Posted inPoetry
கவிதை: பலி ஆடுகள் – ச.லிங்கராசு
பலி ஆடுகளுக்கே இங்கு
பலவித விருந்தோம்பல்கள்
பாவம் இந்த ஆடுகளுக்கு
இந்த பகல் வேஷம் புரிவதே இல்லை.
ஆதலால் காலங் காலமாய்
தங்களை காவுக்கு தயாராக்கிக்
கொள்கின்றன.
ஐந்தறிவு ஆட்டினைப் போலும் இந்த
ஆறறிவு மனிதர்களும் இங்கே
மாறிப்போனது தான் மானிட கொடுமை.
விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளால்
இந்த சநாதனிகளின்
சங்கமத்தில் சரணாகதி ஆகிறார்கள்
மனுவையும் வர்ணத்தையும்
மலைபோல் எண்ணி இருப்போர்
கூட்டத்தில்
எங்ஙனம் இந்த மங்கையரெல்லாம்
ஏமாந்தவர்கள் ஆகிறார்கள்?
ஊரும் சேரியும் ஒன்றில்லாத போதும்
‘சுயமும் சேவையும்’ சும்மாவா
இருக்கும்?
பம்மாத்து காட்டி பலரையும் ஈர்க்கும்
– ச.லிங்கராசு