Dharmapuri Mannum Makkalum Book By T. Pazhamalai Booreview By Pavannan நூல் அறிமுகம்: த. பழமலயின் தருமபுரி மண்ணும் மக்களும் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: த. பழமலயின் தருமபுரி மண்ணும் மக்களும் – பாவண்ணன்



பழமலய் வழங்கிய அன்புக்காணிக்கை
பாவண்ணன்

பதிற்றுப்பத்து பாடல்தொகையில் எட்டாம் பத்துக்குரிய பாடல்கள் அனைத்தும் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனின் போர்வெற்றியைப் புகழ்ந்து  அரிசில் கிழார் பாடியவை. ஒவ்வொரு பாட்டும் தகடூர் என்னும் ஊரை இரும்பொறை முற்றுகையிட்டு அழித்துச் சூறையாடிய வீரத்தை விதந்தோதும் வகையில் எழுதியிருக்கிறார் அரிசில் கிழார்.  ’பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்பேர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறி’ என்னும் வரிகள் அப்போரின் உச்சக்கட்டக் காட்சியை விவரிக்கின்றன.  ’மக்களுக்குப் பயனளிக்கும் பலவிதமான பொருட்களை காட்டின் உட்பகுதிகளில் குவியலாகக் குவித்து காவல் காத்தபடியே தமக்குள் மோதி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தாக்கி, அக்காட்டின் அரணாக விளங்கும் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கிய பெருமைக்குரியவன்’ என்பதுதான் அவ்வரிகளின் பொருள். அப்போது தகடூரை ஆண்டவன் அதியமான். அந்தக் கோட்டையின் பெயர் அதியமான் கோட்டை.

1978-79 காலகட்டத்தில் தருமபுரி அரசு கல்லூரியில் பணியாற்றிய போது, கவிஞர் பழமலய் தருமபுரியைப்பற்றிய வரலாற்று விவரங்களைக் கேட்டறிந்து தொகுக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் சுற்றியலைந்திருக்கிறார். இரண்டாயிரம் நூற்றாண்டுக்கு முன்பாகவே அழிந்துபோன கோட்டையின் பெயர் ஊருக்குள் இன்னும் நிலவுவதைக் கேட்டு அவருக்குள் ஒருவித ஆர்வம் மூண்டிருக்கிறது. அந்தக் கோட்டை எங்கே இருந்தது என்பதையாவது பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆவலோடு விவரம் தெரிந்தவர்களிடம் கேட்கிறார். அவர்கள் சுட்டும் திசையில் நடந்தபோது, மலைத்தொடரைப் பார்ப்பதுபோல இருந்த ஏரிக்கரையின் பக்கம் வந்து நின்றுவிடுகிறார்.

வெட்டவெளியாக விரிந்திருந்த அவ்விடத்தில் வெகுநேரம் அலைபாய்ந்த அவர் கண்கள், அபூர்வமான ஒரு தருணத்தில் நிலத்தோடு நிலமென ஒட்டிக் கிடந்த கோட்டையின் அடிச்சுவரைப் பார்த்துவிடுகின்றன. இரண்டாயிரம் ஆண்டு பழமையான கோட்டையின் வேர். அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனையும் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் அது. பரவசம் மிக்க அக்கணத்தை ஒரு புனைவுப்படைப்புக்கே உரிய நேர்த்தியோடும் சொற்சிக்கனத்தோடும் எழுதியிருக்கிறார் பழமலய். பெருஞ்சேரலால் அழிந்துபோன தகடூரை கொஞ்சம் கொஞ்சமாக பல நூற்றாண்டுகளாக உழைத்து மக்கள் மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். குடியிருப்புகள் உருவாகின்றன. இன்னொரு ஏரி வெட்டப்படுகிறது. இன்னுமொரு ஊரும் உருவாகிறது.  பன்னிரண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் புதிய தகடூர் முழுமையடைகிறது. 

ஒவ்வொரு நாளும் அலைந்து அலைந்து தகவல்களைத் திரட்டி, அன்றன்றே பழமலய் சிறுசிறு கட்டுரைகளாக எழுதி வைத்ததன் விளைவே இப்புத்தகம். தான் சந்தித்த வரலாற்று மனிதர்களைப்பற்றிய தகவல்கள், கோவில்கள், குளங்கள், சிற்பங்கள் என தெரிந்துகொண்ட தகவல்கள், பார்த்த இடங்களைப்பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரு வரலாற்று ஆய்வாளரைப்போல ஒன்றுவிடாமல் அவர் தொகுத்திருக்கிறார்.  அவை ஒவ்வொன்றையும்  வரலாற்று நிகச்சிகளோடு அழகாக இணைத்துக் காட்டி ஒரு வெளிச்சத்தை உணரவைக்கிறார். 334 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் 144 கட்டுரைகள் உள்ளன. இது தருமபுரியின் மண்ணையும் மக்களையும் பற்றிய மிகச்சிறந்த சமூக ஆவணம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கவிஞரும் தமிழாசிரியருமான பழமலய்க்கு தருமபுரி நன்றிக்கடன் பட்டிருக்கிறது. 

மல்லிகார்ஜுனர் கோவில் முன்மண்டபத்தில் தொங்கும் தூணொன்றைப் பார்த்ததாகச் சொல்கிறார் பழமலய். ஏழடி உயரம் கொண்ட தூண். தரையில் நிற்பதுபோலத் தோற்றமளித்தாலும் உண்மையில் தரையைத் தொடாமல் நிற்கும் அதிசயமான கல்தூண் அது. பாபிலோனின் தொங்கும் தோட்டத்தைப்போல, அது தொங்கும் தூண். அம்பாள் கோவில் அடிமேடையை பதினெட்டு யானைகள் தாங்கி நிற்கின்றன. தென்கரைக்கோட்டையிலும் சூளகிரியிலும் இசைத்தூண்கள் உள்ளன. அதியமான் கோட்டை சோமேசுவரர் கோவிலின் முன்னால் உள்ள ஒரு கல்வளைவுக்குள் புகுந்துவரும் மாலைக் கதிரொளி, குறிப்பிட்ட நாளில் சிவலிங்கத்தின் மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்திமுகம் என்னும் ஊரில் தரைமட்டத்திலிருந்து பதினைந்து அடி ஆழத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இப்படி தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.

கிருஷ்ணகிரியில் சையத்பாட்சா மலையில் இரு உடல்களுக்கு நான்கு சமாதிகள் அமைந்திருப்பதைப் பார்த்து, அதன் பின்னணியாக இருந்த வரலாற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டு எழுதிவைத்திருக்கிறார் பழமலய். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிருஷ்ணகிரியை ஆண்டு வந்த கிருஷ்ணராஜாவும் அக்பரும் சண்டையிடுகின்றனர். ஏறத்தாழ ஆறுமாத காலம் தொடர்ந்து போர் நடைபெற்றபோதும், ஒருவராலும் முழு வெற்றியை அடையமுடியவில்லை. அப்போது அக்பரின் கனவில் தோன்றிய தெய்வம் “உன் படையிலுள்ள சையத் பாட்சா, சையத் அக்பர்: ஆகிய இருவரால் மட்டுமே கிருஷ்ணராஜாவை வெல்லமுடியும்“ என்று தெரிவிக்கிறது. அதையே இறைவனின் கட்டளையாகக் கொண்டு அக்பர் அவ்விருவரையும் சண்டைக்கு அனுப்பினார். போரின் தொடக்கத்திலேயே இருவருடைய தலைகளும் சீவப்பட்டன. ஆயினும் தலையற்ற உடல்கள் எதிரிகளோடு மோதியபடி மலைமீது ஏறின. எதிரிப்படையைச் சேர்ந்த வீரர்கள் அதைக் கண்டு அஞ்சி பின்வாங்கினர். பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த திப்புசுல்தான் அத்தலைகளுக்கு மலையடிவாரத்திலும் தலையற்ற உடல்களுக்கு மலையுச்சியிலும் தனித்தனியாக சமாதிகளை எழுப்பினார். 

அதியமான் கோட்டை காளிக்கு பங்குனி விழாவின்போது எருமைக்கிடாவை பலியாகக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. அதையொட்டி பல இடங்களில் விசாரித்த பழமலய் அந்தப் பலியுடன் தொடர்புடைய பல கதைகளைத் திரட்டி ஒரு தர்க்கத்தின் அடிப்படையில் பதிவு செய்திருக்கிறார். அவர் கேட்டுப் பதிவு செய்திருக்கும் கர்ணகி கதை சுவாரசியமானது. மதுரையை எரித்த கர்ணகி வழியில் தென்பட்ட எல்லா ஊர்களையும் எரித்துக்கொண்டே வந்தாளாம். அவளைத் தடுக்க யாராலும் முடியவில்லை. எங்கோ ஒரு ஊரில் அவளுக்காக வெட்டிவைக்கப்பட்ட பொய்க்குழியில் இடறி விழுந்துவிட்டாள். மக்கள் அவளை அப்படியே கட்டிப் போட்டு விடுகிறார்கள். அவள் காளியாக மாறி விடுகிறாள்.

ஆண்டுக்கு ஏழு எருமைக்கடா பலி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து அவளை அமைதிகொள்ளச் செய்கிறார்கள் மக்கள். பொதுவாக எருமையின் ஆண்கன்றுகளையே பலிகொடுக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். மைசூர் என்பது மகிஷங்களின் ஊர். அதாவது எருமையூர். எருமைக்கடா சிங்கத்தையும் எதிர்த்து நின்று விரட்டியடிக்கும் ஆற்றலை உடையது. வெல்ல முடியாதது. கூற்றுவனுக்கு அதுவே ஊர்தி. அம்பாளின் ஊர்தி சிங்கம். அவள் சிங்கத்தின் மீது அமர்ந்து வந்து எருமையைக் கொல்கிறாள். தேவி எருமைவீரனைக் கொல்வதுபோன்ற கோலம் இந்தக் கருத்தை ஒட்டி உருவாகியிருக்கலாம். காளிக்கு எருமைக்கடா பலியிடும் சடங்கின் பின்னணியைப் புரிந்துகொள்ள பழமலய் சேகரித்திருக்கும் கதை உதவியாக இருக்கிறது.

தருமபுரி மக்களிடம் உரையாடும்போது தெரிந்துகொண்ட சில புதுமையான பழமொழிகளை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் பழமலய். அவை அந்த வட்டாரத்துக்கே உரியவை. ‘கலகலவென்று இருக்கிற ஆலமரத்தை நம்பலாம். உம்மென்று இருக்கிற புளியமரத்தை நம்பக்கூடாது’, சக்களத்தி பிள்ளை தாகத்திற்கு உதவினால் தவத்திற்கு யார் போவார் வருணமலை’ ‘படுவது யானைப்பாடு படுப்பது முயல்படுக்கை’, ‘கோழியும் போய் குரல்வளையும் போன கணக்கு’, ‘அவரைக்கொல்லை மேய்ந்த மாடும் அடுத்தவனிடம் போனவளும் ஒன்று’, ’பாவம் என்று பழந்துணி தந்தானாம், வீட்டிற்கு முன்னாலேயே இழுத்து இழுத்து முழம் போட்டுப் பார்த்தானாம்’ ஒவ்வொரு பழமொழியும் உருவான பின்னணிக்கதை அருமையாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நரசையர் என்பவர் அதிகாரியாகப் பணிபுரிந்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆங்கிலேயரைப்போலவே அவரும் மக்களைச் சுரண்டி செல்வத்தைச் சேர்த்திருக்கிறார். ஓய்வுபெற்று வீட்டோடு முடங்கியிருந்த ஓய்வுக்காலத்தில் அவர் மனம் மாறியது. தான் செய்த பாவத்துக்கு மாற்றாக தருமபுரியிலேயே ஒரு பெரிய குளம் வெட்டினார். அது அவர் பெயராலேயே நரசையர் குளம் என்று அழைக்கப்படுகிறது. 

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் முள்ளிக்காடு என்னும் சிற்றூரில் ஒரு காலத்தில் யாரோ நாடோடிப் பெண்ணொருத்தி இரட்டைப்பிள்ளை பெற்றெடுத்தாள். இரண்டும் இறந்துவிட்டன. அக்குழந்தைகளைப் புதைத்த இடத்தில் இரு செடிகளை நட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். அவை வளர்ந்து மரங்களானபோது மக்கள் அவற்றை ராமர் மரம் – இலட்சுமணர் மரம் என்று அழைக்கத் தொடங்கினார்கள் வாணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி வந்தபோது, இராமர் மரத்தை வீழ்த்தி இழுத்துச் சென்றுவிட்டது. 

ஊர் சார்ந்தும் இடம் சார்ந்தும் பழமலய் சேகரித்திருக்கும் கதைகள், மக்களுக்கு தம் இடங்களை பிறர் முன்னிலையில் மிக உயர்ந்ததாகக் காட்டிக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன. பாண்டவர்களில் ஒருவரான தருமர் ஒரு காலத்தில் அந்த ஊரில் தங்கியிருக்கிறார். விடிந்ததும் கோவிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு பூசை செய்திருக்கிறார். தருமர் வந்து தங்கிய ஊர் என்பதாலேயே அந்த ஊர் தருமர்புரி என்று பெயர் பெற்றது என்று ஒரு கதை நீள்கிறது. இன்னொரு கதையில் காசி ராஜாவின் மகன் தர்மாங்கதன் வருகிறான். அவன் வேட்டைக்குச் சென்றிருந்த சமயத்தில் ஒரு முனிவரின் சீற்றத்துக்கு இலக்காகி சாபம் பெறுகிறான்.

முனிவரின் சாபம் அவனை பாம்பாக மாற்றிவிடுகிறது. அழுது புலம்பிய மனைவியிடம் அந்தப் பாம்பை மடியில் கட்டிக்கொண்டு நாடெங்கும் எல்லாக் குளங்களிலும் மூழ்கி தீர்த்தமாடி வருமாறும், ஏதேனும் ஒரு குளத்தில் அவனுக்கு மனிதவடிவம்  மீண்டும் வரும் என்றும் தெரிவிக்கிறார். அதன்படியே குளம்தோறும் மூழ்கியபடி செல்கிறாள் மனைவி. தென்னாட்டில் பிரம்மாகுளத்தில் மூழ்கியபோது தர்மாங்கதன் மீண்டு வருகிறான். செய்தியை அறிந்த அரசன் அவனைச் சந்தித்து, அவனைத் தன் சேனாதிபதியாக வைத்துக்கொள்கிறான். வாரிசு இல்லாத அந்த அரசாட்சிப் பொறுப்பு, அரசனையடுத்து அவனிடம் வந்து சேர்கிறது. தர்மாங்கதன் ஆட்சி செய்த ஊருக்கு  தர்மபுரி என்று பெயர் வழங்கலாயிற்று. 

தர்மபுரியைச் சுற்றியும் உள்ள கோவில்களில் காணப்படும் சிற்பங்களைப்பற்றிய தகவல்களையும் ஒன்றுவிடாமல்  பழமலய் தொகுத்துள்ளார். சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள இராமாயண, பாரதக் கதைக்காட்சிகளின் சிற்பங்களுடைய அழகையும் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்களின் நேர்த்தியையும் சுருக்கமாக முன்வைத்திருக்கிறார். எல்லாக் கோவில்களிலும் பாவை விளக்கேந்திய பெண்சிற்பங்களையே நாம் பார்த்திருப்போம். பழமலய் தருமபுரியில் தான் பார்த்த பாவை விளக்கேந்திய ஆண்சிற்பத்தைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். கோவிலூரில் குந்திக்கு ஒரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் செய்தியையும் சேகரித்திருக்கிறார். காரிமங்கலத்தில் காணப்படும் நவகண்டச்சிற்பம், மதகுப்பட்டன் நினைவுச்சின்னம், கழுதைக்குறத்திக்கல், நடுகற்கள் என எல்லாத் தகவல்களையும் திரட்டித் தொகுத்திருக்கிறார்.

ஒருமுறை திப்புசுல்தான் தருமபுரிக்கு வந்திர்க்கிறார். அப்போது ராஜாபேட்டை என்னும் பகுதியில் ஒரு முகமதியப் பெரியவர் தங்கியிருக்கிறார். ஞானி. அவரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பிவைக்கிறார் திப்பு. “அவரால் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை, வேண்டுமென்றால் திப்புவை இங்கு வரச் சொல்” என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார் ஞானி. பிழையை உணர்ந்த திப்பு உடனடியாக அவரைப் பார்க்கப் புறப்பட்டார். சந்தித்து உரையாடிய பிறகு தன் அன்பளிப்பாக ஞானிக்கு ஒரு வைரக்கல்லைக் கொடுத்தார். ஞானி தனக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து “இந்தா கற்கண்டு” என்று கொடுத்துவிட்டார். சிறுவனும் ஆவலோடு வாங்கித் தின்றுவிட்டான். அதைப் பார்த்து திகைத்து நின்ற திப்பு ஞானியின் மேன்மையை உணர்ந்துகொண்டார். அதற்குப் பிறகு தருமபுரிக்கு வரும்போதெல்லாம் அந்த ஞானியைச் சந்திக்காமல் சென்றதில்லை. அவருடைய மறைவுக்குப் பிறகு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ‘அலிசா காதர் அவுலியா தர்கா’ என வழங்கிவருகிறது. டேகிஷ்பேட்டை மசூதிக்கு அருகில் இருந்த அந்தத் தர்காவைத் தேடிச் சென்று பார்த்த அனுபவத்தை பழமலய் பதிவு செய்திருக்கிறார். 

ஆங்கிலேயர் காலத்தில் பள்ளிகளில் பாடப்பட்ட ‘லாங் லிவ் கிங்’ என்னும் ஆங்கிலப்பாடலை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அந்தப் பாடல் தமிழிலும் சில பள்ளிகளில் பாடப்பட்டது என்னும் செய்தி பழமலயின் குறிப்புகள் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. தருமபுரி அவ்வைநகர் தெருவில் வசித்துவந்த எண்பது வயதுகொண்ட கிறித்துவர் தம்மிடம்  அந்தத் தேசிய கீதத்தைப் பாடிக் காட்டியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ‘கர்த்தாவே, ராஜனை, எங்கள் நல் வேந்தனைக் காப்பாற்றுமே. வெற்றி கம்பீரமும் கீர்த்த் பிரதாபமும் தீர்க்காயுள் ஆட்சியும் நீர் ஈயுமே’ என்று சில வரிகளையும் அவர் கொடுத்திருக்கிறார். 

தருமபுரியைப்பற்றி கண்ணால் கண்ட, காதால் கேட்ட ஒவ்வொரு சிறுசிறு தகவலையும் அர்ப்பணிப்புணர்வுடன் அலைந்து திரட்டித் தொகுத்திருக்கிறார் பழமலய். இரு ஆண்டுகள் தனக்குக் கிட்டிய ஓய்வுப்பொழுதுகளிலெல்லாம் நடந்து சென்றும் மிதிவண்டியில் சென்றும் பேருந்தில் பயணம் செய்தும் தகவலுக்காக ஒரு தேனீயைப்போல அலைந்திருக்கிறார். 

தருமபுரி வட்டாரத்தைச் சேர்ந்த முக்கியமான சுதந்திரப்போராட்ட ஆளுமையான தீர்த்தகிரி முதலியாரின் சந்ததியினரைச் சந்தித்து அவர் அளித்த தகவல்களையெல்லாம் தொகுத்திருக்கிறார் பழமலய். பாரதியார் மீது முதலியாருக்கு இருந்த ஈடுபாடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊர்மக்களை தனக்குச் சொந்தமான வேறொரு இடத்துக்குக் குடியேறச் செய்து  அந்தப் பகுதிக்கு பாரதிபுரம் என்று பெயர் சூட்டியது, விவேகாநந்தரை தருமபுரிக்கு அழைத்துவந்து உரையாற்ற வைத்த செய்தி ஆகியவை அனைத்துமே இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய செய்தி. சுப்பிரமணிய சிவாவின் சமாதியைப் பார்ப்பதற்காக பாப்பாரப்பட்டிக்குச் சென்ற பழமலய் அச்சமாதியின் முன் விழுந்து வணங்கிய குறிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தியாகியின்  பாரதமாதா கோவில் கனவு, அதற்கு சுபாஷ் சந்திரபோஸ் அடிக்கல் நாட்டிய அளவிலேயே ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவேறியது.   

இறுதியாக, தமக்கு முன்னால் தருமபுரி பற்றி எழுதிய பெரியவர்களை நினைவுகூர்ந்தபடி தம் குறிப்பேட்டை நிறைவு செய்திருக்கிறார் பழமலய். தருமபுரியின் துரதிருஷ்டமோ அல்லது தமிழர்களின் துரதிருஷ்டமோ, 1978ஆம் ஆண்டிலேயே அவர் இப்படி ஓடி ஓடிச் சேகரித்து எழுதிய குறிப்புகள்  அனைத்தும் நூலாக்கம் பெறாமல் கையெழுத்துப் பிரதியாகவே தங்கிவிட்டன. செலவு கூடிய வேலை என்பதால், முந்நூற்றுச் சொச்சம் பக்கங்களையுடைய புத்தகத்தை வெளியிடுவது அவருக்கும் சாத்தியமற்றுப் போயிருக்கலாம். அந்த பிரதியைத் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளுமாக அவர் எழுதிய பதினாறு நூல்கள் வெளியான பிறகே, பதினேழாவது நூலாக அது வெளியானது.

அதையும் பழமலய் தன் சொந்தச் செலவிலேயே வெளியிட நேர்ந்தது. மேலும் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தகடூர் இலக்கியப் பேரவையைச் சேர்ந்த நண்பர்களின் கூட்டுமுயற்சியால் இப்போது மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது. இது தருமபுரி மக்களுக்கு பழமலய் வழங்கிய அன்புக்காணிக்கை. சமீபத்தில் ஒசூர், மாயவரம், மதுரை, திருநெல்வேலி, சேலம், வெம்பூர் என ஒவ்வொரு இடம்சார்ந்தும் குறுவரலாறுகள் எழுதப்பட்டு வரும் சூழலில், தருமபுரியைப்பற்றிய பழமலயின் புத்தகம் இன்னும் சிலருக்கு இத்திசையில் எழுதுவதற்கான மன எழுச்சியை ஊட்டக்கூடும். 

நூல்: தருமபுரி மண்ணும் மக்களும்
ஆசிரியர்: த.பழமலய்
வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம்
விலை: ரூ.330

Thurvai Book by S. Dharman Bookreview By Anpumanivel நூல் அறிமுகம்: சோ. தர்மனின் தூர்வை - அன்புமணிவேல்

நூல் அறிமுகம்: சோ. தர்மனின் தூர்வை – அன்புமணிவேல்




சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் சோ. தர்மன் ஐயா அவர்களின் எழுத்துகளில்… என் முதல் வாசிப்பு இந்த “தூர்வை”.

ஐயாவின் சூல், கூகை குறித்தான வாசகப் பார்வைகளைக் கண்டிருந்த வகையில்.. அவற்றுக்கான வாசிப்புத் தேடலில் இருந்த எனக்கு.. நினைத்துப் பார்க்காதவாறு கைக்குச் சிக்கியது.. “தூர்வை”.

அந்தக் காலத்தில் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குச் சென்று நிராகரிக்கப்பட்டு குப்பைக்குப் போன “கதவு” போல.. அதே விகடனின் நாவல் போட்டிக்குச் சென்று நிராகரிக்கப்பட்டது தான் இந்த “தூர்வை” யுமென..

படைப்புலகத்தின் இலக்கணக் குறிப்பீட்டுக்குள் பொருந்தாது போன இந்த கதை சொல்லி பாவனையிலான படைப்புகளின் நிலை குறித்தான தனது வருத்தங்களை..
“ஒரு பருக்கைப் பதம்” என்று முன்னுரையில் மனம் திறந்திருக்கிறார் கி.ரா.

🌷தூர்வை:
ஒரு சம்சாரிக் கோப்புக்குண்டான வாழ்க்கைப் பாட்டுக்கு ஆதார வேராக இருக்கின்ற நிலமும் நீரும் எந்தெந்த வகையிலெல்லாம் சுரண்டப்பட்டு ஒரு நிலவுடமைச் சமூகம் பையப் பைய ஒரு தொழில் மயச் சமூகத்திற்குள் எப்படியெல்லாம் தள்ளப்படுகிறது என்பதனை உருளைக்குடியை முன்வைத்து.. ஒரு பன்னாட்டுப் பிரச்சனையைக் களமாக்கியிருக்கிறது “தூர்வை”.

ஒரு பரிதாபத்துக்குரிய பச்சாதாபத்துக்குரிய அடையாளமாகத்தான் இதுவரைக்கும் ஒரு தலித் சமூகம் நமக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில்.. நல்ல செழிப்பமும் வளப்பமுமான..ஒரு நேர்த்தியான கலாச்சார பண்பாட்டு வழிமுறைகளைக் கொண்டதான ஒரு தலித்திய வாழ்வியலை.. அறிமுகம் செய்திருக்கிறது உருளைக்குடி கிராமம்.

மினுத்தான்-பெரிய சோலை-சந்திரன் என்று மூன்று தலைமுறைகளை இழுத்துக் கட்டியவாறு நகர்கிறது கதை.

🌷முதல் தலைமுறை:
வெள்ளையன் விலாங்கு புடிச்ச கதை.. தொத்தப் பய துட்டி சொல்லிப் போன கதை..
வெள்ளெலி வேட்டைக்குப் போன சிவனாண்டி கதை.. பனை ஏறி பதினிக் கலயத்துக்குள்ள மிதந்த அயிரமீனுக் கதை..
கிடைக்காவல் சண்முகம் பொண்டாட்டி பெருமாத்தாளுக்கும் நல்லப்பனுக்குமான தொடுப்புக் கதை.. மகாதேவர் கோயில் அலப்பறைக் கதை..
எகத்தாளம் கூத்தாடுகிற சொலவடைகள்.. என்று நீளுகிற நூற்றுக் கணக்கான “கதைகளும்”…

உயிரோடு இருந்து கொண்டே தன் கருமாதிச் சோற்றைத் தானே தின்னும் குரூஸ்.. ரெண்டு தாரத்தையும் தீத்துக்கிட்டு ஓசிச் சோத்துக்குப் பண்டாரமா அலையுற முத்தையா… வெத்திலைச் சாறைத் துப்பிக்கிட்டே பேய்க்கதையா உருட்டித் தள்ளுகிற முத்துவீரன்…

சிலம்புக் கம்பு வாத்தியாரு ராமுக் கிழவன்… விலாங்குன்னு நினைச்சு வேட்டி நெறையத் தண்ணிப் பாம்பைப் புடிச்சாந்து நடுவீட்டுல கொட்டுன கெண்டல் சுப்பையா… தோத்தாத் தொங்கிருவேன்னு சேவச் சண்டையில கொடுத்த வாக்கைக் காப்பாத்துன உளியன்…

ஆண்டிப்பட்டி முனியம்மா.. மாசந்தவறாம பேய் புடுச்சு ஆட்டுகிற முத்தம்மா.. பஞ்சாயத்துக்குப் போறேன்னு ஊருலயும் வீட்டுலயும் பூசை வாங்கிக் கட்டிக்கிற மேகாட்டுச் சண்டியரு கருமலையான்… தாத்தையா நாயக்கரோட கெங்கம்மா அக்கா..

பருத்திக் களவாணி கூனன்… நரிவளர்த்தாப் பாட்டி… யென்று வெள்ளந்தி “மனிதர்களும்”.. சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், கொட்டுச் சத்தம், வேட்டுச் சத்தமென்று கேளிக்கையும் வேடிக்கையுமான “வழிபாடல்”களுமாக…

திரும்பிய பக்கமெல்லாம் விதையும் பயறும்… மிதிபடுவதெல்லாம் காயும் கனியும்.. எந்நேரமும் நிறைமாச சூலியாய்த் தானியக் குலுவைகளும்.. கம்மங்களியும், வரகுக் கஞ்சியும், கேப்பைக் கூழும், குதிரைவாலிச் சோறுமென அடுப்பணையா வனப்புமாக…

மினுத்தானின் தலைமுறையைப் பதிவு செய்திருக்கிற பக்கங்கள் யாவும்.. செவிவழிக் கதைகளாக நம்மைச் சேர்ந்திருக்கும்.. நம் தாத்தனும் பாட்டியுமான உலகம்.

🌷இரண்டாம் தலைமுறை:
பொய்த்துப் போன மழையின் நீட்சியில்..
காய்ந்து போன காடுகரையும்
மாய்ந்து போகும் மானுடப் பாடுமாக..
இருட்டுப் பானை தடவும்
குருட்டுப் பூனையாகத்
தரிசுக் காட்டைக் கட்டியழுக முடியாது வந்த விலைக்கு மண்ணை மாற்றி பிழைப்புக்கென நகரம் பெயர்ந்து வாட்ச்மேனாகவும், கொத்தாளு சித்தாளாகவும், தீப்பெட்டி தொழிற்சாலை, சாக்குத் தொழிற்சாலையென்று இருட்டைப் பழக எத்தனிக்கும் இரண்டாம் தலைமுறையாக… மினுத்தானின் மகன் பெரியசோலை.

குரோதம், துவேசம், துரோகம், வன்மம், வஞ்சினம், பகைமை, பொறாமை இப்படியான துர்க்குணங்கள் எதுவொன்றும் இதுவரை அறிந்திடாத கேள்வியுறாத இப்படியான மண்ணின் மனிதர்கள்..

நிலவுடமைச் சமூகத்திலிருந்து தொழில்மய சமூகத்திற்குத் துரத்தியடிக்கப்பட்டு.. மேற்கண்ட அத்தனை கல்யாண குணங்களோடான நகரத்து வாடகை வீட்டில்..
முறுங்கைக் கீரையும் கறிவேப்பிலையும் காசுக்கு வாங்க நேரிட்ட தங்கள் காலத்தை நொந்து கொண்டு.. மூச்சு முட்டிப் போகும்
பிழைப்பாக..

நம் அம்மையும் அப்பனுமாக நம் கண் முன்னே.

🌷மூன்றாம் தலைமுறை:
ஊரான ஊருக்குள்ள ஆகப் பெரிய ஜமீனென்று
கதையாக மட்டுமே தங்கிப் போன தாத்தா..
அத்தனையும் வித்துப்புட்டு
கூலிக்கு கையேந்தும் அப்பன்..
பொறப்பே கூலிப் பொழப்பு தான்னு தன் இருட்டுப் பாதைக்கு வெளிச்சம் தேடுகிற கேள்விக் குறியோடு.. மினுத்தானின் பேராண்டி சந்திரனில் வந்து நிற்கிறது மூன்றாம் தலைமுறை.

இந்தப் புள்ளியில்..
கைப்புண்ணுக்குக் கண்ணாடியாக
நாம்.

🌷பெண்கள்:
காட்டையும் வீட்டையும் மலர்த்துகிற விடியலாக…
கொண்டவனின் வலுவாக..
மதியூக யோசனைகளைக் கடத்துகிற ராஜ தந்திரியாக…
மனித வாசங்களை அரவணைத்துச் செல்லுகிற
ஆதித் தாயின் நிஜமாக..
தன் முதுமையை எவருக்கும் பாரமேற்ற விரும்பாது
ஆகாரம் நீக்கி ஆவியைப் போக்கிக்கொண்ட
உணர்வின் திடமாக…
நம் தாய்வழிச் சமூகத்தின் அடையாளமும்
நம்பிக்கையுமாக…
ஒரு மாபெரும் அதிர்வு… “மாடத்தி”.

“தூர்வை” யின் மொத்தக் குருதியோட்டமுமே “மாடத்தி பெரியம்மா” தான். மாடத்தி தவிரவும்..

சீனியம்மா, பொன்னுத்தாயி, முத்தம்மாயென்று நீளுகிற அந்த மண்ணின் பெண்களால் மட்டுமே தான்.. இந்தக் கரிசலின் காடும் வீடும்..நகர்கிறது.

🌷கரிசல் காட்டின் மாண்பு:
மனங்கசந்த வாழ்வைத் தொடராது.. அவரவரின் மறு வாழ்வைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமையும்.. பெண்ணின் விருப்பத்தையொட்டியே வாழ்வும் தீர்வும் என்பதான மனப்பாங்கும்.. இன்றைய நம் வாழ்வியலோடு பொருத்திப் பார்க்கையில் விரக்தியும் வெதும்பலுமே மிச்சமாகிறது.

🌷கதைகள்:
விதைப்பு, நாத்தறுப்பு, களையறுப்பு யென்று காட்டுக் கழனி வேலைகள் யாவையும் அலுப்புச் சலிப்பின்றி கடத்துவது.. அந்த மண்ணின் கதையாடல்கள் மட்டுமே. கதைகளாலேயே மனிதர்களின் வாழ்வு பின்னப்பட்டுக் கிடக்கிறது. கதைகள் தான் வயிற்றுக்கும் வாழ்வுக்குமான போராட்டத்துக்கு
உரம் ஏற்றுகின்றன.

நீரும் நிலமும் காடும் மலையும் பறவையும் விலங்கும் மண்ணும் மழையும் காத்தும் வெய்யிலுமான ஒரு தலைமுறையைக் கிளைக்கச் செய்யுமந்த ஆதி வேர்களின் கதைகளை.. இப்படியான கதைசொல்லிகள் தானே காலத்துக்கும் கடத்துகிறார்கள்.

இப்படியான கதைகளும் கதைசொல்லிகளும் இல்லாத இப்போதைய நம் வாழ்வு… வேர்களின் ஈரத்தை உணராத சருகின் நிலையாக.

🌷வாசிப்பனுபவம்:
ஊருக்கு வெளியே பயணிக்கையில.. “நிலம் விற்பனைக்கு” என்ற கூவலோடு.. கண்ணிலாடுகிற ப்ளாட் போடப்பட்ட பொட்டல் நிலங்கள்…

வருசத்துக்கொரு முறை மாசிப் படையலுக்கு ஊருக்குப் போகையில.. “மனுச மக்க யாருமில்லாம நான் மட்டும் வெறுச்சுனு இருக்க வேணாம்னு எல்லாத்தையும் வித்துட்டு இப்போ மகனோட தான் இருக்கேன்” னு வெறுமையாச் சிரிக்கிற எங்க கோவில் வீட்டு பூசாரித் தாத்தனும் அந்த அப்பத்தாவும்…

நாம எதையெல்லாம் இழந்திருக்கிறோம்.. எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்ற முடிச்சில்… தீர்வு நம் கையிலா… காலத்தின் கையிலா..? நிச்சயம்.. இதுவொரு ஆய்வுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய படைப்பு.

நூல்: தூர்வை
ஆசிரியர்: சோ. தர்மன்
வெளியீடு: அடையாளம்
பக்கங்கள்: 238
விலை:230

Fear is death Article By Surulivel. இல. சுருளிவேலின் அச்சமே மரணம் கட்டுரை

அச்சமே மரணம் – இல. சுருளிவேல்




இன்றைய உலகமயமாதல் சூழ்நிலையில் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மக்களிடையே அச்சமும் பெருகி வருவதை மறுக்க இயலாது. எங்கோ ஒரு நாட்டில் நிகழும் பிரச்சனைகளால் நாமும் பாதிக்கப்படுவோமோ என்றெண்ணி அச்சம் கொள்கிறோம். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள் இனி எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

துணிவே துணை என்பதற்கு உதாரணமாக பல்வேறு அறிஞர்கள், தலைவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் நிறுபித்துள்ளனர். முக்கியமாக சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கவிஞர் கண்ணதாசன், அச்சமே மரணம் நூல் ஆசிரியர் வாஸ்வானி போன்ற பலர் தங்களின் படைப்புக்கள் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளனர். மாணவர்கள் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளைப் பற்றிப் பயப்படுகின்றனர். படிப்பு முடிந்த பின்பும் நேர்முகத் தேர்வின்போதும் நெஞ்சம் நடுங்கி நிலைகுலைகின்றனர். அதே போன்று வேலையில் சேருவதற்கும், சேர்ந்த பின்பு, ஓய்வு பெரும் வரையிலும், தொடந்து பயமும் வருகிறது. காதலர்களுக்கு திருமணம் நடக்குமோ நடக்காதோ என்ற பயம்.

ஆதே போன்று திருமணம், ஆன பின்பும், முதுமை வரையிலும்; தொழில் துவங்கும் வரை, தொழில் துவங்கிய பின்பும் என பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயமும் கூடவே வந்து கொண்டிருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய கொள்ளை நோய்களும், பல்வேறு போராட்டங்களும், அண்டை நாடுகளிடைய அச்சுறுத்தல்களும், விலைவாசி உயர்வும் கூட அச்சத்தின் பிடியில் அரசை ஆட்டம் காணச்செய்து கொண்டிருக்கிறது. நிகழ்கால வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய பல விசயங்கள் இருக்கும் போது எதிர்கால வாழ்க்கையை எண்ணிப் பாமரர் முதல் படித்தவர் வரை, ஏழைகள் முதல் பணக்காரர் வரை ஒவ்வொருவரும் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். பயம் மனிதனின் முன்னேற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

பயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்களில் நானும் ஒருவன். இந்த பயம்தான் எனது முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீண்ட காலம் ஆனது. பல நேர்காணலில் தோல்வியுற்றதற்கு முதல் காரணம் எனது பயமே. பயத்தினால் மறதி, கவலை, மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, பசியின்மை வருவதை உணர்ந்தேன். உணவு உடல் ஆரோக்கியத்தைத் தரலாம். ஆனால் மனதில் பயத்தை வளரவிட்டால், அது மனிதனை விரைவில் அழிந்து விடும். பயம் இருப்பவர்கள் விரும்பிய கல்வியை பெற முடியாது, விரும்பிய செல்வத்தை சேர்க்க முடியாது, விரும்பியதை அனுபவிக்க முடியாது. அறிவும், துணிச்சலும், முயற்சியும், பயிற்சியும் இருக்கும் ஒருவருக்கே தொடர்ந்து வெற்றி கிடைக்கிறது. சமூகத்தில் பின்தங்கிய நிலை தொடருவதற்கு முக்கியமான காரணமே பயம்தான்.

நமது கலாச்சாரம் குழந்தை பருவம் முதலே தைரியத்தை விட பயத்தையும் அதிகம் ஊட்டி வளர்க்கிறது. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியிலும் நம்மிடையே பல மூட பழக்கவழக்கங்களும் புரையோடிக் கிடக்கின்றன என்பதை பல்வேறு உயிர்பலி சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன. மனிதன் அறிவியலை விட ஜாதகங்கள், சம்பிரதாயங்களை அதிகம் நம்புகின்றான். பயம் கொள்கிறான், துன்பத்திற்கு ஆளாகிவிடுகிறான். மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளையும் கடந்தே வருகிறான். இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள், போர், பஞ்சம், பொருளாதாரப் பிரச்சனை போன்ற பல சூழ்நிலைகளை எதிர் கொண்டு மீண்டவர்களும் உண்டு அவற்றை எதிர்கொள்ளமுடியாமல் மாண்டவர்களும் உண்டு.

படித்ததில் பிடித்த அரேபியக் கதை ஒன்று: அறிவு நிரம்பிய ஒரு முதியவர் பாலைவனத்தில் வழியே பாக்தாத் நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கையில், அவரையும் முந்திக்கொண்டு செல்லும் கொள்ளை நோயைச் சந்தித்தார்.

ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்? என்று அதைப்பார்த்து அப்பெரியவர் கேட்டார்.

“பாக்தாத் நகரில் ஐம்பது உயிர்களைப் பலிவாங்கப்போகிறேன்” என்று கொள்ளை நோய் கூறியது. பின்பொரு நாள் திரும்பி வரும் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது.

“என்னிடம் நீ பொய் சொல்லிவிட்டாய்” என்று பெரியவர் கொள்ளை நோயைக் கடிந்துரைத்தார்.

ஐம்பது உயிர்களைப் பலி வாங்கப்போகிறேன் என்று சொன்னாயே? இப்போது ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கிவிட்டாயே? என்று கேட்டார் பெரியவர்.

“அதை நான் செய்யவில்லை. நான் ஐம்பது உயிர்களை மட்டுமே எடுத்தேன். அதற்கு மேல் ஒருவர்கூட என்னால் சாகவில்லை. எஞ்சியவர்களையெல்லாம் கொன்றது அவர்களின் அச்சம்தான்!” என்றது கொள்ளைநோய்.

ஆம்! உண்மையில் அச்சம்தான் நமது ஊக்கத்தையே உறிஞ்சி எடுத்துவிட்டு மனதில் மரணபயத்தை வேரூன்றச் செய்கிறது. வாழவும் பயப்படுகிறோம், சாகவும் பயப்படுகிறோம். ஏனென்றால் வாழ்க்கை அவ்வளவு குழப்பமானதாகவும் அஞ்சத் தக்கதாகவும்,  பாதுகாப்பற்றதாகவும் ஆகிவிட்டது இல்லையென்றால் நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

எதற்கு பயப்பட வேண்டும் எதற்கு பயப்படக்கூடாது என்ற அறிவியல் சிந்தனை மக்களிடையே வளர வேண்டியுள்ளது. வள்ளுவர் சொன்னது போல

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”

அதாவது அறிவில்லாதவர்கள் அஞ்சக்கூடியதற்கு அஞ்சமாட்டர்கள். அறிவுடையவர்கள் அஞ்சவேண்டியதற்கு அஞ்சி நடப்பார்கள். சிலர் நல்ல செயல்களை செய்வதற்கும் அச்சம் கொள்கின்றனர். இதனால் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம். நாளை ஏதாவது நடந்துவிடுமோ என்ற தேவையில்லாத கற்பனை. இது ஒருவகையான அறியாமையே விழிப்புணர்வு இன்மையே. வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும். சில ஞானிகள், எழுத்தாளர்கள் தங்களின் கருத்துகளுக்காக சிறை சென்றுள்ளனர். சிலருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அறிவு பூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அன்றைய சமூக, பொருளாதார கட்டமைப்பு. ஆவற்றையும் கடந்த பல அறிவியல் சிந்தனை பதிவுகள் இன்றைய வரலாற்று சுவடுகள்.

சிலர் திரைப்படங்கள் எடுக்கவும், அதனை வெளியிடவும் அச்சம் கொள்கின்றனர். காரணம், அத்திரைப்படம் சமூகத்தில் ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ணுமோ, இதனால் நஷ்டம் ஏற்படுமோ என்ற பயம். ஆனால் அதையும் தாண்டி எடுக்கப்பட்டு, பல விமர்சனங்களுக்கு ஆளாகி, இன்றும் வரலாற்று பதிவுகளாக இருக்க கூடிய சில நல்ல திரைப்படங்களும், அதில் நடித்த நடிகர்களும் அச்சத்தை வென்றவர்கள். இன்று சமூக ஊடகங்கள் சமூக மாற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் அச்சம் இன்மையே.

தேச விடுதலை, அனைவருக்கும் சமூக நீதி, பெண் விடுதலை, தொழிளாலர் உரிமை போன்ற பல விசயங்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டிருந்தால் இன்று இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? மாபெரும் வீரர், மானம் காத்தோர், மனித நலனுக்காக தன்னையே தியாகம் செய்தவர்கள் காலத்தை வென்றவர்கள். இந்த உலகம் நல்லவர்களால் மட்டும் இயங்கவில்லை நல்லவை நடப்பதற்காக துணிந்து முடிவெடுத்து செயலாற்றியவர்களால் மட்டுமே இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் பிரச்சனை, கடன் பிரச்சனை, குடும்பப்பிரச்சனை, தொழில் பிரச்சனை போன்ற பல காரணங்களாலும் பயம் கொள்கின்றனர். பிரச்சனைகள் வரும் போது அதைக்கண்டு ஓடிவிடுவதாலும், உறுகி விடுவதாலும், சண்டையிடுவதாலும் அதற்கான நிரந்தர தீர்வு ஏற்பட்டு விடாது. சிலர் தற்கொலைதான் தீர்வு என எண்ணி தவறான முடிவுக்கும் வருகின்றனர். சிலர் தேர்வு பயத்தால் தன்னையே மாய்த்து கொள்கின்றனர். இதனைப் போன்ற செயல்கள் மனித இனத்திற்கே அவமானமே தவிர வேறொன்றும் இல்லை. சாகத்துணிபவர்கள் ஏன் வாழத்துணிவதில்லை! பிரச்சனை வரும் போது பயந்து முடங்கி கிடந்தால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது.

கவிஞர் கவிதாசன் சொன்னது போல “முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைப் பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்”. எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் பிரச்சனைகள் வரும் போது அதைக் கண்டு அஞ்சாமல், பதற்றம் கொள்ளாமல் அதனை வெல்வதற்கு வழிகளை, தேவையான முயற்சிகளை மேற்கொள்வதே சிறந்த முடிவாகும்.  சுவாமி விவேகானந்தர் சொன்னது போல “உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது மிகப்பெரிய பாவம்” ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம்மிடையேதான் இருக்கிறது. சில பிரச்சனைகளுக்கு அமைதி தான் தீர்வு. சில பிரச்சனைகளுக்கு நம்மால் தான் தீர்வுகான முடியும், சில பிரச்சனைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தீர்வுகான முடியும், சில பிரச்சனைக்கு நீதி மன்றம் தான் முடிவாக இருக்கும். எனவே பிரச்சனையின் தன்மையை பொருத்து நிதானமாகவும், அறிவுப்பூர்வராகவும், துணிவுடனும் தீர்வு காணப்பட வேண்டும். உணர்ச்சிவசத்தால் ஒரு போதும் முடிவு எடுக்கக் கூடாது.

அச்சத்திற்கு அறிவியல் காரணங்களும் உண்டு. அச்சம் ஒரு வகையான அறியாமையே, சுய விழிப்புணர்வு இன்மையே, மன அமைதியின்மையே, மனித உடலில் ஏற்படும் ஒரு வகையான வேதியியல் மாற்றங்களே. இதனைச்சரியாக புரிந்துகொண்டால் அச்சம், கோபம், கவலை போன்ற பல எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் போய்விடும். மகான்களை மக்கள் அதிகம் தேடிச்செல்வதற்கு முக்கியமான காரணம் அவர்கள் பயம் இல்லாமல் மன அமைதியுடன் இருப்பதால்தான். அங்கு பிரச்சனைக்களுக்கு தீர்வு கிடைக்கும்மென நம்புகின்றனர்.

“தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல்” என்பார்கள். ஆம் நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானல் அச்சத்தை முதலில் வெல்ல வேண்டும். நாம் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விசம் கூட தன்மையற்றதாக விடும். கொரானா, ஓமைக்கிரான் போன்ற பல நோய்களை வெல்வதற்கு முதலில் விழிப்புணர்வு மட்டுமே தேவை. அதாவது பயத்தை தவிர்த்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது. நோய் வந்தால் அதற்கான காரணங்களையும், குணப்படுத்த தேவையான முயற்ச்சிகளையும் துணிச்சலுடன் மேற்கொள்ள வேண்டும். நோயினால் இறப்போரை விட பயத்தினால் இறப்போரே அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நோய் வந்தால் குடும்பத்திலும், சமூகத்தில் ஒதுக்கப்படுவோமோ என்ற பயத்தை தவிர்க்க வேண்டும். பயம் அதிகரிக்கம் போது நோயின் தீவிரம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.

சில சமூகங்கள், சில நாடுகள் ஆளுமையுடன் இருப்பதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் அல்ல, அவர்கள் அறிவுடனும், சரியான திட்டமிடுதலுடன், துணிவுடன் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைகின்றனர். அதனால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பயந்தால் எந்த ஒரு விசயத்தையும் நன்றாகக் செய்ய முடியாது. உதாரணமாக பயந்தால் வாகனங்கள் ஓட்ட முடியாது, மருத்துவம் பார்க்க முடியாது, நாட்டைப் பாதுக்காக்க முடியாது, தேர்தலில் வேட்பாளராக நிற்கமுடியாது, நாட்டை நிர்வகிக்க முடியாது. எனவே பயம் தேவையற்ற ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடியும்.

“கோழைகள் பலமுறை சாகின்றனர். வீரனோ ஒருமுறைதான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே வாய்ப்பு இந்த வாழ்க்கை. பிறப்பு மற்றும் இறப்பு ஒரு முறையே மனிதனுக்கு. ஆனால் அச்சத்தாலும் நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம். நூறு ஆண்டுகளுக்கு மேல் அச்சத்தோடும், மன அமைதியில்லாமலும் வாழ்ந்து மறைவதை விட, குறைவான ஆண்டுகள் வாழ்ந்தாலும் துணிச்சலுடன் ஆக்கபூர்வமான வாழ்க்கை வாழ்ந்து மடிய வேண்டும். இதுவரை நாம்அச்சத்திற்கு அடிமையாக இருந்திருந்தாலும், இனிவரக்கூடிய காலங்களில் அறிவுடனும் துணிச்சலுடனும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை வாழ பழகிக் கொள்ள வேண்டும். எனவே அச்சம் நம்மைக் கொல்லும் முன் நாம் அச்சத்தைக் கொன்று அச்சத்திற்கே அச்சத்தை கொடுத்து வாழ்ந்து காட்டவேண்டும்.

முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204