உண்மையான வரலாற்றிற்குத் திரும்புவதே தீர்வு: டி.எம்.தாமஸ் ஐசக் – வைஷ்ணா ராய்
முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் ஆலப்புழாவிற்கு வருகை தந்த போதுஅவரைச் சந்தித்துப் பேசுவதற்கு பத்து நிமிட கால அவகாசம் கிடைத்தது. அவரைச் சந்தித்த போது பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து விரிவாகப் பேசிய அவர் கால அவகாசத்தைத் தாராளமாக நீட்டித்தார். இன்றைய கலாச்சாரத் துருவமுனைப்பு கருத்துகளுக்கு எதிராகப் போராடுவதற்கு வரலாற்றின் மாறுபட்ட நிலப்பரப்புகளை முன்னிலைப்படுத்துவது எந்த வகையில் உதவும் என்பதை அவர் விளக்கினார். இந்த ஆண்டின் துவக்கம் வரை கேரளாவின் நிதி மற்றும் கயிறு துறை அமைச்சராக இருந்த டி.எம்.தாமஸ் ஐசக் கலை மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கான வலுவான ஆதரவை இவ்வாறு வழங்குகிறார். சேரப் பெருமாள்களின் தலைநகராக இருந்த முன்னர் மஹோதயாபுரம் என்றறியப்பட்ட கொடுங்கல்லூரில் உள்ள இடைக்காலக் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவின் தற்போதைய வளர்ச்சிக்கு இத்தகைய முயற்சிகள் ஏன் அவசியம் என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஐசக் விளக்கினார்.
சுருக்கப்பட்ட நேர்காணல்
கேரளாவில் பாரம்பரியப் பாதுகாப்பிற்கென்று மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து வருகிறீர்கள். அவ்வாறு செய்வதற்கு உங்களை எது தூண்டியது?
நான் கொடுங்கல்லூரில் வளர்ந்தவன். அதற்கு அருகே கி.மு.முதல் நூற்றாண்டுக்கு முந்தைய பழங்காலத்து முசிறி துறைமுகம் மலபார் கடற்கரையில் இருந்ததாக நம்பப்படுகிறது. ரோமானிய காலத்து கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் யூதர்கள், அரேபியர்கள், சீனர்கள், போர்த்துகீசியர்கள், டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் என்று அனைவரும் இருந்துள்ளனர். இந்த தளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதன் வழியாக மேற்கொள்ளப்படும் சுற்றுலா நிச்சயம் முறைசாரா வரலாற்றுக் கல்விக்கான வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை அந்த திட்டம் மாணவர்கள் நேரடியாக வரலாற்றைப் பார்க்கவும், கடந்த காலத்தைப் பற்றி கற்றுக் கொள்ளவும், அதன் மூலம் நிகழ்காலத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவும் உதவும். எனவே அந்த திட்டத்தின் முதன்மையான மையமாக கல்வியே இருக்கிறது. அந்த திட்டம் சுற்றுலாத்துறையின் கீழ் இருந்தாலும்கூட, அதனுடைய சுற்றுலாப் பயன்பாடு என்பது உண்மையில் ஓர் உபவிளைவாகவே இருக்கும். நமது குழந்தைகள், எதிர்காலச் சந்ததியினர் மீது கவனம் செலுத்தி வருகின்றோம். முசிறி குறித்த மூன்று நாள் சான்றிதழ் படிப்பையும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யவிருக்கின்றோம்.
இப்போது அந்த யோசனையை ஆலப்புழாவுக்கும் நீட்டித்திருக்கிறீர்கள்.
ஆலப்புழாவை ஒரு பாரம்பரிய நகரமாக மீண்டும் கண்டறியும் முயற்சியாகவே ஆலப்புழாவில் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டத்தின் கவனம் முழுக்க இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலபார் கடற்கரையில் இருந்த துறைமுகங்கள் அனைத்தும் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. டச்சுக்காரர்களின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் ஆலப்புழாவில் புதிய துறைமுகம் ஒன்றை திருவாங்கூர் திவான் ராஜா கேசவதாஸ் உருவாக்கினார். ஆலப்புழா மிகப்பெரிய துறைமுக நகரமாக மாறியது. வனப்பொருட்கள், மசாலா, தென்னங்கயிறு போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு மண்ணெண்ணெய், தானியங்கள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. கொச்சியின் எழுச்சிக்குப் பிறகு ஆலப்புழாவின் முக்கியத்துவம் குறைந்து போனது என்றாலும் நகரத்தில் உள்ள தென்னங்கயிறு தொழிலின் உள்ளூர்மயமாக்கலால் மீண்டும் அது புதிய வாழ்வைப் பெற்றது. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் தொழில்கள் மாற்றப்பட்டதால் அந்த துறைமுகம் வீழ்ந்தது. கால்வாய் அமைப்பு சிதைந்து போனது. இப்போது ஒரு ஷெல் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
அந்தக் கால்வாய்களை நாங்கள் இப்போது சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம், காலனித்துவ காலத்திய குடோன்கள், தொழிற்சாலைகள், தேவாலயங்கள், மசூதிகளைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றோம். பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படப் போகின்ற இந்த வரலாற்றுக் கட்டிடங்களில் சுமார் இருபது சிறிய உயிரியல் அருங்காட்சியகங்களை அமைப்பது எங்களுடைய திட்டத்தில் இருக்கின்றது. போக்குவரத்து மையத்திற்கு மட்டும் நானூறு கோடி ரூபாய் என்று இந்தத் திட்டத்திற்காக சுமார் 1,500 கோடி ரூபாயை நாங்கள் செலவிடவிருக்கின்றோம். ஒவ்வொரு ஆண்டும் ஆறு முதல் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிகளுக்காக ஆலப்புழாவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பாதிப் பேரையாவது பாரம்பரிய நகரத்தைப் பார்ப்பதற்காக கூடுதலாக ஒரு நாள் தங்குமாறு பார்த்துக் கொள்ளும் ஆவல் இருக்கின்றது. அது நிச்சயம் ஆலப்புழாவின் இரண்டாவது மறுபிறப்பாக அமையும்.
கலை, கலாச்சாரத்திற்கான உங்களுடைய ஆதரவிற்காக நீங்கள் எப்போதும் அறியப்பட்டு வருகிறீர்கள். உங்கள் ஆர்வத்தை எது தூண்டுகிறது?
அடிப்படையில் நான் ஒரு மேம்பாட்டு பொருளாதார நிபுணர். மாநிலத்தின் முற்போக்கான, மதச்சார்பற்ற கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதற்கு கலாச்சாரத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம் என்று கலாச்சார ஆர்வலராக இருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான எம்.ஏ.பேபி என்னிடம் வற்புறுத்தி வந்தார். தனிநபர் வருமானம் இந்திய சராசரியைக் காட்டிலும் கேரளாவில் குறைந்தது ஐம்பது சதவிகிதம் அதிகமாக உள்ளது. அந்தப் பணத்தை என்ன செய்கிறோம்? தங்கம் வாங்குகிறோம், நுகர்வுப் பொருட்களை வாங்குகிறோம், வீடுகளைக் கட்டுகிறோம் – கேரளா இப்போது மிகப் பெரிய, அசிங்கமான வீடுகளால் நிரம்பியுள்ளது. இந்த மிகப்பெரிய நுகர்வுக் கலாச்சாரம் சோசலிசக் கொள்கைகள் அனைத்திற்கும் எதிராகவே இருக்கிறது.
செலவினங்களுக்கான மாற்று வழிகள் யாவை? மக்கள் கலாச்சாரப் பொருட்கள் மற்றும் சேவைகளை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைச் செய்வதற்கு கலாச்சார உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதற்கான குறிப்பிட்ட மனநிலையை மக்களிடம் உருவாக்கித் தரவும் வேண்டியுள்ளது. கேரளா போன்ற அதிவேகமாக வளர்ந்து வருகின்ற பொருளாதாரம் அதிகமாக முதலீட்டை வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் செய்திட வேண்டும். இல்லையெனில் சோசலிச லட்சியங்களுக்கு மாறாக நுகர்வோர் கொள்கை மக்களிடம் ஆதிக்கத்தைச் செலுத்தி விடும். முசிறி திட்டத்தைப் போல கடன் வாங்கிய நிதியைக் கொண்டு கலாச்சார உள்கட்டமைப்பிற்காகச் செலவு செய்திருப்பதாக விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறேன். வரலாறு, கலாச்சாரத்துக்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்தச் செலவு கலாச்சார ஊக்குவிப்பைத் தவிர பெரிய அளவிலே மேம்பாட்டிற்கான உபவிளைவுகளையும் கொண்டிருக்கும் என்பதே அத்தகைய விமர்சனங்களுக்கான எனது பதிலாக இருக்கும்.
கட்சி இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறதா?
ஆம் பெருமளவிற்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கேரளாவில் கட்சியில் கலாச்சார மேலாதிக்கம் இருந்து வந்தது. இப்போது பின்நவீனத்துவம், வலதுசாரி அராஜகம் போன்றவற்றால் அது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. எனவே அதில் தலையிடுவது அவசியம் என்று கட்சி பார்க்கிறது. சமீபகாலம் வரையிலும் மாப்ளா கிளர்ச்சியைச் சுற்றி எழுப்பப்பட்டு வந்த சர்ச்சைகளை யாரும் நம்பவில்லை என்ற போதிலும் இப்போது அந்த சர்ச்சை வேகமாகப் பரவி வருகிறது. கேரளாவில் மறுமலர்ச்சிக்கு உள்ளான ஹிந்து சமூகம் மதச்சார்பற்ற சமூகமாக மாறியது. ஆனாலும் இப்போது அது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இப்போதுள்ள இவ்வாறான அச்சுறுத்தல்களை ஒப்புக் கொண்டே நாம் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
பாரம்பரிய, உண்மையான வரலாற்றிற்குத் திரும்புவதே அதற்கான தீர்வாக இருக்கும். நமது வரலாறு எந்த அளவிற்கு காஸ்மோபாலிட்டனாக, எவ்வாறு அனைவருக்கும் இடமளிப்பதாக இருந்தது என்பதை மக்களுக்குக் காட்ட வேண்டும். அவர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவின் மிகப் பழமையான சேரமான் ஜுமா மசூதி அல்லது கொடுங்கல்லூரில் உள்ள ஹோலி கிராஸ் தேவாலயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அசலான கேரளா கட்டிடக்கலை முகப்பை நாங்கள் அங்கிருந்து மீட்டெடுக்க விரும்பிய போது, எங்களிடம் அந்தக் கட்டமைப்புகளை ஒப்படைப்பதற்கு அதிகாரிகளிடம் மிகுந்த தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் செய்திருக்கும் மறுசீரமைப்பைப் பார்த்த பிறகு, அடித்தளத்தை மீட்டெடுப்பதற்காக ஜமாத் தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி வருகிறது.
உங்களுடைய அரசாங்கம் கலாச்சாரத்தில் முதலீடு செய்துள்ளது என்றாலும் அரசாங்கம் மாறும் போது என்னவாகும்? இந்த வேகம் நீடிக்குமா?
மக்கள் பங்கேற்பை உருவாக்கி அதனைக் கொண்டு செல்வதே எங்களுடைய திட்டமாகும். எனவே அரசாங்கம் மாறினாலும் ஈராண்டுகளுக்கொரு முறை நடைபெறும் கொச்சி-முசிறி விழாவைப் போல இத்தகைய கலாச்சார முதலீடுகளும் தொடர வேண்டும் என்றே மக்கள் விரும்புவார்கள். இப்போதுமக்களின் ஈடுபாடு இருப்பதால் நாங்கள் அங்கே இப்போது விதைக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம். அதனால்தான் நாங்கள் ஆலப்புழாவிற்கு லோகமே தரவாடு போன்ற கலைக் கண்காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அது ஆலப்புழாவை அடையாளமாக்குவதற்கான எங்கள் திட்டங்களுடன் இணைந்திருக்கிறது. இதைத் தவிர இதுபோன்ற திட்டங்களைத் தொடர்வதற்கான அடுத்தடுத்த அரசாங்கங்களிடம் போட்டிக்கான உந்துதல் நிச்சயம் இருக்கும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் நாங்கள் செய்து வருவது கலாச்சாரத்திற்கான குறுகிய மார்க்சிய விளக்கமாக இல்லாமல் பரந்த, முற்போக்கான, மதச்சார்பற்ற விளக்கம் என்பதாகவே இருக்கிறது.
இந்த திட்டங்களை கோவிட்-19 எவ்வாறு பாதித்துள்ளது?
கேரளாவின் நிதி மூன்று வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்று பொதுமுடக்கம் மற்ற மாநிலங்களைப் போலவே கேரளாவின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இரண்டாவதாக, கேரளாவின் வருமானம் பெருமளவிற்கு கிட்டத்தட்ட முப்பது சதவிகித அளவிற்கு குறைந்துள்ளது. மூன்றாவதாக, கேரளாவின் ஆற்றல்மிக்க சுற்றுலாத்துறையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் வேலை இழப்பும், வணிக முடக்கமும் ஏற்பட்டுள்ளன. அரசாங்க வருவாயில் ஏற்படுகின்ற எந்தவொரு குறைவும் கேரளாவை அதிகம் பாதிப்பதாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் அதிகம் செலவு செய்பவர்கள். எங்களுடைய சமூக மற்றும் பொதுநலன் சார்ந்த செலவுகள் அதிகம். வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அவற்றைத் தொடர வேண்டும் என்பதால் நாங்கள் எதையும் நிறுத்தி வைக்கவில்லை.
ஒவ்வொரு நெருக்கடியும் தன்னுடன் வாய்ப்பையும் கொண்டு வரும் என்பதால் நாங்கள் கோவிட்-19இலிருந்து வெளியேறும் வியூகத்தை உருவாக்கியுள்ளோம். அதன் மூலம் வாழ்வாதாரங்கள் மற்றும் சமூகத் துறைகளை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பைச் சீரமைப்பது, காலவரையறையுடன் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி கேரளாவை நகர்த்துவது போன்றவை நிகழும்.
இடதுசாரிகளின் கண்ணோட்டத்தில் அதன் பொருள் என்னவாக இருக்கிறது?
தற்போதுள்ள விவசாயம், தொழில் மற்றும் சேவைகளுக்கான தொழில்நுட்பத் தளத்தை புதுமையான நவீன நுட்பங்களைக் கொண்டு மாற்றுவது; அறிவு செறிந்த தொழில்களில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது; கிக் பொருளாதாரத்தை நோக்கிய உலகளாவிய மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான மிகப் பெரிய அளவிலான டிஜிட்டல் திறன் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவற்றை உள்ளடக்கியதாக அது இருக்கும்.
நன்றி: தி ஹிந்து நாளிதழ் 2021 அக்டோபர் 02
தமிழில்: தா. சந்திரகுரு