நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ‘ஊடு இழை’ சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ‘ஊடு இழை’ சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்



ஊடும் பாவுமான எளிய மக்களின் வாழ்க்கைக் கதைகள்
———————-
“இலக்கியத்தைக் கட்டளையிட்டு உருவாக்க முடியாது” என்பார் லெனின். உண்மைதான். இயல்பாய் இழைந்தோடும் அருவி போன்றது இலக்கியம். வாழ்வனுபவத்தின் கண்ணாடியால்.. பல வண்ணங்களோடு பல வடிவங்களோடு உருவாகும் படைப்பே இலக்கியமாக, அழியாத இலக்கியமாக நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

அன்றாடம் வாழ்க்கையோடு மல்லுக்கட்டும் எளிய மக்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளாக ‘ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார் கவிஞர் பல்லவி குமார். இச்சிறு கதைகள் போன்ற மக்கள் இலக்கியமே அழியாத இலக்கியமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 15 சிறுகதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் கதை மாந்தர்களே. வாழ்க்கைப் போராட்டத்தில் அவரவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கதை நேர்த்தி குன்றாமல் ஊடும் பாவுமாக படைத்துள்ளார் பல்லவி குமார்.

பொருளாதாரம் தான் உறவு முறையையே தீர்மானிக்கிறது என்றார் மார்க்ஸ். அதை எளிமையாக ‘அம்மாசி தாத்தா’ சிறுகதை மூலம் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர். பெற்ற தந்தையே ஆயினும் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் சாப்பாடும் மரியாதையும் கிடைக்கிறது என்பதை அம்மாசி தாத்தா பாத்திரத்தின் வழி நம்மைக் கரைய வைக்கிறார் பல்லவி குமார். நாள்தோறும் அரங்கேறி வரும் ஆணவக்கொலையின் அவலங்களை உணர்த்துகிறது ‘சாட்சி’ சிறுகதை. “ஆணவக்கொலை தொடர்பாகச் சிறப்புச் சட்டங்களை இயற்றி கறாராக அமுல்படுத்த வேண்டும்” என்னும் கோரிக்கையை வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் நம் மனதில் வருகிறார்கள். மாடும் மனிதனும் ஒன்றாக வதைபடுவது இச்சமூகத்தின் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது. இக்கதையில் ‘ஆச்சரியக் குறிகளாக வந்து விழும் மழைநீர்’, ‘முருக்கிப் போட்ட துணிபோல் கிடந்தான்’ என்னும் வர்ணனைகள் யதார்த்தக் காட்சிகள்.

கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத வேலையின்மை நாட்டில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ‘கனல்’ சிறுகதை தகிக்கிறது.

இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘ஊடு இழை’ குறிப்பிடத்தக்கச் சிறுகதை எனலாம். சண்டை சச்சரவு இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கு ஒன்று வந்துவிட்டால் ‘தானாடாவிட்டாலும் தன் தசையாடும்’ என்பதற்கொப்ப சண்டை சச்சரவுகளைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அன்யோன்யமாக இயங்குவது குடும்பத்தின் இயல்பு என்பதை அழகுறக் கதையாக்கியுள்ளார் நூலாசிரியர். “தறியில எந்த சிக்கலும், எவ்வளவு சத்தமும் வந்தாலும் ஊடு இழை மட்டும் அறுவாம ஓடிக்கிட்டு இருந்துதுன்னா.. நெசவு நல்லா இருக்கும். அதுமாதிரி நெசவாள  குடும்பத்துல எந்த சிக்கலும் எவ்வளவு சச்சரவு வந்தாலும் வீட்டுக்கு வந்த பெண் மட்டும் இழுத்துப் புடிச்சிக்கிட்டு போய்ட்டான்னா.. அந்த குடும்பம் நல்லாயிருக்கும்” என்பது காலங்காலமாக பெண்களே குடும்பத்தில் அனுசரித்துப் போக வேண்டும் என்பது எளிய குடும்பங்களில் இன்னமும் விரவிக் கிடக்கின்றன என்தற்கு இக்கதையும் ஒரு உதாரணம்.

‘கல்லு வூடு’ கனவில் ஓயாதுழைக்கும் குடும்பம்.. குறிப்பாக காமாட்சி கல்லு வூட்டில் கண்ட அவலக் காட்சிக்குப் பிறகு கல்லு வூடு பிரம்மை தகர்ந்து தனது கூரை வீட்டு மகிழ்ச்சியே மகத்தானது என்று எண்ணும் நிலை. ஆக.. கூரை வீடா கல்லு வீடா என்பதல்ல பிரச்சினை. வீட்டில் வாழும் மாந்தர்களின் நடவடிக்கைகளே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதைப் பூடகமாக இக்கதை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மண்ணுக்கும் மரத்துக்குமான உறவைத் தன் சொந்த அனுபவம் போல  இயல்பாகக் கதை சொல்கிறார் பல்லவி குமார்.

இன்றளவும் கிராமங்களில் நம்பப்படும் செய்வினை, ‘செய்வினை’ கதை மூலம் வாசகர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ஆனால் இக்கதையில் மூடநம்பிக்கைகளையும் அறிவியலையும் ஒருங்கிணைத்துச் சென்று வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர்.

‘பிராது’ எனும் சிறுகதையில் குறி சொல்வது, பிராது கட்டி விடுவது போன்றவை பாத்திரங்களின் வழி இயல்பாக வந்து போகின்றன. ஆனால் இறுதியில் தனக்கு வரவேண்டிய பதவி உயர்வு பறிபோனதற்கு யார் மேல் பிராது கட்டுவது எனும் கேள்விக் கணையுடன் கதையை முடித்திருப்பது சிறப்பு.

இத் தொகுப்பில் உள்ள சில கதைகளில் நெசவுத் தொழில் காட்சிப்படுத்தப்படுவதும் அத்தொழிலில் கையாளப்படும் சிறுசிறு வேலைகளுக்கான வட்டார  வழக்குச் சொற்களை லாவகமாகக் கையாண்டுள்ளதும் பாராட்டத்தக்கது.

வெவ்வேறு கருப்பொருள்கள் போன்ற நல்ல சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களுடன் பெரும்பான்மை அளவில் பாத்திரங்களைப் படைத்துள்ள ஆசிரியரின் நடைச் செழுமையைப் போற்றியுள்ள எழுத்தாளர் ஜீவகாருண்யனின் அணிந்துரையை வழிமொழியலாம். இந்நூலை அழகுற வெளியிட்டுள்ள ‘தமிழ்ப் பல்லவி வெளியீடு ‘ பாராட்டுக்குரியது‌.

“கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே” எனும் உயர்ந்த நோக்கில் வெளிவந்துள்ள எளிய மக்களின் வாழ்வியல் குறித்த “ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பினை வாங்கிப் படிக்க வேண்டியது வாசகர்களின் கட்டாயக் கடமை.

– பெரணமல்லூர் சேகரன்

நூலின் பெயர் : ’ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பு
நூல் ஆசிரியர் : பல்லவி குமார்
பக்கம்: 132

விலை : ₹125
வெளியீடு : தமிழ் பல்லவி
9/1ஏ இராஜ வீதி, கூட்டுறவு நகர்
பெரியார் நகர் (தெற்கு)
விருத்தாசலம் 606 001
கடலூர் மாவட்டம்
04143238369, 9942347079