“அட என்னயா இது நாலுபேர் மத்தியில இப்படி ஒரு வார்த்தையை சொல்ர.. கேட்கவே ரொம்ப ஒரு மாதிரி இருக்கேயா….” ஏன்டா மாடசாமி நீ என்ன வேல பாக்ர… நான் விவசாயம் பன்றன்டா ராமசாமி …
சரி இந்த இருபத்தோறாம் நூற்றாண்டுல நாம வயல்வெளியில கஸ்டபட்டு கண்ணுக்கு தெரியாதவன் பலபேருக்கு வயித்து பசிய போக்குறோம்…
ஆனா நம்ம புள்ளைங்க பள்ளிக்கூடத்தில உங்க அப்பா என்ன வேல பாக்ராங்கனு கேட்கும் போது…பல புள்ளைங்க அப்பா டாக்டர், இன்ஜினியர்,வக்கில் னு சொல்லும் போது ரொம்ப பெருமையா விவசாயம் னு சொல்ரத கவனிச்சிருக்கியா…
அதுவே அடுத்த வேல சாப்பிட வழி இல்லாம இன்னும் கஸ்டபடுற மக்கள் நம்ம நாட்டுல ஏதோ ஒரு மூலைல இருக்கதான் செய்ராங்க…..
“போனவாரம் நா அந்த மலைக்காட்டுக்கு பின்னாடி இருக்குற ஊர்க்கு என்னோட பொன்னுக்கு தொடர்ந்து காய்ச்சலுனு மூலிகை வாங்க போன.. அங்க ரொம்பவும் இருக்க வசதி இல்லாத இடத்துல எனக்கு மூலிகை கொடுத்தாங்க நானும் கொண்டு வந்து என் புள்ளைக்கு கொடுத்த இப்ப அவ நல்லார்க்கா…!
அங்க இருக்குற மக்களுக்கு இருக்க சரியான வீடு இல்ல, போட்டுக்க ஒழுங்கான துணி இல்ல, அடுத்த வேல சாப்பாட்டுக்கு வழி இல்ல..
அவங்களோட முக்கியமான வேலையே அவங்கள சுத்தி, அந்த மலையில கிடைக்க கூடிய ஆடு, மாடு விலங்குகளை பட்டிப்போட்டு வளர்த்து அதயே அவங்களோட வாழ்வாதாரத்து தேவையானதா மாத்தி பயன்படுத்திகிறாங்க, அவங்கள சார்ந்த மக்கள அவங்களே பாத்துகிறாங்க..
அதிலயும் நம்ம விளைவிக்கிற அரிசி அவங்களுக்கு சரியான விதத்தில் போய் சேருறது இல்ல..அவங்க அத பாத்ததும் கூட இல்ல கிராமத்துல இருந்து நகரத்துக்கு வந்து பெரிய வீடுகளுல்ல வேலை பாத்து,,,தெருவ கூட்டி,சுத்தம் செஞ்சி அவங்களோட வயித்து புழைப்ப பாத்துகிறாங்க, ஆம்பளைங்க வேட்டைக்கு போறாங்க, பல இடத்துல கூலீக்கு வேலை பாத்து குடும்பத்த பாதுகாக்குறாங்க….
இதுல முக்கியமான விசயம் னு சொல்லனும்னா… அவங்க வீட்லயே வளர்ப்பு பிராணியா பன்றிகளையும்,ஆடு,மாடு எல்லாம் வளர்த்து…அத தன்னோட உணவாகவும் விற்பனைக்கும் மலைக்கு கீழ கொண்டு வராங்க..
பன்றிகளோட கழிவ மூட்டைகள் ல சேகரிச்சு நம்மலோட விவசாயத்துக்கு உரமா கொண்டு வந்து தராங்க…
என்னோட பொன்னுக்கு மருந்து வாங்க போன்னு சொன்னல.. அந்ந மருந்து கொடுத்தவர் பேரு கூனியன் அவர்தான் என்னோட நிலத்துக்கு உரம் கொடுக்குறாரு…
“என்னயா ராமசாமி சொல்ர நீ அந்த உரமா வாங்கி போடுற… ஆமா முனுசாமி அதுவும் உரம் தான்…அத பயன்படுத்துறதுல என்ன இருக்கு…ஒருகாலத்துல பல பண்ணையாருங்க அத்தான் பயன்படுத்துனாங்க இப்ப பன்னுறது இல்ல…
இந்த ஒட்டுமொத்த மக்கள் தொகைல அப்படி ஒரு கூட்டம் இருக்குனே யாருக்கும் தெரியிறது இல்ல…
இந்த டீக்கடைல கக்கூஸ் கட்டனும் னு சொன்னதுக்கே நீ அவ்வளவு பெருசா முகம் சுழுச்சியே…பல சமுதாய மக்கள் அதயே தொழிலா செய்யுறாங்களே அத எல்லாம் நீ நனச்சி பாத்ருக்கியா…
பணவாதிங்க இருக்குற ஊர்ல கழிப்பற இல்லாத காலத்துல இரண்டு கல்லு வச்சு காலைக்கடன முடிச்சிட்டு போவாங்க… பிழைப்புக்காக அத சுத்தம் செஞ்சு கொடுத்துட்டு வயித்து பிழைப்புனு மனச கல்லாக்கிகிட்டு போற சமுதாய மக்கள நாம இதுவரை நாம நனச்சி பாத்ததே இல்ல அப்டிங்கரதுதான் உண்மை….
மலை,காடுனு இருந்த கூட்டம் இப்பதான் கிராம்ம் நகரம்,படிப்புனு கொஞ்சம் முன்னேறி வருது…
காலத்துக்கு ஏத்தமாறி அவங்களும் புள்ளைங்கல படிக்க வச்சு, பின்தங்கிய நிலையில இருந்து கொஞ்சம் மேல வந்துகிட்டு இருக்காங்க…
அதாவது உனக்கு ஒன்னு தெரியுமாடா மாடசாமி அவங்க தான் நம்ம பூமியோட பூர்வகுடி ன்னு சொல்றாங்க ஆனா நகரத்துல நாத்தம் புடிச்ச குப்பைகளுக்கு மத்தியிலயும் சாக்கடை சகதியிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்றாங்க, கழிவுநீர் தொட்டியில் விழுந்து சாவரது யாரு இவங்க தான் டா இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்த மக்கள இப்போ இருக்கிறதுக்கு இடமில்லாமல் அழிஞ்சிட்டு வராங்க..
“சமுதாயம் என்பது மக்களை மேம்படுத்த ஒன்றுபட வேண்டுமே தவிர இழிவு படுததக்கூடாது” இனம்,மொழி, மதம் இவைகளை ஒன்றுபடுத்தி வாழ முற்படும் நாம் மக்களின் சூழல்,வாழ்வாதாரம் அவற்றிற்கான வழியை சற்று திரும்பி பார்த்து அனைத்து தரப்பு மக்களின் அடுத்த கட்ட நிலையை மேம்படுத்த போராடுவோம்…
புத்தக விமர்சனம் மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும்
கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் எழுதியுள்ள இந்தப் ‘பெரிய புத்தகம்’ மின்பதிப்பில் மொத்தம் 639 பக்கங்களைக் கொண்டுள்ளது. மிகக் கடினமான ஆய்வு, நுணுக்கமான ஆவணங்களுக்கு சாட்சிகளாக புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் இருக்கின்றன. இந்தப் புத்தகம் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற காலத்திலிருந்து இந்திய அரசியல் நடைமுறையில் இருந்து வந்திருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளடக்கி இருக்கிறது. மாநிலத்தில் கடைப்பிடித்த அரசியல் மற்றும் தேர்தல் உத்திகளைத் தேசிய அளவில் முயன்று பார்க்கவும், சர்ச்சைக்குரிய ‘குஜராத் மாடல் வளர்ச்சியை’ தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்குமான தளத்தை உருவாக்கவும் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் மோடிக்கு வழியேற்படுத்திக் கொடுத்தன.
மூன்று பாகங்களாக உள்ள இந்தப் புத்தகத்தின் முதலாம் பாகத்தில் ஆட்சியை வென்றெடுக்க மோடி கையாண்ட உத்திகளை ஜாஃப்ரெலோட் அலசியிருக்கிறார். மோடியின் ஆவேசமான சொல்லாட்சி, ஆத்திரமூட்டும் சொற்களஞ்சியம், தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தகவல்தொடர்பு பாணி, எவ்வித தடையுமின்றி போட்டியாளர்களை – குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை – பரம்பரை, மேல்தட்டினர், ஊழல் நிறைந்தவர்கள், செயல்திறனற்றவர்கள் என்று விமர்சித்தது போன்றவை 2014, 2019 பொதுத்தேர்தல்களில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தன. அரசியல் விளையாட்டின் புதிய ஜனரஞ்சகவாதி என்று கருத்துரையாளர்கள் அவரைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினர்.
இந்திராகாந்தி மட்டுமே ஜனரஞ்சகவாதி என்று அழைக்கப்படக்கூடிய ஒரே இந்தியப் பிரதமராக இருந்தார். காங்கிரஸ் கட்சியிடம் இருந்த புகழ்பெற்ற கூட்டணி அமைப்பைத் தகர்த்து, அவர் ஒரு தேசியத் தொகுதியை 1971ஆம் ஆண்டில் உருவாக்கினார். எதிர்ப்பாளர்கள் அவரைப் பாராட்ட, ஆதரவாளர்கள் அவரது கால்களில் விழுந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பின் பலத்த ஆதாரமாக இருந்து வந்த பிராந்திய அளவிலான மேல்தட்டினர் அதற்குப் பிறகு பொருத்தமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பலதரப்பட்ட நலன்களுக்கான கூட்டணி என்பதிலிருந்து, தர்பார் என்று சொல்லும் அளவிற்கு கட்சி மாற்றப்பட்டது.
இதேபோன்ற ஒன்றே மோடி குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற போதும் நடந்தது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டர்களைக் கொண்ட ஹிந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ், தலைவர் என்பவர் கூட்டத்திற்கு அடிபணிந்தவராக இருக்க வேண்டும் என்றே நம்பி வந்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே மோடியிடமிருந்த தலைவர் சார்ந்த அரசியலை அந்த அமைப்பு ஏற்றுக் கொண்டது. ஜீன்ஸ் அணிந்த நவீன இளம் பெண்கள், ஆண்களைக் கொண்ட இணை ஆதரவு அமைப்பை மோடி உருவாக்கினார். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த பிறகு இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர்கள். கட்சியின் வல்லமைமிக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவை நிர்வகித்த அவர்கள் பொதுக்கருத்தில் ஏற்படும் ஊசலாட்டங்களுடன் தொடர்பில் இருந்து வந்தனர். மோடி, அவரது அரசியலின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் அவர்கள் தடை செய்தனர்.பாரம்பரியம் மட்டுமல்லாது நவீனத்துவ உலகையும் சுற்றி வருபவராக இருப்பதால் பிரதமர் வாக்காளர்களைக் கவர்கிறார் என்று ஜாஃப்ரெலோட் கருதுகிறார். உண்மையில் இந்த விவரம் கவனிக்கத்தக்கது. அயோத்தி கோவிலின் துவக்க விழா, லுடியன்ஸ் தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற விழாக்களில் மோடி எவ்வளவு எளிதாக விரிவான மதச் சடங்குகளுக்குத் தலைமை தாங்கினார் என்பதை நினைவு கூர்ந்து பாருங்கள். அவர் அதே அளவிற்கு ஸ்மார்ட் போன் துவங்கி சமூக ஊடகங்கள், விண்வெளி, சந்திரன் வரையிலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். சமூக ஊடகங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட முதல் அரசியல்வாதியாக அவரே இருக்கிறார். ஆர்வமுள்ள, ஆனால் அதிருப்தியுடனிருந்த கோபமான இளைஞர்கள், யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று இருபிரிவினரை அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குழுக்களாக அடையாளம் கண்டு அணுகிய முதல் அரசியல்வாதியாகவும் அவரே இருந்தார். தாராளமயமாக்கப்பட்ட இந்தியா வழங்கியிருந்த பலன்கள் தங்களுக்குத் தொடர்ந்து கிடைக்காமல் போனதால் கண்டு கொள்ளப்படாதவர்களாக தங்களை உணர்ந்தவர்களாக அந்த இரு பிரிவினரும் இருந்தனர்.மோடியின் திட்டம் மிகுந்த பேராசை கொண்டது. ஒன்றுபட்ட ஹிந்து தேசம் என்ற அவரது கனவுத் திட்டத்திற்கு சாதிப் பிளவுகள் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றை நடுநிலையாக்க முயன்றார். அவரது அரசியலின் இந்தப் பரிமாணமே ஜனரஞ்சகம் என்ற வில்லில் ‘தேசியவாத ஜனரஞ்சகம்’ என்ற புதியதொரு நாணை ஏற்றியது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். பெரும்பாலும் ஜனரஞ்சகவாதிகள் நிறுவனங்களை ஊழல் நிறைந்தவை, செயல்படாதவை என்று தாக்கி, ஊடகங்கள், குடிமை சமூக அமைப்புகள் போன்ற இடைநிலை நிறுவனங்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டு, நேரடியாக மக்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே அதிகாரத்திற்கு வந்திருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர், தங்களுக்குச் ‘சொந்தமில்லை’ என்று கருதப்படுகிற சமூகப் பிரிவினருக்கு எதிராக பெரும்பான்மையினரின் கருத்தை அவர்கள் ஒன்று திரட்டுகிறார்கள். மோடி இத்துடன் ஹிந்து தேசத்தை உருவாக்குவது என்ற ஜனரஞ்சகத்திற்கான நான்காவது பரிமாணத்தையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் என்ற கருத்தை ஜாஃப்ரெலோட் முன்வைக்கிறார். அதன் விளைவாக சிறுபான்மையினர் அவர்களுக்கான இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், இனரீதியான ஜனநாயகம் நாட்டில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.இறுதியாக, மக்கள்நலன் அரசு என்பதையும் மோடி அரசு கைவிட்டிருக்கிறது. ஆய்வறிஞர்கள் அந்த மாற்றை ‘தொழில்முனைவு அரசு’ என்பதாகக் குறிப்பிடுகின்றனர். வேலைக்காக மக்கள் அரசை எதிர்பார்க்கக் கூடாது; பக்கோடா விற்க வேண்டி வந்தாலும், தங்களைத் தாங்களே அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே அதன் சாராம்சம். முதலாவது ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் சமூக உரிமைகளை மக்களுக்கு வழங்குகின்ற பல கொள்கைகளை இயற்றித் தந்தது. தற்போதைய ஆட்சியிலோ கட்டுப்படியாகாத விலையில் இருக்கின்ற எரிவாயு சிலிண்டர்கள் இல்லாமல் எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்குதல், தண்ணீர் பற்றாக்குறையால் பயன்பாட்டில் இல்லாத பொதுக்கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தல், சில வீடுகளை வழங்குதல் என்று சில சலுகைகள் மட்டுமே ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவையனைத்தும் குடிமக்களுக்கு அவர்களுடைய சமூக உரிமைகளாக வழங்கப்படவில்லை. மாறாக அவை சமூகக் கொள்கையாக அல்லது பிரதமரின் பரிசாக மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏழைகளின் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்ற பெயரிலேயே அவையனைத்தும் நடந்து வருகின்றன.
மொத்தத்தில் அரசியல் விளையாட்டின் விதிகள் அனைத்தையும் மோடி மாற்றி எழுதியிருப்பதாக ஜாஃப்ரெலோட் கூறுகிறார். இந்திய அரசியல் எப்போதுமே தேர்தல் போட்டிகள் மற்றும் நிறுவனங்களால் மையவாத நிலைக்கே தள்ளப்படும் என்றிருந்த நம்பிக்கைக்கு மோடி சவால் விடுத்தார். இந்தியாவின் எதிர்காலம் இனிமேல் கூட்டணி அரசியல் சார்ந்தே உள்ளது என்ற கருதுகோளை மக்களவையில் தனிப்பெரும்பான்மையைப் பெற்ற பாஜகவின் திறன் நிராகரித்தது.
மோடி ஆட்சியைக் கைப்பற்றியது பாஜகவிற்குப் பலன் அளித்ததா என்பது இன்னும் விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது; அது குறித்த தெளிவு இன்னும் கிடைக்கவில்லை. 2020ஆம் ஆண்டில் பொதுமுடக்கத்தை அறிவித்த பிறகு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து தங்கள் கிராமங்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். சுமைகளைத் தலையில் சுமந்து கொண்டு, ரத்தம் வடியும் கால்கள், தண்ணீரின்றி வறண்டு போன தொண்டைகளோடு இருந்ததைத் தவிர ‘ஆத்மநிர்பார் பாரத்’ சேவைக்கான இடைவிடாத உழைப்பில் வேறு எதையும் அவர்களால் காட்ட முடியவில்லை.2021ஆம் ஆண்டின் கோடைக்காலம் மேலும் பல சோகங்களைத் தந்தது ஆக்சிஜன் பற்றாக்குறையால் வாடிய தலைநகரின் தெருக்களில் மக்கள் ஆக்சிஜனுக்காக மூச்சுத் திணறி இறந்தனர்; தகன அறைகளும், புதைப்பதற்கான குழிகளும் பல நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், பல குடும்பங்களால் தங்கள் அன்புக்குரியவருக்கு கண்ணியமான இறுதிச் சடங்கைக்கூட நடத்த முடியவில்லை; சிறு குழந்தைகள் அனாதைகளாகினர். ஒட்டுமொத்த குடும்பங்களும் சீரழிக்கப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு தெருவையும் துயரம் சூழ்ந்து கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் அரசாங்கத்திற்கான சிறுதடயமும் காணப்படவில்லை. தன்னைக் குறித்த சுய-பிரதிநிதித்துவம் அரசாங்கத்திடம் இருந்த போதிலும், வறுமை, சமத்துவமின்மை, பற்றாக்குறை போன்றவற்றால் லட்சக்கணக்கான இந்தியர்கள் தவிக்க நேர்ந்தது என்று ஜாஃப்ரெலோட் சுட்டிக் காட்டுகிறார். தற்போதைய அரசாங்கத்தால் புலம்பெயர்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பெருத்த ஆரவாரத்துடன் துவக்கி வைக்கப்பட்ட போதிலும், உண்மையில் அந்த தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றித் தரப்படவில்லை.
அதிகாரத்தின் உச்சமட்டத்தைக் கைப்பற்றி, அதை தனக்கென்று ஏகபோகமாக ஆக்கிக் கொண்டு, புதிய லுடியன்ஸ் தில்லி மேல்தட்டினரின் ஆட்சியைத் துவக்கி வைத்திருக்கும் அரசியல்வாதி ஒருவரின் கதையை ஜாஃப்ரெலோட் நமக்கு இந்தப் புத்தகத்தின் வழியாக கூறுகிறார். அவர் அதை மிகவும் அருமையாகச் செய்திருக்கிறார். சில சமயங்களில் வாசகர் முக்கியமானவற்றைத் தவற விடாத அளவுக்கு அவருடைய ஆய்வு முழுமையானதாக இருக்கிறது. காரணிகள் x, y அல்லது z ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து நம்மால் அடிக்கடி ஆச்சரியப்பட முடிகிறது என்றாலும் இந்த புத்தகம் நல்ல வாசிப்பிற்கானதாக இருக்கிறது. அந்த காரணிகளுக்கு இடையேயான தொடர்பை நாமே எப்போதும் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இந்த மதிப்பாய்வை முடிப்பதற்கு முன்பாக இரண்டு சிறிய விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ஹிந்தி சொற்களை மொழிபெயர்ப்பதற்கு முன்பாக ஆசிரியர் யாரிடமாவது ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நாற்பத்தி மூன்றாம் பக்கத்தில் முஸ்லீம்களை வேறுமாதிரி காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற முழக்கம் ‘ஹம் பாஞ்ச் ஹமாரே பச்சீஸ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்த பச்சீஸ் என்பது ஐம்பது அல்ல, அது இருபத்தைந்து. அறுபதாம் பக்கத்தில் இந்தியர்கள் காலா நாயக் அல்லது கருப்பு ஹீரோவின் பாலிவுட் படத்தை விரும்புகிறார்கள் என்று ஜாஃப்ரெலோட் எழுதுகிறார். சரியான சொல் கல்நாயக். 1993ஆம் ஆண்டு அதே பெயரில் சஞ்சய்தத் வில்லத்தனம் கொண்ட ஹீரோவாக நடித்த திரைப்படம். மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் கரண் தாப்பர் புத்தகத்தின் நூற்றியேழாவது பக்கத்தில் கிரண் தாப்பர் என்று இடம் பெற்றிருக்கிறார்.
இரண்டாவதாக குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான இயக்கம் பற்றி ஜாஃப்ரெலோட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை. குடிமை சமூக அமைப்புகள் மீதான அடக்குமுறைகள் இருந்த போதிலும், 2019 டிசம்பர் மத்தியிலிருந்து 2020 பிப்ரவரி தொடக்கம் வரையிலும் யாரும் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வை நாம் கண்டோம். பாரபட்சமான அந்தச் சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரிலும் ஒன்றுகூடி நாடு முழுவதும் ஊர்வலங்களை நடத்தினர். அவர்களிடமிருந்த ஒரே ஆயுதமாக அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. அரசியலமைப்புச் சட்டமும் அதன் முகப்புரையும் சட்ட ஆவணம் என்பதிலிருந்து அரசியல் ஆவணமாக அப்போது மாறியிருந்தது.2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஓராண்டிற்கும் மேலாக நாடு முழுவதிலிருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டனர். அவசர அவசரமாக விவசாயத்தை பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக அவர்கள் போராடினர். இவை மோடி இந்தியா குறித்த அதிருப்தியால் தூண்டப்பட்ட இரண்டு நிகழ்வுகள் மட்டுமாகவே இருக்கின்றன.எந்த அளவிற்கு ஒரு தலைவர் வசீகரமானவராக இருந்தாலும், அதனால் எந்தவொரு ஆட்சியும் கேள்விக்குள்ளாகாமல் இருக்கப் போவதில்லை. ஜாஃப்ரெலோட் சுட்டிக்காட்டுவதைப் போல் வசீகரம் என்பது தார்மீகரீதியாக நடுநிலையானது. ஹிந்து தேசியவாதத்தின் ஒருங்கிணைப்பு குறித்த பாடத்தை சமகால இந்தியா நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ‘மதத்தை நம்பிக்கை’யாக அல்லது ‘மதத்தை அரசியலாக’ என்று எத்தனை குடிமக்கள் வேறுபடுத்திப் பார்த்திருக்கிறார்கள் என்பதையும் அது நமக்குச் சொல்லியிருக்கிறது. அதனால்தான் 2019ஆம் ஆண்டில் அறுபத்தியிரண்டு சதவிகித குடிமக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.அரசியல் வரலாறு என்பது அதிகாரத்தின் கதையாக மட்டுமே இருப்பதில்லை. அது அதிகாரத்திற்கு எதிரானதொரு கதையாகவும், மேலாதிக்க அமைப்புகளுக்கிடையிலான போட்டியாகவும் இருக்கிறது. ஒருவேளை கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்டின் மற்றொரு புத்தகத்திற்கான மற்றுமொரு கதையாக அது இருக்கக்கூடும். https://thewire.in/books/christophe-jaffrelot-modis-india-review நன்றி: வயர் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு
“விதிகள் மிக எளிமையானவை. அவர்கள் பொய் சொல்கிறர்கள். நமக்கு அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் பொய் சொல்வது நமக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாமும் அவர்களை நம்புவது போல காட்டிக் கொண்டு இருக்கிறோம்” – எலினா கொரோகோவா
பாவம் திலிப்சிங் மாளவியா. தன்னைப் பற்றி நாட்டின் பிரதமர் பேசுவார் என்றோ, தங்கள் கிராமம் ஒரே நாளில் அவ்வளவு பிரபலம் ஆகுமென்றோ, தன்னைச்சுற்றி அவ்வளவு விவகாரங்கள் நடக்கும் என்றோ கனவிலும் கண்டிருக்க மாட்டார்.
மத்தியப்பிரதேசத்தில் போஜ்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிய கொத்தனார் அவர். ஃபேன், டிவி இல்லாத மிகச் சிறிய வீட்டில் வசித்து வரும் 71 வயது திலிப்சிங்கிற்கு 8 குழந்தைகள். ஐந்து பெண் குழந்தைகளுக்கு எப்படியோ திருமணமாகி விட்டிருந்தது. இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தனர்.
‘சுத்த இந்தியா’ (Clean India – Swachh Bharat) திட்டத்தில், கிராமப்புறங்களில் கழிப்பிட வசதி இல்லாத வீடுகளில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்ட சான்றிதழை அரசிடம் சமர்பித்தால், அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.12000/- செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேவையான பொருட்களை வாங்கித் தந்தால் போஜ்புரா கிராமத்தில் கழிப்பிடம் கட்டித்தருவதாகச் சொன்னார். அரசாங்கத்திடமிருந்து பணம் வந்த பிறகு அதற்குரிய கூலியை தந்தால் போதும் என்று ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்திருந்தார்.
திலிப் சிங் மாளவியா
இந்திய வரைபடத்தில் புள்ளியிலும் புள்ளியாய் இருக்கக் கூடிய மிக மிகச் சிறிய அந்த கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு அது. நாட்டின் பிரதமர் மோடிக்கு அது பற்றிய தகவல் சத்தமில்லாமல் போய்ச் சேர்ந்தது. மாதந்தோறும் மக்களிடையே பேசும் ‘மனதின் குரல்’ (மான் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் 2015 டிசம்பர் 27ம் தேதியன்று மோடி திலிப்சிங் பற்றி குறிப்பிட்டார்.
“மத்தியப் பிரதேசத்தில் போஜ்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த திலிப் சிங் மாளவியா ஒரு கொத்தனார். அவருக்கு உயர்ந்த நோக்கம் இருந்தது. தனது கிராமத்தில் கட்டுமானப் பொருட்களை யாரேனும் தந்தால் அவர்களுக்கு இலவசமாக நான் கழிப்பிடம் கட்டித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். 90 நாட்களில் 100 கழிப்பிடங்களை அந்தக் கிராமத்தில் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு சில நேரங்களில் தேசம் குறித்து எதிர்மறையான பார்வைகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான திலிப்சிங்குகள் இப்படி தங்கள் சொந்த வழியில் தேசத்துக்கு நல்லது செய்துகொண்டு இருக்கிறார்கள். தேசத்தின் பலமும், நம்பிக்கையும் அவர்களே. அது போன்ற முயற்சிகளே வளர்ச்சிப்பாதையில் தேசத்தை இயல்பாக செலுத்தி விடுகின்றன. எனவே இந்த ‘மான் கீ பாத்’தில் திலிப் சிங்கை நாம் பெருமையோடு நினைவுகூர்வோம்”
போஜ்புரா கிராமம் உடனடியாக தேசத்திற்கு தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு ஒருமுறை மான் ஒன்றை நாயொன்று கடித்துக் குதறிய போதும் அந்த கிராமம் பத்திரிகைகளில் செய்தியாகி இருந்தது.
இந்தியாவின் பிரதமரே தன் பெயரைக் குறிப்பிட்டது திலிப்சிங்கிற்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த எளிய மனிதர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தார். உயர்ந்த இடத்தில் இருக்கும் பிரதமர் என்ன பேசி இருக்க வேண்டும்? ‘தன் கூலியைக் கூட பின்னர் பெற்றுக்கொள்கிறேன் என திலிப்சிங் கழிப்பிடங்கள் கட்டித் தந்திருக்கிறார். கிளீன் இந்தியா திட்டத்தின் படி, புதிதாக கட்டப்பட்ட அந்த கழிப்பிடங்களுக்குரிய பணம், உரியவர்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். திலிப்சிங் தனது நியாயமான கூலியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்பதுதானே நேர்மறையான சிந்தனையாக இருக்க முடியும்?
நாளைய தினம் எப்படி இருக்கும் எனத் தெரியாமல் இருண்டிருக்கும் தங்கள் காலத்திற்குள் இந்த தேசத்தின் கோடானு கோடி எளிய மனிதர்கள் ஒரு சிறு வெளிச்சத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திலிப்சிங் மாளவியா. தேசம், தியாகம், வளர்ச்சி, போன்ற பெரிய பெரிய வார்த்தைகளால் அவரது நம்பிக்கையைப் பிடுங்கிப் போட்டிருந்தார் மோடி.
அந்த கிராமம் பற்றி ஊடகங்களில் அடுத்தடுத்து செய்திகள் வர ஆரம்பித்தன. ‘போஜ்புராவில் மொத்தமே 53 வீடுகளே இருக்கின்றன. எப்படி 100 கழிப்பிடங்கள் கட்டியிருக்க முடியும்? என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.கே.மிஸ்ரா கேட்டார். “திலிப்சிங் இலவசமாக கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்தார் என்றால் கிளீன் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்னவாயிற்று?’ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஊடகங்களும் பேச ஆரம்பித்தன.
மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ்சிங் சவுகான், “மான் கீ பாத்’ நிகழ்ச்சியை அரசியலாக்குவது காங்கிரஸின் விரக்தியைக் காட்டுகிறது என்று கிண்டலடித்து ஒரு ட்வீட் செய்தார். “மக்களோடு அரசை இணைத்துக் கொள்ளும் மான் கீ பாத் நிகழ்ச்சியில் நம் மக்களை பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் பிரதமர் பேசி இருக்கிறார். அது குறித்தெல்லாம் கேள்விகள் எழுப்புவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’ என அங்கலாய்த்து இன்னொரு ட்வீட் செய்தார்.
மத்தியப்பிரதேசத்தின் கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராயிருந்த கோபால் பார்கவா, போஜ்புராவிவில் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டார். திலிப்சிங்கின் உழைப்புக்கான கூலி குறித்து யாரும் பேசவில்லை. ஆய்வு நடத்தவில்லை. இன்றுவரை கொடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.
தன்னிடம் கேள்விகள் கேட்ட நிருபர்களிடம், அந்த ஊரில் 23 கழிப்பிடங்களை கட்டியதாகவும், பக்கத்து கிராமங்களில் 20லிருந்து 25 கழிப்பிடங்கள் போலக் கட்டியதாகவும் திலிப்சிங் கூறினார்.
மாளவியாவின் கதை ‘சுத்த இந்தியா’வின் தோல்வியைக் காட்டுகிறது. மக்களின் இயக்கம் என்பது மக்களின் தலையில் கை வைப்பது அல்ல. மக்களையே முழுப் பொறுப்பாக்கி விட்டு அரசு வேடிக்கை பார்ப்பதும் அல்ல.
தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்ததில் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட நாலரை லட்சம் கழிப்பிடங்கள் காணாமல் போயிருந்தன. தேசம் முழுவதும் எத்தனை கோடி கழிப்பிடங்களுக்கு இந்த கதி நேர்ந்திருக்கும் என்று கணக்கிட்டால் ‘சுத்த இந்தியா’வின் லட்சணம் தெரியும். மோடி பிரதமரானதும் உதிர்த்த ‘சுத்த’ பொய் அது. கங்கைக்கரையிலிருந்து அந்தக் கதை ஆரம்பித்தது.
நமாமி கங்கா திட்டம்
2014 மே 16 அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மோடி தலைமையில் பிஜேபி வெற்றி பெற்றது. அடுத்த நாள் மே 17 அன்று வக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார். இந்துக்களின் புனித இடத்திலிருந்து தனது ஆட்சி தொடங்குகிறது என்பதற்கான குறியீடு அது. “கங்கைத்தாய் தன்னிடம் படிந்திருக்கும் அசுத்தங்களை போக்குவதற்கு ஒருவரை எதிர்பார்த்து இருந்தது. அந்தப் பணிக்கு என்னை தேர்ந்தெடுத்து இருக்கிறது” என இந்துக்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
கங்கையை சுத்தம் செய்யப் போகிறேன் என இருபதாயிரம் கோடி செலவில் ‘நமாமி கங்கா’ என்னும் திட்டத்தை 2014 ஜூனில் அறிவித்தார். அத்தோடு நிற்கவில்லை. 2014 அக்டோபர் 2ம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாளில், கையில் விளக்குமாறோடு டெல்லியில் காட்சி கொடுத்து ‘நாட்டையே சுத்தம் செய்யப் போகிறேன்’ என ‘சுத்த இந்தியா’ திட்டத்தை மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். முக்கிய பிரபலங்களையெல்லாம் ‘சுத்தமான இந்தியாவின்’தூதர்களாய் நியமித்து தன்னை மேலும் பிரபலமாக்கிக் கொண்டார். ‘இப்படி ஒருவரைத்தான் நாடு இத்தனை காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது’ என ஊடகங்கள் வானுக்கும் பூமிக்கும் குதித்தன.
என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் திட்டமும் அரசிடம் இல்லை. ஆலைகளின் கழிவு, நதிகளின் அசுத்தம், மாசுக்கட்டுப்பாடு, சாலை வசதிகள், எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் என ஏராளமான மிக முக்கிய பிரச்சினைகளோடு பின்னிப் பிணைந்ததுதான் ‘சுத்த இந்தியா’. அப்படி எந்த பார்வையும் அரசிடம் இருந்ததாகத் தெரியவில்லை. குடித்து முடித்த வெற்று கோக் பாட்டில்களை என்ன செய்யப் போகிறோம்?’ என்னும் சிறிய யோசனை கூட இல்லை. ஆனால் அதுவே பெரிய பிரச்சினை என்பதுதான் கள நிலவரம். மோடி அறிவித்த‘கிளின் இந்தியா’வின் தலை எழுத்தே சரியில்லாமல் இருந்தது.
பிறகு கொஞ்சம் யோசித்து ‘சுத்த இந்தியா’ என்பது தொடர்ச்சியான கடைப்பிடிக்க வேண்டிய இயக்கம் என்பதையும், அதன் முதற்கட்டமாக அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ‘திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலைமையை’ அடியோடு ஒழிக்கப் போவதாகவும் அறிவித்தார்.
அதுகுறித்தும் தெளிவு இல்லவே இல்லை. எல்லா வீடுகளிலும் கழிப்பிடங்கள் கட்ட வேண்டுமென்றால், முதலில் எல்லோருக்கும் வீடுகள் இருக்கின்றனவா? இருக்கும் வீடுகளுக்கு தண்ணீர் வசதி இருக்கிறதா? கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வெளியேற என்ன வசதி? என்னும் அடிப்படை விஷயங்கள் குறித்து யோசனையும் அக்கறையும் இல்லை. வெற்றுச் சவடால்களாகவும் கூப்பாடுகளாகவுமே இருந்தன.
திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. அதிலும் கணிசமானத் தொகை விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்பட்டது. மிஞ்சியது கிராமப்புறப் பகுதிகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.
அசுத்தமாகவே இருக்கும் கங்கை
ஒருபுறம் தேசத்தின் சொத்துக்களையும், வளங்களையும் தங்கள் இஷ்டத்திற்கு அம்பானிகளும் அதானிகளும் கபளிகரம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இன்னொரு புறம் செய்த வேலைக்கு உரிய கூலியைக் கொடுக்காமல் திலிப் சிங் மாளவியாவை புலம்ப வைத்தார்கள். இரண்டையும் இணைத்துப் பார்த்தால் அங்கே ‘சுத்த இந்தியா’ மட்டுமல்ல, ‘மோடியின் இந்தியா’வும் தெரியும். 2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மோடி வாய் கிழிய அறிவித்த திட்டங்கள் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டன.
கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 20,000 கோடியில் 2017 வரை மூன்று ஆண்டுகளில் 8.52 சதவீதமான தொகையே அரசு வழங்கி இருந்தது. ஆனால் கங்கையின் ஒரு சொட்டு நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை என்று பத்திரிகையாளர் கவிஷ் கோலியும் நீரஜ் மஜும்தாரும் எழுதினார்கள். ஏன் கங்கையை சுத்தம் செய்ய முடியவில்லை என கவலையோடு சமூக ஆர்வலர்கள் பலரும் ஆய்வுகள் நடத்தி எழுதி வருகின்றனர். தன்னை சுத்தம் செய்ய வந்த மகனின் பொய்யையும் ஒரு குப்பையாக சுமந்தவாறு அந்த கங்கைத் தாய் ஓடிக்கொண்டு இருக்கிறாள்.
அவினாஷின் வீடு
திலிப்சிங் மாளவியாவின் துயரத்தையும் உள்ளடக்கியவாறு வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டித் தந்து ‘திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டமும்’ நாடு முழுவதும் பெரும் தோல்விடைந்து போனது. உலக சுகாதார அமைப்பு இன்னும் கிராமப்புற இந்தியாவில் 70 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக 2018 இறுதியில் தெரிவித்தது.2019 செப்டம்பர் 30ம் தேதி விடிகாலையில் மத்தியப்பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தில் ரோஷினி, அவினாஷ் என்னும் இரண்டு தலித் குழந்தைகள் இரக்கமில்லாமல் அடித்து கொல்லப்பட்டார்கள் யாதவர்கள் குடியிருப்புகளின் அருகே அவர்கள் திறந்தவெளியில் மலம் கழித்தார்கள் என்பதுதான் இரண்டு கொலைகளுக்கும் காரணமாயிருந்தது.
சிவபுரி கிராமத்தில் உள்ள கழிப்பறை
“எங்களுக்கு எப்போதுமே கழிப்பிடம் என ஒன்று இருந்ததில்லை” என்று அழுகிறார் அவினாஷின் தந்தை மனோஜ்.
“கட்டப்பட்டு இருக்கும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதியே கிடையாது. தண்ணீருக்கு நாங்கள் வெகுதூரம் போக வேண்டும். எனவே நாங்கள் வெளியேதான் மலம் கழிக்கிறோம்” என்கிறார் இன்னொருவர். தேசமே அந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தது.
அதற்கு இரண்டுநாள் கழித்து மோடியோ, “உலகமே இந்தியாவைப் பார்த்து ஆச்சரியப்படுகிறது. 60 மாதங்களில் 60 கோடி இந்தியர்களுக்கு 11 கோடி கழிப்பிடங்கள் கட்டியிருக்கிறோம். திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலத்திற்கு நாம் முடிவு கட்டி விட்டோம்.” என 2019 அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளில் அவரது ஆசிரமத்தில் நின்று கம்பீரமாக முழங்கிக் கொண்டு இருந்தார். உலகமே அவரது பொய்யைக் கண்டு வாயடைத்துப் போனது.
அடிப்படை வசதிகள் இல்லாத வறுமை, ஜாதீயக் கொடுமைகள் நிறைந்த தேசத்தில் மோடி உண்மைகளைப் பார்க்க வேண்டாம் என கண்களை மூடச் சொல்கிறார். ஆனால் கண்களை மூடினால் மட்டும் அல்ல, திறந்திருந்தாலும் இருட்டாகிக் கொண்டு இருக்கிறதே!