நூல் அறிமுகம்: உதயசங்கரின் “மாரி என்னும் குட்டிப் பையன்” – சரிதா ஜோ

நூல் அறிமுகம்: உதயசங்கரின் “மாரி என்னும் குட்டிப் பையன்” – சரிதா ஜோ




நூல் : மாரி என்னும் குட்டிப் பையன் 
ஆசிரியர் : உதயசங்கர்
விலை : ரூ.₹65
பக்கங்கள் : 64
வகைமை : சிறார் நாவல்
வெளியீடு : அறிவியல் வெளியீடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

தமிழ் சிறார் இலக்கியத்தில் என்றுமே முன்னோடியாக இருப்பது அழ. வள்ளியப்பா. 1950 களில் அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னெடுப்பு தமிழ் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒன்று. இடையில் சிறார் இலக்கியம் சிறு தொய்வு கொண்டு இருந்தது.

2010க்கு மேல் சிறார் இலக்கியம் மீண்டும் சிறகடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்கள் சிறார்களுக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எனது ஆசான் எழுத்தாளர் உதயசங்கர் நவீன சிறார் இலக்கியத்தின் முன்னோடி என்று கூறுவேன்.

குழந்தைகளுக்காக தொடர்ந்து புதிய வகை மையை அறிமுகப்படுத்துவதில் அதீத ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் படித்த சோசோவின் வாழ்க்கை அதற்கு ஒரு முன்னுதாரணம்.

அடுத்த படைப்பான மாரியெனும் குட்டி பையனில் அவர் என்னுரையில் கூறியிருப்பது போல சிறார் கதைகளில் எதார்த்தமான கதைகள் மிக குறைவு. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த மாரியெனும் குட்டி பையன் அமைந்திருக்கிறது. எந்தக் குழந்தைக்கும் அம்மாதான் பிடித்தமான ஒருவராக இருக்கிறார். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு.

மாரி சிறு பையன் அவனுக்கு எதைப் பார்த்தாலும் பயம்.
இருட்டை பார்த்துப் பயப்படுகிறான். பல்லியைப் பார்த்து பயப்படுகிறான். தேளைப் பார்த்துப் பயப்படுகிறான். அம்மா அருகில் இல்லை என்றால் இன்னும் அதிக பயம்.

அவனுக்கு தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆசை .
பலசாலியாக இருக்க வேண்டும் என்று ஆசை .
ஆனால் அதெல்லாம் எப்படி நடக்கும் என்ற கேள்வி .
பொதுவாகவே சிறுவயதில் ஒவ்வொரு குழந்தையும் யாராவது ஒருவருடைய கவனம் தன்மீது இருக்க வேண்டும் அவர்களுடைய கவனத்தை தன் பால் இருக்க வேண்டும் என்று அதீத ஆர்வம் இருக்கும்.

நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் பொழுது ஏதாவது ஒரு இடத்தில் அங்கீகாரம் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த கதையிலும் அப்படியான ஒரு குழந்தையாகத்தான் மாரி இருக்கிறான்.

குழந்தைகளுக்கு கல்வி மீது ஆர்வம் ஏற்பட ஆசிரியர் மிக முக்கிய காரணமாக இருக்கிறார். மாரிக்கு கோமு டீச்சரை அவ்வளவு பிடிக்கும். யாரையும் அதட்ட மாட்டார். அடிக்க மாட்டார். சத்தம் போடாமல் படிங்க என்று அவருக்கு கேட்காத குரலில் சொல்லும் அளவிற்கான மென்மையான ஆசிரியர். அந்த டீச்சர் மீது எப்பொழுதுமே மாரிக்கு அதிக அன்பு.

கோமு டீச்சர் வராத நாட்களில் ராமலட்சுமி டீச்சர் வருவார். ராமலட்சுமி டீச்சர் கோமு டீச்சருக்கு நேர் எதிர்.

கோமு டீச்சரின் இறப்பு மாரிக்கு ஏராளமான கேள்விகளைக் கொடுக்கிறது. இறப்பு என்றால் என்ன? இறந்த பின்பு எங்கு செல்வார்கள்? மேலே செல்வார்கள் என்றால் எப்படி செல்வார்கள்? பறந்து செல்வார்களா? அங்கு சென்று என்ன செய்வார்கள்? இப்படியான கேள்விகளை தன் நண்பரிடம் கேட்கிறான் அன்றிரவு கோமு டீச்சர் கனவில் வருகிறார். கோமு டீச்சரோடு இவனும் பறந்து செல்கிறான்.

பள்ளியில் ஒரு முறை வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மாரி உனக்கு இப்பொழுது தானே இனிப்பு கொடுத்தேன் என்று இனிப்பு வழங்காமலேயே ஆசிரியர் மாரியை அனுப்பி விடுகிறார். வீட்டுக்கு வந்த மாரி தன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் இது பற்றி பேசி ஒரு இனிப்பு பொட்டலத்தை வாங்கி கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் அந்த இனிப்பு வாங்கிக் கொடுப்பதைத் தாண்டி தன் குழந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய போகும் ஒரு அம்மாவாக எத்தனை அம்மாக்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்? அந்த நேரத்தில் தவிர்க்கப்படும் பொழுது அந்த குழந்தையின் மனநிலை என்ன ஆகிறது?
இதைத்தான் யோசிக்க வைக்கிறது இந்த இடம்.

மீண்டும் இனிப்பு கைக்கு வந்த பிறகு கூட அந்தக் குழந்தை அந்த இனிப்பை தொடவில்லை.
ஒரு அவமானம் ஒரு அவமதிப்பு ஒரு குழந்தையின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதைவிட எப்படிச் சொல்லிவிட முடியும்.

மாரிக்கு கதை கேட்பதென்றால் கொள்ளை பிரியம் அம்மா அடிக்கடி கதைகள் கூறுவர்.

அம்மா புத்தகம் வாசிக்கும்போது அம்மாவின் முகத்தை கவனிப்பான் மாரி. அம்மாவின் முகம் சில நேரங்களில் சிரிக்கும் யோசிக்கும் வியக்கும் அப்பொழுதெல்லாம் அந்த புத்தகத்திற்குள் அப்படி என்னதான் இருக்கிறது. அம்மா இவ்வளவு நேரம் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்து பார்க்க் தோன்றும் மாரிக்கு.

அப்படி ஒரு முறை எடுத்து பார்க்கும்பொழுது அந்த புத்தகத்தில் இருந்த கதையின் தலைப்பு வீட்டின் மூலையில் சமையலறை _ அம்பை என்று எழுதியிருந்தது. அந்த புத்தகத்தில் படங்களை இல்லை மாரிக்கு ஆச்சரியம். படங்களே இல்லாமல் ஒரு புத்தகம் எப்படி வாசிக்க முடியும்? வெறும் எழுத்துக்களாக இருக்கிறது என்று பார்த்தான்.

அதன் பிறகுதான் தன்னுடைய குழந்தை மாரிக்கு அவனுடைய அம்மா புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார். தனது மடியில் அமர வைத்துக்கொண்டு ஆலிஸின் அற்புத உலகத்தை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார். அந்தக் குழந்தைக்கு ஒரு புது உலகத்தைக் கொடுக்கிறார். எவ்வளவு அருமையான அம்மாவாக இருக்கிறார்.

மாரியின் அம்மா மட்டுமல்ல மாரியின் நண்பன் கதிரேசனும் கதைகள் கூறுவான். ஆனால் பேய் இல்லாமல் அவன் கதைகள் கூறியதில்லை. முதலிலேயே பயத்தை அதிகமாக தன் மனதில் அப்பிக் கொண்டிருக்கும் மாரிக்கு இவன் கூறும் கதைகள் இன்னும் பயத்தை அதிகப்படுத்தின.

இருட்டில் செல்லும் போதெல்லாம் அம்மாவின் கைகளை பற்றி கொள்வான் அம்மா எவ்வளவோ தைரியப்படுத்துவார். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அந்த இருட்டின் முன் நின்று கேள் என்பார்.

அம்மா என் எல்லாமுமாக இருக்கிறார். என்று அடிக்கடி எண்ணிக் கொள்ளும் ஒரு சிறுவனாக மாரி இருந்தான்.

ஒரு நாள் மாரியும் நண்பர்களும் சேர்ந்து நாடகம் போட தயாரானார்கள் ‌ அப்பொழுது மாரிக்கு தான் கதை எழுதும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.
அதுவரை ஆயிரம் கதைகள் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தன கேட்டவுடன் அத்தனை கதைகளும் சிறகு முளைத்து பறந்து விட்டன.

மாரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த நாள் மாலை அனைவரும் இந்த கதை என்று கேடட்டார்கள். அந்த நிமிடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா கூறிய கதை மனதில் தோன்றியது. அந்தக் கதையைக் கூற அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் ஆதிமூலம் மாமா அங்கே வர அவரிடம் இந்த கதையை கூற மாரி நீ பெரிய ஆளுதாண்டா என்று கூறினார். அவருடைய வார்த்தை மாறிய என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மாரி தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதினான்.
எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையில் விடாமுயற்சியாக நாடகத்தை நடத்தி முடித்தார்கள்.

சின்னச் சின்ன நிகழ்வுகள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நாடகம் நடப்பதற்காக குழந்தைகள் செய்கின்ற மெனக்கடல்களை அவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார்.

யார் வந்தாலும் வராவிட்டாலும் மழை பெய்தாலும் நடத்திய தீருவது என்ற அவர்களுடைய அந்த பிடிவாதம் நிறைய இடங்களில் என்னுடைய சிறுவயதை ஞாபகப்படுத்தி இருக்கிறது. நான் எப்பொழுதுமே பிடிவாதத்தைப் பிடித்த பிடிவாதக்காரி.

நான் சிறுவயதாக இருக்கும் போது ஒரு முறை கூட்டாஞ்சோறு செய்து கொண்டிருக்கும் பொழுது மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழைக்கும் இடையேகூட நாங்கள் அவ்வளவு பேரும் சுத்தி நின்று அடுப்பு எரிவதற்காக பாதி வெந்தும் வேகாமலும் இருந்த அந்த கூட்டாஞ்சோற்றை ஆக்கி முடித்து கைகளில் வாங்கி சாப்பிடும் பொழுது இருந்த ருசி என்றுமே நாவில் நின்று கொண்டிருக்கிறது. இன்று வரை எவ்வளவு ருசியான பண்டங்களை சாப்பிட்டாலும் அந்த ருசிக்கு ஈடாகாது.

இந்த நினைவுகளை தான் நாம் இன்றைய காலகட்ட குழந்தைகளுக்கு கொடுக்க தவறுகிறோமோ என்று ஏராளமான இடங்களில் இந்த புத்தகம் தலையில் கொட்டிக் கொண்டே செல்கிறது.

குழந்தைகளுடைய உலகை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்ய வேண்டும். நாம் வாழ்ந்த வாழ்க்கையில் சிறுவயதில் எத்தனை நினைவுகளை மனது தாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த நினைவுகள் இருக்கும் பிற்காலத்தில் செல்போனையும் டிவியையும் தவிர.
குழந்தைகள் மனதில் ஏராளமான நினைவுகள் மலர அவர்களுடைய பால்யத்தை அவர்களிடம் ஒப்படைப்போம். அவர்களோடு சேர்ந்து கைகோர்ப்போம்.

இந்தக் கதை மாரி தன் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய மதிப்பையும் காட்டுகிறது.

கதையின் தொடக்கத்தில் ஓரிடத்தில் முடிவுகள் எடுப்பதில் நான் கில்லாடி என்ற ஒரு வரி வருகிறது. மாரி தன்னைத்தானே கூறி கொள்வது போன்று உண்மை சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையும் தான் எடுக்கும் முடிவின் மீது அவ்வளவு அதிக நம்பிக்கை கொண்டிருக்கும். இந்த முடிவுகள் எந்த இடத்தில் தகர்க்கப்படுகிறது. எனக்கு சரியாக முடிவு எடுக்கத் தெரியவில்லை என்று தோன்றும் அளவிற்கு எந்த இடம் அவர்களை இட்டுச் செல்கிறது? யோசிப்போம்.

அவர்களுடைய முடிவுகளை அவர்கள் எடுக்கும் சுதந்திரத்தை பெரும்பாலான நேரங்களில் கொடுக்க தவறிவிடுகிறோம். முடிவெடுக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுப்போம் அன்போடு.

முடிவெடுக்கும் ஒரு சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுப்போம். அது பதின் பருவத்திலும் இருக்கலாம்.
குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் ரசிப்போம் கொண்டாடுவோம்.
வாசிக்க வேண்டிய புத்தகம்.
மாரி எனும் குட்டி பையனின் கதை.

நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் கதை.

– சரிதா ஜோ

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: முற்போக்கு இலக்கியத்தின் அடையாள முத்திரை  மேலாண்மை பொன்னுச்சாமி – உதயசங்கர்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: முற்போக்கு இலக்கியத்தின் அடையாள முத்திரை மேலாண்மை பொன்னுச்சாமி – உதயசங்கர்




“காலத்தின் மனசாட்சிதான் நல்ல இலக்கியம். சமகாலத்துப்பிரச்னைகள், துயரங்கள், சீரழிவுகள், சிதைவுகள், மக்கள் வாழ்வின்னல்கள், பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் உன்னத இலக்கியம் பற்றியெல்லாம் பேனா ஜம்பம் அடிக்கிறவர்களை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மக்களைப்பற்றிக் கவலைப்படுகிற கலை இலக்கியம்தான் அசலான மக்கள் இலக்கியமாக இருக்க முடியும்.”

இப்படி பூமாயன் சிறுகதைத்தொகுப்பு முன்னுரையில் எழுதியுள்ள மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்து வாழ்க்கை முழுவதுமே சாதாரண எளிய மக்களின் பாடுகளை, உணர்வுகளை, கோபதாபத்தை, மகிழ்ச்சியை, துக்கத்தை, ஆக்ரோஷத்தைப் பிரதிபலித்தது. பெருந்தமிழ் வாசகப் பரப்பிற்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கைப்பாடுகளை, பிரச்னைகளைத் தன்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வெளிப்படுத்துகிற எழுத்தாளுமையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 70-களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை உயர்சாதியினர் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம் முடிவுக்கு வரத்தொடங்கியிருந்தது. தமிழிலக்கியம் இதுவரை கண்டிராத புதிய திசைகளிலிருந்து புதிய குரல்கள் புதிய வாழ்க்கைப் பாடுகளைப் பேசத் தொடங்கியிருந்தன. குறிப்பாக நாகம்மாவை எழுதி வட்டார இலக்கியப்போக்கைத் துவக்கி வைத்த ஆர்.ஷண்முகசுந்தரம், வட்டார இலக்கியப்போக்கை ஆழமாக ஏர் பிடித்து உழுது பண்படுத்தி, வெள்ளாமை செய்து கொண்டிருந்த கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணன், தொடர்ந்து பயிர்செய்து படைப்புகளை அறுவடை செய்த பூமணி, பொன்னீலன், நாஞ்சில்நாடன், என்ற படைப்பாளிகளின் படைவரிசைக்குப் பின்னால் வறண்ட கரிசல் மண்ணிலிருந்து எளிய மக்களின் குரலாக மேலாண்மை பொன்னுச்சாமியின் குரல் ஒலித்தது.

அதேபோல முற்போக்கு இலக்கியத்தில் தொமுசி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், விந்தன், கு.சி.பா. டி.செல்வராஜ், என்று படைப்பாளிகளின் வரிசையில் தன்னை முற்போக்கு எழுத்தாளன் என்ற பிரகடனத்தோடு இணைத்துக் கொண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. எழுதி எழுதியே தன்னுடைய எழுத்தைச் செதுக்கியவர். யாருடைய சாயலுமின்றி, யாருடைய பாதிப்புமின்றி அச்சு அசலான, மழைபெய்து ஈரமாகிக் கையில் பிசுபிசுவென ஒட்டும் கரிசல் அவரைச் சுற்றி அவர் கண்ட மக்களின் வாழ்க்கை அவருக்குள் ஏற்படுத்திய நெருக்கடியே அவரை எழுதத்தூண்டியது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மக்களின் வாழ்க்கைப்பாடுகளிலிருந்து சற்றும் விலகாமல் தன்னுடைய கதைகளை எழுதியவர்.

அவருடைய எளிய முறையிலான கதை சொல்லலும், கிராமங்களில் வாழும் விவசாயிகளின் பிரச்னைகளை அவருடைய கதைகளில் கையாண்டவிதமும், மனித உணர்வுகளின் பேதங்களை மட்டுமல்ல, உன்னதங்களையும் உணர்ச்சித் ததும்பல்களையும் உரத்துச் சொன்ன மகத்தான படைப்பாளியாகத் திகழ்ந்தார்.. தன்னுடைய படைப்புகளில் கலை அமைதி, வடிவ நேர்த்தி, உள்ளடக்கப் பொருத்தம் எனப் பெரிய அளவில் கவலைப்பட்டவர் அல்ல. உணர்ச்சி கொப்பளிக்கும் நிகழ்வுகள், உரத்துப் பேசும் கரிசல் மனிதர்களை தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர். வாழ்வின் வெம்மை அவருடைய கதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் தகதகவென கனன்று கொண்டிருக்கும்.

மனிதவாழ்வின் அவலங்களை மட்டுமல்ல அவனுடைய உன்னதங்களையும் எழுதிப்பார்த்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி. உள்மனிதன் என்ற கதையில் காலை நேர டவுன் பஸ் நெருக்கடி, கோபம், தாபம், வசவுக்காடு, என்று பஸ்ஸே எரிச்சலுடன் நகர்ந்து கொண்டிருக்கும். திடீரென பிரசவவலி வந்த பெண்ணின் அவஸ்தையில் பஸ்ஸே தாயாக மாறி பணிவிடை செய்யும். அந்தப் பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகு மறுபடியும் பஸ் கசகசவென மாறிவிடும். மனிதன் அவசியம் நேரும்போது தன்னுடைய உன்னதத்தைக் காட்டுகிறான். அந்த உன்னத தருணத்தை அவனே தாங்க முடியாமல் மறுபடியும் சாதாரணணாகி விடுகிறான். அதேபோல மயிலும் கிளியும் என்ற கதையில் கரிசக்காடுகளில் வெள்ளாமையை அழிச்சாட்டியம் பண்ணுகிற கிளிக்கழுதைகளையும், மயில் சனியன்களையும் விரட்டுவதற்கு அங்கும் இங்கும் ஓடி அம்மா படுகிறபாட்டைப் பார்த்து பரிதவிக்கிற மகன் கிளிகளையும் மயில்களையும் கொல்வதற்காக மருந்து வாங்கி வைக்கிறான். தற்செயலாய் கேட்கிற அம்மாவின் உரையாடலில் பொங்கும் தாய்மையுணர்வு அந்தக்கிளிகளையும் மயில்களையும் கூட தன் பிள்ளைகளைப்போல நினைக்கிற பரிவு அவனிடம் மாற்றத்தை உருவாக்கி விடுகிறது.

1972- நவம்பர் மாதச் செம்மலரில் பரிசு என்ற சிறுகதையின் மூலம் தன் எழுத்துப்பயணத்தைத் துவக்கிய செ.பொன்னுச்சாமி தன்னுடைய இறுதி நாட்கள் வரை எழுதிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிற மேலாண்மை பொன்னுச்சாமி ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள மேலாண்மறை என்ற குக்கிராமத்திலிருந்து இலக்கியத்துக்குள் அடி எடுத்து வைத்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருடைய பால்யகாலமும் இளமைக்காலமும் அவ்வளவு உவப்பானதல்ல. ஊர் ஊராக சைக்கிளில் சென்று புளி விற்றார். கருப்பட்டி விற்றார். கருவாடு விற்றார்.

வாழ்க்கையோடு மல்லுக்கட்டிக்கொண்டே இடதுசாரித்தோழர்களுடைய தொடர்பினால் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறார். அப்போது ஒன்றாக இருந்த ராமநாதபுரம் மாவட்டச்செயலாளராக செயலாற்றிய தோழர்.எஸ்.ஏ.பி. அவருக்கு ஆசானாக இருந்திருக்கிறார். மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் எழுதி வைத்திருந்த ஒரு குயர் நோட்டை வாசித்து அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார். வாசித்ததில் இருந்து தேர்ந்தெடுத்து செம்மலருக்கு அனுப்பச்சொல்லி வழிகாட்டியிருக்கிறார். அப்படித்தான் மேலாண்மைமறை நாடு என்ற குக்கிராமத்திலிருந்து மேலாண்மை பொன்னுச்சாமி என்கிற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் உதித்தார்.

1970-களில் மறைந்த நாவலாசிரியர், கு.சி.பா. அவர்களால் துவங்கப்பட்ட செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தகே. எம்.முத்தையாவைத் தன்னுடைய ஞானத்தந்தையாக குறிப்பிடுவார் மேலாண்மை பொன்னுச்சாமி. கே.எம்.முத்தையாவின் ஊக்கமும் உற்சாகமும் அவரை நேரடி அரசியலில் இருந்து தீவிர எழுத்துப்பணிக்குத் திருப்பியது. ஒரு நேரத்தில் ஒரே செம்மலரில் மேலாண்மை பொன்னுச்சாமியின் இரண்டு கதைகள் கூட வந்திருக்கின்றன. முற்போக்கு சிறுகதைகள் என்றால் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் முதலில் தோன்றுகிற அளவுக்குத் தன்னுடைய அயராத உழைப்பால் எழுத்துப்பணியைச் செய்தார்.

70-களில் கோவில்பட்டியில் இருந்த பால்வண்ணம், ஆர்.எஸ்.மணி, தேவப்ரகாஷ், போன்ற நண்பர்களிடம் ஒவ்வொரு மாதமும் செம்மலரில் வெளிவந்த அவருடைய கதைகளைப் பற்றிய கருத்துகளையும் விமரிசனங்களையும் கேட்பதற்காக ஊரிலிருந்து சைக்கிளை மிதித்து வருவாராம். அவர்களும் அவருக்கு டீ, வடை, வாங்கிக் கொடுத்து கடுமையான விமரிசனங்களை அவரிடம் சொல்வார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வாராம். அவர்கள் சொன்னதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த கதையை எழுதி செம்மலருக்கு அனுப்பி வைப்பார். அந்தக் கதை வந்ததும் மறுபடியும் கோவில்பட்டிக்கு வருவார். இப்படி அவர் விமரிசனங்களை விரும்பி வாங்கியிருக்கிறார். அதை அவருடைய அனைத்துத் தொகுப்புகளிலும் கூடப் பார்க்க முடியும். முன்னுரையின் முடிவில், “உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும். நீங்கள் கண்டுணர்ந்து சொல்கிற குறைகளும் கூட என்னைச் செதுக்கி மேலும் கூர்மையாக்கும். இரண்டுமே இலக்கியத்துக்குச் சிறப்பு செய்யும்” என்று எழுதியிருக்கிறார்.

அவர்களுக்குப் பின்னால் நேரடியாக புதுமைப்பித்தனிலிருந்து வாசிப்பைத் துவங்கிய என்னைப் போன்றவர்களின் கருத்துகளையும் விமரிசனங்களையும் கேட்டுக் கொள்வார்.

விமரிசனங்களைக் கண்டு அஞ்சி நடுங்குகிற –விமரிசனங்களைத் தவிர்க்க நினைக்கிற-எழுத்தாளர்கள் மத்தியில் விமரிசனங்களைத் தேடிப்போய் வாங்குகிற எழுத்தாளராக இருந்தார் மேலாண்மை பொன்னுச்சாமி. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு சாகித்ய அகாடமி விருது பெறுகிற அளவிற்கான படைப்புகளை எழுதியிருக்கிற மேலாண்மையின் அர்ப்பணிப்பு எல்லோரும் பின்பற்றத்தக்கது. கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் வழி தன்னை ஒரு கதை சொல்லியாக நிலை நிறுத்திக்கொண்டவர். யதார்த்தவாதம், விமரிசன யதார்த்த வாதம், சோசலிச யதார்த்தவாதம், என்ற இலக்கியக்கோட்பாடுகளில் உரத்து நின்று எழுதியவர். எளிய முறையிலான கதை சொல்லலும், கிராமங்களில் வாழும் விவசாயிகளின் பிரச்னைகளை அவருடைய கதைகளில் கையாண்டவிதமும், மனித உணர்வுகளின் பேதங்களை மட்டுமல்ல, உன்னதங்களையும் உணர்ச்சித் ததும்பல்களையும் உரத்துச் சொன்ன மகத்தான படைப்பாளி. தன்னுடைய படைப்புகளில் கலை அமைதி, வடிவ நேர்த்தி, உள்ளடக்கப் பொருத்தம் எனப் பெரிய அளவில் கவலைப்பட்டவர் அல்ல. உணர்ச்சி கொப்புளிக்கும் நிகழ்வுகள், உரத்துப் பேசும் கரிசல் மனிதர்களை தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர்.

கல்கி, பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பரந்த வாசகப்பரப்புக்குள் வந்த மேலாண்மை பொன்னுச்சாமி, ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகள் எழுதி பெரும் புகழ் பெற்றார். மானுடம் வெல்லும், சிபிகள், கூரை, உள்மனிதன், பூக்காத மாலை, பூச்சுமை, மானுடப்பிரவாகம், மனப்பூ, மின்சாரப்பூ, பூமாயன், போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறுகதை நூல்களையும், கோடுகள், தழும்பு, மரம், பாசத்தீ, போன்ற குறுநாவல் தொகுப்புகளையும், முற்றுகை, இனி, அச்சமே நரகம், ஊர்மண், போன்ற நாவல்களையும், சிறுகதைப்படைப்பின் உள்விவகாரம் என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. தான் ஒரு இடது சாரி எழுத்தாளன் என்பதை எந்த ஒரு இடத்திலும் உரத்துப்பேசுகிறவர். எல்லோர் மீதும் மிகவும் உரிமையுடன் பழகுகிற, ஆலோசனை சொல்கிற, ஆலோசனை கேட்கிற எளிய மனிதர்.

1975-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். தமுஎகச அமைப்பை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெரும் ஈடுபாடு காட்டியவர். தமுஎகச வின் தலைவராகவும், துணைப் பொதுச்செயலாளராகவும், துணைத்தலைவராகவும் பலமுறை தேர்வு செய்யப்பட்டவர். முற்போக்கு எழுத்தாளர் படை ஒன்றினை உருவாக்க கடுமையாக உழைத்தவர். எழுத்தும் இயக்கமும் என்று இடையறாது இயங்கியவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டுவார். வெகுளித்தனமான அவருடைய உரையாடல் எல்லோரையும் மிக நெருக்கமாக்கிக் கொள்ளும். என்மீது தனிப்பட்ட அக்கறையும் அன்பும் கொண்ட மேலாண்மை பொன்னுச்சாமியிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் ஒரே நேரத்தில் இரண்டு டீ குடிப்பார். வெளிப்படையான வெள்ளந்தியான அவருடைய எளிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே அமைப்பை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெரும் ஈடுபாடுகொண்டவர். த.மு.எ.க.ச-வின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டவர். முற்போக்கு எழுத்தாளர் படை ஒன்றை உருவாக்க, கடுமையாக உழைத்தவர். அவருடைய பாதையைப் பின்பற்றியே ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, அப்பணசாமி, மாதவராஜ், காமராஜ், எஸ்.லட்சுமணப்பெருமாள், ஜமிலூதீன், அல்லி உதயன், ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லிநகரம் தாமோதரன், அய்.தமிழ்மணி, போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதிய எழுத்தாளர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி அவர்களுக்கு ஆலோசனை சொல்லவும், அவர்களுடைய கதைகளை வாசித்து அபிப்பிராயம் சொல்லவும் சற்றும் தயங்காதவர் மேலாண்மை பொன்னுச்சாமி. எழுத்தும் இயக்கமும் என இடையுறாது இயங்கிய, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மேலாண்மை பொன்னுச்சாமியின் படைப்புகளை, ஏராளமான ஆய்வு மாணவர்கள் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார்களென்பது சாதாரண விஷயமில்லை.

உயிர்த்துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்ற கரிசல் கிராமத்து வாழ்க்கையை அப்படியே தன் எழுத்துகளில் கொண்டு வந்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி. தமிழிலக்கியத்திலும் குறிப்பாக முற்போக்கு இலக்கியத்திலும் அவருடைய பங்களிப்பு மகத்தானது. மேலாண்மை பொன்னுச்சாமி தன் படைப்புகளின் வழியே வாசகர்களின் மனங்களிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளினால் தோழர்கள் மனங்களில் என்று நிலைத்திருப்பார்.

மேலாண்மை பொன்னுச்சாமி என்ற மகத்தான முற்போக்கு படைப்பாளியை நாம் அவருடைய படைப்புகளை வாசிப்பதன் வழியே நினைவுகூர்வோம்.

– உதயசங்கர்