Herman Melville Whale Hunting by Sa Devadas சா. தேவதாஸின் ஹெர்மன் மெல்வில்லின் திமிங்கில வேட்டை

ஹெர்மன் மெல்வில்லின் திமிங்கில வேட்டை – சா. தேவதாஸ்




சூரியன் என்னை அவமதித்தால் அதைத் தாக்குவேன் – ஹெர்மன் மெல்வில் இரண்டு வருடங்களுக்கு முன் (2019) இருநூறாவது பிறந்த நாள் கண்டு, இணைய தளங்களில் வரிசையாக விவாதங்களும் அடையாளங்ககாணங்களும் நிகழ்த்தப்பட்டுள்ள ஹெர்மன் மெல்வில் (1819 – 1891). இலக்கியத்திற்கு அளித்துள்ள கொடை மோபிடிக் (1851). இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலான பெரும் போரினை விவரிப்பது எனப் பொதுவாக வாசிக்கப்பட்டு வர, சூழலியல் பாதுகாப்பு குறித்தது எனத் தற்கால விமர்சகர்கள் அடையாளங்காண, அணுசக்தி அபாயத்தை உணர்த்துவது என ஓவியர் ஒருவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஏகாதிபத்திய / காலனிய சக்திகளுடனான போராட்டத்தைப் பேசுவது என்றொரு விவாதத்தையும் முன் வைக்க முடியும்.

காவிய / இதிகாச பரிமாணத்திலான நாவலைத் தந்துள்ள மெல்வில், 1891இல் இறந்தபோது, அவரது குடும்பத்தில் எஞ்சியிருந்த சிலரும் அவர்களுக்குப் பரிச்சயமான நபர்களுமே கலந்து கொண்டனர் இறுதி ஊர்வலத்தில். நியூயார்க் டைம்ஸ் இதழே ஒரு சில தினங்கள் கழித்தே அஞ்சலிக் குறிப்பை வெளியிட்டது – அதுவும் யாரோ ஒரு அனாமதேயத்திற்கு செய்தி வெளியிடுவதுபோல. ஏன்?

ஹெர்மன் மெல்வில் சிக்கலான ஆளுமை கொண்டிருந்ததுடன், பூர்வகுடி மக்களை மதமாற்ற முற்பட்ட கிறித்துவத்தினையும் அது துணைபோன காலனியத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தவர். அத்துடன் காவியத் தரத்திலான படைப்பை அளித்திருந்த அவரே, டாலர்களுக்காக எழுதவும் செய்தார்; அவரே அதனை குப்பை என நிந்திக்கவும் தயங்கவில்லை.

மெல்வில்லின் தந்தை வழி – தாய்வழி தாத்தாக்கள் இருவரும் ‘லாங்டன் தேநீர் விருந்து’ என்னும் அரசியல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போர்த் தளபதிகள். தந்தை ஆல்லன் மெல்வில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தரகு வணிகராக, பிரெஞ்சுப் பொருட்களை இறக்குமதி செய்பவராக இருந்தவர். ஆனால் ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டவர். நிறையக் கடன்களை விட்டுச் சென்றார். ஒரு கட்டத்தில் திவாலாகி விட்டு இறந்து போனார். அப்போது ஹெர்மனுக்கு வயது 12. பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, தாய் மற்றும் 7 சகோதர – சகோதரியர் கொண்ட பெரிய குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு – அவரது அண்ணனும் சீக்கிரமே இறந்து போவதால். 15 வயதில் ஒரு வங்கியில் பணி. அடுத்து அண்ணனின் வணிகத்தில் துணை நிற்றல், 17 வது வயதில் ஆசிரியர். பின்னர் கப்பல்களில் பணியாளராக இருந்து மாலுமியாக, திமிங்கில வேட்டையாளராக உயர்நது வருதல். 31 வது வயதில் தனது தலை சிறந்த நாவல் Hoby – Dickனை எழுதி விடுகிறார். அடுத்த 40 ஆண்டுகளில் அவர் மேலும் மேலும் எழுதினாலும், எழுதுவது ஒரு கடமையாக, டாலர்கள் சம்பாதிப்பதாக ஆகிவிட்டது. எனவே குப்பை கூளங்களையும் வெளியிட்டார்.

ஹெர்மனின் முதலாவது சிக்கல் தொடங்குவது அவரது தந்தையிடமிருந்து. அதியற்புதமான மனிதராகிய தந்தை, மிகத் தூய்மையும் மாட்சிமையும் கொண்டிருந்தவர், தவறே செய்ய மாட்டார். பொய்யே சொல்ல மாட்டார் என்று எண்ணியிருந்தார். ஆனால் அவரோ வியாபாரத்தில் திவாலாகி விட்டிருந்தார். பெரும் கடன் சுமையை விட்டுச் சென்றிருந்தார்.

அவர் வாழ்ந்த காலகட்டம் சார்ந்த சமூக – அரசியல் சூழல். குறிப்பாக பூர்வக்குடி மக்களை அவர் தம் வாழிடங்களிலிருந்து ஓரங்கட்டுவதும் அவர்களை கிறித்தவ மத மாற்றம் செய்வதுமாக இருந்த நிலை. கடற்பயணங்களில் பூர்வகுடி மக்களைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர்களைக் காட்டுமிராண்டிகளாக எண்ணியிருந்தது எத்தகைய தவறு என்று உணர்கிறார்.
Herman Melville Whale Hunting by Sa Devadas சா. தேவதாஸின் ஹெர்மன் மெல்வில்லின் திமிங்கில வேட்டைதன் எழுத்துக்கள் சீராக வரவேற்கப்படும், எழுத்தின் மூலம் வாழ்ந்து விடலாம் என்னும் அவரது கனவும் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போகின்றன. மோபி டிக்கே சரிவர கொண்டாடப்படாமல், விற்பனையாகாமல் இருந்து விடுகிறது. முதலில் Typee. Omoo நாவல்கள் நன்றாக விற்பனையாகி, சிறந்த பயண எழுத்தாளராகத் தொடங்கிய அவரது எழுத்துப் பயணம் சீரானதாக இல்லை. இதனால் சீரான வருவாயின் பொருட்டு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்கிறார். அதிலும் அவர் எதிர்பார்த்த Consul General பொறுப்பு கிட்டாமல், சுங்கத்துறை பணியாளராகி 19 ஆண்டுகள் நீடிக்கிறார். அடுத்து அவரது வாழ்வு என்ன என்பது, யாரும் அக்கறை கொள்ளாத காலமாக முடிந்தது.

நேரம் – காலம் பார்க்காமல் சதா எழுதிக் கொண்டே இருந்து, ஒரு கண்பார்வையிழக்கும் நிலைக்குப் போய் விடுகிறார். அறிவில் சமநிலையிழந்து அதீத எதிர்வினைகள் காட்டுகிறார். ஒரு பேத்தி, அவரது அறையில் நுழையவே பயந்திருக்கிறாள். மனைவி, அவருடன் வாழ்வது தன்னையும் பைத்தியமாக்கிவிடும் என்று பயந்திருக்கிறாள். ஒரு மகன் சந்தர்ப்பவசமாக துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போகிறான். இன்னொருவன் அமெரிக்க – மேற்குகில் காணாது போகிறான். ஒரு கொள்ளுப்பேரன் ஹெர்மனை அஞ்சத்தக்க நஞ்சு, நோய்த்தொற்று. என் முதுகில் ஏறியுள்ள குரங்கு என்கிறான். விவாகரத்து செய்து விடலாமா என்றும் யோசித்திருக்கிறாள் மனைவி. மெல்வில் சில காலம் பைத்திய நிலைக்குப் போயிருக்க வேண்டும் என்ற வதந்தி உண்டு. ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் என்னும் உளவியல் மருத்துவரிடம் ஆலோசித்திருக்கிறார்.

அவரது வளர்ச்சியுமே திடீர் வெடிப்பாக இருந்துள்ளதை அவரே குறிப்பிட்டிருக்கிறார்:
“எனது வளர்ச்சியெல்லாம் கடந்த சில ஆண்டுகளில்தான். மூவாயிரம் ஆண்டுகளாக விதைகளாகவே இருந்து விட்டவற்றிலிருந்து ஒரு வித்து எகிப்திய பிரமிட்களிலிருந்து எடுக்கப்பட்டு, ஆங்கிலேய மண்ணில் ஊன்றப்பட்டு வளர்ந்தது போலுள்ளது… 25 வயதாகும்வரை எனக்கு வளர்ச்சியே இல்லை…”
கப்பல் பணியாளராக கிளம்பிச் சென்றபோது, ‘இருதயத்தில் சாத்தானுடன்’, கடல் வாழ்வின் எதிர்பாராத சிரமங்களுக்குள் நுழைந்ததாகப் பதிவு செய்துள்ளார். கடல் பயண வாழ்வை நேசித்த அளவுக்கு வெறுக்கவும் நேர்ந்தது.

ஹெர்மனின் ஆளுமை உருவானவிதம் குறித்து, மோபிடிக்கினை எழுதும்போதான நிகழ்ச்சைப் போக்கை விவரிக்கையில், அவரே கோடிட்டுக் காட்டவும் செய்கிறார்:
இங்குமங்குமாக இழுத்தடிக்கப்படுகிறேன். டாலர்கள் என்னை வதைக்கின்றன; கேடு கெட்ட சாத்தான் என்னிடம் கைவரிசை காட்டுகிறது, கதவை ஒருக்களித்து வைக்கிறது. எனக்கொரு முன்னுணர்வு – சாதிக்காயைத் தரம் பிரிப்பவர் பிரித்துக் கொண்டே வந்து தேய்ந்து சாதிக்காய் வோல, துண்டு – துணுக்காகிப் போவது போல, முடிந்து போய் மடிந்து விடுவேன். எழுதி விட வேண்டும் என்று நான் உணர்வது விலக்கப்பட்டிருக்கிறது… வேறு விதமான எழுதுவது என்னால் ஆகாது.”

இன்னோரிடத்திலும் இதன் தொடர்ச்சி போல ஒரு குறிப்பு : “ஒரு கண்ணை மூடிக் கொண்டு, இன்னொன்றால் காகிதத்தைப் பார்க்கிறேன்… மாலை வேளைகளில் வாசிக்க முடியாமல், எனது அறையில் வசியம் செய்யப்பட்டவனாக இருக்கிறேன். என் கண்களிலுள்ள அந்திவேளை காரணமாக . ஆந்தை போல முழிக்கின்றேன்…”
அரைபாதிப் பார்வையுடன் அவர் எழுத அல்லாடியதும், சில வேளைகளில் நியூயார்க் வீதிகளில் மயங்கி விழுந்ததும் பற்றிய குறிப்புகள் உள்ளன. மெல்வில்லின் நெருங்கிய நண்பராயும் அபிமானத்திற்குரிய எழுத்தாளராவும் விளங்கிய ஹர்தோர்ன். மெல்வில் குறித்து எழுதுகிறார் :

“எஞ்சியுள்ள நீண்ட காலம் வறுமையிலும், ஆரோக்கியமின்மையிலும், ஆவேசமிக்க தருணங்களும் அவற்றைத் தொடர்ந்து நிசப்தமும் விரக்தியும். மாமனாரின் தாராளத்தால் உடனடிச் சிக்கல்களிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் அவர் தப்ப முடிந்தது. ஏழு மாதங்கள் தனியே சென்று விட்டார்… தன்னை அழித்துக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நிச்சயமான நம்பிக்கையை கைக் கொள்ளுமட்டும் அவர் ஓயப்போவதில்லை. எனக்குத் தெரிந்தமட்டில், இருண்டதும் சலிப்பேற்றுவதுமான இப்பாலைக்களில் இங்குமங்குமாகத் திரிந்து கொண்டிருக்கிறார். அவரால் நம்பவும் முடியவில்லை, நம்பிக்கையின்மையில் நீடிக்கவும் இயலவில்லை…”

II

இஸ்மாயில் என்னும் மாலுமியின் பார்வையில் சொல்லப்படும் மோபிடிக்கின் தலைவன் ஆஹப், பிரும்மாண்டமான திமிங்கிலம் மோபிடிக்கை தாக்கி அழிக்க முயன்று அழிந்து போகின்றான். பழைய ஏற்பாட்டின் மன்னன் ஆஹப்பாக பிரும்மாண்டத்துடன், எழுந்து நிற்கக் கூடியவன் அவன் இதிகாசப் பரிமாணமிக்க போராட்டத்தை முன் வைக்கும் இந்நாவலில், இஸ்மாயிலுக்கும் இன்னொரு பணியாளரும் பூர்வ குடியினத்தவனுமான க்வீவக்கிற்குமான நேசம், தன் பால் காமத்தின் சமிக்ஞைகளை உணர்த்தும்; ஹெர்மனுக்கு கருப்பினத்தவர் மீது அனுதாபம் உண்டு. வெள்ளைத் திமிங்கிலத்திற்கு எதிரான போராட்டம் என்பதில் வெள்ளையரின் அகம்பாவம் / திமிருக்கு எதிரான குரலும் அடங்கியிருக்கும்.

“கேடுகெட்ட திமிங்கிலமே, நரகத்தின் இருதயத்திலிருந்து உன்னை நான் குத்துகிறேன், வெறுப்பால் என் இறுதிச் சுவாசத்தை உன் மீது உமிழ்கிறேன்.” ஹெர்மன் தன் நாவலை தொகுத்துரைக்கும் போது, “ சாம்பல் நிறத் தலையுடன் கடவுளை ஒத்திராத கிழவன், துரோகிகளும் தூக்கி எறியப்பட்டவர்களும் காட்டுமிராண்டிகளுமான பணியாளர்களுக்குத் தலைவனாக, சாபங்கள் சேர்ந்த திமிங்கிலத்தைத் துரத்தி வருகிறான் உலகமெங்கும்” என்கிறார்.

மோபிடிக்கை நெருங்கிவிடும் பாதையைத் தேடி, இரவு பகலாக உலகின் கடல்களது வரைபடங்களைத் துருவி ஆராய்கின்றான் ஆஹப். தெற்கு அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஜப்பானியக்கடல் ஆகியவற்றினூடே விடாப்பிடியாக பயணிக்கிறான். திமிங்கிலங்களை கொன்று கூறுபோட்டு எண்ணெய் எடுக்கிறான். மூர்க்கமான புயல்களைச் சந்திக்கிறான். மாபெரும் வெண் திமிங்கிலம் தென்பட்டதும் கூர்ஈட்டிகள் எறியப்படுகின்றன. சீற்றமிகு அம்மிருகம் ஆஹப்பின் படகினை நாசமாக்கி விடுகிறது. அடுத்த நாளும் தப்பி விடுகிறது. மூன்றாம்நாள் ஆஹப் பேமாபிடின் மீது கூர்ஈட்டியைப் பாய்ச்சுகிறான். மோபிடிக் ஆஹப்பின் படகினை சுழற்றியடிக்கிறது; ஆஹப் இன்னொரு கூர் ஈட்டியைப் பாய்ச்சும் போது, படகின் கயிறு அவனது கழுத்தைச் சுற்றி கடலுக்குள் இழுத்துப்போட, மோபிடிக், இஸ்மாயில் தவிர்த்த பணியாளர்களையும் அவர்களது படகினையும் பழி தீர்த்து அழிக்க, இஸ்மாயில் தப்புகிறான் – கதையை நமக்கு விவரிக்க.

மோபிடிக் நாவலுக்கு அடிப்படையாக இருந்தது அது போன்றதொரு நிகழ்வு. 1820 இல் தென் அமெரிக்காவுக்கு 2000 கடல் மைல் தொலைவில் பெரியதொரு திமிங்கில வேட்டைக்கு சென்ற ஓவன் சேஸின் படகு, அத்திமிங்கலத்தால் மூழ்கடிகப்பட்டது. அதன் பிறகும் இரு கப்பல் பயணங்களில் 6 கேட்னாக விளங்கிய சேஸ், தன் கடல் அனுபவங்களின் பீடிப்பால் வதைபட்டு, மனநல இல்லத்தில் 8 ஆண்டுகளைக் கழித்தார். சேஸின் 1820 ஆம் ஆண்டுப் பதிவு Narrative of the most Extraordinary shipwreck of the whate-ship Essex, மெல்வில்லைப் பெரிதும் பாதித்துள்ளது. அத்துடன் அவரது கடல் வாழ்வு அனுபவங்களும் சேர்ந்து மோபிடிக் பிறக்க காரணமாயுள்ளது. மோபிடிக்கை எழுதிக் கொண்டிருந்தபோது, எனக்கு கழுகின் இறகினைத்தாருங்கள் மைக் கூடாக வெஸுவியஸின் எரிமலைவாயைத் தாருங்கள் ” என்று அவர் கோரியது நியாயமே.

III

இயற்கைக்கு எதிரான மனிதனின் போராட்டம் என்ற வாசிப்பை நீண்ட காலமாக இருந்து வர, ஆ ரோன் சாசஸ் என்னும் பேராசிரியர், மோபிடிக் ‘மிகவும் உதவிகரமான சூழலியல் கையேடு’ என்கிறார். சுற்றுச் சூழலின் மாற்றத்தின் மிரட்டலை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைய வேண்டியதை வற்புறுத்துகிறது என்கிறார். மங்கிய லாந்தர் வெளிச்சத்தில் விரக்தியின் மத்தியில், நம்பிகையின்றி நம்பிக்கையைக் கொண்டிருத்தலுக்கு சமிக்ஞை செய்கிறான் க்வீவக் என்ற திமிங்கில வேட்டைக்காரன். அதுவரை ஒன்றிணையாது துயரங்கொண்டிருந்த மாலுமிகள் கப்பலில் ஏறிய மாத்திரத்தில், அபாயங்களை மனதில் நிறுத்தியும் ஒற்றைக் குறிக்கோளில் ஒருமைப்பட்டும, ஒன்றாக பிணைக்கப்பட்டு விடுகின்றனர். இந்த ஒருமைப்பாடும் பரஸ்பரத் தொடர்பு நிலையும் தான் இன்றைய தேவை.

அறநெறியற்ற புறச்சமயத்தினன் எனப்பலரால் ஒதுக்கித் தள்ளப்படும் க்வீவக், ‘காட்டு மிராண்டிகளாகயி நாம் கிறித்தவர்களுக்கு உதவியாக வேண்டும்’ என்கிறான். அறநெறி சார்ந்து நிற்கும் ஒரே பாத்திரம் அவன்தான் என்று ஆரோன் வற்புறுத்துகிறார்.

நாவலின் இறுதிப் போராட்டத்தில் இஸ்மாயில் தவிர அனைத்து மாலுமியரும் தம் படகுடன் மூழ்கிப் போகின்றனர். இஸ்மாயில் தப்புவது கூட, க்வீவக் தனக்கென உருவாக்கியிருந்த சவப்பெட்டியைப் பயன்படுத்தி. க்வீவக்கிடம் நாகரிகமடைந்த போலித்தனங்களில்லை, மொண்ணையான முனைப்புகளில்லை. மறுதலித்தலில்லை. பீதியின் மத்தியில் இருத்தலியல் தீர்மானத்துடன் இருப்பது. தியாகம் செய்யத் தயாராக இருப்பது, முன்னுணர்வது என்னும் க்வீவக்கின் அம்சங்கள் உத்வேகமூட்டுபவை.

ஆதலின் சூழலியல் மாற்றத்தை எதிர் கொள்ள, பரஸ்பரச் சார்பினை, பொதுத் தன்மையை ஒத்துக் கொண்டு, பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மெல்வில்லுக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து வாழ்ந்த அமெரிக்க ஓவியர் கில்பர்ட் ப்ரவுன் வில்சன் (1907-91). மோபிடிக்கால் உத்வேகம் மிகுந்து, 200 ஒவியங்களை வண்ணத்திலும் கோட்டோவியங்களிலுமாக தீட்டினார். அவருக்கு மோபிடிக், அணு ஆற்றலின் உருவகமாகத் தெரிந்தது. அணு அபாயத்திலிருந்து விடுபட வேண்டியதன் அவசியம் மெல்வில்லின் பிரதியில் பொதிந்துள்ளது என்றார்.
Herman Melville Whale Hunting by Sa Devadas சா. தேவதாஸின் ஹெர்மன் மெல்வில்லின் திமிங்கில வேட்டைகாலனிய எதிர்ப்பையும் கிறித்தவ மத மாற்ற எத்தனைத்தையும் அம்பலப்படுத்துபவை என மெல்வில்லின் Typee. Omoo Moby-Dick ஆகிய நாவல்களைக் கூற முடியும். பிரெஞ்சுக் காலனியாதிக்கம் செய்த நாசங்களைப் பற்றி Typee நாவலில் மெல்வில் விளாசுகிறார்.

“பிரெங்சுக்காரர்கள் அப்போது மார்க்யூசா தீவுகளைக் கைப்பற்றி… சீர்திருத்தங்களுக்கான முயற்சியில் 150 பேரைக் கொன்றிருந்தனர் என்பது உறுதி.. ஐரோப்பியர்களுடனான சமீபத்திய வர்த்தகத் தொடர்பால் அம்மக்கள் ஒருவகையில் மோசமாகியிருந்தனர். எனினும் அவர்களது பொது வாழ்க்கை முறையில் தமது புராதனப் பண்பைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். அந்நியருடன் தொடர்பில்லாத தொலைதூரத்து இனக் குழுக்கள், ஒவ்வொரு அம்சத்திலும் மாறாதிருந்தனர். ஐரோப்பியர் புறச் சமயத்தினரையும் நாகரிக மற்றவரையும் கண்டறிந்தனர். தமது கொடூரங்களால் அவர்களை மிருக இயல்பினராக்கினர். பாலினீசிரியரின் அட்டூழியங்களுக்கு காரணமாக இருந்தவர் ஐயேராப்பியரே.”

கிறித்தவ மதமாற்றம் நிகழ்ந்தபின் விளைந்தது என்ன? தொடர்ந்து மெல்வில் ஆவேசத்துடன் எழுதுகிறார் : “பாலினீசிய தீவுகளில் சிலைகள் தூக்கியெறியப்பட்டு, கோயில்கள் நொறுக்கப்பட்டு, சிலை வழிபாட்டாளர்கள் கிறித்தவர்களாக மாற்றப்பட்டவுடனேயே, நோய், தீமை, அகால மரணம் வந்து விடுகின்றன. மக்கள் தொகை குறைந்ததும் அறிவு விளக்ம் பெற்ற கூட்டத்தினர் குடியேறுகின்றனர். உண்மையின் முன்னேற்றத்தைப் பறை சாற்றுகின்றனர். சுத்தமான வீடுகள், கத்தரித்து விடப்பட்ட தோட்டங்கள், புல்வெளிகள், ஸ்தூபிகள், கோபுரங்கள் உயர்கின்றன. ஏழைக் காட்டுமிராண்டி தன் சொந்த மண்ணிலேயே தான் பிறந்த குடிசையிலேயே தன்னை அந்நியமானவனாக உணர்கிறான். கடவுள் தன் மக்களுக்கென உண்டாக்கின பூமியின் தன்னெழுச்சியான வளங்கள், பட்டினி கிடக்கும் அவர்கள் கண்ணெதிரிலேயே புதியவர்களால் அபகரிக்கப்பட்டு, விழுங்கப்படுகின்றன / கப்பலில் அனுப்பப்படுகின்றன.”

IV

மெல்வில்லின் ஆளுமை சார்ந்த ஒரு சிக்கல். தன்பால் காமம். மாலுமிகளின் வாழ்வில் இது பரவலான அம்சம்தான். சில ஆண்டுகள் கடல் வாழ்விலும் பெரும்பகுதியை நிலவாழ்விலும் கழிக்க நேர்ந்த அவர், தனது உணர்வோட்டத்தை ரகசியமாகவே வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

மோபிடிக்கின் இஸ்மாயில்-க்வீவக் உறவு நிலையிலும் பில்லிபட்டின் பில்லிபட்டுக்கும் க்ளாக்கார்டுக்குமிடையிலான உறவு நிலையிலும் தன் பால் காம உணர்வுகளை சூசகமாக உணர்த்திவிடும் மெல்வில், தன் வாழ்வில் இன்னும் ரகசியம் காக்க வேண்டியிருந்தது. குறிப்பாக நத்தானியல் ஹாதோர்னுடனான தனது நட்பில். மோபிடிக்கை ஹாதேர்னுக்கு சமர்ப்பணம் செய்து, அவர் எழுதியவரிகள் ததும்பி வழியும் நட்பில், தன்பால் காமத்தின் சாயைகளைக் கண்டு விடலாம். ஹாதோர்னின் நட்பு கிடைக்கப் பெற்றதும் அது அபூர்வமானது என்றுணர்கிறார் மெல்வில் :

“என் ஆன்மாவில் முளைவிடும் வித்துக்களை ஹாதோர்ன் ஊன்றியுள்ளார் என்றுணர்கிறன். அவரைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கும் அளவுக்கு அவர் விரிவடைகிறார், ஆழம் கொள்கிறார்; இன்னும் சொல்வதாயின், தனது நியூ இங்கிலண்ட்டின் வலுவான வேர்களை எனது தெற்கத்திய ஆன்மாவின் கதகதப்பான மண்ணில் ஊன்றுகிறார்.”

ஹாதோர்னுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “ உங்களிதயம் என் விலா எலும்புகளிலும் எனது இதயம் உங்கள் விலா எலும்புகளிலும் துடிக்கின்றது. இருவரின் இதயங்களும் கடவுளின் விலா எலும்புகளில் துடிக்கின்றன…. தெய்வீக காந்தம் உங்களிடம் இருக்க, என்னுடைய காந்தம் எதிர்வினை புரிகிறது ” என்றெழுதுகிறார்.
ஹாதோர்னும் ஒருவித சிக்கலான ஆளுமை கொண்டிருந்தவர். அவருக்கு இங்கிலாந்தின் லிவர்பூலில் வேலை கிடைத்துப் போய்விடுகிறார். மெல்வில்லின் ததும்பி வழியும் உணர்வோட்டம் நின்று போகிறது.

31 வயதான மெல்வில், 46 வயதாயிருந்த நத்தானியல் ஹாதோர்னை சந்தித்ததும் ஈர்ப்புக் கொண்டதில் வியப்பில்லை. பைரனை விடவும் வசீகரமானவராகக் கொண்டாடப்பட்ட ஹாதோர்ன் புகழ்பெற்ற எழுத்தாளரும் கூட.

V

மெல்வில் தனது இறுதி காலத்தில் (1850களில்) கவிதையில் ஆர்வம் காட்டினார். தனது நாவல்கள் தோற்றுவிட்டதால் கவிதையின் பக்கம் திரும்பினாரா ! வாழ்வினை ஒரு செறிவான வாசமாகச் சொல்லிவிடுவது கவிதையில் சாத்தியம் என்பதால் ; புதிய பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும் என்பதால் ; தனது அலைந்து திரிதலில் ஒரு நிதானத்தை எட்டியிருந்ததாக அவர் எண்ணியிருந்து, கவிதை எழுதிப் பார்த்திருக்க வேண்டும் என்கிறார் ஆல்ஃபிரட் காஸின்.
ஹாதோர்னுடனான சந்திப்பையும் நட்பையும் ஒரு கவிதையாக்கியுள்ளார்.

‘அவரை அறிந்திருப்பதும் நேசித்திருப்பதும்
நீண்ட தனிமைக்குப் பின்னர்;
அப்புறம் வாழ்வில் விலகி இருப்பதும்,
எதுவும் தவறில்லை;
இப்போது மூடிமுத்திரையிட்டுள்ளது மரணம் –
என் பாடலே இதப்படுத்து என்னை, சற்று கிதப்படுத்து ’

ஹதோர்ன் மீதான மெல்வில்லின் ஈர்ப்பினை அறிந்திருந்த W.H. ஆடன் ஹதோர்னின் காமம் சுயநலமிக்கதாயிருந்ததால், வெட்கம் கொண்டிருந்தார்’ என்கிறார். தத்துவார்த்த நோக்கம் மெல்வில் கவிதைகளில் மிகுந்திருந்தது.

மெல்வில் உரைநடை எழுத்தை நிறுத்தியதும், கவிதை வாசிப்பதையும் எழுதுவதையும் மேற்கொண்டார். இது அவரது தூய்மையான அபிலாஷைகளுக்கும் அப்பாலைத் தத்துவப் போக்குக்கும் பொருந்துவதாயிருந்தது என்கிறார் ஜான் அப்டைக். 3 கவிதைத் தொகுதிகளை தானே வெளியிட்டார்.

VI

கடலின் மாபெரும் ஞானியும் கவியும் மெல்வில் என்று கொண்டாடுகிறார் டி.எச்.லாரன்ஸ்… அவர் பைத்தியமும் இல்லை, வெறியும் கொள்ளவில்லை, எல்லையில் இருந்தார் என நாசூக்காகக் குறிப்பிடுகிறார்.

‘கச்சிதமான பெண் காதலராயிருந்து பின்னர் கச்சிதமான ஆண் காதலரைத் தேடியவர் அவர். முழுமையான உறவுகள் நிலவ முடியாது. ஒவ்வொரு ஆன்மாவும் தனித்திருப்பது, ஒவ்வொரு ஆன்மாவின் தனிமையும் இரு உயிரிகளுக்கிடையிலான முழுமையான உறவுக்கு இரட்டைத் தடையாக இருக்கிறது…. மெல்வில் ஒரே சமயத்தில் மர்மமமானவர். லட்சியவாதி.’ என்று மதிப்பீடு செய்துவிட்டு, தானும் லட்சியவாதியாக மர்மமானவராக இருக்கக் கூடும் என்பார் லாரன்ஸ்.

மோபிடிக்கின் வெண்மை நிறம் குறித்த அத்தியாயத்தில் மோபிடிக் ஓர் அடையாளம் என்பதாக இஸ்மாயில் விவரிக்கின்றான்: “பால்வீதியின் வெண்ணிற ஆழங்களைக் கண்டு கொண்டே, தனது நிச்சயமற்ற தன்மையின் மூலம், பிரபஞ்சத்தின் இருதயமற்ற வெறுமைகளையும் பிரும்மாண்டங்களையும் நிழலாடச் செய்து, அழித்தொழிப்பு என்னும் எண்ணத்துடன், பின்னிருந்து நம்மைத் தாக்குகிறதா? அல்லது சாராம்சத்தில் வெண்மை என்பது புலப்படுகின்ற வண்ணமின்மை என்றளவுக்கு ஒரு வண்ணமில்லை; அதே வேளையில் அனைத்து வண்ணங்களினதும் சேர்மானம் – இக்காரணங்களால் பனி நிரம்பிய பரந்த நிலவியலில் அர்த்தம் நிரம்பிய இத்தகு ஊமை வெறுமை – நிறமற்ற, நாத்திகத்தின் அனைத்து நிறங்களிலிருந்து நாம் சுருங்கிக் கொள்வதில் இருக்கின்றதா? ”
நிச்சயம் இவ்வரிகளை எழுதியவர் சாதாரண நாவலாசிரியனில்லை.
Herman Melville Whale Hunting by Sa Devadas சா. தேவதாஸின் ஹெர்மன் மெல்வில்லின் திமிங்கில வேட்டைமுறையான படிப்பின்றி, அத்தனை சிக்கல்களையும் குழப்பங்களையும் தன் குடும்பத்திலிருந்தும் தன் சமூகத்திலிருந்தும் பெற்று, ஆளுமையில் அவற்றின் தடங்கள் பதிந்து செல்ல, எழுத்து என்றால் வெறி கொண்டு இயங்குவதும், எழுத்து எந்த வெகுமதியையும் தன் ஆயுள்காலத்தில் தராத போதும், சேக்ஸ்பியரின் காவிய பாத்திரங்களுக்கு இணையாக ஆஹப், பில்லிபட், Bartleby, The serivener இன் எழுத்தரையும் படைத்திருப்பவர்.

பைபிளிலிருந்து சேக்ஸ்பியரிலிருந்து உத்வேகம் கொண்டும், கடல் வாழ்வில் உரம் கொண்டும் வாழ்வின் புதிருக்கு / மனிதன் என்ற புதிருக்கு விடை காண முற்பட்ட அவர் ஒரு புதிராக ஆனால் காலந்தோறும் அப்புதிரை விடுவித்திடும் கடவுச் சொற்களைப் பொதிந்துள்ள நூல்களை விட்டுச் சென்றிருப்பவர்.

ஆதாரங்கள்:
1. Melville – A collection of critical Essays / Eol by Richand Chase, 1962
2. The melville’s mystery / John updike / Span – April 1983
3. Herman Melville ‘s passionate, Beautiful, Heartbneaking Love Letters to Nathancil Hawth orne / Maria popuva
4. Melville is dwelling somewhere in Newyork – An American procession / Alfred Kazin / Alfred Knoff , N.Y., 1984
5. Shorter Novels of Herman Melville – with an Introdution by Raymond weaver / Grosset ‘s universal library, Newyork, 28
6. One of the Strangest and most wonderful books in the world : Hoby Dick or the whale (1851) / Stephen carver / wordsworth – editions. Com
7. The meanings of meaning / Reevi vyas / The Hindu – March 6, 1994
8. The Lessons Hoby – Dick has for a warming world of rising waters / Aaron sachs / the conversation.com
9. புதிர்களை விடுவித்தல் / சா. தேவதாஸ் / வம்சி, 2010