொஸைட்டிகள் குறித்த பரிச்சயம் உண்டு. இயல்பாக இவர்களே ஃபிலிம் சொஸைட்டியினை வழி நடத்துபவர்களாக இருந்தனர்.

மேலும் எல் ஐ சி யில் பணியாற்றிய ஜோஷி, கிருஷ்ணமுர்த்தி, சண்முகம், அரசு ஊழியர் சந்துரு, நான் மற்றும் வெண்மணி ஆகியோர் இச்செயல்பாட்டில் அவர்களோடு இணைந்துகொண்டோம். மாதச்சம்பளம் பெறுகிற நடுத்தர வர்க்க ஊழியர்களோடு நகரின் பல வணிகர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு பேனரோடு பல்லவன்

எங்கள் கல்லூரித்தோழர்கள் திக, திமுக மாணவர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் உட்பட இதில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். அப்போதைய எங்கள் கல்லூரித்தோழர்களான முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.பிச்சாண்டி, ஜோதி.ராஜேந்திரன் போன்றோர் ஃபிலிம் சொஸைட்டியின் நிர்வாகக்குழு வில் இருந்து செயல்பட்டனர். ஏற்கனவே ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி நடத்தி பெற்ற அனுபவங்கள் இதற்கு பேருதவியாய் இருந்தன.
ஃபிலிம் சொஸைட்டியின் தொடக்கவிழா கிருஷ்ணா தியேட்டரில் நடந்தது.

‘சம்ஸ்காரா” எனும் கன்னடப்படத்தைத்தான் முதல் படமாக திரையிட்டோம். தென்னிந்திய நியோ ரியலிச சினிமாவின் மைல் கல்களில் ஒன்றென வர்ணிக்கப்பட்ட சம்ஸ்காரா, 70 களில் தொடக்கத்தில் வெளியாகி பல விருதுகளை அள்ளிக்குவித்த திரைப்படம். சம்ஸ்காரா எனில் [funeral rite] ‘இறுதிச்சடங்கு’ எனப்பொருள்.
ஆனால் இதனை நாங்கள் ‘கருமாதி’ என மொழிபெயர்த்து, இறப்பு வீட்டில் 16 ஆம் நாள் நடக்கும் ‘நீத்தார் சடங்கினை’ அறிவிப்பதற்கு அஞ்சலட்டை போல ஒரு காரியப்பத்திரிகை அச்சிடுவார்கள் அல்லவா, அதுபோலவே அட்டையின் ஓர் ஓரத்தில் மூலையில் கருப்பு வண்ணமெல்லாம் இட்டு முதல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தயாரித்து எல்லோருக்கும் அனுப்பினோம்.

அழைப்பிதழைப் பார்த்த உறுப்பினர்கள் பலர் நொந்து விட்டார்கள். என்னங்க இது முதல் நிகழ்ச்சியே இப்படி அபசகுனம் மாதிரி கருமாதின்னு அடிச்சிருக்கீங்க என்றெல்லாம் கேட்டார்கள். எனினும் அந்நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. திரைப்படக்கழகத்தை தொடங்கிவைக்க திரைப்படக்கழகங்களினது கூட்டமைப்பின் [FFSI] செயலாளர்.சுப்பிரமணியம் அழைக்கப்பட்டிருந்தார். ரிசர்வ் வங்கியில் அலுவலராக பணியாற்றிக்கொண்டிருந்தவர் அவர். வந்திருந்த பார்வையாளர்கள் கூட்டத்தைப்பார்த்ததும் அவருக்கு ஏக ஆச்சர்யம்!. இவர்கள் எல்லோரும் உறுப்பினர்களா ? மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்று கேட்டார். நாங்கள் நானூறுக்கு மேல் என்று சொன்னதும் அசந்துவிட்டார்.

பெரும்பாலான சொஸைட்டிகள் 100 அல்லது 150 உறுப்பினர்களைக் கூட த் தாண்டுவதில்லை. நீங்கள் 400க்கும் மெற்பட்டவர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே இது பெரிய விஷயம். தென்னிந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஃபிலிம் சொஸைட்டி எதுவென்றால் அது உங்கள் வானவில் ஃபிலிம் சொஸைட்டி தான் என்று பாராட்டினார். இப்படி ஒவ்வொரு மாதமும் தவறாது திரைப்படங்களை திரையிட்டு ஓராண்டு கழித்து ஃபிலிம் சொஸைட்டிகளின் கூட்டமைப்பில் இணைப்பையும் பெற்றுவிட்டோம்.

இதனை முழுநேரமாகக் கவனித்துக்கொண்ட வீ.பா. கணேசன் சென்னையிலே ஒரு பணியில் சேர்ந்தார். அதன் பிறகு நான் தொடர்ந்து அப்பொறுப்பினை மேற்கொண்டேன். 1981 இல் நான் சென்னைக்கு வந்த பிறகும் கூட , சிலகாலம் அதாவது 1982 முடிய சென்னையிலிருந்த படி திரையிடல் பணிகளை ஒருங்கிணைத்தேன். இப்படி ஒரு நான்காண்டு காலம் அத்திரைப்படக்கழகம் செயல்பட்டது.

திருவண்ணாமலை அப்போது தனி மாவட்டமாகப் பிரிக்கப்படவில்லை. மாவட்டத்தலைநகராகக் கூட இல்லாத ஒரு சிறிய நகரத்தில் ‘திரைப்படக்கழகம்’ நடத்தியது என்பது உண்மையிலேயே சவால் மிக்க ஒரு விஷயம்தான். கவிஞர். வெண்மணி தங்கியிருந்த 105,சன்னதிதெரு, செட்டியார் மேன்ஷன் என்கிற முகவரிதான் வார்ப்பு கையெழுத்திதழ், வானவில் திரைப்படக்கழகம், தமுஎச கிளைபோன்ற அனைத்து செயல்பாடுகளின் மையமாக இருந்தது. அடிக்கடி அனைவரும் கூடுவது ,விவாதிப்பது, என எல்லா நடவடிக்கைகளும் அங்குதான் நடந்தன.

அந்த மேன்ஷனில் தங்கியிருக்கும் பெரும்பாலோர் இந்த செயல்பாடுகளோடு தங்களை இணைத்துக்கொண்டனர் அல்லது தார்மீக ஆதரவளிப்போராய் பரிணமித்தனர். அப்போது மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த ‘ஜிடி ஐயா’ என எல்லோராலும் அன்போடும் மதிப்போடும் அழைக்கப்பட்ட ஜார்ஜ் டேனியல் என்பவரும் அந்த மேன்ஷனில் தங்கியிருந்தார். அவர் கன்னியாகுமரிக்காரர்; மாணவப்பருவத்திலிருந்து முற்போக்கு இயக்கங்களில் செயல்பட்டவர். உயர் பொறுப்பில் இருந்ததால் அவரால் நேரடியாக எங்கள் பணிகளில் கலந்து கொள்ளமுடியாதெனினும் மதிப்புமிக்க ஆலோசனைகளை அளிப்பவராக எங்களது செயல்பாடுகளுக்கு ஊக்கமளிப்பவராக எங்களது தார்மீகப் பின்புலமாக இருந்துவந்தார்.

1981ஆம் ஆண்டுக்குப் பிறகு கவிஞர் வெண்மணி யின் வழிகாட்டுதலில் அழகேசன் என்பவர் தமுஎகச கிளைச் செயலாளராக பொறுப்பெடுக்கிறார்.. அப்போது ராமலிங்கம் என்பவர் திருவண்ணாமலையிலிருந்து ‘மாத நாவல்கள்’ வெளியிடுகிற பத்திரிகையொன்றை நடத்திவந்தார். அவரெல்லாம் அப்போது தமு எ சவில் இணைந்து தீவிரமாகச் செயல் பட்டிருக்கிறார்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1992 கலை இரவில் கருணா

இந்த ராமலிங்கம்தான் பின்னர் சென்னைக்கு வந்து தராசு பத்திரிகையில் பணியாற்றி , பின்னர் ‘ கழுகு’ எனும் பத்திரிகையை தனியாக நடத்தி கழுகு ராமலிங்கம் என அறியப்பெற்றவர். தற்போது சென்னையில் நிவேதிதா பதிப்பகம் எனும் பெயரில் ஒரு பதிப்பகத்தை நடத்திவருகிறார். 1983 என நினைக்கிறேன். தேரடி வீதியிலுள்ள ‘வன்னிய மடத்தில்’ தமு எ ச வின் மாவட்ட மாநாடு நடந்தது. அம் மாநாட்டின் கவியரங்க நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது இவர்களையெல்லாம் நான் சந்தித்திருக்கிறேன். இம்மாநாட்டின் போதுதான் கே.ஏ. குணசேகரனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிகப்பெரிய அளவில் மக்களது பாராட்டுதல்களை ப் பெற்ற நிகழ்ச்சி அது.

அதன் பிறகு ஓவியர் பல்லவன் தமுஎகசவுக்கு வருகிறார். அவரது பெயிண்டிங் ஸ்டூடியோ தமுஎ சவினர் கூடும் இடமாக உருப்பெறுகிறது. அந்த சமயத்தில் கவிஞர்.வெண்மணி யை ஆசிரியராய்க்கொண்டு திருமணத்திற்குப்பிறகு அவர் வசித்த வடமாத்தாதி தெரு முகவரியிலிருந்து ‘அதிர்வுகள்’ எனும் முற்றிலும் கவிதைகளுக்கான ஒரு இதழ் கொண்டுவரப்பட்டது.

மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் என்னோடு தங்கியிருந்த கவிஞர் வெண்மணியின் தம்பி ஓவியர் ராஜாதான் அச்சிடுவதற்கான பொறுப்பு. எனவே அவ்விதழின் பிழைதிருத்தம் அச்சாக்கம் தயாரிப்பு விநியோகம் என எல்லாப்பணிகளும் எங்களது மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெரு அறையிலிருந்தே நடந்தேறின.
அப்போது காளிதாஸின் தலைமையில் ‘நிதர்சனா’ எனும் நாடகக்குழு திருவண்ணாமலை தமுஎகச கிளையின் சார்பில் செயல்பட்டுவந்தது.

தமுஎச-வில் இணைந்து செயல்படுவதற்கு முன் காளிதாஸ் ‘கலைவாணர் நாடகக் குழு’ எனும் பெயரில் மாசி மகத்தின் போது நகர எல்லையின் விளிம்பிலிருக்கிற பள்ளிகொண்டாபட்டில் நாடகங்களை நிகழ்த்துவார். மாசிமகத்திற்கு வருகிற மக்கள் மத்தியில் இது பிரபலமாகி சுற்றுமுள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று நாடகம் நடத்துகிற குழுவாக பின்னர் இது உருப்பெற்றது. அதே போன்று அளகேஷ் கன்னா என்பவர் நடத்திய ‘முத்தமிழ் மன்றம்’ என்கிற நாடகக்குழுவும் திருவண்ணாமலை சுற்றியுள்ள கிராமங்களில் பரவலாக நாடகம் நடத்திவந்தது.

1985-86 என நினைவு, இது போன்ற அமெச்சூர் நாடகப் பின்னணியில் இருந்து வந்த காளிதாஸின் எழுத்தாக்கம் மற்றும் இயக்கத்தில் ‘வெவரமில்லாதவர்கள்’ என்கிற நாடகத்தை ‘நிதர்சனா’ குழு மேடையேற்றியதை நான் பார்த்திருக்கிறேன். காளிதாஸ் மற்றும் பவா செல்லத்துரை, கருணா, ஜீவன் பிரபாகரன், ரவிச்சந்திரன், போன்றவர்கள் அந்நாடகக்குழுவில் செயல்பட்டார்கள்.

பின்னர் 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து திமுக அதன் தோழமைக்கட்சிகளுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தீட்சண்யா என்ற பெயரில் இயங்கிய நாடகக்குழு தாக்குதலுக்குள்ளானது. நாடகக் குழுவில் அப்போது செயல்பட்ட கோமதியின் [தற்போது இவர் மானிடவியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்.கோமதி] இல்லத்தை வன்முறையாளர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கருணா தலைமையில் இயங்கிய இந்த தீட்சண்யா நாடகக்குழு 90களின் இறுதிவரை செயல்பட்டது.

‘வார்ப்பு’ க்குப்பிறகு அழகேசன்,பவா.செல்லதுரை, கருணா ஆகியோரின் முன்முயற்சியில் ‘பாதைகள்’ எனும் கையெழுத்திதழ் சிலகாலம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அரசம்பட்டு அழகேசன், தமுஎசவின் கிளைச்செயலாளராக இருந்த காலத்தில் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஒரு கவியரங்கு நடத்தப்படுவதுண்டு. அதாவது டிசம்பர் 31 அன்று இரவு எட்டு மணிக்கு கவியரங்கு தொடங்கும். எல்லோரும் கவிதை வாசிப்பார்கள். சரியாக இரவு 11.55க்கு விளக்குகள் அணைக்கப்படும். 12.00 மணிக்கு மீண்டும் விளக்குகள் ஏற்றப்படும். புத்தாண்டை வரவேற்றபடி ஒருவர் சிறப்புக்கவிதை வாசிப்பார்.

வடமாநிலங்களில் தற்போதும் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு புழக்கத்திலிருக்கும் ‘முஷைரா’ [கவிராத்திரி] எனும் வடிவத்திலிருந்து உந்துதல் பெற்றதுதான் இந்நிகழ்வு. நூற்றுக்கு மேற்பட்டோர் திரளும் இக் கவியிரவுக்கு ஆண்டுக்கு ஆண்டு எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே போனது; கூட்டமும் அதிகரித்தது.
நிகழ்ச்சிகள் 6 மணிக்கே தொடங்கப்பட்டன. கவிதை வாசிப்பு என்பதோடு நில்லாமல் ,பாடல்கள், நாடகங்கள், இலக்கிய உரைகள் என நிகழ்வுகள் விரிவடைந்தன.
இப்படி நிகழ்வுகள் விரிவடைந்ததும் கூட்டமும் அதிகரித்தது. முதலில் டேனிஷ் மிஷன் கிண்டர் கார்டன் பள்ளி மேடை யில் நடந்த இந்நிகழ்வு அடுத்த ஆண்டு பெண்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது . இருநூறு முன்னூறு பேரைக் கொள்கிற ‘பள்ளியின் அரங்கம் ’ கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. கூட்டம் அதிகமானதால் அடுத்த ஆண்டு நிகழ்ச்சியை காந்தி சிலைக்கு அருகே திறந்தவெளியில் மேடை போட்டு நிகழ்த்தத்தொடங்கினர். திறந்த வெளியென்பதால் பாடல்கள் நாடகங்கள் என நிகழ்கலைகள் அதிகமான அளவில் மேடையேற்றப்பட்டன. மாலை 7 மணிக்கு இருநூறு முன்னூறு பேராக இருந்த கூட்டம் இரவு 10 மணிக்கு ஆயிரம் ரெண்டாயிரமென அதிகரித்தது.

அதற்கடுத்த ஆண்டு இதைவிடப் பெரிய மேடையில் பற்பல நிகழ்ச்சிகளோடு இரவு 7 மணி தொடங்கி விடியற்காலை 5 மணி வரை ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நடைபெறுகிற கலை-இலக்கிய இரவாக வடிவம் கொண்டது. இப்படி புத்தாண்டை வரவேற்க, ஒரு சிறிய உள்ளரங்கில் கவியிரவாகத் தொடங்கிய இந்நிகழ்வு , பாடல்கள், நாடகம் என நிகழ்கலைகளோடு கலக்கிறபோது உள்ளரங்கினை விட்டு வெளியே வீதிக்கு வந்து ஆயிரக்கணக்கான வெகு மக்களை ஈர்க்கிற கலை-இலக்கிய இரவாக பரிணமித்தது.

இப்படி திருவண்ணாமலை தமுஎகச பரிணாமம் பெறுகிற காலத்தில், கவிஞர் வெண்மணி மாற்றலாகி தேனிக்குச் சென்றுவிடுகிறார். கிளைச்செயலாளரான அரசம்பட்டு அழகேசனோடு களமாடுகிறவர்களாக புதிய செயற்பாட்டாளர்களாக, காளிதாஸ், பவா செல்லதுரை, கருணா, பல்லவன், ரேணுகோபால், சாமிநாதன், வைகறை சுகந்தன், வைகறை கோவிந்தன், உத்தமன், கவிஞர் ஃபீனிக்ஸ், சோமு, பாலாஜி, பாஸ்கரன், குழந்தைவேல், ஜெயஶ்ரீ, ஷைலஜா, உத்திரகுமாரன், அன்பரசன் ஆகியோர் உருவெடுக்கின்றனர்.

 

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
த மு எ ச மாநில மாநாடு, 2005. திருவண்ணாமலை

அரசு ஊழியர் சங்கத்தலைவர்களில் ஒருவரான சந்துரு மட்டும்தான் 1978 இல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை திருவண்ணாமலை தமு எச வில் தொடர்ந்து செயற்பட்டுவருபவர் எனச்சொல்லலாம். திருவண்ணாமலை தமுஎச கிளையின் செயல்பாடுகளில் கிளைத்த கலை யால் பொழுதளந்த இவ்விரவுகளுக்கு , கலைஇரவு என்கிற இவ்வடிவத்திற்கு மிகப்பெரும் பண்பாட்டு முக்கியத்துவமுண்டு.

சாதி சமய பேதமின்றி, ஒரே குடையின் கீழ் எல்லாத்தரப்பினரையும் பார்வையாளர்களாய் திரட்டிய ஆகப்பெரும் பண்பாட்டு செயல்பாடு இது. அரசு மற்றும் பெரும் வணிக நிறுவனங்கள், நிதி முகமைகள் இவர்களின் உதவிகளின்றி மக்களது நன்கொடைகள் மற்றும் சமூக ஆதரவை மட்டுமே கொண்டு பெரிய அளவில் மக்களைப் பார்வையாளர்களாகத் திரட்டுகிற ஒரு சுயாதீனமான ஏற்பாடு தான் கலை இரவு என்பது.

பிரபலமானவர்களை அழைத்து அவர்களது பிரபலம் தருகிற ஈர்ப்பால் மக்களைத்திரட்டி புகழ்வெளிச்சத்துக்கு வந்த நிகழ்வல்ல இது. மாற்றுச்சிந்தனையில் , மாற்று வெளிகளில், மாற்றுக் கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவோரை செயல்படுவோரை அழைத்து அவர்களுக்கு ‘மேடை போட்டுத்தருவதன் மூலம்’ பிரபலமடைந்த நிகழ்வு இது.

கரிசல் குயில்கள் கிருஷ்ணசாமி, சந்திரசேகரன், வைகறை சுகந்தன், கோவிந்தன், உத்தமன் ஆகியோரது பாடல்கள் சென்னைகலைக்குழுவின் நாடகங்கள், பாரதி கிருஷ்ணகுமாரின் உரைவீச்சு இவையே அன்று அக்கலை இலக்கிய இரவின் மையமான நிகழ்வுகளாயிருந்தன. நாடகக்கலைஞர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் போன்றோருக்கு மிகப்பெரிய பார்வையாளர் திரளைத் திரட்டித்தருவதன் மூலம் அவர்களது கலைத்திறன்களுக்கு புதிய சவால்களைத் தந்து அவர்களை வளர்த்தெடுத்த நிகழ்வு இது.

உண்மையைச்சொல்லப்போனால் இக்கலை இரவின் மூலம் பலர் பிரபலமானார்கள். இப்படி இக்கலை இரவில் மேடையேற்றப்பட்ட பாப்பம்பாடி ஜமா ,பின்னர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று நிகழ்வை நடத்துகிற குழுவாக பலரது கவனத்திற்குள்ளானது. பல எழுத்தாளர்கள் கலை இரவு மேடைகளில் ஏறுவதை விரும்பினார்கள். அவர்களது படைப்புகள் அம்மேடைகளில் பேசப்படுவது குறித்து பெருமிதம் கொண்டார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘திசைகளின் நடுவே’ இப்படி இந்நகரில் நடந்த ஒரு கலை இரவில்தான் வெளியிடப்பட்டது. அதனை பதிப்பித்து வெளியிட்டதும் திருவண்ணாமலை தமுஎச தான்.

பவா செல்லதுரை,கருணா,பல்லவன், போன்ற தோழர்களின் கற்பனை,திட்டமிடல்,ஒருங்கிணைப்பு இக்கலை இலக்கிய இரவினை ஒரு காத்திரமான இடத்திற்கு இட்டுச்சென்றது எனலாம். ஓவியர் பல்லவனின் கைவண்ணத்தில் உருவான ஹோர்டிங்குகள், விளம்பர தட்டிகள், முற்போக்கு இயக்கச் செயல்பாடுகளின் மக்கள் தொடர்பு உத்தியினை, அதன் பரப்புரையினை , ஒரு புதிய எல்லைக்கு விரிவு படுத்தியது. உண்மையில் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அக்கலை இரவுகளுக்கு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் எழுத்தாளர்கள்,கலைஞர்கள் செயற்பாட்டாளர்களெல்லாம் அழைக்காமலே வந்துவிடுவர்.

அப்படி வந்து பார்த்து பெற்ற உந்துதலில்தாம் அவரவர்களும் தத்தமது ஊர்களில் இது போன்ற கலை இரவுகளுக்குத் திட்டமிடுகின்றனர். இப்படித்தான் தமிழ்நாடு முழுதும் கலை இரவுகள் பரவலானது. திருவண்ணாமலையின் பௌர்ணமி இரவுகள் ‘கிரிவலத்துக்கு’ மட்டும் பெயர் போனவை அல்ல. தமுஎசவினர் நடத்துகிற ‘முற்றம்’ நிகழ்வும் இப்படியோர் பௌர்ணமி இரவில்தான் நடக்கும்.

திருவண்ணாமலையில் தமுஎசவினர் ஒழுங்கு செய்த மற்றொரு முக்கியமான நடவடிக்கை இந்த “முற்றம்” எனும் படைப்பாளரை சந்திக்கிற நிகழ்வாகும். ஒவ்வோர் மாதமும் ஓர் எழுத்தாளர், அவரது நீண்ட உரை பின்னர் அவரது படைப்புகள் குறித்து அடர்வும் ஆழமுமிக்க கலந்துரையாடல் எனச் செறிவாக நடந்தேறும் இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் கலை இலக்கிய வாதிகள் பெரும்பாலோர் பங்கேற்றனர்.

சுந்தர ராமசாமி , கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், அசோகமித்திரன்,மேலாண்மை பொன்னுச்சாமி, கோணங்கி,எஸ்.ராமகிருஷ்ணன் என தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல சச்சிதானந்தன்,பால் சக்கரியா போன்ற ஆங்கிலத்தில் எழுதுகிற எழுத்தாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இச்செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட பி.லெனின், பாலுமகேந்திரா, நடிகர்.மம்மூட்டி போன்ற திரைப்பிரபலங்கள், தமுஎகச திருவண்ணாமலை கிளைக்கு நெருக்கமான நண்பர்களாயினர்.

2005 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற தமுஎகச-வின் மாநில மாநாடு இக்கிளைச்செயல்பாட்டின் சிகரங்களில் ஒன்று. டேனிஷ் மிஷன் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அம்மாநாட்டினையும் இறுதி நாள் இரவில் நடைபெற்ற எங்களது சென்னை கலைக்குழுவின் ‘உபகதை’ நாடகத்தையும் திருவண்ணாமலை நகரம் இன்னும் நினைவில் கொண்டுள்ளது

2008 இல் சென்னையில் நடந்த மாநில மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்கம் [தமுஎச] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் [தமுஎகச] எனப்பெயர் மாற்றம் கண்டது. கலைஞர்கள் என சேர்க்கப்பட்டு பெயர் மாற்றம் பின்னர் நடந்திருந்தாலும் சாராம்சத்தில், அடிப்படையில், நடைமுறையில் ஏற்கனவே திருவண்ணாமலை கிளை என்பது, எழுத்தாளர்கள் கலைஞர்களின் கூட்டுச் செயல்பாட்டில்தான் தொழிற்பட்டுவந்தது. அண்மையில் திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்படவிழாவொன்றை வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் 5 நாட்கள் தங்கியிருந்து படங்களை கண்டனர். 30க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பலரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படவிழா இது.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு 1993- போப்பு பரிசளிக்கிறார் பக்கத்தில் கருணா, பின்னால் சந்துரு, பல்லவன்

தொடக்ககாலத்தில் மின்வாரிய ஊழியர்கள் தமுஎகசவை தொடங்க பின்னணியில் இருந்தார்கள் என்று சொன்னோமல்லவா! இன்று என்ன நிலைமை தெரியுமா? அடுத்தடுத்த தலைமுறையினைச் சேர்ந்த மின்வாரியத் தோழர்கள்தாம் முன்கையெடுத்துச் செயல்பட்டு அமைப்பின் முன்னணித் தலைவர்களாக பரிணமித்துள்ளனர். தற்போதுள்ள மாவட்டச் செயலாளர் பாலாஜி, துடிப்புமிக்க செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான நகர்க் கிளைச்செயலாளர் செந்தில்குமார் இருவருமே மின்வாரிய ஊழியர்கள்தாம். அது மட்டுமல்ல நாடறிந்த எழுத்தாளர் பவா செல்லதுரையும் மின்வாரியத்தில் கணக்கு அலுவலராகப் பணியாற்றுபவர்தாம்.

ஓவியர் பல்லவனின் வழியில் தற்போது வசந்த் வந்திருக்கிறார். முன்னவர் பெரிய பேனர்களில் தூரிகை கொண்டு வரைபவர். வசந்த், கணிணி திரையில் தன் கைவண்ணத்தைக் காட்டும் ஒரு கிராஃபிக் டிஸைனர். அண்மைக்காலமாக தமுஎகச-வினது அனைத்து நிகழ்வுகளுக்கும் தோழர் கருப்பு கருணாவின் மேற்பார்வையில் போஸ்டர் மற்றும் அழைப்பிதழ்களை வடிவமைப்பு செய்வது வசந்த் தான். தமுஎகச மட்டுமல்லாது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகள் தற்போது திருவண்ணாமலையில் செயல்படுகின்றன; பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

எழுத்தாளர் பவா செல்லதுரை தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உருவாக்கியுள்ள ‘பத்தாயம்’ எனும் அரங்கில் அடிக்கடி பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நாடக அளிக்கைகளை நடத்திக்கொண்டிருக்கிறார். இப்படி அவர் பத்தாயத்தில் தொடங்கிய ‘பெருங்கதையாடல்’ எனும் சமகால எழுத்தாளர்களின் கதை சொல்கிற நிகழ்வு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று இன்றைக்கு தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு மட்டுமல்ல பலநாடுகளுக்கும் அழைக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிற ஒரு நிகழ்வாக வெளிச்சம் பெற்றிருக்கிறது.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான 2020 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற கே.வி.ஜெயஶ்ரீ , த மு எ க ச திருவண்ணாமலை கிளைச் செயல்பாடுகளிலிருந்து முகிழ்த்தெழுந்தவர்தாம். கிட்டத்தட்ட 42 ஆண்டு கால தமுஎகச திருவண்ணாமலை கிளையின் செயல்பாட்டுக்குத் தரப்பட்ட ஓர் எளிய சிறு அங்கீகாரமாகக் கூட இவ்விருதினை நாம் கருதலாம்.

இப்படி பல முன்மாதிரிச் செயல்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள திருவண்ணாமலை நகரம், இன்னும் பல முன்மாதிரிகளை துருவியறிந்து செயலாக்கவேண்டும் என்பதுதான் பலரது விருப்பமும். அதற்கான வளனும் திறனும் திருவண்ணாமலைக்கு நிச்சயம் உண்டு. இவ்வரலாற்றின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியான கவிஞர்.வெண்மணி , கருப்பு.கருணா ,வைகறை சுகந்தன், வைகறை.கோவிந்தன்,பாஸ்கர், கவிஞர்.பீனிக்ஸ் ஆகியோர் இன்று இல்லை. எனினும் அவர்கள் நினைவுகள் தரும் உந்துதலில் இவ்வரலாற்றை முன்னெடுத்துச் செல்கிற வலு திருவண்ணாமலை த மு எ க ச வினருக்கு என்றென்றும் உண்டு.
வெளிவரவுள்ள ‘வரலாற்றில் திருவண்ணாமலை’ எனும் நூலுக்காக எழுதிய ஒரு கட்டுரை

கட்டுரையாளர் தொடர்புக்கு:
[email protected]

முந்தைய தொடரை வாசிக்க: 

அண்ணாமலை புராணம் (திருவண்ணாமலை தமுஎகச வரலாறு) – பிரளயன்

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam

அண்ணாமலை புராணம் (திருவண்ணாமலை தமுஎகச வரலாறு) – பிரளயன்



ஒருவர், தனது முகநூல் பதிவினில் திருவண்ணாமலையை ‘தமிழ்நாட்டின் டப்ளின்’ என்று குறிப்பிட்டிருந்ததைக் காண நேர்ந்தது.

கலை இலக்கிய செயல்பாடுகளுக்கு பெயர்பெற்றதாக ச் சொல்லப்படும் டப்ளின், அயர்லாந்தின் தலை நகர். டப்ளின் நகரினது நடுத்தரவர்க்க வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசும் 15 கதைகள் கொண்ட தனது சிறுகதை தொகுப்பிற்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் , ‘டப்ளினர்ஸ்” என்றே பெயர் சூட்டினார். இந்தப்பின்னணியில் தான் அவ்வாசகர் இப்பெயரை திருவண்ணாமலைக்கு சூட்டியிருக்கக்கூடும்

இப்படியெல்லாம் சில இலக்கிய வாசகர்கள் தங்கள் ஊருக்கு பெயர் வைத்துள்ளார்கள் என்பதை திருவண்ணாமலை மக்கள் அறிய மாட்டார்கள்.

பல்வேறு காரணங்களால் பரவலாய் அறியப்பெற்ற ‘திருவண்ணாமலை’ யின் உண்மை நிலை வேறானது. தனி நபர் வருமானத்தில் , பிற சமூக வளர்ச்சிக் குறியீடுகளில், ஒப்பீட்டளவில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இது.

எந்த வித நவீனத்தொழில்களும் இம்மாவட்டத்தில் இல்லை. அண்மையில்தான் செய்யாறில் ஒரு தொழிற் வளாகம் தொடங்கப்பட்டுள்ளது எனினும் இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான பொருளாதாரமென்பது விவசாயமும் அதை சார்ந்த வணிகமும்தான். வணிகமென்று சொன்னால் விவசாய விளை பொருட்களை வாங்கி விற்கிற தரகு வணிகம்தான்.
கடந்த 25,30 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்ற தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் இவற்றால் திருவண்ணாமலை நகருக்கு மற்றொரு முகம் கிடைத்திருக்கிறது எனச்சொல்லலாம். மேலும் சுற்றுலாத்தலம் , யாத்திரீகர்களின் புனிதத்தலம் என்கிற வகையில் இந்நகருக்கு வேறொரு முக்கியத்துவம் உண்டே தவிர உண்மையில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ் நாட்டில் 27 ஆவது இடத்தில்தான் உள்ளது.

https://eprawisdom.com/jpanel/upload/articles/1234am15.Dr.I.Sundar.pdf

ஆனால் இத்திருவண்ணாமலை நகரம் தான் மக்கள் பண்பாட்டுச் செயல்பாடுகளின் நவீன கால அடையாளமான “கலை இரவு” என்கிற வடிவத்தை தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகம் செய்துவைத்தது.

அதுமட்டுமல்ல பல்விதமான கலை இலக்கியச்செயல்பாடுகளுக்கு திருவண்ணாமலை தொடர்ந்து இடமளித்து வந்துள்ளது. அவற்றில் எனது நினைவில் பதிந்தவற்றை இங்கே பதிவு செய்ய முயல்கிறேன்

திருவண்ணாமலை மக்களுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதியென்பது சுதந்திர தின கொண்டாட்டம் மட்டுமல்ல; அந்நாளினை , அருணகிரிநாதர் விழாவெனவும் வெகு சிறப்பாகக் கொண்டாடுவர். இவ்வழக்கம் அவர்களுக்கு வெகுகாலமாகவே உண்டு.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1990 கலை இரவில் சென்னை கலைக்குழுவின் ‘சதி நாடகம்

திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற பக்தி ப் பாடல்களை இயற்றிய அருணகிரிநாதர், திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர். 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரை பிரபுட தேவ மகாராஜன் என்கிற மன்னர் ஆதரித்ததாக திருப்புகழ் பாடல்களில் தெரிகிற குறிப்புகள் சொல்கின்றன.

கி.பி 1431 முதல் 1456 வரை ஆண்ட இரண்டாம் தேவராயனே [Devarayan-II] பிரபுட தேவ மகாராஜன் என இங்கே அழைக்கப்படுகிறார். இவர் கிருஷ்ணதேவராயருக்கு 60 ஆண்டுகள் முற்பட்டவர்.
அருணகிரிநாதர் இறந்த தும் திருவண்ணாமலையில்தான். அவரது சமாதி அண்ணாமலையார் கோவிலின் மேற்கு பிரகாரத்தில் அமைந்துள்ளது.

எனவே தமது ஊர்க்காரரான அருணகிரி நாதரைப் போற்றுகிற விழாவை திருவண்ணாமலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவதில் ஆச்சர்யங்களேதுமில்லை.

ஆகஸ்டு 14 மாலை தொடங்குகிற இந்த அருணகிரி நாதர் விழா ஆகஸ்டு 16 இரவு வரை நடக்கும்.
இம்முன்று நாள் நிகழ்வுகளுக்கும் பெருங்கூட்டம் சேரும். அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரத்தினருகேயுள்ள கம்பத்திளையனார் சன்னதியிலிருந்து வல்லாள மகாராஜ கோபுரம் கோபுரத்திளையனார் சன்னதி வரை யிலுள்ள பெரும்பரப்பில் கொட்டகை போட்டிருப்பார்கள். கொட்டகையென்றால் நிழற்பந்தல்தான். நிழல் தரும் ; மழைபெய்தால் ஒழுகும். அத்தகையதான ஒற்றைக்கீற்றினை வேய்ந்த பந்தல் . ஆயிரங்கால் மண்டப நுழைவாயில் படிக்கட்டிற்கும் பாதாள லிங்க நுழைவாயிலுக்கும் இடையில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாயிரம் பேருக்கு மேல் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிலான பிரம்மாண்டமான ஏற்பாடு இது.

14 மாலை, அமைச்சர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் தொடங்கிவைக்க அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பிரதானமான இசைக்கலைஞர்களது இசைக்கச்சேரியோ அல்லது நடன நிகழ்வோ நடக்கும். மதுரை சோமு, பாலமுரளி கிருஷ்ணா,டி.கே.பட்டம்மாள் , சூலமங்கலம் சகோதரிகள் போன்றவர்களுடைய கச்சேரியினை எனது சிறிய வயதில் நான் இவ்விழாவினில் கண்டும் கேட்டுமிருக்கிறேன்.

மறுநாள் 15 ஆம் தேதியன்று நாடுமுழுவதுமிருந்து வந்த சங்கீத கோஷ்டிகளின் இன்னிசைக்கச்சேரிகள் , நாமாவளி கோஷ்டிகளின் பஜனை என காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நிகழ்வுகள் நடக்கும். இடையிடையே உரைகள், சங்கீத உபன்யாசங்கள் நிகழும். இந்நிகழ்ச்சியினையெல்லாம் மேடையிலிருந்து கொண்டு பித்துக்குளி முருகதாஸ்தான் ஒருங்கிணைப்பார். இடையிடையே அவரும் தனது கம்பீரக்குரல் கொண்டு பாடவும் செய்வார்.
ஒவ்வோராண்டும் அன்று பிற்பகல் சரியாக 12.30 முதல் 1.30 வரை கிருபானந்தவாரியாரின் அருளுரை நடக்கும். அப்போது மிகப்பெரும் கூட்டம் சேர்ந்துவிடும். வாரியாரின் உரைக்குப்பிறகு எல்லோரும் மதிய உணவிற்கு கலைந்து செல்வார்கள். அதன்பிறகு தொடர்ந்து இன்னிசை நிகழ்வுகள் மாலையில் மறுபடியும் பெங்களூர் ரமணியம்மாள் இசை நிகழ்வு ,புலவர்.கீரன் போன்றவர்களின் சொற்பொழிவு, எம்பார் விஜயராகவாச்சாரியார் போன்றோரின் கதாகாலட்சேபம் என 15ஆம் தேதி நிகழ்வு முடிவுக்கு வரும்.

அவ்விழாவில் பங்கேற்ற எல்லா இசைக்குழுக்களும் 15ஆம் தேதி இரவு நகரினது மாடவீதிகளில் பாடியபடியே உலாவும் வருவர்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன், எனக்கு இசை கற்பித்த ஆசிரியர் மற்றும் என்னோடு இசைபயிலும் சக மாணவர்கள் இவர்களோடு மாடவீதியில் பாடிக்கொண்டே உலாவந்த அனுபவம் எனக்குமுண்டு.

மறுநாள் 16 ஆம் தேதி முழுக்க முழுக்க இலக்கிய உரைகள் தாம். காலையில் தனித்த உரைகள். மதியத்திற்குப்பிறகு வழக்காடுமன்றம், பட்டிமன்றம் என நிகழ்ச்சிகள் தொடரும்.
இவ்வுரைகள் எல்லாம் பக்தி இலக்கியத்தை மையமாகக்கொண்டே நிகழும்.

பெரிய புராணம்,கம்ப ராமாயணம், வில்லி பாரதம் எனச்சுழலும் அவ்வுரைகள் சிற்சில சமயங்களில் சிலப்பதிகாரம் ,திருக்குறள் என நீளவும் செய்யும்.

கம்பன் அடிப்பொடி சா.கணேசன், தமிழ்க்கடல் ராய .சொ, வாகீச கலாநிதி.கி.வா.ஜகன்னாதன், சிலம்புச்செல்வர்.ம.பொ.சி, பேராசிரியர்.ராதாகிருஷ்ணன், பேரா. சொ.சத்ய சீலன், ஜெயகுமாரி பாஸ்கரன், பேரா.ராமநாதன், பேரா.சரஸ்வதி ராமநாதன் போன்ற அன்றைக்கிருந்த பிரபலமான பக்தி இலக்கியப் பேச்சாளர்கள்தாம் அந்நிகழ்வுகளின் நாயகர்கள். அவர்கள் அன்று எவ்வாறு அடைமொழிகளோடு அழைக்கப்பட்டனரோ அவ்வாறே அவர்களை இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன் . இன்னும் கூட பல பிரபலங்கள் அவ்விழாவில் பங்கேற்றதுண்டு. என் நினைவில் இருப்போரை மட்டுமே இங்கே என்னால் குறிப்பிட முடிந்துள்ளது.

இவ்விழாவின் போது விழாப்பந்தலின் ஒரு புறமாக அதாவது கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலின் நுழைவாயிலருகே தண்ணீர் பந்தல் அமைத்து எங்கள் குடும்பத்தின் சார்பாக விழாவிற்கு வரும் அனைவருக்கும் நீர் மோர், தண்ணீர் வழங்குவது வழக்கம். அதனால் எனது தந்தையார் தமையனாரோடு நானும் அத்தண்ணீர்ப்பந்தலில் சேவையிலிருப்பேன். எனவே மிகச்சிறு வயது முதற்கொண்டே அருணகிரிநாதர் விழாவில் பங்கேற்பது என்பது என்னுடைய வருடாந்தர வாடிக்கையாகிவிட்டது.

80களிலோ அல்லது 90களிலோ அவ்விழாக்குழுவினரில் ஒரு பகுதியாக இருந்த டெல்லி மற்றும் சென்னை வாசிகளெல்லாம் தனியாக பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு அருணகிரிநாதர் விழாவானது முன்பு போல அவ்வளவு பிரம்மாண்டமாகவெல்லாம் நடத்தப்படுவதில்லை. அண்ணாமலையார் கோவிலின் கல்யாணசுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குப் புறமாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்க நிகழ்ச்சியாக தற்போது நடத்தி வருகின்றனர்.

இது மட்டுமல்ல கந்தர் சஷ்டி சமயத்தில் திருவண்ணாமலை குமரகோவில் தெருவிலுள்ள குமரகோவிலில் இன்னிசைக்கச்சேரிகள் நடக்கும். எம்.எம்.தண்டபாணி தேசிகர், கே.பி சுந்தராம்பாள் போன்றோரின் கச்சேரிகள் நடந்ததை நான் சிறுவயதில் கண்டிருக்கிறேன். புரிசை. முருகேச முதலியாரின் கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவுகள், பெரிய புராண , கந்தபுராண சொற்பொழிவுகள் அங்கே நடக்கும்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1990 கலை இரவில் சென்னை கலைக்குழுவின் ‘சதி நாடகம்

பின்னர் கோடை காலத்தில் ஆனி,ஆடி மாதங்களில் கோவிலுக்கு மேற்புறமுள்ள பே கோபுரத்தெருவில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோவிலில் பாரதச் சொற்பொழிவு நடக்கும். ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் பாரதச் சொற்பொழிவு மதியம் 2மணிக்கு தொடங்கி மாலை நாலரை மணி வரை நடைபெறும். நாலரை மணிக்கு மேல் அன்றைய பாரதக்கதை நிகழ்வுகளை நாடகமாக நடித்துக்காட்டுவர்.

பகாசூரன் வதம், அர்ஜூனன் மச்ச யந்திரத்தை வீழ்த்துவது, இதையெல்லாம் நடித்துக்காட்டுவர்.
உதாரணத்திற்கு, பார்ப்பன வேடத்திலிருக்கும் பீமசேனன் மாட்டுவண்டியில் ஏறி நின்று கொண்டு பகா சூரனுக்காக கொண்டு செல்லப்படும் பெரிய அண்டாவில் இருக்கும் உணவை அள்ளி அள்ளித் தின்று கொண்டவாறே வருவான். அண்டாவை நிரப்ப வழியெங்கும் மக்கள் அவரவர்கள் வீட்டில் தயாரித்த கொழுக்கட்டை, அப்பம்,பணியாரம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நிற்பார்கள். அந்த அண்டாவுள்ள வண்டிக்கு முன்னாலே பகாசூரன் வேடமிட்ட ஒருவர் பெரிய கதாயுதத்தை ஏந்தி ஆ ஹூ வென கத்தி ஆர்ப்பாட்டமிட்ட படி வந்து கொண்டிருப்பார். இப்படி மாடவீதியில் ஊர்வலமாக வருகின்ற இவர்கள் திரௌபதியம்மன் கோவிலருகில் வந்ததும் கீழே இறங்கி சண்டையிடுவார்கள். சண்டை முடிவில் பகாசூரன் கொல்லப்படுவார். இவற்றை அப்படியே நிகழ்த்திக்காட்டுவார்கள்.

அது போல பாரதப்போருக்கு முன் வருகிற விராட பருவத்தில் சொல்லப்படும் மாடுகளைக் கவரும்
(ஆநிரை கவர்தல்) நிகழ்வு ‘மாடு மடக்குதல்’ என்ற பெயரில் நிகழும். இதற்காக நூற்றுக்கணக்கான மாடுகளை மாடவீதிகளில் ஓட்டிவருவார்கள்.

இவையெல்லாம் கூத்துக்கலைஞர்களாலும் ஊர் மக்களாலும் நிகழ்த்தப்பெறும். அர்ச்சுனன் மச்ச யந்திரத்தை வீழ்த்துதல் போன்ற சில நிகழ்வுகளை பள்ளி மாணவர்களைக்கொண்டும் நிகழ்த்திக்காட்டுவர்.

பாரதக்கதை சொல்லல் நிறைவு பெறுகிற கடைசி வாரங்களில் இரவு நேரத்தில் கூத்து நடக்கும்; இறுதி நாளன்று பகல் நேரத்தில் துரியோதனன் படுகளத்தோடு கூத்தும் பாரதச் சொற்பொழிவும் முடிவுக்கு வரும்.

இது மட்டுமல்லாது செங்கம் ரோட்டில் தாமரைக்குளமருகில் அமைந்துள்ள தர்காவினருகே ஒவ்வோராண்டும் நடைபெறும் கந்தூரி திருவிழாவினையொட்டி ஒருவார காலம் இரவு முழுக்க  ‘கவ்வாலி இன்னிசைக் கச்சேரிகள்’ நடக்கும். நாகூர் ஹனிபா தொடங்கி வட இந்தியாவின் புகழ் பெற்ற கவ்வாலி கலைஞர்கள் வரை பலர் இந்நிகழ்வுகளில் பங்கேற்பர். 

நான் கல்லூரி படிக்கிற காலத்தில் மிகவும் புகழ்பெற்ற கவ்வாலிக்கலைஞரான அஜீஸ் நாஸனது [‘ஜூம் பராபரி ஜூம் ஷரபி’ பாடலைப் பாடியவர்]  கச்சேரியினை இவ்விழாவில் கேட்டிருக்கிறேன்.

இவை எல்லாவற்றிற்கும்  சமய பேதமின்றி எல்லாதரப்பினரும் கூடுவார்கள்.

அது மட்டுமல்லாது அப்போதெல்லாம் நடக்கிற அரசியல் கட்சிக்கூட்டங்களுக்கு , அது திமுக, அதிமுக, காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் என எந்தக்கட்சிக்கூட்டமாக இருந்தாலும் சரி , அக்கட்சியினது தொண்டர்கள் மட்டுமல்லாது  ஆர்வத்தோடு பொது மக்களும் கூடுவர்.  

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
தொடக்க கால இலக்கிய இரவு- படத்தில் காளிதாஸ், அரசம்பட்டு முருகேசன், பவா செல்லதுரை, கந்தர்வன், தோழர் வெங்கடேசன்

ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் சார்பில் அடிக்கடி நடக்கும்  டேப் ராவணனின் கலை நிகழ்ச்சி, திமுக வினரின் இரா. வெற்றிகொண்டான், அதிமுகவினரின் ஆலங்குடி சோமு,  ஆகியோரின் மேடைப்பேச்சுக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரின் ‘மதுரை மாரி –மணவாளன்’ கலைக்குழுவினர் நடத்துகிற கலை நிகழ்ச்சி இவற்றுக்கெல்லாம் பெருங்கூட்டம் சேரும். 

மாற்றுக்கட்சியினராக இருப்பினும் கட்சி பேதம் தாண்டி மேடைப்பேச்சுக்களை ரசிக்கிற பழக்கம் நகரவாசிகளுக்கு உண்டு. 

இப்படி எல்லாவற்றையும் போற்றுகிற ஒரு பண்பு திருவண்ணாமலை மக்களுக்கு இருந்தது.

அதுமட்டுமல்ல வணிகர்கள், சேவைத்துறையினர்  என ஓய்வை அனுபவிக்கிற வர்க்கத்தினர் [Leisured class] திருவண்ணாமலை நகரில் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.  இவர்கள்தாம் இத்தகைய ஒரு பண்பை ப் போற்றுபவர்களாகவும் ஆதரவளிப்பவர்களாகவும் இருந்தனர். வணிக  நிறுவனங்களில் ,கடைகளில் வேலை செய்யும் அறிவுழைப்பினர், உடலுழைப்பினர், உதிரித்தொழிலாளர்கள் என அனைத்துத்தரப்பினருமே இப்பண்பினது ஆதிக்கத்திற்கு ஆட்பட்டனர் என்றே சொல்லலாம்.

ஓய்வை அனுபவிக்கிறவர்கள் அதிகமாயிருப்பதற்கு  வேறொரு காரணமும் சொல்வர்.

 “ஆண்டிக்கு பெருத்தது அண்ணாமலை” என்றொரு சொல்வழக்கு உண்டு. அதாவது துறவறம் மேற்கொண்ட ஆண்டிகள்,துறவிகள்  அதிகமாயிருப்பது திருவண்ணாமலை என்றிதற்குப்பொருள். காவி கட்டிக்கொண்டு  வந்தாலே போதும் , ஒருவருக்கு , உறங்க இடமும் மூன்று வேளை உணவும் திருவண்ணாமலையில் கிடைத்துவிடும். அதற்கான ஏற்பாடுகள் இன்று மட்டுமல்ல நீண்ட  நெடுங்காலமாகவே இந்நகரில்  உண்டு. 

மாடவீதிகள் நெடுக   உணவளிக்கும் சத்திரங்கள்,மடங்கள்; இப்படி ஓயாமல் உணவளிப்பதால் ஒரு மடத்திற்கு ஓயாமடம் என்றே பெயர். தற்போது இவையெல்லாம் பழங்கதைகளாகிவிட்டனவென்றாலும், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், ரமணாசிரமம், யோகி ராம்சரத்குமார் ஆசிரமம் என  எல்லோருக்கும் உணவளிக்கிற புதிய ஏற்பாடுகள் தற்போது பெருகிவிட்டன.

அதுமட்டுமல்ல இவ்வூரினது அமைப்பு, அதன் எளிமை, இதன் மையமாயிருக்கிற மலை ,அதன் இயற்கைச் சூழல், பெரிய விசாலமான கோவில் என இந்நகரின் பல அம்சங்கள்  ஆன்மீகத்தேடலில் உள்ளோரை ஈர்த்து விடுகிறது. 

கிபி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குரு நமச்சிவாயர் எனும் துறவி எழுதிய அண்ணாமலை வெண்பாவில் இப்படிப்  பாடல்கள்  உண்டு.

சீலமுனிவோர்கள் செறியுமலை/ சிந்திப்பார் முன் நின்று முக்திவழங்கு மலை/

ஞான நெறி காட்டுமலை /ஞான முனிவோர்கள் நித்தம் நாடும் மலை/

அஞ்ஞானக்கங்குல் அகற்றும் மலை /அன்பருக்கு மெய்ஞானச்சோதி விளக்கு மலை /ஞானத்தபோதனரை வாவென்றழைக்கும் மலை அண்ணாமலை.

ஆதிநடமாடும் மலை/ அன்றிருவர் தேடும் மலை /

சோதிமதி ஆடரவம் சூடும் மலை-நீதி 

தழைக்கும் மலை/ ஞானத் தபோதனரை –
வாவென்றழைக்கும் மலை !அண்ணாமலை !!

“ஞானத்தபோதனரை வாவென்றழைக்கும் மலை அண்ணாமலை”, இங்கே தபோதனர் என்று சொல்வது ‘தபஸ்’ செய்வோரை.  

தபஸ் எனும் வடமொழிச்சொல்லுக்கு இணையானதுதான் ‘தவம்’ எனும் சொல். 

தவம் , வேள்வி எனும் இரு சொற்கள் பண்டைய இந்தியாவின் சமய வரலாறுகளை வாசிக்கிறபோது நாம் எதிர்கொள்கிற மிக முக்கியமான சொற்களாகும்.

தவம் வேறு; வேள்வி வேறு .  

தேவதைகளை அல்லது தெய்வங்களை திருப்தி செய்ய  அதாவது தீ வளர்த்து அதில் பலிகளை ஆகுதிகளை இட்டு செய்யப்படுவதே வேள்வியெனப்படும்.  ஒரு காலத்தில் மிருகங்களை கால்நடைகளை இவ்வேள்வியில் பலியிடுவது வழக்கம்; தற்போது அவை கைவிடப்பட்டு தானியங்கள் பிறபொருட்கள் போன்றவை இடப்படுகின்றன.

இந்த வேள்விகளைச்  [யக்ஞம்] செய்வோர் எவரும் சமூகவாழ்விலிருந்து ஒதுங்கியிருக்கமாட்டார்கள். ஆனால் தவம் அல்லது தபஸ் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிற சமூக வாழ்க்கையினை விட்டு விலகி, [Renunciation] தனித்து வாழும் ஒரு வாழ்வைத் தேர்ந்து கொள்வதாகும்..

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு 1993 : வைகறை சுகந்தன், உத்தமன், ஏழுமலை

இப்படி சமூக வாழ்விலிருந்து  ஒதுங்கி  ஒரு மெய்த்தேடலை மேற்கொள்பவரையே தபசிகள் அல்லது தவசிகள் என்றழைப்பர்.

 வேள்வி என்பது ஆண்களால் மட்டுமே செய்யப்படுவது. ஆனால் தபசிகளில் இரு பாலரும் உண்டு. 

ஆரியர்களின்  படையெடுப்பிற்குப் பிறகே இந்திய மண்ணில்  “வேள்வி” என்கிற சடங்கு அறிமுகமாகிறது. ஆனால் சமூகத்திலிருந்து ஒதுங்கி நின்று ‘தவம்’ மேற்கொள்கிற வாழ்முறை என்பது ஆரியர்களின் நுழைவிற்கு    முன்பிருந்த ‘தொல் சமூகத்திலேயே’ இருந்துள்ளதென சமூக வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனர்.

இத்தகைய தபோதனர்களை கவர்ந்திழுக்குமிடமாக இந் நகர் விளங்குகிறது என்றே அண்ணாமலை வெண்பா சொல்கிறது.

பெரிய வேலையில் இருந்து பெரிய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்துவிட்டு ஓய்வு பெற்ற பின் தன் சேமிப்பு, ஓய்வூதியம் எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கு தானம் தந்துவிட்டு பிச்சை ஏற்று வாழும் பல முதியவர்களை நீங்கள் சர்வ சாதாரணமாக திருவண்ணாமலை நகரில் சந்திக்கலாம். 

பணம் ,புகழ் அந்தஸ்து எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு மனநிறைவு கிட்டாததால் இவர்கள் இவ்வாழ்வைத்தேர்வு செய்கின்றனர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதுமட்டுமல்ல பஞ்சத்துக்கு ஆண்டி ஆனவர்களும் இங்கே நிறைய உண்டு.

எனவே ஒட்டுமொத்தமாக இவர்களையெல்லாம் தபோதனர்கள் எனச்சொல்லமுடியுமா எனத்தெரியவில்லை.

எப்படியோ திருவண்ணாமலை நகரில் ஓய்வை அனுபவிக்கிற இன்னொரு வகையான பகுதியினரே இத்தகையவர்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான மக்கள் தொகுதி அவர்களது பொதுவான ஒரு மனநிலை இவையே திருவண்ணாமலையின் ‘பொதுப்புத்தியினை’  வடிவமைத்தது என நாம் முடிவுக்கு வரலாம்.  

அதே நேரத்தில் , இந்நகரினது பொதுப்புத்திக்கு மாறான வேறு சில மாற்று போக்குகளுக்கும் இந்நகர் இடமளித்திருந்தது என்பதையும் நாம் உணரவேண்டும் .  

1940 கள் தொடங்கி  திராவிட இயக்கத்தினது செல்வாக்கு தளங்களில் ஒன்றாக இந்நகர் விளங்கியிருக்கிறது.  

1948 இல்பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த ப.உ.சண்முகத்தை நகரமன்றத்தலைவராக திருவண்ணாமலை  தேர்வு செய்தது.

சரியாகச்சொல்லவேண்டுமெனில் தமிழ்நாட்டிலேயே திராவிட இயக்கம் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முதல் நபர் ப.உ.சண்முகம் அவர்கள்தான். அவருக்கு இவ்வாய்ப்பை வழங்கியது திருவண்ணாமலை நகர மக்கள்தான்.

1950களின் தொடக்கத்தில் திமுக வின் சார்பில் திருவண்ணாமலையில் ‘இந்தி எதிர்ப்புக்காக’ மிகப்பெரிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. 

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக திமுக செயல் படத்தொடங்கிய பிறகு நடந்த மாநாடு என்பதால் திமுக வரலாற்றில் இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.  பிச்சைக்காரர்கள்  மாநாடு நடத்துகிறார்கள் என பிற கட்சியினர் திமுகவை கேலி செய்ததாகவும் இதற்கு பதிலடி தரும் வகையிலே பராசக்தி திரைப்படத்தில் ‘பிச்சைக்காரர் மாநாடு’ நடத்துவது போன்ற ஒரு காட்சியை கலைஞர்.கருணாநிதி எழுதியதாகவும் சொல்லப்படுவதுண்டு.

1957 இல் திமுகவின் சார்பில் போட்டியிட்ட ப உ சண்முகத்தை  சட்டமன்ற உறுப்பினராக திருவண்ணாமலை தேர்வு செய்கிறது.

மேலும் 1957 ,1962 ஆண்டுகளில் நடைபெற்ற  மக்களவைத்தேர்தல்களில் திராவிட முன்னேற்றக்கழகமே வெற்றி பெற்றது. இந்நகரைச்சேர்ந்த இரா.தர்மலிங்கம் இரு முறை மக்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1993 கலை இரவில் கோணங்கி

  1970 களின் பிற்பகுதிகளில் , அவசர நிலைக்குப் பிறகு, நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் திராவிட மாணவர்கழகம் ஒரு செல்வாக்கு பெற்ற மாணவர் அமைப்பாக விளங்கியது. அரசியலில் ஈடுபாட்டோடு இருந்த போதிலும் கலை இலக்கிய செயல்பாடுகளிலும் ஆர்வங்காட்டுகிறவர்களாக அவர்கள் இருந்தனர். 

எங்களது சீனியர் மாணவர்களில் ஒருவரான திமுகவைச் சேர்ந்த முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சரும், தற்போதைய கீழ்பெண்ணாத்தூர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினரும் பேரவை துணைத்தலைவருமான கு.பிச்சாண்டி  அவர்கள், அவ்வமைப்பில் தீவிரமாகச்செயல்பட்டுவந்தவர்தாம்.  அவர் ,கல்லூரியில் படிக்கிற காலத்தில் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராய் இருந்தார். அவர் ஆதரிக்கிறவர்கள்தாம் கல்லூரியின் மாணவர் பேரவைத்தலைவராக வெல்ல முடியும். அதனால் அவரை ’கிங் மேக்கர்’ என அவரது நெருங்கிய நட்பு வட்டம் அழைக்கும். 

 அவர் ‘பேங்கோஸ்’ எனும் தாள இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர். அவர் மற்றும் கல்லூரி நண்பர்களெல்லாம் சேர்ந்து  மெல்லிசை நிகழ்ச்சிகளெல்லாம் நடத்துவர். நான் முறைப்படி இசை பயின்றவன் என்ற போதிலும் மெல்லிசைக்கச்சேரிகளில் பாட நான், என்னை தயார் படுத்திக்கொண்டவனல்ல. எனினும் அம்மெல்லிசைக்குழுவில் ‘டைமிங்’ வாசிப்பது கோரஸ் பாடுவது எனச்சிறு பங்களிப்பினைச்செய்துள்ளேன்.  

இன்று நினைத்துப் பார்த்தால் ஒப்பீட்டளவில் மிகவும் வலுவான மெல்லிசைக்குழுதான் அது. முறைப்படி மேற்கத்திய சங்கீதம் பயின்ற ஜெயகுமார், பிரேம் குமார்,  எனும் சகோதரர்கள் அக்கார்டினையும் எலக்ட்ரிக் கிதாரையும்  வாசிப்பார்கள். இன்றைய கீ போர்டுக்கு முந்தைய வடிவமான ‘காம்போ ஆர்கன்’ மற்றும் ட்ரம்ஸ்  வாசிப்பதற்கு வேலூரில் இருந்து சிலர்  வருவார்கள். அஞ்சல் துறையில் பணியாற்றுகிற சிவலிங்கம் என்பவர் தபேலா, டோலக் வாசிப்பார். எனது மற்றொரு கல்லூரி சீனியரான விஜயகுமார் ட்ரிபிள் காங்கோ வாசிப்பார் மற்றும் ஜேசுதாஸ் பாடிய பாடல்களைப் பாடுவார். இப்படித் தொழிற் முறையில் திறன்மிக்க குழுதான் அது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் பிச்சாண்டி அவர்களது முன்னெடுப்பில் ‘ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி ’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. உறுப்பினர்களைச்சேர்த்து ஆண்டுச்சந்தா வசூலித்து அவர்களுக்காக மாதம் ஒரு மெல்லிசை நிகழ்ச்சியோ நாடகமோ நிகழ்த்திக்காட்டுகிற ஏற்பாடு அது. சென்னையில் ‘சபா’ க்கள் இருக்கிறதல்லவா அது போன்றதுதான் இதுவும்.

பிச்சாண்டி மட்டுமல்லாது அப்போது கல்லூரி பேரவைத்தலைவராக இருந்த என்.செல்வராஜ், ஏ.சண்முகம், ஜி. சேஷாத்திரி,ஆர்.கோபால்சாமி, சிவ.இளங்கோ,ஸ்கூட் குமார், வை.ஆனந்தகுமார், என்.சம்பத், ஆர்.கே.மனோகரன்,  ஊரிசு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துரை.புகழேந்தி மற்றும் என்னைப் போன்ற சக மாணவர்களெல்லாம் இந்த அமைப்பினை  வழி நடத்தும் இயக்குநர்கள் குழுவில் இருந்தோம்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
காவ்யா சண்முகசுந்தரம், கந்தர்வன், தமிழ்ச்செல்வன், கே.வி.ஷைலஜா, கருப்பு கருணா, சு.வெங்கடேசன்

முற்றிலும் மாணவர்களால் நடத்தப்பட்ட இந்த ரம்யா ஆர்ட்ஸ் அகாடெமி, அப்போது மிகவும் பிரபலமாக இருந்த மெல்லிசைக்குழுவில் ஒன்றான ‘விவேக் சாரதி’ குழுவினரை அழைத்து காமட்சியம்மன் கோவில் தெருவிலுள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில்  முதல் நிகழ்ச்சியினை  நடத்தியது.

பின்னர் ரேடியோ கிரவுண்டில்  பூர்ணம்.விஸ்வநாதனின் ‘கால்கட்டு’, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘தூக்கு மேடை’  போன்ற நாடகங்களும்  ‘லலிதாஞ்சலி’ குழுவினரின் இசை நிகழ்ச்சியும்  என தொடர்ந்து நிகழ்ச்சிகள் ரம்யா ஆர்ட்ஸ் அக்கடெமி சார்பில் நடத்தப்பட்டன. இந்த லலிதாஞ்சலி குழுவினரில் பிரதானமாக ஷோபா,சுந்தர், சுரேந்தர் என மூவர் பாடுவார்கள். இந்த ஷோபா என்பவர் வேறு யாருமல்ல நடிகர் விஜய் யின் தாயார்தான் அவர் .

இப்படி நான்கு நிகழ்ச்சிகள் நடத்தியதோடு சரி.  ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி யின் கதை அற்பாயுசில் முடிந்து போனது. அதற்குப்பல காரணங்கள்.

இப்படியொரு தருணத்தில்தான்  திராவிட மாணவர் கழகத்தில் தீவிரமாகச்செயல்பட்டு வந்த   மோகனசுந்தரம், பாரி  என்கிற எங்களது சீனியர் மாணவர்கள் இருவர் தர்மபுரியில் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய ஓர் அரசியல் பயிற்சி முகாமிற்கு சென்று வந்தனர். 

10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற அம்முகாமில் பங்கேற்ற அவர்கள் திரும்பிவந்ததும் மிகப்பெரிய மாற்றம் எங்கள் மாணவர் வட்டத்தில் நிகழ்ந்தது. 

இடது சாரி சித்தாந்தம் குறித்த விவாதங்கள், அவை குறித்த நூல்கள் வாசிப்பது என ஒரு புதியபோக்கு எங்களிடையே மேலெழத்தொடங்கியது. இதன் விளைவாக இந்திய மாணவர் சங்கத்தின் கிளை ஒன்று , எங்களது கல்லூரியில் உதயமானது. குடியாத்தத்திலிருந்த இந்திய மாணவர் சங்க  தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் சம்பத்குமார் எங்களைத் தொடர்பு கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை  மின்சார வாரியத்தில் பணியாற்றுகிற மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் எங்களுக்கு பரிச்சயம் ஆகிறார்கள். அவர்கள் எங்களுக்கு அடிப்படையான மார்க்சீய சித்தாந்தம் குறித்த வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்கின்றனர்.  மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான சூர்ய நாராயணன், நடராஜன், ராமகிருஷ்ணன், பொன்னுசாமி,பாஸ்கர், இந்தியன் காஃபி ஹவுஸில் பணியாற்றிக்கொண்டிருந்த ராஜகோபால் போன்ற தோழர்கள்தாம் எங்களுக்கு மார்க்சீய சிந்தனைகளை அறிமுகம் செய்து வைத்தனர்.  மின் ஊழியர் தோழர்களில் இரண்டு நடராஜன்கள் இருந்தனர். 

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
தோழர் கே.வி. பிரபஞ்சன், சு. சமுத்திரம், ஓவியர் பல்லவன், பவா, காளிதாஸ்.

அவர்களை அடையாளம் காண்பதற்காக ஒருத்தருக்கு புகையிலை நடராஜன் என்றும் மற்றொருவருக்கு புரட்சி நடராஜன் என்றும் பெயர்.

அடிக்கடி புகையிலை போடும் வழக்கம் இருந்ததால் ‘புகையிலை நடராஜன்’ எனப்பெயர் பெற்ற அவர் கோவில்பட்டிக்காரர்; சிறந்த பேச்சாளர்; மின்வாரியத்தில் தலைமை எழுத்தராகப் பணியாற்றிவந்தார். இளநிலை பொறியாளரான புரட்சி நடராஜன் , உள்ளூர்க்காரர்.

இவர்களோடு ஏற்பட்ட ஒரு தொடர்பு அதன் நீட்சியாக இலக்கிய ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைக்கிற ஒரு முயற்சியும் உருவானது.

திருவண்ணமலையிலிருந்து சென்று சென்னை மாநிலக் கல்லூரியில் முது நிலைக்கல்வி பயின்று கொண்டிருந்த வீபா.கணேசன்தான்  இம்முயற்சியை  அப்போது முன்னெடுத்தார். வீபாகணேசனை அமைப்பாளராகக் கொண்ட ஒரு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளை  ஒன்று உருவாக்கப்பட்டது. 

கிளை தொடங்கியதும்  அடிக்கடி கூடிப்பேசுகிற விவாதிக்கிற  செயல்பாடுகள் நடந்ததேயொழிய பொது நிகழ்ச்சிகள் எதுவும் திட்டமிடப்படவில்லை.

அப்போது காஞ்சி புரத்தில் மேல் நிலைப்பள்ளி ஆசிரியராகப்பணியாற்றிக்கொண்டிருந்த கவிஞர்.வெண்மணி மாற்றலாகி திருவண்ணாமலை நகருக்கு வந்தார்.  தமுஎச-வில் பரவலாக அறியப்பட்ட  கவியரங்கக் கவிஞர்  அவர்.  

அவர் வந்தபிறகு தமுஎச நடவடிக்கைகள் சற்று சூடு பிடித்தன. ,திருவண்ணாமலை கிளையின் சார்பில் பொது நிகழ்ச்சி ஒன்று நடத்துவது எனத் தீர்மானமாயிற்று. 

வரலாறு தொடரும்..

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா – தமுஎகச மாநிலக்குழு புகழஞ்சலி

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா – தமுஎகச மாநிலக்குழு புகழஞ்சலி

தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதியினை முதலில் உருவாக்கியவர், தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, மக்கள்மொழியின் வழிகாட்டி, கடித இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்தவர் நாவலாசிரியர் கி.ரா என்றழைக்கப்படும் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நேற்றிரவு (17.05.2021) புதுச்சேரியில் காலமானார்.…
நூல் அறிமுகம்: *இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு)* – தேனிசீருடையான்.

நூல் அறிமுகம்: *இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு)* – தேனிசீருடையான்.

நூல்: இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு.) வெளியீடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். அறம் கிளை. பக்கம்: 64. விலை: ரூ. 60-00. இது ஒரு மகத்தான சாதனை என்று தான் நான் சொல்வேன். ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மூன்று…
“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

2009 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் இரவு முழுதும் பனி விழுந்துகொண்டிருந்தது. அந்த மலைக் கிராமத்தில் ‘திரௌபதி வஸ்திராபரணம்’ கூத்து இரவு முழுவதும் நடைபெற்றது. விடியலில் ஆறு மணிக்குக் கூத்து முடிந்து கலைஞர்கள் ஒப்பனைகளைக் கலைத்தவாறேப் பேசிக்கொண்டிருந்தனர். “என்னப்பா கூலி இன்னிக்கே…
மயான அமைதி பிணங்களுக்கே தேவை | எழுத்தாளர்.ஆதவன் தீட்சண்யா | TNPWAA, Trichy | Aadhavan Dheetchanya

மயான அமைதி பிணங்களுக்கே தேவை | எழுத்தாளர்.ஆதவன் தீட்சண்யா | TNPWAA, Trichy | Aadhavan Dheetchanya

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv thanks: #TNPWAA, Trichy #AadhavanDheetchanya To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To…