நூல் அறிமுகம்: லிவிங் ஸ்மைல் வித்யா வின் “மெல்ல விலகும் பனித்திரை” – ருஃபினா ராஜ்குமார்
நூல் : மெல்ல விலகும் பனித்திரை
ஆசிரியர் : லிவிங் ஸ்மைல் வித்யா
விலை : ரூ.₹ 50/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
பாலியல் சிறுபான்மையினர் பற்றிய பதிவுகள் வரலாற்றில் மிகக் குறைவு. அதனாலேயே அவர்கள் பற்றிய புரிதலும் குறைவு. தமிழ் சங்க இலக்கியம் பாலியல் சிறுபான்மையினருக்கு சாதகமாக இல்லை. ஆரம்பத்தில் அலி, ஒம்போது உஸ்ஸு என கிண்டலாக அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திரு நங்கை என கௌரவமான பெயர் கொடுத்தவர் கலைஞர். இவர்கள் உடலால் ஒரு பாலினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனதால் வேறு பாலினத்தை உணர்ந்து அதன் படியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள். நன்னூல் இவர்களை பெண் பேடு ஆண் பேடு எனக் குறிக்கிறது.
ஆரம்ப காலங்களில் திரு நங்கைகள் பற்றி எழுதப்பட்ட கதைகளில் முக்கியமானவை கி. ரா வின் “ கோமதி” சு. சமுத்திரத்தின் “ வாடாமல்லி” போன்றவை. இந்த தொகுப்பு திரு நங்கைகள் குறித்த புரிதலை அடுத்த தளத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இதில் “ இப்படியும்” என்ற கதை எழுதிய சுதா என்பவர் மட்டும் ஒரு திரு நங்கை.
கதை இப்படி செல்கிறது. கடந்த இரண்டு மாதமாக பாபு சரியாகவே வேலை செய்வதில்லை என்று திட்டினார் சைக்கிள் கடை ஓனர் கஜேந்திரன். அதற்கு காரணம் மளிகை கடை ஓனரும் பாபுவின் கனவுக் கண்ணனுமான கதிர். திடீரென்று ஒரு நாள் கதிர் பாபுவிடம் பேச படபடத்துப் போனான் பாபு. தனியாகப் பேசணும்னு பெசன்ட் நகர் பீச் வரச் சொல்கிறான் கதிர்.
“ பாபு நீ கல்யாணம் பண்ணிப்பியா?” “யாரை?”
“ ஒரு பெண்ணை”
“நானே ஒரு பெண்ணா வாழறேன். எனக்கு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணினா பாவம் சார்” கொஞ்ச நாளில் கதிர் வந்து தன் கல்யாண பத்திரிகை கொடுக்கிறான். மனம் முழுக்க வலியோடு ஒரு பரிசுப் பொருளும் வாங்கிக் கொண்டு திருமணத்துக்கு செல்கிறான் பாபு. அங்கே நாம் எதிர்பாராத திருப்பத்தோடு முடிகிறது கதை.
அடுத்து கி. ரா வின் “ கோமதி” மிகவும் விரிவான கதை. ஒரு திரு நங்கையின் மன அவஸ்தையை மிகத் தெளிவாக சொல்லி இருப்பார்.
இரா. நடராசன் எழுதிய “ மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்த கதை” .. பிறந்த அன்று அன்றலர்ந்த ரோஜா போல இருந்த மதி பின் இரண்டும் கெட்டானாய் வளர்ந்த பின் வீதி ஆட்கள் அத்துணை பேரையும் கேலி செய்யவும் வேலை வாங்கவும் அனுமதித்த அப்பா. பல தலைப்புகளில் ஆசிரியர் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் அலசி இருக்கிறார்.
கவின்மலர் எழுதிய நீளும் கனவு” இதில் நான் மிகவும் ரசித்த வரி “ பெண்கள் அழலாம். பெண்கள் அழுது தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பெண்ணே இல்லை.” இன்னுமொரு வரி “ செந்தில் இது நாள் வரை வெளியே தெரியாமல் பொத்திக் காப்பாற்றிய பெண்மை உள்ளுக்குள் உறங்கிப் போக உலகம் அவனைப் பார்த்த ஆண்மையும் மறைந்து போக ஜேம்ஸின் மனிதம் விழித்துக் கொண்டு செந்திலை அரவணைக்க பால் பேதமற்ற இரு உடல்கள் தழுவிக் கொண்டன.”
இது போல் இன்னும் நாலு கதைகளும் உள்ளன. உணர்வுகள் பிறழ்ந்து போவது யார் செய்த தவறுமில்லை. புரிந்து கொள்வோம். இப்போதைய முன்னேற்றம் பெற்றவர்களில் ஒரு சிலர் விரட்டி அடிக்காமல் அரவணைப்பதால் படித்து மிக உயர்ந்த பதவிகளுக்கு கூட வருகிறார்கள் திரு நங்கைகள். சமுதாயம் புரிந்து கொண்டால் அவர்கள் விபச்சாரம் புரிவதும் தீய நடவடிக்கைகளில் இறங்குவதும் வெகுவாய் குறைந்து போகும் குறையணும். குறைப்போம்.
பிக் பாஸ் சீஸன் 6 இல் பங்கேற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஷிவின் மிகுந்த நம்பிக்கை தரும் ஒரு திரு நங்கையாக தெரிகிறார்.
நன்றி:
ருஃபினா ராஜ்குமார்
முகநூல் பதிவிலிருந்து
பாங்கைத் தமிழனின் கவிதைகள்
போதி மாதா
****************
ஒரு முழுமையை
எப்படிஉன்னால் கொடுக்க
முடிந்தது;
ஒன்பதே மாதங்களில்?
எத்தனை ஆண்டுகள்
இன்னும்
திரிந்தே கிடக்கிறது
முழுமையடையாமல்
வாழ்க்கை!
ஒரு
உயிரின் முழுமையை விடவா
வாழ்வின் முழுமை பெரியது?
உயிர் கொடுத்து
உடல் கொடுத்து
அதற்குள்ளே
இயக்கங்களனைத்தையும்
கொடுத்து….
இந்த மண்ணில்
இடம் பிடித்துக் கொடுத்தும்
முழுமைக்கு வழி தெரியாமல்
முழித்துக் கொண்டிருக்கிறேன்….
மீண்டும் ஒருமுறை
என்னை சுமந்துகொள்
அம்மா உன் வயிற்றில்!
வாழ்க்கையில்எப்படி
முழுமை பெறுவதென
அங்குதான் எனக்கு
ஞானம் கிடைக்கும்!
நீ
மீண்டும் ஒருமுறை
என்னை சுமந்து
பெற்றெடு அம்மா….
பிறக்கும்போதே
புத்தனாகப் பிறப்பேன் நான்!
நம்பிக்கை
*************
இந்த உலகம்
எப்படியிருக்கும்?
இந்த வினா
எப்போதும் அவர் மனதில்
தோன்றியே இருக்காது!
தன்னைப்
பெற்றவர் எப்படி இருப்பர்?
கருப்பா? சிவப்பா?
அறிந்து கொள்ள
ஆர்வப்பட்டிருக்க மாட்டார்!
தன்னை நேசிக்கும்
நண்பர்கள்
தன்னை விமர்சிக்கும்
நண்பர்கள்
எப்படி இருப்பர்?
என்ற சிந்தனைகள்
எப்போதும் எழுந்திருக்கவும்
வாய்ப்பில்லை!
நடக்கும் பாதை
கடக்கும் மனிதர்
குரைக்கும் நாய்கள்
சுடுகின்ற வெயில்
நிழல் தரும் மரம்
யாதொன்றைப் பற்றியும்
சிந்தித்திருக்க மாட்டார்!
படைத்தக் கடவுள் மேல்
கோபம் கொண்டு
ஏசியதோ…. பேசியதோ…
இல்லை!
சாதாரண மனிதர்ப் போலவே
இந்தச் சாதாரண மனிதரும்
சாமியை நம்புகின்றார்;
வணங்குகின்றார்!
வெளியில் வரவும்
வித்தைகள் கற்கவும்
கல்வியில் உயரவும்
வேலைகள் செய்யவும்
காசு பணம் ஈட்டவும்
கல்யாணம் புரியவும்
குழந்தைப் பெற்றுக்
கொஞ்சவும்…
படைத்தக் கடவுளை
பார்வையுள்ளவன் மட்டும்
பார்த்து விட்டானோ?
பார்வை உள்ளவனுக்கும்
பார்வை இல்லாதவனுக்கும்
கடவுள் என்பவன்
ஒரே உருவம்தான்!
தன்னுடையப் பார்வையை
இறைவன் பறித்து விட்டானே
என்று…..
பார்வையற்ற எந்த
என் நண்பரும்
மூளையில் அமர்ந்து
முக்காடு போட்டு
ஒப்பாரி வைத்து
வாழ்வதில்லை!
அவருடைய….
எல்லாமும்
தன்னால் முடியும்
என்ற நம்பிக்கை மட்டுமே…
அதற்குப் பெயர்தான்
தன்னம்பிக்கை!
அவள் விருப்பம்
********************
இந்த
மனிதப்பிறவிதான்
மாநிலத்தில்
மதிகெட்டப் பிறவி!
மதியுள்ளப் பிறவிகள்
மற்ற உயிரினங்கள்தான்!
அதனதன் வழியில்
அதனதன் போக்கில்
அதனதன் வாழ்க்கை!
துன்பப்படுவதேயில்லை
மற்ற உயிரினங்கள்!
துயர் தொடும்போது
விடுபட முயன்று…
ஒன்று வெற்றி பெறும்;
இல்லையென்றால்
மரணித்துப்போகும்!
வஞ்சகத்தை
மனதில் தாங்கி…
வாழ்க்கை முழுதும்
வாழ்வதில்லை மிருகம்!
வாழ்க்கையை
எளிமையாக
எடுத்துக்கொள்ளும்
இயல்புப் பிறவி
பிற உயிரினங்கள்!
இந்த மனிதப்பிறவிதான்
மமதைக் கொண்டப் பிறவி!
அடுத்தவரைப்பற்றியே
ஆராயுமே தவிர…
தன்னிலை உணரா தரங்கெட்டப் பிறவி!
உணர்வுகளை
விருப்பங்களை விடுதலையை
புரிந்து கொள்ளாத
புவியின் அசிங்கம்
இந்த மனிதப் பிறவி!
திரு நங்கைகள் விஷயத்தில்
இன்னும்…
திருந்தாதப் பிறவி
இந்த மனிதப்பிறவி!
அவள் விருப்பம்
அவள் சுதந்திரம்
அவள் வாழ்க்கை
அவர் பிறப்பு!
திரு நங்கையாக
திருமதி நங்கையாக
திருவாளர் நங்கையாக
திருமிகு நங்கையாக
அவள் வாழ்க்கை…
அவள் சுதந்திரம்!
அங்கீகரிக்கத்
தெரியவில்லையானால்
அடங்கிக்கிட….
அவள் வாழ்க்கையை
அவள் வாழட்டும்!
தைரியம் கொண்ட
திறமை நங்கையாக
திரு நங்கை!
********
சரிங்க…
வீரம் பேசுங்கள்
ஆண்டப் பெருமை பேசுங்கள்
மூத்தக்குடி என்று
மார் தட்டுங்கள்….
தமிழர் எல்லோருக்கும்
பெருமைதான்!
தமிழர் இனம்தானே நாம்?
தனிமைப்படுத்தியது யார்?
தனித்தனிக் குழுவாய்….
ஒரு குழு சிங்கமென்றும்
ஒரு குழு சிறுத்தையென்றும்
ஒரு குழு புலியென்றும்
ஒரு குழு புழுவென்றும்
வாழ்கின்றோமே….
வலிக்கவில்லையா?
ஒரே மொழி
ஒரே உருவம்
ஒரே வாழ்வின் முறை
எப்படி… எப்படி…
நீ பெரியவன்?
அவன் சிறியவன்?
மொழியும் ஒன்று
முறை வைத்து
வாழும் முறையும் ஒன்று
உழைக்கும் முறையும் ஒன்று
உணவும் ஒன்றுதான்!
மீனும் நண்டும்
ஆடும் மாடும்
மாமிசம்தானே?
இதிலெது மட்டம்?
மட்டம் என்றால்
அனைத்தும் மட்டம்!
தகுதியென்றும்
தரமென்றும்
தந்திரச் சொற்களில்
மயங்கிக் கிடப்போர்
தன்மானத் தமிழராக
இருக்க முடியாது!
மானம்
மனிதனின் கொள்கை;
தன்மானம்
தமிழனின் தனியுடைமை!
தமிழருக்குள் என்னத் தகுதி?
வா எடை போடுவோம்…..
உன் செந்நீரும் என் செந்நீரும்
உன் கண்ணீரும் என் கண்ணீரும்
வேறுபாட்டால் சூழ்ச்சிக்கார்களின்
விதிப்படி வாழ்ந்து விட்டுப் போவோம்….
இல்லையானால்
தமிழராய் வாழ்வோம்!
ஏய்ப்போரை அடையாளம் காண்போம்;
இமயம் தொட்டத் தமிழ்க்குடியைக் காப்போம்!
நூல் அறிமுகம்: பொன்.குமாரின் சந்ததிப்பிழை புதுக்கவிதைகளில் அரவாணிகள் – மு.ஆனந்தன்
பொன்.குமார் அவர்கள் எழுதிய “சந்ததிப்பிழை” என்ற நூல் திருநங்கையர்களைப் பாடிய புதுக்கவிதைகளை அடையாளப்படுத்தும் நூலாக வந்துள்ளது. இது தமிழ் இலக்கிய வெளியில் புதிய முயற்சி. தேவையான முயற்சியும் கூட. அதற்காகவே பொன்.குமார் அவர்களுக்கு ஆயிரம் ஆவாராம் பூக்களை அன்பின் வெளிப்பாடாக அளிக்கிறேன். மாறிய பாலினம் குறித்து கவிதை வடிப்பதே வரவேற்க வேண்டிய அம்சம். அதிலும் அப்படி எழுதப்பட்ட கவிதைகளையெல்லாம் தேடிச் சேகரித்து, தொகுத்து அதன் மீது உரையாடலும் நடத்தியிருக்கிறார். எவ்வளவு முக்கியமான முன்னெடுப்பு.
க.நா.சு, மீரா, இன்குலாப், அப்துல்ரகுமான் என நாடறிந்த கவிகள் தொடங்கி நாம் இதுவரை அறிந்திராத கவிகள் வரை யாரெல்லாம் தங்கள் கவிதைகளில் திருநங்கைகளின் வலிகளைப் பதிவு செய்துள்ளார்களோ அவர்களது அந்தக் கவிதைகளையெல்லாம் அள்ளியெடுத்து தேக்குமர இலையில் பொதிந்து நமக்குத் தருகிறார். திருநங்கையர் கவிதை என்றாலே நமக்கு நா.காமராசன் அவர்களின் கவிதைதான் ஞாபகம் வரும். ஆனால் இந்நூலை வாசிக்கும் போது “இவர்களும் இப்படி எழுதியுள்ளார்களா” என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
உதாரணத்திற்கு கவிஞர் இன்குலாப் அவர்களின் ஒரு கவிதையைச் சொல்கிறேன்.
நானு ஆணுன்னு இல்லாம
பெண்ணுன்னு இல்லாம
அரவாணியா பொறந்தேனுட்டு
அண்ணந்தம்பி ஒதச்சாங்க
வீட்ட விட்டு வெளியே வந்த என்ன
ஊரே தொரத்தி அடிக்குதே
ஆணா இருந்திருந்தா
அம்பெடுப்பேன்
வில்லெடுப்பேன்
ஐவரோடு பங்கெடுப்பேன்.
பெண்ணாக இருந்திருந்தா
பூலோகம் ஆண்டிருப்பேன்
ஆணும் இல்லை பெண்ணும் இல்லை
அவல நிலை பாரும்மா..
ஒரு திருநங்கையின் குரலாக ஒலிக்கும் அற்புதமான கவிதை. இப்படியான ஏராளமான கவிதைகளை இந்த நூலில் அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் பொன்.குமார் அவர்கள். தமிழ் இலக்கிய வெளியில் திருநங்கையர் வகைமையை மட்டுமே முழுக்கப் பேசும் முதல் கவிதை நூல் “கூவாகம்”. ந.சிவகுரு மற்றும் பால சாகதன் ஆகிய இருவரின் கூட்டுத் தொகுப்பு இது. இந்த நூலை சிறப்பாக அறிமுகப் படுத்தியுள்ளார். அதிலிருந்து பல கவிதைகளை இந்நூலில் உலவிவிட்டுள்ளார். ஒரு கவிதையை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பெற்ற டிப்ளமோ
கற்ற நடனம்
எழுதிய கவிதைகள்
எல்லாம்…
ஒற்றை வார்த்தையில்
பொசுங்கிப்போனது
பொட்டை….
அரவாணிகளுக்கு குரல் கொடுக்கும் கவிஞர் ஆண்டாள் பிரிய தர்ஷிணி என்ற அத்தியாயத்தில், அவர்களுடைய “நானும் இன்னொரு நானும்” என்ற தொகுப்பிலிருக்கும் கவிதைகளை ஆய்வு செய்துள்ளார்.
பிரசவம்
செத்துப் பிழைப்பது
அரவாணி நிர்வாணம்
செத்துப் பிழைப்பது..
திருநங்கையர் ஆணுறுப்பு நீக்கத்தின் துன்பத்தை கச்சிதமாகச் சொல்லியுள்ளார் கவிஞர் ஆண்டாள் பிரிய தர்ஷிணி.. சங்க இலக்கியப் பாடல்களில் இலக்கணங்களில் இடம்பெற்றுள்ள மாறிய பாலினர் குறித்த சொல்லாடல்கள் அடையாளங்களையும் விவாதிக்கிறார்.
திருநங்கை சகோதரி கல்கி அவர்கள் எழுதிய “குறி அறுத்தேன்” என்ற கவிதை நூலைக் குறித்து விரிவாக பேசுகிறார். இது ஒரு திருநங்கை தன் வலியைப் பாடும் முதல் கவிதை நூலாகும். இதிலிருந்து பல கவிதைகளை கையாண்டுள்ளார். இந்தத் தொகுப்பை நான் ஏற்கனவே வாசித்துவிட்டு அதிலிருந்து மீண்டுவர இயலாமல் பல நாட்கள் தவித்தேன்.
உங்களின் ஆணாதிக்க குறியை
அறுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் யார் என்பதை
அப்போது நீங்கள் அறிவீர்கள்
பிறகு சொல்லுங்கள்
நான் பெண்ணில்லை என்று..
இப்படியாக அந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும் வாசகனை மிரட்டுகிற கவிதையாக இருந்தது. அதனை இந்த நூலில் பொன்.குமார் சரியாக பயன்படுத்தியுள்ளார். நூல் முழுவதும் ஏராளமான கவிஞர்கள் எழுதிய ஏராளமான திருநங்கையர் கவிதைகள். அனைத்தையும் ஒரே நூலில் வாசிப்பது புதுவித மனக்கிளர்ச்சியை அளிக்கிறது. திருநங்கையரைப் பாடிய கவிதைகளைத் தொகுத்தது போலவே சிறுகதைகளையும் தொகுத்து வருகிறார்.
இந்த நூல் திருநர் இலக்கியத்தின் புதிய முகம். பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம். ஆய்வுக்கான கையேடு. எழுத்தாளர் பொன்.குமார் அவர்களுக்கு மனதில் பூக்கும் ஓராயிரம் ஆவாராம் பூக்களையும் செடியில் பூக்கும் பல்லாயிரம் வாழ்த்துகளையும் பரிசளிக்கிறேன்.
ப்ரியங்களுடன் – மு.ஆனந்தன்
நூல் – சந்திப்பிழை
ஆசிரியர் – பொன்.குமார் – 9003344742
வெளியீடு –நளம் பதிப்பகம்
பக்கங்கள் – 120
விலை – ரூ 120/-