மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் தொழிற்சங்கத்தினர் ஆவேசம் ஆயிரக்கணக்கானோர் கைது
மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் கோவையில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அரசு பேருந்துகள் 98 சதவிகிதம் இயங்கவில்லை. கோவை கோட்டத்தில் மொத்தமுள்ள 2208 பேருந்துகளில் 100க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டது.
கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடுவது, எரிபொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியது, மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் சிறு குறு தொழில்களை சீரழித்தது உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது. திங்களன்று துவங்கிய இந்த போராட்டம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.
கோவை கோட்டத்தில் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை, 80 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதேபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களான அக்வாசப், டெக்ஸ்மோ போன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முழுமையான வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்களும் முழுமையான ஆதரவை தெரிவித்தனர். அன்றாடம் ஏறிவரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசிற்கு தங்களின் எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தினர். பொது வேலை நிறுத்தம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, சிஐடியு, எச்எம்எஸ், எஐடியுசி, ஏஐசிசிடியூ எல்பிஎப், எம்எல்எப் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத போக்கினை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி. பத்மநாபன், எல்பி எஃப் ரத்தினவேல், ஏஐடியூசி ஆறுமுகம், ஐஎன்டியூசி செல்லகுட்டி, எஸ்எம்எஸ் வீராச்சாமி, எம்எல்எப் தியாகராஜன், ஏஐசிசிடியு தாமோதரன், எஸ்டிடி யு ரகுபு நிஷர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போன்ற தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, கைக்குழந்தைகளுடன் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். தனித்தனியாக அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், கோவை வடக்கு, குனியமுத்தூர், உள்ளிட்ட 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக காலை முதல் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்தும், கேரளாவிற்கும் பேருந்துகள் இயக்கப்படாததால், உக்கடம் பேருந்து நிலையத்தின் கேரளா பேருந்து நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கோவையில் உள்ள காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பேருந்துகளில் பயணித்தனர். போராட்டத்திற்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்ததால், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் கோவையில் பொதுப்போக்குவரத்து அடியோடு முடங்கியது. எல்ஐசி, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்களில் அறைகூவலை ஏற்று எல்ஐசி வங்கி மற்றும் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக எல்ஐசி ஊழியர்கள். 12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படுவது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பாதிப்பு என தெரிவித்தனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
நன்றி: தீக்கதிர்