தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது – அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு
இஸ்லாமியர்களைப் பெருமளவில் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக -ஆர்எஸ்எஸ் கூட்டணியைச் சார்ந்தவர்கள் சமீபத்தில் ஹரித்துவாரிலும், தில்லியிலும் விடுத்த அழைப்புகள் இதுவரையிலும் இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டி தங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து திரட்டி வந்தவர்களின் செயல்பாடுகள் மூர்க்கத்தனம் கொண்டவையாக இப்போது மாறியிருப்பதையே காட்டுகின்றன. முன்னெப்போதுமில்லாத வகையிலே முஸ்லீம்களுக்கு எதிராக முழு அளவிலான ஆயுதப் போருக்கு இவ்வாறு அழைப்புகள் விடுக்கப்படுவது குறித்து நரேந்திர மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் மௌனம் காத்து வருகின்றனர். அவர்களிருவரிடம் உள்ள மௌனம் இரண்டு வழிகளில் இருப்பதாகக் காண முடிகிறது. ‘யாரும் தண்டனைக்குட்பட மாட்டோம்’ என்ற நம்பிக்கையை அளிப்பதற்கான அடையாளமாக, பாதுகாப்பின்மை குறித்து தங்களிடம் எழுந்துள்ள சந்தேக உணர்வின் அடையாளமாக என்று இரண்டு வழிகளில் அவர்களது மௌனம் இருக்கிறது. அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு குறித்த வாதங்களை இந்தக் கட்டுரையில் நான் முன்வைக்கிறேன்.
என்னுடைய வாதம் உத்தரப்பிரதேசத் தேர்தல், தனக்கு முக்கியமான புனிதம் நிறைந்த பகுதிகளில் தான் அவமானப்படுத்தப்படுவதைப் பற்றிய பாஜகவின் கவலை குறித்ததாக மிகவும் வழக்கமான அணுகுமுறைவாதமாக இருக்கப் போவதில்லை. இனப்படுகொலைவாதம் என்று நான் குறிப்பிடுவதையே நாடு இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இனவெறி தேசியவாதங்கள் அனைத்தையும் பாதிக்கின்ற ஆழ்ந்த தர்க்கத்திலிருந்தே இந்த இனப்படுகொலைவாதம் உருவாகின்றது. அதன் தர்க்கம் தேசியவாதத்திற்கும், வன்முறைக்கும் இடையிலான தொடர்புடன் நன்கு பிணைக்கப்பட்டுள்ளது. மார்க்ஸ் மற்றும் மார்க்சிஸ்டுகள் பலரும் அதனை ‘டிரெட்மில் விளைவு’ என்றே அடையாளப்படுத்துகின்றனர்.
தேசியவாதத்துக்கும், வன்முறைக்கும் இடையிலுள்ள உறவு அந்தரங்கமானது, இருவழியிலானது என்ற வாதங்களை பிறிதொரு கட்டுரையில் முன்வைத்திருந்தேன். ‘தேசத்தின் பெயரால் மக்கள் இறந்து போவார்கள், தேசியவாதம் மக்களைக் கொல்வதை நோக்கியே இட்டுச் செல்லும்’ என்று கருதுவதற்கே நாம் பழகியிருக்கிறோம். தேசியவாதம் தீவிரமடையும் போது அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தேசத்திற்காக இறந்து போவது அல்லது மற்றவர்களைக் கொல்வது போன்ற செயல்களுக்குத் தயாராக உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அனைத்து தேசியவாதங்களும் தங்களிடம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான கருவையே சுமந்து கொண்டுள்ளன.
இஸ்லாம் மட்டுமே ஜிஹாதிகளை உருவாக்குகிறது என்ற சிந்தனை நம்முடைய காலத்தின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாகும். போர் வீரன், தியாகி என்ற அந்தஸ்தை ஒருசேர அடைவது என்ற நம்பிக்கையின் பேரிலே தீக்குளிப்பதற்கு அல்லது தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராக இருக்கின்ற ஒவ்வொரு ஹிந்து, கிறிஸ்தவர் அல்லது யூதரும் தீவிர தேசியவாதத்தின் உள்ளார்ந்த தர்க்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றனர். தேசியவாதத்தின் எக்காளத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தாத ராணுவம், காவல்துறைப் படை, கமாண்டோ படை போன்றவை உறுதியுடன் இருப்பதற்கான சாத்தியமே கிடையாது. ஒருவேளை அவ்வாறு இருக்குமானால் அவை திறனற்றவையாகவே இருக்கும். தேசியவாதத்திலிருந்து வன்முறைக்கு இட்டுச் செல்கின்ற பாதை பற்றி அதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை.
தேசிய-அரசு குறித்த நவீன வடிவத்தின் வருகைக்குப் பிறகு குழு வன்முறைகள் புதிய செயல்பாட்டைப் பெற்றிருக்கின்றன. அது தேசத்தின் மீதான பற்றுதல் என்ற சிந்தனைக்கு எரிபொருளை ஊற்றுவதாக மாறியிருக்கிறது. அதை நாம் காணக்கூடிய முக்கிய இடமாக பயிற்சி, ஒத்திகை, உண்மையான போர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேசம் குறித்த புனைகதைகள், கருத்துருவாக்கங்களின் மீதான பற்றுதலை உருவாக்குகின்ற நவீன ராணுவங்களின் உருவாக்கம் இருக்கிறது. பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை தேசம் என்பது கருத்துருவாக, கற்பனையாக, எட்டாத தொலைவிலே இருப்பது என்பதால் அவர்களிடத்தே தேசத்தின் மீதான விசுவாசத்தை உருவாக்குவது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகும். அத்தகைய கருத்துருவாக்கத்தின் மீதான விசுவாசத்தை உருவாக்குவதற்கான உறுதியான வழிகளாகவே தேசத்திற்காக இறந்து போவது, மற்றவர்களைக் கொல்வது போன்ற செயல்பாடுகள் உள்ளன. அவை தியாகம், கௌரவம், தூய்மை போன்ற அனைத்து தேசியவாதங்களுடனும் ஆழ்ந்து பிணைந்துள்ள சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன.
அதிகாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வன்முறைகளின் மூலம், தேசத்தின் புனிதத்தன்மை மீதான உணர்வு புதுப்பிக்கப்பட்டு, புத்துயிர் தரப்பட்டு மீட்டெடுக்கப்படுகிறது. எப்போதும் கிடைக்கின்ற வகையிலே தேசியவாத இயந்திரத்திற்குத் தேவையான புனிதமான எரிபொருளைப் புதுப்பித்துக் கொள்ளும் வழிகளாகவே சமீபத்தில் மோடியும் அவரது கூட்டாளிகளும் வாரணாசி போன்ற இடங்களில் நடத்தியுள்ள நாடகக் காட்சிகள் இருந்திருக்கின்றன. மத்திய தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது, பாடப்புத்தகங்கள், சமூக ஊடகங்கள், அதிகாரப்பூர்வ பிரச்சாரங்கள் மூலமாக வரலாற்றை மாற்றி எழுதுவது, காஷ்மீரைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாக அடிபணிய வைப்பது போன்ற முயற்சிகளும் அதுபோன்றே இருக்கின்றன. இந்திய ஆயுதப் படைகள் இந்திய மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அனைத்து இடங்களிலும் (பழங்குடியினர், மாவோயிஸ்ட் பகுதிகளில், வடகிழக்கில், அனைத்து எல்லை மாநிலங்களில்) வன்முறை என்பது பயனுள்ள செயல்பாட்டைக் கொண்டுள்ள (அரசு ஆதரவுடன் திணிக்கப்படுகின்ற ஒழுங்கு) போதிலும் – அது தனக்குள்ளே பகட்டான, நாடகரீதியான செயல்பாட்டையும் கொண்டுள்ளது. தேசியவாதம் உயிர் பிழைத்திருக்கப் போராட வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாகவும் அது இருக்கிறது.
டிஜிட்டல் ஊடகங்கள் இன்றைய நிலைமையில் உள்ளூர் நிகழ்வுகள் தேசிய அரங்கில் உடனடியாக, பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கான உத்தரவாதத்தைத் தருபவையாக இருக்கின்றன. ஆனாலும் திட்டமிட்டு இந்திய முஸ்லீம்களை ஒழுங்கமைக்கப்பட்ட இனப்படுகொலை செய்வதற்காக ஹிந்துத்துவா விடுத்து வருகின்ற அழைப்புகளில் நாம் காண முடிகின்ற சுயமுரண்பாட்டின் முக்கியமான தருணத்தை நோக்கியதாக இருக்கின்ற அது மிகவும் எளிமையானதாக இருக்கவில்லை.
சிந்தனையாளர்கள் – குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் முதலாளித்துவத்தில் டிரெட்மில் விளைவை கண்டதைப் போலவே இங்கே இனப்படுகொலைவாதம் என்று நான் கூறுவதையும் காணலாம். இனப்படுகொலை வரலாற்றில் தேசியவாதத்தின் குறைந்தபட்சத் தேவையை நிலைநிறுத்துவதற்காக வன்முறைகளைப் பெருமளவிலே அதிகரிக்க வேண்டிய தருணமாகவே இனப்படுகொலைவாதம் அமைகிறது. முதலாளித்துவத்தைப் போலவே அது அமைப்புரீதியானதாக, ஒற்றைமயமாக்கலுடன், அச்சுறுத்திக் கைப்பற்றிக் கொள்வதாகவும் இருக்கின்றது. ஒட்டுமொத்தக் கவனம், அர்ப்பணிப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்களின் முழுமையான பங்கேற்பைக் கோருவதாகவும் அது இருக்கிறது. இனப்படுகொலைவாதம் முதலாளித்துவத்தைப் போலவே வன்முறையின் அன்றாட உற்பத்தியைத் தக்கவைத்துக் கொள்ளப் பணிக்கப்பட்டிருக்கின்ற ஏராளமான தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி சுரண்டுகிறது. வன்முறையின் டிரெட்மில்லை எதிர்நோக்கி, வடிவமைத்து, அதிலிருந்து பயன்பெறுகின்ற சிறிய வகை தொழில்முனைவோர், மேலாளர்கள் போன்றவர்களுக்குப் பயனளிப்பதாக அது இருப்பதால், இனப்படுகொலைவாதம் மூலம் பலனைப் பெற்றுக் கொள்பவர்களாகவே அவர்கள் கருதப்படுவர்.
மோடி இந்தியா இப்போது தேசியவாதத்தின் மிக முன்னேறிய கட்டமான இனப்படுகொலைவாத கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமர்சகர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, இனப்படுகொலை என்ற இயந்திரத்திற்கான எரிபொருள் வெளிப்படையாகவே தேவைப்படுகின்றது. இந்தியாவில் ஆங்காங்கே, தானாக எழுகின்ற, உள்ளூர் வன்முறை நிகழ்வுகளால் திருப்தியடைய முடியாத தேசியவாத இயந்திரத்தின் வெறித்தனமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் அது இருக்கிறது. முறையான வலுவூட்டல், அணிதிரட்டல் ஆகியவற்றுடன் அரசிடமிருந்து அல்லது அரசிற்கு மிக நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்து ஆட்சிக் கொள்கையும் அதற்குத் தேவைப்படுகிறது.
1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வான்சீ மாநாட்டில் இறுதித் தீர்வு அதிகாரப்பூர்வ நாஜிக் கொள்கையாக மாற்றப்பட்டதற்கு இணையானதாகவே 2021 டிசம்பர் 17-19 நாட்களில் நடைபெற்ற ஹரித்துவார் சன்சத் கூட்டம் அமைந்திருந்தது. இப்போதும், அதைத் தொடர்ந்து காவியுடை உடுத்திய ஆண்களும் பெண்களும் முஸ்லீம்களுக்கு எதிராக விடுக்கப்பட்டு வருகின்ற போருக்கான அழைப்புகளுக்கு ஏற்பாடு செய்திருப்பது நாஜிக்களின் கீழ் வாஃபன்-எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஈடான பாத்திரத்தை பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரத்தின் சாது-அகாடா தரப்பு கொண்டிருப்பதற்கான விளக்கத்தையே தருகின்றது. மேலும் அது மையப்படுத்தப்பட்ட தலைமையைத் தேடுகின்ற பல்வேறு குண்டர்கள், கும்பல்கள், படைப்பயிற்சி பெற்றவர்கள் என்றுள்ள ஈட்டியின் முனையாகவும் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் தொடர்புடைய முக்கியமான நபர்களுக்கு எதிராக சமீபத்தில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், குறிப்பிடத்தக்க இந்தப் பொதுவெளி பேச்சுகள் குறித்து மோடியும் அமித்ஷாவும் மௌனம் காப்பது இன்றைக்கு இந்தியாவில் இனப்படுகொலைக்குத் தரப்பட்டிருக்கின்ற அதிகாரப்பூர்வ சட்டபூர்வமான தன்மையின் அலட்சியப்படுத்த முடியாத குறியீடாகவே இருக்கிறது.
நான் சொல்வது சரியாக இருக்குமென்றால், பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரத்தின் மிக உயர்ந்த மட்டத்திலே உருவாகியுள்ள பீதி, பதட்டம் நிறைந்த தருணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்த புதிய இனப்படுகொலைவாதம் எழுந்துள்ளது. அவர்களுடைய மனநிறைவு அல்லது மகிழ்ச்சிக்கான தருணமாக அது இருக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
இந்திய சமூகத்தில் அழிந்து போனவர்களாக முஸ்லீம்களை மாற்ற நினைக்கின்ற போர்க்குணமிக்க ஹிந்துத்துவாவின் நோக்கத்தால் வரையறுக்கப்படாத இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளதை இன்றைக்கு நடைபெறுகின்ற நாடகம் நமக்கு நினைவூட்டிக் காட்டுகிறது. தாங்கள் ஹிந்துத்துவக் கருத்தொற்றுமையில் அங்கம் வகிக்கவில்லை என்பதைக் காட்டுகின்ற வகையிலே – ஏறக்குறைய ஓராண்டு காலாமாக தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டிருந்து, தங்களை அடக்க நினைத்த மோடியின் மனவுறுதியை முறியடித்த இந்திய விவசாய சமூகங்களைச் சார்ந்த பிரதிநிதிகள்; கோபம் கொண்டவர்களாக, அரசியல்மயப்படுத்தப்பட்டவர்களாக, அதிகரித்து வருகின்ற எதிர்பார்ப்புகளின் விளைவான புரட்சியின் நாயகர்களாக பெரும் எண்ணிக்கையில் இந்தியா முழுவதிலும் இருக்கின்ற தலித்துகள் என்று இரண்டு முக்கியமான சக்திகளிடமிருந்து கோபம் வெளிப்பட்டிருக்கிறது.
ஆட்சிக்கு எதிராகத் திரும்பிய விவசாயிகள், ஹிந்துத்துவா எதிர்ப்பு தலித்துகள் என்று இந்த இரண்டு மக்களின் எண்ணிக்கை மேலோட்டமாகக் கணக்கிட்டாலும் குறைந்தபட்சம் இன்றைக்கு முப்பது கோடி இந்தியர்கள் என்ற அளவிலே இருக்கும். அந்த அளவிற்கான மிகப் பெரிய எண்ணிக்கையில் உள்ளோர் தற்போதைய ஆட்சிக்கு அடிபணிந்து போவதற்கான அறிகுறிகளையோ, அரசியல் மேடையில் இருந்து அமைதியாக வெளியேறிக் கொள்வதற்கான அறிகுறிகளையோ காட்டவில்லை.
அந்த முப்பது கோடிப் பேர் இந்தியாவின் இருபது கோடி முஸ்லீம்கள் மீதான ஹிந்துத்துவா வெறியின் இலக்காக இருக்கின்றனர். அதன் தர்க்கத்திற்கும், இன்றைய இனப்படுகொலைவாதத்தின் மையத்தில் உள்ள டிரெட்மில் விளைவுக்கும் ஏராளமான தொடர்பு இருக்கின்றது. இனப்படுகொலைக்கான அழைப்புகளை விடுப்பதன் மூலம் ஒருபுறத்தில் முஸ்லீம்களைப் பயமுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்கள் உண்மையில் இனப்படுகொலை செய்யப்படுவதற்கான ஆட்களாக தாங்கள் மாறி விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள், தலித்துகள், பிற எதிர்ப்புக் குழுக்களுக்கு விடுகின்ற எச்சரிக்கை சமிக்ஞையாகவே உள்ளது. மற்றொரு புறத்தில் இந்த குழுக்களைச் சார்ந்தவர்களுக்கு புதிய இனப்படுகொலைவாதச் செயலில் பங்கு கொடுத்து அவர்களை ஹிந்துத்துவா குடையின் கீழ் இழுத்துக் கொள்ளும் வகையில் ஆட்சேர்ப்பு உத்தியாகவும் அது இருக்கிறது. இனப்படுகொலை இயந்திரங்கள் எந்த வேகத்தில் இயங்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துவதையே இந்த இரட்டை உத்தி நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இனப்படுகொலைத் திட்டங்களுக்குத் தேவையான ஆட்களை முடிந்த அளவிற்கு வழங்குவதாகவும் அது இருக்கிறது.
இந்த புதிய இனப்படுகொலைவாதத்தை ஆளுகின்ற அரசிடம் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாகப் பார்க்கின்ற என்னுடைய வாதத்திற்கு இப்போது திரும்புகிறேன். மனித உரிமைகள் – குறிப்பாக இனப்படுகொலைக்கு இலக்கானவர்களின் உரிமைகள் – மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற மேற்குலகம் மற்றும் பிற அரசியல் சக்திகளின் அங்கீகாரம் மோடி, அவரது ஆட்சிக்கு இன்னும் தேவைப்படுகிறது. மற்ற இனவெறி எதேச்சதிகாரிகள் போலல்லாமல் மோடியால் அந்த வட்டாரங்களில் தன்னுடைய நம்பகத்தன்மையை இதுவரையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் அது இப்போது ஆபத்தில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தனது ஆதரவாளர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்புகளை விடுப்பதை அனுமதித்திருப்பது இந்த ஆட்சியிடம் உள்ள இனப்படுகொலை குறித்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. அதன் விளைவாக உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்பாளர்களின் பார்வையில் அவர்கள் மீதுள்ள பிம்பத்தின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. அதுவே அவர்களிடம் தற்போது ஏற்பட்டிருக்கும் விரக்திக்கான காரணமாக உள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறப் போகின்ற பிற மாநிலத் தேர்தல்கள் இந்த புதிய இனப்படுகொலைவாதத்திற்கான காலம், இடங்களுக்குப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன என்றாலும் அவை பெரிய அளவிலே அல்லது புரிந்து கொள்ளக்கூடியவையாக இருக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் இந்த ஆட்சி சுதந்திரமான சட்டமன்றம், நீதித்துறை அல்லது பத்திரிகைகளுக்கான தேவைக்கு எதிராக தன்னையே பணயம் வைத்துக் கொண்டுள்ளது. அந்தப் பணயத்திற்காக இனப்படுகொலைவாதத்தை தங்களுடைய வெளிப்படையான அரசியல் தளமாக்கியுள்ள இந்த ஆட்சியும் அதன் ஆதரவாளர்களும் போதுமான இந்தியர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வைத்திருப்பது மிகவும் மோசமான பணயமாகும் என்றாலும் அதுவே ஒருவேளை இருள் கவிந்துள்ள இப்போதைய அரசியலில் நம்பிக்கைக்கான விடியலாகவும் இருக்கக் கூடும்.
https://thewire.in/politics/narendra-modi-india-genocidalism
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு