நூல் அறிமுகம் : தமிழில் : யூமா வாசுகியின் ’குட்டி இளவரசன்’(குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம் கட்டுரை) : உதயசங்கர்

நூல் அறிமுகம் : தமிழில் : யூமா வாசுகியின் ’குட்டி இளவரசன்’(குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம் கட்டுரை) : உதயசங்கர்




நூல் : குட்டி இளவரசன்
ஆசிரியர் : தமிழில் : யூமா வாசுகி
விலை : ரூ. 60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு :044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

குழந்தைகளின் கனவுகள் எல்லையற்றவை. அந்தக்கனவுகளில் குழந்தைகள் தங்கள் இதயத்தையே அர்ப்பணிக்கிறார்கள். அந்தக் கனவுகளில் எண்கள் இல்லை. மதிப்பீடுகள் இல்லை. வறட்டுத்தனமான அறநெறிகள், நன்னெறிகள், நீதிநெறிகள் இல்லை. ஆனால் அன்பும் நேசமும் பொங்கித்ததும்புகின்றன. குழந்தைகளின் உலகத்தைக் கண்களால் அல்ல.. இதயத்தால் பார்க்க முடிந்தால் மட்டுமே நீங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியும். கண்களால் பார்க்கமுடியாதவற்றையும் கூட இதயம் பார்த்து விடும். இதைத்தான் குட்டி இளவரசன் சொல்கிறான். குட்டி இளவரசனின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். அகாதமான சகாரா பாலைவனத்தில் குட்டி இளவரசனைக் கண்டெடுத்த, அவனை மீண்டும் தேடிச்சென்று காணாமல் போன அந்துவான் எக்சுபரியைப் புரிந்து கொள்ள முடியும். அந்துவான் ஏன் சின்னஞ்சிறிய கோளான பி.612லிருந்து குட்டி இளவரசனை இங்கே அழைத்து வந்து, அவனுக்கு உலக இலக்கியத்தில் நிரந்தரமான இடத்தை அளிக்க அவரால் எப்படி முடிந்தது என்று அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் பெரியவர்கள் கண்களால் அல்ல. எண்களால் பார்க்கிறார்கள். எண்கள் கேள்விகளாகப் பெருஞ்சுமையைக் குழந்தைகளின் மீது இறக்குகிறது. அந்தச் சுமை தரும் மன அழுத்தம் காரணமாக குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியை இழக்கிறார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால் தாங்களும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தோம். இப்போது குழந்தைகள் காணும் கனவுகளையெல்லாம் தாங்களும் கண்டிருக்கிறோம் என்பதையே பெரியவர்கள் மறந்து விட்டது தான். அதனால் தான் சகாரா பாலைவனம் போல அவர்களுடைய இதயம் ஈரமில்லாமல் காய்ந்து போயிருக்கிறது.

ஒரு கோடியே நாற்பது லட்சம் பிரதிகளைத் தாண்டி இன்னமும் விற்றுக்கொண்டேயிருக்கிற, 301 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிற குட்டி இளவரசனை எப்படிப் புரிந்து கொள்வது? ஏன் அந்தப் புத்தகம் செவ்வியலாக்கப் போற்றப்படுகிறது? குட்டி இளவரசன் கதையை மீண்டும் மீண்டும் திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், எடுத்து வருகிறார்களே. குட்டி இளவரசனின் கதையில் வரக்கூடிய உடை, பொருள், விமானம், கிணறு, குட்டிக்கோள்கள் எல்லாவற்றையும் செயற்கையாக உருவாக்கி அருங்காட்சியகங்களாக நிறுவி உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குட்டி இளவரசனின் நூல் வயது வாரியாக மீளுருவாக்கம் செய்யப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

1900 – ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்த அந்துவான் எக்சுபரி உயர்குடியைச் சேர்ந்தவர். எழுத்தாளர். ராணுவச்சேவைக்காக பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து விமானம் ஓட்டுவதற்கும் கற்றுக்கொண்டார். விமானம் ஓட்டுவது அவருக்கு சாகசமாகவும், பெரு விருப்பமாகவும் மாறிவிட்டது. அதுதான் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. 1925 – ஆம் ஆண்டு தன்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பான ( AVIATOR ) விமான ஓட்டி என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1929 – ஆம் ஆண்டு தென்னக அஞ்சல் ( SOUTHERN MAIL)
என்ற நூலை வெளியிட்டார். பிறகு 1931 – ஆம் ஆண்டு அவர் எழுதிய இரவு விமானம் ( NIGHT FLIGHT ) என்ற நூல் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. 1935 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பிராங்குகளுக்காக நடந்த விமானப்பந்தயத்தில் அவரும் அவருடைய நண்பரான ஆந்த்ரே பிரிவொட்டும் கலந்து கொண்டனர். அந்த விமானம் கிட்டத்தட்ட இருபது மணிநேரப் பயணத்துக்குப்பிறகு எரிபொருள் தீர்ந்து போய் சகாரா பாலைவனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. குடிக்கத்தண்ணீரில்லை. ஒருநேரத்துக்கு மட்டுமேயான உணவு இருந்தது. உயிர் வாழ்வோமா? இல்லை ஆள் அரவமற்ற அந்தப் பாலைவன மணலில் புதைந்து போவோமா என்ற நிலையற்ற கணங்களில் மனம் மயங்கி கானல் காட்சிகளாய் பிரமைகளாய், தோற்றப்பிழைகளாய், கண்டவையே குட்டி இளவரசனை எழுதத்தூண்டுகோலாக இருந்தன. காணாமல் போன அவரைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் அந்துவான் தோற்றப்பிழையாகக் கண்ட குட்டி இளவரசனை உடனே எழுதிவிடவில்லை.

1939 –ல் அவர் காற்று, மணல், விண்மீன்கள் என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இதற்கிடையில் 1940 -களில் பிரான்ஸின் மீது ஜெர்மனியின் படையெடுப்பு நடந்தது. பிரான்ஸ் வீழ்ந்தது. அந்துவான் உடனே அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்றார். அங்கிருக்கும்போது தான் 1942 – ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் குட்டி இளவரசனின் முதல் பிரதியை எழுதத்தொடங்கினார். அமெரிக்கா ஜெர்மனியின் நாஜிகளுக்கு எதிராக போரில் இறங்கத் தயங்கிக்கொண்டிருந்த சமயம் அது. 1941 முதல் 1943 வரை நியூயார்க் நகரத்தில் தங்கியிருந்த அந்துவான் இடையில் ஒரு ஐந்து மாதங்கள் வசந்தகாலத்தில் கனடாவிலுள்ள கியூபெக் நகரில் தங்கியிருந்தார்.

அங்கே குட்டி இளவரசனை எழுதத் தொடங்கினார். அவருக்குத் திருப்தி ஏற்படும்வரை மீண்டும் மீண்டும் எழுதினார். முப்பதாயிரம் வார்த்தைகளில் எழுதப்பட்ட முதல் பிரதியை பதினைந்தாயிரம் வார்த்தைகளாகக் குறைத்தார். 1943-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குட்டி இளவரசன் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் அமெரிக்காவில் வெளியானது. அப்போது ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்த பிரான்சில் அந்த நூல் தடைசெய்யப்பட்டது. ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுதலையடைந்த பிறகே பிரான்சில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

1943-ல் குட்டி இளவரசன் வெளியான சில வாரங்களில் பிரஞ்சு விடுதலைப் படையில் சேர்ந்து ஜெர்மானியப்படைகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள உதவுகிற உளவு விமானத்தை ஓட்டிச்சென்றார். இரண்டு முறைகளுக்கு மேல் நாஜிகளின் நடமாட்டம் பற்றி வெற்றிகரமாக உளவறிந்து வந்தார். தன்னுடைய நாற்பத்திநான்கு வயதில் 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒற்றறியச்சென்ற அந்துவான் மத்தியதரைக்கடல் பகுதியின் மீது பறக்கும்போது காணாமல் போனார். அவர் எப்படி மறைந்தார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. சமீபத்தில் தான் அவர் சென்ற விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்துவான் என்ன ஆனார் என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர் எழுதிய குட்டி இளவரசனைத் தேடியே அவர் பி612 கோளுக்குச் சென்று விட்டார் என்று எல்லாரும் நம்புகிறார்கள்.

குட்டி இளவரசன் நூலை அவர் லியோன் வெர்த் என்ற பெரியவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். லியோன் வெர்த் அந்துவானை விட இருபத்தியிரண்டு வயது மூத்தவர். எழுத்தாளராகவும் கலை விமரிசகராகவும் இருந்த லியோன் இடதுசாரி போல்ஸ்விக்காக இருந்தார். அவர் தான் அந்துவானின் மிகச்சிறந்த நண்பராக இருந்தார். அதனால் தான் அவருக்குச் சமர்ப்பணம் செய்யும்போது,

“ இந்தப்புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்தற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முக்கியக்காரணம் ஒன்று உண்டு. இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக்கிடைத்த சிறந்த நண்பர். மற்றொரு காரணமும் உண்டு. இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார். குழந்தைகளின் புத்தகங்களைக்கூட. மூன்றாவது காரணம் இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை. இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப்புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தாம். ( ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும் ) ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்;

லியோன் வெர்த்துக்கு
அவர் சிறு பையனாக இருந்தபோது “
இரண்டாம் உலகயுத்தம் முடிவடைந்தபிறகு அந்துவான் குட்டி இளவரசனை லியோனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் என்பது அந்துவானின் மறைவுக்குப் பிறகே லியோனுக்குத் தெரியும். அப்போது லியோன்,

“ அந்துவான் இல்லாத அமைதி முழுமையான அமைதியில்லை “ என்று சொல்லியிருந்தார்.

குட்டி இளவரசன் நூலின் கதையை மேலோட்டமாகப்பார்த்தால் மிக எளிமையானது. குட்டி இளவரசன் என்ற வேற்றுக்கோள் குழந்தை ஆறு கோள்களுக்குப் பயணம் சென்று விட்டு ஏழாவதாக பூமிக்கு வருகிறான். அங்கேயும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற பிறகு சகாரா பாலைவனத்தில் கதையாசிரியரான அந்துவானைச் சந்தித்து அவனுடைய பயண அனுபவங்களைச் சொல்கிறான். சொல்லி முடித்தபிறகு தன்னுடைய கோளுக்குத் திரும்பிச் செல்கிறான். ஆனால் இந்தக் கதைக்குள் குட்டி இளவரசனுக்குக் கிடைக்கும் அனுபவங்களும் அந்த அனுபவங்களைச் சித்தரிக்கும் விதமும் நமக்கு வாழ்க்கை குறித்த நிறைய சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. செய்கிறான்.

கதையாசிரியரான அந்துவான் ஆறுவயதில் படம் வரைவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் வரைந்த படத்தைப் பார்த்த பெரியவர்களுக்குப் புரியவில்லை. ஒரு மலைப்பாம்பு வயிற்றுக்குள் இருக்கும் யானையை அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஒரு தொப்பியையே பார்த்தார்கள். அன்றிலிருந்து அந்துவான் பெரியவர்களிடம் படத்தைக் காட்டுவதில்லை என்பதோடு படம் வரைவதை விட்டு விட்டார். அதன்பிறகு வளர்ந்து ஒரு விமானியாகி சகாரா பாலைவனத்தில் விமானம் பழுதாகி விழுந்த விமானத்தை தன்னந்தனியாகப் பழுது பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கு திடீரென்று குட்டி இளவரசன் வருகிறான். தனக்கு ஒரு ஆடு படத்தை வரைந்து கொடுக்கும்படி கேட்கிறான். முதலில் அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்று புரியாமல் திகைத்த அந்துவானிடம் அவன் மீண்டும் ஒரு ஆட்டை வரைந்து கொடுக்கச்சொல்கிறான். அதிலிருந்து தொடங்குகிறது கதை. அந்துவான் வரைந்து கொடுக்கும் ஆடுகளின் சித்திரங்கள் குட்டி இளவரசனுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை வரைந்து அதற்குள் ஆடு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறான் குட்டி இளவரசன். ஆட்டைக்கட்டிப்போட ஒரு கயிறும் முளைக்குச்சியும் வரைந்து தருவதாகச் சொல்லும் அந்துவானிடம் ஆட்டைக் கட்டுவதா? என்ன விந்தையான எண்ணம்? என்று கேட்கிறான். அதன் வழியே குழந்தையின் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறார் அந்துவான்.

ஆடு செடிகளை மேய வேண்டும் என்று அறிந்து கொண்டதில் குட்டி இளவரசனுக்கு மகிழ்ச்சி. ஏனெனில் பவோபாப் மரங்களை மேய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். பத்து யானைகள் வந்து மேய்ந்தாலும் தின்று தீர்க்க முடியாத பிரம்மாண்டமான மரமான பவோபாப் மரத்தை ஒரு ஆடு எப்படி மேயமுடியும் என்று அந்துவான் கேட்கும்போது குட்டி இளவரசன் விவேகத்துடன் பதில் சொல்கிறான். ஒரு காலத்தில் பவோபாப் மரங்களும் செடிகளாக இருக்கும் தானே. அப்போது ஆடு மேய்ந்து விடும் அல்லவா. பவோபாப் மரங்கள் பெருகினால் கோள் வெடித்துச் சிதறி விடும் என்கிறான். மிக முக்கியமான விஷயம் அந்துவான் நாஜிக்களையே பவோபாப் மரங்களாகச் சித்தரிக்கிறார். அந்த விஷச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று குட்டி இளவரசனின் மூலமாகச் சொல்கிறார்.

உலகையே தன் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவருவதற்காகவும் ஒரே இனம் தான் இந்த உலகை ஆளவேண்டுமென்ற முட்டாள்த்தனமான கருத்தியலுக்காகவும் இனவெறியையும், ஆதிக்க வெறியையும், பரப்பிவிட்ட ஜெர்மனியின் ஹிட்லர் உலகையே அடிமைகொள்ள நாஜிப்படையை உருவாக்கினான். அந்த நாஜிக்களுக்கு எதிரான ஒரு நூல் குட்டி இளவரசன். அதுமட்டுமல்ல அப்போதைய உலகப்போர் காரணமாக விரக்தியடைந்த மக்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு பிரதியாகவும் குட்டி இளவரசன் விளங்குகிறது.
குட்டி இளவரசனின் கோள்கூட பி612 என்ற எண்ணாக இருப்பதற்குப் பெரியவர்கள் தான் காரணம். ஏனெனில் பெரியவர்களுக்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் வாழ்க்கையை எண்களாலேயே அளக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் எண்களை ஏளனமாகக் கருதுகிறார்கள்.

குட்டி இளவரசன் ஒரு வீட்டைவிடச் சற்று பெரிதாக இருக்கும் தன்னுடைய கோளில் இருக்கும் ஒரே ஒரு மலர் கொண்ட கர்வத்தையும் அலட்சியத்தையும் தாங்கமுடியாமலேயே கோளை விட்டு புறப்படுகிறான். அப்படி அவன் ஆறு சின்னஞ்சிறு கோள்களுக்கும் பூமியெனும் பெருங்கோளுக்கும் போய் வரும்போது சந்தித்த அனுபவங்களின் மூலம் அவன் வாழ்க்கையின் அர்த்தம், அன்பு, கருணை, பேராசை, அதிகாரம், அறியாமை, அபத்தம், எல்லாவற்றையும் உணர்கிறான். மரணம் என்பது உண்மையில் மரணமல்ல என்ற இருத்தலியல் கோட்பாட்டைப் பேசுகிறான். குட்டி இளவரசனை வாசிக்கும் போது ஒரே நேரத்தில் அது காலத்தின் படைப்பாகவும், காலத்தைத் தாண்டிய படைப்பாகவும் விளங்குவது தெரியும்.

முதல் கோளில் குடிமகன்களே இல்லாத ராஜாவைச் சந்திக்கும் குட்டி இளவரசன் அவருடைய வெற்று அதிகாரத்தின் கோமாளித்தனத்தை உணர்கிறான். தன் மேலங்கியால் கோள் முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்டு தானே சட்டமியற்றவும் அந்த சட்டத்தைத் தானே மீறவுமான அதிகார விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிற ராஜா குட்டி இளவரசனையும் அங்கே தங்கச்சொல்கிறார். தனக்குத்தானே நீதி வழங்குவது தான் இருப்பதிலேயே மிகவும் கடினமானது என்கிறார் ராஜா. அதிகாரத்தின் கோமாளித்தனமான விளையாட்டைக் கண்டு விரக்தியடைந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறான் குட்டி இளவரசன். அப்படிப்புறப்படும் போது பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று சொல்கிறான்.

அடுத்த கோளில் ரசிகனைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தற்பெருமைக்காரனைச் சந்திக்கிறான். அந்தத் தற்பெருமைக்காரன் தன்னை யாராவது பாராட்டிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான். குட்டி இளவரசன் அந்தத் தற்பெருமைக்காரனிடமும் சலிப்படைந்து அடுத்த அகோளுக்குச் செல்லும்போது பெரியவர்கள் நிச்சயம் விசித்திரமானவர்கள் தான் என்று சொல்கிறான்.

அடுத்த கோளில் ஒரு குடிகாரனைச் சந்திக்கிறான். குடிப்பதற்கானக் காரணத்தை அந்தக் குடிகாரன் சொல்வதைக் கேட்டு குட்டி இளவரசன் குழம்புகிறான். அங்கிருந்து கிளம்பும் போது பெரியவர்கள் மிகமிக விசித்திரமானவர்கள் என்று நினைக்கிறான்.

அடுத்த கோளில் அவன் சந்திக்கும் வியாபாரி தனக்கு ஐம்பது கோடியே பதினாறு லட்சத்து இருபத்திரண்டாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று விண்மீன்களுக்குச் சொந்தக்காரன் என்று சொல்கிறான். அந்த விண்மீன்களின் எண்ணிக்கையைக் காகிதத்தில் எழுதி பத்திரமாக எட்டகத்தில் பூட்டி வைத்துக் கொள்வதால் அவை எனக்குச் சொந்தமென்கிறான். விசித்திரமான அந்த வியாபாரியை விட்டுப் புறப்படும்போதும் குட்டி இளவரசன் பெரியவர்கள் அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்கிறான்.

அடுத்த கோளில் ஒரு நிமிடத்தில் பகலும் ஒரு நிமிடத்தில் இரவும் வந்து விடுகிறது. அந்தக் கோளில் விளக்கேற்றுபவர் ஒரு நிமிடத்தில் விளக்கை ஏற்றவும் ஒரு நிமிடத்தில் விளக்கை அணைக்கவும் பணியை விடாது செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே நாற்பத்திநாலு முறை சூரிய அஸ்தமனமாகும் கோளிலிருந்து தான் குட்டி இளவரசன் வந்திருப்பான். அவனுக்கு சூரிய அஸ்தமனம் எப்போதும் பிடித்த விஷயம். இந்தக் கோளில் இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆயிரத்து நானூற்று நாற்பது சூரிய அஸ்தமனங்கள் நிகழும் இந்தக் கோளை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும் குட்டி இளவரசன் அந்த விளக்கேற்றும் மனிதரை மற்றெல்லோரையும் விட உயர்வாக நினைப்பான். அவனை நண்பனாக்கிக் கொள்ள விரும்புவான்.

அடுத்த கோளில் வெறும் புத்தகத்தில் வாழும் புவியியல் ஆய்வாளரைச் சந்திக்கிறான். குட்டி இளவரசனின் கேள்விகளுக்கு அந்த ஆய்வாளர் தரும் பதில்கள் அவனுக்கு ஏமாற்றமளிக்கின்றன. மலர்களைப் பற்றிக்கவலைப்படாத அந்த புவியியலாளரின் கோளை விட்டு பூமிக்கோளுக்குப் பயணப்படுகிறான்.

ஏழாவது கோளான பூமியில் மனிதர்களைத் தேடி அலைகிறான். ஆப்பிரிக்க பாலைவனத்தில் வந்து விழும் அவன் முதலில் ஒரு பாம்பைச் சந்தித்து மனிதர்களைப் பற்றிக் கேட்கிறான். பாலைவனத்தில் தனிமையாக இருக்கிறது என்று சொல்கிற குட்டி இளவரசனிடம் மனிதர்கள் எங்கேயும் தனியாகத்தான் வசிக்கிறார்கள் என்று பாம்பு சொல்கிறது. மரணம் பற்றிப் புதிராகப் பேசும் அந்தப் பாம்பை விட்டு அகன்று ஒரு மலரைச் சந்திக்கிறான். மலரிடம் மனிதர்களைப் பற்றிக் கேட்கும்போது வேரில்லாமல் காற்றில் மிதந்து செல்லும் அவர்களை வெகுகாலத்துக்கு முன்னால் பார்த்திருக்கிறேன் என்று மலர் சொல்கிறது. அடுத்து மலையின் மீது ஏறி நின்று மனிதர்களைத் தேடுகிறான். அது அவன் குரலையே எதிரொலிக்கிறது. மனிதர்களுக்குக் கற்பனைவளம் குறைவு என்றும் அதனால் தான் சொன்னதையே திரும்பச்சொல்கிறார்களென்றும் நினைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறான்.

மணல் பாறை பனி என்று பயணிக்கிற குட்டி இளவரசன் பாதைகளைக் காண்கிறான். பாதைகள் ஒரு ரோஜாத்தோட்டத்துக்கு அவனைக் கொண்டு செல்கிறது. தனியாக இருக்கும்போது ரோஜாவின் தனித்துவமான மதிப்பு தோட்டமாக இருக்கும்போது சாதாரணமாகிவிடுவதைக் கண்டு மனம் வெதும்புகிறான் குட்டி இளவரசன். அவனைச் சந்திக்கும் நரி அன்பு என்பதே பழக்கம் என்று சொல்கிறது. நரியிடம் பழக்கப்படுத்திக்கொண்ட குட்டி இளவரசனுக்கு தன்னுடன் பழகிய தன்னுடைய கோளில் இருக்கும் ரோஜா மலரைத் தேட ஆரம்பிக்கிறது.

அங்குமிங்கும் எதற்கென்றே தெரியாமல் ரயில்களில் போய் வந்து கொண்டிருக்கும் மனிதர்களை வழியனுப்பும் பாயிண்ட்ஸ்மேனைச் சந்திக்கிறான். அவன் குழந்தைகளுக்கு மட்டுமே தாங்கள் எதைத்தேடுகிறோம் என்று தெரியும் என்று சொல்கிறான். தண்ணீர் தாகத்தைத் தணிக்க மாத்திரையைச் சாப்பிடச் சொல்லும் ஒரு வியாபாரியைச் சந்திக்கிறான். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறான் வியாபாரி. அந்த நேரத்தில் என்னால் ஒரு ஊற்றைத் தேட முடியும் என்கிறான் குட்டி இளவரசன்.

அங்கிருந்து தான் விபத்தில் சிக்கிய அந்துவானைப் பாலைவனத்தில் சந்திக்கிறான். பாலைவனத்தில் ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சொல்கிறான். மனிதர்கள் தேடுவது என்ன வென்று தெரியாமலே சுழலில் சிக்கிக்கொள்வார்கள் என்று சொல்கிறான். அந்த இடத்தில் தான் எட்டு நாட்களுக்கு முன்னால் தான் விழுந்ததாகச் சொல்கிறான் குட்டி இளவரசன். இப்போது அவனுடைய கோளில் இருக்கும் மலருக்கு அவன் தான் பொறுப்பாளி. உடனே அங்கே செல்லவேண்டும். பாம்பினால் கடிபட்டு இறந்து போகிறான். ஆனால் தான் இறப்பதாகத் தெரிவது உண்மையல்ல. அந்தக்கோளுக்கு இத்தனை எடையுள்ள உடலுடன் போகமுடியாது அதனால் நீ நம்பாதே. என்று சொல்லி சுருண்டு விழுகிறான். அந்துவானிடம் விண்மீன்களைப் பார்க்கும்போது அங்கிருந்து உண்னைப்பார்த்துச் சிரிப்பேன் என்று அந்துவானிடம் சொல்கிறான்.

காவியத்துயரமான அந்தக் காட்சியில் அந்துவானுடன் சேர்ந்து நமக்கும் கண்கலங்குகிறது. நாவல் முழுவதும் குட்டி இளவரசனின் எண்ணங்களும் உரையாடல்களும் நம்முடைய துருப்பிடித்த உணர்வுகளைக் கூர் தீட்டுகின்றன. புதிய பார்வைகளும் தரிசனங்களும் கிடைக்கின்றன. அந்துவான் குட்டி இளவரசனின் மூலம் வாழ்க்கையை விசாரணை செய்கிறார். அதில் பெரியவர்களும் அவர்களின் உலகப்பார்வையும் குட்டி இளவரசனால் எள்ளி நகையாடப்படுகிறது. பெரியவர்கள் விசித்திரமானவர்கள் தானே.

அதோ! குட்டி இளவரசன் தன்னுடைய சிறிய கோளான பி612 – ல் தன்னுடைய கர்வமிக்க மலரோடும் பெட்டியில் அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் எரிமலைகளைச் சுத்தம் செய்கிறான். எங்காவது தெரியாத்தனமாக பவோபாப் செடிகள் முளைப்பதாகத் தெரிந்தால் தன்னுடைய ஆட்டுக்குட்டியிடம் மேய்ந்து விடச்சொல்கிறான்.

அதோ வானத்தைப் பாருங்கள். குட்டி இளவரசன் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனுக்கு அருகில் பூமியில் மாயமாய் மறைந்து போன அந்துவான் எக்ஸுபரியும் கைகளை அசைப்பது தெரிகிறதா? என்ன தெரியவில்லையா?
இரவில் ஓய்வாக வானத்தைப் பாருங்கள். அப்போது தெளிவாகத்தெரியும்.
ஆனால் அதற்கு ஒரு முன்நிபந்தனை இருக்கிறது.
நீங்கள் ஒரு குழந்தையாக மாற வேண்டும்.

முகநூல் பக்கத்திலிருந்து
நன்றி : உதயசங்கர்

Murder short story by Udhaya shankar கொலை குறுங்கதை

கொலை குறுங்கதை – உதயசங்கர்



சித்திரபுத்திரனுக்கு அந்த எண்ணம் மறுபடியும் தோன்றியது. அருகில் அவனுடைய மனைவி சுமி நடந்து வந்து கொண்டிருந்தாள். எதிரே ஒரு பெரிய கண்டெயினர் லாரி வாந்து கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் அவர்களைக் கடந்து விடும். அப்போது தான் அந்த எண்ணம் வந்தது. அந்தச் சிந்தனை வரும்போதே மூர்க்கமாகத் தான் வந்தது.

அப்படியே சுமியைப் பிடித்துத் தள்ளி விட்டால்…..

அவனுடைய கைகள் பரபரத்தன. எல்லாம் ஒரு நொடியில் முடிந்து விடும். அவன் தள்ளினானா,இல்லை அவள் கால் தடுக்கி விழுந்தாளா என்று கூட யாராலும் சொல்லமுடியாது. விழுந்த அடுத்தகணம் அவளுடைய தலைமீது முன்சக்கரம் ஏறி இறங்கும்போது மண்டையோட்டு எலும்பு நொறுங்குகிற சத்தம் கேட்கும். முகம் சப்பளிந்து மூக்கின் நுனியில் இருக்கும் பெரிய கருப்பு மரு மட்டும் தனியாகப் பிதுங்கும். அவனுக்கு அந்த மருவைப் பிடிக்காது. முத்தமிடும் போதெல்லாம் சொரசொரப்பாக உப்புத்தாளை வைத்து உரசுகிற மாதிரி கன்னத்தில் ஒரு வலியை உருவாக்கும். உடனே அவன் கண்முன்னால் கண்டெயினர் லாரியின் முன்சக்கரத்தின் கீழ் சுமி விழுந்து ரத்தவெள்ளத்தில் கிடக்கும் காட்சி தோன்றியது. அந்தக் காட்சியில் அவளுடைய சேலை தொடை வரை விலகியிருந்தது. உடனே சித்திரபுத்திரன் அதைக் கீழே இறக்கி கணுக்கால்வரை இருக்குமாறு காட்சியை ஒழுங்குபடுத்தினான்.

எல்லாம் ஒரு நொடியில் முடிந்து விட்டது. கண்டெயினர் லாரி அவனைக் கடந்து சென்று விட்டது. அருகில் நடந்து வந்து கொண்டிருந்த சுமி,
“ ஏங்க.. வேர்க்கடலையும் பேரீச்சம்பழமும் வாங்கணும்.. உருண்டை பிடிச்சு வைக்கிறேன்.. தினமும் சாப்பிடுங்க.. மெலிஞ்சுகிட்டே போறீங்க…” என்று சொன்னாள். இப்போது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. நல்லவேளை!

கொஞ்சநாட்களாக இந்தக் கொலையெண்ணம் அவனுக்குள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அவன் தனியாக இருக்கும் போது எந்தப் பிரச்னையுமில்லை. யாராவது கூட இருந்தால் நொடியின் பின்னத்தில் அவர்களைக் கொலை செய்யும் எண்ணம் வருகிறது. சாதாரணமாகக் கற்பனையே செய்யமுடியாத காரியங்கள் அவனுடைய மனதில் தோன்றுகிறது.

போனவாரம் குருமலைக்கு அவனுடைய நண்பனுடன் சென்றிருந்த போது அவனை மலையிலிருந்து தள்ளிவிட்டாலென்ன? என்று தோன்றியது.
மூன்று நாட்களுக்கு முன் சித்திரபுத்திரனுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் வீட்டுக்கு அவருடைய குழந்தையைப் பார்க்கப் போயிருந்த போது அந்தக் குழந்தையின் மூக்கைப் பிடித்து மூச்சை நிறுத்தி விட்டால் என்ன? என்று தோன்றியது.

எப்போதெல்லாம் இப்படியான வன்முறைச்சிந்தனை தோன்றுகிறது என்று யோசித்தான். கூட்டமாக இருக்கும் போது தோன்றுவதில்லை. அவனும் அவனுக்குள் கொலை எண்ணத்தைத் தூண்டுகிறவரும் மட்டும் இருக்கும் போது ஆவேசமாக அந்தக் கற்பனை வருகிறது. கொலைக்கான அத்தனை வழிகளைகளையும், அது முடிந்தபிறகு கொலைசெய்யப்பட்டவரின் முகம் உட்படத் தெளிவாகத் தெரிகிறது. உடனே உடலிலும் மனதிலும் ஒரு வித்தையாசமான உணர்ச்சி தோன்று ஓடுகிறது. அது ஓடும் போது ஏதோ ஒரு திருப்தி நிறைந்து விடுகிறது. மூளையின் ஒரு பக்கம் கொன்றுவிடு கொன்று விடு என்று தூண்டிக்கொண்டேயிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த சித்திரபுத்திரன் மிகுந்த சிரமப்பட வேண்டியதிருக்கிறது.

இத்தனைக்கும் யாரும் அவனுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. முன்பின் தெரியாதாவர்களைப் பார்க்கும் போதும் இந்த எண்ணம் தோன்றியது. அரிவாளால் கழுத்தைச் சீவித் தள்ளுவது, அடித்துக் கொலை செய்வது, மூச்சுத்திணறச்செய்வது, தண்ணீரில் மூழ்கடிப்பது, தூக்கில் மாட்டுவது, எதிர்பாராத்தருணத்தில் பின் மண்டையில் அடிப்பது, தூக்கமாத்திரைகளைக் கொடுப்பது, என்று விதவிதமான கொலைமுறைகள் அவனுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தன. அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதென்றோ அல்லது பிடிக்கப்போகிறதென்றோ அவன் நினைத்தான்.

மனநல மருத்துவரிடம் சென்று பார்த்தான். அவர் கேட்ட கேள்விகள் அவனைச் சோர்வடைய வைத்தன. முக்கால் வாசிக் கேள்விகளுக்கு அவன் இல்லை என்றே பதில் சொன்னான். அவர் கடைசியில் இனி தொலைக்காட்சி பார்க்காதீர்கள் என்று ஆலோசனையும் மருந்து மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பினார்.
மனநல மருத்துவரை சித்திரபுத்திரனுக்கு அறிமுகப்படுத்தி அவனுடன் கூட வந்திருந்த நண்பர் சின்னச்சாமி அவனுக்கு ஆறுதல் கூறினார். வன்முறையினால் பாதிக்கப்பட்ட மனதின் எதிர்வினைகள் இவை. இப்படியான எண்ணங்களும், காட்சிகளும் ஒரு வடிகால் என்று நினைத்துக் கொள்ளுங்கள், என்று ஆற்றுப்படுத்திக்கொண்டே வந்தார். சித்திரபுத்திரன் தலை குனிந்து கேட்டுக் கொண்டே வந்தான்.

அவன் நிமிர்ந்தபோது தூரத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கருப்பு நிறக்கார் சற்று வேகமாக வருவதைப் போலத் தெரிந்தது. சித்திரபுத்திரனின் மூளையில் மறுபடியும் அந்த எண்ணம் புயலைப்போல வீசியது. கார் அருகில் வர சில நொடிகளே இருக்கின்றன. சின்னச்சாமியின் காலை இடறி விட்டால் போதும்….
சித்திரபுத்திரன் மனதை அடக்கி வைக்க முயற்சி செய்தான். ஏனோ அவர் பேச்சு அவனுக்குக் கொலைச்சிந்தனைக்கு நெய்யூற்றியது மாதிரி இருந்தது.
இதோ..நெருங்கி விட்டது…

சித்திரபுத்திரன் காலைத் தூக்கி விட்டான். சின்னச்சாமியின் கால்களுக்குக் குறுக்கே நீட்டிவிட நினைத்தான். நீட்டியே விட்டான்.

ஆ… ஐய்யோ…!

சில நாட்களுக்கு முன் போட்டிருந்த தார்ச்சாலையின் கருப்பு நிறத்தோடு ரத்தத்தின் சிவப்பு நிறமும் கலந்து குளம் மாதிரிக் கட்டியது.
சித்திரபுத்திரன் கூழாகக் கிடந்தான்.

Children's Story: Thoonganagaramum thoongumoonji raajavum story By Udhaya Sankar. உதயசங்கரின் சிறார் கதை தூங்காநகரமும் தூங்குமூஞ்சி ராஜாவும்

தூங்காநகரமும் தூங்குமூஞ்சி ராஜாவும் சிறார் கதை – உதயசங்கர்



முன்னாடி ரொம்ப காலத்துக்கு முன்னாடி தூங்காநகரம் என்ற நாடு இருந்தது. அந்த நாட்டில் எப்போதும் மக்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இருபத்தி நான்கு மணிநேரமும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இரவும் பகலும் கடைவீதிகள் திறந்திருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படிப்பட்ட நாட்டில் பட்டத்துக்கு வந்த ராஜா தான் தூங்குமூஞ்சி ராஜா.

தூங்குமூஞ்சி ராஜா என்பது அவருடைய பட்டப்பெயர் தான். மக்களுக்கு அவருடைய உண்மையான பெயரே மறந்து விட்டது. எல்லோருக்கும் அவர் தூங்குமூஞ்சி ராஜா தான். ஏன் ராஜாவுக்கே கூட தன்னுடைய பெயர் தூங்குமூஞ்சி தான் போல என்று நினைத்துக் கொண்டார். அதனால் தூங்குமூஞ்சி ராஜாவே என்று கூப்பிட்டால் தான் திரும்பிப்பார்ப்பார். தூக்கம்னா தூக்கம். உங்கவீட்டுத்தூக்கம் எங்க வீட்டுத்தூக்கமில்லை. உலகத்தூக்கம் தூங்குவார் தூங்குமூஞ்சி ராஜா.

எப்படின்னு கேட்கறீங்களா?

முதல்நாள் இரவு படுத்தார் என்றால் மறுநாள் பகல் முழுவதும் தூங்கி இரவில் எழுந்திரிப்பார். உடனே,
“ அட இன்னும் விடியலையா? “ என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்து விடுவார். தூக்கத்திலேயே பல் துலக்குவார். ஒன்பாத்ரூம் போவார். டூ பாத்ரூம் போவார். குளிப்பார். சாப்பிடுவார். தூங்கிக்கொண்டே பேசவும் செய்வார். ஆனால் கண்களை மட்டும் திறக்கமாட்டார்.

அரண்மனையிலிருந்து அரசவைக்குச் செல்ல உருளைச் சக்கரங்கள் வைத்த கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டே போவார். அந்தக் கட்டிலைத் தூக்குவதற்குக் கட்டில் தூக்கிகள் இருந்தார்கள். அப்படியே அசங்காமல் அந்தக் கட்டிலிலிருந்து சிம்மாசனக்கட்டிலில் தூக்கிப் படுக்க வைப்பார்கள். அதில் படுத்துக்கொண்டே மந்திரிகள் சொல்லும் எல்லாப்பிரச்னைகளுக்க்கும் தலையாட்டுவார். மந்திரிகள் தங்களுடைய விருப்பத்துக்கேற்ப ராஜா சொன்னதாகச் சட்டம் போடுவாரகள்.

“ அரசே! மக்களிடம் வாங்கும் வரிப்பணத்தை குறைக்க வேண்டும். என்று மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் .”

ராஜா தலையாட்டுவார்.

“ ராஜா குறைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்..” என்று மந்திரிகள் சொல்வார்கள்.

“ நாம் நம்முடைய காடுகளை அந்நியருக்கு விற்றுவிடலாமா ராஜா..”
ராஜா தலையாட்டுவார்.

“ விற்றுவிடலாம் என்று ராஜா உத்தரவு கொடுத்து விட்டார்.,.. “ என்று காட்டிலாகா மந்திரி சொல்லுவார்.

“ நமது ஆற்று நீரை குளிர்பானக் கம்பெனிக்கு விற்று விடலாமா அரசே? “
ராஜா தலையாட்டுவார்.

“ ராஜா ஆற்றுநீரை விற்கச் சொல்லி உத்தரவு கொடுத்து விட்டார்..” என்று நீர்வளத்துறை மந்திரி சொல்லுவார்.

“ நம்முடைய மலைகளையெல்லாம் கிரானைட் கம்பெனிகளுக்கு விற்று விடலாமா ராஜா? “
என்று மலை மந்திரி கேட்பார். வழக்கம் போல ராஜா தலையாட்டுவார்.

“ ராஜா உத்தரவு போட்டு விட்டார்..” என்று மலைமந்திரி மலைகளை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்று விடுவார்.
ஒருநாள் கல்வி மந்திரி வந்தார்.

“ ராஜா.. படித்த இளைஞர்களும், படிக்கும் குழந்தைகளும் நாம் செய்கிற பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கேள்வி கேட்கிறார்கள்.. போராட்டம் செய்கிறார்கள்..கல்வியை விற்று விடலாமா? ”
என்று கேட்டார். தூங்குமூஞ்சி ராஜா வேகமாகத் தலையாட்டினார். கல்வி மந்திரி கல்வியை கூறுபோட்டு விற்றார். அதையும் மீறி படிக்கவந்த ஏழைக்குழந்தைகளைப் பொதுப்பரீட்சை வைத்துத் துரத்தினார்.

தொழில் மந்திரி மட்டும் சும்மா இருப்பாரா? அத்தனை அரசுத்தொழில்களையும், பணக்காரர்களுக்கு விற்றார். பணக்காரர்கள் எல்லாவற்றையும் அந்நிய நாட்டுக்கு விற்றுவிட்டார்கள். அந்நியர்கள் இப்போது தூங்காநகரம் நாட்டுக்குள் நுழைந்து விட்டனர். ரொம்ப காலமாக ஒரு நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த தூங்காநகரம் கொஞ்சநாட்களுக்கு முன்னால் தான் விடுதலையடைந்தது. இப்போது பல நாடுகளுக்கு அடிமையாக மாறிவிட்டது.

தூங்குமூஞ்சி ராஜாவின் தூக்கம் கலையவில்லை.

நாடே அந்நியர்கள் கையில் போய் விட்டது.

தங்களுடைய நாட்டுக்குள்ளேயே மக்கள் அகதிகளாகி விட்டார்கள். ஒரு தெருவிலிருந்து அடுத்த தெருவுக்குப் போகவேண்டுமென்றால் வரி செலுத்தவேண்டும். ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் போகவேண்டுமென்றால் வரி செலுத்தவேண்டும். எதற்கெடுத்தாலும் வரி. நடை வரி, உடை வரி, கடை வரி, நில் வரி, உட்கார் வரி, படு வரி, முழி வரி, என்று எல்லாம் வரி தான்.

இதைப் பற்றி எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார் தூங்குமூஞ்சி ராஜா. ஆனால் மக்கள் விழித்து எழுந்தார்கள். ஒன்று சேர்ந்தார்கள்.
அந்நியர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.

ஆண்கள் போராடினார்கள்.

பெண்கள் போராடினார்கள்.

இளைஞர்கள் போராடினார்கள்.

குழந்தைகள் போராடினார்கள்.

அந்நியர்களால் தாக்குப் பிடிக்கமுடியாமல் ஓடிப்போனார்கள்.

பணக்காரர்கள் ஓடிப்போனார்கள்.

மந்திரிகள் ஓடிப்போனார்கள்.

படைத்தளபதிகள் ஓடிப்போனார்கள்.

வீரர்கள் ஓடிப்போனார்கள்.

மக்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது தூங்குமூஞ்சி ராஜா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கே வந்த இளைஞர்கள் அவரை அப்படியே கட்டிலோடு அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் கடலில் போட்டார்கள். அப்போதும் தூங்குமூஞ்சி ராஜா தூங்கிக் கொண்டிருந்தார்.
இப்போது தூங்காநகரம் நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

என்ன? கடலில் போட்ட ராஜாவைப் பற்றிக் கேட்கிறீர்களா? உங்கள் ஊர்ப்பக்கம் கடல் இருந்தால் பாருங்கள். ஒரு கட்டில் மிதந்து வருகிறதா? அதில் தான்

தூங்குமூஞ்சி ராஜா தூங்கிக் கொண்டே வருவார்.

பாவம்!
இன்னும் அவருக்கு தான் கடலில் மிதப்பது தெரியாது.

Theerapasi short story by Udhaya shankar தீராப்பசி

தீராப்பசி குறுங்கதை – உதயசங்கர்

ஒருநாள் காலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்திருந்த பொழுதில் எழுத்தாளர் காயசண்டிகையின் மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டு ஓடிப்போய் விட்டார்கள். எழுத்தாளர் காயசண்டிகை என்ற புனைபெயரில் எழுதிவந்த அவருடைய சித்ரவதையை அவர்களால் தாங்கமுடியவில்லை.   எழுதுவதின் மூலமே இந்த உலகம் உய்த்து நல்வழி காணுமென்று…
Children's Story: Sarrak....Sarrak Story By Udhaya Sankar. *சர்ரக்….சர்ர்ரக்* சிறார் கதை - உதயசங்கர். Book Day And Bharathi Puthakalayam

*சர்ரக்….சர்ர்ரக்* சிறார் கதை – உதயசங்கர்



மேப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கதை. மேப்புலியூர் ஒரு காட்டு ஸ்டேஷன். அத்துவானக்காட்டுக்குள் அந்த ஸ்டேஷன் இருந்தது. சுற்றிலும் ஆள் நடமாட்டமும் இருக்காது. எப்போதாவது ஆடு மேய்க்கும் பையன்கள் வந்து தண்ணீர் குடித்து விட்டுப் போவார்கள். அவ்வளவுதான். அப்புறம் எதுக்கு அந்த ஸ்டேஷன் இருக்கிறது என்ற சந்தேகம் வரும். ரயில்கள் ஒன்றை ஒன்று கிராஸ் செய்வதற்காக அந்த ஸ்டேஷனை வைத்திருந்தார்கள்.

ஸ்டேஷன் மாஸ்டர் துரை அவருடைய உதவியாளரிடம் கேட்டார்.

“ நீ பார்த்தியா ராமு..

ஆமா சார்.. நான் சிக்னலுக்கு எண்ணெய் ஊத்த போனப்ப அதைப் பார்த்தேன்..

எப்படி இருந்துச்சி? “

“ கன்னங்கரேலென்று இருந்துச்சி.. கடவாய்ப்பல்லு வெளியே நீட்டிக்கிட்டிருந்திச்சி.. ஒரே ரத்தக்கவிச்சி வாடை…

யப்பா பயங்கரமா இருக்கே..

அது சர்ரக் சர்ர்ர்ர்க் என்ற சத்தத்துடன் நடந்து போனிச்சு சார்.. ரத்தக்காட்டேரி சார்.. மாட்டுனோம் அவ்வளவுதான் “

“ உன்னிய ஒண்ணும் பண்ணலையா..

சார்.. நான் அதைப் பார்த்ததுமே பக்கத்திலிருந்த வேப்பமரத்துக்குப் பின்னாலே போய் ஒளிஞ்சிகிட்டேன். வேப்பமரம்னா அது வராதுல்ல.

ஸ்டேஷன் மாஸ்டர் துரை அன்று இரவுப்பணிக்கு வந்திருந்தார். ராமு சொன்னதைக் கேட்டபிறகு ஸ்டேஷனுக்கு வெளியில் பார்த்தாலே ஏதேதோ உருவங்கள் நடமாடுகிற மாதிரி தெரிந்தது. பகலிலேயே ஒரு சுடுகுஞ்சி கூட இருக்காது என்றால் ராத்திரி எப்படி இருக்கும்? இரவில் கேட்கவே வேண்டாம். அருகில் நின்றால் கூட ஆள் தெரியாதபடி இருட்டு கருங்கும்மென்று இருக்கும். ஸ்டேஷனில் எரியும் விளக்குகளைத் தவிர தூரத்தில் கூட ஒரு பொட்டு வெளிச்சம் தெரியாது. பூச்சிகளின் சத்தம் கொய்ங் கொய்ங் என்று காதைத்துளைக்கும். திடீர் திடீரென்று காட்டுப்பூனைகளின் சத்தம் குழந்தை அழுவதைப்போல ஞ்ஞ்யா ஞ்ஞ்ய்யா என்று இழுவையாகக் கேட்கும். குள்ளநரிகளின் ஊளைச்சத்தம் ஊஊஊஊஊஊ என்று தூரத்தில் கேட்ட மாதிரி இருக்கும். படாரென்று மிக அருகில் கேட்கும். ஸ்டேஷன் வெளிச்சத்திற்கு வந்து விழும் பூச்சிகளைத் தின்பதற்குப் பாம்புகள் அடிக்கடி வருகை தரும்.

அந்த ஸ்டேஷனுக்கு எதிரே ஒரு ஆலமரம் தலைமுடியை விரித்துப்போட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணைப்போல நின்று கொண்டிருந்தது. காற்று வீசும்போது அந்த ஆலமரத்தின் கிளைகளும் விழுதுகளும் பேயாட்டம் போடும். இரவில் அந்த ஆலமரத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கும்.

அந்த ஸ்டேஷனுக்கு யாரும் விரும்பி வந்து வேலை பார்க்க மாட்டார்கள். வேறு வழியில்லாமல் தான் வேலைக்கு வருவார்கள். அங்கே ஏராளமான பேய்க்கதைகள் உலவிக் கொண்டிருந்தன. எல்லா ஊழியர்களும் ஏதாவது ஒரு பேயைப் பார்த்ததாகச் சொல்லுவார்கள். ஆண் பேய், பெண் பேய், குழந்தைப்பேய், கிழவிப்பேய், கிழவன் பேய், என்று எல்லாவயதிலும் பேய்கள் அந்த ஸ்டேஷனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. அடிக்கடி பேய்க்கதைகளைப் பற்றித்தான் பேச்சு நடக்கும்.

ரயில்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். திடீரென்று அந்த சத்தம் கேட்டது.

சர்ர்க் சர்ர்ரக் சர்ர்க் சர்ரக்

ஸ்டேஷன் மாஸ்டர் துரை, அரைத்தூக்கத்திலிருந்த உதவியாளர் ராமுவை எழுப்பினார். அவரும் அந்தச் சத்தத்தைக் கேட்டார்.

சர்ர்க் சர்ர்ர்ரக் சர்ர்க் சர்ரக்..

“ ஆமா சார்.. ஏதோ வாடை கூட வருது ..என்று ராமு சொன்னார். அப்போதுதான் ஸ்டேஷன் மாஸ்டர் துரையும் கவனித்தார். ஒரு நீர்க்கவிச்சை வாடை அதாவது பாசி வாடை அடித்தது.

“ ஆமா.. நீர்க்கவிச்சை வாடை அடிக்குது..

இல்ல சார் ரத்தக்கவிச்சை வாடை  அடிக்குது.. “ என்று ராமு சொன்னான். அவன் சொன்னபிறகு அது ரத்தக்கவிச்சை வாடை மாதிரியே தெரிந்தது.

உடனே ராமு ஒரு கையில் விளக்குமாற்றையும் ஒரு கையில் செருப்பையும் எடுத்துக் கொண்டான். செருப்பையும் விளக்குமாற்றையும் பார்த்தால் பேய் ஓடி விடும் என்று பொதுவான நம்பிக்கை. ஸ்டேஷன் மாஸ்டர் துரை அங்கிருந்த இரும்பு கடப்பாரையை எடுத்துக் கொண்டார். இரண்டுபேரும் தயாராக இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்கு எந்த சத்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. திடீரென ஸ்டேஷன் வாசலுக்கு முன்னால் அந்தச் சத்தம் சர்ர்க் சர்ர்ரக் சர்ர்க் சர்ர்ரக் என்று கேட்டது. அப்புறம் எந்தச் சத்தமும் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் துரையின் இதயம் படபடவென அடித்தது. கைகளில் லேசான நடுக்கம் வந்தது. ராமுவின் முகம் வெளிறிப்போய் விட்டது.

இன்னும் சில நிமிடங்களில் அந்த ரத்தக்காட்டேரி வரப்போகிறது. இதோ. இதோ.

மறுபடியும் சத்தமில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாசலுக்கு இரண்டுபேரும் வந்து எட்டிப்பார்த்தார்கள். எங்கும் இருள். வேறு ஒன்றும் தெரியவில்லை. வீணாகப்பயந்துட்டோமோ என்ற சந்தேகத்துடன் மறுபடியும் மறுபடியும் இருட்டுக்குள் கூர்ந்து பார்த்தார்கள்.

இரண்டு பேரின் ஈரக்குலை பதறும்படி மறுபடியும் அந்தச் சத்தம் இன்னும் அருகில் கேட்டது. நாற்றமும் அடித்தது.

சர்ர்க் சர்ர்ரக்

சத்தம் வந்த இடத்தில் முதலில் எதுவும் தெரியவில்லை. சற்று கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தார்கள். அங்கே சிமெண்ட் தரையில் மெல்ல சர்ரக் சர்ர்ர்க் என்று தன் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து ஒரு கிணற்று ஆமை நடந்து போய்க் கொண்டிருந்தது. அதனிடமிருந்து தான் அந்த நீர்க்கவிச்சி வாடையும் வந்து கொண்டிருந்தது.

ஸ்டேஷன் மாஸ்டர் துரைக்கு வெட்கமாகி விட்டது. அவர் அதை மறைப்பதற்காக ராமுவிடம்,

“ ராமு.. உன்னோட ரத்தக்காட்டேரி.. போகுது பாரு.. “ என்று சொல்லிச் சிரித்தார். ராமுவும் அந்தச் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.

நீ எப்போ வர்றே? குறுங்கதை Nee Eppo Varra Short Story by Writer Udhaya Sankar (உதயசங்கர்). Book Day is Branch of Bharathi Puthakalayam.

*நீ எப்போ வர்றே?* குறுங்கதை – உதயசங்கர்



போன மாதம் இறந்து போன அவனுடைய நண்பன் வேலுவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அலைபேசித்திரையில் தெரிந்த அவனுடைய படத்தைப் பார்த்ததும் முதலில் திடுக்கென்றிருந்தது. அப்புறம் அவனுடைய பிள்ளைகள் யாராவது தெரியாமல் அழைத்திருப்பார்கள் என்று நினைத்தான். கொஞ்சநேரம் கழித்து மறுபடியும் அழைப்பு வந்தது. இப்போது யோசிக்காமல் எடுத்து காதில் வைத்து ஹலோ என்றான். மறுமுனையில் பதிலில்லை. திரும்பவும் ஹலோ என்றான். எந்த சத்தமுமில்லை. சரி. குழந்தைகள் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து இணைப்பைத் துண்டித்தான். அதன்பிறகு அன்று முழுவதும் தொந்திரவில்லை.

இரவில் மூன்று மணியிருக்கும். மறுபடியும் வேலுவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இந்த முறை அவனுக்குக் கடுப்பாகி விட்டது. விளையாடுவதற்கும் அளவு வேண்டாமா? அலைபேசியை எடுத்து,

“விளையாடறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா.. ராத்திரியில என்ன வேடிக்கை?“ என்று கத்தினான். ஒருகணம் அமைதியாக இருந்த மறுமுனையில் லேசாக மூச்சு விடும் சத்தம் கேட்டது,

“நீ எப்ப வர்றே? “ என்ற வேலுவின் குரல் கேட்டது. அவனுக்கு அப்படியே விக்கித்துப்போய் வியர்த்து ஒழுகியது. அவனுக்குக் குரலே வெளியே வரவில்லை. குழற ஆரம்பித்தபோது,

“என்னடா பதிலேயில்ல.. நீ எப்ப வர்றே? “ என்ற சத்தம் மறுபடியும் கேட்டது. அது வேலுவின் குரலே தான். அதே பெண்மை கலந்த கீச்சுக்குரல். அவன் உடல் நடுங்க,

“யாரு? யாரு? “ என்றான். பதிலில்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவன் உடனே வேலுவின் மகனை போனில் கூப்பிட்டான். வேலுவின் மகன் போனை எடுக்கவில்லை. காலையில் கூப்பிடலாமென்று நினைத்து படுக்கையில் புரண்டான். தூக்கம் வரவில்லை. யாராக இருக்கும்? அச்சுஅசல் வேலுவின் குரலைப் போலவே இருந்ததே. 

காலையிலே வேலுவின் மகனை அழைத்தான்.

“அப்பாவோட நம்பரிலிருந்து எனக்குப் போன் வந்ததுப்பா? யாராச்சும் போனை எடுத்து விளையாடுறாங்களா..

இல்லியே மாமா.. அப்பா இறந்த பிறகு அந்த சிம்மைக் கழட்டி ஒடிச்சுப் போட்டாச்சு.. அவரோட போனை எங்கேயோ பழைய எலக்டிரானிக் சாமான்கள் வைக்கிற பையில் போட்டாச்சே.. வேற யாராச்சும் இருக்கும் மாமா..

என்று தெளிவாகப் பதில் சொன்னான். ஒருவேளை நாம் தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று மனம் ஆறுதலடைந்தது. ஆனால் அந்த ஆறுதல் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கவில்லை. மத்தியானம் போல திரும்பவும் அழைப்பு வந்தது. அவன் எடுக்காமல் அந்தத் திரையையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து வந்த அழைப்புகளை எடுக்காமல் தவிர்த்தான். ஒரு நேரத்தில் தாங்க முடியாமல் போனைச் சுவிட்ச் ஆப் செய்தான்.

கொஞ்சநேரம் எதுவுமில்லை. நிம்மதியாக இருந்தது. ஆனால் அவனே அதிர்ச்சியடையும் படி சுவிட்ச் ஆப் செய்த போனிலிருந்து அழைப்பு வந்தது. திரையில் தெரிந்த வேலுவின் உருவம் சற்று ஒளி மங்கியிருந்தது. அவ்வளவுதான். திகிலுடன் ஏதோ அமானுஷ்ய சக்தி அங்கே இருக்கிறதென்று அவன் பயந்து போனைத் தொடவில்லை. ஆனால் வேலுவின் குரல் கேட்டது,

“நீ எப்ப வர்றே? “

பயத்தில் அவன் ஊளையிட்டான். இதயம் வேகவேகமாகத் துடித்தது. ரத்தவோட்டம் வேகமாக ஓடியது. உடலெங்கும் வியர்த்து ஒழுகியது. அப்படியே கட்டிலில் உட்கார்ந்த அவன் கண்முன்னால் வேலு நின்று கொண்டிருந்தான்.

“வா.. போகலாம்..என்றான் வேலு. அந்த அறையெங்கும் சாராய வாடை வீசியது. அவன் எழுந்து பேசாமல் வேலுவின் பின்னால் போனான்.

Children Village Story: Coffee Thaniyum Kalani Thanniyum Story By Udhaya Sankar. சிறார் கிராமியக்கதை: காப்பித்தண்ணியும், கழனித்தண்ணியும் – உதயசங்கர்

சிறார் கிராமியக்கதை: காப்பித்தண்ணியும், கழனித்தண்ணியும் – உதயசங்கர்



அந்த ஊரிலேயே வசதியான சம்சாரிக்கு ரொம்ப நாளா குழந்தையில்லை. அந்தம்மா வயித்தில ஒரு புழு பூச்சி கூட உண்டாகலை. இவ்வளவு சொத்துபத்து இருந்தும் ஆண்டு அனுபவிக்க ஒரு பிள்ளை இல்லியேன்னு அந்தம்மாவுக்கு ஒரே வெசனம். நாம செத்தா கொள்ளிபோட ஒரு பிள்ளையில்லியேன்னு அந்த சம்சாரிக்கு கவலை. பிள்ளைக்காக அவுக போகாத கோயிலில்ல. வேண்டாத தெய்வமில்ல. செய்யாத வயணமில்ல. அக்னிச்சட்டி எடுத்தாக. கூழு காச்சி ஊத்துனாக. அங்கபிரதட்சணம் பண்ணுனாக. சோசியர்களைப் போய்க் கேட்டாக. சாமியார்களைப் போய்ப்பார்த்தாக. வைத்தியர்கள்கிட்ட போனாங்க. பத்தியம் இருந்தாக. ஆனா எதுவும் நடக்கல. ரெண்டுபேருக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை குறைஞ்சி கிட்டே வந்தது.

கடைசியில ஒரு டவுணுக்கு புதுசா வந்திருந்த ஒரு டாக்டரம்மாவப் போய்ப்பார்த்தாக. அந்தம்மா என்னெல்லாமோ டெஸ்டுகளை எடுக்கச்சொல்லிப்பாத்தது. எல்லாம் நல்லாத்தானே இருக்கு.. என்ன காரணம்னு மண்டைய போட்டு உடைச்சிக்கிட்டருந்தது… சும்மானாச்சுக்கும் அது நீங்க ரெண்டுபேரும் தனியா குத்தாலம் போய் மூணு நாள் இருந்துட்டு வாங்க. அப்ப இன்னின்ன பதார்த்தங்களைச் சாப்பிடுங்க. இது வெளிநாட்டு வைத்தியமுறை. அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாக.

அவுகளும் குத்தாலம் போய் மூணுநாள் தங்கி நல்லாகுளிக்க, திங்க, தூங்க, இருந்துட்டு ஊருக்கு வந்தாக. மாயம் போல அடுத்த பத்துமாசத்துல ஒரு ஆம்பிளப்பிள்ளய பெத்துட்டா அந்தப்பொண்ணு. பிள்ளய தங்கத்தட்டுல வச்சித் தான் பாத்துகிட்டாக. அப்படித்தான் தாங்கு தாங்குன்னு தாங்கினாக. பிள்ளை என்ன கேட்டாலும் உடனே கிடைச்சிரும். அதவிட வேற வேலை! பயல் பள்ளிக்கூடம் போனான். அந்த ஊரில் பள்ளிக்கூடம் சரியில்லன்னு பக்கத்து டவுனுக்கு அனுப்புனாக. பத்திரமாக கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வர்ரதுக்குன்னு ஒரு ஆளயும் அமத்துனாக.

அப்படிப் போய்க்கிட்டிருக்கும் போது பயல் ஒரு நாள் அவனுடைய சிநேகிதனுடைய வீட்டுக்குப் போனான். சிநேகிதனுடைய அம்மா டவுனு வழக்கப்படி பயலுக்கு காப்பித்தண்ணியைப் போட்டுக் கொடுத்துச்சி. சீனி போட்ட அந்த செவலை நிறத்தண்ணியைக் குடிச்சதும் பயல் அப்படியே கிறங்கிப்போனான். அப்படி அமிர்தமா இருந்துச்சி அவனுக்கு. உடனே இனிமே நாமளும் நெதமும் இந்தக்காப்பித்தண்ணியை வீட்டுல காய்ச்சித்தரச் சொல்லணும்னு மனசுக்குள் நெனச்சிக்கிட்டான். அம்மாகிட்ட சொல்றதுக்காக காப்பித்தண்ணி காப்பித்தண்ணி காப்பித்தண்ணின்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டே வந்தான். அப்போ அந்த சிநேகிதன் வீட்டுக்கு வந்த பால்க்காரர் பாலைக்கொடுத்துட்டு அம்மா கழனித்தண்ணி இருக்கான்னு கேட்டாரு. அவரு கேட்டதும் பயலுக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியா மாறிட்டது. கழனித்தண்ணி கழனித்தண்ணி கழனித்தண்ணின்னு சொல்லிகிட்டே ஊருக்கு வந்தான்.

நேரே அம்மாகிட்டே போய் “ யெம்மா நாளைக்கி காலைல குடிக்கிறதுக்கு எனக்கு கழனித்தண்ணி வேணும்..னு சொன்னான். அம்மா அதைக் கேட்டுட்டு தமாசுன்னு நெனச்சிகிட்டு சிரிச்சிக்கிட்டே அதுக்கென்ன ராசா தாராளமா குடின்னு சொல்லிட்டா. மறுநாள் காலைல எந்திச்சதும் மொதவேலையா குடிக்க கழனித்தண்ணியக் கேட்டான் பயல்.

மாடு குடிக்கிறதப்போய் கேக்கிறியே ராசா..ன்னு அவனோட அய்யா சொன்னாரு. அவன் சடச்சிக்கிட்டு மூஞ்சியத் தூக்கி வைச்சிகிட்டான். அப்ப டவுனில எல்லாரும் குடிக்காகன்னு சொல்லி அழுதான். இதென்னடா பாதரவாப்போச்சி. இதுவரை பிள்ளை கண்ணில கண்ணீரே பாத்ததில்லை. இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கானேன்னு அம்மாவுக்கு வருத்தம். காத்துக்கருப்பு எதுவும் பிடிச்சிருச்சான்னு தெரியலயே. ஆனா பயல் அழுது அடம்பிடிக்கான். யாராலயும் அவன சமாதானப்படுத்த முடியல.

சரி அவன் இஷ்டப்படியே செய்வோம்னு பெரிய கல்தொட்டியில இருந்த கழனித்தண்ணிய மேலால மோந்து அதுல கொஞ்சம் கருப்பட்டியைப் போட்டு கலக்கி பயந்துகிட்டே கொண்டு வந்து கழனித்தண்ணிய அவங்கிட்ட கொடுத்தா அம்மாக்காரி.

அதப்பாத்ததும் ஆவலா வாங்கிக் குடிச்ச பயல் முகத்தைச் சுளிச்சான்.

டவுனில நல்லாச்சூடா கொடுத்தாக அதான் அம்புட்டு ருசியா இருந்துச்சி.. உனக்கு கழனித்தண்ணியே போடத்தெரியலன்னு சொல்லி அதைக் கீழே கொட்டிட்டான். மறுநாள் டவுனிலிருந்து வந்த சீலை வியாபாரி பேச்சோடு பேச்சாக காப்பித்தண்ணியைப் பத்தி சொல்லவும் தான் அம்மாக்காரிக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியான கத தெரிஞ்சது. எல்லாருக்கும் சிரிப்பாணி பொங்கி வந்தாலும் யாரும் சிரிக்கல. பயல் கோவிச்சிகிட்டான்னா என்னசெய்ய?

தவமாய் தவமிருந்து வெளிநாட்டு பத்தியத்துல பெத்தபிள்ளையில்லையா?

குரங்கும் மனிதனும் குறுங்கதை Kurangum Manithanum Short Story by Writer Udhaya Sankar (உதயசங்கர்). Book Day is Branch of Bharathi Puthakalayam.

*குரங்கும் மனிதனும்* குறுங்கதை – உதயசங்கர்



சீனாவின் வூகாங் கிராமத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் புதிதாக பெய்ஜிங்கிலிருந்து ஒரு மாணவன் வந்து சேர்ந்திருந்தான். அவன் அதுவரை குரங்குகளை நேரில் பார்த்ததில்லை. மிருகக்காட்சிச்சாலையில் வேலிச்சிறையில்  அடைபட்டிருந்த குரங்குகளை மட்டுமே பார்த்திருக்கிறான். ஆனால் கிராமத்தில் சர்வ சாதாரணமாக குரங்குகள் திரிந்தன. மரங்களிலும், சாலைகளிலும், வீடுகளிலும் ஏறியிறங்கி அலைந்து கொண்டிருந்தன. அங்கிருந்த மக்கள் யாரும் அவற்றைக் கண்டு பயப்படவோ, விரட்டவோ, செய்யவில்லை. குரங்குகளும் மனிதர்களுடன் சேர்ந்து வாழப்பழகிக் கொண்டதைப் போலவே இருந்தன. சீனத்தலைநகரிலிருந்து வந்திருந்த சாங்கிற்குப் பயமாக இருந்தது. அவன் குரங்குகளை விரோதமாகவே பார்த்தான். ஏதாவது ஒரு குரங்கு அவனருகில் வந்து விட்டால் அலறினான். அவனுடைய அலறலைக் கேட்டு குரங்கும் பயந்து போய் குதித்தோடி விடும். சாங்கிற்கு குரங்குகள் ஒரு பிரச்னையாகவே இருந்தன.

அவன் அவனுடைய அறிவியல் ஆசிரியரிடம்,

“ இப்படியே குரங்குகள் இங்கே இருந்தால் அவை மனிதர்களாக மாறிவிடுமே.. அப்புறம் நம்மையெல்லாம் விரட்டி விடுமே..

என்று வருத்தத்துடன் கேட்டான். அவனுடைய ஆசிரியர் அவனை ஆதரவுடன் பார்த்து,

“ சாங் உன்னுடைய கவலை நியாயமானது.. ஆனால் குரங்குகளால் அப்படி மாற முடியாது..

எப்படி அதை உறுதியாகச் சொல்கிறீர்கள்? “

பதில் பேசாமல் அவர் அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்த ஒரு வேப்பமரத்தடிக்கு அழைத்துச் சென்றார். கையோடு கொண்டு போன ஒரு வாழைப்பழத்தை அங்கிருந்த ஒரு குரங்கிடம் நீட்டினார். குரங்கு வாங்கிக் கொண்டு மரக்கிளையில் ஏறிவிட்டது. இப்போது ஆசிரியர் அந்தக் குரங்கிடம்,

“ அந்த வாழைப்பழத்தைத் திருப்பிக்கொடு.. நான் உனக்குக் கொய்யாப்பழம் தருகிறேன்..என்றார். அது திரும்பிக் கொண்டது.

“ அந்த வாழைப்பழத்தைத் திருப்பிக் கொடு.. நான் உனக்கு சாக்லேட் கேக் தருகிறேன்..

என்றார். அவரை ஏறிட்டு கூடப் பார்க்கவில்லை. இன்னொரு கிளைக்குத் தாவிவிட்டது.

“ நீ அந்த வாழைப்பழத்தைக் கொடுத்து விட்டால் கடவுளிடம் சொல்லி உன்னைச் சொர்க்கத்துக்கு அனுப்புவேன்..

என்றார். குரங்கு வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடத் தொடங்கியது. சாங்கிற்கு எதுவும் புரியவில்லை. இப்போது சாங்கைப் பார்த்துத் திரும்பிய ஆசிரியர்,

“ சாங்…உன் பையில் இருக்கும் வாழைப்பழத்தைக் கொடு.. நான் கடவுளிடம் சொல்லி உனக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்..என்றார். குருவின் சொல்லுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் சொன்னால் கடவுள் கேட்பாரல்லவா? சாங் உடனே தாமதிக்காமல் பழத்தை எடுத்து ஆசிரியர் கையில் கொடுத்தான்.

ஆசிரியர் சிரித்தார்.

“  குரங்குகள் ஒருபோதும் மனிதர்களாக மாறாது.. இப்போது புரிந்ததா? 

சாங் புரிந்த மாதிரி தலையாட்டினான்.

Nadai (நடை) Short Story by Writer Udhaya Sankar (உதயசங்கர்). Book Day And Bharathi TV Are Branch of Bharathi Puthakalayam.

*நடை* சிறுகதை – உதயசங்கர்



யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நாட்டு மக்கள் உடலை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். கண்ணுக்குப் புலப்படாத எதிரியை வீழ்த்த உடலுறுதி வேண்டும். இரண்டு உலக யுத்தங்களை விட மிக மோசமானதாக மூன்றாம் உலக யுத்தம் இருக்கும். எப்போதும் எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென்று எங்கள் நாட்டு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். உடலைப் பேணுங்களென்று தொலைக்காட்சிகள் அறிவித்துக் கொண்டேயிருந்தார்கள். எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மக்கள் வீட்டுக்குள்ளேயே மரண பயத்துடன் தின்று கொண்டேயிருந்தார்கள். பாடிக்கொண்டேயிருந்தார்கள். ஆடிக்கொண்டேயிருந்தார்கள். பேசிக்கொண்டேயிருந்தார்கள். சண்டை போட்டுக்கொண்டேயிருந்தார்கள். புணர்ந்து கொண்டேயிருந்தார்கள். ஓடிக் கொண்டேயிருந்தார்கள். குற்றோட்டம் ஓடினார்கள். குறுநடை நடந்தார்கள். பெருநடை நடந்தார்கள். 

எல்லாம் வீட்டுக்குள்ளேயும், மொட்டை மாடியிலும் நடந்தது.

வழக்கத்துக்கு மாறாக இதுவரை குண்டாகாதவர்கள் உருண்டு திரண்டார்கள். ஒருபோதும் சதை வைக்காது என்று சபிக்கப்பட்டவர்களெல்லாம் சதைக்கோளமாக மாறினார்கள். அதைக் கண்ணாடியில் பார்த்தவர்கள் மேலும் நடந்தார்கள். நடந்து முடிந்ததும் தின்றார்கள். தின்று முடித்து விட்டு நடந்தார்கள்.

உலகம் ஒரு விசித்திரமான அபத்தநாடகமேடையாக மாறியிருந்தது.

நானும் என் வீட்டு மொட்டை மாடியில் நடந்தேன். முதலில் காலை, மாலை நடந்தேன். பின்னர் காலை, மதியம், மாலை, இரவு, நடந்தேன். அப்புறம் தோன்றும்போதெல்லாம் நடந்தேன். நடப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. உறங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் நடந்து கொண்டேயிருந்தேன். தூங்கும் போதுகூட நான் கால்களை அசைத்துக் கொண்டேயிருப்பதாக மனைவி கூறினார். நடை என்னுடைய இதயத்துடிப்பைப் போல மாறிவிட்டது. எங்கு இடமிருந்தாலும் நடந்தேன். இரண்டடி அகலமே இருந்த என் வீட்டுப்பாத்ரூமுக்குள்ளும் நடந்தேன். நடப்பதினால் மட்டுமே மூன்றாவது உலகயுத்தத்தைத் தடுக்கமுடியுமென்று நினைத்தது போல நடந்து கொண்டிருந்தேன்.

மின்னம்பலம்:நடைப்பயிற்சி: ஆர்வலர்களின் குழப்பமும் வல்லுநர்கள் விளக்கமும்

ஒருநாள் நள்ளிரவு நான் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தபோது அப்படியே மொட்டைமாடியை விட்டு வெளியே காற்றில் நடக்க ஆரம்பித்தேன். காற்று நின்றபோது அப்படியே மிதந்திறங்கி தெருவில் நடக்க ஆரம்பித்தேன். தெருவிலிருந்து சாலையில் நடக்க ஆரம்பித்தேன். சாலையிலிருந்து பெருஞ்சாலையில் நடக்க ஆரம்பித்தேன். பெருஞ்சாலையிலிருந்து நெடுஞ்சாலையில் நடக்க ஆரம்பித்தேன். திரும்பிப்பார்த்தால் என்னுடன் சேர்ந்து லட்சக்கணக்கானவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். 

அவர்கள் தங்களுடைய உடல் பருமனைக் குறைப்பதற்காக நடக்கவில்லை. காய்ந்து சருகாகி உலர்ந்த அவர்கள் ஒருவேளை உணவுக்காக நடந்து கொண்டிருந்தார்கள். ஒருவாய்த்தண்ணீருக்காக நடந்தார்கள். தங்களுடைய உறவுகளைத் தேடி நடந்தார்கள். ஒரு ஆறுதல் சொல்லுக்காக நடந்தார்கள். தங்களுடைய வேர்களைத் தேடி நடந்தார்கள். இறுதிமூச்சை தங்களுடைய சொந்த மண்ணில் விடவேண்டுமென்ற வைராக்கியத்துக்காக நடந்தார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன்.

நாங்கள் நடந்து நடந்து பூமியின் விளிம்பிற்கே போய்ச் சேர்ந்தோம். நிமிர்ந்து பார்த்தபோது பூமி விளிம்பிற்கே வந்து விட்டோம். 

பூமி எதிர்த்திசையில் சுற்ற ஆரம்பித்தது.

மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். சூரியனின் சிவந்த ஒளி எங்கள் பாதங்களில் வீழ்ந்தது.

உதயசங்கர்