சிவஞானம் கவிதைகள்
கொடுங் கனவு சிறுகதை தமிழில்: கதிரேசன்
குஜராத்தி எழுத்தாளர்
மினாள் தேவ் (Minal Daev)
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
ரீட்டா கோத்தாரி
தமிழில்: கதிரேசன்
எனது விரல்கள் கணினியின் விசைப் பலகையின் மீது பறந்து பறந்து இயங்கின. ஆனாலும் எனது கண்கள் என்னவோ கடிகாரத்தின் மீதே இருந்தது. என்னால் இன்று முதல் மெமோ மின்சார ரயிலை பிடிக்க முடியாது. திருமதி. தேவ் நம்மை பைத்தியம் பிடிக்கச் செய்து விடுவார். அலுவலகத்தை விட்டு வெளியே கிளம்பும் கடைசி நிமிடத்தில் தான் ஒரு வேலையைக் கொடுப்பார். பத்து பதினைந்து நாட்களுக்குப் பின் இப்போதுதான் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்று அவர் சொல்வதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. அவர் செய்வது சரிதான். ஆனால், எனது அருமை பெண்மணியே, நீங்கள் பைக்கில் உங்கள் கணவரின் பின்னால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு போனால் போதுமானது. வீடு போய்ச் சேர்ந்து விடலாம். வீட்டில் சூடான இட்டிலி, சாம்பார் டிபன், காபி தயாராக இருக்கும். ஆனால் நான்? நான் ரயிலை தவற விட்டால் அடுத்த ரயிலுக்கு மணி கணக்கில் காத்திருக்க வேண்டும். வேறு ஒரு நகரத்திற்கு, அதுவும் ஆளில்லாத பெட்டியில் பயந்து கொண்டும், நடுங்கிக் கொண்டும் இரண்டு மணி நேரம் பயணம்
செய்ய வேண்டும். அதை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும்?
அப்பாடா! கடவுளே! வேலை முடிந்தது. ஆகா! இங்கேயே ஒரு ஆட்டோ நிற்பது மிகவும் நல்லதாகிவிட்டது.
ஓ தம்பி, வேகம், வேகம் தயவு செய்து வேகமா போ தம்பி! பல நாட்களுக்குப் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு திறந்து விடப்பட்டவர்களைப் போல மனிதர்கள் படு வேகமாக வீட்டை விட்டு வெளியேறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! அவர்கள் கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் எடுத்துக் கொண்டு பறக்கின்றனர்.
ஆனால் ஒரே ஒரு வெடிச்சத்தம் கேட்டால் போதும்! உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் தங்களை அடைத்துக் கொள்வார்கள். ஐயோ கடவுளே! இந்த சிவப்பு சிக்னல் கடைசி நிமிடத்தில் தான் விழ வேண்டுமா?
ஓ ரயில் நிலையத்தை அடைந்தாகிவிட்டது. பயணச்சீட்டு வாங்குவதற்கு என்னிடம் மிகச் சரியாகச் சில்லறை இருந்தது. எனவே சில்லரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஐயோ! எல்லோரும் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தை விட்டு மொத்தமாக வெளியே வருகிறார்களே! தயவுசெய்து கொஞ்சம் வழி விட மாட்டீர்களா? இந்த ரயில்வே ஊழியர்கள் இருக்கிறார்களே, இவர்களை திருத்தவே முடியாது! ச்சே! இந்த நீண்ட பிளாட்பாரத்தில் கடைசி முனையில் தான் படிக்கட்டு வைக்க வேண்டுமா என்ன? நான் போக வேண்டிய ரயில் நான்காவது நடைமேடையில் இருக்கிறது. ஓ! ரயில் புறப்பட போகிறதே! ஓடு! ஓடு! இன்னும் இரண்டே படிக்கட்டுகள் தான்! ஆ! பாழாய்போச்சு! ரயிலை விட்டு விட்டேன்!
டீ விற்பவர் சொல்கிறார்.”என்னம்மா ரயிலே தவற விட்டு விட்டீர்களே! இன்னும் ஒரு மணி நேரம் அல்லவா காத்திருக்க வேண்டும்!”
என்னை விசித்திரமாக பார்க்கிறார். நடைமேடையில் ஒருவரும் இல்லை. ஒரு பயணி கூட கிடையாது. இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததைப் போல பயணிகள் இருந்தார்கள். ஒரு கல்லை விட்டு எறிந்ததும் கூட்டமாக பறந்து விடும் பறவைகளைப் போல அவர்களை எல்லாரும் பறந்து விட்டார்கள்.
ஒருவேளை நான் ஸ்மிதா வீட்டிற்கு போய் இருக்கலாமோ! இன்னும் ஒரு மணி நேரம் காத்திருந்து ரயிலைப் பிடித்தாலும் அதில் என் கூட சேர்ந்து பயணம் செய்வதற்கு ஒரு ஆள் இருக்காது. எங்கும் அச்சம் வியாபித்திருக்கிறது. டீ விற்பவர் என்னைப் பார்த்ததும் பயப்படுகிறேன். ஏதாவது ஒன்றை என்மீது எறியலாம், யார் கண்டது?
அவர் என்ன சாதி என்று யாருக்குத் தெரியும். எங்களைப் போன்றவர்கள் சாதி மத நம்பிக்கை போன்ற நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் அவனுக்கு என்னைப் பற்றி தெரியாதல்லவா? அவர் எனது உடைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இல்லை, இல்லை, எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்! ஓ நரகமாக இருக்கிறது!
கைப்பையில் தான் தண்ணீர் பாட்டிலை வைத்திருந்தேன்! எங்கே போய்விட்டது! இதோ இங்குதான் வைத்திருந்தேன்! ஓ! தண்ணீர் காலியாகிவிட்டது!
சரி! போன் பூத்தில் இருந்து வீட்டுக்கு ஒரு போன் செய்யலாம். ஒரு தண்ணீர் பாட்டில் ஒரு வார இதழையும் வாங்கலாம். கணவர் விக்ரம் பேசுகிறார். நான் ரயிலைப் பிடிக்க முடியவில்லை என்று சொன்னதும் மிகவும் மன சோர்வு அடைந்து விட்டார்.
ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே போனை கட் செய்து விட்டேன்.
அவரது எரிச்சலை நான் அனுமதிக்க விரும்பவில்லை. போன் பூத்துக்காரர் இலவசமாக அறிவுரைகள் வழங்குகிறார்.
“இவ்வளவு நேரம் கழித்து ரயில் மூலமாக வீட்டுக்கு போக வேண்டாம். முன்பு இருந்த நிலைமை ஒரு மாதிரி! இப்போது அப்படி இல்லை. துணிகரம் வேண்டாம்” என்றெல்லாம் சொல்கிறார். இந்த பத்து நாளில் அப்படி என்ன மாறிவிட்டது என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் யாரையும் நேசிப்பதில்லையா? கண்ணீர் சிந்துவதில்லையா? மலரும் முன்னே பூக்கள் எல்லாம் வாடி விடுகின்றனவா? எங்கே பார்த்தாலும் சந்தேகம்! இந்த அச்சத்திற்கான காரணம் தான் என்ன?
புத்தகக் கடையில் ஏதாவது புத்தகம் பார்ப்போம்! அங்கேயும் இதே மாதிரி தான் இருக்கும்! நாளிதழ்களில் மரண தேவர்களின் நடனம், நெருப்பு விளையாட்டு, சீறிப்பாயும் துப்பாக்கி குண்டுகள்…. இரண்டு இதழ்களைப் பொறுக்கி எடுத்தேன். ஒரு பெஞ்சில் அமர்ந்தேன்.
நடைமேடை வெறிச்சோடிக் கிடந்தது. தேநீர்க் கடைகளில் நெருப்பு அணைக்கப்பட்டு விட்டது. காரமான நொறுக்கு தீனிகளை பொரிப்பதற்கான எண்ணெய் சில்லிட்டுப் போயிருந்தது. கடையில் வேலை செய்யும் பையன்கள் அரைத் தூக்கத்தில் இருந்தனர்.
கார்பன் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மறுபடியும் தங்கள் கிரேட்டுகளுக்கு திரும்பி இருந்தன. ஷூ பாலிஷ் போடும் கால்
ஊனமான பையன் ஷூ ஸ்டான்டையே தலையணையாக மாற்றி தூங்கிக் கொண்டிருந்தான்.
ஆனால் நான் உட்கார்ந்து இருந்த பெஞ்ச் அருகில் படுத்திருந்த நாய் அமைதியற்று இருந்தது. அது சுற்றி சுற்றி பார்ப்பதும், எழுந்திருப்பதும், கழுத்தை நெரிப்பதும், காதுகளை விடைத்துக் கொண்டு எதையோ உன்னிப்பாக கவனிப்பதும் பின்னர் சுருண்டு படுப்பதுமாக இருந்தது. எங்கள் நடைமேடையைத் தாண்டி, அடுத்த நடைமேடையில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. அவைகளைப் பார்த்து இந்த நாய் பயந்து விட்டதோ என்னவோ!
நான் உட்கார்ந்திருந்த பெஞ்சில் எனக்கு அடுத்து ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவள் கருப்பு நிற புர்க்கா அணிந்திருந்தாள். அவளது கைகள் மட்டுமே வெளியே தெரிந்தன. பெரிய துணிப் பையை வைத்திருந்தாள். புர்க்காவின் முகத்திரை அவளது கண்களை மறைத்திருந்தன. அவளது கண்கள் என்னையே ஊடுருவிப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது.
நடைமேடையில் அத்தனை காலியான பெஞ்சுகள் எல்லாம் இருக்கும்போது அவள் ஏன் என் பெஞ்சில் வந்து , என்னருகே அமர வேண்டும்? அவள் மனதில் என்ன நினைக்கிறாள்? அவளது பையில் வெடிகுண்டு வைத்திருப்பாளோ! அவள் திடீரென அந்தப் பையை விட்டு விட்டு சென்றால் – வெடிகுண்டு வெடித்தால் எனக்கு என்ன ஆகும்?
பாவப்பட்ட எனது கணவனுக்கும், எனது குழந்தைக்கும் அது பேரழிவை ஏற்படுத்தும்! ச்சே! இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாமே! பாவம் அவள் பாட்டுக்கு அமைதியாகத்தானே உட்கார்ந்திருக்கிறாள்! ஆனாலும் …..அவள் உண்மையிலேயே ஆபத்தில்லாதவள் தானா! இந்த இடத்தை விட்டுக் காலி செய்து விடுவோமா? வேறு எங்காவது போய் உட்காருவோமா? ஐயோ, எனது நாக்கு மேல் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டதே!
நாக்கு அசைய மறுக்கிறது. எனது விரல்கள் பையை இறுக்கிப்பிடிக்கின்றன. குளிர்ந்த காற்று வீசும் மாலை நேரம்! இருந்த போதிலும் எனக்கு வியர்த்து கொட்டுகிறது. நெற்றியில் இருந்து வியர்வை கைகளில் வழிகிறது.
அந்த நேரத்தில் விண்ணில் இருந்து இறங்கவரும் மீட்பராக, ஆபத்பாந்தவனாக மசால் வடை விற்பவர் வந்தார். இப்போது எனது நரம்புகளில் மறுபடியும் ரத்த ஓட்டம் ஆரம்பமானது. மீண்டும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது போலத் தெரிந்தது.
“நீங்கள் மிகவும் தாமதம்! முதல் ரயில் தான் போய்விட்டதே” என்றார்.
நான் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். ஏதாவது திக்கித் திணறி பேசி விடுவேனோ என்று பயந்துவாயை திறக்க பயந்து கொண்டு ஒன்றும் பேசவில்லை.
“ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? இந்த மாதிரி நேரங்களில் இங்கே எல்லாம் உட்கார்ந்து இருக்க கூடாது” என்று என்னை எழுந்திருக்க சொல்லி சமிக்ஞை செய்கிறார். ஆனால் எனது கால்கள் அசைய மறுக்கின்றன.
அவர் எனது முட்டாள்தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டே கடந்து சென்றார். நான் இங்கே இருந்து போயாக வேண்டும். ஆனாலும் இந்த பெண் என்ன செய்வார் என்று தெரியாது. அவள் பையில் இருந்து கத்தியை எடுத்து என்னை குத்தி விட முடியும். அதை யாரும் பார்க்க மாட்டார்கள். அவள் என்னை ஒரு உதை விட்டாலே போதும்! சுருண்டு விழுந்து விடுவேன்.
அவள் கைகளைப் பாருங்கள்! அவைகள் ஆண்களின் கைகளைப் போல இருக்கின்றன. அந்த புர்க்காவுக்கு பின்னால் ஒரு மோசமான குற்றவாளி ஒளிந்திருப்பானோ! எப்படி இந்த இடத்தை விட்டுக் காலி செய்வது? ஏன்தான் இந்த நேரத்தில் பயணம் செய்தேனோ!
ஐயோ ராமா! நான் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர அருள் புரிவாயாக! அவள் மட்டும் என்னை ஏதாவது செய்ய முயற்சித்தால், இதோ பார் பெண்ணே! என்னிடம் இருக்கும் எதையும் எடுத்துக் கொள். ஆனால் என்னை மட்டும் கொன்று விடாதே என்று சொல்லி
விடுவேன். எனது தொண்டை வறண்டு விட்டது. யாராவது ஒருவர் வருவதை பார்த்து விட்டால் உடனடியாக அப்போது எழுந்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். இன்னொருவர் வருகிறாரா என்று கண்களை அந்த பக்கமும் இந்த பக்கமும் திருப்பினேன். ஒரு சுடுகுஞ்சு கூட இல்லை! அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
ரயில் எல்லா நேரங்களிலும் வருவதும் போவதுமாக இருக்கும். மக்கள் இங்கும் அங்கும் பரபரப்பாக இயங்குவார்கள். நடைமேடை உயிரோட்டத்துடன் இயங்கும். நிற்பதற்கு கூட இடம் இருக்காது. அவ்வளவு கூட்டமாக இருக்கும். நான் தினமும் பயணிக்கும் பெண்கள் பெட்டியில் கதிரடிக்கும் போது விழும் தானியங்கள் போல மக்கள் திமுதிமுவென குவிவார்கள். ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது சிலர் மட்டுமே இறங்குவார்கள். காலியான இடத்தில் உட்கார இடம் கிடைத்ததுமே கைப்பைகளும், கூடைகளும் திறக்கப்படும். அவற்றிலிருந்து பீன்ஸ், பட்டாணி, பூண்டு போன்றவற்றை வெளியில் எடுப்பார்கள். பீன்ஸ், பட்டாணி பூண்டுகளை பிரிப்பார்கள். அவைகளின் தோல்களை உரிக்க ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில் ஊசிகளும் வண்ண வண்ண நூல்களும் வெளித் தோன்றும். வண்ண நூல்கள் சேலைகள், குர்தா, கம்பளி ஸ்வெட்டர் ஆடைகளில் பூக்களாக உருமாறும். பப்படம், ஊறுகாய் சட்டினி, மசாலா விற்பனையாகும். மாமியார், கணவன்மார்களால் துன்புறுத்தப்படும் பெண்களின் கண்ணீர் ஆறுதலாக துடைக்கப்படும். எப்போதாவது அடியும் வசவும் கூட பரிமாறிக் கொள்ளப்படுவது உண்டு.
ராமரக்ஷகாவத் பாடல்களும், காயத்ரி மந்திரங்களும் ஒலிக்கும். நமாஸ் தொழுகை செய்ய ஒரு பகுதி ஒதுக்கி தரப்படும். ரயில் நிலையங்கள் வரவர காலியான இருக்கைகள் மீண்டும் நிரம்பும்? அந்த முகங்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டன? பீன்ஸ் பட்டாணி, பூண்டு, பப்படம், மசாலா – இவைகள் எல்லாம் எங்கே? அவற்றை எல்லாம் பயங்கரமான முகங்களும், சந்தேகம் நிரம்பிய பைகளும் அப்புறப்படுத்தி விட்டன போலும்! இந்த இடத்தை விட்டு எப்படித்தான் எழுந்திருப்பது?
அப்பாடா! ரயில் வந்துவிட்டது! அது ரயில் நிலையத்திற்கு வந்ததைக் கூட நான் கவனிக்கவில்லை. சரி… சரி… நான் உடனடியாக பெண்கள் பெட்டியில் ஏற வேண்டும்.ஓ! எனதருமை புர்க்கா பெண்ணும் அல்லவா என் பின்னாலேயே ஏறுகிறாள்! என்னை தனியே விட மாட்டேன் என்கிறாளே!
பெட்டி கிட்டத்தட்ட காலியாக கிடந்தது. இரண்டு மூன்று பெண்களே இருந்தனர். காலிக் கூடையை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு மீன்காரப் பெண் உறங்கிக் கொண்டிருந்தாள். மீன்கூடை நாறுகிறது. பரவாயில்லை. பெட்டியில் மனித இருப்பு இருப்பதே எனக்கு போதுமானது. அந்தப் புர்க்கா பெண்ணும் எனக்கு எதிரிலேயே அமர்கிறாள்.
அவள் அணிந்திருக்கும் புர்க்கா போன்றே ரயிலுக்கு வெளியேயும் கும்மிருட்டாக இருக்கிறது. இருண்ட பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு ஒரு வெளிச்ச ரேகையும் கிடைக்கவில்லை. ஐயோ! என்ன செய்வேன்! என் மீது நிலைகுத்தி இருக்கும் அந்தக் கண்களிடமிருந்து தப்பிக்கலாம் என்று நம்பி என் கண்களை இறுக்க மூடினேன். இருட்டு தொலைந்து விடும் என்ற நம்பினேன். இப்போது அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாளோ? அவர்களை நம்பக் கூடாது என்று மக்கள் சொல்கின்றனர். எப்போது அவர்கள் கத்தியை உருவி உங்களை கசாப்பு செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியாது. என் கூட படித்த ஹசீனாவின் தம்பி அவள் மனைவியை குத்திக் கொலை செய்து விட்டானாம்! இந்தப் பெண்ணும் அதே மாதிரி என்னைக் கொலை செய்து விடுவாளோ என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஐயோ கடவுளே! யாரோ என்னை உலுக்குகிறார்கள்! கண்களைத் திறக்கிறேன். ஆ! அது புர்க்காவில் இருக்கும் பெண்தான்! ஓ! கூடாது! என்னை என்ன செய்யப் போகிறாள்? உதவி கேட்டு சத்தம் போடலாமா? மீன்காரப் பெண்ணோ அயர்ந்து தூங்குகிறாள். என்னைக் கொன்று போட்டாலும் அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஓடும் ரயிலிலிருந்து குதித்து விடலாமா? கடவுளே என்னை காப்பாற்று!
சத்தியமாக இனிமேல் ரயிலிலேயே வரமாட்டேன். என் வேலையைக் கூட விட்டு விடுகிறேன். கணினியில் தட்டச்சு செய்வதை விட்டொழிக்கிறேன். இந்த கொடுங்கனவில் துயர படுவதை விட பட்டினி கிடப்பது எவ்வளவோ மேல்!
“சகோதரி! சகோதரி!”
ஓ! அந்தப் பெண்பேசுகிறாள்.
“நான் வரும் ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். நீங்கள் என் பக்கத்தில் இருந்ததற்கு மிக்க நன்றி. உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! இந்த மாதிரி சமயங்களில் தனியாகப் பயணம் செய்வது பற்றி உங்களுக்கு தெரியுமா? நான் மிகவும் பயந்து விட்டேன். அது ரொம்ப கஷ்டமானது. என்னால் நம்ப முடியவில்லை!”
ஓ! அவளும் என்னைப் போலவே பயந்து கொண்டே இருந்திருக்கிறாள். நான் வெடிச்சிரிப்பு சிரித்தேன்.
” இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? நானும் தான் தினமும் ரயிலில் போய் வருகிறேன்”.
திடீரென எனது குரல் ரயிலின் விசில் சத்தத்தை விட அதிக வலிமை கொண்டதாக மாறியது.
அவள் தனது கைகளை எனது கைகளுக்குள் வைத்து ” கடவுள் உங்களை காப்பாராக” என்றாள்.
அவளது கைகள் வியர்வையில் ஈரமாக இருக்கின்றன. அவள் என்னைத் தொட்டதுமே எனது வியர்வை அவளது வியர்வையுடன் ஒன்று கலக்கிறது. ரயில் நிற்கிறது. அவளது பைகளை இறக்கி உதவி செய்கிறேன். திடீரென அந்தப் பைகள் லேசாகவும், தீங்கற்றதாகவும் தெரிகின்றன. ரயில் நிலையத்தின் மங்கிய வெளிச்சத்தில் அவள் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறாள்.
மீன்காரப் பெண் கொட்டாவி விடுகிறாள். கை கால்களை நீட்டி நெட்டி முறிக்கிறாள். கூடையில் இருந்து ஒரு பையை எடுக்கிறாள். உள்ளே பச்சைப் பசேல் என்ற பீன்ஸ். அந்தப் பசுமை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் வியாபிக்கிறது. இருட்டில் கண் சிமிட்டுகின்ற நட்சத்திரங்கள் எனது வீட்டுக்குச் செல்லும் வழியை வெளிச்சமாக்குகின்றன.
நன்றி: ஃப்ரண்ட் லைன், ஜூலை,29,2022
தமிழில் ம.கதிரேசன்
நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி
நூல் : ரயிலே ரயிலே… (வரலாறு – அறிவியல் – தொழில்நுட்பம்)
விலை: ரூ.170/-
ஆசிரியர்கள் : சு.ஹரிகிருஷ்ணன், முனைவர் பெ.சசிகுமார்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : பிப்ரவரி-2022
Email : [email protected]
www.thamizhbooks.com
ரயிலை நேசிக்காத குழந்தைகள் உண்டா. சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ரயிலை பார்த்தால் அவர்களின் மனம் சிறிய குழந்தைகளின் உயரத்திற்கேச் சென்று உயர பறக்கும். அந்தளவிற்கு ரயிலை நேசிக்காதவர்களே இல்லை எனலாம்.
ரயிலின் வெளித்தோற்றத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அதன் முழுத் தகவலும் கிடைத்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தானே செய்யும்.
ஆம் இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும், பள்ளி ஆசிரியரும், அவருடைய பள்ளி மாணவர் ஒருவரும் அம்மாணவனின் வீரதிர செயலுக்காக விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கெடுக்க கோவையிலிருந்து இரண்டு நாள் ரயில் பயணத்தில் டெல்லி செல்லும் வழியில் உரையாடல் நடத்துவது போன்று மிக இயல்பாக எழுதப்பட்ட நூல் இது என்றால் மிகையல்ல.
நானெல்லாம் ஆரம்பத்தில் ரயிலில் உட்கார்ந்து செல்லும் சீட் மட்டுமே இருக்கும் என்று நீண்ட காலம் எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தை நொறுக்கும் விதமாக இந்தியன் வங்கி ஊழியர் தோழர் ஜெ.மனோகர் அவர்கள் ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடத்தி வரும் ‘தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு’ நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகளோடு செல்வதற்கான வாய்ப்பாக நாகர்கோயில் மாநாட்டுக்காக என்னையும் பல நண்பர்களுடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். “ம் சரி எவ்வளவு நேரம் உட்கார்ந்து போகப் போறோமோ” என்று நினைத்து ரயிலில் ஏறினேன். எனக்கு ஒரு சீட்டை காண்பித்தார். நானும் உட்கார்ந்துவிட்டு என்னோடு இன்னும் மூன்று நான்கு பேர் உட்கார வருவார்கள் என்று சீட்டின் ஓரமாக உட்கார்ந்திருந்தேன். ‘என்ன ஓரமா உட்கார்ந்திருக்கீங்க இந்த சீட் முழுவதும் உங்களுக்குத்தான். இரவில் நன்றாக தூங்கலாம் இது ‘படுக்கை சீட்’ என்று கூறினார். அப்படியே ஆச்சரியத்தில் “என்னது தூங்கிகிட்டு போற சீட்டா, இப்படி ஒரு வசதி ரயிலில் இருக்கிறது என்றே இவ்வளவு நாளா தெரியாமல் இருந்திருக்கேனே” என்று ஆச்சரியப்பட்டேன். அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக பயணம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தூரமும் ரயிலையே தேர்ந்தெடுத்தேன். இப்போது வரை ரயில் பயணம் என்றால் அது எவ்வளவு தொகையா இருந்தாலும் செல்போனில் டிக்கெட்டை எடுத்து விடுவேன். அப்படித்தான் ஒருமுறை ஏல முறையில் ரயிலில் நிமிடத்திற்கு நிமிடம் டிக்கெட் விலை எகிறிடும் வகையில் இருந்த முறையில் சாதாரண நாளில் ரூ.1300 இருக்கும் டிக்கெட் அன்று இணைய ஏலத்தில் மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கு ஏசி கோச்சில் ரூ.5,000 கொடுத்து டிக்கெட் எடுத்தேன். ரயில் பயணம் அவ்வளவு ஈர்ப்பு என்றால் பார்த்துக்குங்களேன்.
இப்போ டிக்கெட் எடுத்தாலும் GST, கேன்சல் செய்தாலும் GST என்று அடுத்த ஏலச்சீட்டு நடத்த ஆட்சியாளர்கள் தயாராகி விட்டார்கள்.
சரி சரி நம்ம புராணத்தை அப்புறம் வச்சிக்குவோம். விஷியத்துக்கு வர்றேன்.
ரயில் எப்படி இயங்குகிறது;
தண்டவாளங்களில் கோளாறு இருந்தால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்; சிக்னல்கள் ஒரு மஞ்சள் விளக்கு, இரண்டு மஞ்சள் விளக்கு, சிவப்பு இதெல்லாம் எதைக் குறிக்கிறது; தண்டவாளம் வளைவா இருக்கிற பகுதிகளில் ரயில் கவிழாமல் செல்வது எப்படி; ஒற்றை தண்டவாளத்தில் ரயில்கள் எதிரேயும், பின்னாடியும் வரும் ரயில்கள் எப்படி ஒழுங்கு குலையாமல், எதிரே வரும் ரயிலுக்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஓரம் ஒதுங்கி நின்று செல்கிறது; ரயில்வே ஓட்டுநர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்; சரியான பிளாட்பாரத்தில் எப்படி ரயிலை நிறுத்துகிறார்கள்; ரயில் எஞ்சினில் பிரேக் பிடித்தால் எல்லா பெட்டிகளும் எப்படி ஒரே நேரத்தில் நிற்கிறது;
(ரயிலில் பிரேக் சிஸ்டம் என்பது எஞ்சினுக்கு எதிர்புற மின்சாரத்தை கொடுத்தால் சக்கரம் முன்னோக்கி சுற்றுவதற்குப் பதில் ரீஜெனரேட் முறையில் பின்னோக்கி சுற்றுவது போன்று அமைத்து ரயிலில் பிரேக் பிடிக்கிறார்கள் என்று இப்போதுதான் புதியதாக கற்றுக்கொண்டேன்); ரயில்வே ஊழியர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்; ரயிலின் வேகம் எப்படி மாறுபடுகிறது; பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் சென்று ரயில் நிற்கும் போன்ற எண்ணற்ற கேள்விகளை பள்ளி மாணவன் கேட்பது போல் அமைந்த உரையாடல் வழியில் மிகவும் அருமையாக எழுதப்பட்ட இந்நூலை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.
ஒரே ஒரு தகவல் மட்டும்
ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கிவிட்ட பின்பு சற்று ஓய்வு கிடைக்கும் என இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் இந்நூலை படித்தவுடன் மிகவும் அதிர்ந்தே போனேன். ஆமாம் ரயில் செல்லும்போது ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் எஞ்சினில் இருக்கும் ரயில் இயக்கும் கணினி தொழில்நுட்பத் திறையில் அது கேட்கும் தகவலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் ரயிலில் ஓட்டுநர் இல்லையென்று ரயில் சந்தேகப்பட்டு ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அதற்கும் பதில் இல்லையெனில் தானாகவே பிரேக் போட்டு ரயில் நின்றுவிடும். எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் இது என்று ஆச்சரியப்பட்டேன். ஓட்டுநர்கள் (லோகோ பைலட்டுகள்) அவ்வளவு தூரம் கண்ணுறங்காமல் ரயிலை இயக்கும் ரயில் எஞ்சினில் ஓட்டுநர்களுக்கு என்று ஒரு கழிவறை இல்லையேயென்பது எவ்வளவு வேதனை. அவசரமாக வந்துவிட்டால் அடக்கிக்கொண்டு அடுத்த ரயில் நிலையம் வரை பொறுத்திருக்கனும். அதுவும் ஒருநிமிடம், ரெண்டு நிமிடத்திற்குள் ஓடிவந்துவிட வேண்டும். இவ்வளவு கொடுமையான சூழலிலும் ரயில் ஓட்டுநர்கள் பயணிகளை மிகவும் பத்திரமாக பயணிக்க உதவுகின்றனர்.
இன்னும் இன்னும் நிறைய பொக்கிஷங்களை தென்னக ரயில்வே முதன்மை லோகோ ஆய்வாளர் தோழர் சு.ஹரிகிருஷ்ணன் அவர்களும், இஸ்ரோ விஞ்ஞானி தோழர் பெ.சசிகுமார் அவர்களும் மிக எளிய மொழியில் நமக்கு வழங்கியிருக்கின்றனர்.
அத் தோழர்களுக்கும், நூலை மிகச்சிறப்பாக வெளியிட்ட பாரதி புத்தகாலயத் தோழர்களுக்கும், இந்நூலை எழுத வழிகாட்டிய தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் உரித்தாக்குகிறேன்.
அனைவரும் இன்றே மேற்கண்ட முகவரியில் நூலை புக் செய்து வாசித்து உள்ளம் மகிழுங்கள் தோழர்களே!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
செல் : 9443534321.
நூல் அறிமுகம்: இந்திரஜித்தின் ரயில் – து.பா.பரமேஸ்வரி
ஆயிரமாயிரம் வரலாற்று சம்பவங்களும் அசம்பாவிதங்களும் கடந்து வந்த கருப்பு சரித்திரங்கள் ஏராளமானவை. பார் எங்கிலும் வாழ்ந்த இந்தியக் குடிகளின் கண்ணீர் காலங்கள் பல மறைக்கப்பட்ட பக்கங்களின் வரிகள். வேறு சில இருட்டடிப்பு செய்யப்பட்டு மக்கள் வெளிக்கு வராமல் மறைந்தன. இன்னும் பல காலத்தாலும் கண்டுபிடிக்க முடியாமல் பூமிக்குள் புதைக்கப்பட்டன. அநேகங்கள் தீயின் வேள்வியில் பொசுங்கி காற்றுவெளியில் கலந்துவிட்டன இன்றைய நம் வரலாற்று புத்தகங்களில் புனைவுகளில் வெறும் நினைவுச் சின்னங்களாய் வாசிக்கவும் உச்சுக் கொட்டி விட்டுக் கடந்துப் போவதற்கான அரிச்சுவடியாய் மாறிப் போயின.
அசலில் உலகில் ஒவ்வொரு மூலையிலும் இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்க்கு இழைக்கப்படும் அவலங்கள் என்பது பொறிக்கப்பட்டு பாதியும் எரிக்கப்பட்ட மீதியும் என சொல்லி அழ துயரங்கள் கோடி. இலங்கையில் ஈழத் தமிழர் தொட்டு ஆசியாவில் பெரும்பாலான இடங்களில் வாழ்ந்தத் தமிழ்க் குடி மக்கள் எப்போதும் இன்னல்களோடும் அச்சங்களோடும் அடிமை வாழ்க்கையுடனும் வாழ்ந்து மடிந்துள்ள வரலாறுகள் நாம் அறிந்ததே.
ஆங்கில அடிமை சாசன காலங்களில் இந்திய தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் மறைந்து மாண்ட தமிழர்கள் ஒருபுறம் இருக்க இன்றும் இலங்கையில் தமிழர்கட்கு விடிவு காலம் என்பது எப்போதும் கானல் நீராக இருந்து வருகிறது. உலகப் போர்களின் வரிசையில் யுத்த காலங்களில் உலகிலுள்ள மனிதர் அனைவருக்குமான அச்சங்கள் ஏற்படுத்தக்கூடிய மரண காலங்கள். நமக்கான திடுக்கிடும் நினைவுகளும் மரண ஓலங்களும் மங்கையர் அவயக்குரல்களும் அகில வரலாற்றின்பேரிரைச்சல். செந்நீர் சிதறிய போர்க்களங்ளும் சதைத் துண்டுகள் கிடக்கும் யுத்த பூமிகளின் கதறல்களும் சொல்ல மாட்டாது அழுது புலம்பும். ஒவ்வொரு வெற்றிக்கும் தோல்விக்கும் பின்பான மனித உயிர்களின் நேரடியான உயிர் இழப்பும் மறைமுகமான அர்ப்பணிப்பும் சுதந்திரத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் உருவாக்கப்பட்ட பல்வேறு வசதிகளும் திருத்தங்களும் சீரமைப்புகளும் நவீன அறிவியல் மாற்றங்களும் இன்று நாம் அனுபவிக்கும் நவீனத்துவ சொகுசுகளுக்குப் பின்பான நிழல்களாக பல மனித உயிர்களின் வியர்வை நீரும் உயிர் தொலைத்த செந்நீரும் ஏராளம்.
பாறை உடைந்து தலையில் விழுந்து செத்தவர்கள், பன்றி அடித்து செத்தவர்கள், பாம்பு கடித்து செத்தவர்கள், அடிவாங்கி செத்தவர்கள், சாப்பிடாமல் செத்தவர்கள், சாப்பிட்டு செத்தவர்கள் கொசு கடித்து செத்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என இன்று நாம் கொண்டாடும் ஒவ்வொரு சுகமான நவீன உபகரணங்களும் சீரிய நடைபாதைகளுக்கும் செம்மையான பயண வசதிக்கும் என நம் சொகுசு வாழ்விற்கு பின்பான பல மனிதர்களின் குடும்பங்கள், உறவுகள், பெற்றோர்கள் பிள்ளைகளின் கண்ணீர் கதைக்கும்.
உறவை இழந்துத் தவித்த அவலங்களும் மனித சடலங்களின் ஏக்கங்களும் வெறும் நெஞ்சாங்கூடு மட்டுமே உடலில் மிஞ்சி நாறும் தோலுமாய் சதைப்பற்றற்ற சத்தற்ற மனிதப் பிண்டங்கள் ஜீவனிழந்த ஆவிகளும் இன்றும் ஒவ்வொரு ரயில் தண்டவாளங்களில் உரசும் இரயிலின் ஓசையில் சக்கரங்களைப் பிடித்து இறந்த உயிரை உறவை உடமையை திருப்பிப் பெற மன்றாடும்.
அப்படியான 80,000 தமிழர்கள் மடிந்த சயாம் மரண ரயில்வே சரித்திரத்தின் பின்புலம் உயிர்களின் வதைகளையும் அடித்து நொறுக்கப்பட்ட பல மனிதர்களின் வலி ஒச்சைகளையும் உறவைத் தேடித் திரிந்துப் பித்துப் பிடித்த மக்களின் ஓலங்களையும் கொண்ட இருண்ட நினைவுகள். உலகத்தின் அனேகர் அறியப்படாத அது ஒரு கருப்பு சரித்திரம். சுதந்திரப் போராட்டத்தியாகிகளைக் காட்டிலும் உலகில் இவர்களைப் போன்ற பல தியாகிகளின் உயிர்துறப்புப் பரந்த வெளிக்கு வராமல் மறைக்கப்பட்டது. இதுபோன்ற இருட்டடிப்பு அசம்பாவிதங்களை உலகறியச் செய்ய பல இலக்கிய எழுத்தாளர்கள் எண்ணில்லடங்கா மெனக்கிடல்களை உழைப்பை நேரங்களை சிரத்தையைப் பணயமாக வைத்து உலகறியா சம்பவங்களைத் தமது கூரிய மைக்கோல் எழுத்தின் வழியே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விரியப்படுத்தியுள்ளனர். எழுத்துதாரிகளின் மெனக்கெடல் இல்லையெனில் நமக்கு பல சரித்திரங்கள் சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கும். உலக வெளியில் மறந்தே போயிருக்கும். சாமானியர்களல் வெறும் சரித்திரத்தை ஆராயவும் குறித்து வைக்கவும் மட்டுமே முடியும். ஆனால் ஒரு ஆகச்சிறந்த இலக்கியவாதிகளால் மட்டுமே தமதுப் படைப்பின் வழியே புனைவின் ஊடே மக்கள் பார்வைக்கு இப்படியான மறைக்கப்பட்ட பக்கங்களைக் கொண்டு வந்துச் சேர்க்க முடியும். ஆச்சரியங்களோடும் சுவாரஸ்யங்களோடும் காட்சிப்படுத்த முடியும். வித்தியாசமான பார்வை தான் ஒரு சாதாரண மனிதனையும் ஒரு சமூக சிந்தனை கொண்ட எழுத்தாளனையும் வேறுபடுத்தியும் வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.
சிங்கப்பூரிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் சயாமிலிருந்தும் ரயில் பாதை அமைக்க ஜப்பானியர்களால் அடிமைகளாய் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வதைகளை வலிகளை வெவ்வேறு உணர்வுகளைச் சுமந்து மடிந்துபோன அவர்களின் ஜீவனை எழுத்தாக்கி கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் நாவல்கள் என்று தமது இலக்கியப் பயணத்தை அனைத்து தளங்களிலும் உலவச் செய்த நூலாசிரியர் தோழர் இந்திரஜித், தமிழர்களின் கண்ணீரைத் தமது ரயில் நாவல் வழியே கடத்துகிறார்.
புதினம் கற்பனையை நம் வசதிப்படி துணையாக்கிக் கொள்ளும் வாய்ப்பைத் தரவல்லது. ரயில் கற்பனையும் புனைவும் சுவாரஸ்யங்களும் காதலும் கலவரமும் என உணர்வுகளின் உணர்ச்சிப் பிரவாகமாக வளைந்து நெளிந்து பயணித்தாலும் அசலில் இதன் மையம் என்பது சயாம் மரண ரயில் பாதையின் ஆயிரக்கணக்கானோரின் கரங்களைச் சுமந்து செல்கிறது. இன்று மட்டுமல்ல உலகில் எந்த ரயில்வே பாதையின் இரும்புத் தண்டவாளத்தை நாம் கூர்ந்துற்றாலும் அவற்றைச் சீரமைக்க உருவாக்கிய உயிர்கள் பயணிகளாக நம்முடன் இன்றும் பயணித்து தான் வருகின்றனர்.
புதினத்தின் கதாநாயகன் நாயகி என்று குறிப்பிட்டு அடிக்கோலிட்டுச் சொல்ல ஜோடிகள் அனேகம் உள்ளன. தமது மண்ணிலிருந்து தரதரவென வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கொத்தடிமைகளாக வருடக்கணக்கில் பாடுபடுத்திய ஒவ்வொரு ஆடவனும் நாயகனே. தலைவனைப் பிரிந்து உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற மனப் போராட்டத்திலும் உளச்சலிப்பிலும் பேரச்சத்திலும் குறுகி வாழ்வையும் வாழ்நாளையும் எண்ணிக்கொண்டிருந்த ஒவ்வொரு மனைவியும் காதலியும் நாயகிகளே.
ஆனால் புதினத்தில் வெகுவாக உலவி வரும் பாத்திரங்களைப் பற்றியும் அத்தனை ஆயிரம் அப்பாவிகளின் அவய குரல்களின் ஒட்டுமொத்த ஒலியாக வதைகளின் வலியாக அடிக்கோலிடப்பட்டு முன் வைத்துப் புனைந்திருக்கும், பேசும் பாத்திரங்களாகச் சிலவற்றை நாவலில் ஊடாடவிட்டும் வாழ்க்கையின் பாடுகளைக் காட்சி மயமாக்கியும் அப்படியான வதைகளைச் சுமந்த மாந்தர்களை வாசக மனதிற்குள் இன்றும் உலாவவிடும் ஒவ்வொரு துர்சம்பவங்களும் ஏற்பட்ட கீறல்களின் ரணங்களை ஆற்றவியலா வலிகளைப் புதினங்களின் பக்கங்கள் கண்ணீர் வடிக்கின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களில் ஒன்றான சயாம் மரண ரயில் பாதையின் துயரச் சம்பவங்களை மனித அவயங்களின் அலறல்களைப் பிரதிபலிக்கிறது புதினம். ஜப்பானியர்களால் மலேசியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் நிர்ப்பந்தமாக இழுத்து வரப்பட்ட தமிழர்களுக்கும் வேறு சில அயல் நாட்டவருக்கும் நிகழ்த்தப்பட்ட அநீதியை கூவுகிறது ரயில். ஒருபுறம் உலகம் முழுவதிலும் தமது அதிகார ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஆங்கில அரசுக்கு எதிரான ஒரு போர் குரலின் நீட்சியாக இந்த ரயில் பாதையின் கட்டமைப்பு அவசியம் என்ற நியாயத்தை முன்வைத்தாலும் மனித உயிர்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வையும் உயிரையும் குடித்த ஜப்பானியர்களின் அடக்குமுறை ஆதிக்க ஆக்கிரமிப்பு என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று . இது ஒரு அடக்குமுறை அரசியல் என்றும் கூறலாம்.
சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானியர்களுக்கு ஆதரவாக போரில் பங்கேற்றார் என்கிற வரலாற்றுத் தகவல்கள் பதிவிட பட்டிருந்தாலும் தமிழர்களுக்கு இப்படியான வன்மக் குரூரம் உலகின் ஒரு மூலையில் நடக்கும் பட்சத்தில் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தேசியத் தலைவர் அமைதி காத்தது என்பதோ அல்லது அவர் காதுகளுக்கு தமிழர்களின் கதறல்கள் எட்டவில்லை என்பதும் வரலாறு சுட்டிக்காட்டும் அரசியல். தேச தலைவர்கள் கூட தமது காரியத்தை முன் நிறுத்தும் பட்சத்தில் மக்களின் உயிரையும் உறவுகளையும் பறித்து அரசியலாக்குவது என்பது ஆதிகாலம் தொட்டு இன்றைய காலம் வரை இருந்து வருகிறது.
ஜப்பானியர்களால் வம்பாக ரயில் பாதை அமைக்க இழுத்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான கண்ணீரைச் சுமந்து இந்தக் காலங்களை எவ்வாறு கடக்க போகிறோம் என்ற மக்களின் கேள்விக்குறியுடன் துவங்குகிறது புதினத்தின் அத்தியாயம். தொடரும் அத்தியாயங்கள் ஒவ்வொரு தமிழனின் குடும்பக் கண்ணீரை தூக்கிக்கொண்டு ஒலிக்கிறது . பரவலாக புதினமெங்கும் ஊடாடும் பல இளம் ஜோடிகள் .ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு ஜோடியையும் நாவலின் தொடக்கத்தில் பிரிந்தவர் இறுதிவரை ஒரு ஜோடியையும் தம்மிணையுடனும் குடும்பத்துடனும் சேர்ந்ததாகப் பதிவிடவில்லை.
ஒவ்வொரு தம்பதியரும் காதல்ஜோடியும் பிரிந்த வாக்கிலேயே நாவல் முற்றுப்பெறுகிறது .ஒவ்வொரு பிரிவின் துயர ஆதியும் துக்க அந்தமுமாகவே முற்றுப்பெறுகிறது . துரை ரபேச்சா காதல் தம்பதியர் முதற்கொண்டு சாம்பா வசந்தா தொடர்ந்த புதினம் கிருஷ்ணன் விஜயா உடன் கிரோஷி யூக்கோ முடிய இத்தனை இணைகளைச் சுமக்கிறது நாவல். இதில் ஒன்று கூட இறுதிக்கட்டத்தில் சேரவில்லை என்பது சற்றே விசனம்.
ரபேச்சா துரை திரும்ப மாட்டான் என்று நினைத்து கணேசனை மறுமணம் செய்து கொள்கிறாள். பாதை கட்டுமானப் பணியில் கிராமத்து அழகிய சிட்டாக அபின்யா துரையைக் காதலிக்கிறாள். சலனத்தில் சற்றே உழன்றாலும் மனைவியின் மீதான அதீத காதல் அபின்யாவை விட்டு விலகி விடுகிறான் துரை. இறுதிகட்ட முடிவில் அங்கிருந்துத் தப்பித்து அவாங் என்கிற மலாய் வாசியிடம் தஞ்சம் புகுகிறான். அவாங் துரையை காட்டில் வசிக்கும் தமது சீன மாமியாரிடம் அடைக்கலமாக ஒப்படைக்கிறான் . இயற்கைச் சூழலும் பாட்டியின் பேரன்பும் துரையை ஆட்கொள்ள வீட்டிற்கு போக மனமில்லாமல் அல்லாடுகிறான். ஆங்கிலேயர் ஜப்பானின் மீது குண்டு வீசியதை அவாங் கூறி இனி ஆபத்தில்லை சொந்த ஊர் திரும்பச் சொல்ல சற்றும் விருப்பமின்றி வலுக்கட்டாயமாக மனைவியையும் மகன் மணியையும் பார்க்க செல்கிறான்.
இறுதியில் ரபேச்சாவின் மறுமணத்தால் ஏமாற்றம் கொண்ட துரை சித்தம் கலங்கி பித்துப்பிடித்து ஓடுகிறான். அடுத்த நாயக அந்தஸ்து சாம்பா பெறுகிறான். பார்க்க ஆள் வாட்ட சாட்டமான கட்டுமஸ்தான உடற்கட்டு. ரயில் பாதை பணியில் வம்பாக இழுத்து வரப்பட்டவன். தன்னை விட வயதில் மூத்தவளான வசந்தாவைக் காதலிக்கிறான். கடும் முன் கோபி. ஜப்பானியர்களை அடித்து துவம்சிக்கத் துடிப்பான். துரையின் அறிவுறுத்தலால் அமைதிக்காப்பான். சில காலங்களுக்குப் பிறகு ரயில் பாதை அமைப்பதில் சாம்பாவின் தீவிரம் கூடியது. கடின உழைப்பாளி. சயாமில் சாம்பாவும் துரையும் முத்துவும் நெருங்கிய நண்பர்கள்.
ஒருநாள் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது வசந்தாவின் நினைவில் லயித்திருந்த அவன் ஜப்பானிய சிப்பாய் கிரோஷி சாம்பாவைப் பிட்டத்தில் வேகமாக அடிக்க அதிர்ச்சியில் சற்றே கோடாரியை கவனிக்காமல் திருப்ப கிரோஷியின் அடிவயிற்றில் கோடாரி இறங்கி வெட்டுப்பட்டு குடல் சரிந்துக் குருதி கொட்ட வேகமாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டான் கிரோஷி. ஒரு சில நாட்களில் இறந்தும் போனான்.
இத்தனை வேதனையின் மத்தியிலும் வெறும் போர்த்திய தோலுடன் நெஞ்சாங்கூட்டு எலும்பின் துருக்கிய நிலையிலும் சாம்பாவிற்குக் காட்டில் கிடைத்த காதல் மலராய் கொரிய பெண் ஒருத்தி. சிப்பாய்களால் அவர்களின் தனிப்பட்ட வேட்கைக்காக கொள்பொருளாக அழைத்து வரப்பட்ட ஏராளமான கொரிய பெண்களில் ஒருவளாக அவள்.சாம்பா மீது அதீத காதல். சாம்பாவின் மனம் சற்றே தடுமாறினாலும் வசந்தாவின் நினைப்பே அவனை அதிகமாக வாட்டியது.
போதுமான உணவில்லை அழுகிய காய்கறி புழுத்த அரிசி என நாளுக்கு நாள் பணியாளர்களின் உடல் ஆரோக்கியத்தின் சீர்கேடு தொடர ஆரம்பித்து. சத்தின்றி அநேகர் இறக்க குவியல்களாக எரித்தும் புதைத்தும் மனித அடிமைகளின் பிணங்கள். நோய் தொற்றுப் பரவ மேலும் பலரின் மரணங்கள் சாம்பாவையும் துரையையும் பிற பணியாளர்களையும் அலைக்கழித்தன.
முத்து பாத்திரம் புதினத்தில் வெகுவாக பிரவேசிக்கா விட்டாலும் ஆரம்பம் முதற்கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடவே முயல்கிறான். பலமுறை தப்பித்து ஜப்பானிய சிப்பாய்களிடம் மாட்டிக்கொண்டு உதைகப்படுகிறான். காயங்களின் ரணம் ஆறும் முன்னர் மீண்டும் ஓட்டம். நாவலின் மையம் ஒன்றில் முத்து தப்பித்து மாட்டிக் கொண்டதாக காட்சிப்படுத்தும் நூலாசிரியர் முத்துவிற்கு அதன்பின் என்ன நேர்ந்தது என்பதை விளக்க மறந்தார்.
புதினத்தின் மற்றொரு கதை மாந்தராக கிருஷ்ணன். ஜப்பானியர்களால் குண்டுகட்டாகத் தூக்கி வரப்பட்டு அடித்து உதைத்து துன்புறுத்தப்படுகிறான். அம்மா சாந்தகுமாரிக்கு ஒரே பிள்ளை. விஜயாவை உயிருக்குயிராக காதலிக்கிறான். பணியில் அவ்வப்போது விஜயாவின் நினைவில் தன்னையே நொந்து கொள்வான். இவருடைய பாத்திரத்தையும் நூலாசிரியர் ஒரு சில அத்தியாயங்களில் சில பக்கங்களில் மட்டுமே காட்சிப்படுத்துகிறார். அவனது பாத்திரமும் முடிவற்றதாகவே தொலைந்துபோனது.
பக்கங்களில் தொடரும் கதைக்களத்தில் அப்பா சுப்பிரமணி மனைவி வத்சலா சில அத்தியாயங்களில் வந்து போகின்றனர். அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் சுப்பிரமணியம் அவர் தந்தை இராமசாமி போன்ற ஆங்கிலேயருக்குத் தாளம் போட்டு ஆங்கில பெருமையை பேசிக் கூழைக் கும்பிடுப் போட்டு சொத்துச் சேகரிப்பு செய்தவர்கள் ஏராளமானோர் இருந்து வந்ததை சுட்டிக் காட்டுகிறது நாவல்.
இராமசாமி கும்பனியில் பணிபுரிந்து வெள்ளையருக்கு ஊழியம் செய்தவர். கும்பனியில் பணி புரிபவதைப் பெருமையாகக் கருதுகிறார் மகன் சுப்பிரமணி. துரையை இறந்து விட்டாதக் கூறி ரப்பேச்சாயாவிற்கு தனது தகுதிக்கு தகுந்தாற்போல கணேசனை மறுமணம் செய்து வைப்பதும் அவரே. இது போக ரவீந்திரன் சார், புருஷோத்தமன், மன்டோர், அம்பலவானர், தளபதி யமாக்கா போன்ற பாத்திரங்களும் புதினத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவைக்கேற்ப உலவி வருகின்றன.
அதிகமான பாத்திரங்களின் நடமாட்டம் வெகுவாக வாசகனை குழப்பமடையச் செய்யும் வாசகத் தளத்திலிருந்து விலக்கி விடும் என்பதை நன்கு உணர்ந்த நூலாசிரியர் வாசகனின் கவன ஈர்ப்பை கருத்தில் கொண்டு மனதில் நிறுத்தி வைக்கும் அளவிற்குப் பாத்திரங்களைப் புகுத்தியுள்ளார். இது நாவலுக்குக் கூடுதல் சிறப்பு.
சொல்லாடல்கள் போன்ற ஆசிரியரின் மாறுபட்ட உவமை உருவக வாக்கியங்கள் நாவலுக்கு இன்னமும் மெருகு கூட்டுகிறது.
“முன்னங்கால் வலிமையை நம்பும் எருமை பின்னங்கால் வழுக்கி செல்வதை உணராது.”
“ஒருமுறை வந்தால் கடவுள் அவ்வப்போது வந்தால் மனிதன். தொடர்ந்து வந்தால் நாய்!!.”
“இருட்டும் தனிமையும் எப்போதும் சித்தபிரமைக்குப் பொருத்தமான சூழலை உருவாக்குகின்றன.”
மனித உளவியலையும் மனித மனோபாவங்களையும் அனேக இடங்கள் பேசுகின்றன.
“மனம் எப்போதுமே ஏக்கத்தில் சுகம் காண்கிறது .ஏக்கம் கலைந்தப் பின் புதிய ஏக்கத்துக்குத் தயாராகிவிடுகிறது.”
கணவனின் ஆதிக்க உணர்வு மனைவி என்பவள் மீது எப்போதும் திணிக்கப்படுவதை கதைக்கிறது நாவல். பெண்ணின் உணர்வுகளையும் கருத்துக்களையும் பெருக்க விடாமல் அடங்கியிருக்க வேண்டும் என்பதை சுப்பிரமணியத்தின் வழியே ஒட்டுமொத்த கணவன்மார்களின் ஆதிக்க உளவியலை பேசுகிறது. துயர காலத்தில் மனைவியின் ஆறுதல் தேடுவதும் கணவனின் கண்ணீர் மனைவியை சற்றே மகிழ்ச்சிக்கு ஆட்படுத்துவதும் அடக்கி வைக்கப்பட்டும் மனதின் உளவியல் வெளிப்பாடு. இதுநாள் மட்டும் வாழ்ந்த பெரும்பாலான் மனைவிகளின் பெருக்கப்பட்ட மனநிலையை இயல்பாகவும் அப்பட்டமாகவும் எடுத்துக்காட்டுகிறது. எதையும் அடக்க முற்படும் போது வெறுமையையே வெளிப்படுத்தும் என்பதை சுட்டுகிறது நாவல். மனித மனங்களின் அழுத்தங்களை உளவியல் சிக்கல்களை ஆங்காங்கே பதி விடுகிறது நாவல்.
“மனைவியை மதிப்பவன் கணவன் அல்ல கணவனை மதிக்காத மனைவி அல்ல.” என்கிற காலம்தொட்டு பின்பற்றப்படும் தமிழ்க்குடிப் பண்பாட்டின் அடிமை சாசனமான மனுநீதியை அப்பட்டமாகச் சாடுகிறது. நாவலை வாசிக்கும் கணங்கள் நம் தமிழகத்தின் மெட்ரோ ரயில் பாதை அமைப்பின் வடக்கத்தி மக்களின் வாழ்வியலை நினைவூட்டுகிறது. குடும்ப உறவுகளைப் பிரிந்து பல வருடங்களாக இங்கே பணிபுரியும் அவர்களின் அவஸ்தை நாவலின் பக்கங்களில் உணர்வுபூர்வமாக விரியப் படுத்தியுள்ளார் நூலாசிரியர.
“நிலத்தை விட்டு இன்னொரு நிலம் நோக்கி போகும் போது மனதில் ஏறி அமர்ந்து பூமி தனது பாதத்தால் பலம் கொண்ட மட்டும் அழுத்தும். அப்போது மூச்சு விடுவது சிரமமாக இருக்கும்.” இயற்கை எழிலை பல காவியங்களும் இலக்கியங்களும் வர்ணணைகளாக உருவகப்படுத்தி கொண்டாடியுள்ளனர். புதினத்தின் படைப்பாளி இந்திரஜித் அவர்கள் இயற்கையின் வடிவை முற்றிலும் மாறுபட்ட வகையில் கொண்டாடியுள்ளார். இயற்கை அன்னையின் எழில் திராபகக் கதவாய் திறக்கிறது புதினத்தில். இப்படியும் காட்சிப்படுத்த முடியுமா என்கிற அளவிற்கு வியப்பைக் கூட்டுகிறது.
“நஞ்சுண்டு மாண்டது போல் வானம் நீல கைகளை அகல விரித்தபடி படுத்திருந்தது. நிழல்களை துரத்தியபடி அங்கங்கே வெளிச்சங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நிலவின் உள்ளங்கால் மட்டும் தெரிந்தது.” இயற்கையின் படைப்புகளை மனிதன் மெல்லமெல்ல அழிக்கும் துர்பாக்கிய நிலை இன்றைய இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வருகிறது. சிட்டுக்குருவி போன்ற எண்ணற்ற புல்லினங்கள் முதல் தேனீக்கள், கடல் உயிரினங்கள் என அழிவின் வரிசைகள் நீண்டு வருகின்றன. இதில் ஆமை இனத்தின் அழிவு மனிதகுலத்தின் சாபம் .ஆமை முட்டைகள் மனித எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் என்கிற மருத்துவ கருத்தின் அடிப்படையில் ஆமை கடலோரத்தில் மண்வீடு கட்டி முட்டையிட்டு பாதுகாத்து வரும் முட்டைகளை மனிதர்கள் களவாண்டு எடுத்துச் செல்வதை வன்மையாகக் கண்டிக்கிறது நாவல். ஆமைகளின் வாழ்வியலை சில பக்கங்கள் இயற்கைவியலாய்ப் பேசுவது அழகு. மனித வாழ்வின் அடிப்படை தாத்பரியமே நம்பிக்கை.
நம்பிக்கை இழந்தவன் உடுக்கை இழந்தவன் கைபோல என்கிறது ஆன்றோர் வாக்கு.மனித நம்பிக்கையை பலப்படுத்தும் கைங்கரியம் உணர்ந்த இயற்கை, சிலந்தி போன்ற உயிரினங்களைப் படைத்து வாழ்வியல் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. நாவலாசிரியரும் சிலந்தியால் பின்னப்படும் அன்பின் மகத்துவத்தைப் பிரயத்தனத்தை தொடர் முயற்சியின் வலிமை, நுட்ப அறிவின், தீவிர அவதானிப்பின் ஒருங்கிணைந்த இயற்கையின் வேலைப்பாடே சிலந்திவலை. இதன் உருவாக்கத்தின் ஒவ்வொரு படிநிலையும் மனிதனின் ஒவ்வொரு கண்டுபிடிப்பின் அதிசயங்கள். ஒவ்வொரு செயலிலும் அதீத கவனநிலையை உயிரினங்கள் மேற்கொள்கின்றன என்கிற இயற்கை கோட்பாட்டை தத்துவ விதியை பறைசாற்றுகிறது நாவல். படைப்பிற்கு பின்பான யோகநிலை ஒருவித பூரணத்தை உண்டுபண்ணும் என்பதே சிலந்தியின் வலை பின்னும் செயல்பாட்டிற்கான போதனை. தியானத்தின் தத்துவத்தை உணர்த்துகிறது சிலந்தி.
“நூல் வீசிய களைப்பு அடங்க கண்மூடி தியானத்தில் ஈடுபட்டது. தியானத்தின் போது உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களும் சிலந்தியின் வயிற்றுக்குள் வந்து தஞ்சம் அடைகின்றனர்.” பத்தொன்பதாம் நூற்றாண்டின் வாழ்வியல் நடைமுறையைக் காட்சிப்படுத்துகிறது புதினம். மனித நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், நாகரீகம், ஆங்கில மோகம், தீவிரக் காதல், பெருக்கப்பட்ட மன உணர்வுகளின் அதீத உணர்ச்சிப் பிரவாகம், கணவனுக்கு அடங்கும் மனைவி, பெற்றோர் சொல் தட்டாத பிள்ளை, தமிழ் இனத்திற்கே உரித்தான முரட்டுத்தனமும் அடங்கமறுத்தலும், தேசிய அரசியல் உலகளாவிய அரசியல் என புதினம் முழுதும் நம்மை நூற்றாண்டுகளைக் கடத்தி பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அடிமை வாழ்க்கையையும் ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆட்சியையும் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற கலாச்சாரம் இன்றும் தாயகத்தை விட்டு அகலவில்லை. சொந்த மண்ணை விடுத்து அயல்நாட்டில் அல்லல் படும் மக்களின் அவலத்தை பேசுகிறது. ஒன்றிய அரசின் மேற்கத்திய அரசியலை ஒப்புமைப்படுத்துவதாக விளங்குகிறது. எளிமையான மொழிக் கோர்வையில் பயணிக்கிறது ரயில்.
அத்தியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எந்த வித குழப்பம் இன்றி நாவலின் புனைவையும் கதையின் நகர்தலையும் தெளிவாக்கிக் கொள்ளும் வகையில் எடுத்துச் செல்லப்படுகிறது. மறைந்துபோன வரலாற்று மறைக்கப்பட்ட சரித்திரத்திற்கு மீன்புனைவு அளித்து எழுத்தின் சாரம் வாசகனை கதைக்களத்தில் இருத்தி வைக்கிறது. காட்சிக்குள் புகுத்தும் படியான புனைவு வடிவமைப்பு சயாம் போய் திரும்பி வந்த நிறைவைத் தருகிறது அங்கு வாழ்ந்த தமிழர்களுடன் லயிக்கச் செய்தது. அவர்களின் வாழ்வியல் களைப்பை உணரச் செய்கிறது. இனி ஒவ்வொரு ரயில் பாதையை கடக்கும் நிமிடங்கள் அதன் படைப்பாளிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கான சில கண்ணீர் துளிகளை அஞ்சலியாக்கும் மனநிலையை உண்டுபண்ணியது. இப்படியான ஒரு சரித்திர சம்பவத்தை கைக்கொண்டு புனைவைக் கூட்டி புதினமாக்கிய எழுத்தாளர் இந்திரஜித் அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்.
– து.பா.பரமேஸ்வரி
விலை: ரூ.150/-
பக்கம்: 152
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
பயணங்கள் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்
தாஜ்மஹால் காண
ரயிலில் சென்றேன்
கும்பத்துடன் கூச்சல் துணையொடு
தஞ்சாவூர் முதலே தரையில் ஒருவர்
வெயிலை பொருட்படுத்தாது
எதுவுமில்லாமல்
அவ்வளவு இனிமை தனிமையில்
பயணம் அனைவருக்கும் பொது வல்ல
பணயம் மனிதனுக்கு புதிதல்ல
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 – சுகந்தி நாடார்
தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்
நாம் முன்பு பார்த்த தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டு வந்த Philippa Ruth Foot, Judith Jarvis Thomson இருவரும் தத்துவஞானிகள் மட்டுமே. மனித மனம் எவ்வாறு சிந்திக்கின்றது ? மனித சிந்தனையில், மனிதனின் ஒழுக்க நெறி (உசனம் ethics)பற்றிய ஆராய்ச்சியில் ஒரு பகுதியாகவே தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டுவரப்பட்டது. இப்பிரச்சனையை ஒரு பொறியாளரிடம் கொடுத்து இருந்தால், அவர் அந்த இரயிலை எப்படி நிறுத்த முடியும் என்று சிந்தித்து இருப்பார் தானே? ஒரு சட்ட அறிஞரிடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு விபத்து நடக்காமல் இருக்க சட்டப்படி வழி செய்வார்தானே? ஒரு மருத்துவரோ விபத்து நேர்ந்தால் என்னென்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று யோசிப்பார், இப்புதிரை ஒரு மொழியாளரிடம் கொடுத்தால் விபத்து பற்றிய காரண காரியங்களை ஆராய்ந்து அதை பிறரோடு பகிர்ந்திருப்பார். மற்றக் கலைஞர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப இப்பிரச்சனையை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஒரு பொருளாதார வல்லுனரிடம் கொடுத்தால் அவர் விபத்தின் பொருளாதாரச் சிக்கல்களை அலசி ஆராய்வார்.
இந்தப் புதிரை விடுவிக்க ஒவ்வோரு துறையினரும் ஒரு குழுவாக முயலும்போது, நல்விளைவுகளைப் பெருக்கவும், தீய விளைவுகளைக் குறைக்கவும் முடியும்தானே? நாம் இன்று அப்படித்தான் செய்து வருகின்றோம். ஆனால் குழுவில் செய்தாலும் புரிதல் குறைவு நேரம் கடத்தப்படுதல் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம், இந்த நேரக் கடத்துதல் பிரச்சனைதான் சர்வவல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை நமக்குக் கொடுக்கின்றது.
நாம் வாழும் பூமி கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் விரைவாக அழிந்து கொண்டு இருக்கின்றது. புவி அழிய முடியுமா என்ன? 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் dinosaurs (பெருத்த தொன்ம ஊருமினம்) வாழ்ந்து வந்ததாக தொல்லியியல் ஆராய்ச்சியில் கிடைத்த அவ்விலங்குகளின் எலும்புகள் சாட்சி கூறுகின்றன. ஆனால் தற்காலத்தில் அந்த விலங்கு இருப்பதற்கான அடையாளம் இல்லவே இல்லை.
அன்றையக் காலத்து உயிரின அழிவில் ஏறத்தாழ 75% அழிந்துவிட்ட காரணத்தால் இந்த பெருத்த தொன்ம ஊருமினம் மரபின்றி அழிந்து விட்டது(extinct) முழுமையாக அழிந்துவிட்டது என்றும் கூற முடியாது. பறவைகள் பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) வழித் தோன்றல் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பேரழிவிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 1980களில் கண்டுபிடிக்கப்பட ஒரு உண்மை காலநிலை மாற்றம்தான். காலநிலை மாற்றத்தால் greenhouse effect உருவாகி மூச்சுவிடக் காற்று இல்லாமல் உயிரனங்கள் அழிந்து போயிருக்க வாய்ப்புகள் அதிகம்.
அப்படி அழிந்து போகக் காரணம் பூமியின் தட்பவெப்பநிலைதான். 2015ம் ஆண்டு Temperature of Earth என்ற தலைப்பில் எழுதப்பட்ட இணையக்கட்டுரையில் Jerry Coffey என்பவர் புவிக்கோளத்தின் சராசரி தட்பவெப்பநிலை 15 0c அல்லது 590 F என்கின்றார். பூமியின் தட்ப வெப்பநிலை அதிகரிக்கும் போது புவியில் உயிரினங்கள் வாழ இயலாமல் போய் விடும். பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) காலத்தில் மிகப்பெரிய பெரிய எரிமலைகள் வெடித்துக் கொண்டே இருந்ததால், அதிலிருந்து வெளிவரும் கரிமல வாயு புவியை சூழ்ந்துபுவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
10 கிமி விட்டம் கொண்ட ஒரு புவியின் அதிர்ச்சியில் உருவான பெரிய பெரிய எரிமலைகளும், நிற்காது தொடர்ந்த காட்டுத்தீக்களும் சூழ்நிலையில் உள்ள கரியமில வாயு அதிகரிக்கக் காரணமானது விண்கோள் புவியைத் தாக்கியதால் எழுந்த கந்தகப்புகையும் கரியமில வாயுவும் புவியிலிருந்து 75% உயிரினங்கள் இறக்கக் காரணமாகிவிட்டன. இப்புகைகள் சூரியனையே பல்லாண்டுகள் மறைத்து உலகின் உறைபனிக்காலம் உருவாகியது. இந்த இரண்டு காரணங்களாலும் உயிரினங்கள் வாழ இயலாமல் மடிந்தே போயின. அப்படிப்பட்ட ஒரு தட்பவெப்ப சூழ்நிலையை நோக்கித்தான் நாம் இப்போது சென்று கொண்டு இருக்கின்றோம்.பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) அழிந்த காலத்தில் புவியின் தட்பவெப்பம் 50 C/410 Fஉயர்ந்து இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. 1880 களிலிருந்து புவி ஒவ்வோரு பத்தாண்டுக்கும் 0.080C/0.140 F உயர்ந்து உள்ளது. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் 0.18° C/0.32° F தட்டப்வெட்பநிலையைப் பற்றிய தளமான https://www.climate.gov ல் ரெபெக்கா லின்ட்ஸி என்பவரும் லுயன் டால்மென் என்ற இருவர் கருத்துத் தெரிவித்து இருக்கின்றார்கள்.
அமெரிக்க நாசா இன்று தனது இணையதளத்தில் கூறுவதாவது, 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு ஏறக்குறைய 250p/million. 1950களில் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு 300p/million. ஆனால் தற்போது கரியமிலத் துகள்களின் அளவு 450 p/million, நாசா மேலும் அறிவுறுத்துவது பல்லாயிரம் ஆண்டுகளாக ஆகவே இருந்திருக்கிறது.
நனது பாடத்திட்டங்களில் மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா என்ற அளவீடு எவ்வளவு முக்கியம் என்று நமக்குப் புரிகின்றது. தொழில் புரட்சிக் காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய கண்டுபிடிப்பு கணினி. தொழில்புரட்சிக்காலத்தில் புத்தாக்க கருத்துக்களையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் கண்டுபிடித்துப் பயன்படுத்திய நாம், அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் விட்டதன் விளைவே பூமி அழிவை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்ற அச்சுறுத்தலுக்குக் காரணம்.
அப்படி இருக்க நம்முடைய பாடத்திட்டம், மனிதாபிமான உணர்வுகளையும் விழிப்புணர்வையும் கற்றுக் கொடுக்க வேண்டுமானால் கருணை அன்பு விட்டுக் கொடுத்தல் என்று நீதிக் கதைகளை மட்டும் சொல்லாமல், நம் புவியைக் காக்க வழி சொல்லும் விதமான விவரங்களைக் புவியை பாதுகாத்து வளப்படுத்தும் அறிவையும், விழிப்புணர்வையும் அதை செயலாற்றும் வழி முறைகளையும் கொண்டதாகப் பாடத்திட்டம் அமைய வேண்டும். இத்தகைய அறிவையும் விழிப்புணர்வையும் பெற்ற ஒருவர், செயலாற்றும் முன் அவற்றின் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் அவர் ஒரு சர்வத்துறையிலும் வல்லமை பெற்றவராகத்தானே இருக்க வேண்டும் ?
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்
கேள்வி இங்கே..! பதில்..? சிறுகதை – சுதா
மணி 5 இருக்கும். நேரமாச்சு சீக்கிரம் வேலையை முடி என குமார் கத்திக்கொண்டே இருந்தான். சுமதி அதையெல்லாம் பொருட்படுத்தி அவளாக தெரியவில்லை.சுமதி அவளுக்கே உரிய பொறுமையோடு தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு ட்ரெயின் விட்டா அவ்வளவுதான் துணிமணிகளை பையில் வச்சுக்கிட்டு ராத்திரி சாப்பாட்டை பார்க்கணுமே.பொம்பளைகளுக்கு எத்தனை கை இருந்தாலும் பத்தாது போல.
குமாரும் சுமதியும் இப்பதான் கல்யாணம் ஆச்சு என்று சொல்ல முடியாவிட்டாலும் இன்னும் குழந்தை இல்ல பாக்க ரெண்டுபேரும் இளமையா இருக்கிறதால புதிய தம்பதிகள் மாதிரி தெரியும்.
சரியா ஆறரைக்கு கிளம்பி மதுரை சந்திப்புக்கு வந்தாச்சு. பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதனோட வேகத்தைக் காட்ட ரெடியா பிளாட்பாரத்தில் நினைச்சு. சுமதியும் குமாரும் தன்னோட கம்பார்ட்மென்ட் பார்த்து சீட்டு தேடி உட்காரகுள்ள ரெண்டு பேருக்கும் ரெண்டு தடவை சண்டை வந்துருச்சு என்ன செய்ய வாழ்க்கை அப்படித்தான் இருக்கு.
ரயிலும் புறப்பட ஆரம்பிச்சிருச்சு திருச்சியில் ரயில் நிலையம் வர்றதுக்குள்ள ரெண்டு பேரும் பேசிக்கல. விறுவிறுன்னு சாப்பிட்டு தன்னோட பெர்த்தில் ஏறி படுத்த குமார சுமதி மறந்தும் போயிட்டா. மறந்ததற்கு காரணமும் இருக்கு. திருச்சியில் சுமதியோட இருக்கைக்கு எதிரே கைக்கு ஒரு கண்ணு தெரியாத தம்பதி ஏறினாங்க. சுமதி அவங்களையே பார்த்துகிட்டு இருந்தா என ரெண்டு பேரும் கண்பார்வை இல்லாதவங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்னா செய்யலாம் அப்படின்னு அவளும் அவங்கள பார்த்துகிட்டே இருந்தா. ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் ரொம்ப கூட்டம் இல்ல ரிசர்வேஷன் பண்ணவங்க மட்டும்தான் அங்க எங்க இருந்தாங்க.
சுமதி கவனம் சிதறாமல் எதிர்பார்த்த இருந்தா உங்கள பாத்துகிட்டே இருந்தா அப்படி என்ன அவங்க கிட்ட பிடிச்சு போச்சுன்னு தெரியல. கண் குறைபாடு உள்ளதாக அவங்கதான் இணைய தொடுத்துள்ளதான் பாத்துக்கிறாங்க. ரெண்டு பேரும் கைகளைக் கோர்த்துகொண்டேதான் இருந்தாங்க. திருச்சிக்கு அடுத்து வந்த நிறுத்ததில் அடி வாங்கின அடி வாங்கும் போது 20 ரூபாய் நோட்டை விரல்களால் அளந்து பார்த்து தனக்கு வந்த மிச்ச பணம் சரி தானா என்று உறுதி பண்ணிட்டாங்க. கண் பார்வை இல்லாதவர்களுக்கு கண்களில் பார்வை இல்லைனா என்ன விரல்களில் பார்வை காதுகளில் பார்வை என நிறைய கண்கள் இருக்கு போல.
அப்பப்போ அந்த தம்பதிகளுக்கு உள்ள ஏதோ பேசி உடனே அந்த பொண்ணு தன் மாராப்பை சரி செய்தாள் கொஞ்சம் சிரிப்பும் சமூகத்தின் மீதான பயத்தையும் ஒருசேர உணர்ந்தாள் சுமதி. மணி ஒன்பதைத் தாண்டியதும் எல்லோரும் ரெஸ்ட் ரூம் போயிட்டு தன் பெர்த்தில் ஐக்கியமாகி கொண்டிருந்தனர். சுமதியும் தன் பெர்த்தில் படுத்துக்கொண்டாள் ஆனால் எதிர் புறத்தில் உள்ள தம்பதிகள் மட்டும் அசையவே இல்லை என இவர்கள் தூங்கலையா என்று நினைத்துக் கொண்டவளாய் கண்களை மூடவும் திறக்கவும் இருந்தாள். இப்படியே அவர்களையே அவள் பார்த்துக் கொண்டிருந்த போதும் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அந்தப் பெட்டி முழுவதும் அமைதியான பின் விளக்குகளும் உறங்கத் தொடங்கியது. அந்த தம்பதிகள் ரெஸ்ட் ரூமுக்கு செல்ல எழவும் சுமதியும் சட்டென எழுந்து விளக்குகளை விழிக்க வைத்தாள். ஆனால் அவர்களுக்கு இரவும் பகலும் வெளிச்சமும் இரண்டும் ஒன்றுதானே என்பதை அவள் பின்புதான் உணர்ந்தாள்.
அப்போதும் அவர்கள் ஒருவரையொருவர் விலகாமல் நடந்து சென்றார்கள். பத்தாததற்க்கு சுமதியும் தன் தலையை வாசல் பக்கத்தில் வைத்து அவர்கள் நடந்து செல்வதையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ரெஸ்ட் ரூம் கதவைத் திறந்து அவர்கள் இரண்டு பேருமே உள்ளே நுழைந்தார்கள் சுமதிக்கு இருப்பு கொள்ளாமல் எழுந்து சென்றாள் அந்த தம்பதி நான்கு பக்கத்தையும் அளந்து கொண்டிருந்தார்கள். உள்ளே வேறு யாரும் இருக்கிறார்களா என ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பின்பு அவர்களின் கடன்களை முடித்துவிட்டு இருக்கையை ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டே வந்து தன் இருக்கையில் அமர்ந்தார்கள் இவர்கள் வருவதற்கு முன்பு எழுதித் தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
சரி இப்போதாவது அவர்கள் படுக்கைக்குச் செல்வார்கள் என நினைத்தாள் ஆனால் அப்போதும் இருவரும் பிரிவதில்லை இரவு முழுவதும் அந்த இருக்கையை விட்டு நகரவே இல்லை. இடையிடையே கண்விழித்து பார்த்தபோது அவர்கள் உறங்கவும் இல்லை.
சுமதி தன்னை அறியாது கண்ணசந்தால் செங்கல்பட்டு நிறுத்தத்தில் வண்டி நின்றதும் சுமதி கண் விழித்து மீண்டும் உறங்கிப் போனாள் குமார் மட்டும் தன் பெர்த்தில் இருந்து இறங்கி போர்வையை மடித்து விட்டு சுமதி சுமதி என்று எழுப்பும் போதுதான் சுமதிக்கு தன் கணவன் நினைவே வந்தது. விழித்தவுடன் எதிரிலிருந்த தம்பதிகளைதான் தேடினால் ஆனால் அவர்கள் இறங்கிவிட்டார்கள். எப்போது இறங்கினார்கள் என்று குமாரிடம் கேட்டு தெரிந்து கொண்டால் செங்கல்பட்டில் இருப்பார்கள் சீக்கிரம் எடுத்து வை சுமதி தாம்பரம் வரப்போகுது இல்லை என்ற குமாரின் சத்தத்தில் சுமதியின் கைகள் மட்டுமே வேலை செய்தது அவள் நினைவோ அந்தத் தம்பதியை சுற்றியே இருந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும் பிளாட்பாரத்தில் ட்ராலியை தள்ளிக் கொண்டே நடந்தனர் சுமதி என் மனதில் கேள்விகள் விரிந்தது.
அந்தப் பெண் எப்படி உணர்வால் அன்பின் வெளிப்பாடாகவும் பாதுகாப்பாக அல்லது சுதந்திரமற்ற உணர்வா எப்படி உணர்வால் என்ற சிந்தனையில் டிராலி உருளும் சத்தத்தோடு அவள் நினைவுகளும் உருண்டன.
அரியலூர் இரயில் பாலம் – மரு. உடலியங்கியல் பாலா
“முத்து நகர்” எக்ஸ்பிரஸ்… தூத்துக்குடி புறப்பட, எழும்பூர் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடையில் தயாராக நின்ற நிலையில்…. வழக்கமான, பேச்சு குரல்கள், போர்ட்டர்கள் பேரம், பிரியா விடை, கண்ணீர் வழியனுப்புதல்கள், என பரபரப்பு தொறறிக் கொண்டது.
அன்று,… நவம்பர் 23,1986 … வழக்கமான வடகிழக்கு பருவக்காற்றின் உபயத்தால், மப்பும் மந்தாரமுமாய் மழை தூரி கொண்டிருந்தது. டீட்டியை சுற்றி மொய்த்திருந்த கூட்டத்தின் பின்னால்… 50வயது மதிக்கதக்க, நம் கதாநாயகி, “நர்ஸ் ரோஸ்மேரி”, அடக்கமே உருவாய், அமைதியாய் நின்றிருந்தாள். ஏனோ, டீட்டியின் கருணை பார்வை? அவள் மீது படர,அவள் ‘லோயர் பெர்த்’ கன்பார்ம் ஆனது.
ரோஸ்மேரி, அவளுக்கு பிடித்த, வெளிர் நீல புடவையில்.. இன்றும், இந்த வயதிலும், தெய்வீக அழகுடன் வசீகரமாக காணப்பட்டாள். ஆனால் அவள் முகத்தில், ஏதோ ஒரு சோகமான அமைதி அப்பி கிடந்தது. ஒரு மருத்துவ சஞ்சிகையை படித்துக்கொண்டிருந்த அவளை, எதிர் சீட்டில் அமர்ந்து இருந்த சுட்டிகுழந்தை “ஆண்டி” என்று அழைக்க, அவள் சற்றே நிமிர்ந்து, “என்ன பாப்பா?” என்றாள் , அது சிரித்தபடி”இன்னிக்கு என்ன தேதி?..
என்னிக்கு தீபாவளி வரும்! “என ஆவலாய் கேட்க,.. அவள் சட்டென் யோசித்து “இன்னிக்கு தேதி 23… 30அன்று தீபாவளி வரும்” என்றாள். அதற்குள் பாப்பாவின் தாய், “ஆண்டிய சும்மா, தொந்தரவு செய்யாதே!” என கூறி அடக்க… அவளுக்கோ… நவம்பர் 23ன்.. பழைய கசப்பான நினைவுகள் நிழலாடி சோகம் தந்தது.
ஆம் நவம்பர் 23.. 1956ஆம் ஆண்டு இதெபோல், தூத்துக்குடி சென்ற, தன் ரயில் பயணத்தின் நினைவு அவளை திகில் அடைய செய்தது. அப்போது அவளுக்கு 18வயது, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில், நர்ஸ் படிப்பு இறுதி ஆண்டு மாணவி.. “ராமு” பயிற்சி மருத்துவராய்… அவளுடன் ஒரே வார்டில் பணி செய்ய … இருவருக்கும், ஒரு நட்பை தாண்டிய ஈர்ப்பு உருவானது..
இருவரும் தூத்துக்குடிக்காரர்கள். அவன் சற்றே வசதி ஆனவன். இவளோ நடுத்தர வர்க்கம். ஆகவே, ரோஸ், அவனை தவிர்ப்பதில் குறியாக இருந்தாள். அவனும் ஜென்டில்மேன் போல் பழகினான். ஒருமுறை இவள் தாய்க்கு உடல்நலம் குன்றியபோது, அதே ஆஸ்பத்திரியில் அவளை சேர்த்தபோது, ராமு அவளுக்கு மிகவும் உதவி செய்து அவளைக் காப்பாற்ற … இருவர் நட்பும் மேலும் காதலாய் பரிமளிக்க தொடங்கியது…
அந்த தீபாவளிக்கு, அவளையும், தன்னுடன் தூத்துக்குடிக்கு அழைத்து சென்று, அவன் பெற்றோரிடம் அறிமுக படுத்தி, திருமண பேச்சை ஆரம்பிக்க நினைத்திருந்தான்.
இதே நாள், இதே மாதம்,1956ம் ஆண்டு அன்று… ரயிலில் அவர்கள் இருவரும் ஒன்றாக பயணித்தனர்.. அவள் கண்களில் சந்தோஷம் பொங்க, வெளிர்நீல சீலையுடன் .. அவன் அன்புக்கரம் பற்றி…ஆனந்தம் கொண்டாள்! “தீபாவளி சீசன்” என்பதால் பெருங்கூட்டம் !
எப்படியோ கெஞ்சி கூத்தாடி, இரண்டு பெர்த்துகளை ராமு வாங்கினான். ஆனால், இருவருக்கும் ஒரே கம்பார்ட்மெண்டில் இடம் கிடைக்கவில்லை.. இவனுக்கு 3ஆம் பெட்டியும், அவளுக்கு, 11ஆம்பெட்டியும் கிடைக்க, அவர்கள் ஏமாற்றதுடன் பயணித்தனர். சமயம் கிடைத்த போதெல்லாம், அவளுக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்து, அவளுடன் சிரித்து சிரித்து, பேசி மகிழ்ந்தான். ..
வண்டி விழுப்புரம் தாண்டியவுடன், பெருமழை கொட்டி தீர்க்க,… பின்னிரவு ஆகிவிட்டதால், இருவரும் பிரிந்து.. அவரவர் பெட்டியில், உறங்கி போனார்கள்.
ரோஸ் அவன் நினைவாகவே, கனவில் அவனுடன்”மாசிலா உண்மைக் காதலே”என்று.. எம் ஜி ஆர் – பானுமதி ஜோடிபோல் … டூயட் பாடியபடி ஆழ்ந்து உறங்கிப் போக,… திடீரென்று, பேரிடி போல் பெரும்சத்தம் கேட்டு விழித்த ரோஸ், பயணிகளின் மரண ஓலம் கேட்டு நடுநடுங்கிபோனாள். அதிர்ஷ்டவசமாக ,அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை, என்ஜினும், முதல் சிலபல பெட்டிகளும், பேய்மழையால் … அரியலூர் பாலம் உடைந்து, மருதைஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை…
அந்த அதிகாலை நான்கு மணி கும்மிருட்டிலும், கண்டு பதைபதைத்தாள். சோகத்தின் உச்சியில் “ராமு ராமு” என்று, கூக்குரலிட்டு துன்பித்து துவண்டு அழுதாள். அடுத்த நாள்.. தினத்தந்தியில்,..
அரியலூர் ரயில் விபத்து ! 140 பேர் பலி!! பலர் கவலைக்கிடம்.! ரயில் மந்திரி ராஜினாமா! ரயில் பயணமா? பரலோக பயணமா? என்று… கருப்புக்கொட்டை எழுத்தில்… “தலைப்பு செய்தியாய்” தமிழகத்தையே உலுக்கியது.!!.
அதன் பிறகு.. அவன்மேல் கொண்ட அதீத காதலால்! அவன் நினைவால், ! அவள் திருமணம் தவிர்த்து, “மருத்துவ சேவையே! மகேசன் சேவை!..”. என்று கருதி, எவர்சொல்லியும் கேட்காமல் ,தன்னையே அர்ப்பணித்து, சோகமே சுகமாய், தியாக வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
மீண்டும் அந்த பாப்பா “ஆண்டி ஏன் அழுகிரீங்க ? “என அவளை உசுப்ப, சுயநினைவு பெற்று “இல்லம்மா ரயில்கரி தூசு கண்ல பட்டுடுச்சி! அதான்” என மழுப்ப, “இல்ல! நீங்க பொய் சொல்றீங்க” என குழந்தை கூற…அதன் தாய், அவளை இம்முறை ஆறுதலுடன் நோக்கினாள்.
வண்டி வேகமெடுக்க, மழையும் நின்றபாடாய் இல்லை. அனைவரும், இரவு உணவை முடித்துகொண்டு, உறங்க ஆயத்தம் ஆயினர். ரோஸ் “லோயர் பெர்த்தை” அந்த “தாய்-குழந்தைக்கு” விட்டு கொடுத்து, மேல் பெர்த்தில் படுத்து உறங்கி போனாள்.
பின்னிரவில்…. யாரோ தன்னை தட்டி எழுப்பிவது போல் உணர்ந்து, சட்டென விழிப்பு வந்து எழுந்தாள் ரோஸி… காலியாக இருந்த எதிர் பெர்த்தில் இப்போது ராமு ஒருக்களித்தவாரு.. அதேஅழகுடன், அதேஇளமையுடன் ..இவளை பார்த்து புன்னகைப்பதை கண்டு… அதிர்ச்சிகலந்த ஆனந்தம் அடைகிறாள்!
“ராமு “என்று கூவியபடி, அவள் கரம் நீட்ட, அவன் அவள் கைத்தலம் பற்ற… “எப்படி ராமு இங்க வந்த??” என கேட்க அவனோ சிரித்தபடி” நான் வெள்ளத்தில் தத்தளித்த போது, ஒரு இளைஞன் எனை காப்பாற்றி, ஏதோ ஒரு கண்காணாத , அதிசய ஊருக்கு அழைத்து சென்றான்.. அங்கு எனக்கு சுகபோக வாழ்வு கிடைத்தும், உன் நினைவால் தவித்து துவண்டு துன்புற்றேன்..
பிறகு… ஏதேதோ.. எப்படி எப்படியோ! பிரம்ம பிரயத்தனம் செய்து, உனை காணும் பேராவலில் தப்பித்து வந்து, சற்றுமுன் இந்த ரயிலில் ஏறினேன்… உனை இங்கு கண்டு, வியந்தேன்! மகிழ்ந்தேன்! அன்பே!!.. இனி நம்மை யாராலும் பிரிக்கவே முடியாது “என கூறி அவள் உள்ளங்கையில் முத்தமிட…
ரோஸ் ஓரு விசித்திர உணர்வால் உந்தப்பட்டு, அவனை காதலும் காமமும் கலந்து அழைக்க.. அவன் தாவி சென்று அவளுடன் சங்கமிக்கிரான். அவள் பெண்மை முழுமையாகி …. எல்லையில்லா இன்பம் அடைகிறாள்!
பேய் மழையோ தொடர்ந்து… நிற்காமல் கொட்டி தீர்க்க , வெள்ளப்பெருக்கால் அரியலூர் , மருதைஆற்று பாலம் மூழ்க.. ரயில் பெட்டிகள் அசுர வேகத்துடன் தடக் தடக் என்று அதை கடக்க முற்பட… சட்டென்று பெரும் சத்தத்துடன், இரயில் கிரீச்சிட்டு நிற்கிறது…
ராமு இவள் கரத்தை கெட்டியாக அழுந்த பற்றி..” வா வா சீக்கிரம் வா! ரயில் இன்னும் சற்று நேரத்தில் கவிழ போகிறது… நாம் குதித்து தப்பித்து கொள்ளலாம்!” என்று அவளை அணைத்துபடி அன்பாய் இழுத்து செல்ல,…
சட்டென கண்விழித்த அந்த குழந்தை “எங்கே ஆண்டி போறீங்க..?.. ஐயய்யோ! அந்த அன்க்கிள் கூட போகாதீங்க!போகாதீங்க !பிளீஸ்!”என கத்த முயல்கிறது… ஆனால் ஒலி எழவில்லை…!
அடுத்தநாள்… காலை செய்தி தாள்களில்… “அரியலூர் பாலத்தில் சென்ற ‘முத்துநகர்’ எக்ஸ்பிரசில் இருந்து, 50வயது பெண் … மருதை ஆற்றில் குதித்து தற்கொலை..” ஓடும் ரயிலில் பரிதாபம்..!! என செய்தி கண்டு அரியலூர் மக்கள் பதட்டம் அடைந்தனர்.!