Avusaari Shortstory By Manimathavi அவுசாரி சிறுகதை - மணிமாதவி

அவுசாரி சிறுகதை – மணிமாதவி




சாந்தி…சாந்தி…

ம்ம்ம்..

சாந்தி….கொஞ்சம் எந்திரி…

ம்ம்ம்…

சாந்தி….எழுந்துரு…

என்னய்யா‌ ….இந்நேரம் ஏன் எழுப்புற…

பேசனும்…

இப்பவா…என்னாச்சு மாமா….எதும் பிரச்சனையா….ஏதும் வேணுமா…

இல்ல…கொஞ்சம் பேசணும்..

இந்நேரம் என்னத்தய்யா பேச போற….காலைல பேசலாம் போய் படு…

இல்ல இப்ப பேசனும்…

என்னய்யா ரோதனையா போச்சு உன்னோட….எத பத்தி பேசனும் சாமகாட்டுல…

இல்ல இன்னைக்கு ஊருக்கு போனத பத்தி ….

ஆமாயா….ஒரு மாசமா பழனி பழனின்னு பசப்பிட்டே திரிஞ்சதுக்கு இன்னைக்கு போயாந்தாச்சு ….ஒத்த மொட்டை வழிச்சு வர்றததுக்குள்ள போதும் போதும்னு ஆயாச்சு…ஆனாலும் உம்ம வீட்டாளுகள இழுத்து போய் வாரதெல்லாம் மலையை மயித்தகட்டி இழுக்குற காரியம்யா.‌….யாத்தே யாத்தே…மனுசருக்கு அத்தாவுத்தியா வந்துடும் இதுகள இழுத்து போயி வரமுன்ன …..வெள்ளன கெளம்பி செத்தமுன்ன தான் வந்து சேர்ந்தோம்….செத்தம் குறுக்க சரிப்போம்னு பார்த்தா சாந்தி சாந்தினு வந்து நிக்க….அத்த பத்தி என்னத்த பேச சொல்ற…

இல்ல காருல….

நான்தேன் உம்மட்ட படிச்சு படிச்சு சொன்னேம்ல …உங்காத்தாகாரி வரல வரலம்பா கார் வந்ததும் மொதெ அவதேன் ஏறுவா….நம்ம வீட்டு சனத்துக்கு டாடா சுமோ போதாதுயா …..வேனுக்கு சொல்லும்னா கேட்டியாயா…..சிறுக்கி பேச்ச கேட்க நாதியில்லாம….ஒம்பது சனம் போறதுல பத்தொன்பத நெறச்சா …..பரிதவிச்சு வந்து போச்சுயா….

இல்ல கரிக்கோலு….

உம்ம அண்ணே மவன்தான…‌ஏம்யா உங்காத்தாகாரிக்கு மசுரோட மண்டைக்குள்ள ஏதுமிருக்கா….அவன என்ன சின்ன நொல்லன்னு நெனச்சுபுட்டாளா….இளவட்டமாட்டம் இருக்கான் அவன என் மடில தள்ளிட்டா …எம்பொசமும் போச்சு ….ஒத்தபக்க பிட்டமும் போச்சு…

இல்ல கார்ல வச்சு யாருக்கும் தெரியாம போன் பேசுனியாமே..

யார் சொன்னா….நீ என்னத்த கண்ட……

இல்ல கரிக்கோல் தான்..மதுரை நெருங்கையில …எல்லாம் அசந்த நேரம்… யாருட்ட …என்ன பேசுன…

பேசுனேன் சொன்னவன் ..என்ன பேசுனுன்னு சொல்லலியோ

நீ தான் திருட்டு தனமா குசு குசுன்னு பேசுனியாம்ல ….அவன் வந்து சொல்லயிலே எனக்கு அசிங்கமா போச்சு.‌‌

போன் பேசுனதுல உமக்கென்னயா அசிங்கம் …

ஆத்தா அப்பனெல்லாம் திருட்டு தனமா அவுசாரிதேன் பேசுவா …‌நான் பெத்தவன் நீ சரியா இருந்தா சிறுக்கி அவுசாரிதனம் பண்ணுவாலான்னு கேட்டுபுட்டாவ…அண்ணனும் கொஞ்சம் வெசனபட்டான்….

என்னத்துக்கு…

நான் கொடுக்குற இடத்துலதான நீ இம்புட்டு ஆடுற….யார் என்னன்னு விசாரின்னு….

நீ என்னத்த சொன்ன…

எம்பொண்டாட்டி நான் கேட்காமலே என்ட எல்லாம் சொல்லிடுவான்னு மெச்சி வந்தேன்….இம்புட்டு நேரம் நீயும் சொல்லுவ பாத்தேன்….நீ தூங்கிபுட்ட அதேன் எழுப்புனேன்…..யாரு புள்ள….

இப்ப நான் யாருன்னு சொன்னாதான் நம்புவியா

இல்ல அவுகட்ட நான் ஒன்ன சரியா வச்சுருக்கேனு சொல்லனும்ல…

ஓ….நான் போன காட்டி அத நீ அவுகட்ட சொல்லிதேன்….நான் அவுசாரி இல்லன்னு நிருபிப்பியோ….

அப்படியில்லடி….ஒன்ன தப்பா பேசிட கூடாதுல….

அவுக பேசுனதோட ‌நீ என்ட்ட இப்ப கேட்குறதுதாம்யா நோவுது…

ஏய் .. யார்ட்ட பேசுனனு காட்டுறதுல உனக்கு என்ன ஆகிட போவுது ….உம்மேல தப்பில்லனா ஏன்டி பயப்படுற…

நான் பயப்பட்டேன்னே வச்சுக்கோயா…..இந்த போன்காட்டுல பாத்துதேன் ‌நீ என்ன நம்புவனா…..அப்டி ஒரு நம்பிக்கை தேவையேயில்ல…நான் அவுசாரியாவே இருந்துட்டு போறேன்யா…

ஏய்….என்னடி திமிரா….

ஆமான்னே வச்சுக்கோ…

எக்கா ….எக்கா ….அம்சவேணிக்கா….

ஏய் என்னடி …இம்புட்டு வெள்ளன வந்துருக்கவ….என்னடி ஆச்சு …ரவ்வுக்கு தூங்குனியா இல்லையா…கண்ணுலாம் வீங்கி கெடக்கு….உம்புருசனோட எதும் தகராறா….அவன் வெள்ளனவே வெளிய போனான்….

இல்லக்கா…. வந்துசேரவே ராவாகிபோச்சு…. எல்லாம் முடிச்சு உடம்பு நோவு சரியா தூக்கமில்ல….

என்னத்தயோடி …‌சரி இப்ப என்னத்துக்கு வந்தவ ….

சீட்டு எடுக்க கேட்டேனே ….

ஆமா ….நேத்து போனுலயும் இத தானடி சொன்ன….இந்த முறை எடுத்துக்கோன்னு சொல்லிபுட்டேனே …இன்னும் பத்து நா கெடக்கு ..‌அதுக்குள்ள ஏண்டி விடியமுன்ன வந்து நிக்க….

இல்லக்கா அது வேணாம்னு…..சொல்ல வந்தேன்….நான் கடைசி சீட்டே தட்டிகுறேன்கா…

அடி பாதகசத்தி….அரை நாளுக்குள்ள அப்படி என்னடி உனக்கு வந்துச்சு….நேத்துதேன் ….இந்த சீட்டு எடுத்தே தீருவேன்னு நின்ன இன்னைக்கு வேணாம்ங்க‌…கோட்டி கீட்டி புடிச்சுருக்கா…

இல்லக்கா ….எனக்கு வேண்டியவுகளுக்கு வண்டி எடுக்க கைகடிச்சுதுன்னு நேத்து பேசிட்டுருந்தாவ….சரிி நான் வீட்ல சிறுபாட்டுல போட்ட சீட்டுதான இது ….அவுகளுக்கு உதவ கொடுக்க நெனச்சேன்….

சரி இப்ப என்னாச்சு ‌…..அவுக வண்டி எடுக்கலயா..

இல்ல….அவுக செத்துட்டாவ……

Muthal Rayil Payanam Short Story By Kavitha Ramkumar. முதல் ரயில் பயணம் சிறுகதை - கவிதா ராம்குமார்

முதல் ரயில் பயணம் சிறுகதை – கவிதா ராம்குமார்




ரிங் ரிங், ரிங் ரிங் என அலைபேசி அலறியது .

சாப்பிட்டுக்கொண்டிருந்த லாவண்யாவிற்கு தொடர்ந்து மூன்று முறை அலைபேசி அலறியதால் பொறை ஏறிவிட்டது. உணவைப் பரிமாறிக் கொண்டிருந்த லக்ஷ்மணன் தன் உள்ளங்கையை அவளின் தலையில் வைத்து இதமாக தட்டிக் கொடுத்தபடி 

“இரு இரு பொறுமையா உக்காந்து சாப்பிடு வருஷத்துல இன்னிக்கு ஒரு நாள்தான் நான் சமைச்சு உனக்கு  பரிமாறது. அதனால பதற்றப்படாம சாப்பிடு நான் போயி யாருன்னு பார்க்கிறேன்”என்றபடி அலைபேசியை எடுத்த லக்ஷ்மணன். 

“ஹலோ யார்” என்று கேட்டார்.

எதிர்முனையில் இருந்து “நான் ஜெயஸ்ரீ பேசுகிறேன் லாவண்யா இருக்காளா?”என்ற குரல் ஒலித்தது….

“அவள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாள் சற்று பொறுங்கள் இதோ வந்து விடுவாள்” என்று சொல்லி ரிசீவரை கீழே வைத்தார்.

உணவருந்திக் கொண்டிருந்த லாவண்யாவுக்கும் தகவலைச் சொல்லிவிட்டு இனிப்புடன் உணவை முடித்து வைத்தார் லட்சுமணன்…. ரிசீவரை எடுத்த லாவண்யா,”ஹலோ ஜெயஸ்ரீ எப்படி இருக்க?”

மறுமுனையில் இருந்த ஜெயஸ்ரீ, “நான் நலமுடன் இருக்கிறேன் திருமண நாள் வாழ்த்துக்கள்!”என்ற வாழ்த்துக்களுடன் இவர்களது கலகலவென பேச்சு தொடங்கியது …

இருவரும் அலைபேசியில் மறக்க முடியாத நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“லாவண்யா உனக்கு அந்த நாள் ஞாபகம் இருக்கா, நம் கல்லூரிக்கால நண்பன்”என்றாள். கல கல வென சிரித்தவள் ,”மறக்ககூடிய  நிகழ்வா அது. இக்கணம்  நினைத்தால் கூட எனக்கு சிலீர்த்துவிடுகிறது ஸ்ரீ”என்றாள். அன்று நல்ல வெயில், பகுதி நேரக் கல்லூரி என்பதால் மதியம் இரண்டு மணிக்கு முன்னதாகவே முடிந்துவிடும்.

லாவண்யா தனது வீட்டின் அருகாமையில் பேருந்து நிலையம் இருப்பதாலும்,சிறிது நேரம் தாமதம் ஆனாலும் அடுத்தடுத்து தனது கல்லூரிக்கு செல்லும்  பேருந்துகள்  கிடைப்பதால் எப்பொழுதும் அவள் பேருந்தில் பயணிப்பது வழக்கம்.

ஒரு சமயம்  ஜெயஸ்ரீ வகுப்பு நேர இடைவேளையின்போது தான் எப்பொழுதும் ரயில்பயணத்தையே அதிகம் விரும்புவதும்,அதன் அனுபவங்கள் மிக சுவாரசியமாக இருப்பதைப் பற்றியும்  லாவண்யாவிடம் சொல்லிக்கொண்டுயிருந்தாள் .

இடைவேளை முடிந்து வகுப்புகள் ஆரம்பித்தது. லாவண்யாவால் பாடங்களை கவனிக்கமுடியவில்லை,அவளின் சிந்தனை முழுவதும் ரயில் பயணங்கள் மீதே இருந்தது …. 

“வீட்டில் இருந்து ரயில் நிலையத்துக்கு சொல்வதென்றால் குறைந்த பட்சம் இருபது நிமிடங்கள் ஆகிவிடுமே”என்ன செய்வது என குழம்பிக் கொண்டே இருந்தவள், இன்று ஜெய ஸ்ரீ வுடன் ரயிலில் பயணிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். 

கல்லூரி நேரம் முடிந்ததும்,அவளின் நடை ஸ்ரீ உடன் ரயில் நிலையத்தை நோக்கி சென்றது…..புத்தாண்டு முந்தைய நாள் என்பதாலும்,பகுதி நேரக்கல்லூரி என்பதாலும்  பயணிகள் மற்றும் மாணவர்களின் கூட்டம் வருவதும்,செல்வதுமாக  அலைமோதியிருந்தனர்.

மாணவர்கள் அனைத்து பிளாட்பாரத்திலும் நிறைந்திருந்தனர்…. அதீத உற்சாகத்தோடு கைகளை அசைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு இருந்தனர்…. 

லாவண்யாவின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை… முதல்முதலாக ரயில் நிலையத்திற்கு வந்தவளுக்கு இவளையே அனைவரும் வரவேற்பது போல் இவளது கண்களில் காட்சிகள் நிரம்பி வழிந்திருந்தது…. 

பிளாட்பாரம் எண் மூன்றில் இருந்த தொடர்வண்டியானது ரயில் நிலையத்தை விட்டு செல்லுகையில்  அப்போது பிளாட்பாரம் எண் இரண்டில் இருந்த லாவன்யா மிகுந்த சத்தத்துடன் தனது வலது கைகளை உயர்த்தி “பாய் டாட்டா” என அசைக்க  ஸ்ரீ “ஏய் லாவண்யா என்ன பன்ற அமைதியா இரு” என அவளை பிடித்து அத்தட்ட சிறு குழத்தைப்போல் “அய்யய்யோ”என அமைதியானாள். இருவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு அன்று நடந்தது.

“லாவண்யா அங்க பாரு”என ஸ்ரீ அவளின் தோளைப் பிடித்து அசைக்க இருவராலும் அதை நம்ப முடியவில்லை தொடர்வண்டி கிளம்புகையில் தான் பாய்,டாட்டா என கையசைத்த அதே மாணவர்கள், இவர்களை நோக்கி வருவதை உணர்ந்தனர் ….

இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு ஓடுகையில் இருவரையும் சுற்றிவளைத்தனர் அந்த மாணவர்கள். ஒன்றும் புரியாமல் இருவரும் திகைத்து போனார்கள்.

கும்பலில் இருந்த ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நாங்களும் மாணவர்கள்தான்  பதட்டப்படாதீர்கள் எனக் கூறினான்.  ஜெயஸ்ரீயும், லாவண்யாவும்  பெருமூச்சு விட்டனர்…. 

“உங்கள பாத்து நாங்க ஏன் பயப்படணும்” என்று  தனக்குத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டு பதில் கூறினாள் லாவண்யா…

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் தைரியமாக  “என் பெயர் லட்சுமணன் ,நாம் அனைவரும் நண்பர்கள் ஆகலாமா” என கேட்டான்….

“ஏற்கனவே இருந்த அதிர்ச்சியில் இன்னுமொரு அதிர்ச்சியா” என நினைத்துக் கொண்ட ஜெயஸ்ரீ லாவண்யாவை பார்க்க இருவரும் நண்பர்கள் ஆகலாம் என ஒப்புக் கொண்டனர்…. அனைவரும் சேர்ந்து தொடர்வண்டியில் பயணித்தனர்…. 

முதல் ரயில் பயணம் மறக்கக் கூடியதல்ல…… இன்றுவரை லாவண்யா உடன் லக்ஷ்மணன் பயணித்துக் கொண்டிருக்கிறார்….

Katril Payanikkum Uthir ilai Poem By Vasanthadheepan வசந்ததீபனின் காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை

காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை – வசந்ததீபன்




காற்றில் பயணிக்கும் உதிர்இலை
****************************************
(1)
என் பாதையில் போகிறேன்
உன் இதயத்தைச் சுமந்து
மலைச் சரிவுகளில்
நெல்லிக்காய் மூடைகளை
ஏற்றிய கழுதையாய்…
சறுக்கிச் சறுக்கி நகருகிறேன்
கிணற்றில் தவறி விழுந்த
தங்க நாணயமாய் கிடக்கிறது
உன் வாலிபம்
என் தேடலுக்கு சிக்காமல்…
கூழாங்கற்கள் பாடும் பாடல்களில்
நதியின் மரணம் குறித்த
அவலச்சுவை நிரம்பிய ஏக்கங்கள்..
நத்தை ஓடுகளை உருட்டி உருட்டி
பசியைப் போக்க
முயல்கிறது சிறகு கிழிந்த காக்கை..
வளையல் சத்தம் போல
தென்னஞ் சோகைகள்
காற்றில் மோதி ஒலிக்கின்றன..
உலர்ந்த உயிரை
எந் நொடி வரை
பொடியாமல் பாதுகாத்து வைப்பேன்
நானும் காலத்திடமிருந்து ?

(2)
உன் விழிக் கணைகளால்
தாக்குண்டு
வீழ்ந்து கிடக்கிறேன்
என் திரேகம்
தீயூட்டப்பட்ட சுள்ளியாய்
சடசடக்கிறது
என் மனம்
புதைசேறில் சிக்குண்டதாய்
பரிதவிக்கிறது
துளிக் காதலை
என் இதழ்க் காட்டில்
தெளித்து விடு
வாழ்வின் குளிர்மையின் நாவுகள்
என்னைத் தீண்டட்டும்
மெளனமாய் ராகத்தை மீட்டாதே
என் ஆன்மாவின் தந்திகள்
படபடவென்று அதிர்கின்றன
நிழல் தா
நிகழ் கரைகின்றது.

(3)
குறுவாளின் நுனியில்
துளிர்க்கும் உதிரம் சொட்ட
ஊராரின் பரிகசிப்பின் சொற்கள்
எள்ளலோடு அலைகின்றன
நிர்வாணியைப் போல
என்னை நிராதரவாய்ப் பார்க்க..
கண்ணீரின் ஊற்றண்டையில்
தாகமாய் அமரும்
அந்தப் பறவையின் பெயர்
ஒருவரும் அறியமாட்டார்கள்
அதற்கு மனித முகமிருக்கிறது
அம் முகம் என் முகமென
நீ அறிவாயா ?
இறக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன
பலியாட்டின் கண்களைப்போல
மெளனமாய் உறைந்திருக்கும்
என் கணம்
அறுந்து நொடியிழையில்
தொடுக்கிக் கொண்டிருக்கிற
குடை ராட்டினமாய் நானும்!
நீயோ பாராது போகிறாயே ?

Nalam Poem By Sakthirani நலம் கவிதை - சக்திராணி

நலம் கவிதை – சக்திராணி




கையிலிருக்கும் புத்தகத்தில்…
மனம் முழுதும் மூழ்கிக்கிடக்க…
சிந்தனை சிதறலாய்
தொடர்வண்டியின் வேகம் அதிகரிக்க…காற்றும் கொஞ்சம்
புத்தகத்தை புரட்ட…

காற்றின் வேகத்தின் எதிர்திசையில் சற்றே திரும்பி அமர்ந்து… மீண்டும்
புத்தகங்களூடே விழி சொருகும் நேரத்தில்…எதிரே அமர்ந்த உருவம்…

எங்கோ…பார்த்தது போல இருக்குதே…என உற்று நோக்கும் சமயத்தில்…அவள் கூந்தலும் காற்றால் முகம்மூடி மறைக்க…
பார்க்கும் ஆர்வத்தில்…அருகே செல்ல…கூந்தல் ஒதுக்கியவளாய்…ஒரு பார்வை
பார்த்தாள்…என்னை ஒதுக்கி சென்றவள்…

விழி நோக்கிய பின் ஏன்
இந்த மௌனம்…தேவையில்லையே
என பேசத்துவங்க
அவளும்…
ஏதும் அறியாதவள் போல…
விடையானால்…என் வினாக்களுக்கு…

காலம் தந்த மாற்றங்களுக்கு…
நாம் எப்படி பொறுப்பாவது…என
சுயநலமாய் நடந்து கொண்டாலும்
பொதுநலமாய்…தொடர்வண்டி விட்டு
இறங்கும் போது கூறினேன்…

திருமணம் என்றால்…பத்திரிக்கை
அனுப்பு…கண்டிப்பாக
வருகிறேன் என…

Why forests are quiet Childrens ShortStory By Kumaraguru. குமரகுருவின் காடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன சிறார் குறுங்கதை

காடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன சிறார் குறுங்கதை – குமரகுரு




கார் வேகமா போயிக்கிட்டிருக்கும்போது, சன்னல் வழி வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த அரவிந்தனுக்கு திடீர்னு ‘நாம வேகமா போறோமா இல்லை இந்த மரம் செடி கொடிகளெல்லாம் வேகமா நம்மளைப் பார்த்து ஓடுதுங்களா’ன்னு சந்தேகம். விரலை தாடைல வைத்து யோசிச்சிட்டிருந்தவனைப் பார்த்த அம்மா அவன்கிட்ட “என்ன செல்லம் யோசிக்குறீங்க?” ன்னு கேட்டாங்க.

“ஏன் மா நாம இவ்வளவு வேகமா போறோமா இல்லை இந்த மரம் செடி கொடி ஊரெல்லாம் நம்மளைப் பார்த்து பயந்துக்கிட்டு வேகமா ஓடி ஒளியுதா?” ன்னு அம்மாக்கிட்ட கேட்டான் அரவிந்தன்.

“மரம் செடி கொடி மலை ஊர் இதெல்லாம் ஓடாதுடா செல்லம். நாமதான் அதுகளையெல்லாம் தாண்டி வேகமா ஓடிக்கிட்டிருக்கோம்”

“ஓ! சரிமா! இப்போ நாம போற வழியில இருக்க சாலை எல்லாம் யாரு போட்டது?” என்று அடுத்த கேள்வி கேட்டான்.

“அது நம்ம அரசாங்கம் நம்மளை மாதிரி இருக்கவங்க எல்லாம் ஒரு ஊருலேயிருந்து இன்னொரு ஊருக்கு போறதுக்காக கல்லு மண்ணு தாரெல்லாம ஊத்தி போட்டாங்க”

“சரிம்மா!! அப்போ இந்த சாலை போடுறதுக்கு முன்னாடி இங்கே என்னமா இருந்தது?”

“என்னடா இது!! கேள்வியெல்லாம் பயங்கரமா கேட்டுக்கிட்டேயிருக்க. எவ்வளவு பதில் சொல்லுறது. அதாவது, பாதையில்லாத இடத்துக்கெல்லாம் பாதை உருவாக்க அங்கேயிருந்த செடி மரமெல்லாம் வெட்டி அப்புறப்படுத்தி நடந்து போய்க்கிட்டிருந்தோம்.

அப்புறம் சைக்கிள் வந்தது, பாதையை இன்னும் கொஞ்சம் நல்லா பதப்படுத்தி முள்ளு கல்லு இல்லாத சாலையா மாற்றினாங்க. அதுக்கப்புறம், பைக் கார் லாரி பஸ்லாம் வந்தது, நாம அதையெல்லாம் பயன்படுத்த பயன்படுத்த சாலைகளும் அகல வேண்டியிருந்ததால தண்ணீர் தேங்காத மண்ணில்லாத பள்ளங்களில்லாத நல்ல உறுதியான அதே நேரம் வேகமாக போக கூடிய, இப்ப நாம போயிட்டிருக்க மாதிரி தார் சாலைகளைக் கண்டுபுடிச்சு போட்டாங்க”

“அப்படியா அம்மா! அப்போ அதோ நம்ம கண்ணுக்கு தெரியுற அந்த மரமெல்லாம் அடுத்தடுத்து சாலைப் போடுறப்போ வெட்டிடுவாங்களா அம்மா?”

“தேவைன்னா வெட்டுவாங்க. வெட்டிட்டு புதுசா வேற எங்கேயாவது ஒரு மரம் நட்டுடுவாங்க செல்லம்”

“அப்போ இந்த ஊருக்கு மழை கொடுக்கிற மரம் ஒன்னு போயிடும். ஆனா, இன்னொரு ஊருக்கு மழை கொடுக்க இனன்னொரு புது மரம் வந்துரும்”

“கரெக்ட்”

“இப்போதான்மா ஏன் காடுகளெல்லாம் அமைதியா இருக்குன்னு எனக்கு புரியுது!”

ஆச்சர்யமான அம்மா, ஏன் என்று கேட்க விரும்பினாள், கேட்டும் விட்டாள்… “காடெல்லாம் அமைதியா இருக்கா? ஏன்னும் உனக்குத் தெரியுமா?”

“ஆமாம் மா!! நாம அன்றைக்கு ஒரு படம் பார்த்தோம்ல அதுல வர கெட்டவன், ‘நீ அமைதியா இல்லைன்னா உன்னைக் கொன்னுடுவேன்’னு சொல்லுவான்ல, அதனால தான அந்த பொண்ணு அமைதியா இருப்பா. அது மாதிரிதான் இந்த காடுகளும் அமைதியாக இருக்கு” என்றான் அரவிந்தன்.

Chikku Bukku Childrens Story by Era Kalaiyarasi. சிக்கு புக்கு குழந்தைகள் கதை - இரா.கலையரசி

சிக்கு புக்கு குழந்தைகள் கதை – இரா.கலையரசி




சிக்கு.புக்கு.,சிக்கு புக்கு, கூ…கூ…

கூவிக் கொண்டை சட்டையை பிடித்துக் கொண்டு ஒருவர் பின்னாடி ஒருவர் ரயில் வண்டியில் ஏறினர்.

ஏய்..ஏய்..ஏறு! ஏறு!.னு மத்த புள்ளைங்களையும் ஏத்திகிட்டாங்க.

தெரு முனையில ஏறிய ரயில் வண்டி,போய்கிட்டே இருந்துச்சு.அவங்க ஊரு களத்து மேட்டுல செத்த நேரம் நின்னுச்சு.

ம்.ம்..வண்டி ரெண்டு நிமிசந்தான் நிக்கும்.எல்லாம் தண்ணீர் பிடிச்சுகுங்க.குளத்துல இருந்த தண்ணிய புட்டியில
ஊத்திகிட்டாங்க.

ஆடி.,ஓடி தவிச்சு ரயில் வண்டி வீட்டுக்கு வந்து சேர்ந்துடுச்சு.

ரெண்டே மாசத்துல அவங்க ஊருக்கு நிஜ ரயிலும் வந்திருச்சு.இப்ப யாரும் ரயில் விளையாட்டு விளையாடறது இல்ல.

இல்லாத போது இருந்த மகிழ்ச்சி, இப்ப அந்த ரயில் வண்டியில நிசமா போகும் போது அந்தப் புள்ளைங்களுக்கு என்னமோ கிடைக்கல.

Edhu Kalvi Shortstory by Shanthi Saravanan சாந்தி சரவணனின் எது கல்வி சிறுகதை

எது கல்வி சிறுகதை – சாந்தி சரவணன்




வழக்கம் போல் பெரம்பூர் பஸ் ஸ்டாண்டை அடைந்தாகிவிட்டது. மணி சரியாக 7.45 AM. 29m  அடையார் செல்லும் பேருந்து ஒரு மணி நேரத்தில் பெரம்பூரிலிருந்து அடையார் சென்று சேர்த்து விடுவார் முத்து டிரைவர்.  

29c  அதிகமாக இருந்தாலும் வெண்பாவும்  அவளது  தோழிகளும்  29m தான் தேர்ந்து எடுப்பார்கள். கடைசி வரிசையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது ஒரு அலாதி சுகம் தானே. அதுவும் இந்த பேருந்து குறைந்த தடங்களில் தான் நிற்கும். அதாவது ஓட்டேரி, மோட்சம்KMC,  ஸ்டேர்லிங் ரோடு ஜெமினி, ஸ்டெல்லா மேரீஸ், லஸ், மயிலாப்பூர், மந்தவெளி, சத்யா ஸ்டுடியோ, அடையார்.  

ஒவ்வொரு தடம் வரும் போதும் அமர்ந்து இருப்பவரகளின் மடி கனம் குறையும். நிற்பவர்களின் மொத்த பைகளும் அமர்ந்து இருப்பவர்கள் மடியில் தான் பயணம் செய்யும்.

ஆனால் இன்று மாட்டு பொங்கல். சென்னையே காலியாக இருக்கும். ஆங்கிலேயர் மக்கள் கணக்கெடுப்பின்படி திருச்செந்தூரில் தான் மக்கள் தொகை அதிகம்  என்றார்களாம். ஏன் என்றால்? அவர்கள் கணக்கு எடுத்த நாள் தைப்பூசமாம்

அதுபோல சென்னை மக்கள்தொகையை இந்நாளில் எடுத்தால் மக்கள் தொகை குறைந்து வாழும் நகரமாக அறிவிப்பார்கள். ஏன் என்றால்? சென்னையை அதிக மக்கள் வாழும் நகரமாக மாற்றி, காற்று கூட புகாத படி அடைந்து இருந்த சக தோழமைகள் எல்லோரும் சென்னையை சுதந்திரமாக சுவாசிக்க அனுமதித்து சொந்த ஊர் சென்று உள்ளனர். பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னையில் எந்த வாகனத்தில் சென்றாலும் ஆனந்தமாக இருக்கும்.

மாட்டு பொங்கலை ஒட்டி  அலுவலகத்தில் நடக்கும் விழாவிற்காக வெண்பா சென்று கொண்டு  இருக்கிறாள். S Construction அடையார் கஸ்தூரிபாய்நகர்மெயின்ரோட்டில் தான் அலுவலகம். ஒரு வரவேற்புரை இரண்டுஅறைகள் ஒன்று அலுவலக பணியாளர் அறை மற்றொன்று முதலாளி அறை. வீடு போன்ற உணர்வு. இந்த உணர்வால் தான் அங்கு பணி செய்பவர்கள் குறைந்தது ஐந்து வருடமாவது அங்கு பணிபுரிவார்கள்.

வெண்பா பஸ்ஸில் ஒரே அரட்டை. கமலி, ஷ்யாமளா, சுகன்யா தோழர்களோடு உரையாடி வந்ததில் அலுவலகம் மிக விரைவாக அடைந்தாகிவிட்டது. வரவேற்பு அறையில் வேணி, ரம்யா மேடம் சீனியர் சுசி முவரும் பட்டு புடவையில்.  

ரம்யா மேடம்,  “வெண்பா  வா, வா.  ஒரே கலக்கலா இருக்கே, இந்த ஜிமிக்கி எங்க வாங்கின?

“GRT மேடம் . உங்க உடை கூட மிகவும் அழகாக இருக்கு மேடம்”.

அப்போ நான் அழகாக இல்லையா என்ற ரம்யாவிடம், “நீங்க எப்பவும் அழகு தான் மேடம்”, என்றாள் வெண்பா.

கனைத்தபடி கணக்காளர் ரமேஷ்ஆரம்பிச்சிடிங்களா. இந்த பெண்களுக்கு எப்போதும் இதே  பேச்சு”  எறும்பு வரிசையாக வருவது போல பாலு, சதிஷ் ஆடிட்டர் ரவி வரிசையாக வெளியே வர  அனைவரும்ரே அரட்டை.

சிறிது நேரத்தில் HONDA CITY CAR வந்தது. “சார் எல்லாம் நேரே பூஜை போடும் தளத்திற்கு  போயிட்டாங்க பெண்களை எல்லாம் கூப்பிட்டு வர சொன்னாங்க“, என்று சொல்லிக் கொண்டே டிரைவர் உள்ளே வந்தார். ஆண்கள் அவர்களின் வாகனத்தில் வந்துடுங்க என்றார் டிரைவர்.

“ரவி சார் எங்களுக்கு கொஞ்சம் பிரியாணி வையிங்க எல்லாத்தையும் காலி பண்ணிடாதிங்க” என்ற ரம்யாவிடம். பார்கலாம் பார்கலாம் எனகூறிய வண்ணம் அவர்களின் வாகனத்தில் கிளம்ப ஆயத்தமானார்கள்.

ஸென் மேரிஸ் ரோடு அபிராமாபுரத்தில்  GROUND + 4 FLOORS அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. அங்கு தான் விழா. கலர் காகிதங்கள் வருக வருக என அனைவரையும் வரவேற்றன.

கட்டிட வேலை செய்யும் ஆட்கள் கூட்டமாக ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக சலசலப்பு பேச்சோடும் ஒரு சிலர்  இவர்களை பார்த்த வண்ணம். பிரியாணி வாசனை கட்டிடம் முழுவதுமாக விசிக் கொண்டு இருந்தது.

ஒரு வரிசையில் துணிகள் டேபிள் பக்கத்தில் அடையார் ஆனந்த பவன் ஸ்விட், காரம் கொண்ட கவர்கள் ஒரு புறம். புத்தம் புது 100ருபாய் கட்டுகள்முதலாளி  கோபால் வெள்ளை உடுப்பில் அமர்ந்து இருந்தார்இந்த சூழல் வெண்பாவை தன் குடும்ப நினைவுகளை நினைவுட்டியது.

தாத்தா  வீட்டில்தை பொங்கலை தொடர்ந்து வரும் மாட்டு பொங்கல், கானும் பொங்கல் என தொடர் விழா எத்தனை குதூகலமான நாட்கள். கடலில் வாழும்  மீன்கள் ஒவ்வொரு துளியையும் அனுபவித்து நீச்சல் அடிப்பது போல விட்டில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தாண்டவத்தில்.

ஆம்புர் சாய்பான் சாய்பு தெரு, பெயரே சொல்லும் முஸ்லிம் தோழர்கள்தான் நினைவுக்கு வரும். பெரும்பாலும் முஸ்லிம் தோழர்கள் வாழும் தெரு அது. அந்த தெருவில் நாயுடு வீடு என்றால் தெரியாதவர்கள் யாருமில்லை. தொடர்ந்து மூன்று வீடுகள் மட்டுமே தனித்து இருக்கும். ஓரே வண்ணம். ஓட்டு வீடு.

ஒவ்வொரு வீடும் இரண்டு பெருந்திண்ணைகள் கொண்டு இருக்கும். செம்மண் பூசின படிகள். மோட்டார் பைக் விட்டில் இருந்து வெளியே வர படிக்கட்டுகள் மத்தியில் அப்போதே சரக்கு மரம் போல் வழவழப்பான  தரை‌. தினமும் விதவிதமான கோலங்கள். லக்ஷ்மி கடாட்சம் வாசலை பார்த்தாலே தெரியும்.

தாத்தாவின் அப்பா கோபால் சாமி நாயுடு அம்மா பத்மாவதி அம்மாள். தாத்தா உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். பெரிய கூட்டு குடும்பம். முன்று பேர்களுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும் போது தான் தனிக்குடித்தனம் சென்றார்கள். அதுவரை கூட்டு குடும்பம் தான். அதன் பின்னும் பிள்ளை மருமகள் பேரன் பேத்தி என்று கூட்டு குடும்பமாக தான் வாழ்ந்து வந்தார்கள். பெரிய சமையல் அறை. பாத்திரங்கள் எல்லாம் பெரிய பெரிய டேக்ஸா. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை அவர்கள் பிள்ளைகள் என சிறும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் கூடினாலே விழா என்ற உணர்வு அளித்து விடும். இந்த மொத்த குடும்பமும் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் திருவிழா தான். முல்லை தோட்டம், தென்னந்தோப்பு வெண்பாவின்  பெரிய மாமா தான் பார்த்து கொள்வார். விடியற்காலை ஐந்து மணிக்கலகெல்லாம் மாமா குளித்து பளிச்சுனெ   இன்றைய பெங்களுர் அய்வேஸ் வரப்பு மேலா அமர்ந்து விடும் மாமா. அப்போது  தோல் தொழிற்சாலை அதிகமாக இல்லாத நேரம். நிலத்தில் தின கூலி வேலைக்கு வருபவர்கள்  தான் அதிகம். அதிலும் பெரிய மாமா என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.

பொங்கல் போது, வீதியில் 10 வீடுகள் சேர்த்து பந்தல் போட்டு லைட், சீரியல் பல்பு  என ஒரு வாரம் முன்னதாகவே போட்டு விடுவார்கள். பாத்திரங்கள் சாமான் அறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே எடுக்கப்படும். பிரியாணி டேக்ஸா, பெரிய  தாம்மாள தட்டு பளபளப்பாக தேய்த்து தயாரான நிலையில். கட்டை வைத்து கற்புரம் கொளுத்தி டேக்ஸா வைத்து மட்டன் பிரியாணி, மூட்டை, தயிர் பச்சடி, கத்திரிக்காய் தொக்கு 12 மணிக்கு தயாராகி விடும்

நிலத்தில் இருந்து அனைவரும் காலை பத்து மணிக்கே முதல் வரிசையில்  வரிசையாக வர ஆரம்பித்து விடுவார்கள். தாத்தா பெரிய மாமா தான் அன்றைய கதாநாயகர்கள். வரிசையாக இரண்டு பக்கமும் போட்ட  நாற்காலிகள் நிறைந்து விடும். குடும்பத்தோடு நிலத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம்  வரிசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க. மாமாதான் அன்று மேற்பார்வையாளர். அதனாலேயே வெட்கத்தோடு பெண்கள் சாப்பிடுவார்கள். “முதலாளி வராருடீ.”

மாமா,என்ன கனகா இன்னும் கொஞ்சம் கறி  வெச்சிக்கோ என சொல்ல. அவர்கள் வெட்கத்துடன் நானி கோனி முகம் சிவக்க வெட்கத்தோடு சாப்பிடும் அழகே தனி”. வெண்பா பெரிய மாமாவோடு அனைவருக்கும் உணவு பரிமாறுவாள். அவள் தான் பெரிய பேத்தி.

சென்னையில் கல்லூரியில் படித்து முடித்து இருக்கும் வெண்பாவிற்கு நிலம் என்றால் எத்தனை பெரிய சொத்து என தெரியாது. அவள் இலக்கு எல்லாம் கல்லூரி படித்து அலுவலகத்தில் வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும் என்பது தான்.

அனைத்து தொழிலாளிகள் சாப்பிடும் அதே நேரம் வீட்டினுள்ளே தாத்தாவின் தம்பி, தம்பி பெண்டாட்டி, அவர்கள் பிள்ளைகள்மாப்பிள்ளை மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என வீட்டில் பந்தி பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். சிரிப்பு சத்தம் காற்றை கிழித்து கொண்டு வெளியே வரும்.

சாப்பாடு முடிந்தவுடன் உடைகள் வழங்கும் வழக்கம். மாப்பிள்ளை பெண்ணுக்குதான்  முதல் மரியாதை. வரிசையாக மொத்த குடும்ப உறுப்பினர்களின் ஆடை வழங்கும் விழா முடியும்.

பின் நிலத்து தொழிலாளி, பட்டறையில் வேலை செய்யும் பணியாளர்கள் என வரிசையாக  150 பேர் ஆடைகள், தனியாக பணகவர் பெற்றுகொண்டு செல்வார்கள். மாலைவரை இந்த நிகழ்வு தொடரும். வருடந்தோறும்  இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

அந்த வருடம் தாத்தா அனைத்து வேலை முடிந்தவுடன் வெண்பாவிற்கு வரன் பார்த்து இருக்கிறேன் என ஆரம்பித்தார்.

தெரிந்த பையன் +2 படித்து IIT Diploma செய்து இருக்கிறார். நல்ல பையன் உன்னை கண் கலங்காமல் பார்த்து கொள்வார்கள் என ஆரம்பித்தார்.

திருமணம் என்ற பேச்சை கேட்டவுடன், வெண்பா, தாத்தா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்; என சினுங்க ஆரம்பித்தாள்.

“என் செல்லம் என தாத்தா வெண்பாவை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து கொண்டார்.” முதல் பேத்தி செல்ல பேத்தி வெண்பா. பெண், மருமகளிடம் இருக்கும் கரார் மனிதராக  நாயுடுவை பேத்தியிடம் பார்க்க முடியாது.

“ஏன்டா செல்லம் இப்போ கல்யாணம் பண்ணாமல் எப்போ செய்வது. நம்ம நிலம் இருக்கு, தொழில் இருக்கு இதை பார்த்து கொள்”.

“இல்லை தாத்தா, நான் காலேஜ் முடித்துவிட்டேன். கணினி பட்டயம் படித்து முடித்தவுடன்  கேம்பஸ் முலமாகவே வேலை கிடைத்து விடும். அலுவலகத்தில் வேலைக்கு போகனும்”. நான் சம்பாதிக்கணும் என்றாள். அதுமட்டுமல்ல குடும்பத்தில் கல்லூரி வாசப்படியில் முதல் காலை எடுத்து வைத்தவள் வெண்பா மட்டுமே. முதல் பட்டதாரி அவளின் லட்சியம் நன்கு படிக்க வேண்டும். படிக்க வேண்டும். 

“நீ ஏன்டா வேலைக்கு போகனும். நாமே பலருக்கு வேலை தரலாம்” என்றார் நாயுடு.

“இல்லை, தாத்தா நான்  வேலைக்குதான் போவேன். என் காலில் நான் நிக்க வேண்டும் என ஆடம் பிடித்தாள்”, வெண்பா.

குடும்பத்தில் அனைவருக்கும் ஒரு வித பயம் நாயுடுவிடம். ஆனால் தாத்தா பேத்தியிடம்  எப்போதும் சரண்டர்தான்.

தாத்தா, வெண்பாவின் குழந்தைதனம் மாறாத முகத்தை பார்த்துக்கொண்டே, சரிமா. உன்  இஷ்டம் என கூறிவிட்டார். குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அதன்பின் வெண்பா விருப்படியே இந்த வேலை கிடைத்தது. ஆனால் தாத்தா, திடிர் என ஒரு நாள் இயற்கை எய்தினார். அதன் பின் மாட்டு பொங்கல்விழா கனவானது.

மனகண்ணில் அன்று படிக்காத தாத்தா கொடுக்கும் இடத்தில் கம்பீரமாக முதலாளியாக அமர்ந்து இருந்தார், படித்த தன்னிடம் இல்லாதது படிக்காத தாத்தாவிடம்  என்ன இருந்தது? அந்த அனுபவ படிப்பை ஏன் இந்த ஏட்டு படிப்பு தரவில்லை அதனுடைய இடைவெளி எது? இதை ஏன் இத்தனை நாள் நாம் சிந்திக்கவில்லை என நினைத்த வண்ணம் அமர்ந்து இருந்தாள் வெண்பா. 

முதலாளி, “வெண்பா வாங்க மா” என அழைக்க நினைவுகள் கலைந்து, நிஜத்தில் விழித்து குடும்பத்தில் முதல் பட்டதாரி தொழிலாளி வெண்பா பொங்கல் கிஃப்ட் வாங்க எழுந்து சென்றாள்

வெளியே ஒலிபெருக்கியில் புதிய கல்விதிட்டம் பற்றி விவாதம் நடந்து கொண்டு இருந்தது.

இன்று இதுதான் மிகவும் பொருத்தம் – சில இடங்களில் சில மனிதர்கள் | நூல் விமர்சனம் | தோழர். ராமன்

இன்று இதுதான் மிகவும் பொருத்தம் – சில இடங்களில் சில மனிதர்கள் | நூல் விமர்சனம் | தோழர். ராமன்

இன்று இதுதான் மிகவும் பொருத்தம் . . . இன்று உலக புத்தக தினம்.  ஊரடங்கு காலத்தில் “சூல்” படித்த பின்பு முடித்த மூன்று புத்தகங்களில் எதைப் பற்றி இன்று எழுதலாம் என்று யோசித்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட…
விரலால் சிந்திப்பவர்கள் – புத்தக விமர்சனம் | கார்த்திக் குமார்

விரலால் சிந்திப்பவர்கள் – புத்தக விமர்சனம் | கார்த்திக் குமார்

#Bookday நெல்லை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம் விரலால் சிந்திப்பவர்கள். புத்தகம் பேசுது இதழில் தொடராக படித்திருந்தாலும் ஒரே புத்தகத்தில் பல எழுத்தாளர்களை பற்றி படிப்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு. பம்மல், சாவி, சி.சு.செல்லப்பா, நா.பா, ஆர்தர் கானன் டாயில், பாலோ…